Advertisement

இமை – 2
 
ழகான ஆலிவ் நிற கிரேப் சில்க் சேலையில் சிறு நாணத்துடன் நின்றவளின் தலையில் பூ வைத்து விட்ட சுந்தரி, “பவி…. நீயும் எனக்குப் பொண்ணு போலதான்…. பார்த்து பதவிசா நடந்துக்கணும்….. நான் பால் எடுத்திட்டு வந்திடறேன்….” என்று அடுக்களைக்கு செல்ல, அவள் மனதிலோ இனம் புரியாத ஒரு குழப்பமும், திகிலும் சிறு பதட்டமும் நிறைந்திருந்தது.
அவளது சுபாவத்திற்கு இந்த உணர்வுகள் புதிதென்றாலும் இந்தப் புதிய உறவுகளைப் பற்றி தெரியாததால் ஒரு தயக்கம் இருந்தது. சுந்தரி உள்ளே செல்வதைப் பார்த்துக் கொண்டே மருமகளின் அருகில் வந்தார் மீனா.
 
“ம்ம்…. அலங்காரம் எல்லாம் முடிஞ்சுதா…..” கேட்டுக் கொண்டே அவளை தலை முதல் கால் வரை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவர்,
 
“பவித்ரா… உன்கிட்டே ஒண்ணு சொல்லணும்…. மனசுல பதிச்சு வச்சுக்க… மித்ரனுக்காக நீ இதை செய்தே ஆகணும்…” மெல்லிய அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னவரிடம், “சொல்லுங்க அத்தை….” என்றவள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
“அதுவந்துமா… மித்ரனோட ஜாதகத்துல இப்ப ஒரு கண்டம் இருக்கு… உடனடியா அவனுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணினதே உன்னோட தாலி பாக்கியம் அவனோட உயிரைக் காப்பாத்தும்னு ஜோசியர் சொன்னதாலதான்… ஆனா ஜோசியர் இன்னொன்னும் சொன்னார்…” தயக்கத்துடன் நிறுத்த, “கணவனின் உயிருக்கு கண்டமா…” சிறு அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
 
“அது… நீங்க ரெண்டு பேரும் ஒரு வருஷம் சேரக் கூடாது… சும்மா ஒரு சாங்கியத்துக்கு தான் இந்த சாந்தி முகூர்த்த ஏற்பாடு… இல்லேன்னா எல்லாருக்கும் இதை சொல்லிட்டு இருக்கணும்… இந்த விஷயம் யாருக்கும் தெரியாது… நீயும் சொல்லிட வேண்டாம்… மித்ரன் வருத்தப்படுவான், அதனால…” என்று நிறுத்தவும்,
 
அவர் சொன்ன விஷயத்தின் தாக்கம் மனதுக்குள் அதிர்ச்சியையும், பயத்தையும் கொடுத்தாலும் மனதை சற்று நிலைப்படுத்திக் கொண்டவள்,
 
“அத்தை…. கவலைப்படாதீங்க….. அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது…..” என்றாள் உறுதியான குரலில். அதைக் கேட்டதும் தான் அவரது முகம் தெளிந்தது.
 
“சரிம்மா….. கவனமா இருந்துக்க….” அவர் சொல்லும்போதே பால்சொம்புடன் வந்த சுந்தரி, “என்ன… அத்தையும், மருமகளும் என்னை விட்டு ரகசியம் பேசிட்டு இருக்கீங்க…..” என்றார் சிரிப்புடன்.
 
“சும்மா அண்ணி…. மித்ரனுக்கு எப்படி நடந்துகிட்டாப் புடிக்கும்னு சொல்லிட்டு இருந்தேன்…..” எனவும், “ஓ… நல்ல விஷயம்தான்….” என்றவர், “இந்தாம்மா…. மித்ரன் மனசு கோணாம நடந்துக்க…..” என்று சொல்லி கையில் சொம்பைக் கொடுத்தவர், “சின்னப் பொண்ணுங்க யாரும் உன்னோட ரூம் வரைக்கும் வர்றதுக்கு இல்லை…. அதனால நீயே போயிடறியா…. மேலே ஏறினதும் முதல் ரூம்…..” என்றார் புன்னகையுடன்.
 
