Advertisement

இமை – 9
 
ன்று காலையில் எழுந்தது முதலே பவித்ராவுக்கு ஒருவிதப் படபடப்பாய் இருந்தது. மனம் ஓயாமல் கணவனுக்காய் பிரார்த்தித்துக் கொண்டிருந்தது. அவர்கள் சென்னை வந்துவிட்டதாகவும். மித்ரனுக்கு அங்கேயே ஒரு பரிசோதனை முடித்துவிட்டு வீட்டுக்கு வருவதாகவும் வந்த அலைபேசி செய்தியில் அவள் மனம் ஓரிடத்தில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
“மித்து… இன்னைக்கு உங்களைப் பார்க்கப் போறேனா… அவருக்கு ரொம்ப நேரம் உக்காரக் கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்களே… பிரயாணத்துல சிரமப் பட்டிருப்பாரோ…”
 
ஏதேதோ யோசித்துக் கொண்டே அவனது கட்டில் விரிப்பை மாற்றி, ஜன்னலில் புதிய கர்ட்டனை தொங்க விட்டாள். இளம் ரோஜா வண்ண சாட்டின் கர்ட்டன் இதமாய் மனதை நிறைத்தது.
 
அறையை சுற்றிலும் பார்வையை ஓட்டியவள் திருப்தியாய் உணர்ந்தாள். தலையை ஒதுக்கி முகம் கழுவிப் பளிச்சென்று வந்தவள் கீழே வாசலில் கார் ஹாரன் கேட்கவும் திகைத்தாள்.
 
“கார் சத்தம்… இவ்ளோ சீக்கிரமா வந்துட்டாங்களா…” கணவனைக் காண வேண்டுமென்ற ஆர்வத்தில் வேகமாய் வாசலுக்கு வந்தாள். அவர்கள் சென்னையில் சோமுவின் குடும்ப டாக்டரிடம் மித்ரனைப் பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்பாடு செய்த ஒரு ஹோம் நர்சையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்தும் பிளைட்டில் வந்து பிறகு டாக்ஸி அழைத்து வந்திருந்தனர்.
 
கணவனைக் காண்பதற்காய் ஓடி வந்தவள் ஒரு கால் முழுதும் போடப்பட்ட கட்டுடன் மறுகாலில் நொண்டிக் கொண்டு நிற்க முடியாமல் நின்றவனைக் கண்டதும் கலங்கினாள்.பயணக் களைப்பில் சோர்வுடன் நின்றவனை இரு சக்கர நாற்காலியில் அமர வைத்தனர். அதைக் கண்டதும் அவள் கண்ணோரத்தில் கண்ணீர் துளிர்த்தது. ரோஹிணியின் முகத்திலோ எரிச்சலாய் ஒரு ரேகை பளபளக்க மனதுக்குள் எழுந்த உரிமைக் குரலை தொண்டையிலேயே அமுக்கிவிட்டு அமைதியாய் ஓரத்தில் ஒதுங்கி நின்றாள் பவித்ரா.
 
“அச்சோ, மித்ரா… உன்னை இப்படிப் பார்ப்பேன்னு நான் கனவுலயும் நினைக்கலயே…” கதறிக் கொண்டே மகனின் அருகில் சென்ற மீனா அவனது உச்சி நுகர்ந்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கை கால்களை நோக்கினார்.
“அ…ம்மா… அதான் வந்துட்டேனே… சீக்கிரம் சரியாகிடும்… அழாதீங்க…” அன்னையை சமாதானப் படுத்தினான்.
 
சுந்தரியும் மித்ரனை விசாரிக்க, ஓரமாய் ஒதுங்கி நின்ற பவித்ராவின் கலங்கிய கண்களின் பார்வை அவன் முகத்திலேயே நிலைத்திருப்பதைக் கண்ட மித்ரன் அவளை நோக்கி ஒரு புன்னகையை உதிர்த்தான்.
 
