Advertisement

இமை – 3
 
காலையில் எப்போதும் போல நேரமாய் எழுந்தவள் குளித்து சாமிக்கு விளக்கு வைத்து அடுக்களைக்குள் நுழைய அப்போதுதான் பணிப்பெண் சாவித்திரி பால் பாத்திரத்துடன் உள்ளே வந்தாள்.
 
பவித்ராவைக் கண்டு சிநேகமாய் சிரித்தவள், “நேரமா எழுந்துட்டீங்களாம்மா…. காபி போட்டுத் தரட்டுமா….” என்றாள்.
“இல்ல… இன்னைக்கு எல்லாருக்கும் நான் காபி போடறேன்… யார் யாருக்கு எந்த டேஸ்ட்ல வேணும்னு மட்டும் சொல்லுங்க… எல்லாரும் மெதுவா தான் எழுந்துப்பாங்களா….” என்றாள்.
 
“சின்னய்யாக்கு எழுந்ததும் பில்டர் காபி வேணும்… அம்மா மெதுவா தான் எழுந்து வருவாங்க…. பெரியய்யா தோட்டத்துக்குப் போயிட்டு வந்து தான் காபி குடிப்பாரு…. சுந்தரிம்மா இப்ப வந்திருவாங்க….” என்ற சாவித்திரி யார் யாருக்கு எந்த மாதிரி டேஸ்ட் என்று சொல்லிக் கொடுக்க,
உற்சாகத்துடன் பாலை வாங்கி அடுப்பில் வைத்துவிட்டு ஒவ்வொரு பொருளும் எங்கே இருக்கிறதென்று கேட்டுத் தெரிந்து கொண்டாள் பவித்ரா.
 
அப்போது அங்கே சுந்தரி வரவும், பவித்ராவைக் கண்டு புருவத்தைத் தூக்கினார். “பாருடா புதுப் பொண்ணு, அதுக்குள்ள சமையல் களத்துல குதிச்சிடுச்சு….” அவர் சொல்லவும் புன்னகைத்தவள், “காபி குடிக்கறீங்களா ம்மா…..” என்றாள்.
“குடிக்கலாமே…..” என்று தலையாட்டியவருக்கு காபியைக் கலந்து கொடுக்க ஒரு வாய் குடித்தவர், “பேஷ்.. பேஷ்… ரொம்ப நன்னாருக்கு….” என்று நரசுஸ் காபி ஸ்டைலில் கூறிவிட்டு, “காபின்னா இது காபி…. சாவித்திரியும் காபின்னு ஒண்ணு கொடுப்பாளே….” சொல்லிவிட்டு அவளைப் பார்க்க பாவமாய் முகத்தை வைத்திருந்தாள்.
 
“நான் என்ன பண்ணறதும்மா… என்னதான் விதவிதமா சமைச்சாலும் நான் போடுற காபி மட்டும் கழனித்தண்ணி மாதிரிதான் வருது….” என்று ஒத்துக் கொண்டாள்.
 
“நீங்களும் குடிங்க…” என்று கூற, “இல்ல… நான் அப்புறம் குடிச்சுக்கறேன்…” என்று மறுத்துவிட்டாள்.
 
“மித்ரன் தம்பி எழுந்திருக்கும்… நீ காபி எடுத்திட்டு போ பவி….” சுந்தரி சொல்லவும், மனதில் தோன்றிய சந்தோஷம் முகத்தில் செம்மையாய் படர காபி கப்பை டிரேயில் வைத்து எடுத்துக் கொண்டு சிறுபுன்னகையுடன் மாடிக்கு நடந்தாள் பவித்ரா.
குளியலறையில் இருந்து வெளியே வந்த மித்ரனிடம் காபியை நீட்ட, காலையில் புத்தம் புது மலராய் புன்னகையுடன் நின்றவளை வியப்புடன் நோக்கிக் கொண்டே,
 
“உனக்கு எதுக்கு சிரமம்… சாவித்திரிக்கா கிட்ட கொடுத்து விட்டிருக்கலாமே….” எனவும்,
 
பரவால்லை… என்றவளிடம் கோப்பையை வாங்கிக் கொண்டான். ஒரு மிடறு விழுங்கியவன், அவளை ஆச்சர்யமாய் பார்த்தான்.
 
