Advertisement

இமை – 28
“மித்ரா…” மகிழ்ச்சியோடு வேகமாய் சென்று நண்பனை அணைத்துக் கொண்டான் ராகவ். ரோஹிணி மித்ரனைக் கண்டு கொள்ளாமல் பவித்ராவை நோக்கி சிரித்தவள் ராசிநாதன் நிற்பதைக் கண்டதும் அவரிடம் சென்றாள். ரோஹிணி ஜோடியுடன் வருவேன் என்று கூறியது நினைவில் வர, “இவர்தான் அந்த ஜோடியா… ம்ம் சூப்பர் பொருத்தம் தான்…” என பவித்ரா நினைத்துக் கொண்டாள்.
சோமுவின் முகத்தில் பழைய குரோதம் குறைந்திருக்க, “என் மகளையா வேண்டாம் என்றீர்கள்… உங்களைவிட நல்ல வசதியும், அழகும் உள்ள மருமகன் எங்களுக்கு கிடைத்துவிட்டான்…” என்ற பெருமிதப் பார்வையை மித்ரனிடம் வீசிவிட்டு ராசிநாதனிடம் சென்றார்.
சுந்தரி எப்போதும் போல அனைவரையும் புன்னகையுடன் நலம் விசாரிக்க பவித்ராவின் மலர்ந்த முகத்தைக் கண்டதும் சந்தோஷித்தார்.
ரோஹிணியின் கையைப் பிடித்துக் கொண்ட மீனா, “என்னோட பேச மாட்டியா ரோஹிம்மா… அத்தையை மன்னிக்க மாட்டியா…” என்றார் கலங்கிய கண்களுடன். அவள் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொள்ள, சுந்தரிதான் பேசினார்.
“விடுங்க அண்ணி… அவ சுபாவம் உங்களுக்குத் தெரியாதா… கொஞ்சநாள் இப்படிதான் மூஞ்சியத் தூக்கி வச்சிருப்பா… அப்புறம் எல்லாத்தையும் மறந்து சரியாகிடுவா… அண்ணா திரும்பி வந்ததுல எல்லாரும் சந்தோஷமா இருக்கும்போது எதுக்கு தேவையில்லாம கண்கலங்கிட்டு…” என்றார் சுந்தரி.
“ம்ம்…” என்றவர் கண்ணைத் துடைத்துக் கொள்ள ரோஹிணியும் சோமுவும் ராசிநாதனிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர் வீட்டை விட்டுச் சென்ற காரணத்தையும், திரும்பி வந்த கதையையும் சுருக்கமாய் சொல்ல பவியின் அப்பா மரணத்துக்குக் காரணமான தன்னை அவள் மன்னித்ததைப் பற்றி கூறும்போது கலங்கி தழுதழுத்தார். அதைக் கேட்ட சோமுவுக்குமே மனம் கலங்கிவிட்டது.
“இந்த பவித்ரா, என்ன ஒரு சுயநலமில்லாத பெண்… எல்லோரையும் இவளால் நேசிக்க மட்டும்தான் முடியுமா… இவளுக்கு எத்தனை பெரிய துரோகத்தை செய்ய இருந்தோம்… நல்லவேளை எல்லாம் சரியாகிவிட்டது…” அவர் யோசித்துக் கொண்டிருக்க, ரோஹிணியின் மனதும் பவித்ராவை தன்னோடு ஒப்பிட்டுப் பார்த்து சிணுங்கியது.
“ச்சே… மனதால் மேலும் மேலும் உயர்ந்து கொண்டு போகும் பவித்ரா எங்கே, எதற்கெடுத்தாலும் கோபம், பிடிவாதம் என்றிருக்கும் நாம் எங்கே… அவளைப் போல இருக்க முடியாவிட்டாலும் சில விஷயத்திலாவது விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும்…” என்று மனதில் தீர்மானித்துக் கொண்டாள்.
ராகவிடம் பயண விசேஷங்களைக் கேட்டறிந்த மித்ரன் ரோஹிணியைப் பற்றிக் கேட்டான்.
