Advertisement

இமை – 29
சில வருடங்களுக்குப் பிறகு…
“தியாக்குட்டி… அம்மா எங்கே… நீ ரெடியாகிட்டியா…” கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் மித்ரன்.
“நான் எப்பவோ ரெதியாகித்தேன் டாதி… இந்தப் பவித்தா தான் ரெதியாகவே இல்ல… இன்னும் வேலை செய்துத்து இதுக்கா…” அழகான வெள்ளை கவுனில் தேவதையாய் புறப்பட்டு நின்று சலிப்புடன் பதில் சொன்ன மகளை வாரி எடுத்துக் கொண்ட மித்ரனும் அழகாய் புறப்பட்டிருந்தான். முன்னைவிட கம்பீரமாய் இருந்தான்.
“தியாக்குட்டி, அம்மாவை அப்படி சொல்லக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்…”
“போங்க டாதி, எல்லாதும் பவித்தா தான கூப்பிதுதாங்க… நானும் அப்பதிதான் கூப்பிதுவேன்…”
அவள் தலையில் செல்லமாய் முட்ட, “அச்சோ… என் முதி எல்லாம் கலைக்காதிங்க டாதி…” என்று கண்ணை சுருக்கி உதட்டை சுளித்துக் கொண்டு கொள்ளை அழகோடு பேசிய தியாவுக்கு மூன்று வயதாகிறது.
“தியாக்குட்டி, தாத்தா, பாட்டி எல்லாம் வயசானவங்க… அதனால அம்மாவ பவித்ரான்னு கூப்பிடறாங்க… நீயும் அப்படி கூப்பிட்டா உன்னை எல்லாரும் பேட் கேர்ள்னு சொல்ல மாட்டாங்களா…” தந்தை சொல்லவும் குட்டி விரலை கன்னத்தில் வைத்து யோசித்தது முயல் குட்டி.
“பேத்கேள் சொன்னா எனக்குப் பிதிக்காதே…” தலையை சாய்த்துக் கூறியவளிடம், “நாம இப்போ ஒரு பங்க்ஷன் போறோம்… அங்கே நிறையப் பேரு வருவாங்க… தியாக்குட்டிய எல்லாரும் குட் கேர்ள் சொல்லணுமா, பேட் கேர்ள் சொல்லனுமா…” என்றான் மகளின் மனமறிந்து.
“சதி டாதி… நான் பவித்தாவ மம்மி கூப்பிததேன்… அப்ப குத் கேள் சொல்லுவாங்களா…” சமத்தாய் கேட்ட மகளின் கன்னத்தில் முத்தமிட்டவன், “வெரி குட் கேர்ள் சொல்லுவாங்க செல்லம்…” என்று இறக்கிவிட்டான்.
மாடியில் காயப் போட்ட துணிகளை எடுத்துவந்த பவித்ராவை செல்லமாய் முறைத்தவன், “எப்பவும் உனக்கு வேலை தானா பவி… சீக்கிரம் ரெடியாகு மா…” என்றான்.
“ம்ம்… பத்தே நிமிஷங்க… அப்பாவும் மகளும் கொஞ்சிட்டு இருங்க… சீக்கிரம் வந்திடறேன்…” என்றவள், வேகமாய் புறப்படத் தொடங்கினாள்.
“என்னங்க, இந்த சேலை மடிப்பை கொஞ்சம் பிடிச்சு விடுங்களேன்…” பவித்ரா பட்டுசேலையில் வந்து நிற்க, “நான் பிதிச்சு விதறேன் டாதி…” என்று வேகமாய் குனிந்து சேலையை சரி செய்ய முயன்றாள் தியா.
“தியாக்குட்டி… நீ இன்னும் கொஞ்சம் பெருசாகிட்டு சரி பண்ணலாம்… இப்போ டாடி பண்ணறேன்…” என்றவன் குனிந்து மடிப்பை சரி பண்ணிக் கொடுத்தான். அவனது பார்வை அவளது முகத்தில் நிலைக்க, “ஏதோ ஒண்ணு குறையுதே…” என்று அவள் முகத்தையே பார்க்க,
“என்னங்க குறையுது…” என்றாள் பவித்ரா.
“ஒருநிமிஷம் இங்கே வா…” என்று உடை மாற்றுவதற்காய் இருந்த குட்டி அறைக்கு அவளை அழைத்துச் சென்றவன், அவளை வேகமாய் அணைத்து இதழில் அழுத்தமாய் முத்தமிட்டு விடுவித்தான்.