காபி அவங்க போடலியா…
 
ம்ம்… நாந்தான் போட்டேன்… பிடிச்சிருக்கா… என்றாள் ஆர்வத்துடன்.
 
ம்ம்… லவ்லி டேஸ்ட்… தேங்க் யூ… ரசித்துக் குடித்தவனை மலர்ச்சியுடன் நோக்கி நின்றாள்.
 
உங்களுக்கு என்ன டிபன் பண்ணட்டும்…கேட்டவளை அதிசயமாய் பார்த்தான். அவனுக்கு என்ன பிடிக்கும் என்றெல்லாம் இதுவரை யாரும் கேட்டதே இல்லை. ஹாஸ்டலில் வளர்ந்து பழகிய அவனுக்கு இதுதான் வேண்டும் என்றெல்லாம் கிடையாது.
 
பசிக்கு சாப்பிடுவான் அவ்வளவே. மீனாவுக்குப் பிடித்த உணவுகளே சாவித்திரி எப்போதும் சமைத்திருப்பார். அவள் கேள்வியில் திகைத்தவன், எனக்கு பிடிச்சதா…. அப்படில்லாம் எதுவும் இல்லை…. அம்மாகிட்ட கேட்டுக்க… என்றுவிட்டு லாப்டாப்புடன் அமர்ந்து விட்டான்.
 
என்னை நினைவிருக்கிறதா… என்று கேட்டு விடலாமா… யோசித்துக் கொண்டே அவள் செல்லாமல் தயங்கி நிற்க,
 
என்ன பவித்ரா, ஏதாச்சும் சொல்லணுமா… என்றான். அ… அதுவந்து… உங்களுக்கு என்னை இதுக்கு முன்னாடி எங்காச்சும் பார்த்த மாதிரி தோணுதா…” தயங்கித் தயங்கி கேட்டே விட்டாள்.
மித்ரனுக்கு அவளது கேள்வி குழப்பமாய் இருக்க யோசித்தான். அவனுக்கு அப்படி எதுவும் நினைவில்லை.
 
இல்லையே… ஏன் கேக்கறே… கண்ணை மானிட்டரில் பதித்துக் கொண்டே கேட்டவனைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், “சும்மா கேட்டேன்…” சொல்லிவிட்டு சிறு ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
 
அவள் கீழே செல்லும்போது மீனாவும் எழுந்து வந்திருக்க, காபி டிரேயுடன் வந்தவளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, “சாவித்திரி… டிபனுக்கு கிச்சடி பண்ணி சட்னி அரைச்சிடு… மசமசன்னு நிக்காம காபி கலந்து குடு…” என்றார்.
 
“அத்தை நான் காபி தரேன்…” சொன்ன பவித்ரா காபி கலந்து கொடுக்க, “ஹூம்… டிகாஷன் கொஞ்சம் அதிகமாயிடுச்சு போலருக்கே…” சொல்லிக் கொண்டே முழுவதும் குடித்து முடித்தார்.
அதற்குள் சோமசுந்தரம் திரும்பியிருக்க, “சுந்தரி டிபன் முடிஞ்சதும் நாம ஊருக்குக் கிளம்பணும்… எல்லாம் எடுத்து வை… நான் குளிச்சிட்டு வரேன்…” என்று கூற,
 
“இன்னைக்கே ஊருக்குப் போகணுமா அண்ணே…” என்றார் மீனா.
 
“ஆமாம்மா… புது கான்டிராக்ட் ஒண்ணு கன்பர்ம் ஆகிருக்கு… போகலைன்னா சரியா வராது… போயிட்டு நாலஞ்சு நாள்ல இங்கே வரத்தானே போறேன்…” என்றார்.
 
