Advertisement

வெற்றி தன் தந்தைக்கு போன் செய்து விசயத்தை சொன்னவனிடம் ரேணுகா தங்கள் காரிலேயே செல்லலாம் என சொல்ல அனைவரும் சக்தியின் ஊருக்கு கிளம்ப தயாராகினர்..  ரேணுகா வெற்றியிடம்,” தம்பி அந்த பொண்ணு உங்களுக்கு என்ன வேணும்..?” மலரை பற்றி கேட்க,
 
அவ எங்களோட அத்தை பொண்ணு இப்ப என்னோட மனைவிங்க..
 
அவரோட தம்பி இவருக்கே கல்யாணம் ஆயிருச்சுன்னா அப்ப நம்ம மருமகனுக்கும் கல்யாணம் ஆகியிருக்குமோ.. அவருக்கு தலை சுழன்றது..கடவுளே என் பொண்ணோட நிலை..ரேணுகாவிற்கு முழுவதும் தெரிந்து கொள்ளாமல் எதுவும் பேசமுடியாத நிலை.. தவறு யார்பக்கம் என கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தவர் அவர்களோடு காரில் அமர்ந்திருந்தார்..
 
காரில் ஏறியதிலிருந்து அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.. ஊர் நெருங்க நெருங்க அப்பத்தாவும் வெற்றியும் அம்மா இறந்தத்தை எப்படி சொல்வது என யோசித்துக் கொண்டுவர அவர்கள் ஊருக்குள் கார் நுழைந்தது… மணி ஆறிருக்கும்.. அப்போதே நன்றாக இருட்டியிருக்க தங்கள் வீட்டின் முன்னால் அவ்வளவுகூட்டம் ….
 
கார் நின்றதுதான் தாமதம் அங்கு கூடியிருந்த பெண்களும் ஆண்களும் காரை சூழ்ந்து கொள்ள சக்திக்கு ஒன்றுமே புரியவில்லை.. அப்பத்தாவால் அதற்கு மேல் அழுகையை அடக்கமுடியவில்லை.. முந்தானையால் வாயை பொத்தியபடி அமர்ந்திருக்க அனைவரையும் ஒருமுறை திரும்பிப்பார்த்தவன் காரை விட்டு இறங்க அவ்வளவுதான் அங்கிருந்த பெண்கள் அப்பத்தா வயதுடைய வயதானவர்கள் அனைவரும் அவன் காலை கட்டிக் கொண்டு ஒப்பாரி வைக்க,
 
                கொத்த வேண்டாம் வெட்ட வேண்டாம்
                   என்ரை நீல நையினார்  நீ
                உங்கம்மாவுக்கொரு
                    கொள்ளி  வைக்க காணாமேடா
               பார்க்க வேண்டாம் எடுக்க வேண்டாம்
                  என்ரை நீல நையினார்  நீ உங்காத்தாளுக்கொரு
               பால் வார்க்க காணாமேடா …….
 
அந்த பாட்டிலேயே தன்தாய் இறப்பை அறிந்த கொண்டவன் அப்படியே இறுகிப்போய் நிற்க யாரையும் விலக்கவில்லை.. அப்பத்தாவும் அவர்களோடு சேர்ந்து கொண்டு அழ ராமலிங்கம் தன் மகன் கிடைத்துவிட்டான் என்பதிலேயே நிம்மதியடைந்திருந்தார்..
 
வெற்றி எதுவும் செய்யமுடியாமல் ஒதுங்கி நிற்க அவன் நண்பர்கள்தான் அவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.. மெதுவாக உள்ளே செல்ல அவன்மேல் அழுது புரளும் ஆண்களும் பெண்களும் தாய் படுத்திருந்த அறைக்கு சென்றவன் அங்கு அவருடைய பெரிய படம் மாட்டப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது..
 