வெகு நாட்களாய் வறண்டு கிடந்த பாலைவனத்தில் மழை வரப் போவதற்கு முன்னால் உதித்த மின்னல் கீற்றாய் பவித்ராவின் மனதில் அந்த சிரிப்பு பளிச்சிட்டது.
 
“மீனா… மித்ரனுக்கு ரொம்ப நேரம் உக்கார முடியாது… களைப்பா இருக்கும்… எதுன்னாலும் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்… அப்புறம் பேசிக்கலாம்…” என்ற சோமு மித்ரனுடன் வந்திருந்த ஹோம் நர்ஸை நோக்கிக் கண்ணைக் காட்ட, அவள் அந்த சக்கர நாற்காலியை டிரைவர் உதவியுடன் மித்ரனை வைத்து படியேற்ற முயல பவித்ரா ஓடி வந்து பிடித்துக் கொண்டாள்.
“சாரோட ரூம் எது…” என்று நர்ஸ் கேட்கவும் பவித்ரா மேலே கை காட்ட, ரோஹிணி, “மாடியில படுக்க வைத்தா அத்தானுக்கு சிரமம்… இங்கே கீழ் ரூமிலியே படுக்கட்டும்…” என்று அவளே முடிவெடுத்து கூறினாள்.
 
அதைக் கேட்டதும் பவித்ராவின் மனம் சுணங்கியது. கணவனை அருகில் கண்டு அவனை தன் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பவித்ராவின் ஆசையை அங்கேயே பொசுக்கிவிட்டாள்.
 
அவளது முக வாட்டத்தைக் கண்ட மித்ரன், “பவித்ரா… ரொம்ப தாகமாருக்கு… கொஞ்சம் தண்ணி எடுத்திட்டு வா…” எனவும் வேகமாய் பிரிட்ஜைத் திறந்து குளிர்ந்த தண்ணீர் பாட்டிலுடன் ஓடி வந்து நீட்டினாள்.
 
அதை வாங்கி தொண்டையில் சரித்துக் கொண்ட மித்ரன், “அம்மா… எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு… உக்கார்ந்து இடுப்பு வலிக்குது… கொஞ்சம் படுத்துக்கறேன்…” என்றான்.
 
“சரிப்பா… நீ முதல்ல ரெஸ்ட் எடு… அப்புறம் பேசலாம்…” என்றவர், அவனைக் கீழிருந்த படுக்கை அறைக்கு அழைத்துச் செல்லுமாறு சொல்ல நர்ஸ் அந்த அறைக்கு அழைத்துச் சென்றாள். மற்றவர்களும் அவர்களைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்தனர்.
 
நர்ஸ் ஒரு பக்கமும், டிரைவர் ஒரு பக்கமுமாய் மித்ரனைக் கட்டிலில் படுக்க வைத்தனர். தேகம் அசையும்போது அவன் முகத்தில் தெரிந்த வலியின் அவஸ்தை பவித்ராவின் மனதுக்குள் முள்ளாய் குத்தியது.
 
“எல்லாரும் பசியோட இருப்பிங்க… மித்ரனுக்கு என்ன சாப்பிட கொடுக்கலாம்…” என்று நர்சிடம் சுந்தரி கேட்க, “எல்லாம் சாப்பிடலாம்… இப்ப ஜூஸ் கொடுங்க…” நர்ஸ் சொல்லவும் சுந்தரி பவித்ராவைப் பார்க்க அவள் சென்றாள். “நீங்க வாங்க… சாப்பிடலாம்…” என்று சோமு, ரோஹிணியையும், நர்சையும் சாப்பாட்டு மேசைக்கு அவர் அழைத்துச் செல்ல, மீனா மட்டுமே கண்ணீருடன் மித்ரனின் அருகில் இருந்தார்.
“மித்ரா… ரொம்ப வலிக்குதாப்பா… நம்ம ஜோசியர் சொன்ன போலவே நடந்திருச்சே…” கலங்கினார்.
 
