Advertisement

                        இணை தேடும் இதயங்கள்
                           அத்தியாயம்  –  12
                                                                                  
வெற்றி தன் தந்தையை பார்க்கவும் அவரிடம் வேகமாக சென்று,” அப்பா அண்ணன பத்தி ஏதாவது தெரிஞ்சுதா..??”
 
அவனை ஒரு பார்வை பார்த்தவர் எதுவும பேசாமல் தன் போக்கில் ஆர்டர்களை மருமகளிடம்  கொண்டுவரச் சொல்லிக் கொண்டிருக்க வெற்றிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..
 
சோர்ந்து போய் அங்கு காலியாக கிடந்த சேரில் சென்று அமர்ந்தான்.. அப்பத்தாவுக்கு தன் பேரனை பார்த்து பாவமாக இருந்தாலும் தன் பேத்தியை மனதில் நினைத்து தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.. பரபரவென ஆட்கள் வந்து சாப்பிட்டு கொண்டே இருக்க பத்துமணி வரை அவர்களுக்கு வேலை இருந்து கொண்டே இருந்தது..
 
அந்த பைபாஸில் செல்பவர்கள் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வந்தவண்ணம் இருக்க வெற்றியின் மனதிற்குள் இந்த ஐடியாவை மெச்சாமல் இருக்க முடியவில்லை.. வெற்றி வந்து ஒரு மணிநேரமாவது ஆகியிருக்கும் பசி வயிற்றை கிள்ளியது.. ஓரளவுக்கு மேல் கூட்டம் குறைய அப்பத்தா தன் பேரன் அருகில் இருந்த சேரில் வந்து அமர்ந்தார்..
 
ஒன்பது மணி போல ராமலிங்கம் ஒரு பையை எடுத்துக் கொண்டு சந்தைக்கு கிளம்பியிருக்க, மலர் உள்ளேதான் இருந்தாள்.. கடையில் வேலைப்பார்க்கும் இரு பையன்கள்தான் ஆர்டர் எடுத்து சாப்பாட்டை கொண்டு வந்துக் கொண்டிருந்தனர்.. தன்னுடைய உதவியோ பணமோ இனி இவங்களுக்கு தேவை இல்லையா..?? என்கிட்ட பணம் வாங்கக்கூடாதுன்னுதான் இப்படி ஹோட்டல்ல ஆரம்பிச்சிருக்காங்களா..?? தன்னிடம் சொல்லாமல் இந்த ஹோட்டல் ஆரம்பித்தது வெற்றிக்கு கஷ்டமாக இருந்தது.. மலர் அவங்க அப்பா வீட்டுக்கு போகாம இங்கேயே இருந்தாலும் மூனு பேருக்கும் என்னால சம்பாரிச்சு போடமுடியாதா..?? ஒரு ஆண்மகனாக அவனுடைய ஈகோ அங்கே அடிப்பட்டது ..
 
வெற்றியை பொறுத்தவரை வெளிநாட்டில் செட்டில் ஆகவேண்டும் என்பதை மட்டுமே ஒரே குறியாக கொண்டிருந்தானே தவிர தேவையில்லாத ஆடம்பரமோ, அனாவசியமாக செலவு செய்பவனோ கிடையாது.. சம்பளம் வாங்கியவுடனேயே முக்கால்பகுதியை தந்தையின் அக்கவுண்டில் பணத்தை போட்டுவிடுபவன் மீதி பணத்திலேயே தன் அந்தமாத செலவுகளை கவனித்து கொள்வான்.. அதிகபணமிருந்தால் ஆடம்பரமாக செலவு செய்ய தோன்றுமோ என்ற எண்ணம் இருந்தது..
 
ஆனால் இது முழுக்க முழுக்க மலருக்காக ஆரம்பிக்கப்பட்டது என்பது அவனுக்கு தெரியவில்லை.. வெற்றி ஊருக்கு சென்ற நான்கு நாட்கள் கழித்து ராமலிங்கம் தன் மருமகளிடம்,
 
மலரு இந்த வருசம் காலேசுல உன்னை சேர்த்துவிடுறேன் போய் படிக்கிறியா ..?? நம்ம ஊர்ல இருந்து நிறைய பிள்ளைக போய் பக்கத்தூருல படிக்கிதுக நீயும் படி.. படிச்சு பெரிய வேலைக்கு போய் அந்த வெற்றி பய முன்னாடி கெத்தா நில்லுத்தா..!!”
 
