Advertisement

இணை தேடும் இதயங்கள்
                      அத்தியாயம்  — 2
 
அந்த ஆரஸ்வதி காட்டிற்குள் பெண்கள் சில பேர் விறகு பொருக்கி கொண்டிருக்க அவர்களோடு சேர்ந்து மலர்விழியும் விறகை ஒடித்து கட்டாக கட்டிக் கொண்டிருந்தாள்.. கூட வந்தவர்களுக்கு மலரை பார்க்க பாவமாக இருந்தது..
 
வயலட் நிற சேலை சட்டை, மெலிந்த தேகம் திருத்தமான முகம் தாயை போல நல்ல நிறமாக இருந்தவள் இப்போதெல்லாம் அடிக்கடி வெயிலில் விறகு பொருக்க வருவதால் சற்று நிறம் மங்கி போயிருந்தாள்..
 
 அவள் நீண்ட தலைபின்னல் அடிக்கடி விறகில் போய் மாட்டிக் கொள்வதால் தன் அடர்ந்த முடியை கொண்டையாக போட்டு தலையில் துண்டால் கட்டியிருந்தாள்.. காதில் சிறு சிமிக்கி, கழுத்தில் மெல்லிய செயின் வேறு எந்த நகைகளும் இல்லை..
 
ஏன் மலரு எங்களுக்குத்தான் தலையெழுத்து இந்த விறகு கொண்டுபோய் அடுப்பெறிக்கனும், இல்ல விலைக்கு வித்து செலவுக்கு வைச்சுக்கனும்னு உனக்கு என்ன குறைச்சல் காசில்லையா? பணமில்லையா..? உங்க வீட்லதான் கேஸ் இருக்கே நீ ஏன் இந்த வெயில்ல கிடந்து வதங்குற..?”
 
இல்லக்கா வீட்ல சும்மாதானே இருக்கேன் அதான் உங்களோட வந்தேன்.. தன் முந்தானையால் பெருகிவந்த வியர்வையை துடைத்தபடி சொல்ல,
 
ஏண்டி அவ சித்திகாரிய பத்தி தெரிஞ்சுமா கேட்கிறிங்க.. அவ வாங்கி வந்த வரம் அப்படி..! இந்த மாதிரி ஒரு பொண்ண எப்படித்தான் கொடுமை படுத்த மனசு வருதோ.. சரியான ராட்சசிடி அவ சித்தி..” அவர்கள் தன் போக்கில் சொல்லிக் கொண்டிருக்க,
 
மலர் ஒன்றும் பேசாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.. மலர்விழி சக்திவேலின் ஒரே அத்தை மகள்.. மலருக்கு நான்கு வயதாக இருக்கும் போது அவள் தாய் பஸ்ஸில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்ததில் பஸ்ஸின் பின் சக்கரம் ஏற  அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.. மலர் தள்ளிப்போய் விழுந்ததால் அவள் சிறு காயத்தோடு உயிர் பிழைத்திருந்தாள்..
 
ஒரு பெண் இல்லாமல் குழந்தையை வளர்ப்பது சிரமம் என சக்திவேலின்  அப்பத்தா எவ்வளவோ கெஞ்சி மலரை தங்களோடு அழைத்து செல்ல கேட்டும் அவர் தந்தை ஒத்துக் கொள்ளவில்லை..
தன்னால் பார்த்துக் கொள்ள முடியும் என சண்டையிட்டவர் மறுவருடத்திலேயே திலகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள அன்று ஆரம்பமானது மலருக்கு பிரச்சனைகளும் கொடுமைகளும்,
 
வந்த புதிதில் நன்றாக பார்த்துக் கொண்டவர் தனக்கென்று அடுத்தடுத்து இரு பெண் குழந்தைகள் வரவும் தன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தார்.. அந்த பிஞ்சு வயதில் இருந்து படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறார்..
 