“அதுக்கில்லை அண்ணே… நாளைக்கு மித்ரன் வெளிநாடு கிளம்பறான்… இந்த நேரத்துல நீங்க இங்கே இல்லன்னா எப்படி…”
 
“அதுக்கென்ன மீனா… மாப்பிள்ளையை வழியனுப்ப தான் உன் மருமக பிளைட்ல வந்திட்டு இருக்காளே… அப்புறம் உனக்கு வேற யார் வேணும்…” சிரித்துக் கொண்டே பவித்ராவை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றார்.
சுந்தரியும், அவர் பின்னே செல்ல மீனா ஹாலுக்கு சென்றுவிட்டார.
 
“அத்தைக்கு இவர் ஒரு பிள்ளை தானே…. யாரை மருமகள் என்று குறிப்பிடுகிறார்…” யோசித்துக் கொண்டே “நான் கிச்சடி பண்ணறேன்… காய்கறி எல்லாம் நறுக்கிக் கொடுத்திருங்க சாவித்திரிக்கா…” என்றாள் பவித்ரா.
 
டிபன் தயாரானதும் அவர்கள் சாப்பிட்டுக் கிளம்ப, சுந்தரி செல்லும்போது தன் அன்னையே செல்வது போல பவித்ராவின் மனம் விம்மி கலங்கியது.
 
“சற்று நேரத்தில் கிளம்பி வந்த மித்ரன், நான் வெளிய போயிட்டு வந்திடறேன்மா…” சொல்லிவிட்டு வாசலில் கம்பீரமாய் நின்றிருந்த அவனது கறுப்பு என்பீல்டு புல்லட்டில் தடதடத்து கிளம்பினான். 
 
“கணவன் தன்னிடம் வெளியே கிளம்பும்போது சொல்லவில்லையே…” என்று வருந்திக் கொண்டே மதிய சமையலை மட்டுமாவது செய்கிறேன் என்று வேலையைப் பறித்துக் கொண்ட சாவித்திரியிடம் வீட்டு நடப்புகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள் பவித்ரா.
 
மீனா ஏதோ பணியாளிடம் பேசிக் கொண்டிருக்க, ஒரு கால் டாக்ஸி வாசலில் வந்து நின்று நாகரிக யுவதி ஒருத்தியை இறக்கிவிட்டுக் கிளம்பியது.
 
வாசலில் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த மீனா, முகம் நிறைந்த புன்னகையுடன், “மருமகளே… வா… வா…” என்று வரவேற்றுக் கொண்டே அவள் கையைப் பிடித்து அழைத்து வந்தார்.
 
ஜீன்ஸும் டாப்பும் அணிந்து தோளில் விரிந்திருந்த கூந்தலுமாய் கண்ணில் கூலரோடு, உதட்டில் அலட்சிய சிரிப்புடன் லிப்ஸ்டிக்குமாய் உள்ளே வந்த ரோஹினி அவரை அணைத்துக் கொண்டாள்.
 
“அத்தை… எப்படி இருக்கீங்க… அத்தான் எங்கே…”
“நல்லாருக்கேன்… வந்ததுமே அத்தான் தானா… நானெல்லாம் கண்ணுக்குத் தெரிய மாட்டேனே… அவன் வெளியே போயிருக்கான்… இப்ப வந்திருவான்…. நீ எப்படி இருக்கேன்னு சொல்லு…”
 
“ம்ம்… அதெல்லாம் சூப்பரா இருக்கேன்…” சொன்னவள் என்ஜினியரிங் மூன்றாம் வருடத் தேர்வு முடித்துவிட்டு வந்திருந்தாள். மித்ரனின் கல்யாணத்தன்று இறுதித் தேர்வு நடந்து கொண்டிருந்ததால் கல்யாணத்திற்கு வராமல் இப்போது வந்திருக்கிறாள்.
 