மலருக்கு முகத்தில் புன்னகை..” அவங்க விருப்பம் இல்லாம கல்யாணம் நடந்ததுக்கு அவங்கள ஏன் மாமா திட்டுறிங்க.. முதல்லயே கல்யாணம் வேண்டாம்னுதானே சொன்னாங்க.. அப்புறம் அத்தைக்காக தாலிகட்டினாங்க.. விடுங்க மாமா நான் காலேஜ்க்கு போயெல்லாம் படிக்க விரும்பல.. வேணும்னா வீட்லயிருந்தே படிச்சுக்கிறேன்.. ஆனா மாமா அதுக்கு முன்னாடி எனக்கு ஏதாச்சும் வேலை வேணும்..??”
 
ஏத்தா மாமா உன் செலவெல்லாம் பார்த்துக்க மாட்டேனா..?”
 
தன் மாமாவின் அருகில் அமர்ந்தவள் ,”அப்படியெல்லாம் இல்ல மாமா என் மனசுக்குள்ள ஒரு எண்ணம் ஓடிக்கிட்டே இருக்கு.. உனக்குன்னு யாருமில்ல.. எல்லாரும் உன்னை வேண்டான்னு சொல்றாங்க..உன்னால ஒரு பயனும் இல்ல.. நீயெல்லாம் எதுக்கு இந்த பூமியில பாரமா உயிரோட இருக்க.. இதுக்கு நீ செத்திரலாம்னு அடிக்கடி தோனுது….அவங்க சொன்னமாதிரி எங்க அப்பா வீட்ல விட்டா அந்த கிரிதரன் மாதிரி ஆளுங்ககிட்ட என்னால போராட முடியாது.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. என்னோட மனச மாத்துரமாதிரி எதாவது வேலை குடுத்துக்கிட்டே இருந்தா பரவாயில்ல..
 
 இந்த எண்ணம் இப்ப உங்க பையன் என்னை வேண்டாம்னு சொன்னதால இல்ல அங்க இருக்கும் போதே தோனும்.. அதான் நானா நிறைய வேலைகளை இழுத்து போட்டு செஞ்சிட்டு இருந்தேன்.. இப்ப இங்க சும்மா இருக்கேனா அதான் ரொம்பவும் தோனுது.. ..அவங்க அவங்களோட விருப்பப்படி வெளிநாட்டுக்கு போகட்டும். நான் உங்க மருமகளா உங்களோடவே இருந்திருறேன்..எனக்குன்னு நீங்க ரெண்டுபேர் இருக்கிங்கங்கிறதே  போதும் மாமா.. நான் இப்படியே சந்தோசமா இருந்துக்குவேன்..  ப்ளிஸ் மாமா எதாவது வேலைக்கு போகவா..??” மெதுவாக தன் கையை பிடித்த தங்கை மகளின் கைகளில் இருந்த நடுக்கத்தை உணர்ந்தவருக்கு மலர் என்ன மாதிரி நிலையில் இருக்கிறாள் என்பதே புரியவில்லை..
 
இருபது வயசு பொண்ண என்ன நிலைமைக்கு ஆளாக்கியிருக்கோம்.. மலரின் தாழ்வு மனப்பான்மையும், அன்பு கிடைக்காததும்தான் அவளை இந்த அளவுக்கு மாற்றியிருக்கிறது.. இதை இப்படியே விட்டால் ஏதாவது விபரீதம் கண்டிப்பா ஏற்படும் என்பதை உணர்ந்தவர் விடக்கூடாது என நினைத்து மலர் வெற்றியோட வாழ்ந்தாலும் வாழாட்டாலும் பரவாயில்லை.. அந்த பொண்ணுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் நாம கண்டிப்பா கொடுக்கனும் ..
 
