Advertisement

திருமணம் முடிந்து ஒரு மாதமாகியிருக்க சரணும் இந்த வாழ்க்கைக்கு மெல்ல பழகியிருந்தான்… ரமலிக்கு சரணின் எளிமை மிகவும் கவர்ந்ததென்றே சொல்லலாம்.. நடை, உடை ,பாவனை அனைத்திலும் எளிமைதான்.. அவர்களின் தோட்டத்தை அப்படியே மாற்றியிருந்தான்.. அவன் அதில் பல மாற்றங்களை செய்த பின்தான் முன்பு தோட்டக்காரன் ஏனோதானோவென்று வேலைப் பார்த்திருக்கிறான் என்பதே தெரிந்தது. அவனது ஓய்வு நேரம் முழுவதும் அந்த தோட்டம்தான்..!! எதாவது இயற்கை உரங்கள் , வீரியம் இல்லாத உரங்கள் என ஏதேதோ போட்டு அந்த தோட்டத்தையே அப்படி செழிக்க வைத்திருந்தான்..  
 
அடுத்து அவனுக்கு பிடித்த இடம் சமையலறை.. ரேணுகாவோடு இவனும் ஏதாவது செய்து கலக்குவான்… முதலில் ரேணுகா தடுத்தாலும் அவன் கேட்காமல் இருக்க பின் இருவரும் சிரித்து பேசியபடி ஏதாவது செய்வார்கள்..
 
ரமலிக்கே சில சமயங்களில் பொறாமையாக இருக்கும்..இவன் எப்படி இப்படி..!! நடிக்கிறானா..? எனக்கூட சில சயமங்களில் தோன்றும்.. எந்த நேரத்திலும் எரிச்சலோ ஒரு கோபமோ தென்படாது.. எப்படி அப்படி ஒரு மனிதனால் இருக்க முடியும்.. அவன் எந்த தொழிற்சாலைக்கு சென்றாலும் அவனோடு சிரித்து பேசியபடி சில முதியவர்களோ, இல்லை இவன் வயதை ஒத்த இளைஞர்களோ இருப்பார்கள்.. அவர்களோடு சரிசமமாக டீ குடித்தபடி பேசிக் கொண்டிருப்பான்..
 
அவன் செய்யும் ஒவ்வொரு செயலையும் வைத்து அவன் என்ன தொழில் செய்திருப்பான் என்ற முடிவுக்கே அவளால் வரமுடியவில்லை..அவளை பொறுத்தவரை அவளை பார்த்து தேவையில்லாமல் வழிவது ,பேசுவது எதுவுமே இல்லை.. இருவரும் தனிதனி அறையில் இருந்தாலும் அவள் அவள் அறைக்குள் வரும்போது கதவை தட்டி அனுமதி கேட்டே வந்தான்.. இருவரும் தங்களுக்குள் ஒருகோடு போட்டு அதை தாண்டாமலே இருந்தனர்.. நல்ல நண்பர்களாக பழகினர்..
 
இந்தவார இறுதியில் டெல்லியில் ஒரு கான்பிரன்ஸிர்காக மூன்று நாட்கள் தங்க வேண்டியுள்ளது.. சரண் இங்கே மற்ற தொழில்களை பார்த்துக் கொள்வதால் தான் மட்டும் சென்று வரலாம் என முடிவு செய்தவள் அந்த பயணம் தன் வாழ்க்கையையே மாற்றும் என்பது அவளுக்கு தெரியவில்லை..
 
`இந்த ஒரு மாதமாக தன் வீட்டிலிருந்து எதையும் தெரிந்து கொள்ளமுடியாமல் தவித்த வெற்றி இன்று ஊருக்கே கிளம்பிவிட்டான்.. போன் செய்து பேசியிருந்தால்கூட அதை அந்த நிமிடத்திலேயே மறந்துவிட்டு வேறு வேலையை பார்க்க ஆரம்பித்திருப்பானோ என்னவோ இப்போது எதுவும் தெரியாமல் ஒவ்வொரு நிமிடமும் நொடியும் அவர்களின் நினைவுதான்.. செலவுக்கு என்ன பண்ணுவாங்க.. அண்ணன் வந்திட்டானா.. இதை தெரிந்து கொள்ளாமல் வெளிநாட்டிற்கு செல்ல அவனுக்கு மனதில்லை.. என்னவோ யாருமில்லா அனாதையாக இருப்பது போல ஒரு உணர்வு..
 
