Advertisement

அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்து முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மலர் அடுப்படியில் இருந்தாள்.. ராமலிங்கம் தன் தாயிடம் ,”ஆத்தா இன்னைக்கு நம்ம இருளப்பன்னண்ண டவுனுல பார்த்தேன்..
 
நல்லாயிருக்கானா பொண்டாட்டி புள்ளைக எல்லாம் எப்புடி இருக்காங்களாம்..?”
 
நல்லாயிருக்காங்களாம் ஆத்தா .. அவரு ஒரு விசயம் சொன்னாரு நம்ம வெற்றிக்கே கல்யாணம் முடிஞ்சிருச்சு.. சக்திக்கும் சட்டுபுட்டுன்னு ஒரு பொண்ணப்பார்த்து முடிக்கச் சொன்னாரு..
 
ஆமாப்பு நானும் அந்த யோசனையிலதான் இருக்கேன்…வசந்தா எப்படா நம்ம சக்திக்கு கல்யாணம் பண்ணனும், வீட்டுக்கு மருமகள கூட்டிட்டு வரணும்னு ஒரே ஆசையா இருந்தா.. சக்திக்கு பொண்ண பார்க்க வேண்டியதுதான்..”
 
அதான்த்தா அண்ணனோட ஊருலயே நம்ம சக்திக்கு ஏத்த பொண்ணு ஒன்னு இருக்காம் பொண்ணோட ஜாதகத்தை வாங்கித்தரவான்னு கேட்டாரு.. நான் ஒருவார்த்தை உங்ககிட்டயும் சக்திக்கிட்டயும் கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்.. நீ என்ன சொல்ற சக்தி..?”
 
சக்திக்கோ திருமணம் என்றதும் ரமலியின் நினைவுதான்.. அந்த தாலியின் நினைவுதான் நான் இத்தனை நாள் இருந்தவங்க வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு வந்து அப்புறமா பார்க்கலாம்பா..?”
 
அப்பத்தாவோ ,”ஆமாப்பு இம்புட்டு நாளு நம்ம சக்தியை அவங்கவீட்டு பிள்ளையா பார்த்துக்கிட்டத்துக்கு நாம மரியாதை செய்யனும் நாளை மறுநாள் போகலாமாப்பா..?”
 
சற்று யோசித்த ராமலிங்கமும்,” சரித்தா நாளைக்கு மலர கூட்டிட்டு போய் நல்ல சீலையா ரெண்டு வாங்கிட்டு வந்திருங்க.. பூ பழத்தோட போய் பார்த்திட்டு வந்திருவோம்..
 
ரேணுகா ரமலியோடு ஊருக்கு சென்றதிலிருந்து அவளிடம் அதிகம் பேசவில்லை.. தனக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தவர் வக்கீலை பிடி பிடிவென பிடித்துவிட்டார்.. அவர் நிலைமைதான் இப்போது பரிதாபமாக இருந்தது.. ரமலி ஒரு பக்கம் ரேணுகா ஒரு பக்கம் என மத்தளம போல இருபுறமும் அடிவாங்கினார்.. நல்லது செய்ய போய் இப்போது கெட்ட பெயர் வாங்கி கொண்டிருந்தார்.. அடுத்து சரணை இல்லை, இல்லை சக்தியை பார்க்கும்போது அவன் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமோ..!!!
 
ரமலிதான் இரண்டுநாட்களாக ஏதோ இழந்தது போல இருந்தாள்.. அம்மா நன்றாக பேசாததா இல்லை சரணை பார்க்காததா.. சரணுக்கு நினைவு திரும்பியவுடன் இப்படி தன்னை மறப்பான் என நினைத்தே பார்க்கவில்லை..!! அவர இப்ப ஒரு நாப்பது, அம்பது நாள் தெரியுமா எல்லாவற்றிலும் கூடவே இருந்துவிட்டு இப்படி சட்டென விலகி யாரோ போல போனது அவளால் தாங்கமுடியவில்லை.. இப்ப நேரா வந்தா ரொம்ப சத்தம் போடுவாரோ என்ன பேசினாலும் நாம கொஞ்சம் பொறுமையா நம்ம நிலைமைய சொல்லி புரிய வைக்கனும்..
 