 இரண்டு மூன்று நாட்களாக யோசித்துதான் ஹோட்டல் ஆரம்பிக்கும் முடிவுக்கு வந்திருந்தார்..தன் மனைவி மேல் தான் வைத்திருந்த அன்புதான் அவளை இத்தனை வருடம் உயிரோடு வைத்திருந்தது என்பது அவருக்கு தெரியும்.. தன்னை பார்த்துத்தான் தன் மகன் வளர்ந்தான் இந்த வெளிநாட்டு மோகத்தை மட்டும் மாற்றிவிட்டால் போதும் மலரின் வாழ்க்கையை பற்றி கவலைப்பட தேவையில்லை அவளுக்கு தேவையான அன்பை திகட்ட திகட்ட தன் பையன் கொடுப்பான் என்பதை உணர்ந்தார்                    
 
தன் பையன்களின் கையை பார்த்து வாழும் நிலை இவருக்கு இல்லை.. நல்ல வசதிதான் அதை வெளிக்காட்டிக் கொண்டதில்லை.. ஊரில் பாதி நிலங்கள், இடங்கள் இவர்களுடையதுதான்.. வெற்றிக்கு சொத்துவிபரம் எதுவும் தெரியாது இதில் எல்லாம் அவனுக்கு ஈடுபாடு இல்லை.. சக்திக்கு எல்லாம தெரியும் எதெது எங்கு இருக்கிறதென..
 
மலருக்கு ஆரம்பிக்கும் தொழிலில் தன் இருமகன்களின் தலையீடும் இருக்கக்கூடாது அவளை எப்போதும் யாரும் கேள்வி கேட்காத வகையில் தன் தந்தைகாலத்து சொத்து, தங்கைக்கும் அதில் உரிமை உண்டு என்பதை அறிந்தவர் அதை மலரின் பெயருக்கு மாற்றி இந்த கட்டிடத்தை ஆரம்பித்தார்..தன் மனைவியின் இழப்பும் தனக்கு தூண் மாதிரி பக்கபலமாக இருந்த சக்தி காணாமல் போனதும் அவர் நெஞ்சை வதைத்தாலும் மலரின் வாழ்க்கையை இப்போது கண்டிப்பாக சரி செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவர் மற்ற பிரச்சனைகளை சற்று ஒதுக்கி இதில் தன் கவனத்தை செலுத்தினார்..
 
அப்பத்தாவோ கொஞ்சநாள் பித்து பிடித்தவர் போல அழுது கொண்டிருந்தவர் இப்போதெல்லாம் ஜோசியம், ஜாதகம், குறி என எதை தின்றால் பித்தம் தெளியும்.. என்ன செய்தால் தன் பேரன் திரும்பி வருவான் என அவர் போக்கில் இருந்தவரை அன்று மலர் பேசிய பேச்சு அவரையும் அசைத்து பார்த்ததில் தன் பிரச்சனைகளோடு பேத்தியின் வாழ்க்கைக்காகவும் இப்போது கவலைப்பட ஆரம்பித்தார்..
 
தன் தந்தை கொடுத்த நூறுபவுன் நகையையும் பணத்தையும் கொண்டுவந்து மாமனிடம் கொடுக்க அதை வாங்க மறுத்தவர் பக்கத்தூரில் இருக்கும் வங்கி லாக்கரில் நகையை வைத்து பணத்தை மலரின் பேரிலேயே டெப்பாசிட் செய்திருந்தார்.. அவர் மனைவியின் நகைகளே நிறைய இருந்தது.. ஒருநாள்கூட அவர் அணிந்ததில்லை.. அனைத்தும் புத்தம் புதுசாக இருக்க அதில் பாதி நகையை மலரிடம் கொடுத்திருந்தார்..
 
கட்டிடம் கட்டுவதற்கு முன்னதாகவே அந்த இடத்தின் முன்னால் பெரிய கொட்டகை போட்டு வியாபாரம் எப்படி என்பதை பார்த்தே பின்னால் கட்டிட வேலைகளை ஜரூராக நடத்தினார்.. அவர்கள் நினைத்த அளவைவிட வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.. மூவருக்கும் சற்று நிம்மதி.. நிறைய வேலைகள் அவர்களின் மற்ற கவலைகளை சற்று மறக்கடித்திருந்தது..
 
