Advertisement

இணை தேடும் இதயங்கள்
                    அத்தியாயம்  –  16
 
ரமலியின் கார் மறையவுமே அவனது நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்..
யார்டா இந்த பொண்ணு..?’
 சினிமா ஸ்டார் மாதிரி இருக்கு உனக்கு தெரிஞ்ச பொண்ணா..?”
 இத்தனை நாள் இவங்க வீட்லயா இருந்த..?”
 அது எப்படிடா இவ்வளவு விலை இருக்கிற இந்த காரையே உன்கிட்ட கொடுத்திட்டு போறாங்க..?”
 இந்த பொண்ணு உன்னை விரும்புதோடா..? சும்மா லட்டுமாதிரி இருக்கு..?” ஆளாளுக்கு ஒரு கேள்வியை கேட்க,
 
சக்தி எதற்குமே பதில் சொல்லவில்லை.. அவனுக்கு பதில் தெரியவில்லை.. இப்போதும் அவன் சட்டையில் இருந்த தாலியை ரமலி கழுத்தில் பார்த்தாலும் அதை தான்தான் கட்டியிருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லையே வேறு யாரும் கட்டியிருக்கலாம்.. ஆனால் அவன் உள்ளுணர்வு என்னவோ இந்த தாலியை தான்தான் கட்டியிருக்க வேண்டும் என சொல்ல அவனுக்கு தனியாக யோசிக்க வேண்டியிருந்தது..
 
எனக்கு எதுவுமே தெரியலைடா.. தலை வலிக்கிது நான் கொஞ்சநேரம் படுக்குறேன்..” அவர்களிடம் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றவனை மலர் தடுத்து,
 
 மணி நாலாக போகுது சாப்பிட்டு படுங்க அத்தான்..
 
 வேண்டாம்..” என்றவனை கையை பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல இங்கு வெற்றிக்கு காதில் புகை ஒன்றுதான் வரவில்லை.. அண்ணன்தான் இருந்தாலும்…. அவன் மனது முரண்டு பிடிக்க ஆரம்பித்தது..
 
நானும்தான நாலுமணி வரைக்கும் சாப்பிடாம இருக்கேன்.. அது இவ கண்ணுக்கு தெரியலையா.. அண்ணன மட்டும் கைய…!!! பிடிச்சு இழுத்துட்டு போறா இவனுக்கு மலர் தன்னோடும் அண்ணனிடம் பேசுவது போல உரிமையோடு பேச வேண்டும் நடந்தவேண்டும் என்ற எண்ணம் நேற்று சக்திக்கு சாப்பாடு ஊட்டியதிலிருந்து தோன்றியிருந்தது..
 
 அப்பத்தாவோ,” நீ ஏண்டா இப்படி உட்கார்ந்திருக்க போ.. போய் சாப்பிடு..?” அவனையும் சாப்பிட அனுப்பியவர் தன் மகனை எதிர்பார்த்து வாசலில் சென்று அமர்ந்தார்..
 
மலர் அதிகாலையிலே எழுந்து ஹோட்டலுக்கு சென்று முக்கால்வாசி வேலையை முடித்துவிட்டு வந்திருக்க மதிய சமையலை வீட்டில் உள்ளவர்களுக்கு வீட்டிலேயே சமைத்தாள்..தன் மாமாவையும் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தாள்.. வெற்றி வரவும் அவனுக்கும் சாப்பாடு பறிமாறியவள் சக்தியோடு மட்டும் பேசிக் கொண்டிருந்தாள்..
 
அவளோடு பேசியபடி சக்தி,” நாளைக்கு நானும் உன்னோட ஹோட்டலுக்கு வர்றேன் மலர் எப்படியிருக்குன்னு பார்க்கனும்..??”
 
நல்லா வாங்கத்தான் நான் வெள்ளன போயிருவேன் நீங்க மெதுவாக கிளம்பிவாங்க..
 
ஏன் நானும் உன்னோடவே வர்றேன்.. உன்னோட கைருசி ரொம்ப அருமையா இருக்கு.. இப்ப மட்டும் அத்தை உயிரோட இருந்திருந்தா ரொம்ப சந்தோசப்பட்டிருப்பாங்க..”
 