அப்பத்தா போன் செய்து பேசும் போதெல்லாம் போனை வைப்பதிலேயே குறியாக இருப்பவன் இப்போது அவரிடமிருந்து ஒரு போனாவது வராதா என காத்திருந்தான்.. தான் லட்சலட்சமாக சம்பாரித்தாலும் இதை அவர்கள் வாங்கிக் கொள்ளாமல் அதை சம்பாரித்து என்ன பயன் என நினைத்தவன், இந்தமுறை அவர்களை எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும் .. மலரை பற்றிய எண்ணம் எதுவுமில்லை.. அவள்தான் அவங்கவீட்டுக்கு போயிருப்பாளே..!!
 
இரவு பஸ் ஏறி காலை வீட்டிற்கு வந்தவன் வீடு பூட்டியிருக்கவும் ஒரு கணம் நெஞ்சு படபடவென அடித்தது….யாருக்கு என்னாச்சோ… !! பக்கத்து வீட்டில் சென்று விசாரிக்க போனவன் தன் வீட்டின் அருகே ஏதோ வண்டி சத்தம் கேட்கவும் திரும்பி பார்க்க அவன் அப்பத்தாவும் மலரும் ஸ்கூட்டியில் வந்து இறங்கியிருந்தனர்..
 
வண்டியில் இருந்து இறங்கிய அப்பத்தா தன் பேரனை பார்த்துவிட்டார்.. வெற்றியை பார்க்கவும் அவனிடம் பேச இரண்டெட்டு எடுத்து வைத்த அப்பத்தா பின் தன் தோள்பட்டையில் இடித்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல மலர் முதலில் இவனை கவனிக்கவில்லை.. கதவை திறந்தவள் பின்னால் அம்மாச்சியை காணாமல் திரும்பி பார்க்க வெற்றியை பார்த்துவிட்டாள்..
 
இரண்டு நிமிடம் அப்படியே அவனை பார்த்திருந்தவள் தன் கைப்பையில் போன் ஒலிக்க அதை பேசியபடி,” இதோ வர்றேன் மாமா ..?”வேகமாக வீட்டிற்குள் சென்று ஒரு பையில் பெரிய டிபன் கேரியரை எடுத்துக் கொண்டு மீண்டும் வண்டியை கிளப்ப வர அம்மாச்சியை பார்த்தாள்.
 
.நீ போத்தா அவுக காத்திட்டு இருப்பாக நான் குளிச்சிட்டு அப்படியே காலார நடந்து வர்றேன்…?”
 
சரி அம்மாச்சி..?” வெற்றியிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.. அவள் போக்கில் தன் ஸ்கூட்டியில் கிளம்பி போக வெற்றிக்கு ஏனோ நெஞ்சில் ஒரு காயம் தன்னிடம் ஒரு வார்த்தை பேசாமல் செல்பவளை பார்த்தவனுக்கு தான்தான் அவளை இந்த வீட்டை விட்டு போக சொன்னோம் என்பது மறந்துவிட்டது.. இன்றுதான் அவள் முகத்தை நேராக பார்க்கிறான்.. தான் நாலு வயதில் தூக்கி கொஞ்சியவள் இவளா..!! எப்போது பார்த்தாலும் தன்னை ஈசியபடி தன்னை தூக்கு தூக்கு என தொல்லை செய்தவளும் இவள்தானா..!!!
 