தந்தை அந்த போட்டாவின் அருகில நிற்க அப்படியே அவர் காலடியில் தடால் என விழுந்திருந்தான்.. அப்படியே அழுகையில் தன் காலெல்லாம் கண்ணீர் வழிய படுத்திருந்தவனை தன் இருகைகளால் தூக்கி அப்பு சக்தி என இறுக அணைத்திருந்தார்..சக்தி அம்மா அம்மா என விடாமல் அழ அவராலும் தாங்கமுடியவில்லை.. தன் மனைவி இருக்கும்போது தான் அவளோடு இருந்த நேரத்தைவிட சக்திதான் அவளை அதிகம் பார்த்துக் கொண்டான்..
 
அவளுக்கு அவன் ஒரு குழந்தைபோல எல்லாம் செய்தவனாயிற்றே.. எப்படி அவனால் தாங்க முடியும்.. அவன் அழுவதை தாங்கமுடியாமல் அவரும் சேர்ந்து அழுதவர் சற்றுப்பொறுத்து தன்னை சமாளித்து மெதுவாக அவன் முதுகை தட்டிக் கொடுக்க வெற்றியும் அழுதபடிதான் அமர்ந்திருந்தான்..
 
அப்பா நான் என்னப்பா பாவம் பண்ணினேன்.. அம்மாவோட கடைசி முகத்தைக்கூட பார்க்கமுடியாம போச்சு..” கைகளால் தன் தலையில் அடித்துக் கொண்டு தன் தாய் போட்டோவை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அழுதவனை பார்த்திருந்த அனைவராலும் தாங்கமுடியவில்லை… எப்படி எப்படியோ சமாதானம் செய்தும் யாராலும் அவனை சமாதானம் செய்யமுடியவில்லை.. நண்பர்கள் அனைவரும் அவனை சூழ்ந்துகொண்டு அவனை சமாதானப்படுத்த எதுவும வேலைக்காகவில்லை.. அனைவருக்கும் அவன்தாயின் மீது வைத்திருந்த பாசம் தெரியும்.. அவனால் தாங்கவே முடியவில்லை..
 
ரேணுகாவிற்கு இது முன்பிருந்த அதிர்ச்சியைவிட  மிகப்பெரிய அதிர்ச்சி அவங்க அம்மா இறந்ததே தெரியாதா..ஐயோ இதென்ன கொடுமையா இருக்கு அவருக்கு இப்போதே லேசாக நெஞ்சுவலிப்பது போல இருந்தது..
 
அரைமணி நேரம் சென்றிருக்கும் ஒருவாறு அவனை சமாதானப்படுத்தியவர்கள் அன்னைக்கு என்ன நடந்துச்சு பஸ்ஸைவிட்டு இறங்கியிருக்க வீட்டுக்கு வராம எங்க சக்தி போன..?”
 
அம்மா இறந்து எத்தனை நாள் ஆச்சு வெற்றி..”
அம்பதுநாள்டா..”
அம்பதுநாளா.. இத்தனை நாளாவா நான் எல்லாத்தையும் மறந்து போயிருந்தேன்… வேதனையில் கண்மூடியவன் ,”அன்னைக்கு பஸ்ஸை விட்டு இறங்கி வந்துக்கிட்டு இருக்கும்போது யாரோ நாலஞ்சு பேர் என்னை அடிச்சு போட்டுட்டாங்கடா..
 
நண்பர்கள் அனைவரும் வேட்டியை மடித்துக் கொண்டு,” யாருடா அவனுக உன்மேல கையை வைச்சது.. எவ்வளவு திமிரு நம்ம ஊருக்கே வந்து அதுவும் உன்மேல கைய வைப்பானுகளா.. யாருன்னு மட்டும் சொல்லு இன்னைக்கு அவனுகள ஒருவழியாக்காம விடமாட்டோம்..
 