அவங்களுக்கு நம்ம சொத்துல என்ன தேவையோ அத கொடுத்து அவங்களுக்குன்னு வேற வாழ்க்கையை அமைச்சிக்க சொல்லனும்.. என்னவோ அவள் மனதிற்கு இருவரும் சண்டையிட்டு பிரிவதைவிட அவனுடன் என்றும் நட்பு பாராட்டவே விரும்பினாள்… எல்லா தொழிற்சாலைக்கும் சென்றவள் சும்மா பார்வையிட்டே திரும்பினாள்.. அவளுடைய மூளை வேறு எதிலும் செல்லவில்லை மனம் செயல் முழுவதும் சரண் சரண் சரண்தான்..!!!
 
மறுநாள் அப்பத்தா மலரை வெற்றியோடு துணிக்கடைக்கு போகச் சொல்ல தனக்காக இருந்தால் யோசித்து இருப்பாள்.. அத்தானை காப்பாற்றியவர்களுக்காக என்பதால் அவளும் கிளம்பிவிட்டாள்.. அதிலும் அம்மாச்சியை வரச் சொல்லி நச்சுபண்ண அவரோ தனக்கு உடல்நிலை சரியில்லை என போக்கு காட்டி அவர்களை ஜோடியாக அனுப்பி வைத்தார்..
 
சக்தி ரமலியின் காரை எடுத்துச் செல்ல சொல்ல வெற்றியோ புல்லட்டே போதும் என்றவன் அவர்கள் கிளம்பும்போது மாலையாகி விட்டது.. அவனோடு வண்டியில் ஏறியவள் ஒரு ஆள் அமரும் அளவிற்கு இடைவெளிவிட்டு பின்னால் தள்ளி அமர்ந்து கம்பியை பிடித்துக் கொண்டாள்.. பல்லை கடித்தவன்,
 
ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி,” ஏய் அன்னைக்கே சொன்னேன் என்னை பொறுக்கி மாதிரி டிரீட் பண்ணாதன்னு ..!!”அவள் ஒன்றும் சொல்லாமல் இருக்கவும்,” முன்னாடி தள்ளி வாடி..?”
 
இதுக்குத்தான் இவரோட வரவேண்டாம்னு நினைச்சேன்.. சும்மாவே கடிச்சு குதறுவாறு கடவுளே தேவையில்லாம தொல்லைய பிடிச்சு தோள்ல போட்டுட்டோம் போலவே லேசாக முன்னால் நகர்ந்தாள்.. அவள் கையை இன்னும் முன்புறம் இழுத்து தன் வயிற்றில் வைத்தவன்,” காத்துல பறந்திறாத..?” வண்டியின் வேகத்தை அதிகப்படுத்த அவனுக்கு பயந்தே கையை எடுக்காமல் இருந்தாள்..
 
 அவள் ஸ்கூட்டி ஓட்டும்போதே நிதானமாகத்தான் ஓட்டிவருவாள்.. வேகமென்றால் அவளுக்கு பயமே.. ஆனால் வெற்றி காற்றாய் பறக்க பயத்தில் கண்ணை இறுக மூடியவள் அவன் இடுப்பை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.. கொஞ்ச நேரம் வேகமாக ஓட்டியவன் அவள் கையழுத்தத்தில் வண்டியை நிதானப்படுத்தினாலும் அவள் பயம் போகாமலிருக்க அவள் அண்மையை ரசித்தபடியே வண்டியை இன்னும் ஸ்லோவாக்கினான்..
 
கடைவரவும் வண்டியை நிறுத்தியவன் அவள் இன்னும் இறங்காமல் அணைத்தபடி இருக்க அவள் கையை நறுக்கென கிள்ளியவன்,” என்ன இறங்கனும்னு தோனலையா..?”
 