“சொல்லறேன் மித்ரா… இப்போ எனக்கு பசிக்குது… அதும் சமையல் ஸ்மெல் வேற தூக்குது… சாப்பிட்டு சாவகாசமா உக்கார்ந்து பேசுவோமே…” எனவும்,
“சரிடா…” என்ற மித்ரன், “ராகி… இங்க வாங்களேன்…” ரோஹிணி அவனை செல்லமாய் அழைப்பதைக் கேட்டு “ங்கே…” என்று விழித்துக் கொண்டிருந்தான்.
“என்னது ராகியா… ஹஹா…” என்று சிரித்துக் கொள்ள, அவனை தோளில் தட்டிவிட்டு ரோஹிணியிடம் சென்றான் ராகவ். அவனை ராசிநாதனிடம் அறிமுகப்படுத்தவே அழைத்திருந்தாள். அதற்குள் பவித்ரா எல்லாருக்கும் ஜூஸ் கலக்கிக் கொண்டு வர அதை வாங்கிக் குடித்தனர். எல்லோரும் பேசிக் கொண்டிருந்ததால் வீடே கலகலவென்று சந்தோஷமாய் இருந்தது.
“இன்னைக்கு பவித்ராவுக்குப் பிறந்தநாள்…” ராசிநாதன் கூறவும் அவள் முகத்தில் புன்முறுவல் பூக்க, ரோஹிணி வாழ்த்துக் கூறினாள்.
“அத்தை, மாமாகிட்டே ஆசிர்வாதம் வாங்கிக்கோம்மா…” ராசிநாதன் சொல்லவும், சோமு என்ன சொல்லுவாரோ என்ற தயக்கத்துடன் அவள் நிற்க “சுந்தரி, இங்க வா…” என்று மனைவியை அழைத்தவர், “இன்னைக்கு பவித்ரா பிறந்தநாளாம்… ஆசிர்வாதம் பண்ணலாம்…” என்றார்.
கணவனைத் திகைப்புடன் நோக்கிக் கொண்டே, “ஹேய் பர்த்டே பேபி… சொல்லவே இல்ல…” பவித்ராவிடம் கேட்க, சோமுவின் வார்த்தையில் அதிசயித்து நின்றவள், புன்னகையுடன் அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள். “சந்தோஷமா, நல்லாருக்கணும் மா… சீக்கிரமே ஒரு பேரப் பிள்ளையைப் பெத்து எங்க கைல கொடு…” சுந்தரி வாழ்த்தவும் நாணத்துடன் தலை குனிந்தாள்.
“அச்சோ, நான் பரிசு எதும் கொண்டு வரலியே…” அவர் வருத்தப்படவும், “இதைக் கொடுங்கம்மா…” என்று தன் கையில் கிடந்த தங்க பிரேஸ்லெட்டை அவிழ்த்துக் கொடுத்தாள் ரோஹிணி. மகளின் செயலில் மனம் கனிந்தவர் அதை வாங்கி பவித்ராவுக்கு கொடுக்கப் போக, “அச்சோ… இதெல்லாம் எதுக்குமா… அப்பாவும், நீங்களும் என்னை ஆசிர்வாதம் பண்ணினதே எனக்கு கொடுத்த பெரிய பரிசுதான்…” என்று மறுத்துக் கொண்டே கடைக் கண்ணில் சோமுவைப் பார்க்க அவர் முகத்தில் வருத்தம் இருந்ததே தவிர கோபமோ, வெறுப்போ காணவில்லை.
“பவித்ரா… வாங்கிக்க… அம்மா ஆசையா கொடுக்கிறாங்க… அதும் பிறந்தநாளுக்கு யாரும் பரிசு கொடுத்தா மறுக்கக் கூடாது…” என்று கூறிய ரோஹிணியை எல்லாரும் அதிசயமாய் பார்க்க, “வாங்கிக்க மா…” என்றார் சோமு. “உன்னை எதுக்கு கெஞ்சிட்டு…” என்ற சுந்தரி அவள் கையைப் பிடித்து பிரேஸ்லெட்டை போட்டுவிட கண் கலங்கி நின்றவள் இப்போது மறுக்கவில்லை.