 ஆரம்ப காலத்தில் மலரை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்ட அவர் தகப்பனுக்கோ  பின்னர் அவர் புது மனைவி அவளுடைய குழந்தைகள்அவர்களுடைய தேவைகள் என பிரச்சனைகளும் அதிகமாக வீட்டை மறந்து வெளியிலேயே வேலையில் தன் கவனத்தை செலுத்திவிட்டார்.. அப்படியே வீட்டில் இருந்தாலும் அவர் கவனத்தை தன்மேலும் தன் குழந்தைகள் மேல் மட்டும் இருக்கும்படி அவரது மனைவி பார்த்துக் கொண்டார்..
 
தாயின் பாசம் கிடைக்கவேண்டிய வயதில் கிடைக்காமல் ஏங்கி தகப்பனுடைய அரவணைப்பும் கிடைக்காமல் தனக்குள்ளேயே ஒரு மாதிரி இறுகி போனாள் மலர்.. ஓரிருமுறை தன் தகப்பனிடம் சொல்ல செல்ல அதற்கு வழியில்லாமல் அதை லாவகமாக அவர் சித்தி கையாள எதையும் சொல்ல முடியாமல் போனாள்..
 
 அதை மீறி ஓரிரு முறை சொன்னாலும் அதற்கு பின்னால் சித்தியிடம் கிடைக்கும் வசவுகளும், சில நேரங்களில் கிடைக்கும் அடிகளாலும் வாயே திறப்பதில்லை மலர்..
 
அக்கம் பக்கத்தில் தெரிந்தாலும் அவள் சித்தியின் வாய்க்கு பயந்து அவர்கள் ஒன்றும் சொல்ல முடியாது..
 
ஏழெட்டு வயதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு வேலைகள் இவள் தலையில் விழ இப்போது முழுநேர வேலைக்காரியாகிப்போனாள்.. தன் பன்னிரண்டாவது வயதில் பெரிய பெண்ணாயிருக்க சீர் கொண்டு வந்த சக்தியின் அப்பாவையும் அப்பத்தாவையும் மரியாதைக்கு கூட வாங்க என்று சொல்லாமல் சீரையும் வாங்கமாட்டேன் என சொல்லி வெளியே போகச் சொல்லிவிட்டார்கள்..
 
ஆனால் அப்பத்தாவும் தாய்மாமனும் விடவில்லை.. பெரிய பிரச்சனை செய்து பஞ்சாயத்தெல்லாம் வைத்துதான் தன் தாய்மாமா முறையை செய்திருந்தார்.. அப்போது சக்தி தாய்க்கு துணையிருக்க வெற்றியோ கல்லூரி படிப்பில் இருந்ததால் இருவரும்  போகவில்லை…
 
அவர் அப்பத்தாவிற்குத்தான் மனதே ஆறவில்லை… ஆளே மெலிந்து முகச்சாயலில் தன் மகளை போல திருத்தமாக இருந்த அந்த தேவதையை தன்னோடு கூட்டிக் கொண்டு செல்ல கொள்ளை ஆசையிருந்தாலும் தன் மருமகனுக்கு பயந்து வாய்மூடியிருந்தார்.. பிள்ளையின் நலத்தை பற்றி விசாரிக்கலாம் என்றால் கூடவே அவள் சித்தி நின்று கொண்டு ஒரு வார்த்தை பேசவிடவில்லை..
 
தன் மகள் போட்டிருந்த நகைகள் எல்லாம் இப்போது அவள் சித்தி கழுத்தில் தொங்கியது.. வயது வந்த பிள்ளைக்கு ஏதோ கவரிங்கில் ஒரு செயினை வாங்கி போட்டுவிட்டிருக்க பார்த்த அவருக்கு மனதே ஆறவில்லை.. தன் கழுத்தில் இருந்த இரட்டை வடத்தை கழற்றி போட்டுவிட்டு வந்தார்.. இருவரும் ஒருவாய் சாப்பிடக்கூட இல்லை..
 
அப்பத்தா கஷ்டப்பட்டு தன் வாயை அடக்கிக் கொண்டு வந்தார்.. தான் ஏதோ பேசப்போக  தன்னால் ஏதாவது பிரச்சனை வந்தால் அதற்கும் மலர்தானே ஏச்சும் பேச்சும் வாங்க வேண்டும் என்றுதான் பல்லைக்கடித்துக் கொண்டு வந்தார்..
 
