Advertisement

இணை தேடும் இதயங்கள்
                     அத்தியாயம் –  1   
 
“ கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
கபடி “
 
 
 
தன் மூச்சை விடாமல் கபடி பாடிக்கொண்டிருக்க பார்வையாளர்கள் மத்தியில் அப்படி ஒரு நிசப்தம்.. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சக்திவேலையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் மேல் மூவர் அழுத்தி பிடித்து அவனை அந்த நடுக்கோட்டை தொடவிடாமல் இழுத்துக் கொண்டிருந்தார்கள்..
 
வயதான கிழவிகள் முதல் வயது பெண்களின் பார்வை இம்மி பிசகாமல் சக்திவேலயே மொய்த்துக் கொண்டிருந்தது.. தன் மேல் அழுத்தியிருந்தவர்களை தன் பலத்தை வைத்து ஒரே தள்ளாக தள்ளிவிட்டு தன் கைகளை பிடிக்க வந்தவர்களை மறுபக்கம் தள்ளியவன் படுத்தபடியே முன்னோக்கி நகர்ந்து சென்றவனை வேறு சிலர் அவன் கால்களை பிடிக்க வர அவர்களை காலிலேயே ஒரு எத்துவிட்டவன் இன்னும் மூச்சை இழுத்து பிடித்து வேகமாக நகர்ந்து அந்த கோட்டை தொட்டுவிட்டான்..
 
நண்பர்கள்,” ஓய்ய்ய்ய் என சத்தமாக கத்த  அனைவருக்கும் உற்சாகம் தாங்கவில்லை.. சக்திவேலை தூக்கி சுற்றியவர்கள் எதிரணியை பார்த்து கேலியாக சிரிக்க மைக்கில்,
இந்த வருசமும் நம்ம ஊர் பசங்களே ஜெயிச்சிட்டாங்கப்பா.. இந்த நண்பர்கள் கபடி குழு ஏழாவது வருசமா இந்த வருசமும் கோப்பையை தட்டிக்கிட்டு போகுது அதே மாதிரி பக்கத்தூரு அணி ஏழுவருசமா தோத்திட்டே போறாங்க…அஞ்சு அணியோட மோதி சிங்கம் மாதிரி நம்ம நண்பர்கள் கபடி குழு முன்னாடி நிக்கிது..  
 
அதிலயும் நம்ம சக்தி கபடி களத்துல குதிச்சிட்டா வெற்றி நமக்குத்தான்னு உறுதியாயிருச்சு..  வெற்றி பெற்ற அணியில் அனைவரையும் மேடைக்கு அழைத்தவர்களுக்கு ஊர் தலைவரால் பரிசும் கொடுக்கப்பட்டது.. அவர்கள் அனைவரும் ஹே… என்று ஆர்பாட்டம் செய்தபடி கீழே வர தோற்ற அணியில் இருந்தவர்கள் சக்திவேலைத்தான் கோபமாக முறைத்தார்கள்..
 
இந்த பயலை தூக்கிட்டா நாம ஈஸியா ஜெயிச்சிரலாம்.. அடுத்த வருசத்துக்குள்ள எத்தனை திருவிழா, எத்தனை ரேக்லா ரேஸ் தூக்குறோம்டா அவனை !! என்று தங்களுக்குள் முடிவெடுத்து கொண்டவர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டு செல்ல பின்னால் அவர்களை பார்த்து கேலி செய்து சிரித்த பெண்களின் சிரிப்பு அவர்களை இன்னும் அசிங்கப்படுத்துவது போல தோன்றியது..
 
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்பது தெரியாமல் தங்களைவிட திறமை வாய்ந்த தனிப்பட்ட ஒருவன் மேல் வன்மத்தை வளர்த்துக்கொண்டார்கள்.. கோப்பையுடன் மேடையை விட்டு கீழே வந்த சக்திவேலை ஆளாளுக்கு பாராட்ட வயது பெண்கள் அனைவரும் அவனை தங்கள் கனவு நாயகனாக பார்வையிட்டார்கள்..
 
