Advertisement

இமை – 7

 

“ஹலோ…”

 

எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருந்து ஒலித்த கம்பீரமான மித்ரனின் குரல் அவளது செவி வழியாய் இதயத்தை அடைந்து உயிரைத் தீண்ட தன்னை மீறிப் புறப்பட்ட சிறு விசும்பலுடன் அப்படியே நின்றாள் பவித்ரா.

“ஹலோ… நான் மித்ரன் பேசறேன்…” அவன் மீண்டும் கூறவும் இயல்புக்கு வந்தவள் தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள்.

 

“நா..நான் பவித்ரா பேசறேங்க… நல்லார்க்கீங்களா…”

 

தொலைபேசியில் திகைப்போடும், அக்கறையோடும் வழிந்த அவளது குரலைக் கேட்டவன் திகைத்தான்.

 

“பவித்ராவா… அம்மா இல்லியா…”

 

“அத்தை மில்லுக்குக் கிளம்பிப் போனாங்க… ரோஹிணியும் அப்பாவும் வந்திருந்தாங்க…. அவங்களும் கூடப் போயிருக்காங்க… நீங்க எப்படி இருக்கீங்க… எப்ப வருவீங்க… ஏன் எனக்கு கால் பண்ணவே இல்லை…” அவள் வரிசையாய் கேள்விகளை அடுக்க திகைத்தான்.

 

“ஓ! ரோஹிணி வந்திருக்காளா… நான் அம்மா மொபைலுக்கு கால் பண்ணேன்… போகலைன்னுதான் இங்கே பண்ணினேன்… சரி ரோஹிணிக்கு அழைச்சுப் பார்க்கிறேன்… நான் வச்சிடட்டுமா…” என்றதும் அவள் முகம் வாடிப் போனது.

 

“எ..என்னங்க… நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லியே…” வைத்து விடுவானோ என்று அவசரமாய் கேட்டாள்.

 

“என்ன கேட்ட… ஓ… நான் நல்லாருக்கேன்… அங்கே உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே…” என்றான்.

 

“ம்ம்… நீங்க என் பக்கத்தில் இல்லாதது மட்டும் தான் பிரச்சனை…” மனதில் நினைத்தாலும் சொல்ல முடியாமல், “இல்லைங்க… அங்கே சாப்பாடெல்லாம் நல்லாருக்குமா… நேரத்துக்கு சாப்பிடுங்க… உடம்பைப் பார்த்துக்குங்க… சீக்கிரம் வந்திடுங்க…” என்றவளின் சொல்லில் கலந்திருந்த உணர்ச்சியை மித்ரனால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் அவளது அக்கறையான அன்பான பேச்சு மனதுக்கு நெகிழ்வைக் கொடுத்தது.

போனை வைத்தவளின் மனதுக்குள் அவன் முகமே நிறைந்திருக்க காதுக்குள் அவன் குரலே ஒலித்துக் கொண்டிருந்தது. முகத்தில் சூரியன் உதித்தது போல பிரகாசமாய் புன்னகையுடன் அடுக்களைக்கு வந்தவளைக் கண்ட சாவித்திரி திகைப்புடன் பார்த்தார்.

 

“என்னம்மா… லாட்டரில பரிசு விழுந்திருக்குன்னு ஏதும் போன் வந்துச்சா… முகம் இப்படி பிரகாசிக்குது…” கிண்டலாய் கேட்டவரிடம் நாணத்துடன் புன்னகைத்தாள்.

 

“இது… அதுக்கும் மேலக்கா… அவரு போன் பண்ணினாரு…” முந்தானையைத் திருகிக் கொண்டே சிறு கூச்சத்துடன் சொன்னவளைக் கண்டு அவருக்கு சந்தோஷமாய் இருந்தது. அவளுக்கு மனம் விட்டுப் புலம்ப ஒரு துணை அந்த வீட்டில் அவர் மட்டும் தானே… கணவனிடமிருந்து ஒரு போன் கூட வரவில்லையே… என்று எந்நேரமும் புலம்பிக் கொண்டிருந்தவளின் முகத்தில் சந்தோஷத்தைக் கண்டதும் அவருக்கும் உற்சாகமாயிருந்தது.

 

ஆயிரம் தாமரை மொட்டுகள்

ஒன்றாய் மலருமென்று

கவிதையில் கேட்டிருந்தேன்…

உன் ஒற்றை சொல்லில்

அவையனைத்தும் கண் முன்னே

நிஜமாய் மலரக் கண்டேன்…

 

அவளது சந்தோஷம் அன்றைய தினம் முழுதும் நீடித்திருந்தது.

