Advertisement

இணை தேடும் இதயங்கள்
                            அத்தியாயம்  –  19
                             “ பூங்காற்றே பூங்காற்றே
                                            பூப்போல வந்தாள் இவள்
                                     போகின்ற வழி எல்லாம்
                                            சந்தோஷம் தந்தாள் இவள் 
 
அந்த இரவு நேரத்து ஏகாந்தத்தில் மலரோடு சென்ற அந்த பைக் பயணம் வெற்றியின் மனதில் உல்லாசத்தை தந்திருந்தது.. மெலிதாக இந்த பாடலை வாய்க்குள் முனுமுனுத்தபடி அவள் கையை தன்னுள் இன்னும் பொதிந்து அவள் அண்மையை ரசித்தபடி வண்டியை விட இவனுடைய அலப்பறையை தாங்க முடியாதவள் நாளைக்கு காலையில எப்படி வர்றது என்ற கவலையில் வந்தாள்.. இவங்க சும்மாவே பத்து மணிவரைக்கும் தூங்குவாங்களே…
 
அந்த இரண்டுகிலோ மீட்டர் தூரத்தை அரைமணி நேரம் ஓட்டி வந்தவன் இல்லை உருட்டி வந்தவன் ஒருவழியாக வீட்டிற்கு வந்து மலரை ஒரு காதல் பார்வை பார்க்க அவளோ அவனை காண்டாக பார்த்துக் கொண்டிருந்தாள்.. நடந்து வந்திருந்தாக்கூட நாம அப்பவே வந்திருக்கலாம்.. போயும் போயும் இவங்களோட வந்தனே..!! வேகமாக கதவை திறந்து உள்ளே சென்றவள் நைட்டியை எடுத்துக் கொண்டு குளிப்பதற்காக பாத்ரூம் கதவை அடைத்திருந்தாள்..
 
இவ பார்வையே இப்படிதானா.. சும்மா பார்க்கிறதுக்கூட நம்மள முறைக்கிற மாதிரியே இருக்கு அவள் பார்வை ஆராய்ச்சியில் இறங்கியபடி உடை மாற்ற சென்றான்.. குளித்து வந்தவள் ராமலிங்கத்திற்கு போன் செய்ய அவர் விளக்கு ரோட்டை தாண்டியதாக சொல்லவும் மாமாவுக்கு இரவு டிபனை செய்ய கிச்சனுக்குள் நுழைந்தாள்.. அவர்கள் சென்ற காரிலேயே டிரைவரோடு ராமலிங்கம் வந்திருக்க,
 
எங்க மாமா அம்மாச்சியும் அத்தானும்..?? அங்க ஊர்ல ரேணுகாம்மாவும் அந்த அக்காவும் நல்லாயிருக்காங்களா..? நான் செலக்ட் பண்ணின சேலையோட கலர் அவங்களுக்கு பிடிச்சிச்சா மாமா..?”
 
ஹாஹா சிரித்தவர் கொஞ்சம் மூச்சுவிட்டு பேசுத்தா எல்லாம் பொறுமையா சொல்றேன். நீ இந்த டிரைவர் தம்பிக்கு சாப்பாடு ரெடி பண்ணு..”
அவரிடம் திரும்பியவர் ,”தம்பி இனி உங்களுக்கு பஸ் இல்லை இங்கனயே படுங்க நாளைக்கு நான் அஞ்சு மணிக்கு ஹோட்டலை திறக்க போவேன் அப்ப பஸ் ஏத்தி விடுறேன்ப்பு.. ராமலிங்கம் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் அவரை காரில் அனுப்பிய ரேணுகாவும், ரமலியும் இவர்களின் தேவைக்காக இதை இங்கேயே வைத்துக் கொள்ளச் சொன்னார்கள்..
 
அனைவரும் சாப்பிட்டு அவருக்கு அறை ஒதுக்கி கொடுத்தவள் அந்த முற்றத்தில் மாமாவின் அருகில் வந்து அமர்ந்தாள்.. வெற்றியும் அங்கிருந்த சோபாவில்தான் தன் லாப்டாப்போடு அமர்ந்திருந்தான்..
 