ப்பச் விடுங்கடா அவனுக யாருன்னு தெரியல தெரிஞ்சா மட்டும் நான் எங்க அம்மாவ திரும்பி பார்க்கமுடியுமா இல்லை மூத்த மகனா நான் செய்யாம விட்ட எல்லாத்தையும் செய்யமுடியுமா …
வெற்றி,” டேய் அண்ணா அடிச்சிப்போட்டா நீ அங்கதான கிடக்கனும் இவங்ககிட்ட எப்படி போன..” ரேணுகாவை பார்த்துக் கைகாட்ட
 
கண்ணை மூடி அன்றைய நினைவை நினைத்து பார்த்தவன்,” அன்னைக்கு என்னோட பின்மண்டையில அடிக்கவும் எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருந்திச்சு.. அப்ப பைபாஸ்ல ஒரு காரை பார்க்கவும் குறுக்கால போய் கைகாட்டினேன்..நான் திடிருன்னு போகவும் அவங்களால வண்டியை ஸ்லோ பண்ணமுடியலைன்னு நினைக்கிறேன்.. என் மேல மோதித்தான் நிறுத்தமுடிஞ்சது.. அந்த காருல இருந்து ஒரு பொண்ணு இறங்கி  என்கிட்ட வந்த நியாபகம்தான் இருக்கு மத்தபடி இந்த அம்பதுநாள் என்ன நடந்திச்சுன்னு எனக்கு தெரியலைடா..
 
உன்னை காப்பாத்தினவங்க இவங்களா…?”
 
ம்கூம் இல்லடா அவங்க சின்னவயசா இருந்தாங்க..”
ரேணுகா,” அது என்னோட பொண்ணு தம்பி..
ராமலிங்கமும் அப்பத்தாவும் அதன் பிறகு வசந்தாவின் கடைசி ஆசையையும் வெற்றி மலர் கல்யாணத்தையும் பற்றி சொல்ல வெற்றியின் கையை பிடித்தவன்,” டேய் நீயாச்சும் அம்மாவோட கடைசி ஆசையை நிறைவேத்தினியே.. அம்மாவோட ஆத்மா நிச்சயமா சாந்தியடைஞ்சிருக்கும்டா..” அப்படியே தளர்ந்து போய் அமர்ந்திருந்தான்.. மலர் அனைவருக்கும் டீ போட்டு கொண்டு வந்து கொடுக்க, ரமலி மதியத்திலிருந்து போன் செய்து கொண்டேயிருந்தாள்..
 
முதலில் சரணுக்கு அடிப்பட்டிருக்கவும் அந்த பதட்டத்தில் போனை எடுக்காமல் விட்டிருந்தவர் அதன்பிறகு நடந்தவற்றையெல்லாம் பார்த்தவுடன் மகள் மேல் இருந்த கோபத்தில இருவருடைய போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.. ரமலிக்கு அங்கு பதட்டம் இருவரும் போன் எடுக்காமல் இருக்கவும் தான் நியமித்திருந்த பாடிகாட்களை விசாரித்தவள் அவர்களுக்கு எதுவும் தெரியாமல் இருக்க பதட்டம் இன்னும் அதிகரித்தது..
 
அப்போதே கிளம்பலாம் என நினைக்க பிளைட் இல்லாமல் காலையில்தான் கிளம்ப வேண்டியிருந்த்து … அதற்கிடையில் வக்கீலுக்கும் போன் செய்து விபரத்தை சொன்னவள் வீட்டில் சென்று அவர்களை பார்த்துவரும்படி சொல்ல அங்கு அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை..
 
அன்று இரவு ஆளுக்கு ஒரு மூலையில் மலர்தான் அனைவருக்கும் தேவையானதை கவனித்துக் கொண்டாள்.. ரேணுகாவை ஒரு அறையில் தங்கவைத்தவள் மற்றவர்களுக்கு சாப்பாடு போட்டு சக்தியை சாப்பிடச்சொல்ல அவன் சாப்பிட மறுத்து தன் தாய் படத்தின் அருகேயே படுத்திருந்தான்..
 
 மலருக்கு சக்தி படும் வேதனையை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை.. அத்தை இறந்ததிலிருந்து சக்தி தன் தாய்க்கு செய்யும் பணிவிடைகளையும், அவர் மேல் வைத்திருக்கும் பாசத்தையும் அம்மாச்சியின் மூலமாகவும் மற்றவர்கள் சொன்னதிலிருந்து கேட்டவள் சக்தி இப்போது படும்துன்பம் அதைவிட பலமடங்கு அதிகமாகியிருந்தது..
 