தன் கையை தேய்த்துவிட்டு கொண்டவள்,’ இது உனக்கு தேவையா மலர் எல்லாம் இந்த அம்மாச்சியை சொல்லனும் நம்மள யாரோட கோர்த்து விடுது பாரு ஒன்றும் சொல்லாமலே கடைக்குள் நுழைந்தாள்..
 
ரமலிக்கு கல்பதித்த ஊதாநிற பட்டு சேலையை எடுத்தவள் ரேணுகாவிற்கு அவர் வயதிற்கு தகுந்தாற்போல மெலிதான கரைவைத்த வெண்பட்டுச்சேலையை எடுத்திருந்தாள்.. அவள் சேலை எடுக்கும் வரை தன் போனை நோண்டிக் கொண்டிருந்தவன் அவள் அதை பில் போட கொடுக்கவும்,
உனக்கும் ஒரு சேலை எடுத்துக்கோ..?”
 
இல்லை வேண்டாம் எனக்கிட்ட இருக்கு.. சக்தியும் அவளிடம் நிறைய பணமே கொடுத்திருந்தான் அவளுக்கும் ஒரு நல்ல சேலையை எடுத்துக் கொள்ள சொல்லி..
 
மலரின் தந்தையே அவளுக்கு நிறைய புடவைகளை எடுத்துக் கொடுத்திருந்தார்.. அவற்றில் முக்கால்வாசி இன்னும் கட்டாமலே இருக்க இவளுக்கு இப்போது சேலையில் நாட்டம் செல்லவில்லை.. இரண்டிற்கு மட்டும் பில்போட்டு வாங்கியவள் கேஷ்கவுண்டருக்கு செல்ல அவள் கையை பிடித்தவன்,
 நான் சொன்னது உன்காதில விழலையா.. உனக்கும் ஒரு சேலை எடுத்துக்கோன்னு சொன்னேன்..?”
 
கோபத்தில் பல்லை கடித்தவள் அவன் கையை உதறியபடி ,”இந்த தொட்டு பேசுற வேலையெல்லாம் வைச்சுக்காதிங்க.. எனக்குத்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்ல..?”
நான் அப்படித்தான் தொடுவேன்.. நீ வேண்டாம்னு சொன்னா நான் விட்டுருவனா..?” அவளை திமிராக பார்த்தபடி சொல்ல,
 
விடாம நீங்க என்ன பண்ணமுடியும் முதல்ல என்னோட கையை பிடிக்க நீங்க யாரு..? உங்களுக்கு என்ன உரிமை இருக்கு..?”
 
ம்ம் அத உன்கழுத்தில இருக்க மஞ்சகயித்துக்கிட்ட கேளு..?”
 
ஹ… மஞ்சகயித்தில ஒரு மஞ்சள வைச்சு கட்டிட்டா அது தாலியாகுதுன்னு நீங்கதானே சொன்னிங்க…? அதோட உங்களுக்கும் எனக்கும் பேச்சில்ல.. மறுபடி மறுபடி என்னோட வம்புக்கு வராதிங்க.. நீங்க எங்க போகனுமோ போய் என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க..?” கடையென்றும் பாராமல் இருவரும் சிலிர்த்துக் கொண்டு நிற்க,
 
அங்குவந்த பெண் ஊழியர் ஒருவர்,” மேடம் கேஷ் அங்க பே பண்ணனும்.. வேற எதுவும் பார்க்கிறிங்களா..?”
 
வெற்றி ஆமா.. மலர் இல்லையென ஒரே நேரத்தில் சொல்ல அவனை கண்டு கொள்ளாமல் மலர் சேலைக்கு பணத்தை கொடுத்து வாங்கிக் கொண்டவள் வெளியில் வந்திருந்தாள்..
 