 ப்பா என்ன அழகு! என்ன கம்பீரம்!” அவனை அங்குலம் அங்குலாக பார்த்து ரசித்தார்கள்.. அப்பு சக்தி வீட்டுக்கு போய் உனக்கு  சுத்தி போட சொல்லுய்யா..” கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுக்க அதற்குள் கூட்டத்தில் இருந்து ஒரு கிழவி வந்து ஆரத்தி எடுத்து சக்திவேல் நெற்றியில் பொட்டு வைத்து,
 
எம்பேரன மிஞ்ச இந்தூருல ஆளு யாரு இருக்கா?” அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தவர்களை முறைத்தவர்,” இந்தாங்கடி பொண்டுகளா எம்பேரன ரொம்ப ரவுசுவுடாதிக கண்ணு பட்டுற போகுது அம்புட்டும் கொள்ளிக்கண்ணு..?” அவர்கள் நிற்கும்போதே சில பெண்களை தள்ளிவிட்டு நாற்திசையிலும் அவர்களின் காலடி மண்ணை எடுத்து தன் முந்தானையில் முடிந்து கொள்ள,
 
அந்த பெண்களோ நம்மள்ல இருந்து யாராச்சும் ஒருத்திய சக்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இந்த கிழவிய சமாளிக்கிறது எம்புட்டு கஷ்டம் இந்த கிழவிக்கு லொள்ளு ஜாஸ்திடி..” தங்களுக்கு முணுமுணுத்துக் கொண்டிருக்க,
 
தன் அப்பத்தாவை  தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கிவிட்டவன் ,என்னப்பத்தா பேரன் மேல ரொம்ப பாசம் பொங்கி வழியிது? வெத்தலை பாக்கு இல்லையா..? இல்ல நம்ம ஊரு தியேட்டருல எம்ஜிஆர் படம் பார்க்கனுமா என்ன விசயம் சோழியன் குடுமி சும்மா ஆடாதே..!”
 
ஹிஹிஹி அதெல்லாம் ஒன்னுமில்லடா பேராண்டி ஊரே உன்னை புகழுதே அதான் என்ன விசயம்னு பார்க்க வந்தேன் … அப்பத்தான் நம்ம பக்கத்துவூட்டு கிழவி சொன்னுச்சு நம்மூரு தேட்டருல எங்க வீட்டு பிள்ளை படம் போட்டிருக்கறத இன்னைக்குத்தானாமே அது கடைசி ..!! படம் பார்க்க முடியலையேன்னு ரொம்ப வெசனமா உட்கார்ந்திருந்துச்சு அதான் பாவம் போனா போகுது துணைக்கு போலாம்னு நினைச்சேன்..!!
 
ஆனா உங்கப்பன் இருக்கானே மத்தியானத்தில இருந்து ஊர்ருன்னு இருக்கான்.. அதான் காசை உன்கிட்ட வாங்கிட்டு போலாம்னு வந்தேன்… எனக்காக ஒன்னுமில்லப்பு அந்த கிழவியே இப்பவோ பொறவோன்னு கிடக்கு அதான் இது கடைசி ஆசையாக்கூட இருக்கலாம்ல..!! அதான்ப்பு ஏதோ என்னாலல முடிஞ்ச உபகாரம்..
 
அதற்குள் கூட்டத்தில் இருந்து வந்த அந்த பக்கத்து வீட்டு கிழவி,” ஏ வள்ளி உனக்காக எம்புட்டு நேரம் காத்திருக்கிறது அப்புறம் எம்சிஆரு வந்திருவாரு சீக்கிரமா வா…
 
ஏப்பத்தா இவுகளா இப்பவோ பொறவோ கிடக்குறாங்கன்னு சொன்ன அவரை பார்த்தவன் ஏப்பத்தா  நீ உடம்பு சரியில்லாமலா கிடந்த நேத்துதானே உங்க ரெண்டுபேரையும் அதே தியேட்டருல பார்த்தேன்.. ம்ம்ம் எத்தனை தரம்தான் ஒரு படத்த பார்க்கிறது..??” வாய் பேசிக் கொண்டிருந்தாலும்  கை அங்கு கழட்டி போட்டிருந்த சட்டையில் இருந்து பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுக்க,
 
அதை வாங்கிய அவன் அப்பத்தா அந்த கிழவியை முறைத்தபடி,” உன்னை யாரு இப்ப முன்னாடி வரச் சொன்னா உங்க வீட்ல எனக்கு உடம்பு சரியில்லைன்னும் எங்க வீட்ல உனக்கு உடம்பு சரியில்லைன்னும்தானே சொல்லனும்னு பேசியிருந்தோம்..
 