சக்தி அப்பத்தா மூலம் இரவே இங்கு நடந்ததை எல்லாம் கேட்டு அறிந்திருந்தான்.. தன் தம்பி மேல் கோபம் இருந்தாலும் அப்பா பார்த்துக் கொள்வதாக சொல்லியிருந்ததால் இவன் கவலை படவில்லை. தன் தந்தையை பற்றி நன்கு தெரியும்… இந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்.. தன் அத்தை மகளின் பாசத்தையும் அக்கறையும் பார்த்தவனுக்கு மலரின் மேல் பாசம்தான் பொங்கியது.. வெற்றியின் முகத்தை பார்க்க உர்ரென்று வைத்திருந்தான்..
 
ராமலிங்கம் வரவும் அவரோடு இன்றைய வரவு செலவை பற்றி பேசியவள் அவருக்கும் சாப்பாடு எடுத்து வைக்க வெற்றிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கோபம் ஏறிக் கொண்டிருந்தது.. என்னோட மட்டும்தான் பேசலையா.. இவள…. பல்லை கடித்தவன் தன் கோபப்பார்வையை மலர் மீது செலுத்த அவள் இவனை நிமிர்ந்துகூட பார்த்ததாக தெரியவில்லை..
 
அனைவரும் சாப்பிட்டு முடிக்க அம்மாச்சியோடு இவளும் சாப்பிட்டவள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்க வெற்றி அடுப்படிக்குள் நுழைந்திருந்தான்..
 
மற்றவர்களோ என நினைத்து என்ன வேணும் என கேட்க வாயெடுத்தவள் வெற்றியை பார்க்கவும்  வாயை இறுக்க மூடிக் கொள்ள மலரின் பார்வையை பார்த்தவன் அவள் அருகில் நெருங்கி போக விலக போனவளை தடுத்து சுவற்றில் இருபுறமும் கைவைத்து அவளை போகவிடாமல் தடுத்தவன் அவளை மேலிருந்து கீழாக பார்வையிட வெற்றியின் இந்த பார்வை மலருக்கு புதிது..!!!
 
எப்போது தன்னை வேண்டாம் என சொன்னானோ அன்றிலிருந்தே அவன் முகத்தை நிமிர்ந்துகூட பார்த்ததில்லை..சுவரோடு இன்னும் பின்னால் ஒண்டியவள்,” எ.. என்ன வேணும்..?”
 
அவள் இன்னும் பின்னால் போகவும் கோபத்துடன் அவள் உடலோடு உடல் உரசும்படி இன்னும் நெருங்கியவன்,” என்ன பண்ண போறேன்னு இப்படி பின்னாலயே போற.. என்ன பார்த்தா பொம்பள பொருக்கி மாதிரி இருக்கா … வீட்ல எல்லார்கிட்டயும் பேசுற என்கிட்ட மட்டும் மூஞ்சிய தூக்கி வைச்சிக்கிற..?” அவளை இன்னும் நெருங்க
 
என்னாச்சு இவருக்கு.. இவர்தானே நம்மள வேண்டாம் உங்க அப்பாவோட போன்னு சொல்லிட்டு இப்ப என்னவாம்..!! அவன் பொறாமை, கோபம் எதுவும் தெரியாதவள் அவன் உடலும் தன் முகத்தில் படும் மூச்சுக்காற்றும் அவளை ஏதோ செய்ய வெளியில் அம்மாச்சியின் குரல் கேட்கவும் சட்டென அவன் மார்பில் கைவைத்து தள்ளியவள் வெளியில் வந்திருந்தாள்..
 
கோபமாக உள்ளே சென்றிருந்த வெற்றியின் மனம் மயிலிறகை வருடியது போல மாறி…அவள் அண்மை அவன் கோபத்தை போக்கி தாபத்தை தூண்டியிருந்தது..ச்சே நல்ல சான்ஸ மிஸ்பண்ணிட்டமோ..!! ஒரு கிஸ்ஸாவது கொடுத்திருக்கலாம்.. பேசுர அவ வாய…..!!
 
மெல்லிய சீட்டியடித்தபடி வெளியில் வர அவனை தவிர மற்றவர்கள் அனைவரும் முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.. இன்றோடு தான் வந்து நான்கு நாட்கள் முடிந்துவிட்டது.. இன்னும் அப்பாக்கிட்ட பேசலை.. இல்லை அவர்தான் பேசவில்லை.. தான் பேச போவது தெரிந்தாலே முகத்தை கோபமாக மாற்றிக் கொள்கிறார் அதே தன் அண்ணன் வந்ததிலிருந்து அவனிடம் வாய் ஒயாமல் அப்பத்தாவும் அப்பாவும் அம்மா தவறியதில் இருந்து இந்த ஊரில் நடந்தது, பறந்தது என ஒன்றையும் விடாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. அதில் மலரும் ஆனந்தமாக கலந்துகொள்ள அவளை நடுவில் நிறுத்தியே மூவரின் பேச்சும் இருந்தது.. தன்னை விலக்கிவிட்டு தன் குடும்பத்தில் அவளை சேர்த்து கொண்டது போல ஒரு எண்ணம்..
 