ராமலிங்கம் அங்கு நடந்ததை ஒன்று விடாமல் சொல்ல மலர் அதிர்ச்சியில் வாய்பிளந்திருந்தாள்.. வெற்றியும் தன்னை அறியாமல் தந்தையிடம் வந்திருந்தவன் அண்ணனுக்கு பழைய நியாபகம் இல்லாம இருந்தப்போ இப்படி ஏமாத்தி கல்யாணம் பண்ணியிருக்காங்க.. நீங்க எப்படி அவங்கள விட்டுட்டு வரலாம்.. இந்த கல்யாணம் எதுவும் செல்லாது அவங்க மேல கோர்ட்ல கேஸ் போடுறத விட்டுட்டு அவங்களோட வாழ்றேன்னு அண்ணன் சொன்னான்னு விட்டுட்டு வந்திருக்கிங்க.. அதெல்லாம் ஒரு கல்யாணமா….!!” அவன் முடிக்கவில்லை..,
 
ராமலிங்கத்தின் முறைப்பில் வாயை கப்பென்று மூடியவன் இரண்டெட்டு பின்னால் வந்திருந்தான்.. டேய் இவர் முறைப்பே சரியில்ல.. தடுக்கிறதுக்கு அப்பத்தா வேற வீட்ல இல்ல இவர் நம்மள அடிச்சாலும் அடிப்பார்.. அப்படி நாம என்ன சொன்னோம்…??
 
ராமலிங்கம்,” உன்னைய போல சக்தியவும் நினைச்சிட்டியா..? அவன் நான் கிழிச்ச கோட்டை தாண்டாதவன்… உன்னை மாதிரி இல்ல..!! நானும் உன்னோட அம்மாவும் பார்த்து கல்யாணம் பண்ணி வைச்ச பொண்ணையே வேண்டாம்னு சொன்னவன் நீ.. ஆனா எம்புள்ள தான் பழச மறந்திருந்தாலும் கல்யாணம் பண்ணதால அந்த பொண்ணு எப்படியிருந்தாலும் அந்த பொண்ணையே பொண்டாட்டியா ஏத்துக்கிட்டான்.. அந்த பொண்ணு நல்லாத்தான் இருக்கு ஆனா கொஞ்சம் செருக்கு இருக்கும்னு நினைக்கிறேன்.. அதெல்லாம் என்பையன் பார்த்துக்குவான்..
 
 தேவையில்லாத உன்னோட யோசனையெல்லாம் உன்னோடவே வைச்சுக்கோ.. கோர்ட்டாம் கேஸாம்.. உருப்புடாதவன் இப்படிப்பட்ட தங்கமான பொண்ணையே வேண்டாம்னு சொல்றவன் வாழ்க்கையில எம்புட்டுத்தான் சம்பாரிச்சாலும் அது யாருக்குடா… ரொம்ப படிச்சா புத்தி நிறைய இருக்குன்னு உனக்கு யாருடா சொன்னா ..? இந்த படிக்காதவன் சம்பாத்தியத்திலதான் நீ இந்த அளவுக்கு வளர்ந்திருக்க..
 
உன்னோட அண்ணனும்தான் பெரிய காலேஜ்ல படிச்சான்.. அவனுக்கு இருக்க புத்தியில கால்வாசிக்கூட உனக்கு இல்லை.. இதுல இவன் எங்களுக்கு புத்தி சொல்ல வர்றான்.. போடா போ போய் உன்னோட பொட்டியை லொட்டு லொட்டுன்னு தட்டி வெளிநாட்டுகாரனுக்கு சம்பாரிச்சு குடு… உள்நாட்டுகாரன் எப்படியோ நாசமாப்போனா உங்களுக்கு என்ன.. உங்களுக்கு உங்க சுகம், உங்க ஆசை அதான் முக்கியம்.. எவனுக்கோ உழைக்கிறத உனக்காக இங்க உழைச்சுப்பாரு அதுல இருக்க நிம்மதியும் சந்தோசமும் அங்க கிடைக்காது.. உனக்குப் போய் புத்தி சொல்றேன்பாரு..” தன் தலையில் தானே அடித்துக் கொண்டவர்,
 
துண்டை உதறி தோளில் போட்டு தன் அறைக்கு செல்ல போனவர் மீண்டும் திரும்பி வந்து,” இன்னும் பத்துநாளுல உன்னோட அண்ணனுக்கு ஊரெல்லாம் சொல்லி விருந்துக்கு ஏற்பாடு செய்யப் போறேன்… நீ இங்க இருப்பியோ இல்ல அயல்நாட்டுக்கு போவியோ இப்பவே சொல்லிட்டேன்… அவனுக்கும் வரவேற்பு என்பதை சொல்லாமல் அறைக்குள் சென்று கதவை அடைத்திருந்தார்..
 