“சாரி சிஸ்டர்… நான் அப்புறம் கிப்ட் தரேன்…” என்ற ராகவ், “விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே…” என்று வாழ்த்திக் கொண்டே கை நீட்டினான்.
தயக்கத்துடன் நின்றவளை மித்ரன் சிரிப்புடன் பார்க்க, “தேங்க்ஸ் அண்ணா…” என்று கை குலுக்கினாள் அவள்.
“சரி, பிறந்தநாள் விருந்து தான் கமகமக்குதா… நம்ம ஊரு விருந்து சாப்பிட்டு ரொம்ப வருஷம் ஆச்சு… மணமே பசியை அதிகமாக்குது… சீக்கிரம் சாப்பாடு போடு தங்கச்சி…” ராகவ் பறக்கவும் அனைவரும் சிரித்தனர்.
“இதோ எடுத்து வைக்குறேன் அண்ணா… எல்லாரும் சாப்பிட வாங்க…” என்றவள் வேகமாய் அடுக்களைக்கு செல்ல “வாங்க தம்பி…” என்று ராகவை அழைத்தார் மீனா.
அனைவரும் சாப்பிட அமர ராகவின் அருகில் ரோஹிணி அமர்ந்திருந்தாள். அவர்கள் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டு ரகசியமாய் சிரிக்கவும், அதைக் கண்ட பெரியவர்களின் மனதோடு மித்ரனின் மனதும் நிறைந்தது. அவளது வாழ்க்கை சந்தோஷமாய் அமைய வேண்டுமே என்ற தவிப்பு மாறத் தொடங்கியது. “ஆஹா, ஓஹோ…” என்று பவித்ராவைப் பாராட்டிக் கொண்டே ராகவ் ரசித்து சாப்பிட்டான்.
“இதென்னடா சமையல்… பவி ஒருநாள் காரக்குழம்பு வச்சா பாரு… ஆஹா…” சொல்லிக் கொண்டே அவளை ஓரக்கண்ணால் பார்க்க, முகம் சிவந்தவள், கண்ணை உருட்டி அவனை சொல்ல வேண்டாம் என்பது போல் பார்க்க அதைக் கண்டு கொள்ளாமல், “அந்த இனிப்பு இன்னும் நாக்குலயே இருக்கு…” கண்ணை மூடி ரசனையோடு சொல்லவும், “என்னடா சொல்லறே… காரக் குழம்பு இனிப்பாவா…” ராகவ் கேட்பதற்குள் பவித்ரா அடுக்களைக்கு ஓடிவிட்டாள்.
“ச்சே… அந்த சுவை இன்னும் அப்படியே இருக்குன்னு சொல்ல வந்தேன்…” என்று மித்து சமாளிக்க, “அப்ப எனக்கும் அந்த காரக் குழம்பு சாப்பிடணுமே…” என்றான் ஆவலுடன். அடுக்களையில் நின்ற பவித்ரா தலையில் அடித்துக் கொள்ள, “ம்ஹூம்… அது எனக்கு மட்டுமே ஸ்பெஷல்…” என்று கண்ணடிக்கவும், ஏதோ ரகசிய வார்த்தை போல என்று புரிந்து கொண்ட ராகவ், “ஓ… ஹஹா…” என்று சிரித்தான். பெரியவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்ததால் இதை கவனிக்கவில்லை. அதைக் கேட்ட ரோஹிணியின் முகத்திலும் புன்னகை.
ரோஹிணிக்கும் ராகவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாய் கூறிய சோமு, இப்போது நிச்சயத்தை முடித்துவிட்டு ரோஹிணியின் படிப்பு முடிய இன்னும் சில மாதமே இருப்பதால் முடிந்ததும் கல்யாணம் வைத்துக் கொள்வதாகக் கூறிக் கொண்டிருந்தார்.