“இதுதான் குறையுது செல்லம்…” என்று குறும்பாய் சிரித்தவனை, “போடா…” என்று கன்னத்தில் மெல்ல அடிக்க, “அய்… டாதிய பவித்தா அடிச்சுத்தா…” என்று பின்னில் இருந்து தியா குரல் கொடுத்தாள்.
“அம்மாவ பாரு செல்லம், அப்பாவுக்கு வலிக்குது…” என்று உதட்டைப் பிதுக்க அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“இப்ப வலி போயிதுச்சா டாதி…” என்று தலையை ஆட்டிக் கேட்க, “இன்னும் கொஞ்சம் வலிக்குது… உன் அம்மாவை ஒரு உம்மா கொடுக்க சொல்லு…” என்றான் அந்தக் கள்ளன்.
“என்னால முடியாது…” என்று சிலுப்பிக் கொண்டு வெளியே சென்றவளைப் பிடித்துக் கொண்டு, “கொடுக்க சொல்லுடா தியாக்குட்டி…” என்று அவளை சிபாரிசுக்கு அழைக்க, “டாதி பாவம் தானே… உம்மா கொதுத்துது பவித்தா…” என்றாள் பெரிய மனுஷியாய்.
பவித்ரா முறைக்க மித்ரன் உல்லாசமாய் கண்ணடித்தான். அவளுக்கு அருகில் கன்னத்தை காட்ட, இதழைப் பதித்தவள் அப்படியே மெல்லக் கடித்தும் வைத்தாள்.
“ஆ… ராட்ஷசி… உம்மா கேட்டா கடிச்சு வைக்குறா பாரு… டிராகுலா…” என்றவனை நோக்கி “ஈஈ” என்று பழிப்பு காட்டிவிட்டு வெளியே சென்றவளை ரசனையுடன் நோக்கி நின்றான் மித்ரன். அவர்களை நோக்கி கைகொட்டி ஆனந்தமாய் சிரித்துக் கொண்டிருந்தாள் தியா.
“சரி, அம்மா வரட்டும்… நாம கீழே போகலாமா…” என்றவன் அவளுடன் கீழே இறங்கினான்.
புறப்பட்டு ஹாலில் அமர்ந்து பேப்பரில் கண்ணைப் பதித்திருந்த ராசிநாதன் நிமிர்ந்தார். பூஜையைறையில் மீனலோசனி பட்டுசேலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு சாமிக்கு பூ வைத்துக் கொண்டிருந்தார். “பாத்தி… எனக்கும் குங்கும் வச்சுவிடு…” என்றாள் தியா.
“வாடி செல்லம்…” என்றவர் அவளுக்கு அழகாய் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டார்.
“பவித்ரா எங்கேப்பா… கிளம்பலாமா…” கேட்டுக் கொண்டே பேத்தியை இடுப்பில் வைத்துக் கொண்டு வந்தார்.
பட்டுசேலை சரசரக்க மாடிப் படியில் வேகமாய் இறங்கி வந்தவளைக் கண்டு புன்னகைத்தவர், “மெதுவா இறங்கு பவித்ரா… இந்தா, இந்தப் பூவை வெச்சுக்க…” என்று அழகாய் தொடுத்த மல்லிகை சரத்தை எடுத்து நீட்ட வாங்கிக் கொண்டாள்.
“பவித்தா, எனக்கும் பூ வேணும்…” மகள் சொல்ல புன்னகையுடன் அவளை வாங்கிக் கொண்டு அவள் தலையில் சிறிது வைத்துவிட்டாள். அனைவரும் கிளம்ப மித்ரனின் புதிய பஜேரோ தயாராய் நின்றது.
மித்ரனின் அருகில் பவித்ரா அமர, பாட்டி தாத்தாவுடன் தியா பின்னில் அமர்ந்து கொண்டாள். தனக்கு அருகில் அவள்தான் அமரவேண்டும் என்பது மித்ரனின் கட்டளை ஆதலால் அவளால் மறுக்க முடியவில்லை.
அனைவரும் ரோஹிணி குழந்தையின் முதலாவது பிறந்தநாள் விழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். கல்யாணம் முடிந்து ரோஹிணியும் ராகவுடன் வெளிநாடு சென்றுவிட, அடுத்து பிரசவத்துக்கும் அவள் அங்கேயே தங்கிவிட, சுந்தரியும் சோமுவும் மகளைப் பார்க்க அங்கே சென்று வந்தனர். இப்போது முதல் பிறந்த நாளை இங்கே கொண்டாடுவதற்காய் இந்தியா வந்திருந்தனர்.