மலர் எதுவும் பேசாமல் தன் அறைக்குள் முடங்கிக் கொள்ள, வெற்றியோ இப்ப என்ன சொன்னேன்னு இவர் இந்த பேச்சு பேசிட்டு போறார்.. இப்படி விடாம நம்மள திட்றவரா நாம வெளிநாடு போக சம்மதம்னு சொல்வார்.. அவனுக்கு எரிச்சலாக இருந்தது.. தான் வெளிநாடு போய் சம்பாரித்தால் அதை யாருக்கு அனுப்புவது ,அவன் இவர்களுக்காகவே சம்பாரிக்க ஆசைப்பட, இவர் அதை தொட்ட விரல்ல தொடமாட்டாரு.. இவ தாய்மாமன் எவ்வழியோ இவளும் அவ்வழின்னு திரியிறவ.. அண்ணன் அப்பத்தா கேட்கவே வேண்டாம்..
 
 இப்போதென்னவோ தான் யாருமில்லா அநாதை போலவே அவனுக்கு தோன்றியது.. தன் தாயின் படத்துக்கு முன் நின்றவன் தான் எப்போதாவது ஹாஸ்டலில் இருந்து வரும்போது தன்னை ஆசையோடும் அன்போடும் அரவணைத்து, இங்கேயே கூட நாளுநாட்கள் தன்னோடு இருக்க சொல்லும் தாய்… அந்த அன்பு இப்போது வேண்டும்போல இருக்க அவர் நினைவில் கண்கலங்கியது.. தன் முகத்தை தாயின் படத்தில் புதைத்தவன்… வெகுநேரம் தன் தாயின் நினைவிலேயே தவித்துகிடந்தான்..
 
தண்ணீர் குடிக்க வந்த ராமலிங்கம் தன் மகனின் வாடிய முகத்தை பார்த்து வருந்தினார்.. தான் இப்போது பேசியது கொஞ்சம் அதிகம் என்று அவருக்கே தெரியும் இப்படியாவது தன் மகனை பிடித்திருக்கும் வெளிநாட்டு மோகம் போய்விடாதா என யோசித்தவர் சிறுவயதில் இருந்தே வெற்றி தங்கள் கைகளுக்குள் இல்லாமல் ஹாஸ்டலிலே வளர்ந்ததால் அவனுக்கு குடும்பத்தின் உறவுகளை பற்றி தெரியவில்லை.. சக்தியை விட வெற்றியின் மேல் அவருக்கு தனிப்பாசம் உண்டு..
 
பெரியவனாவது தங்கள் கைகளுக்குள்ளேயே வளர்ந்தவன்.. இவன் ஆத்தா அப்பன் பாசம் இல்லாம அனாதையா ஒத்தையில வளர்ந்தபய… அங்காவது நேரத்திற்கு சாப்பாடு கிடைக்குமே என்ற யோசனையில்தான் அங்கு சேர்த்திருந்தார்கள்.. அப்பத்தாவால் அந்த நேரத்தில் தன் மருமகளையும் பார்த்து குடும்பத்தையும் பார்த்து நேரத்திற்கு சமைக்க முடியவில்லை தனிமையிலே வளர்ந்ததால் எல்லா முடிவுகளையும் அவனே எடுத்து பழக்கப்பட்டு இப்போதும் தன் பிடிவாதத்தில் குறியாக இருந்தான்… ராமலிங்கத்தை பொருத்தவரை பணத்தை நாம் ஆள வேண்டுமே தவிர பணம் தங்களை ஆண்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக நின்றார்..
 