“சரிம்மா…..” சுந்தரியை எப்படி அழைப்பது என்று தயங்கிக் கொண்டிருந்தவளிடம் சற்று முன்புதான் அம்மா என்றே அழைக்குமாறு கூறி இருந்தார். பால்சொம்புடன் மாடியேறி சாத்தியிருந்த அறைக்கதவை தயக்கத்துடன் மெல்லத் தட்ட, கதவு திறந்திருக்கவும் உள்ளே சென்றாள்.
“எனக்கு அவரை பார்த்ததும் அடையாளம் தெரிந்தது போல அவருக்கும் என்னை அடையாளம் தெரியுமா…. அப்படி எதுவும் அவர் முகபாவத்தில் தெரியவில்லையே…” மனதில் சிறு சஞ்சலத்துடன் உள்ளே பார்வையை ஓட்டினாள்.
 
பெரிய அறையில் ஓரமாய் போடப் பட்டிருந்த சோபாவில் அமர்ந்து மடியில் லாப்டாப்பைத் திறந்து வைத்திருந்த மித்ரன், கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் லாப்டாப்பில் கண்ணைப் பதித்தான். என்ன செய்வதென்று புரியாமல் தயக்கத்துடன் அவன் அருகில் வந்து நின்றாள் பவித்ரா.
 
“சொல்லு…..” தலையைத் தூக்காமலே கேட்டான்.
 
“பால்…….” என்றாள்.
 
“அங்க வச்சிரு…..” சொல்லிவிட்டு அவன் வேலையைப் பார்க்க, மேசையில் பால் சொம்பை வைத்துவிட்டு அங்கேயே அவள் நின்று கொண்டிருக்க நிமிர்ந்தான். அவள் சட்டென்று அவன் காலில் விழுந்து வணங்கவும், துள்ளிக் கொண்டு எழுந்தவன்,
 
“எதுக்கு இப்படி எல்லாம்… எழுந்திரு…” என்றான்.
 
“இப்படி பண்ணனும்னு பெரியவங்க சொல்லிருக்காங்க…..” எழுந்து நின்று நிலத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னவளை மெல்ல ஏறிட்டவன்,
 
“ம்ம்… அம்மா, அந்த ஒருவருஷம் பத்தி சொல்லிட்டாங்க தானே… உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே…” அவன் கேட்கவும் மாமியார் சொன்ன விஷயம் மனதில் வர சிறு வெட்கத்துடன், “சொன்னாங்க…. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை…” என்றாள் மெல்லிய குரலில்.
 
“சரி… நாம இந்த ரூமுக்குள்ள ஒண்ணா தான் இருந்தாகணும்… இல்லேன்னா மத்தவங்க கேள்வி வரும்… அந்த டிரஸ்ஸிங் ரூம்ல ஒரு பெட் இருக்கு… அதை நீ யூஸ் பண்ணிக்க….” என்று அறையின் ஓரமாய் டிரஸ் மாற்றுவதற்காய் இருந்த சின்ன அறையைக் காட்டினான்.
 
“ம்ம்… சரி…”
 
“எனக்கு வேலை இருக்கு… நீ போயி தூங்கு…” அவன் சொல்லியும் அவள் அங்கேயே நிற்க, “என்ன…” என்றான்.
 
“பால்…” என்று சொம்பை எடுத்து நீட்ட, “எனக்குப் பாலே பிடிக்காது பவித்ரா… அதான் பாலும், பழமும் கொடுத்த போது கூட ஓடிட்டேன்… நீயே குடிச்சிரு…” சொல்லிவிட்டு அவன் லாப்டாப்பில் கண் பதிக்க, முதன்முறையாய் பவித்ரா… என்ற அவனது அழைப்பைக் கேட்டு அவள் மனம் குளிர்ந்தது. சற்று முன்பு வரை சஞ்சலப்பட்ட மனது இப்போது தெளிந்திருந்தது.
 