ஏய் கோவிச்சுக்காத வள்ளி படம் போடுறதுக்கு முன்னாடி போடுற கடைசி பாட்டும் போட்டுட்டாங்க எம்புட்டு நேரம் காத்திருக்கிறது வெரசா வா..” இரு அப்பத்தாக்களும் ஜோடிப்போட்டு கிளம்பி போனவர்கள் பாதிதூரம் வரை சென்றுவிட்டு திரும்பி வந்த அவன் அப்பத்தா ,”சக்தி குழம்பெல்லாம் இருக்குப்பு சோறு மட்டும் சூடா ஆக்கிரு..
 
 அப்புறம் எப்பவும் போல உன் அப்பன் கோபமா இருந்தா அந்த செவப்பு விளக்கை போட்டு வை நான் வீட்டுக்கு வராம பக்கத்து வீட்டுலயே படுத்திட்டு வெள்ளன வந்துக்குறேன்.. இல்லனா கதவை திறந்து வைச்சிட்டு லைட்டு அமர்த்தி வைச்சுப்புடு மறந்திறாதப்பு வெரசா போ ரெண்டுபேரும் வீட்ல இல்லைனா உன்ற அப்பன் ஜங்கு ஜங்குன்னு காலுல சலங்கையை கட்டாமலே ஆடுவான்….” இருவரும் தங்கள் கண்டாங்கி சேலையை ஏத்தி கட்டி தண்டட்டி ஆட வேகமாக தங்கள் நடையை துவங்க ஊரே இருவரையும் பார்வையிட்டது..
 
 அந்த அப்பத்தாவை பார்த்தவர்களுக்கு சக்திவேலுக்கு வீரமும் அந்த ஆளுமையும் எங்கிருந்து வந்ததென்று நன்கு புரியும்..அவன் அப்படியே அவன் அப்பத்தா, தந்தை போல, நண்பர்கள் கபடியில் ஜெயித்த வெற்றியை கொண்டாட பாரை நோக்கி செல்ல சக்திவேல் வீட்டிற்கு திரும்பினான்.. அவன் நண்பர்களுக்கு தெரியும் இனி அழைத்தால் அவன் வரமாட்டான் என,
 
வீட்டிற்கு வந்தவன் வேகமாக உலையில் அரிசியை போட்டு தன் தாயை சென்று பார்க்க அவர் அங்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க படுத்திருந்தார்.. அவருக்கு காசநோய் சிறுவயதில் இருந்ததை கவனிக்காமல் விட்டதால் இப்போது அது முற்றிய நிலை எழுந்து நடந்தால் கூட அவருக்கு மூச்சு இறைத்து இருமல் வந்துவிடும்.. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் முழுதாக குணப்படுத்த முடியவில்லை..
 
இப்போது உள்ள மருத்துவ வசதிக்கு சக்தியும் பெரிய பெரிய மருத்துவ மனைகளில் கூட காசை தண்ணீராய் செலவழித்து பார்த்துவிட்டான்… பலன்தான் பூஜ்யம்.. அவர் உடலில் நோய் எதிர்ப்பு திறனே இல்லை இப்போது அந்த நோய் முற்றி இனி பார்க்கவே முடியாது என்ற சூழ்நிலையில் வீட்டில் வைத்திருந்தனர்..
 
அவன் அப்பத்தாதான் மருமகளுக்கு எல்லா உதவியும் செய்வார்.. வீட்டு வேலையும் பார்த்து ஆடு, மாடு, கோழிகளையும் கவனித்து கொண்டு மருமகளுக்கும் பணிவிடை செய்வார்.. ஒருநாள் கூட முகம் சுழித்ததில்லை.. ஆனால் இந்த  ஊரில் இருக்கும் சிறிய தியேட்டரில் எம்ஜிஆர் படம் போட்டால் மட்டும் அதை தினமும் பார்த்து விட்டுதான் மறுவேலை பார்ப்பார்.. இன்றுகூட குழம்பு காய்களை வைத்தவர் சோற்றை சீக்கிரம் வடித்தால் அது மருமகளுக்கு ஆறிபோய்விடுமே என்றுதான் சக்தியிடம் சொல்லிவிட்டு சென்றார்..
 