தன் போனை நோண்டியபடி அங்கிருந்த சோபாவில் அமர அவர்களின் பேச்சை காதில் வாங்கியிருந்தவன் அப்போதுதான் ஒன்றை கவனித்தான்..எதை பற்றி பேசினாலும் தந்தை தன் அண்ணனிடம் அபிப்ராயம் கேட்பதை.. அவன் அதைப்பற்றி அப்பத்தாவிடமும் மலரிடமும் சொல்லிவிட்டு தந்தை விருப்பம் என விட்டுக் கொடுப்பதை இன்னும் ரெண்டுநாள் போனா என்னைவிட என்குடும்பத்தை பத்தி இவளுக்கு எல்லா விசயமும் தெரியும் போலவே… அவ கண்ணப்பாரேன் என்னமா சுத்துது.. பேசும்போது கண்ணுமா சிரிக்கும்.. டேய் வெற்றி சின்னப்புள்ளையிலயே அப்படிதானடா சிரிச்சுக்கிட்டே இருப்பா.. இவ வளராம அப்படியே இருந்திருக்கலாம் .. எத்தனை முத்தம் கொடுத்திருப்பா.. ம்ம்ம் அப்ப அதோட அருமை தெரியல… இப்ப தெரியிது இந்த குட்டி குரங்குதான் நம்மகிட்டயே வரமாட்டேங்குதே அவன் அவளோடு தனி உலகத்திற்கு சென்றுவிட்டான்..
 
அன்று இரவு வெகுநேரம் தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த சக்தி பழைய நியாபகம் ஏதாவது வருகிறதா என யோசித்தபடியே அன்றைய இரவை கழித்தான்.. அவன் கண்முன்னால் ரமலி கழுத்தில் இருந்த தாலியே  நின்றது.. அவள் வந்ததிலிருந்து அவள் அணைப்பு, பேச்சு, கலக்கம் எல்லாவற்றையும் நினைத்து பார்த்தவன் கடைசியில் தன் தாயின் நினைவோடு தூக்கத்திற்கு சென்றான்..
 
 மறுநாள் காலை கண்விழித்த வெற்றி எப்போதும் போல வீடு இன்றும் அமைதியாக இருக்க பக்கத்தில் படுத்திருந்த அண்ணனை காணவில்லை.. வேகமாக வெளியில் வந்து பார்த்தவன் மலரின் ஸ்கூட்டி வீட்டில் நிற்க, புல்லட்டை காணவில்லை வாசலில் ஹாரன் சத்தம் கேட்கவும் கொல்லைப்பக்கம் இருந்த அப்பத்தா வேகமாக தன் மகனின் வண்டி அருகில் வந்தவர்,வாசலில் நின்ற வெற்றியை பார்க்கவும்,
 
 டேய் வெற்றி சும்மா வெட்டியாத்தான வீட்ல இருக்க.. மலரோட வண்டி என்னவோ பஞ்சராம் அதை பார்த்துட்டு வண்டியை கொண்டு வந்து ஹோட்டல்ல நிப்பாட்டு..” மிடுக்கோடு கூறியபடி அவரோடு வண்டியில் செல்ல போக,
 
அவரை தடுத்தவன்,” அப்ப மலர் எப்படி போனா..?”
 
ஆமா நீ இப்படியே தூங்கு.. நடந்து போறேன்னு சொன்ன புள்ளைய என் பேரன்தான் கூட்டிட்டு போனான்.. இவன்கிட்டயெல்லாம் வெட்டியா பேச எனக்கு நேரமில்லப்பு நீ வண்டிய கிளப்பு..
 
