Advertisement

இமை – 27
“அப்படி என்னப்பா, சரி பண்ண முடியாத தப்பைப் பண்ணினீங்க…” மித்ரனின் கேள்வி குளவியாய் நெஞ்சைக் கொட்ட சிறிது நேரம் அமைதியாய் இருந்தார். மீனாவும் அவர் சொல்வதைக் கேட்கக் காத்திருக்க நீண்ட பெருமூச்சை வெளியேற்றியவர் நிமிர்ந்தார்.
“சொல்லறேன் மித்ரா, அப்ப நீ சென்னைல மாமா வீட்டுல இருந்து படிச்சிட்டு இருந்தே… என் பிரண்டு சென்னைல மினி டிபார்ட்மெண்டல் ஸ்டோர் தொடங்கறதா இருந்தார்… அதுல என்னையும் பார்ட்னரா சேர்றியான்னு கேக்கவும் எனக்கும் சேரலாமேன்னு ஒரு ஆசை வந்துச்சு…”
அவர் சொல்லவும் மீனாவுக்கு அந்தநாள் நினைவுகள் நிழலாடின. புதிய பிசினஸ் தொடங்குவதற்காய் ஒரு இடத்தை விற்றதும் அதற்கான வேலைகளுக்காய் எப்போதும் சென்னையிலேயே இருந்ததும் அந்த சமயத்தில் மில் பொறுப்பை தான் கவனிக்கத் தொடங்கியதும் மனதில் வந்தது.
“கடைக்கான இடத்தைப் பார்க்கறது, புது ஆர்டர் பேசறது கவர்ன்மென்ட் அப்ரூவல்க்கு அலையறதுன்னு நேரம் சரியா இருந்துச்சு… ஒரு நல்ல ஏரியால எங்களுக்குப் பிடிச்ச மாதிரி ஒரு பில்டிங் லீசுக்குக் கிடைச்சது… அந்த சந்தோஷத்தைக் கொண்டாட என் பிரண்ட்ஸ் எல்லாம் ஈவினிங் பாருக்குப் போயி டிரிங்க்ஸ் அடிச்சிருந்தாங்க… எனக்கு அந்தப் பழக்கம் இல்லாததால நான் போகாம ரூம்லயே இருந்தேன்… அவங்க தண்ணியடிச்சதால கார் ஓட்ட முடியாதுன்னு என்னை பாருக்கு வர சொல்லி கூப்பிட்டாங்க… நானும் அவங்களை அழைச்சிட்டு வர ஆட்டோல பாருக்குப் போனேன்…” சொன்னவரின் முகம் சுருங்கி சிவக்கத் தொடங்கியது.
அவர் சொல்வதை மித்ரன் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்க, “அப்புறம் என்னங்க ஆச்சு…” என்ற மீனாவின் முகம் கவலையைக் காட்டியது.
“அப்பதான் அந்தக் கொடுமையைப் பண்ண வேண்டியதாப் போயிருச்சு… நான் கார் ஓட்டப் பழகி கொஞ்சநாள் தான் ஆயிருந்துச்சு… லைசன்ஸ் வாங்கிட்டாலும் சரியான அனுபவம் இல்லை… ஒரு நம்பிக்கையில் டிரைவிங் சீட்ல உக்கார்ந்தேன்… அது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்போ வரைக்கும் வருத்தப் பட்டுட்டு இருக்கேன்…” சொன்னவரின் கண்கள் கலங்கி இருக்க, “என்னப்பா பண்ணினீங்க…” என்றான் மித்ரன்.
“கொலை… ஒருத்தரைக் கொலை பண்ணிட்டேன்…” வேகமாய் சொல்லவும், மித்ரன் அதிர்ந்து நோக்க மீனா தலையில் கை வைத்துக் கொண்டார்.
“ஒரு வளைவுல வண்டியை ஸ்லோ பண்ணறதுக்கு பதிலா தெரியாம ஆக்சிலேட்டரை கொடுக்க அது வேகமா வளைவுல திரும்பி அங்கே பைக்கை ஸ்டார்ட் பண்ணிட்டு இருந்த ஒருத்தர் மேல இடிச்சு அவர் கொஞ்சதூரம் தள்ளி பிளாட்பார்ம் மேடைமேல தலையடிச்சு விழுந்துட்டார்…”
“அச்சச்சோ… அவருக்கு என்னாச்சு…” என்று மீனா பதற, மித்ரனின் அதிர்ச்சி இன்னும் கூடியது.