ராகவ் வெளிநாட்டில் ஒரு கார்மெண்ட்ஸ் ஷோரூம் நடத்திக் கொண்டிருக்க மித்ரனும் பார்ட்னராய் இருந்தான்.
சோமுவின் சென்னை கார்மெண்ட்சில் இருந்து அங்கே ஏற்றுமதி செய்து வந்தனர். ஊருக்கு வந்தால் தங்குவதற்கு வசதியாய் மித்ரனின் வீட்டுக்கு அருகில் ராகவ் ஒரு வீட்டை சொந்தமாய் வாங்கி இருந்தான். அங்கேதான் இப்போது அனைவரும் போய்க் கொண்டிருந்தனர்.
பழமையான அந்த வீடு புதுமையாய் அலங்கரிக்கப் பட்டிருக்க அதை வியப்புடன் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தனர். மிகவும் நெருங்கிய சொந்தங்களும் அக்கம் பக்கத்தினர் மட்டுமே.
சுண்டினால் ரத்தம் வரும் போல நிறத்துடன் இருந்த குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு முகம் புன்னகையில் மலர பட்டுசேலைக்கு போட்டியிடும் பளபளப்புடன்  நின்று கொண்டிருந்தாள் ரோஹிணி. அவளுக்கு அருகில் கோட் சூட்டுடன் நின்று கொண்டிருந்த ராகவ் இவர்களைக் கண்டதும் வாயெல்லாம் பல்லாக ஓடி வந்து வரவேற்றான். ராகவின் பெற்றோரும் இவர்களைக் கண்டதும் வரவேற்க வந்தனர்.
அங்கங்கே விருந்தினர்கள் அமர்ந்திருக்க அவர்களை சுந்தரியும், சோமுவும் கவனித்துக் கொண்டிருந்தனர். மித்ரன் ராகவிடம் பேசிக் கொண்டிருக்க அவன் கையில் இருந்த குழந்தையை தொட்டுப் பார்த்து சந்தோஷித்துக் கொண்டிருந்தாள் தியா. ஒரு ஓரமாய் கீதா, ராதாவுடன் அமர்ந்திருந்த கோமதி பவித்ராவைக் கண்டதும் சிரிக்க அவர்களிடம் சென்று பேசிக் கொண்டிருந்தாள்.
“மாமா வரலியா அத்தை…”
“வந்திருவார் மா, எங்களை முன்னாடி போக சொன்னார்…”
“ம்ம்… கல்யாண வேலை எல்லாம் எப்படிப் போகுது அத்தை…”
“எல்லாம் நல்லபடியா போயிட்டு இருக்கு பவித்ரா… அதும் முடிஞ்சுட்டா எங்களுக்கு நிம்மதி…” என்றார்.
“ம்ம், எதாச்சும் வேணும்னா கேக்கத் தயங்க வேண்டாம்…” என்றவள், “என்ன கல்யாணப் பொண்ணுங்களா… எப்படி இருக்கீங்க… அடுத்து நம்ம வீட்டு விசேஷம்தான்…”
அவள் சொல்லவும் அவர்கள் முகத்தில் நாணத்தின் புன்னகை. சிறிதுநேரத்தில் மாமா குணசேகரும் வந்துவிட எல்லாரும் குடும்பமாய் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அழகாய் புறப்பட்டு நின்ற ரோஹிணி சந்தோஷத்தில் சற்று குண்டாகி இருந்தாள். தியாவைக் கையில் வாங்கிக் கொண்டவள், “தியாக்குட்டி… தம்பிப்பாப்பா, யாரை மாதிரி இருக்கான்னு சொல்லு…” என்றாள் குழந்தையை காட்டி.
“தம்பிப் பாப்பா, என்ன மாதிதி அழகா இதுக்கான்…” அவள் சொல்லவும் சிரித்தனர்.