அந்த அறையில் ஒரு சிங்கிள் பெட் சுவரோடு சேர்த்து வைத்திருக்க அதைக் கீழே விரித்து படுத்துக் கொண்டு மின்விசிறியை சுழலவிட்டாள்.
“அத்தை ரெண்டு பேரும் சேரக்கூடாதுன்னு தானே சொன்னாங்க… கொஞ்சநேரம் பேசக் கூட கூடாதா… என்னை நினைவிருக்கா, இல்லையான்னே தெரியலியே… அப்ப நான் ரொம்ப சின்னப் பொண்ணு… இப்ப ரொம்ப மாறிப் போயிட்டேன்… கண்டிப்பா சான்ஸ் கம்மிதான்…” மனதில் ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டவள் மனது பழைய நினைவுகளுக்கு செல்ல முதன்முதலாய் மித்ரனைக் கண்ட நாள் மனக்கண்ணில் விரிந்தது.
 
அப்போது பவித்ரா ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். அப்பா, அம்மாவின் செல்லக் கொஞ்சல்களுடன் அன்பு நிறைந்த வாழ்க்கை. மகள் எது கேட்டாலும், வாங்கிக் கொடுக்கும் தந்தை. பவித்ரா சரியான அப்பா செல்லம். அவரும் மனைவி, மகள் மீது மிகுந்த பிரியமுடையவர்.
அவர்கள் ஊரில் கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. பக்கத்து ஊர்களில் இருந்து எல்லாம் மக்கள் திருவிழாவுக்கு குவிந்து விடுவார்கள். பவித்ராவுக்கு வீட்டுக்கு அருகிலேயே கோவில் இருந்ததால் தினமும் கோவிலைச் சுற்றி இருந்த எல்லாக் கடைகளிலும் ஏறி இறங்கி, ராட்டினத்தில் சுற்றி, விதவிதமான தின்பண்டங்கள் சாப்பிட்டு மிகவும் சந்தோஷமாய்க் கழிந்த பொழுதுகள்.
 
அன்று மாலை ஸ்கூல் விட்டு வரும்போதே கோவிலுக்கு எப்போது கிளம்பலாம்… என அன்னையிடம் கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள்.
 
“நீ முதல்ல குளிச்சிட்டு வந்து சாப்பிடு… அப்பா வந்ததும் போகலாம்…..” என்றார் அன்னை தனலட்சுமி. அவளும் வேகமாய் அன்னை சொன்னதை செய்து முடித்து எழுத வேண்டிய வீட்டுப் பாடங்களையும் முடித்துவிட்டு தந்தைக்காய் காத்திருக்க அவரைக் காணவில்லை.
 
“அப்பாக்கு இன்னும் வேலை முடியலை போலருக்கு….. நாமளாச்சும் போயிட்டு வரலாம்மா ப்ளீஸ்…..” தன் கன்னத்தைப் பிடித்துக் கெஞ்சிய மகளின் கெஞ்சல் தாங்காமல் கோவிலுக்குப் போவதாய் அடுத்த வீட்டில் சொல்லிவிட்டு மகளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார் தனலட்சுமி.
 
கோவிலில் கூட்டம் மிகவும் அதிகமாய் இருக்க, நெரிசலில் மகளின் கையைப் பிடித்துக் கொண்டே முன்னேறினார்.
 
சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வரவும் பவித்ராவின் கண்கள் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்றுக் கொண்டிருந்த கடையைத் தேடியது. இன்று அவள் அன்னை அவளுக்கு வேண்டிய விளையாட்டு சாமானை வாங்கித் தருவதாய் சொல்லியிருக்கிறாரே.
 