இரு நிமிடம்தான் பார்த்தாலும் அவள் முகம் என்னவோ இப்போது தன் மனதில் பதிந்து விட்டதை போல ஒரு உணர்வு.. எந்தவித அலங்காரமும் இல்லாமல் சாதாரண காட்டன் சேலை கட்டி அவன் கட்டியிருந்த மஞ்சள் கயிறோடு மெல்லிய செயின் ஒன்றை அணிந்திருந்தாள்..தன் நீண்ட பின்னலை தளர பின்னியிருந்தவள் நெற்றியிலும் உச்சி வகிட்டிலும் குங்குமம் இட்டிருந்தாள்.. அன்று கொலுகொலுவென இருந்த உடல் இன்று ஜீரோ சைசிற்கு மாறியிருந்தது…
 
இவ எங்க போறா..? அதுவும் இவ்வளவு பெரிய டிபன் கேரியர் எதுக்கு ..?அப்பா இவளுக்கு ஸ்கூட்டி வாங்கி குடுத்திருக்காரா.. பணம் ஏது…? ஏனோ தன்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் அப்பா இப்படி செய்தது தன் மனதை என்னவோ செய்தது.. இப்போதுதான் அண்ணனுக்காக புக் செய்திருந்த காரை கேன்சல் செய்ய அதில் அவன் அட்வான்ஸாக கட்டியிருந்த பணம் பாதி திரும்ப வரவில்லை.. என்னவோ தன் குடும்பத்தில் தன்னை மதிக்காமல் ஒதுக்கி வைத்தாற் போல ஒரு உணர்வு..
 
அப்பத்தாவும் வெற்றியைத்தான் பார்த்திருந்தார் .. கண்கலங்கி கண்ணீர் ஊற்ற தயாரானாலும் தன் மகன் சொன்னது நினைவில் வர அவன் சொன்னபடி செஞ்சதாலதான இந்த பய இங்கன வந்திருக்கான்.. இவரும் அவனிடம் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் குளிக்கச் செல்ல தன் நினைவிலிருந்து மீண்டவனுக்கு அப்பத்தாவும் தன்னிடம பேசாமல் போவது தெரிந்தது..
 
அவதான் நம்மளமேல கோபமா இருக்கான்னு நினைச்சா இந்த அப்பத்தா என்ன ஒரு வார்த்தைக்கூட பேசாம நம்மள கண்டுக்காம போகுது.. பையை உள்ளே வைத்துவிட்டு தானும் உடை மாற்றி வந்தவனின் கண்ணில் வீட்டில் செய்திருந்த நிறைய மாற்றங்கள் தெரிந்தது.. முன்பை போல ஏனோ தானோவென்று இல்லாமல்  அந்தந்த பொருட்கள் அந்தந்த இடத்தில் அவ்வளவு சுத்தமாக இருந்தது ..
 
அம்மாவின் நடமாட்டாம் இல்லாமல் அப்பத்தா தன்னால் முடிந்த அளவில்தான் வீட்டை வைத்திருந்தார்…. அடுப்படிக்குள் சென்றவன் அங்கு சமைத்த அறிகுறியே எதுவும் தெரியாமல் எல்லாம் கழுவி கவிழ்க்கப் பட்டிருந்தது.. வீட்டில சமைக்கிறது இல்லையா .? ஹோட்டல்லதான் சாப்பாடா.. இல்லையே அம்மா இறந்தப்ப இவதான சமைச்சா.. இப்ப என்னாச்சு..?
 
அப்பத்தா குளித்து வந்தவர் அழகாக கண்டாங்கி சேலையை கட்டி தலையை அள்ளி முடிந்து நெற்றியில் பட்டையாக விபூதியை பூசி தன் வெற்றிலை பையை எடுத்துக் கொண்டு தன் போக்கில் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியில் கிளம்ப இவன்தான் பேவென விழித்தபடி நின்றான்..
 
சாதாரணமா நாம ஊருக்கு வந்தா இந்த அப்பத்தா என்ன திங்க வாங்கிட்டு வந்த லட்டு இல்லையா..? அல்வா இல்லையான்னு நம்மள சுத்தி சுத்தி வரும் இப்ப என்ன நம்மகிட்ட ஒன்னுமே சொல்லாம கிளம்புது.. அங்கு நின்றிருந்த தன் அண்ணனின் புல்லட்டை பார்த்தவன் வேகமாக உள்சென்று அதன் சாவியை எடுத்தபடி கதவை பூட்டியவன் வண்டியை எடுத்து கொண்டு அப்பத்தா சென்ற திசையில் செல்ல அப்பத்தா விளக்கு ரோட்டிற்கு செல்லும் பாதையில் தன் நடையை துவங்கியிருந்தார்.. வண்டியை அவருக்கு குறுக்காக நிறுத்தியவன்,
 
வா அப்பத்தா நான் கூட்டிட்டு போறேன்..
 