 

வீட்டுக்கு வந்த மீனலோசனியிடம் கணவன் தொலைபேசிக்கு அழைத்ததைக் கூறினாள். அவள் முகத்தில் வழிந்த சந்தோஷம் கண்டு ரோஹிணியின் முகம் கோபத்தில் ஜொலிக்கத் தொடங்கியது. பவித்ரா சென்றதும் அத்தையிடம் கோபமாய் பொரிந்தாள்.

 

“அத்தை… அத்தான் எதுக்கு இவளோட போன்ல பேசினார்… அவளோட சந்தோஷத்தைப் பார்த்திங்களா… எனக்கு அப்படியே ஆத்திரமா வருது…”

“ரோஹிம்மா… உனக்கு ஆத்திரம் வர்றது நியாயம் தான்… இவ்ளோநாள் வேலை செய்யாம இருந்த டெலிபோன் இன்னைக்கு வேலை செய்திருக்கு பாரு… மித்ரன்கிட்டே இனி வீட்டுக்கு அழைக்க வேண்டாம்னு சொல்லிடறேன்… நீ வருத்தப் படாதே…” சமாதானப் படுத்தினார்.

 

“என்னமோ அத்தை… நீங்களும் அப்பாவும் சொன்னதால தான் இந்த ஏற்பாட்டுக்கு நான் ஒத்துகிட்டேன்… மத்தபடி இந்த ஜாதக விஷயத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது…” கோபத்துடன் கூறினாள் ரோஹினி.

 

“அப்படி சொல்லாதம்மா… இதுவரைக்கும் நம்ம குடும்ப ஜோசியர் சொன்ன எல்லாமே அப்படியே நடந்திருக்கு… இது உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை சம்மந்தப்பட்டது… அவர் நம்ம மித்ரனோட உயிருக்கே கண்டம் இருக்குன்னு சொல்லி இருக்கார்… அதை நாம ஈசியா எடுத்துக்க முடியாதுல்ல… இந்தப் பவியோட ஜாதகத்துல தீர்க்க சுமங்கலி யோகம் இருக்கு… ரெண்டு ஜாதகத்துக்கும் பத்துப் பொருத்தமும் சரியாருக்கு… நீ கவலைப்படாதே… உன் மனசு போல எல்லாம் நடக்கும்… இந்த விஷயத்துக்கு நானும் அண்ணனும் எத்தனை கஷ்டப் பட்டிருக்கோம்… எல்லாம் நீங்க நல்லாருக்கணும்னு தானே…” நீளமாய் பேசி முடித்தவர் ஒரு பெருமூச்சை வெளியேற்றினார்.

 

“எல்லாம் சரிதான் அத்தை… இவ அத்தான் கிட்ட எடுத்துக்குற உரிமையைப் பார்க்கும்போதுதான் எனக்கு சுத்தமாப் பிடிக்கல… கோபமா வருது…”

 

“ம்ம்… அவளுக்கு எதுவும் தெரியாதுல்ல, அதான் எதார்த்தமா நடந்துக்கறா… இப்போதைக்கு இப்படி  இருக்கறது தான் நல்லது… அதனால நாமதான் கொஞ்சம் பொறுமையா இருக்கணும்… சரியா…”

 

“ம்ம்… என்னமோ செய்ங்க… லாஸ்ட்ல ஏதாச்சும் தப்பாச்சு, அப்புறம் என் முடிவு வேற மாதிரி இருக்கும்…” மிரட்டலாய் சொல்லிவிட்டு எழுந்து சென்ற அண்ணன் மகளைக் கவலையோடு பார்த்தார் மீனலோசனி.

 

“இவளுக்கு வேண்டிதானே நான் இப்படியொரு விபரீத பாவச் செயலுக்குத் தயாரானேன்… கடவுளே… எந்தப் பிரச்னையும் இல்லாமல் நீதான் நாங்க நினைத்தது போல நடத்திக் கொடுக்கணும்…” வேண்டிக் கொண்டார்.

 

“ரோஹிணி பிறந்ததும் அண்ணன் மகளை முதன்முறையாய் கையில் ஏந்தியவரின் மனதில் தோன்றிய ஆசையை, பாராட்டி சீராட்டி வளர்த்து வைத்த ஆசையை, அத்தனை சீக்கிரமாய் மனதை விட்டு அழித்துவிட முடியுமா…”

 

மித்ரனை மீனலோசனிக்கு எத்தனை பிடிக்குமோ அதே அளவு குறையாமல் அண்ணன் மகள் ரோஹிணியையும் பிடிக்கும்… அவர்கள் குடும்பத்தில் ஒரேயொரு ஆண்வாரிசான மித்ரனும், ஒரே பெண்வாரிசான ரோஹிணியும் இணைய வேண்டும், இருவரின் சொத்துக்களும் ஒன்றாக வேண்டும்… இப்போது போல எப்போதும் எல்லாரும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்பதுதானே அவரது ஆசை, லட்சியம் எல்லாமே…

இரவு உணவு முடிந்து அறைக்குள் உறக்கம் வராமல் லைட்டைப் போட்டு அமர்ந்திருக்க, வெளிச்சம் கண்டு அவரது அறைக்கு வந்தாள் பவித்ரா.