“அம்மா… அதான் என் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாம தப்பிச்சிட்டேனே… ஆனா விபத்து நடந்த அந்த நிமிஷம் இனி உங்களை எல்லாம் பார்க்கவே போறதில்லை… என் விதி முடிஞ்சுதுன்னு தான் நினைச்சிட்டேன்… உங்க பிரார்த்தனைல தான் எதோ இந்த அளவோட தப்பிச்சேன் போலருக்கு…” அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டே ஜூஸுடன் உள்ளே வந்தாள் பவித்ரா.
 
அவன் வார்த்தைகள் அவள் மனதை ரணமாக்க கலங்கிய கண்களுடன் ஜூஸ் கிளாஸை நீட்டினாள். எழுந்திருக்க முயன்றவன் இடுப்பிலிருந்து மின்னலாய் புறப்பட்ட வேதனையில் முகம் சுளிக்க அவள் இதயம் துடித்தது.
 
“நீங்க அப்படியே சரிவா படுங்க……” என்றவள் பக்கத்தில் இருந்த தலையணையை அவனுக்குப் பின்புறம் சரிவாய் வைத்து சிறிது தலையை உயரமாக்கினாள்.
மீனா கவலையுடன் மகனைப் பார்த்துக் கொண்டிருக்க, பவித்ராவிடம் ஜூஸ் கிளாஸை வாங்கிக் கொண்டு சரிந்த வாக்கிலேயே சிறிது சிறிதாய் குடித்தான் மித்ரன்.
 
“தேங்க்ஸ் பவித்ரா…” சொல்லிக் கொண்டே கிளாசை சோர்ந்த சிரிப்புடன் நீட்டியவனைக் கண்டு மீண்டும் கண்கள் கலங்கியது அவளுக்கு. எதுவும் பேசாமல், “தலையணையை எடுக்கணுமா…” என்று கேட்க, அவன் “அப்படியே இருக்கட்டும்…” என்றுவிட்டான்.
 
சாத்தியிருந்த ஜன்னலைத் திறந்து விட்டாள். மிதமான வெளிச்சத்தோடு தோட்டத்திலிருந்து வந்த காற்று சுகமாய் அவனைத் தழுவியது.
 
சொந்த நாட்டில், சொந்த வீட்டுக் காற்றின் குளுமையை சுகமாய் உணர்ந்தவன், “அம்மா… நான் கொஞ்சம் தூங்கட்டுமா…” என்று கேட்க, “சரிப்பா…” என்ற மீனா அவன் தலையை அன்போடு கோதிவிட குழந்தையாய் கண்மூடிப் படுத்துக் கொண்டான்.
அதைப் பார்த்துக் கொண்டே நின்ற பவித்ராவை நோக்கிய மீனா, “நீ சாப்பிடலியா மா…” என்றார் கரிசனத்துடன்.
 
அவனுக்கு இப்படி ஆனதைக் கேட்டதில் இருந்தே அவள் படும் பாட்டைக் கண்டு கொண்டு தானிருக்கிறார். இந்தப் பெண்ணுக்கு அதற்குள் அவன் மீது இத்தனை அன்பு எப்படி வந்தது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.
 
“இல்ல அத்தை… நீங்களும் இன்னும் சாப்பிடலியே… உங்களுக்கு இங்கே கொண்டு வரட்டுமா…”
 
“இல்ல வேண்டாம்மா, நான் வரேன்… நீ சாப்பிடு…” என்றார். மித்ரனை மீண்டும் ஒருமுறை கண்ணில் நிறைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள் பவித்ரா.
 
மீனாவின் மனதில் அவளைப் பற்றிய சிந்தனையும் சேர்ந்து கொண்டது. “தான் எளிதாக நினைத்து தொடங்கிய ஒரு விஷயம் பெரிய சிக்கலை உருவாக்கி விடுமோ…” என்று கலங்காமல் இருக்க முடியவில்லை.
சாப்பாட்டு மேசையில் பரிமாறிக் கொண்டிருந்த சுந்தரி, “நீயும் உக்காரும்மா…” எனவும், ரோஹிணி அன்னையை முறைக்க அதை உணர்ந்து கொண்ட பவித்ரா, “எனக்குப் பசிக்கலைம்மா… அப்புறம் சாப்பிட்டுக்கறேன்…” என்று அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள்.
 