கோவிலுக்கு வரும் கன்னியரைக் காண்பதற்காகவே காளையர் கூட்டமும் அங்கங்கே அலைமோதியது.
ஒருத்தன் வெகு நேரமாய் வந்து போகும் பெண்களை நோக்கி கண்ணடிப்பது, அசிங்கமாய் கமன்ட் சொல்லி சிரிப்பது என்று வம்பிழுத்துக் கொண்டிருக்க ஒரு பெண்ணை எதோ சொல்லவும், கோபம் கொண்ட அந்தப் பெண் வாய்க்கு வந்தபடி திட்ட அந்த ரவுடிப் பயல் சட்டென்று அப்பெண்ணின் தாவணியை இழுத்துவிட்டான்.
 
அனிச்சை செயலாய் மாராப்பை கையில் அழுத்திப் பிடித்துக் கொண்டவள், “தாவணியை விடுடா…” என்று கத்தி, கண்ணீருடன் கதறிக் கொண்டிருக்க, நிறையப்பேர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர யாரும் அவனிடம் நெருங்கவில்லை. ஏரியா ரவுடியாதலால் எல்லாருக்கும் அவனிடம் பயம் இருந்தது.
 
அதைக் கண்ட தனலட்சுமிக்கும், பவித்ராவுக்கும் கோவமாய் வந்தது. ஆனாலும் அமைதியாய் அவனிடம் சென்றவர், “அந்தப் பொண்ணை விடு…” கோவில்ல வந்து இப்படி பண்ணலாமா…” எனவும், “அடப் பாருடா… ஒரு பசுக்குட்டி கன்னுக்குட்டியோட ஆதரவுக்கு வந்து நிக்குது… ம்ம்… குட்டி போட்டாலும் பசுவோட அழகு குறையவே இல்லையே… கோவிலா இல்லேன்னா உனக்கு ஓகேவா…” சொல்லிக் கொண்டே அவரை தலையிலிருந்து கால்வரை பார்வையால் தடவ அருவருத்துப் போனார் தனலட்சுமி. பவித்ரா பயத்தில் நடுங்கிக் கொண்டு அன்னையின் பின்னில் ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
வெகுநேரமாய் அவன் செய்வதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மெலிந்த பையன் ஒருவனுக்கு அவன் செயலும், பேச்சும் கோவத்தை வரவழைக்க கடையில் விற்க வைத்திருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்துவிட அந்த ரவுடி தாவணியை விட்டு ரத்தம் ஒழுகும் தலையைப் பிடித்துக் கொண்டான்.
 
“டேய்…. இன்னும் மீசை கூட முளைக்காத பய, என் மண்டையை உடைச்சிட்டியா… உன்னை…” சொல்லிக் கொண்டே அந்த பேட்டைப் பிடித்து இழுக்க அந்த சிறுவனோ அவனது காயத்திலேயே மீண்டும் அடிக்க ரத்தம் அதிகமாய் ஒழுகத் தொடங்கியது.
“ஆ… அம்மா…” என்று வலியில் கத்தியவன் பிடித்திருந்த பிடியை விட்டு நெற்றியைப் பிடித்துக் கொண்டான்.
 
“இப்ப கத்தறியே அம்மான்னு…. அவங்களை மாதிரிப் பொண்ணுங்க தான இவங்களும்… ஆம்பளைன்னா என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு நினைப்பா…” கேட்டுக் கொண்டே சுற்றியிருந்த கூட்டத்தை ஒரு பார்வை பார்த்தவன்,
 
“நீங்கல்லாம் எது நடந்தாலும் யாருக்கோ தானேன்னு வேடிக்கை பார்த்திட்டு இருக்கறதால தான் உங்க பொண்ணுக்கு ஒண்ணு வரும்போது யாரும் உதவ வர மாட்டேங்கிறாங்க…. இதுவே உங்க வீட்டுப் பொண்ணா இருந்தா பார்த்திட்டு இருப்பீங்களா…” சின்னப் பையனின் கேள்வியில் அனைவரும் தலை குனிந்து நிற்க,
 