வெற்றி வந்திருக்கும் விசயத்தை மலர் தன் மாமாவிடம் சொல்ல பரவாயில்ல பய ஒரு மாசம்கூட தாங்கல.. பார்ப்போம் அவன் என்ன பண்ணுறான்னு அதை காதில் மட்டும் வாங்கியவர் வேறு எதுவும் சொல்லாததால் மலரும் தன் வேலையை பார்க்க சென்றுவிட்டாள்..
 
மனது கேட்காமல் தன் பேரனின் அருகில் அமர்ந்த அப்பத்தா அவன் களைத்த முகத்தை பார்க்கவும் அந்த கடை பையன்களிடம் சாப்பாட்டை கொண்டு வரச் சொல்லி அதை தன் பேரனின் அருகில் வைத்து ,”ம்ம் சாப்பிடுடா..?”
 
அவன் தட்டை அவர் புறமே தள்ளிவிட்டவன்,” என்கிட்ட யாரும் பேசாம இருந்திட்டு சாப்பாடு மட்டும் நான் சாப்பிடனுமா வேண்டாம் போ..!! எனக்கு ஒன்னும் உங்க சாப்பாடு தேவையில்ல..??”
 
பயலுக்கு சின்ன வயசிலயிருந்து இந்த பிடிவாதம் மட்டும போகலை.. இட்லியை சாம்பாரில் தோய்த்தவர்,” இப்ப மட்டும் நீ இத சாப்பிடல நானும் இனி உன்கிட்ட பேசமாட்டேன்..?” அவன் வாயருகில் கொண்டு செல்ல வாங்கி மறுத்தவனை வற்புறுத்தி ஊட்டி விட்டார்..
 
 மலருக்கு அவன் என்ன விரும்பி சாப்பிடுவான் என்பது தெரியாமல் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டாள்.. இட்லி , பொங்கல், பூரி, வடை என கொடுத்துவிட்டுக் கொண்டே இருக்க அதன் சுவையில் மயங்கி போனான்.. வாயில் போட்டவுடன் அனைத்தும் கரைந்து போக அவனே எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்..
 
அன்று முழுவதும் அங்கேதான் .!!.சற்று நேரம் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவன் வாடிக்கையாளர்கள் அதிகம் வரும் நேரத்தில் தன்னாலேயே அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான்.. தேவையான அளவே சமைத்ததால் அதிகம் மிஞ்சவில்லை.. அப்படியே கொஞ்சம் மிஞ்சினாலும் வேலைப்பார்ப்பவர்கள் அந்த ஊர்காரர்கள் என்பதால் அவர்கள் வீட்டிற்கு கொடுத்துவிட்டாள்..
 
மாலை ஆறு மணி ஆகவும் மலரையும் தன் அம்மாவையும் வீட்டிற்கு அனுப்பிய ராமலிங்கம் இரவு எட்டுமணி வரை கடையில் இருந்தார்.. தந்தை தன்னிடம் எதுவும் பேசாவிட்டாலும் அவர் இருக்கும் வரை வெற்றியும் கடையில்தான் இருந்தான்…இந்த வயதில் அவர் வேலைப்பார்த்துக் கொண்டே இருப்பது அவன் மனதை உறுத்தியது.. ஹோட்டலை அடைத்தவர் வீட்டிற்கு கிளம்ப அவர் வண்டியின் பின்னாலே தன் வண்டியில் தொடர்ந்தான்..
 
வீட்டிற்கு வந்தவர்கள் அப்பத்தாவை வீட்டில் காணவில்லை.. மலர் மறுநாளைக்கு தேவையான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.. கிரைண்டரில் மாவு ஓடிக் கொண்டிருக்க வெளியில் ராமலிங்கம் அவளை அழைத்தவர் அன்றைய வருமானத்தை அவளிடம கொடுத்து பத்திரபடுத்தச் சொல்ல அதை பார்த்தவனுக்கு ஆச்சர்யம்..!! ஒரு நாளைக்கே இவ்வளவா..!! விலையெல்லாம் நியாயமான முறையில்தான் இருந்தது.. இத இன்னும் கொஞ்சம பெரிசு பண்ணுனா நிறைய வருமானம் கிடைக்குமே வெற்றியின் வியாபாரமூளை கணக்குப் போட்டுக் கொண்டிருக்க, காலையும் மதியமும் ஹெவியான உணவாக இருந்ததால் இரவுக்கு இட்லி. சட்னி மட்டும் செய்திருந்தாள்..
 