சாப்பாட்டின் இறுதியில் பாயாசம் கொடுக்கவும், “வெரி டேஸ்ட்டி… எனக்கு இன்னொரு கப் கொடுங்க சிஸ்…” என்று மீண்டும் வாங்கிக் குடித்தான் ராகவ்.
“மித்து… உனக்கு…” நண்பனிடம் கேட்கவும், “ஹூம்… இந்தப் பாயாசம் எப்பவும் தானே குடிக்கறோம்… நான் எதிர்பார்க்கற பாயாசமே வேறயாச்சே…” பவித்ராவை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே சொல்ல, அவனது பார்வையில் அதைப் புரிந்து கொண்ட பவித்ரா நாணத்துடன் கடந்து விட்டாள்.
சாப்பிட்டு முடித்து ஓய்வாக அமர்ந்ததும், மித்ரன் ராகவை அவனது அறைக்கு அழைத்துச் சென்றான். மீனாவின் அறையில் சுந்தரி, ரோஹிணியின் கல்யாணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, ராசிநாதனும், சோமுவும் அவர்களுடைய தொழிலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். பவித்ரா அடுக்களையில் சாவித்திரிக்கு உதவிக் கொண்டிருக்க அவளை வியப்புடன் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தாள் ரோஹிணி.
“எப்படி பவித்ரா, எல்லார் தப்பையும் மன்னிச்சு அவங்களை நேசிக்க மட்டுமே முடியுது… உனக்கு கோபமே வராதா…” என்றவளைப் புன்னகையுடன் நோக்கினாள்.
“நான் மன்னிச்சதும், நேசிக்கறதும் என் சொந்தங்களை… சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப் படுத்திப் பார்க்கறது தான்னு சின்ன வயசுல என் அம்மா சொல்லுவாங்க… ஒருத்தர் செய்த தப்பை மனசுக்குள்ளே வச்சிட்டு இருக்காம மன்னிச்சிட்டா, நமக்கும் சந்தோஷம், அவங்களுக்கும் சந்தோஷம்… அதைத் தான் நானும் பண்ணிட்டு இருக்கேன்…” என்றவளைப் பெருமையுடன் பார்த்தாள் ரோஹிணி.
“நீ சொன்னது ரொம்ப சரி பவித்ரா… உன்னைப் போல இருக்க முடியலைன்னாலும், இருக்கறதுக்கு கொஞ்சம் முயற்சியாவது பண்ணிப் பார்க்கறேன்… அத்தைகிட்டே பேசிட்டு வந்திடறேன்…” என்று சென்றவளை சாவித்திரி அதிசயமாய் பார்த்தார். புன்னகையுடன் பவித்ரா வேலையைத் தொடர்ந்தாள்.
ராகவ், மித்ரனிடம் ரோஹிணியுடன் மலர்ந்த நட்பு எப்படி காதலாய் மாறியது என்பதைக் கூறி முடிக்கவும் மித்துவின் மனதில் முதலில் தோன்றிய ஆச்சர்யம் முடிவில் சந்தோஷமாய் இருந்தது. அதற்குள் ரோஹிணி, ராகவின் கல்யாண விஷயம் பேசுவதற்காய் அவர்களைக் கீழே வருமாறு சோமு அழைக்கவும் வந்தனர்.
இப்போது மித்ரனின் காலில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நன்றாய் நடக்க முடிந்தது. வேகமாய் நடக்கும்போது மட்டும் சிறு வலி இருந்தது. அதற்குப் பிறகு எப்போது கல்யாணம், எங்கே, எப்படி என்று எல்லாம் பேசிக் கொண்டிருக்க நேரம் நகர்ந்து விட்டது.