அங்கே சாவித்திரி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்க, அமைதியாய் அடுப்படியில் இருந்த சாதனங்களை ஒதுக்கி வைக்கத் தொடங்கினாள்.
 
அவள் மனது உள்ளுக்குள்ளேயே அழுது புலம்பிக் கொண்டிருந்தது. மித்ரனின் நிலை வேதனையைக் கொடுக்க அவனைத் தான் கவனிக்க முடியாத சூழல் இன்னும் அந்த வேதனையை அதிகமாக்கியது.
 
அனாதையாய் இருப்பது கஷ்டமல்ல… எல்லாரும் இருந்தும் அனாதையாய் உணர்வது தான் பெரும் கொடுமையாய் இருந்தது. தனிமை எத்தனை இனிமையோ அத்தனை கொடுமையானதும் கூட.
மனம் முழுதும் கணவன் நினைவிலேயே இருக்க கைகள் அதன் பாட்டில் வேலை செய்து கொண்டிருந்தது. அவளது முகத்தைக் கண்ட சாவித்திரிக்கு அவளது மனவோட்டம் புரிந்தது. இத்தனை நாளில் அவளைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறாரே.
 
அவர்கள் சாப்பிட்டு முடித்து ஓய்வெடுக்கச் செல்ல அடுத்து சுந்தரியும், மீனாவும் அமர அவர்களுக்குப் பரிமாறியவளை வற்புறுத்தி அமர வைத்தார் சுந்தரி. பேருக்கு சாப்பிட்டு முடித்தவள், நர்ஸிடம் சென்று பொதுவாய் பேசிக் கொண்டிருந்தாள்.
 
மித்ரனுக்கு எப்போது எந்த மாதிரி மாத்திரை கொடுக்க வேண்டும்… அவனுக்கு எந்த மாதிரி பணிவிடை செய்ய வேண்டும் என்று அறிந்து கொண்டாள். நர்ஸை மித்ரன் இருந்த அறைக்குப் பக்கத்து அறையை உபயோகிக்குமாறு சொல்லியிருந்தனர். மித்ரன் நல்ல உறக்கத்தில் இருந்ததால் சற்று ஓய்வெடுப்பதாக சொல்லி அவளும் அறைக்கு சென்றுவிட்டாள்.
பவித்ரா ஹாலிலேயே அமர்ந்திருந்தாள். மித்ரன் எப்போது எழுந்திருப்பானோ… உணவு கொடுக்க வேண்டுமே என்று காத்திருந்தாள். சுந்தரியும் மீனாவும் கூட களைப்பில் சற்று கண்ணயர்ந்து விட்டனர்.
 
சற்று நேரத்திற்குப் பிறகு மித்ரனின் அறையில் முனங்குவது போல ஓசை கேட்கவும், சென்று எட்டிப் பார்த்தாள் பவித்ரா. இடுப்பு வலியில் உறங்க முடியாமல், தவித்தவன் வலியில் முகத்தைச் சுளித்துக் கொண்டு படுத்திருந்தான். வேகமாய் அவனிடம் சென்றாள்.
 
“என்னங்க… என்னாச்சு… வலிக்குதா…” பரிதவித்தவளை வேதனையுடன் பார்த்தான் மித்ரன்.
 
