Advertisement

இமை – 4
 
“காலையில் கணவன் கிளம்பிவிடுவானே… அவனுடன் எதுவுமே பேச முடியவில்லையே…” என்று வருத்தத்தோடு அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்த மித்ரனைக் கண்டதும் திகைத்தாள்.
 
அவன் உறங்காமல் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பான், சற்று மெதுவாய் செல்லலாம் என்று நினைத்து அடுக்களையில் நேரம் கழித்துவிட்டு வந்த தன் மடத்தனத்தை எண்ணி தலையில் குட்டிக் கொண்டாள்.
மிதமான ஜீரோ வாட்ஸ் வெளிச்சம் அறையில் கசிந்து கொண்டிருக்க, அவனுக்கு அருகில் வந்து நின்றவளின் மனம் பரிதவித்தது.
 
“உங்களோட பேசணும்னு ஆசையா ஓடி வந்தா, அதுக்குள்ளே தூங்கிட்டிங்களா… உங்களுக்கு என்னோட பேசணும்னு தோணவே இல்லையா…” வருத்தத்துடன் யோசித்தவள், “ஒருவேளை வீணா அன்பைக் காட்டி, இப்ப விட்டுட்டுப் போனா தவிச்சிடுவேன்னு நெருங்கி வராம இருக்காரோ…” அவனுக்கு சாதகமாய் யோசித்துக் கொண்டு அவனையே பார்த்து நின்றாள்.
 
அவளுக்குள் மிகவும் ஏமாற்றமாய் உணர்ந்தாள். நேற்று அவன் வேலையாய் இருக்கிறானென்று பேசாமல் போனால் இன்றைய அவர்களுக்கான பகல் முழுவதையும் அந்த ரோஹிணி எடுத்துக் கொண்டாள். இப்போது இவன் உறங்கி விட்டான். அவனிடம் பேச முடியாத ஏமாற்றம் துக்கமாய் மாறி தொண்டையை அடைக்க வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு வலி மனதைக் குடைந்தது.
அறைக்குள் இருந்த சின்ன பிரிட்ஜைத் திறந்து தண்ணி பாட்டிலை எடுத்தவள் அப்படியே வாயில் கவிழ்த்துக் கொண்டாள்.
 
பின்னிலிருந்து, “பவித்ரா… எனக்கும் தண்ணி வேணும்…” என்ற மித்ரனின் குரல் கேட்கவும் சந்தோஷத்தில் திரும்பியவள், “நீங்க இன்னும் தூங்கலையா…” என்றாள் பளிச்சென்ற புன்னகையுடன்.
 
“இல்ல… விடாம லாப்டாப் பார்த்துட்டே இருந்ததுல தலை வலிக்குது… அதான் படுத்தேன்… ஆனா தூக்கம் வர மாட்டேங்குது…” என்றவன் அவள் நீட்டிய பாட்டிலை வாங்கிக் குடித்துவிட்டு கொடுத்தான்.
 
“சூடா காபி எடுத்திட்டு வரட்டா…” அவளிடம் சிறு பதட்டம்.
 
“இல்ல வேண்டாம்… நீ தூங்கு…” என்றவன் சோர்வுடன் படுத்துக் கொள்ள அவள் செல்லாமல் அங்கேயே தயக்கத்துடன் நின்றாள்.
அவள் நிற்பதை உணர்ந்து, “என்ன பவித்ரா…” என்றான்.
 
“தலைவலிக்கு மாத்திரை ஏதாச்சும் அத்தை கிட்டே வாங்கிட்டு வரட்டா…”
 
“இல்ல… எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்ல…”
 
“வந்து… நான் வேணும்னா தலையைப் பிடிச்சு விடட்டா…” அவளது கேள்வியில் திகைப்பாய் பார்த்தவன், “தூங்கினா சரியாகிடும்… வேண்டாம்…” என்றான் மறுப்புடன்.
 