அவன் வண்டியை சுற்றிக் கொண்டு சென்றவர்,” நான் தெரியாதவங்க கூடவெல்லாம் வண்டியில வரமாட்டேன்..?”
 
ஆமா நீ வயசு பொண்ணு நான் உன்னை வண்டியில கடத்தி கூட்டிட்டு போய் கல்யாணம். பண்ண போறேன்.. ஒழுங்கு மரியாதையா ஏறு..?”அவர் பின்னால் மெதுவாக வண்டியை உருட்டிபடி வர அப்பத்தா தன் நடையை வேகப்படுத்தியிருந்தார்.. அப்பத்தாவின் வேக நடைக்கு இவனால் வண்டியை தள்ளிக் கொண்டு செல்ல முடியாமல் மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்து அப்பத்தாவின் குறுக்காக நிறுத்தியவன் அவரை வம்பு செய்து ஒருவாறு வண்டியில் ஏற்றியிருந்தான்.. அதற்கே அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியிருக்க வண்டியை நேராக விளக்கு ரோட்டிற்கு விட்டான்..
 
எங்கப்பத்தா போற..? ஊருக்கா..? சக்தி எங்க இருக்கான்னு தெரிஞ்சுச்சா..? அவன பார்க்கத்தான் போறியா ..? அவ எங்க போனா..? எதுக்கு அவ்வளவு பெரிய டிபன் கேரியர்..? அப்பா எங்க..? வீட்ல சமைக்கிறது இல்லையா..? இவன் கேட்ட எந்த கேள்விக்கும் அவரிடம் பதிலில்லை.. அவன் தன் போக்கில் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்க அப்பத்தா தன் வாயை இறுக்க மூடியிருந்தார்..
 
விளக்கு ரோடும் வந்திருக்க ,”அப்பத்தா எந்த பக்கம் திரும்ப..?’ இரண்டு கிளையாக பிரிந்த பாதையில் வண்டியை நிறுத்தி கேட்டவனுக்கு பதில் சொல்லாமல் வண்டியில் இருந்து இறங்கியவர் ஒரு கிளைபாதையில் நடக்க ஆரம்பிக்க.. ஐயோ மறுபடியும் முதல்லயிருந்தா… அலறியவன் வேகமாக வண்டியை அப்பத்தாவை நோக்கி விட அதற்குள் அப்பத்தா அந்த பைபாஸில் புதிதாக கட்டப்பட்டிருந்த ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்திருந்தார்..
 
என்னாச்சு..? அப்பத்தா சாப்பிடவா இவ்வளவு தூரம் வந்திச்சு..? இவனுக்கும் பசிப்பது போல தெரிய இவனும் பின்னாலயே நுழைந்திருந்தான்..அந்த மலர் ஹோட்டலுக்குள்..!!! அவரின் அப்பா அங்கு கல்லாவில் உட்கார்ந்திருக்க நிறையபேர் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.. மலர் தன் கொண்டு வந்திருந்த டிபன் கேரியரில் சாப்பாட்டை கொண்டுவந்து அங்கு நின்றிருந்த இருவரிடமும் கொடுக்க அவர்களும் இவளிடம் சிரித்து பேசியபடி விடை பெற்றனர்…
 
தன் தாயை பார்க்கவும் கல்லாவில் இருந்து எழுந்த ராமலிங்கம் தாயை அங்கே உட்கார வைத்துவிட்டு மற்றவர்களோடு நின்று அவர்களுக்கு தேவையானதை பார்த்துக் கொண்டு வர உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்..மலர் அங்கு இருந்த மூவரோடு சேர்ந்து தானும் சேர்ந்து சமைத்துக் கொண்டிருக்க மூவரும் அங்கே வெற்றி நிற்பதை கண்டாலும் கண்டு கொள்ளவில்லை…
 
 
                                                 இனி……….????????

Advertisement