அடுத்து கேக் வெட்டி எல்லாரும் கொண்டாட்டத்தில் இறங்க, குழந்தைக்கு பரிசு கொடுத்து வாழ்த்தினர். ராகவின் பெற்றோர் மிகவும் மென்மையாய் பழகினர். அவர்களுக்கு ரோஹிணி ஒவ்வொன்றும் கவனித்து செய்வதைக் கண்டு சுந்தரிக்கு சந்தோஷமாய் இருந்தது. உறவினர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். பவித்ரா பற்றி முன்னமே சொல்லியிருக்கிறாள் என்பது அவர்களின் மதிப்பான பேச்சிலேயே புரிந்தது.
தியாவுக்கு குழந்தையை விட்டுப் பிரியவே மனமில்லை. அதன் பிஞ்சுக் கன்னங்களையும், குட்டி விரல்களையும் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
“டாதி… தம்பிப் பாப்பா நொம்ப அழகா இதுக்கான்ல… இவனை நம்ம வீத்துக்கு கொந்து போயிதலாமா…” ஆசையோடு கேட்டாள்.
“ம்ஹூம்… நான் தர மாட்டேன் பா… உனக்கு தம்பிப் பாப்பா வேணும்னா உன் அம்மாவைக் கேளு…” என்று ஒரு பிட்டைப் போட்டு நமட்டு சிரிப்பு சிரித்தாள் ரோஹிணி.
“பவி…ம்மா… எனக்கு தம்பிப் பாப்பா வேணும்… குது…” என்று கேட்கத் தொடங்க பவித்ராவின் முகத்தில் நாணம் படர்ந்தது. பவித்ரா என்று சொல்லத் தொடங்கி ம்மா என்று மாற்றி விட்ட மகளை மெச்சுதலாய் பார்த்த  மித்ரன், பவித்ராவின் நாணத்தை ரசித்துக் கொண்டே,
“என்ன பவி… ஸ்பெஷல் பாயசம் குடிச்சிடலாமா…” என்று காதுக்குள் கிசுகிசுக்க அவள் நாணத்துடன் அவனது கையைப் பிடித்துக் கிள்ளி வைக்க, அது அங்கே அடுத்து நின்ற சுந்தரியின் காதில் விழுந்தது. மித்ரனிடம், “பாயாசம் எடுத்திட்டு வரட்டுமா மித்ரா…” அவர் எதார்த்தமாய் கேட்கவும், “இ.. இல்ல வேண்டாம் அத்தை…” என்று அவன் திணற பவித்ராவுக்கு சிரிப்பாய் வந்தது.
“சிரிக்கவா செய்யறே… வீட்டுக்கு வா… இன்னைக்கு இருக்கு…” என்பது போல் பார்த்தான் அவன். விசேஷம் முடிந்து அனைவரும் இரவு உணவு வரை நிறைவோடு பேசி சந்தோஷித்து, மழை வருவது போல் தோன்றவே வீட்டுக்குக் கிளம்பினர்.
தியா களைப்பில் வீட்டுக்கு வந்ததும் உறங்கிவிட அவளுக்கு அருகில் எதோ ஒரு மேகசினை புரட்டிக் கொண்டு உறங்காமல் காத்திருந்தான் மித்ரன். மழைக்காற்று சில்லென்று வீசிக் கொண்டிருக்க திறந்திருந்த ஜன்னலின் அருகில் சென்று நின்றாள் பவித்ரா. முகத்தில் மோதிய காற்று உடலுக்குள் ஊடுருவதை சுகமாய் உணர்ந்தவள் கண்ணை மூடி நிற்க, அவளுக்குப் பின்னில் வந்து அணைத்துக் கொண்டவன் அவள் தோளில் முகம் பதிக்க கூச்சத்துடன் சிலிர்த்து நின்றாள் பவித்ரா.
அவளை சிரிப்புடன் நோக்கியவன், எத்தனை வருஷம் ஆனாலும் உன்னோட கூச்சம் போகவே இல்லியே பவி…” அவள் நாணத்துடன் அவன் தோளில் சாய்ந்து கொள்ள, சுகமான சாரலைத் தொடங்கி இருந்தது மழை.
“இப்படி நீ வெக்கப் படறதைப் பார்த்தா எனக்கு ஸ்பெஷல் பாயாசம் உடனே குடிக்கணும்னு தோணுதே…” என்றவனை செல்லமாய் நெஞ்சில் குத்திவிட்டு ஜன்னலை சாத்தியவள் கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“ச்சீ… நீ ரொம்ப மோசம்டா மித்து… எப்பப் பார்த்தாலும் பேட்பாய் மாதிரியே பேசறே…” என்றவளின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டவன், “பொண்டாட்டிகிட்ட பேடா நடந்துக்காதவனை பேடின்னு சொல்லிடுவாங்க தங்கம்…” என்று சொல்லிக்கொண்டே அவள் கையில் விரலால் கோலமிட்டுக் கொண்டிருந்தான்.