“எனக்கு நல்லா மசாஜ் பண்ணத் தெரியும்… நீங்க நல்லா தூங்கினா தானே நாளைக்கு பிரஷா கிளம்ப முடியும்…”
 
அவள் சொல்லவும், “பரவால்ல பவித்ரா… உனக்கு எதுக்கு சிரமம்… நீ தூங்கு…” அவனது மறுப்பு அவளுக்கு வருத்தமாய் இருக்க அருகில் வந்தவள், “இதுல எனக்கு என்ன சிரமம்… நான் பண்ணறேன்…” என்றவள் அவனது நெற்றியில் அவளது மெத்தென்ற விரலால் மெதுவாய் வருடி சுகமாய் மசாஜ் செய்ய மீண்டும் மறுக்க நினைத்த மித்ரன் விண்ணென்று வெட்டித் தெறித்த தலைவலிக்கு அந்த வருடல் இதமாய் இருக்க எதுவும் சொல்லாமல் சுகமாய் கண்ணை மூடிக் கொண்டான்.
 
கட்டிலுக்கு கீழே அமர்ந்து அவன் நன்றாகத் தூங்கும் வரை தலையைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தவள் தூக்கம் வரவும் அப்படியே அவனது கையில் தலை சாய்த்து உட்கார்ந்த வாக்கிலேயே உறங்கியிருந்தாள்.
 
அதிகாலையில் முழிப்பு வரவும் மெல்ல உணர்ந்த மித்ரன், கையை அசைக்க முடியாமல் பாரமாய் உணரவும் கண் திறந்து பார்க்க அவன் கையைத் தலையணையாக்கி உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் பவித்ரா.
 
அதைக் கண்டதும் மனம் நெகிழ்ந்து போ,க மெல்ல அவளை அழைத்தான்.
 
“பவித்ரா…”
அவனது குரலில் சட்டென்று முழித்தவள் திருதிருவென்று அவனைப் பார்க்க, “கழுத்து பிடிச்சுக்க போகுது… நல்லா படுத்து தூங்கு…” சொல்லிவிட்டு எழுந்து தண்ணி குடித்துவிட்டு படுத்துக் கொண்டான்.
 
அவள் செய்ததை நினைத்து புன்முறுவல் பூத்தவள், “உங்களுக்கு தலைவலி சரியாகிடுச்சா…” என்றாள்.
 
“ம்ம்… உன் விரல்ல ஏதோ மந்திரம் வச்சிருப்பே போலருக்கு… உடனே சரியாகிடுச்சு…” அவன் சொல்லவும் நாணத்துடன் புன்னகைத்தவள், “உங்களுக்கு காபி எடுத்திட்டு வரட்டுமா…” என்றாள்.
 
“கொஞ்சநேரம் தூங்கு… நைட் நீ சரியா தூங்கவே இல்லை…” அவனது அக்கறையில் மனம் நெகிழ்ந்தவள்,
 
“ம்ம்…” என்று அவளுக்காய் விரித்திருந்த படுக்கையில் படுத்துக் கொண்டாள். மித்ரன் மீண்டும் உறக்கத்தைத் தொடர, பவித்ராவுக்கு தான் உறக்கம் வருவேனா என்றது. நடந்த நிகழ்வுகளை சிறிதுநேரம் அசைபோட்டு நேரத்தை கழித்தவள் எழுந்து குளியலறைக்குள் நுழைந்தாள். அடுத்தநாள் வழக்கம் போல காலை பரபரப்பில் இருக்க காபிக் கோப்பையுடன் கணவனைத் தேடி செல்ல உற்சாகமாய் கொண்டு போக வேண்டிய பொருட்களை சூட்கேஸில் வைத்துக் கொண்டிருந்தான் மித்ரன்.
 
அவளைக் கண்டதும் மெல்ல புன்னகைத்தவன், “குட் மார்னிங் பவித்ரா…” எனவும் அவளுக்குள் சாரலடித்தது.
 