இப்போதே இவ்வளவு தள்ளி நிற்பவன்  வெளிநாட்டிற்கு போனால் இந்த பந்தமும் இல்லாமல் போய்விடும், உறவைவிட அவனுக்கு பணம் பெரிதாய் போய்விடும் என்பதை  அறிந்ததால்தான் கசப்பு மருந்து போல இப்போது இதுபோல சில செய்கைகளை செய்து கொண்டிருந்தார்.. தன் தாயார் இருந்தால் அதற்கு ஏதேனும் இடையூறு வரும் என்று எண்ணிதான் அவரை சக்தியோடு விட்டுவிட்டு வந்திருந்தார்.. தன் மனைவியை நினைத்தவர் நீ செத்தாலும் உன் ஆத்மா இங்கதான் சுத்திக்கிட்டு இருக்கும்.. இன்னும் நாலஞ்சு நாள்தான் இருக்கு.. உன் மகன் ஊருக்கு போக அதுக்குள்ள ஏதாச்சும் செஞ்சு உன்பையன உன்னோடவே இங்க இருக்க வை வசந்தா..!! தன் மகனை திட்டிவிட்டு இவர் மனது கஷ்டப்பட்டு கிடந்தார்..
 
இரவு உணவை முடித்து அப்பத்தாவும் ரேணுகாவும் பேசிக் கொண்டிருக்க ரேணுகாவிற்கு மனது நிறைந்திருந்தது.. இத்தனை வருடங்களில் தன் மாமியாருக்கு பிறகு ஒரு உண்மையான உறவு..சக்தி படுக்க போயிருக்க ரமலி ஹாலில்தான் தாயோடு அமர்ந்திருந்தாள்.. அவர்கள் பேச்சை காதில் வாங்கியபடி தன் லாப்டாப்பில் வேலை செய்து கொண்டிருக்க அப்பத்தாவோ அப்போதிருந்து,” படுக்க போகலையாத்தா என்று ரமலியை நொச்சு பண்ணிக் கொண்டிருந்தார்..
 
பல்லை கடித்தவள் சிரித்து சமாளித்து,” இன்னும் கொஞ்ச வேலை இருக்கு அம்மாச்சி முடிக்கவும் போறேன்..??” அந்த தடித்தாண்டவராயன் தூங்கனுமே மதியம் மாதிரி என்ன அக்க போரு செய்ய காத்திருக்கானோ பயந்தவள் இன்னும் அதிக வேலையிருப்பதை போல காட்டிக் கொண்டாள்.. மணி பத்தரை ஆகவும் ரேணுகாவும் வற்புறுத்த லேப்டாப்பை எடுத்தபடி மாடிக்கு சென்றவள் மெதுவாக தன் அறைக்குள தலையை நுழைத்து பார்க்க சக்தி நல்ல தூக்கத்தில் இருந்தான்..
 
தூங்கும் அவனை முறைத்தவள்,” இடியட் என்னோட பெட்ல படுத்திருக்கு பாரு குரங்கு.. உள்ளதான அவனோட ரூம் இருக்கு..  மெதுவாக சத்தமில்லாமல் தன் நைட் டிரஸை எடுத்தவள் அந்த உள்ளறைக்கு சென்று உடைமாற்றி அவனது அறையிலேயே படுத்துக் கொண்டாள்.. அந்த அறைக்கு உள்தாப்பாள் இருக்காது ஆபிஸ் அறையாக பயன் படுத்தியதால் இதுவரை தாழ்பாளை பற்றி யோசிக்கவில்லை.. சரணாக இருக்கும் போதும் கதவை தட்டிவிட்டு உத்தரவு கேட்டுதான் வருவான்.. ஒருமுறை கூட அவள் சங்கடப்படும்படி நடந்து கொள்ளவில்லை..
 
எப்போதும போல நான்கு மணிக்கு எழுந்த ராமலிங்கம் குளித்து தன் ஹோட்டலுக்கு கிளம்ப அந்த டிரைவரை தன் வண்டியில் அழைத்துச் சென்றவர் மலரின் ஸ்கூட்டி இல்லாததை கவனிக்கவில்லை.. வழக்கம் போல அவர் கிளம்பியிருக்க மலர் குளித்து கிளம்பியவள் மணி அஞ்சறையாகவும் ஹோட்டலுக்கு எப்படி போவது.. என்று யோசனையோடு வெற்றியை பார்க்க அவனோ நல்ல தூக்கத்தில் இருந்தான்..
 