 

“அத்தை… டைம் ஆச்சு, இன்னும் தூங்கலையா… கால் வலிக்குதா… நான் நீவி விடட்டுமா…” கேட்டவளை சிறு குற்ற உணர்ச்சியுடன் பார்த்தார்.

 

“இந்தப் பெண் என்ன தவறு செய்தாள்… இவளது வாழ்க்கையை பணயமாக்கி என் பிள்ளைகளின் வாழ்க்கையை மீட்கத் துடிப்பது தவறில்லையா…” மனசாட்சி கேள்வி எழுப்ப இன்னொரு மனது மனசாட்சியைக் குட்டியது.

 

“பாவம், தர்மம் பார்த்தால் நீ நினைத்தது நடக்குமா… அவளை நீயென்ன அப்படியே விட்டுவிடவா போகிறாய்… அவளுக்கும் செய்ய வேண்டியதை செய்யத்தானே போகிறாய்… பிறகு வீணே எதற்கு கலங்குகிறாய்…” என்று கேட்கவும் அவர் மனது தெளிந்தது.

குழப்பத்துடன் ஏதோ யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்ட பவித்ரா, “என்ன அத்தை… உடம்புக்கு ஏதும் முடியலையா…” கரிசனத்துடன் கேட்டாள்.

 

“இ… இல்ல… பவித்ரா… சும்மா ஏதோ யோசனை… நீ போயி தூங்கு…” என்று கூறவும் அவள் சென்றுவிட்டாள்.

 

அவளுக்கும் தனிமை தேவையாய் இருந்தது. மித்ரனின் போட்டோவை எடுத்துக் கொண்டு கட்டிலில் விழுந்தவள் அவனையே ஆசையுடன் பார்த்து மனதில் உள்ளதை எல்லாம் பேசிக் கொண்டிருந்தாள். அதெல்லாம் அவள் மணாளனைச் சென்றடைந்ததோ என்னவோ…

 

எங்கோ கடல் கடந்து, தொலைவில் மதிய உணவருந்திக் கொண்டிருந்த மித்ரனுக்கு புரையேறியது. விருப்பமே இல்லாமல் பசிக்காக உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தவனுக்கு, “நேரத்துக்கு சாப்பிடுங்க… உடம்பைப் பார்த்துக்கங்க…” என்று பவித்ரா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

நாட்கள் அதன் பாட்டில் நகர அதற்குப் பிறகு மித்ரன் வீட்டுத் தொலைபேசியில் அழைக்கவே இல்லை. பவித்ராவும் தினமும் அவன் அழைப்பான் என்று காத்திருப்பதும் பிறகு மனதைத் தேற்றிக் கொள்வதுமாய் இருந்தாள். அத்தையை பார்த்துக் கொள்வது தன் கடமை என்று அவரை கண்ணில் வைத்துத் தாங்கினாள்.

 

காய்ச்சலில் படுத்த மீனாவை குழந்தையைப் போல பரிவோடு அவள் பார்த்துக் கொண்டதைக் கண்டு, “தனக்காய் ஒரு மகள் இருந்தால் இப்படிதான் இருப்பாளோ…” என்று கூட அவருக்குத் தோன்றியது.

 

நேரத்துக்கு மருந்து கொடுத்து அவருக்காய் பிரத்யேகமாய் உணவு செய்து கொடுத்து உறங்காமல் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டவளைக் கண்டு அவருக்கு நெகிழ்ச்சியும் பரிவும் தோன்றியது இயற்கை தானே.

 

அன்னைக்கு அலைபேசியில் மகன் அழைத்தபோது அவர் உறங்கிக் கொண்டிருக்க பவித்ரா தான் எடுத்தாள்.

அவருக்கு காய்ச்சல் என்று கூறியதும் பதறிப் போனவனிடம் தான் பார்த்துக் கொள்வதாக தைரியம் கூறியவள், அதே போல பார்த்துக் கொள்ளவும் செய்கிறாள் என்பதை அடுத்த அழைப்பில் அன்னையின் வாயாலேயே கேட்டு அதிசயித்துப் போனான்.