இரவு உணவு முடிந்து அனைவரும் உறங்கப் போகும்வரை பவித்ராவுக்கு வேலை இருந்தது. அவள் வரும்வரை மித்ரனும், ராகவும் பேசிக் கொண்டிருந்தனர். பவித்ரா வரவும் குட்நைட் சொல்லி நண்பன் கிளம்ப, சோர்வுடன் கட்டிலில் அமர்ந்தவளை கரிசனத்தோடு நோக்கியவன், “ரொம்ப டயர்டா இருக்கா பவி…” என்றான்.
“அதெல்லாம் இல்லங்க… சரி, இவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இருந்த பழக்கம் எப்படி கல்யாணம் வரை வந்துச்சு… அதை முதல்ல சொல்லுங்க…” ஆவலுடன் கேட்டவளை நோக்கிப் புன்னகைத்தவன், “அதெல்லாம் நாளைக்கு சொல்லறேன்… நீ இன்னைக்கு ரெஸ்ட் எடு…” என்றான்.
“என்னது ரெஸ்ட் எடுக்கறதா… ரொம்ப நாளா பாயசம் கேக்கறிங்களே… சரி, இன்னைக்குக் கொடுக்கலாம்னு நினைச்சேன்… வேண்டாம்னா வேண்டாம்…” என்று அவள் உதட்டுக்குள்ளேயே முனங்கவும் அவனது முகம் ஆயிரம் சூரிய, சந்திரன் ஒன்றாய் உதித்தது போல் பளிச்சிட்டது.
“ப…வி… என்ன சொன்னே…” திகைப்புடன் கேட்க, “நான் ஒண்ணும் சொல்லலையே…” சொல்லிக் கொண்டு அமைதியாய் படுத்துக் கொண்டவளைப் பாவமாய் பார்த்தவன், “இல்ல… நீ ஏதோ சொன்னியே… இன்னைக்குப் பாயாசம் கொடுக்கலாம்னு நினைச்சேன்னு…”
“அதான் காதுல விழுந்துச்சுல்ல… அப்புறம் எதுக்கு மறுபடி கேக்கறிங்க…” சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள். வேகமாய் அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன், “அப்படின்னா, உனக்கு ஓகே வா…” என்றான் ஆவலுடன்.
“சரியான மண்டூஸ்… கைல பாயாசத்தைக் கொடுத்தாலும், குடிக்கலாமா, வேண்டாமான்னு ஆராய்ச்சி பண்ணிட்டு…” கள்ளச் சிரிப்புடன் சொல்லவும், அவளை அப்படியே இழுத்து நெஞ்சில் போட்டுக் கொண்டான். அவளது முகத்துக்கு நேராக அவனது முகம் இருக்க, அந்தக் கண்களுக்குள் காதலுடன் ஆழ்ந்து நோக்கியவனின் பார்வை வீச்சைத் தாங்காமல் குழைந்து அவள் வாசம் செய்யும் அவன் இதயத்திலேயே முகம் ஒளித்தாள்.
“லைட் ஆப் பண்ணுங்க…” முனங்கியவளைக் கண்டு கொள்ளாமல், “வெளிச்சமாவே இருக்கட்டும்… அப்பத்தான் சரியா எண்ண முடியும்…” அவள் காதில் சரசமாய் உரசி முன்னேறத் துடித்தது அவனது இதழ்கள். “என்ன எண்ணப் போறீங்க…” அவள் புரியாமல் கேட்க,
என் நிலாப் பெண்ணின்
மேனியில் வலம் வரும்
கருப்பு நட்சத்திரங்களை…
 
சொல்லிக் கொண்டே அவள் கழுத்து மச்சத்தின் மீது காதலோடு காளையவன் முத்தமிட பிரமிப்புடன், கூச்சமும் கூட மேலும் அவனை ஒட்டிக் கொண்டாள்.
“பவி…” காதலோடு ஒலித்த அவனது வார்த்தைகள் காதோடு உரச உடலெங்கும் மின்சாரமாய் பரவிய உணர்வுகளில் கட்டுண்டு கிடந்தவள் மனம் மேலும் அந்த இன்ப அவஸ்தையை எதிர்பார்க்க, அவன் மெதுவாய் முன்னேறிக் கொண்டிருந்தான்.