அப்பத்தாவை முறைத்தவன் ,’ஆமா இது பெரிய ஐடி கம்பெனியில வேலைப்பார்க்கிது.. வரவர இந்த அப்பத்தா அப்பாவோட சேர்ந்துக்கிட்டு ரொம்பத்தான் பில்டப் பண்ணுது.. ஹோட்டலுக்கு போய் அங்கன சமைக்கிற எல்லாத்தையும் டேஸ்ட் பார்க்கவும் நல்லா சாப்பிட்டுட்டு அங்கன வாரவங்ககிட்ட நல்லா வெட்டி அரட்டைதான அடிக்கிது.. கல்லாவுல உட்காருன்னு சொன்னாக்கூட மாட்டேன்னு சொல்லுது …இப்போது கோபம் சட்டென மலர் பக்கம் தாவியது.. அவ என்னை எழுப்ப மாட்டாளாமா..திமிரு ரொம்பத்தான்.. அண்ணனோடத்தான் போவாளா.’ பல்லை கடித்தபடி ஸ்கூட்டியை பஞ்சர் ஒட்டும் இடத்திற்கு தள்ளிக் கொண்டு சென்றான்..
 
இவன் பஞ்சர் ஒட்டி மெதுவாகவே ஹோட்டலுக்கு செல்ல அங்கு வேட்டியை மடித்துக் கொண்டு சக்தி வேலையில் இருந்தான்.. இவனும் சர்வர் போல எல்லாவற்றையும் பரிமாறிக் கொண்டிருக்க வெற்றியை பார்க்கவும் ,
 
.டேய் வெற்றி நமக்குக்கூட இந்த ஐடியா வரலை பாரேன்.. சூப்பர்டா, மலரோட கைவண்ணமும் சூப்பர்.. இன்னும் ரெண்டு மூனு மாசம் போனா வேற லெவலுக்கு மாறிரலாம்.. மலரை இன்னும் புகழ
 
அப்பத்தாவோ,” அவன்கிட்ட என்ன வெட்டி பேச்சு சக்தி..!! ந்தா அவுகளுக்கு பூரி செட் ஒன்னு வேணுமாம் கொண்டுவந்து குடு..” உற்சாகமாகவே சக்தி உள்ளே சென்றவன் மலரிடம் ஏதோ கேட்க அதற்கு அவள் பதில் சொல்லிவிட்டு சிரித்தபடியே தன் தலையை பின்னால் இழுத்துக் கொள்ள சக்தி அவள் தலையில் கொட்டுவது நன்கு தெரிந்தது..தான் வந்து பத்தி நிமிடங்களாவது இருக்கும் தன்னை ஒருமுறைக்கூட நிமிர்ந்து பார்க்காமல் அவள் வேலையை மட்டும் செய்து கொண்டிருப்பவளை பார்க்கும் போது கடுப்பின் உச்சிக்கே சென்றிருந்தான்..
 
தனக்கு போன்வர எடுத்து பார்த்தவன் அலுவலகத்தில்  இருந்து அழைத்திருந்தார்கள்..  ஆஸ்திரேலியா செல்லும் பிராஜட் விசயமாக ஏதே கேட்க இவனோ இங்கு மலரின் மேல் இருந்த கோபத்தில் போனை ஸ்விட்ச் ஆப் செய்து பையில் போட்டிருந்தான்..
 
என்னடா போன் பேசாம கட்பண்ணிட்ட..?”
ம்ம் கம்பெனி கால்ண்ணே.. அப்பா எங்க..?”
அதுவா நான் இங்க சாப்பிட வர்றவங்களோட பசங்க விளையாடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் மணலை கொட்டி அவங்களுக்கு தோதா ஊஞ்சல் , சறுக்கு விளையாட்டுன்னு ஏதாவது வைச்சா இன்னும் கொஞ்சம் நல்லாயிருக்கும்னு சொன்னேன் அதான் அப்பா அதுவிசயமா வெளியில போயிருக்காங்க.. நான் போறேன்னு சொன்னாலும் கேட்கலை.. நீ கொஞ்ச நேரம் கேஷ்கவுண்டர்ல உட்காரு அப்பத்தா சாப்பிடட்டும்..
 
இல்லண்ணா நீ போய் உட்காரு.. நான் கொஞ்சநேரம் வேலை பார்க்கிறேன்..
 
இல்லடா இது எனக்கு பிடிச்சிருக்கு.. நானே பார்க்கிறேன் அதற்குள் மலர் அவனை அழைக்க,” இதோ வந்திட்டேன் மலர் அவளிடம் சென்றிருந்தான்.. தன்னை வேண்டும் என்றே மலர் தவிர்ப்பது அவனுக்கு தெரிந்திருக்க அவளோடு பேசிப்பழக அவனுக்குள் ஆசை துளிர்விட்டு செடியாக வளரத்துவங்கியிருந்தது..
 

Advertisement