சோம சுந்தரத்தின் ஒரே வாரிசு. அப்படியே தந்தையின் திமிர் பிடித்த சுபாவமும் சுந்தரியின் அழகும் கொண்டவள். தனது அழகின் கர்வமும் செல்வத்தின் அகங்காரமும் அவளுக்கு மிக அதிகமாகவே இருந்தது.
 
ஹாலில் பேச்சு சத்தம் கேட்டு கையில் கரண்டியுடன் பவித்ரா வெளியே வரவும், மீனாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தவள், கண்ணாலேயே எடை போட்டாள்.
“ஓ… இவதான் என் அத்தானைக் கட்டிகிட்டவளா…  வந்ததுமே அடுக்களைப் பொறுப்பை எடுத்துகிட்டாச்சு போலருக்கு….” உதட்டைச் சுளித்துக் கொண்டே கேட்கவும்,
 
“பவித்ரா இவ என் மருமக ரோஹிணி… போயி ஜூஸ் எடுத்திட்டு வா…” அவளை விரட்டினார் மீனா.
 
அப்போது வாசலில் புல்லட்டின் சத்தம் கேட்கவும், சந்தோசத்துடன் துள்ளியவள், “ஐ… அத்தான் வந்துட்டாரு…” சொல்லிக் கொண்டே பவித்ராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனிடம் ஓடினாள்.
 
“அத்தான்…..” தோளில் தொங்கியவளை நோக்கி சிரித்த மித்ரன், “என்ன வாலு…. எக்ஸாம் முடிச்ச கையோட கிளம்பி வந்துட்டியா….” என்றான்.
 
“ம்ம்… பின்ன… அங்க எனக்கென்ன வேலை… அதும் நாளைக்கு நீங்க கிளம்பறிங்களே… “உங்களைப் பார்க்காம இந்தப் பிஞ்சு மனசு எப்படித் தவிக்கப் போகுதோ…” என்று சொல்லிக்கொண்டே வராத கண்ணீரைத் துடைத்துக் கொள்ள அவன் அவள் தலையில் மெல்லக் குட்டினான்.
 
ரோஹிணியும் மித்ரனும் சிறுவயது முதலே ஒன்றாய் பழகி வளர்ந்தவர்கள். மித்ரன் பள்ளிப்படிப்பை  ஹாஸ்டலில் முடிந்திருந்தாலும் கல்லூரிப் படிப்பை சென்னையில் மாமாவின் வீட்டிலிருந்தே படித்து முடித்திருந்தான்.
 
“மித்ரா… நீ கிளம்பறேன்னு என் மருமக பரிச்சை முடிஞ்ச கையோட கிளம்பி வந்திருக்கா…” என்றார் மீனா அவளை மெச்சிக் கொண்டே.
 
“ஆமாம் மா… சரி ரோஹி, எக்ஸாம் எப்படிப் பண்ணினே…”
 
“சூப்பரா பண்ணிருக்கேன் அத்தான்…”
 
“வெரிகுட்… மாமாவும், அத்தையும் கொஞ்சம் முன்னாலதான் கிளம்பினாங்க போலருக்கு…”
“டாடி கால் பண்ணி சொன்னார் அத்தான்… நீங்க என்ன??? முன்னைவிட ஸ்மார்ட்டா இருக்கற மாதிரி இருக்கு…” சொல்லிக் கொண்டே அவனது மீசையைப் பிடித்து மெல்ல இழுக்க,
 
“ஏய்… விடுடி… வலிக்குது…” அலறவும் விட்டுவிட்டு ஓடியவளை அவன் அடிக்கத் துரத்த, அதைப் பார்த்துக் கொண்டே இருவருக்கும் ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்தாள் பவித்ரா.
 
“தேங்க் யூ பவித்ரா…” சொல்லிக்கொண்டு ஒரே மூச்சில் மித்ரன் குடித்துவிட்டுக் கொடுக்க, ஜூஸை வாயில் வைத்த ரோஹிணி, அப்படியே கீழே துப்பினாள்.
 