அவன் காபியைக் குடிக்க சூட்கேஸைப் பார்த்தவள், “என்னங்க, எல்லாத்தையும் திணிச்சு வச்சிருக்கீங்க… நான் அடுக்கித் தரேன்…” சொல்லிக் கொண்டே அவன் வைத்ததை வெளியே எடுத்துவைத்து அழகாய் அடுக்கி வைக்க ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
“வாவ்… சூப்பர் பவித்ரா… தேங்க் யூ…” சொல்லி அவளது கையில் தட்டிவிட்டு காலிக் கோப்பையை நீட்ட வாங்கிக் கொண்டாள்.  “நீங்க எப்ப கிளம்பணும்…”
“எனக்கு மதியம் சென்னைல இருந்து பிளைட்… இப்போ டிபன் முடிஞ்சதும் கிளம்பினா சரியா இருக்கும்…” சொன்னவன் லாப்டாப்பை மூடி பாகில் வைத்தான்.
 
“ம்ம்… எப்ப வருவீங்க…” சோகம் இழையோடிய அவளது குரலில் பிரிவின் வலி நிறைந்திருக்க திகைப்புடன் நிமிர்ந்தவன், “ஹேய் பவித்ரா… இதென்ன.. நான் கிளம்பறதுக்கு நீ பீல் பண்ணறியா…” சிரிப்புடன் கேட்க,
 
“இல்ல…. எப்ப வருவீங்கன்னு தெரிஞ்சுக்கதான்…”
 
“நான் இனி கோர்ஸ் முடிஞ்சு தான் வருவேன்… அம்மா எல்லா விவரமும் சொன்னாங்க தானே…” என்றான். பிளைட் டிக்கட்டை சரி பார்த்துக் கொண்டே.
 
“சரி பவித்ரா… நான் கிளம்பறேன்… உனக்கு எது வேணும்னாலும் அம்மாவை கேளு… பண்ணித்தருவாங்க…
நான் குளிச்சு வந்திடறேன்… டிபன் எடுத்து வைக்கறியா…”
 
“ம்ம்…” என்றவள், “பத்திரமா போயிட்டு வாங்க…” அவனை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு சொன்னவளின் கண்கள் ஒரு சொல்ல முடியா உணர்வை வெளிப்படுத்த, அவள் அங்கிருந்து சென்றபின்னும் அவள் சொன்ன வார்த்தையே மீண்டும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு அவன் குளித்து புறப்பட்டு கீழே வரும்போதுதான் ரோஹிணி எழுந்து வந்திருந்தாள்.
 
“ஹாய் அத்தான்… கிளம்பிட்டிங்களா… நானும் உங்களோட ஏர்போர்ட் வரேன்…”
 
“ரோஹி… நீ குளிச்சு சாப்பிட்டு வரதுக்குள்ளே டைம் ஆயிடும்மா… நான் கிளம்பறேன்…”
 
“நோ, அத்தான்… உங்களை வழியனுப்ப நான் வராம எப்படி… இல்லையா அத்தை…” எனவும், “ஆமாம்… அவளும் வரட்டும்… நீ போயி குளிச்சிட்டு வா ரோஹி…” என்று கூற மித்ரன் எதுவும் சொல்ல முடியாமல் முழித்தான். அவள் குளித்து அலங்காரம் முடித்து மெஜந்தா வண்ண நெட் சுரிதாரில் ஆர்ப்பாட்டமாய் கிளம்பி வந்தாள்.
 
“ஓகே வா அத்தை…” கேட்டவளிடம், “என் மருமகளுக்கு என்ன, தேவதை மாதிரி இருக்கா…” என்றவர், “சரி… மித்ரா, எனக்கு கால் பண்ணுப்பா… ரோஹி… நீ வீட்டுக்கு போயிடுவியா… இங்கே வருவியா…”
 
“நான் வீட்டுக்குப் போயிடுவேன் அத்தை…. அடுத்த வாரம் இங்கே வரேன்…” சொன்னவள், “எனக்கு டிபன் வேண்டாம், போற வழியில் பார்த்துக்கறேன்…” என்று கிளம்பினாள்.
 