மலர் இப்போது புடவையிலிருந்து நைட்டிக்கு மாறி, தலைவாரி பூவைத்து நெற்றியில் விபூதி குங்குமம் இட்டிருந்தாள்.. மெல்லிய கொலுசொலி அவள் நடக்குபோதெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்க அந்த ஒலியை இதுவரை இந்த வீட்டில் கேட்டதில்லை.. வந்ததிலிருந்து அவனிடம் ஒரு வார்த்தைகூட பேசாவிட்டாலும் அந்த மௌனமே அவன் மனதை மெல்ல தட்டியிருந்தது.. தன் அப்பாவையும், அப்பத்தாவையும் பார்த்து பார்த்து கவனித்து கொள்வது, தன்னிடம் பேசாவிட்டாலும் இன்று அவள் கொடுத்துவிட்ட சாப்பாட்டை பார்த்தவனுக்கு முதல்முறையாக தன் அத்தை மகளின் மீது பார்வை விழுந்தது..
 
ரமலி இன்றுதான் டெல்லி கிளம்புகிறாள்..அவன் பார்க்க வேண்டிய எல்லாவற்றையும் சரணிடம் பொறுப்பாக சொன்னவளுக்கு மனதிற்குள் ஏதோ ஒரு உணர்வு.. தாயையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளச் சொன்னவள் அவனை பலமுறை கவனமாக இருக்கச் சொன்னாள்.. தன் அத்தை குடும்பத்தின் பார்வை இப்போது சரணை சுற்றிவருவது அவளுக்கு தெரிந்துதான் இருந்தது.. அவனை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்து இதனால் அவனுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ மாமாக்கள் சொத்து கைவிட்டு போனதில் தங்கள் மேல் அதிக வஞ்சத்தில் இருப்பதும், ஆனால் அவர்கள் அதில் நேரடியாக எதுவும் செய்யமுடியாமல் தக்க தருணம் பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதும் தெரிந்துதான் இரண்டு பாடிகார்டை சரணுக்கே தெரியாமல் எப்போதும் சரணுக்கு காவலாக வைத்திருந்தாள்..
 
நேற்று இரவு கார்மென்ட்ஸ் பேக்டரி மேனேஜர் வண்டியில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு ஹாஸ்பிட்டலில் இருப்பதாக போன் வந்திருக்க ரமலி அவரை பார்த்துவிட்டு ஏர்போர்ட் செல்வதாக இருந்தது.. இருவரும் ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தவர்கள் அவரிடம் ஆறுதலாக பேசிவிட்டு பணவுதவியும் செய்துவிட்டு கிளம்ப சரண் அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தான்..
 
கிளம்பலாம் என இரண்டடி நடந்தவள் சரணை காணாமல் திரும்பி பார்க்க அவன் பார்வை அங்கு  பக்கத்து பெட்டில் படுத்திருந்த ஒருவரின் மேலேயே இருந்தது.. அவன் அருகில் வந்து,” சரண் வாங்க போவோம்..
 
 அவள் குரலை உணராதவன் அந்த பெட்டின் அருகே செல்ல வசந்தாவை போலவே காசநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண் ஒருவர் மூச்சுவாங்க இருமியபடி படுத்திருந்தார்.. அவரை பார்க்கவும் அவன் கண்கள் கலங்கி நெஞ்சை அடைப்பது போல இருக்க அவரை தொடப்போனவனை தடுத்த ரமலி கையை விடாமல் காருக்கு அருகில் அழைத்து வந்திருந்தாள் ..
 