திமிரு திமிரு உடம்பெல்லாம் திமிரு.. அதெப்படி ஒரு பொண்ணுக்கு சேலை பிடிக்காம போகும்…எப்ப சொன்னத இங்க வந்து சொல்லுறா..!! நான்தான் ஒன்னும் வாங்கித் தரக்கூடாது.. அண்ணன் காசு கொடுக்கும் போது வாங்கிக்கிட்டா.. இதே ஸ்கூட்டியோ, இல்ல ஹோட்டலோ இல்ல வேற ஏதாவதோ  எங்க வீட்ல அப்பாவோ, அப்பத்தாவோ, அண்ணனோ  கொடுத்தா வாங்கியிருப்பா.. என்னை மட்டும்தான் அவளுக்கு பிடிக்கலை அவள் கலைத்து போட்டதில் இருந்து அவளுக்கு பொருத்தமாய் இருக்கும் என தோன்றியதை அவளுக்காக வாங்கியவன், அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டது, தன் மனைவிக்கு தானே அணைத்தும் செய்ய விரும்புவது தன் மனைவி தன்னோடு மட்டும்தான் நன்றாக பழகவேண்டும் பேச வேண்டும் என்ற பொறாமை உணர்வு தோன்றியது எதுவும் தெரியவில்லை.. மஞ்சள் கயிறு அவனை பொறுத்தவரை நன்றாகவே வேலையை காட்டத்துவங்கியிருந்தது..
 
இருவரும் முறைத்து கொண்டே வீட்டிற்கு வர அவர்களை பார்த்த அப்பத்தாவோ,’ இவன் தேறாத கேஸ்.. ஏதோ பயபுள்ள இந்த புள்ளைக்கிட்ட பேசத்தவிக்கிதே, அவ முகத்த முகத்த பார்க்குதே தனியா பேசிக்கட்டும்னு அனுப்பி வைச்சா என்னத்த சொல்லி வைச்சானோ விளங்காதவன்… பொண்டாட்டியோட அருமை தெரியாத கூறுவாரு கெட்டவன் அவனை பார்த்து பார்த்து முனங்கி கொண்டிருந்தார்..
 
மறுநாள் காலை மலரை ஹோட்டலில் விட்டவர்கள் இவர்கள் மூவரும் மதுரைக்கு செல்ல எப்போதும் போல வெற்றி நல்ல தூக்கத்தில்.. காலையில் சற்று நேரம் கூட்டம் குறைந்தவுடன் இவர்கள் மூவரும் கிளம்பியிருந்தார்கள்.. சக்திதான் அந்த காரை செலுத்தியிருந்தான்.. ரமலி கொடுத்த விசிட்டிங்கார்டில் இருந்த அட்ரசை தேடிச் செல்ல காலை பதினோரு மணியிருக்கும்..
 
இவர்கள் காரை பார்க்கவும் கூர்கா கேட்டை திறந்துவிட்டு சக்தியை பார்த்து பெரிய சல்யூட்டாக வைக்க அப்பத்தாவோ,” பெரியயயய பணக்காரங்க போலவே சக்தி..?”
 
ம்ம்ம் .. சக்தி அங்கிருந்த காலிங் பெல்லை அழுத்த வெளியே வந்த ரேணுகாவிற்கு இவர்களை பார்க்கவும் மகிழ்ச்சி தாங்கவில்லை…
 
வாங்க.. வாங்க..” என பாசமாக வரவேற்றவர் ஹால் சோபாவில் அமர வைத்து தண்ணீர் கொடுத்து வேலைக்கார பெண் காப்பி போட போக தடுத்தவர் தன் கையாலே மருமகனுக்கு பிடித்த காப்பியை போடச் செல்ல  இவ்வளவு பெரிய வீடா வியந்து, அந்த ஹாலை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த அப்பத்தா தன் மகனின் கையை பிடித்து ஏதோ காட்ட ஹாலில் மாட்டப்பட்டிருந்த அந்த பெரிய திருமணப்போட்டாவில் சக்தியும் ரமலியும் சிரித்தபடி திருமணக்கோலத்தில் மாலைப்போட்டபடி இருந்த போட்டாவை பார்த்து இருவரும் எழுந்து நின்றிருந்தனர்… !!!
 
                                         இனி……………………??????

Advertisement