 

ரோஹிணியும் சோமசுந்தரமும் வீட்டுக்கு வரும்போது மட்டும் மீனா பவித்ராவிடம் சற்று விலகி இருந்தார். மற்ற நேரத்தில் சாதாரணமாய் அவளிடம் பேசி நடந்து கொள்வார். பவித்ராவிடம் அதிகம் உருகி, நெருங்கி வராவிட்டாலும் அவளை கொடும் வார்த்தைகள் எதுவும் சொல்லி வருந்தவிடவில்லை.

 

பவித்ராவும் அதுதான் அவரது இயல்பென்று எதார்த்தமாய் எடுத்துக் கொண்டு வீட்டையும் அவரையும் கவனிப்பதே தன் கடமை என்று அக்கறையோடு நடந்து கொண்டாள்.  அதற்குப் பிறகு அன்னைக்கு அலைபேசும்போது மித்ரன் எதார்த்தமாய் பவித்ராவைப் பற்றி நலம் விசாரிக்க அவரும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

பவித்ராவும் மித்ரன் அழைத்தானா, எப்படி இருக்கிறான் என்று அவரிடம் விசாரித்துக் கொண்டே இருந்தாள். அதைக் காணும்போது தான் செய்தது தவறோ என்று மனதுக்குள் முள்ளொன்று குத்திக் கொண்டே இருந்தது.

 

பத்து நாட்களுக்கு ஒருமுறை கடுகடு முகத்துடன் வீட்டுக்கு வந்து நிற்கும் ரோஹிணி, சோமசுந்தரம் தவிர பவித்ராவின் வாழ்க்கை பிரச்னை இல்லாமல்தான் போய்க்கொண்டிருந்தது.

 

சாவித்திரி மித்ரனின் சின்ன வயது குறும்புகளை எல்லாம் சொல்லும்போது ஆவலுடன் கேட்டிருப்பாள் பவித்ரா. சின்ன வயதில் தன் கண்ணில் பதிந்த  அவனது சாகசமே மனதில் நிறைந்திருக்க அவனை அடுத்து எப்போது காண்போம்… என்று மனது காத்துக் கிடந்தது. தனிமையில் இனிமையாய் அவன் நினைவுகளை சில நேரம் ரசித்தாலும் பலநேரம் அவனைக் காண முடியாத ஏக்கம் தவிப்பாய் மூச்சு முட்ட வைத்தது. நாட்கள் அழகாய் நகர மித்ரன் சென்று மூன்று மாதம் ஆகி விட்டிருந்தது.

இரவு ஏதேதோ பயங்கரமான கனவுகள் பவித்ராவின் உறக்கத்தைக் காபந்து செய்ய மனதில் இனம் புரியாத அச்சத்துடனே  அன்றைய காலை விடிந்தது.

 

அவளது முக சோர்வைக் கண்டு மீனாவே என்னவென்று கேட்டுவிட்டார்.

 

“ராத்திரி ஏதேதோ மோசமான கனவு வந்து தூங்கவே முடியல அத்தை… மனசுக்கு ரொம்ப கஷ்டமாருக்கு…” அவள் சொல்லும்போதே மீனாவின் அலைபேசி சிணுங்க மித்ரனின் எண்ணைக் கண்டதும் ஆவலுடன் எடுத்தார்.

 

“ஹலோ… மித்ரா…”

 

“ச..சாரி… நான் மித்ரனோட பிரண்டு ராகவ் பேசறேன் ஆண்ட்டி…” எதிர்ப்புறத்தில் தயங்கிக் கொண்டே பதில் வரவும், மித்ரனின் அலைபேசியிலிருந்து  ராகவ் ஏன் அழைக்கவேண்டும் என யோசித்தவருக்கு அவனது தயக்கமான பேச்சு பயமாய் வயிற்றை பிசைந்தது.

மித்ரன் பேசுகிறானென்று அவரது பேச்சை ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்த பவித்ராவின் மனது அவரது முகமாற்றத்தைக் கண்டதும் யோசனையானது.

 

“ரா… ராகவ்… மித்ரன் எங்கே… ஏன் உன் குரல் ஒருமாதிரி இருக்கு… என் மகனுக்கு என்னாச்சு…” மீனா படபடத்தார். அவன் தயக்கத்துடன் சொன்ன பதிலில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டவர் அதிர்ச்சியில் மூர்ச்சையானார்.

 

கணநேரம் பிரியாமல்

கண்ணுக்குள் மணியாக

கண்ணாளன் நீயிருந்தாய்…

கரடாக விதி செய்த சதியாலே

கலங்கியதோ கண்களுமே…

காட்சிகள் தான் கலங்கிட

கண்மணியும் துடித்தாளே…

இமைப்பீலி தொடரும்…

Advertisement