என்ன சரண் நீங்க அவங்கள தொடப்போறிங்க.. அவங்கள பார்த்திங்கதானே இருமிக்கிட்டே இருக்காங்க.. கிட்ட போனா எதாவது இன்பெக்ஷன் ஆகிறாதா..?” காரில் அவனை ஏறச் சொன்னவள் காரை கிளப்பப்போக,
 
 தன்னுணர்வில்லாமல் அவள் கையை எட்டி பிடித்தவன்,” எங்க வீட்டில இதுபோல யாருக்கோ இருக்கு..?? எனக்கு தெரியும்… இதோ மாதிரி இருக்கவங்கள நான் பார்த்திருக்கேன்.. அவங்களுக்கு நான் சோறு ஊட்டியிருக்கேன் தலை சீவியிருக்கேன்.. அகு யாரு..??” கண்மூடி தன் நினைவலையில் தேடிக் கொண்டிருப்பவனை பார்த்தவளுக்கு பார்க்கவே பரிதாபமாக இருந்தது.. முகமெல்லாம் இறுகி கண்ணெல்லாம் சிவந்து போய் அப்படி ஒரு கடுமையானவனாக இருந்தான்.. தன் கையில் அவன் அழுத்தத்தை உணர்ந்தவள் இதுநாள் வரை அவன் இப்படியெல்லாம் செய்ததில்லை..
 
அவளுக்குமே தன் அத்தை குடும்பத்தை ஏமாற்றி எப்படி அவனை பற்றி தெரிந்து கொள்வது என்றுதான் தெரியவில்லை.. அன்றுகூட அவர்கள் கம்பெனிக்கென்றே இருக்கும் டிடெக்டிவ் கம்பெனிக்கு சென்றுவிட்டு அங்கு கௌசிக்கை பார்க்கவும் பேசாமல் வந்துவிட்டாள்.. இவள் எங்கு சென்றாலும் நிழல் போல தொடர்ந்தார்கள்..,
 
சரணுக்கும் ஆபத்து வராமல் இதனால அவங்க குடும்பத்துக்கும் ஏதாவது ஆகாம எப்படி கண்டுபிடிக்கிறது.. டெல்லி போய்ட்டு வந்து முதல்வேலையே என்ன பிரச்சனை வந்தாலும் சரி சரணப்பத்தி விசாரிக்கிறதுதான் ஒரு முடிவுக்கு வந்தவள் அவனுடைய கை அழுத்தத்தில் தன் கையில் வலியை உணர்ந்து கண்மூடியிருந்த சரணை பார்த்தவள் சரண்..??” என்று ஆறுதலாக அழைக்க,
 
மெதுவாக கண்திறந்துப் பார்த்தவன் ரமலியை பார்க்கவும் தன்னை மீறி ஆறுதலுக்காக அவளை அணைத்திருந்தான்.. கையில் மட்டும் உணர்ந்த அதே அழுத்தம் அவள் உடலெங்கும் அதில் அவன் வேதனை மட்டுமே அவளுக்கு தெரிந்தது.. எதிலிருந்தோ தன்னை காக்கும்படி கேட்கும் ஆறுதல்.. தனக்கு தெரிந்து தன்னை இப்படி அணைக்கும் முதல் ஆண்மகன்.. அவள் வெளிநாட்டில் இருக்கும்போது இது சகஜம் போல அணைக்கும் ஆண்களை பட்டும் படாமல் லேசாக அணைத்து விலகுபவள் இன்று ஆறுதலுக்காக தன்மீது சாய்ந்திருக்கும் சரணை விலக்க மனதில்லை.. அவன் முதுகை மெதுவாக தட்டிக் கொடுக்க இன்னும் இன்னும்தான் அணைப்பு இறுகியது.. எலும்பு நொறுங்கும் அளவுக்கு இறுக்கியிருந்தாலும் தன் வலியை பொறுத்துக் கொண்டு பேசாமல் இருந்தாள்.. எவ்வளவு நேரம் கடந்ததோ இருவருக்கும் தெரியவில்லை.. வெகுநேரம் கழித்து தன் சுயநினைவுக்கு வந்தவன் அப்போதுதான் உணர்ந்தான் ரமலியை அணைத்திருப்பதை சட்டென அவளைவிட்டு விலகி ,
 
ஸாரி..ஸாரி நான் தெரியாம இப்படி செஞ்சிட்டேன் ஏதோ….?” அவன் இழுக்க
 
அவன் கையை மெதுவாக அழுத்தியவள்,” இட்ஸ் ஓகே சரண் போவமா..? எனக்கு பிளைட்டு டைம்மாச்சு.
 