“ச்சீ… இதென்ன இதில் இத்தனை இனிப்பு போட்டிருக்கே…  எனக்கு வேண்டாம்… எடுத்திட்டுப் போ…” என்று கத்தவும் பவித்ராவின் முகம் கூம்பி விட்டது. “ஜூஸ் நல்லாதானே இருந்துச்சு…” மித்ரன் கேட்கவும் முறைத்தாள்.
“அவளுக்கு இனிப்பே பிடிக்காதுன்னு இந்த சாவித்திரி சொல்லலையா… சரி இதைக் கிளீன் பண்ண சொல்லு…” மீனா சொல்லவும் பவித்ராவின் கண்கள் கலங்கிவிட அமைதியாய் உள்ளே சென்றவள் துடைக்க துணியுடன் வந்தாள்.
 
“சாவித்திரிக்கா இல்லியா…” கேட்ட மித்ரனிடம், “தோட்டத்துக்குப் போயிருக்காங்க…” சொன்னவள் வேகமாய்த் துடைத்துவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
 
உம்மென்று அமர்ந்திருந்த ரோஹிணியிடம், “பவித்ரா புதுசுதானே ரோஹி… அதான் இப்படி ஆகிருக்கும்…” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான் மித்ரன்.
 
அடுக்களைக்கு வந்த மீனா, “பவித்ரா… அவளுக்கு கோபம் வந்தா நாலஞ்சு நாளைக்கு மூஞ்சியைத் தூக்கி வச்சுப்பா… கொஞ்சம் பார்த்து செய்… சாவித்திரிகிட்ட வேற ஜூஸ் எடுத்திட்டு வர சொல்லு…” அதிகாரமாய் சொல்லிவிட்டு சென்றார் மீனலோசனி.
அன்றைய பொழுது முழுதும் மித்ரன் அருகிலேயே இருந்தவள் ஏதேதோ கதைகள் பேசி சிரித்துக் கொண்டிருக்க நாளை கணவன் கிளம்பி விடுவானே… அவனிடம் எதுவுமே பேச முடியவில்லையே… என்ற ஏக்கத்துடன் இருந்தாள் பவித்ரா.
 
அவர்களுக்கு நடுவில் தான் சென்று ரோஹிணி ஏதேனும் சொல்லிவிட்டால், என்ற தயக்கமும் இருக்க அவள் மித்ரன் அருகிலேயே செல்லவில்லை.
 
இரவு உணவு முடிந்ததும் மித்ரன் அவனது அறைக்கு சென்றுவிட சற்று நேரத்தில் பவித்ராவும் அறைக்கு செல்வதைக் கண்ட ரோஹிணி, “ஏய்… எனக்கு கூல் வாட்டர் எடுத்திட்டு வா…” எனவும் பவித்ராவின் முகம் சிறுத்தது. எதுவும் பேசாமல் பிரிட்ஜில் இருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு அமைதியாய் சென்றுவிட்டாள்.
 
“என்ன அத்தை… ரொம்ப அழுத்தக்காரியா இருப்பா போலருக்கு… அலட்டிக்கவே மாட்டேங்கிறா…”
“ம்ம்… சரி பண்ணிக்கலாம்…” என்ற மீனா,  “சரி… நீ போயி தூங்குமா… சோர்வா தெரியறே…” என்றார்.
 
“ம்ம்… சரி அத்தை…” என்றவள் அவரது அறைக்கு அருகிலிருந்த அறைக்கு சென்றாள். அவள் வரும்போது அங்குதான் தங்கிக் கொள்வாள்.
 
உன் விழியென்ற ஆழிக்குள்
இமைகொண்டு இழுக்கின்றாய்…
கரையை முத்தமிடும் அலையாய்
சத்தமின்றி இமைக்கதவை சாத்தி
இதயத்தில் சயனிக்கிறாய்…
கலந்துவிடு கருவிழியில்…
கரைந்துவிடுகிறேன் உயிரில்…
 
இமைப்பீலி வரும்…

Advertisement