பவித்ராவின் பார்வை தன்னையே மௌனமாய் தொடர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு மித்ரனுக்கு அதிசயமாய் இருந்தது. டாக்ஸியில் பணியாள் லக்கேஜை வைத்துக் கொண்டிருக்க மீனா மகனை வழியனுப்ப, மித்ரனின் கையில் கை கோர்த்துக் கொண்டு ரோஹிணி காருக்கு செல்ல, கதவருகே நின்று பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவிடம் மெல்லத் தலையசைத்தான் மித்ரன்.
“அவளது கண்கள் கலங்கி இருந்ததோ…” குழப்பத்துடன் யோசித்துக் கொண்டே மீண்டும் திரும்பிப் பார்க்க முயன்றவனை ரோஹிணி ஏதோ கேட்கவும் அவளிடம் திரும்பினான். அவர்களின் டாக்ஸி கண்ணிலிருந்து மறையும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்த பவித்ரா கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே மாடிக்கு சென்றாள். மனது வெகுநாட்களுக்குப் பிறகு வெறுமையாய் தவித்துக் கொண்டிருந்தது.
 
பசியோடிருந்த குழந்தையிடம் மிட்டாயைக் காட்டி மீண்டும் பறித்துக் கொண்டது போல ஒரு வேதனை. தாகத்தோடு பாலையில் நடந்து கொண்டிருந்த ஒருத்தனுக்கு தொலைவில் தண்ணீர் இருப்பது போல் காட்டி அருகில் சென்றதும் கானலாகிப் போன வேதனை.
 
குளியலறைக்குள் சென்று முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிவிட்டு வெளியே வந்தவள் கண்ணில் மித்ரன் அவிழ்த்துப் போட்டிருந்த டீஷர்ட் விழுந்தது. அதை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் அவனது வாசத்தை அதில் உணர்ந்து சிறிது நேரம் கட்டிலில் அப்படியே அமர்ந்திருந்தாள்.
 
உன்னைப் போலில்லை
உன் சட்டை – நீ
உணர மறுக்கும் என்
கண்ணீரை மௌனமாய்
உள்வாங்கிக் கொள்கிறது…
 
“பவித்ரா…” கீழிருந்து மீனாவின் குரல் கேட்கவும் மனதை நிலைப்படுத்திக் கொண்டு இறங்கினாள்.
 
“பவித்ரா, நான் மில்லுக்குப் போயிட்டு வரேன்… மதியம் சமையலுக்கு என்ன பண்ணனும்னு சாவித்திரி கிட்டே சொல்லி இருக்கேன்… பார்த்துக்க…”
 
“சரி… அத்தை…” அவள் சொல்லவும் கிளம்பினார். அவளது சோர்ந்த முகத்தைப் பார்த்த சாவித்திரி, “என்னம்மா… தம்பி கிளம்பின வருத்தமா… இன்னும் ஒன்பது மாசம் தானே… இதான்னு சொல்லுறதுக்குள்ள ஓடிப் போயிடாதா… இதுக்குப் போயி கலங்கிட்டு…” அவர் சமாதானம் சொல்லவும் இயல்பானவள் அவனைப் பற்றிய விஷயங்களை கேட்டுக் கொண்டிருந்தாள்.
 
இமை தாண்டி நீளும் விழிகள்
அங்குமிங்கும் உனைத்தேடியே
அலைபாய்ந்திடும் கண்ணா…
கண்ட காட்சியும் பிழையாகி
கானல் நீரென மாறிப் போகும்…
காணும் இடமெல்லாம் 
கண்ணா – உந்தன் முகமாகும்…
தனிமையும் இனிமைதான்
என்றிருந்தேன்… இன்று அந்த
தனிமையிலும் வெறுமையை
நீயே கொடுத்து சென்றாயே!!!
இமை தொடரும்…
 

Advertisement