.காரை வேகப்படுத்தியவளை சற்று ஆச்சர்யமாகத்தான் பார்த்திருந்தான்.. ரமலியை பொறுத்தவரை அவளை பற்றிய ஒரு முடிவுக்கு அவனால் வரமுடியவில்லை.. அனைவரிடமும் தன்னை கணவனாக அறிமுகப்படுத்துபவள் ,அந்த அறைக்குள் சென்றால் தேவைக்கு மேல் ஒரு வார்த்தைக்கூட பேசுவதில்லை.. ஆனால் அவனுக்கு ஏதாவது தேவையானது எதுவாயிருந்தாலும் உடனே வாங்கி கொடுத்துவிடுகிறாள்.. அது பொருளா இருந்தாலும் சரி.. பெரிய காராயிருந்தாலும் சரி அவன் ஒரு நிமிடத்திற்கு மேல் அந்த பொருளின் மீது பார்வையை வைத்திருந்தால் மறுநாள் அந்த பொருள் வீட்டிலிருக்கும்… இது என்னமாதிரியான அன்பு.. அன்பா இல்ல இதுக்கு பேர் வேற எதுவுமா..!! யோசனையிலேயே ரமலியை பிளைட் ஏற்றியவன் தங்கள் பள்ளிக்கு சென்று ஒருவாரத்திற்கு மேல் ஆவதால் அங்கு முதலில் சென்றுவிட்டு பின் லெதர்பேக்டரிக்கு செல்லலாம் என முடிவுசெய்து காரை பள்ளிக்கு விட்டான்..
 
அங்கு முற்றத்தில் கயிற்று கட்டிலில் படுத்திருந்த வெற்றியும் நீண்ட யோசனையில்தான் இருந்தான்.. இன்று காலையில் இருந்து நடந்ததை அவன் மனம் அசைப்போட்டு கொண்டிருந்தது.. தேவையில்லாம நாம மலரோட வாழ்க்கையை கெடுத்திட்டமோ.. மலர்.. மலர்விழி..” ஒரு முறை அவள் பெயரை சொல்லிப் பார்த்தவன் சின்னகுழந்தையா இருக்கும்போது எப்படி சிரிச்சிட்டே இருப்பா.. இப்ப என்னன்னா சிரிக்கவே யோசிக்கிறா.. இன்று முழுவதும் பார்த்த அவள் முகத்தை யோசித்து பார்த்தவன் அவள் சிரித்த முகமே நினைவில்லை..
 
அவனுக்கு நன்றாக நினைவிருந்தது.. தங்களுடைய சிறுவயதில் தன் அத்தையை போலவே இவளுக்கும் சிரித்தமுகம்.. இங்கு வந்து தங்கும் நாளில் எல்லாம் மலருக்கு வெற்றி பின்னால் சுற்றுவதுதான் வேலை.. சக்தி அவளை தூக்கிக் கொஞ்சினாலும் அவளை அடிக்கவெல்லாம் மாட்டான்.. ஆனா நாம அவளை அடிச்சிட்டே இருந்தாலும் இவ நம்மளத்தானே தூக்கச் சொல்லி பின்னாடியே திரிவா.. சக்திக்கூட பலசமயங்களில் திட்டுவான்..
 
டேய் பாவம்டா.. அவளோட வம்பு இழுக்காத..பாரு கண்ணீர..?? தூக்குடா அவள..??” அழுது கொண்டிருந்தாலும் தன்னை சுற்றுவதை விடமாட்டாள்.. அவளை தூக்கி அவள் முகத்தை துடைத்து கன்னத்தில் முத்தமிட்டால்தான் அவள் அழுகை நிற்கும்..
 
அத்தைக்கூட கேலி செய்வார்கள்,” என்ன வெற்றி நீதான் அவள அடிக்கிற.. அப்புறம் நீ முத்தம் கொடுத்தாத்தான் அவ அழுகையையும் நிறுத்துறா..?? நீன்னா ஏந்தான் அவளுக்கு இவ்வளவு பிரியமோ…??” தன் அத்தையையும் அன்றிருந்த அத்தை மகளையும் நினைத்து பார்த்தவன், இப்போது அப்படியே மாறியிருந்த மலரை பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தான்..
 
 
                                                        இனி…………..??????

Advertisement