“அப்படிக் கேளு தம்பி… நீ தான் உண்மையான ஆண் பிள்ளை…” என்று தனலட்சுமி பாராட்ட, “ரொம்ப நன்றி தம்பி…” அந்த தாவணிப் பெண் சொல்லிச் சென்றாள்.
பவித்ராவின் கண்ணில் மிரட்சியைக் கண்டவன், “பயந்துட்டியா… இந்த மாதிரி ஆளுங்ககிட்டே பயப்படாம எதிர்த்து நிற்கணும்…. சரியா…” அவளிடம் சொல்லிவிட்டு, “வரேன் ஆண்ட்டி…” என்று கடந்துவிட்டான். அவனை பிரமிப்புடன் பார்த்திருந்த அவளது விழிகளில் அரும்பு மீசையோடிருந்த அவன் உருவம் சத்தமில்லாமல் ஒட்டிக் கொள்ள வியப்புடன் பார்த்து நின்றாள்.
 
“வாடி வீட்டுக்குப் போவோம்…” என்று மகளை அழைத்த அன்னை, “பெத்தா இப்படி ஒரு ஆம்பளைப் பையனைப் பெக்கணும்… என்ன அருமையான பையன்….” அவர் சொன்ன வார்த்தைகள் அவன் மீதிருந்த பிரமிப்பை அதிகமாக்க, ரவுடியைக் கண்டு பயப்படாமல் தைரியத்துடன் எதிர்த்த அந்த முகம், ஒரு ஹீரோவாய் அவளது பிஞ்சு மனதில் ஆழமாய் பதிந்து போனது.
 
அதற்குப் பிறகு எந்த ஆண்களும் அவளை பாதித்ததே இல்லை. அவன் யார், எங்கிருந்து வந்தான், என்ன பெயர் என்று கூட அவளுக்குத் தெரியாது. எப்போதாவது அவன் முகம் மனதில் தோன்றும் போதெல்லாம் மனம் லேசாவது போல உணர்ந்திருக்கிறாள். காலங்கள் மாறி வாழ்க்கையின் போக்கே மாறிப்போக அந்த நினைவுகள் மட்டும் மிச்சமாய் மனதில் ஒட்டிக் கொண்டிருந்தது.
 
அதற்குப் பிறகு அவனை இன்று தனக்கு மாங்கல்யம் தந்த  கணவனாய் காணவும் மனம் எதிர்பாராத சந்தோஷத்தில் பூரித்துப் போனது. நம்ப முடியாமல் மனம் சிலிர்த்தது.
 
பழைய நினைவுகளில் வெகுநேரம் ஆழ்ந்திருந்தவள் அறையில் வெளிச்சம் இல்லாததைக் கண்டு மெல்ல எழுந்து பார்க்க மித்ரன் உறக்கத்தில் இருந்தான். அவனுக்கு அருகில் வந்து நின்றவள் உறங்கும் அவன் முகத்தையே ஆசையுடன் பார்த்து நின்றாள்.
 
அன்று கண்ட அரும்பு மீசை இப்போது கட்டி மீசையாய் ஆண்மையின் அடையாளமாய் இருக்க, முகத்தின் ஜாடை பெரிதாய் மாறாமல் இருந்தது. பவித்ரா காலத்தின் கோலத்தில் அப்படியே மாறிப் போயிருந்தாள்.
சிறிதுநேரம் கணவன் முகத்தையே ஆசையுடன் புன்னகையுடன் ரசித்து நின்றவள் அவன் அசைவு தெரியவும் வேகமாய் நகர்ந்து விட்டாள்.
 
என் மனதில் பதிந்த நாயகன்…
எனக்கே எனக்கானவனாய்…
என் கரம் பிடித்த மணாளனாய்…
இமை தீண்டிய மையழியும்
இதயம் தீண்டிய முகம் மறையுமா…
மறைத்து வைத்த மயிலிறகாய்
மனதில் பொத்தி வைத்த நினைவுகள்
ஈன்று கொண்டே செல்கிறது….
எண்ணிலடங்கா நினைவுகளை…
நீயில்லா சாலையிலே – உனை நினைத்து
நடப்பதுகூட சுகம்தான் எனக்கு…
இமை தொடரும்…
 

Advertisement