தாயின் இருமல் சத்தம் கேட்கவும் சக்தி தன் தாய்க்கு வெந்நீரை காயவைத்தவன் கொஞ்சம் வெதுவெதுப்பாக ஆற்றி அவருக்கு புகட்டிவிட .. எலும்பும் தோலுமாக கீசுமூசுவென இரைக்க நொடிக்கொருதரம் இருமல் வந்து கொண்டிருந்தது..டாக்டர்கள் கொடுத்த இருமல் டானிக்கை எடுத்து ஊற்றிக் கொடுத்தவன் அதை புகட்டிவிட, அவன் கையை பிடித்து,
 
ச..சக்..சக்தி… அப்பா எ..எங்க..?” பேசவிடாமல் இருமல் தொல்லை செய்ய,
 
அவர் மார்பை நீவிவிட்டவன், இங்கதாம்மா பக்கத்தில போயிருக்காங்க..நீங்க கொஞ்ச நேரம் படுங்க..”
 
வ..வரு..வருசம் பூராவும் படுத்தேதானப்பு கிடக்கிறேன்.. “ மறுபடி இரும ஆரம்பிக்க சக்திக்கு தன் தாயாரை பார்த்து கண்கலங்கியது.. இருபக்க விலாவும் இருமி இருமி. வலியெடுத்திருக்கும் போல அதை தன் குச்சி கைகளால் தடவிக் கொண்டிருக்க அந்த வேலையை தான் செய்தவன்
சாப்பிடுறிங்களாம்மா.. சூடா சோறு வடிச்சிருக்கேன்..”
இல்ல… கொ..கொஞ்ச நே..நேர..நேரம் ஆகட்டும்ப்பா.. எனக்கு என்னவோ ரெ..ரெண்டு.. மூ.. மூனு நாளா… மேலுக்கே நல்லா இ.. இல்ல..இல்லை..வெ.. வெற்றிக்கு. போ..போனப்போட்டு கொஞ்சம் வர..சொ..சொல்லுறியா..ப்பா.. அதை பேசி முடிப்பதற்குள் இருமி இருமி கண்கள் எல்லாம் கலங்கி பக்கத்தில் இருந்த எச்சி டப்பாவில் சளியை துப்பி துப்பி பார்க்கவே பரிதாபமாக இருந்தார்..
 
தன் கலங்கிய கண்களை தன் தாய் பார்க்காமல் மறைத்தவன்,” சொல்றேன்மா எப்படியும் அடுத்தவாரம் ரெண்டு மூனு நாளு லீவு போட்டு வரச் சொல்றேன்..
 
ச…சக்தி… ஒரு..கல்..யாண..த்தை பண்ணி..க்கப்பா… அம்மாவோட கடைசி ஆ..ஆசை.. அத ம..மட்டும்..நிறைவே..த்தி குடுப்பா..தன் கையை மகனை நோக்கி நீட்ட,
அவரை அணைத்தவன்,” அம்மா நீங்க ரொம்ப நாளைக்கு நல்லாயிருப்பிங்கம்மா .. என்னோட பிரண்ட் மெட்ராஸ்ல ஒரு டாக்டர பத்தி சொன்னான் தம்பி வரவும் அதை பத்தி விசாரிச்சிட்டு அங்க போவோம்.
 
அவர் தாய்க்கு புன்னகை எழுந்தது..தன் உடல் சூழ்நிலை அவருக்கே தெரிந்தது முன்பைவிட இப்போது ரொம்ப பலவீனமாக உணர்ந்தார்.. அதற்குள் தன் மகன் கல்யாணத்தை கண்ணார கண்டுவிட்டு போகவேண்டும் என்பதுதான் அவரது கடைசி ஆசையாக இருந்தது..காலையில் இதை பற்றி தன் கணவரிடம் பேசியதால்தான் அவர் கோபமாக சென்றுவிட்டார்..
 
தன்னால் இந்த இருகுழந்தைகள் பெற்றதை தவிர வேறு எந்த சுகத்தை கொடுக்காமல் இருந்தாலும் அவர் தன் மனைவிமேல் உயிரையே வைத்திருந்தார்..திருமணமாகி ஒரு நான்கு வருடங்கள் சந்தோசமாக இருந்திருப்பார்கள் … மறுபடி இத்தனை ஆண்டுகளில் வைத்தியம் வைத்தியம் அது மட்டும்தான்.. என்னவோ எந்த மருத்துவத்திற்கும் அவரது நோய் கட்டுபடமாட்டேன் என சொல்லியது..
 