“ம்ம்… வலிக்குது… எந்த பாவத்துக்கு இந்த பலனைக் கடவுள் கொடுத்தாரோ… அனுபவிச்சு தானே ஆகணும்… என்றவன், “பவித்ரா…” அழைத்து தயங்க, சொல்லுங்க…” என்றாள். “எனக்கு பாத்ரூம் போகணும்… டிரைவரையோ மாமாவையோ கொஞ்சம் வர சொல்லறியா…” என்றான்.
திகைத்தவள், “கால் வலின்னு சொன்னிங்களே… எப்படி பாத்ரூம் போவிங்க… பெட்பான் எடுத்துத் தரேன்…” எனவும் அவனுக்கு கூச்சமாய் இருந்தது.
 
“நீ எப்படி பவித்ரா… ப்ளீஸ், நர்ஸை வர சொல்லு…” என்றான் தயக்கத்துடன்.
 
“என்ன தேவையா இருந்தாலும் எங்கிட்ட சொல்ல கூச்சப்பட வேண்டாம்…” என்றவள் கட்டிலுக்குக் கீழே இருந்த பெட் பானை எடுக்க, கூசியவன், “இல்ல, கொஞ்சம் சப்போர்டிவா பிடிச்சா   போதும்… பாத்ரூமுக்கே போயிடறேன்…” என்றான்.
 
“ம்ம்… சரிங்க…” என்றவள், அவனது கையைப் பிடித்துக் கொள்ள கால்வலியில் முகத்தை சுளித்துக் கொண்டே ஒரு காலை கீழே ஊன்றியவன், மறுகாலை நொண்டியடித்துக் கொண்டே பவித்ராவின் தோளை இறுகப் பிடித்துக் கொண்டான். வலியில் அவனது பிடி இறுக தோளில் எழுந்த வலியைக் காட்டாமல் இருக்க அவள் பெரும் முயற்சி செய்தாள். கூச்சத்துடன் அவனது இடுப்பில் கைகொடுத்து சற்று அணைவாய்ப் பிடித்து நடத்திக் கொண்டு அழைத்துச் சென்றாள்.
 
அவன் உள்ளே நுழைந்ததும் கதவை வெறுமனே சாத்திவிட்டு காத்திருந்தாள். அவஸ்தையைத் தீர்த்துவிட்டு வெளியே வந்தவன் தயக்கத்துடன் மீண்டும் அவள் தோளைப் பற்றிக் கொண்டான். மனதில் ஒருவித இன்ப அவஸ்தையுடன் அவனைக் கட்டிலுக்கு அழைத்து வந்து அமர்த்தினாள். அவனது காலை மெல்லத் தூக்கி கட்டிலின் மீது வைத்துவிட்டு, “சாப்பிட கொண்டு வரட்டுமா…” என்றாள்.
 
“ம்ம்… நிறைய விதவிதமா சாப்பிடணும்னு ஆசையா தான் இருக்கு… ஆனா எதுவுமே மனசுக்குப் பிடிக்கலை பவித்ரா… சரி உனக்கு இங்கே எல்லாம் ஓகே தானே…”
“ம்ம்… அந்நிய தேசத்துல பக்கத்துல துணைக்கு யாருமில்லாம ரொம்ப கஷ்டப் பட்டீங்களா…” கண்களில் கவலை வழியக் கேட்டவளை புன்னகையுடன் பார்த்தான்.
“வலி எனக்குப் புதியதில்லை, விடு பவித்ரா… பசிக்குது…” எனவும் அவள் அவனைக் கவலையுடன் நோக்கி இருந்தவள் எழுந்து அடுக்களைக்கு சென்றாள்.
 
உள்ளிருந்து வலிக்கிறது
உள்ளமென்ற ஒன்று…
உன்னை மட்டும் நினைத்து
உருகியே தான் தவிக்கிறது…
கருவிழியில் கார்காலமாய்
கரை மீறும் கண்ணீரெல்லாம்
கண்ணன் உனை நினைத்தே…
உன் துயில் கொள்ளா இதயம் கண்டு
துயரத்தில் துடிக்கிறது என்னுள்ளம்….
காய்ந்து போன கண்ணீரின்
கரையெல்லாம் – என் காதலின்
வலி சொல்லாதோ கண்ணா…
இமைப்பீலி வரும்…

Advertisement