கொஞ்சநாள் போகட்டும் தன் பேரன்களில் ஒருத்தனுக்கு மலரை கட்டிவைத்து தன்னோடு தன் பேத்தியை வைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசையிருந்தது ..தன் மகனிடம் அதை அடிக்கடி வெளிப்படுத்தியிருந்தார்..
 
சக்தியின் தந்தைக்கோ தங்கை இருந்தவரை மச்சான் மச்சான் என தன்னோடு அவ்வளவு ஒற்றுமையாக இருந்தவர் தங்கை இறந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யவும் தங்கை கணவன் அப்படியே மாறியது  வருத்தத்தை அளித்தாலும் மலரையாவது நன்றாக வைத்துக்கொள்வார்கள் என்று எண்ணியிருந்தார்..
 
ஆனால் இப்போது அவர் கேள்வி படுவதெல்லாம் ஒன்றும் நல்லவிசயமாக இல்லை.. இதில் தன் மனைவிக்கு உடல்நிலை ரொம்ப மோசமாக போனது , சின்னமகன் பட்டணமே கதியென்று கிடப்பது என பல்வேறு கவலைகள்..
 
அதிலும் இன்று காலை தன் மனைவி பேசியதையே யோசித்துக் கொண்டு சந்தைக்கு சென்றவர் அங்குதான் தன் தங்கை ஊரில் இருக்கும் உறவினர் ஒருவரை பார்த்தார்.. தூரத்து சொந்தகாரரான அவரிடம் மலரை பற்றி விசாரிக்க அப்போதுதான்  மலருக்கு மாப்பிள்ளை பார்க்கும் விசயமே தெரிந்தது.. அதிலும் மலரின் சித்தி தன் தம்பிக்கு மலரை திருமணம் செய்து வைக்க தீவிரமாக இருப்பது தெரிந்தது..
 
விறகை தலையில் தூக்கி கொண்டு வந்த மலர் நெடுதூரம் நடந்து வந்ததால்  உச்சந்தலை எரிந்தாலும் பல்லை கடித்துக் கொண்டுவந்து தன் தலைசுமையை தோட்டத்தில் போட்டவள் அங்கிருந்த தொட்டியில் கிடந்த குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி கலைந்திருந்த தலையை கோதியபடி உள்ளே வந்தவளின் உடலோ ஓய்விற்காக கெஞ்சியது..
 
தன் தந்தை கட்டிலில் படுத்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவள் வேகமாக அவரிடம் சென்று ,
பால் குடிச்சிங்களாப்பா..” அவருக்கு ஹார்ட் ஆப்ரேசன் செய்து இருமாதங்களாக ஓய்வாக இருக்கிறார்.. இப்போதுதான் தன் மகளுக்கு நடக்கும் அநியாயமே அவர் கண்ணுக்கு தெரிந்தது.. அவர் கண்ணை மறைத்திருந்த திரையும் விலகியது..
 
தான் லட்சலட்சமாக சம்பாரிக்க தன் மகள் அடுப்பெறிக்க விறகு சுமக்கும் நிலை.. பார்த்த தகப்பனுக்கு நெஞ்சில் ரத்தம் வழிந்தது.. நேரத்திற்கு சாப்பிடாமல் வேலை வேலை என எந்த நேரமும் வேலை செய்து குத்துவிளக்காக ஜொலிக்க வேண்டிய தன் மகள் அப்படியே மங்கி போலிருந்தாள்.. தன் முதல் மனைவியை அப்படியே உரித்து வைத்திருந்தாள்.. அதே நிறம், முகஅமைப்பு, பொறுமை என அவளின் மறுஉருவம்
 
 அவர் பெரிய வாழைத்தார் மண்டி வைத்திருக்க பல ஊர்களுக்கு அவரிடம் இருந்துதான் வாழைக்காய்கள், வாழைப்பழங்கள் ,இலைக்கட்டுகள் என போய் கொண்டிருக்க வருமானத்திற்கு எந்த குறைச்சலும் இல்லை..
 