 சாவை பற்றி பேசவும் தன் மனைவியை ஒரு முறை முறைத்தவர், பக்கத்தூர் சந்தைக்கு செல்வதாக கூறிசென்றவர் இன்னும் வரவில்லை..தன்னால் தன் குடும்பத்தில் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என எப்போதும் குற்ற உணர்ச்சியில் இருப்பார்.. பிள்ளைகளை வளர்த்ததில் இருந்து குடும்ப வரவு செலவு எல்லாம் மாமியார்தான்.. மகள்தான் இறந்துவிட்டாள் தன் ஒரே மகனின் வாழ்க்கையும் இப்படியானதில் அவருக்கும் எப்போதும் வருத்தம்தான்.. அதற்காக கவலைப்பட்டு மூலையில் முடங்கிகிடக்காமல் இந்த வயதிலும் அனைத்தையும் அவரே பார்த்துக் கொள்வார்.. மாமியார் மட்டும் இல்லையென்றால் இந்த குடும்பம் என்றோ சின்னா பின்னாமாகியிருக்கும் .. பெற்ற தாயைவிட ஒரு படி மேலேயே பார்த்துக் கொள்வார்..
 
வீட்டை கூட்டிய சக்தி பாத்திரங்களை விலக்கி வைத்தவன் தன் தந்தையின் வண்டி சத்தம் கேட்டு வெளியில் வந்தான்..
என்னப்பா சக்தி இந்த வருசமும் உங்க குழுதான் கபடியில ஜெயிச்சிட்டிங்க போல..”
ஆமாப்பா.. இருவரும் சறுறு நேரம் பேசிக் கொண்டிருக்க,” அப்பா அம்மா வெற்றியை பார்க்கனும்னு சொல்றாங்க,.”
 
பெருமூச்சு விட்டவர்,” ஆமாண்டா தம்பி காலையிலேயே சொன்னா.. அவனுக்குத்தான் இங்க வரவே பிடிக்காதே இப்ப சொன்னா வாரானோ என்னமோ..”
நான் பேசுறேன்பா..கண்டிப்பா வருவான்..
 
அங்கு சென்னையில் அவன் தம்பி வெற்றிவேல்,
 
                  “   போட்டது பத்தல மாப்பிள்ளை
                           இன்னொரு Quater-u சொல்லுடா
                    அப்படியே Matter-u கேளுடா

                     கண்ணுல Rum-u Gin-u
                          ஊத்துனா அத்தை பொண்ணு
                  போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா
                         வேணாண்ட வெட்டு குத்து
                 போடுடா டப்பான் கூத்து
                        எனக்கு எல்லாருமே சொந்த காரண்டா “

 
தங்கள் அறையில் சீடியை போட்டுக் ஆடிக் கொண்டே வெற்றிவேல் தன் நண்பர்களோடு தண்ணியடித்துக் கொண்டிருக்க அனைவரும் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தனர்..
 
சக்திவேலை விட இரண்டு வயது சிறியவன் வெற்றிவேல் கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்தவன் திரும்ப ஊருக்கு வரவே பிரியபடாமல் இங்கேயே வேலை தேடிக் கொண்டு நண்பர்கள் நால்வரோடு ஒரு அறையில் தங்கிக் கொண்டான்.. என்னவோ அந்த கிராமத்து வாழ்க்கை பிடிக்காமல் இந்த நகரத்து வாழ்க்கை மேல் அவனுக்கு ஒரு மோகம் வந்திருந்தது..
 
சக்திகூட எவ்வளவோ எடுத்து சொன்னான்..” கொஞ்சம் பக்கதூருலயே வேலை வாங்கிக்கோடா.. இல்லைனா சொந்தமா ஏதாவது தொழில் தொடங்குன்னு.. ஆனால் யாரும் கேள்வி கேட்காமல் கட்டுப்பாடற்ற வாழ்க்கை அவனுக்கு பிடித்திருந்தது..
 