உறங்கும் மகளின் கலைந்திருந்த தலை முடியை ஒதுக்கி விட்டவள் அமைதியாய் ஏதோ யோசித்துக் கொண்டிருக்க ஏறிட்டுப் பார்த்தான்.
“என்ன பவி சைலன்ட் ஆகிட்டே…”
“ஹூம்… எனக்கு இன்னும் பிரமிப்பாவே இருக்கு… என் வாழ்க்கையா இத்தனை சந்தோஷமாருக்கு… எனக்கே எனக்குன்னு ஒரு குடும்பம், ஏதோ மேஜிக் நடந்த போல என்னைச் சுத்தி எல்லாருமே அன்பா, சந்தோஷமா… இதெல்லாம் கனவுதானோன்னு சில நேரம் டவுட்டு கூட வந்திடுது…” திகைப்புடன் சொன்னவளை நோக்கி சிரித்தான்.
“இது கனவு இல்ல பவி… உன் அன்பால எல்லாமே அன்பா மாறிப் போன அதிசயம்… நல்லது நினைக்குறவங்களுக்கு நல்லதே நடக்கும்னு சொல்லுவாங்க… உன் மனசோட நன்மை தான் சுத்தி உள்ளவங்களை நல்லதா யோசிக்க வச்சிருக்கு… நீ என் வாழ்க்கையில் வந்த தேவதைம்மா…” சொல்லிக் கொண்டே உள்ளங்கையில் இதழ் பதித்தான்.
“போங்க… நீங்க எப்பவுமே என்னை உயர்வா தான் சொல்லுவீங்க.. உங்களால தான் என் வாழ்க்கையே சந்தோஷமா மாறிடுச்சு… நீங்கதான் என் வாழ்க்கையில் சந்தோஷத்தைக் கொண்டு வந்த மேஜிக் மேன்… உங்களை என் கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துப்பேன்… நீங்கதான் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய பொக்கிஷம்…” உணர்ச்சிவசப் பட்டு குரல் கரகரக்க சொன்னவளை எழுந்து மெல்ல அணைத்துக் கொண்டான்.
அவள் உடல் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. அவனது அணைப்பில் அந்த நடுக்கம் மறைந்து இயல்பானாள். அவளது முகத்துக்கு நேராய் கண்ணோடு கண் பார்த்தவன், “பவி… நீ சொன்னது சரிதான்… என்னை நீ பொக்கிஷம் போலதான் பார்த்துக்கறே… என்னோட வலியை உன் வலியா உணர்ந்து எந்த சூழ்நிலையிலும் என்னை வெறுக்காம கண்ணுக்கு இமை போலப் பத்திரமா பார்த்துக்கறே… நீ என் கண்ணுன்னு சொல்ல மாட்டேன்… கண்ணுல தூசி கூட விழாமப் பாதுகாக்கும் இமைம்மா…” என்றவனின் குரலும் சந்தோஷத்தில் தழுதழுத்தது.
அவனது நெஞ்சில் முகம் பதித்தவளின் இதயத்தில் என்னவென்று சொல்ல முடியா அமைதி இருந்தது. மனம் அவன் மீது கொண்ட அன்பில் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்தது. அவளை இதமாய் அணைத்து மெல்ல நெற்றியில் முத்தமிட்டவன் மனதும் அப்படியே…
கண்களுக்குள் காட்சியாய்
கலந்துவிட்ட உன்னைக்
கரைந்திடாமல் தடுக்கவே
கரையிடுகிறேன் கண்மையால்!!!
 
மெல்லிய குரலில் அவன் முகம் நோக்கி சொன்னவளை நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டவன்,
 
இதமாய் இதயம் தொட்ட
மழைச்சாரல் நீயடி…
எனக்காய் மனம் வருடிய
மயில்பீலி நீயடி…
கண்ணுக்குக் காவலான
என் இமைப்பீலி நீயடி…
 
அவனது குரலில் காதல் கலந்து ஒலிக்க புன்னகையுடன் நெஞ்சில் முகம் புதைத்தாள் அவன் இமையானவள்.
———————————–சுபம்——————————–

Advertisement