தன் சுகத்திற்காக ஒரு பெண்ணை திருமணம் செய்து  மகளுக்கு எவ்வளவு பெரிய துரோகம் செய்துவிட்டோம்..தன் மகளோடு படித்த பெண்கள் எல்லாம் இப்போது பக்கத்தூரில் கல்லூரியில் பயில தன் மகளை பன்னிரண்டாவதோடு நிறுத்தியிருந்தார்.
 
பக்கத்தூருக்கெல்லாம் அனுப்பினால் மலருக்கு பாதுகாப்பு இருக்காது கண்ட பொறுக்கிகளும் வம்பு பண்ணுவானுக என ஏதேதோ அவர் இரண்டாவது மனைவி சொல்ல உண்மையாக இருக்குமோ என நினைத்தவர் கல்லூரிக்கு அனுப்பவே இல்லை..
 
இப்போதுதான் எல்லா தவறும் புரிகிறது.. இப்போது தன் மகள் சம்பளமில்லாத வேலைக்காரியாக இந்த வீட்டில் இருந்தாள். அவளது பிள்ளைகள் பக்கத்தூரில் இருக்கும் பெரிய மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கிறார்கள்… தான் ஏதாவது கேட்டால் அவளது சித்தியோ சத்தமாக ஒப்பாரி வைத்து அழுது ஊரே கூட்டிவிடுகிறாள்…
 
தான் இத்தனை வருடமாக சம்பாதித்தது எல்லாம் எங்கே போயிற்று..அதிலும் வந்த வருமானத்தில் மலர் பெயரிலாவது கொஞ்சத்தை போட்டு வைத்திருக்கலாம்.. இல்லை தன் பெயரிலாவது கொஞ்சத்தை போட்டு வைத்திருக்கலாம்..
 அதையும் செய்யாமல் அனைத்தையும் மனைவியிடம் கொடுத்து எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்து விட்டோம் என உள்ளுக்குள் புழுங்கி கொண்டிருந்தார்.. இப்போது அவரது கைச்செலவுக்கே அவளின் கையை பார்த்து நிற்கும் நிலை..சீக்கிரமாக வேலைக்கு போகனும் என்று நினைத்திருந்தார்..
 
வாயில்லாத பூச்சியாக வந்த அவர் இரண்டாவது மனைவியோ இப்போது ராட்சசியாக மாறியிருந்தார்..பணம்பணம் என அவரை படுத்தி எடுக்க அதுவே அவருக்கு பெரிய மன உளைச்சலாகி இன்று ஹார்ட் ஆபரேசன் செய்யும் அளவிற்கு சென்றுவிட்டது..
 
ப்பா பால் குடிச்சிடிங்களாப்பா..” மலர் தன் தந்தையின் தோளைப்பிடித்து லேசாக உலுக்க சுயநினைவுக்கு வந்தவர்,
இன்னும் இல்லம்மா.. கொஞ்சம் நேரமாகட்டும் போ போய் சாப்பிடு.. காலையில சாப்பிட்டது மணிய பார்த்தியா அஞ்சாகப்போகுது..
 
மலருக்கு பசி மறந்தே பலவருடங்களாகிவிட்டது.. ஒன்பது, பத்து வயதில் பசி பொறுக்க முடியாமல் அழுததெல்லாம் உண்டு.. தந்தையை தேடி போனால் அவர்கள் அறை சாத்தி உள்புறம் பூட்டப்பட்டிருக்கும்.. அப்போது அந்த பசியை விட தன் தனிமை அவளுக்கு பயத்தை உண்டுபண்ணும்.. வெறும் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு விழித்தபடியே படுத்துகிடப்பாள்..துணைக்கு தன் தாயின் போட்டோ மட்டும்தான் அதைதான் தன் அன்னை என அணைத்தபடி படுத்துக்கிடப்பாள்..
 
வருடங்கள் ஓட அவள் தம்பி, தங்கைகளை வளர்ப்பது, வீட்டுவேலை என சொன்னதை செய்யும் ஒரு அடிமையாக மாறிப்போனாள்.. வீட்டிற்குள் போனவள் அடுப்படியில் எல்லாம் காலியாக இருக்க சோற்றுக்கும் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்தது..
 

Advertisement