நெற்றியில் வலம் வரத் தொடங்கிய இதழ்கள் மூக்கு, இதழ் கடந்து கழுத்தை அடைய அதற்கு மேல் பொறுக்க முடியாமல் நெஞ்சோடு அவன் முகத்தை இறுக்கிக் கொண்டவள் அவள் வசம் இழக்க, மனதில் உள்ள ஆசை, காதல் முழுவதையும் சற்று வன்மையாகவே அவன் வெளிப்படுத்தினாலும் சுகமாய் அவனைத் தன்னுள் உணர்ந்தவள் ரசனையோடு எதிர்கொண்டாள். இதமாய் ஒரு சங்கமம் நடந்தேற களைப்புடன் அவன் அணைப்பில் நெஞ்சில் தலை வைத்துக் கிடந்தாள் அவள்.
அவளது முதுகில் இதமாய் வருடியவன், “பவி… பாயாசம் ரொம்ப சூப்பரா இருந்துச்சுடி… இன்னும் கிடைக்குமா…” என்றவனை செல்லமாய் நெஞ்சிலேயே குத்தினாள்.
“ஏய் பவி, பார்த்துடி… வேற எங்கே வேணும்னாலும் குத்து… என் நெஞ்சுல மட்டும் குத்திடாதம்மா…”
“ஏன்… நெஞ்சுல குத்தினா என்ன…”
“அங்கிருக்கிற என் பவிச்செல்லத்துக்கு வலிக்குமே…” காதலுடன் சொல்லவும் உருகிவிட்டாள். சிறிது நேரம் அப்படியே இருந்தவள், “என்னங்க, ரோஹி, ராகவ் பத்தி சொல்லறேன்னு சொன்னிங்களே…” கேட்டாள்.
“ம்ம்… சொல்லறேன் மா…” என்றவன் ராகவ் கூறியதை சொல்லத் தொடங்கினான். முதலில் ராகவ் குடும்பத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ராகவ் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் தந்தைக்கு அமெரிக்காவில் நல்ல வேலை கிடைக்க, கல்யாணம் முடித்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். ஒரே பிள்ளையான ராகவ் அமெரிக்காவில் பிறந்தவன். செல்வச் செழிப்போடு, எதற்குமே இல்லை என்று மறுக்காத பெற்றோரின் செல்லத்தில் வளர்ந்தவன்.
படிக்கும்போதே உடன் படித்த அந்த நாட்டுப் பெண் ஒருத்தியுடன் காதல் மலர, பெற்றோரின் சம்மதத்துடன் அவளை மணமுடித்தவன். மணம் முடிந்தாலும் மனம் சேராவிட்டால் அது மணக்காமல் போய்விடுமே.
காதலிக்கும்போது இனித்த காதல் கல்யாணத்துக்குப் பின் இனிக்கவில்லை. அந்தப் பெண் எப்போதும் போல நண்பர்களுடன் நெருக்கமாய் பழகுவதும், கண்ட இடத்தில் சுற்றுவதுமாக இருக்க அவளைக் கண்டித்தான். அது அவளது சுதந்திரத்தை பாதிப்பதாய் கருதியவள் இவனோடு சண்டை போடத் தொடங்கினாள். தினம் ஒரு காரணம், நிதம் ஒரு சண்டை என்று வெறுத்துப் போனவனைக் கண்டு பெற்றோருக்கு வருத்தமாய் இருந்தது. ஒரே மகனின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று பரிதவித்தனர்.