என்ன செய்வது என்று யோசித்தவள் முதல் பஸ்ஸும் காலை எட்டு மணிக்குத்தான் இட்லியைக்கூட வேலைப்பார்க்கும் பெண்கள் ஊற்றிவிடுவார்கள்.. மற்றபடி பொங்கல் , வடையை இவள் செய்தால்தான் இவளுக்கு திருப்தி.. நேரத்தை பார்க்கவும் மணியாகிக் கொண்டே இருக்க வீட்டிலேயே வடைக்கு ஊறப்போட்டு வடையை தட்டியவள் வெற்றியை பார்க்க மணி ஏழாகியிருந்தது.. அவன் இன்னும் எழுந்த பாடில்லை..
 
நைட்டு மட்டும் அவ்வளவு வம்பு பண்ணி என்னை கூட்டிட்டு  வரத் தெரிஞ்சுச்சு.. இப்ப எப்படி போவேன்னு யோசிக்காம தூங்குறாரு.. இதற்கு மேல் பொறுக்க முடியாதவள் அவனை,” ஏங்க.. ஏங்க.. கொஞ்சம் எந்திரிங்க..  எழுப்ப ம்கூம் எந்த முன்னேற்றமும் இல்லை அவள் கூப்பிட்டது அவன் காதிற்குகூட செல்லவில்லை போல,
 
மெதுவாக அவன் தோளில் கைவைத்து எழுப்ப அவள் கையை பிடித்தவன் அவன் கழுத்துக்குள் கொடுத்து  தன் கன்னத்தில் வைத்தபடி மீண்டும் தன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.. அவளுடைய கைக்குளிர்ச்சி அவனுக்கு இதத்தை தந்ததோ என்னவோ இன்னும் அதை அழுத்திக் கொண்டான்..மலர் மெதுவாக கையை உருவிப்பார்த்தவள் அவனது இறுக்கத்தில் அவளால் முடியவில்லை .. அவன் உடல்சூடு தன் கைக்கு வந்தது போல சூடாக இருக்க மற்றொரு கையால் அவனை உலுக்கியவள் ம்கூம் முடியவில்லை..
 
 கும்பகர்ணனுக்கு தம்பி போல.. இப்படியா தூக்கம் வரும்.. இவங்கள நம்பினதுக்கு பேசாம நடந்தே போயிருக்கலாம்.. லேசாக மற்றொரு கையால் அவன் இடுப்பில் கிச்சுகிச்சு மூட்ட மெதுவாக அசையவும் சட்டென கையை எடுத்தவள் வடையை ஒரு பெரிய தூக்கில் போட்டு நடக்க ஆரம்பித்திருந்தாள்..
 
தன் மருமகளை காணாமல் ஹோட்டலில் அதிகமாக கூட்டம் வரவும் கடை பெண்களையே சமைக்கச் சொல்லி தோசை இட்லி, பூரி,சப்பாத்தியை வைத்து சமாளித்துக் கொண்டிருந்தவர் நிறையபேர் வடை, பொங்கல் கேட்கவும் மருமகளுக்கு போன் செய்ய நாட்ரீச்சபிள் என்று வந்து கொண்டிருந்தது.. வெற்றிக்கு அடிக்க புல் ரிங் போய் கட்டானது..பாதி தூரம் நடக்க முடியாமல் வியர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருக்க ராமலிங்கமே கொஞ்சம் கூட்டம் மந்தமாக இருந்த நேரத்தில் மருமகளை தேடி வந்திருந்தார்..
 
காலை வெயில் முகத்தில் அடிக்க வியர்த்துபோய் தொப்பலாக இருந்தவளை பார்க்கவும் மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் பேச நேரமில்லாமல் அவளோடு ஹோட்டலுக்கு வண்டியை விட அதோடு அவர்கள் ஓட்டம் ஆரம்பமானது..
 

Advertisement