இப்போது அவன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் இரண்டு வருடம் ஆஸ்திரேலியாவில் ஒரு புது புராஜக்ட் ஒன்றை ஆரம்பிக்கும் குழுவில் வெற்றியும் பெயரும் இருந்தது.. அதற்காகத்தான் இந்த பார்ட்டி இன்னும் மூன்று மாதத்தில் கிளம்பவேண்டும் அங்குதான் இரண்டு வருடம் அவனுக்கு இப்போது புதிதாக ஒரு எண்ணம் திரும்பி இங்க வராம அங்கேயே இருந்துக்குலாமான்னு.. இந்த புராஜக்ட் முடிஞ்சாக்கூட வேற வேலை தேடிக்கலாம் இதே யோசனையில்தான் இருந்தான்..
 
தான் வாங்கும் சம்பளத்தில் தன் செலவு போக ஒரு தொகையை வீட்டிற்கு அனுப்பி வைப்பான்.. சக்தி அங்கு உரக்கடையும் விவசாயமும் பார்த்துக் கொள்ள இவன் அனுப்பும் பணத்தை சேர்த்து அவன் பெயரிலேயே ஏதாவது சொத்தை வாங்கிப் போடுவார் அவன் தந்தை.. அதை செலவு செய்ய் மாட்டார்..
 
அவருக்கு தன் மகன் மேல் சிறு கோபம் அங்க வேலை பார்த்தாலும் மாசத்துக்கு ஒருதரமாச்சும் இங்க வந்து மத்தவங்கள பார்த்திட்டு போகலாமேன்னு ஆனால் மகனோ ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கொருதரம் வந்துகொண்டிருந்தான்..அவன் தாய்தான் மகனை பார்க்கமுடியாமல் புலம்பி கொண்டே இருப்பார்..
 
தாயின் மேல் அதிக பாசம் இருந்தாலும் சக்தி அளவுக்கு பொறுமையெல்லாம் இல்லை.. அதோடு தாய் படும் அவஸ்தையும் அவனால் பார்க்க முடியாமல்தான் அதிகமாக அங்கு போகவே யோசிப்பான்… ஒரு மகனாக தன் கடமையை சரிவர செய்யவில்லை என்பதே அவனுக்கு புரியவில்லை.. பணத்தை அனுப்பினால் மட்டும் போதும் அதை வைத்து அம்மாவுக்கு வைத்தியம் பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டான்.. இப்போதும் ஊருக்கு போய் ஆறு மாதத்திற்கு மேல் ஆயிற்று.. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தன் அண்ணனிடம் போனில் பேசுவான் அவன் தாய்க்கு ஆசையிருந்தாலும் அவரால் தொடர்ந்து ஒரு ஐந்து நிமிடம்கூட பேசமுடியாது..
 
தன் போன் மணிச் சத்தம் கேட்கவும் மியூசிக்பிளேயரை அணைத்தவன் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு போனை அட்டெண்ட் செய்ய அந்த பக்கம் சக்தி இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தவர்கள் சக்தி அம்மாவின் உடல்நிலை பற்றிச் சொன்னவன் ,”ஒரு பத்துநாள் வந்து கூட இருடா அம்மா உன்னை பார்க்காம ரொம்ப கவலை படுறாங்க..”
 
சற்று யோசித்தவன் அவனுக்கும் லீவ் இருந்தது.. பார்க்கிறேண்ணா பத்து நாளெல்லாம் முடியாது முடிஞ்சா இந்த வாரம் ஒரு மூனுநாள் லீவ் போட்டு வர்றேன்.. அப்பத்தாவையும் அப்பாவையும் பற்றி கேட்டவன் போனை வைக்க சக்தியோ வெளித்திண்ணையில் ஏதோ ஒரு சிந்தனையில் இருந்த தந்தையின் அருகில் சென்று அமர்ந்தான்..
 
என்னப்பா ஒரே சிந்தனையா இருக்கிங்க..??”
 
சக்தி அப்படி கேட்கவும் அவர் முகம் கோபமாக மாற,” சந்தையில நம்ம மாயழகு பெரியப்பாவ பார்த்தேன்டா..ராசா மாதிரி முறை மாப்பிள்ளைக ரெண்டு பேர் இருக்கும் போது என்ற தங்கச்சி மகளுக்கு வெளியில மாப்பிள்ள பார்க்கிறாங்களாம்..!! தன் மீசையை திருகிவிட்டவர் என்ன ஒரு திமிரும் தெனாவெட்டும் இருக்கனும் அவனுகளுக்கு..??”
 
                                                                 இனி…………???????
 

Advertisement