மருமகளிடம் புரிய வைக்க நினைத்து எங்கள் கலாச்சாரத்தில் இதெல்லாம் பழக்கம் இல்லை… உன்னைக் கொஞ்சம் மாற்றிக் கொள் என்று உபதேசம் செய்யப் போக அவளுக்கு கோபம் அதிகமாகிவிட்டது. அவளது உரிமையில் தலையிடுவதாய் நினைத்து பிரிய விரும்புவதாய் கூறி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டாள். முதலில் அதிர்ந்தாலும் ஒத்து வராத பெண்ணுடன் வாழ்க்கை வண்டி முன்னே போகாது எனப் புரிந்து கொண்ட ராகவ் அதற்கு சம்மதித்தான். கல்யாணம் முடிந்து ஒரு வருடத்தில் இருவரும் பிரிந்து விட்டனர்.
அதற்குப் பிறகு விரக்தியாய் சுற்றிக் கொண்டிருந்தவன் பெற்றோரின் வேதனையைக் காண முடியாமல் மேற்படிப்பை முடிக்க முயன்றான். அப்படிதான் மித்ரனுடன் பழக்கம். அவனுக்கு நடந்த விபத்தின் போது காண வந்த ரோஹினியின் துறுதுறுப்பும், அந்த சூழலிலும் கலங்கி இருக்காமல், செலவு செய்து வந்தாயிற்று… ஊரை சுற்றிப் பார்க்கலாம்… என்று கிளம்பிய பக்குவமும் அவனுக்குப் பிடித்தது. இருவருமாய் அங்கே ஒன்றாய் சுற்றிய நாட்களில் அவன் மனம் அவளை ரசிக்கத் தொடங்கியது. அவனது வாழ்க்கையில் நடந்ததை அவளிடமும் பகிர்ந்து கொண்டிருந்தான். அதற்கு ஆறுதலாய் பேசியவள் பிறகு அவனது மனநிலையை மாற்றுவதற்காய் உற்சாகமாய் பேசத் தொடங்கினாள்.     
இந்தியா திரும்பி சென்ற பின்னும் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் அவர்கள் நட்பு தொடர மேலும் அவளைப் புரிந்து கொண்டவன் காதலிப்பதாய் கூறினான். அப்போது ரோஹிணியின் மனதில் மித்ரனைக் கல்யாணம் செய்ய எண்ணம் இருந்ததால் அவள் நாசூக்காய் மறுத்துவிட நட்பாவது தொடரட்டும் என்று கேட்டுக் கொண்டான்.
மித்ரன் பவித்ராவை விரும்புவதை அறிந்ததும் கோபத்துடன் அவனுக்கு அழைத்தவள், இங்கே நடந்த எல்லாவற்றையும் கூறி, “இப்போ சொல்லு, என்னை இப்பவும் லவ் பண்ணறியா… கல்யாணம் பண்ணிக்க விரும்பறியா…” என்று கேட்க அவனுக்கு அது இன்ப அதிர்ச்சி என்றே கூறவேண்டும். அதற்குப் பிறகு அவளது மனம் தெளிவதற்காய் அவனும் மிகவும் அக்கறையோடு அன்பாக எடுத்து சொல்லிப் புரிய வைத்தான். பாலையாய் தவித்து கொதித்துக் கொண்டிருந்தவள் மனதுக்கு சுகமான சாரலாய் அவன் அன்பும், அக்கறையும் தோன்ற அவளுக்குள்ளும் காதல் விதை துளிர்க்கத் தொடங்கியது.
அவளை அவளுக்காய் நேசிக்கும் அவனை மனதார ஏற்றுக் கொண்டாள். ராகவ் இந்தியா வந்ததும் சோமுவிடம் அவனைப் பற்றிக் கூறி கல்யாணத்துக்கு சம்மதமும் வாங்கிவிட்டாள்.
மீளமுடியா சூழல் ஒன்று
எனை இழுக்கிறது – காதல்
என்னும் மாயக்கரம் கொண்டு…
அறிந்தே அமிழ்கிறேன் – நீ
அன்பின் ஆழ்கடல் என்று…
உள்ளத்தில் ஊஞ்சல் கட்டி
ஆடுகிறாய் பெண்ணே – அதில்
ஊசலாடுவது என்னுயிர்…
இமைப்பீலி அடுத்து இறுதிப் பதிவு…

Advertisement