அத்தான்..” என அவன் அருகில் அமர்ந்தவள் சாப்பாட்டை எடுத்து அவனுக்கு ஊட்ட வாங்க மறுத்தவனிடம்,” ஏன்த்தான் எனக்கும்தான் நாலு வயசிலயே அம்மா இறந்திட்டாங்க உங்களுக்காச்சும் இத்தனை வயசுவரைக்கும் அவங்களோட இருக்கிற குடுப்பினை கிடைச்சிச்சு… அதோட அவங்கள நீங்கதான் இத்தனை வருசமா பார்த்துக்கிட்டதா சொன்னாங்க.. அது எல்லா பையன்களுக்கும் கிடைச்சிடாது … அன்னைக்கு நீங்க என்ன வேணும்னேவா வரல.. உங்க சூழ்நிலை அப்படி அத்தைக்கு தெரிஞ்சிருக்கும்… நீங்க வேதனை படாதிங்கத்தான் நீங்க கவலைப்பட்டா அது அத்தைக்கு தாங்காதுதானே சாப்பிடுங்க.. சாப்பாட்டை ஊட்டிவிட சக்திக்கு தன் தாயே தன்கண்முன்னால் நின்று பேசுவது போல இருந்தது.. மலரின் இருகைகளையும் பிடித்து தன் கண்ணில் ஒற்றிக் கொண்டவன் அவள் ஊட்டிவிட்ட சாப்பாட்டை வாய்திறந்து வாங்கிக் கொண்டான்..
 
இதை பார்த்து கொண்டிருந்த வெற்றிக்கு முதல் முறையாக நெஞ்சில் ஒரு அடி.. தான் வேதனையாக இருந்தபோது மலர் தன் அருகில்கூட வரவில்லை ஒருவார்த்தை பேசவில்லை … இன்னைக்கு அண்ணனுக்கு ஊட்டியெல்லாம் விடறா.. அவனுக்கு தான் மலரை வேண்டாம் என சொன்னது அவள் தந்தையோடு போகச் சொன்னது எல்லாம் இப்போது வசதியாக மறந்து போயிற்று..
 
சக்தி சாப்பிட்டு முடிக்கவும் வெற்றியை அருகில் அழைத்தவன்,” டேய் அம்மா செத்தாலும் அதே மாதிரி நம்மள பாசமா இருக்கிற ஒரு ஆளை வீட்டுல விட்டுட்டுதான்டா போயிருக்காங்க…உன்னை பார்க்கும்போது அத்தையை பார்க்கிறமாதிரி இருக்கு மலர்.. நீ வேணா பாரு நம்ம வீட்லயே அம்மா மறுபடி பிள்ளையா பிறப்பாங்க..  வெற்றியின் கைமேல் மலரின் கையை வைத்து அழுத்தியிருக்க மெல்ல தன் கையை உருவியவள் எதுவும் பேசாமல் தட்டோடு அடுப்படிக்குள் நுழைந்தாள்..
 
அன்றைய நாள் கழிய மறுநாள் ரமலி டெல்லியிருந்து வந்திறங்கியிருந்தாள்… மதியம் மூன்றரையிருக்கும் ஒரு கார் வந்து வேகமாக சக்தியின் வீட்டின் முன் நிற்க வாசலில்தான் சக்தி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.. காரை பார்க்கவும் யாரென்று பார்ப்பதற்காக காரை நோக்கி வர அதிலிருந்து இறங்கிய ரமலி ஓடிவந்து சக்தியை இறுக அணைத்திருந்தாள் ….
 
அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்,” உங்களுக்கு ஒன்னுமில்லதானே..??” கைகளால் அவன் முகத்தை தடவிப்பார்க்க…. சக்தி மட்டுமில்லாமல் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யத்தில் அப்படியே ஆவென வாய்பிளந்திருந்தனர்….!!!!
 
                                                       இனி……………?????
 

Advertisement