“நா… நான் பாவிமா… அ… அவருக்கு பின் மண்டை பிளந்து ரத்தம் கொட்டத் தொடங்குச்சு… கடைல எதோ வாங்கிட்டு  வந்த அவர் மனைவி அதைப் பார்த்ததும் அலறின அலறல் இப்பவும் என் காதுல இருக்கு…”
“ஐயோன்னு அலறிகிட்டு ஓடி வந்தவங்க இவர் மண்டை பிளந்து ரத்தம் வழியத் தொடங்கினதைப் பார்த்து மயக்கமாகிட்டாங்க… அதுக்குள்ளே அங்கங்கே இருந்து ஆளுங்க ஒவ்வொருத்தரா ஓடி வரத் தொடங்கினாங்க… கண் மூடித் திறக்கறதுக்குள்ளே என்ன நடந்துச்சுன்னே புரியாம நடுங்கிட்டு இருந்த நான் காரை நிறுத்தி இறங்கப் போகவும், என் நண்பன் என்னைத் தடுத்து அவங்ககிட்டே மாட்டினா கொன்னே போட்டிருவாங்க… சீக்கிரம் வண்டிய எடுன்னு அவசரப் படுத்தினான்…”
“நான் மறுத்தும் அவன் இறங்க விடலை… எல்லாரும் வர்றாங்க, சீக்கிரம் வண்டிய எடுன்னு சொல்லவும், சூழ்நிலை புரிய வேகமா வண்டிய எடுத்துட்டேன்… அந்த இடத்துல அப்போ கரண்ட் இல்லாததால இருட்டுல எங்களையும், கார் நம்பரையும் யாராலயும் கவனிக்க முடியல… எனக்கு பயத்துல படபடப்பா, நடுக்கமா இருந்துச்சு… கொஞ்சதூரம் போனதும் முடியலன்னு வண்டிய ஓரமாக்கிட்டேன்…”
“அங்கே ஒரு உயிர் துடிச்சிட்டு இருக்கு… அதுக்குக் காரணமா இருந்தும், காப்பாத்த நினைக்காம இப்படித் தப்பி ஓடறமேன்னு என் மனசு கேள்வி கேட்டுச்சு… என் நண்பன் தடுத்தும் கேக்காம வேகமா அந்த இடத்துக்கு ஓடினேன்… ஆனா… அதுக்குள்ளே…” என்றவர் முகம் இறுக, கையை மடக்கி மறு கையில் குத்திக் கொண்டார்.
“அ..அவரு… மண்டை நல்லா பிளந்து போனதாலே ரத்தம் வடிஞ்சு ஆம்புலன்சு வர்றதுக்குள்ளேயே உயிரை விட்டிருந்தார்… அவரோட மனைவி கதறின கதறலை கண்ணால பார்க்க முடியலை…”
“அந்தப் பொண்ணு மடியில ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த உருவம் என்னைப் பார்த்து, அநியாயமா என்னைக் கொலை பண்ணிட்டியே… விபத்து பண்ணினாலும் உடனே என்னை ஹாஸ்பிடல் கொண்டு போயிருந்தா ஒருவேளை நான் பிழைச்சிருப்பேனே… என் குடும்பத்தை இப்படி அநாதை ஆக்கிட்டியே… நீயெல்லாம் மனுஷன் தானான்னு என்னைப் பார்த்துக் கேக்கற மாதிரியே இருந்துச்சு… கலங்கிப் போயி அதிர்ச்சியோட அங்கேயே உக்கார்ந்துட்டேன்… அதுக்குள்ளே பிரண்ட்ஸ் வந்து என்னைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க…”
மகனும், மனைவியும் அதிர்ச்சியும் வருத்தமும் கலந்து அமைதியாய் இருக்க கதவைத் திறந்து உள்ளே வந்த மருமகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ராசிநாதன் சொல்லிக் கொண்டிருக்க அவரது வார்த்தைகள் அவள் காதிலும் விழத்தான் செய்தது.
“அடுத்தநாள் பேப்பர்ல அவர் போட்டோ போட்டு, பேரு கமலக்கண்ணன், இந்த ஊர்னு போடவும்தான் நம்ம பக்கத்துக்கு ஊருன்னு தெரிஞ்சது… ஏதோ சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்துக்கு வந்திருக்காங்க… அவருக்கு ஒரே ஒரு பொண்ணு இருக்கிறதாவும் சொல்லியிருந்தாங்க… ஒரு உயிர் போகக் காரணமாகி, அந்தக் குடும்பத்தோட ஆணிவேரையே புடுங்கி எரிஞ்சுட்டோமே… அந்தப் பொண்ணும் அவர் மனைவியும் எப்படி கஷ்டப் படறாங்களோன்னு மனசு தவிச்சுட்டே இருந்துச்சு… எனக்குள்ளே இருந்த குற்றவுணர்ச்சியும், தவிப்பும் என்னைக் காய்ச்சல்ல தள்ளிருச்சு…” சாப்பிட அழைப்பதற்காய் வந்த பவித்ரா அவர் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மா..மாமா… என்ன ஊரும், பேரும் சொன்னிங்க…” அவள் கேட்கவும்தான் சட்டென்று அவளது ஊர்ப்பெயரும், தந்தை பெயரும் நினைவு வர வெளிறிய முகத்துடன் மீனாவும், மித்ரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“பவி…” வேகமாய் அவளை நெருங்கிய மித்ரனைக் கண்டு கொள்ளாமல் மீண்டும் அதையே கேட்க, ராசிநாதன் குழப்பத்துடன் அவளுக்கு பதில் கூறினார்.
அவளது கண்கள் சட்டென்று கண்ணீரைத் திறந்துவிட, கேவிக் கொண்டே வேகமாய் வெளியே சென்றுவிட்டாள்.  அவளைத் தொடர்ந்து மித்ரனும் செல்ல, ராசிநாதன் புரியாமல் விழித்தார்.
“நீங்க கொன்னது யாரையோ இல்லீங்க… உங்க மருமகளோட அப்பாவைத்தான்…” அவர் சொல்லவும் “ஐயோ, என்னம்மா சொல்லறே…” அதிர்ச்சியோடு கேட்டார் ராசிநாதன்.
“ஆமாங்க… அப்பாவை இழந்து இவ அம்மாவும், அவளும் ரொம்ப கஷ்டப் பட்டிருக்காங்க… பெரிய தப்பு நடந்திருச்சு… இதை என்கிட்டே சொல்லியிருந்தா அந்தக் குடும்பத்துக்கு ஏதாவது உதவியாச்சும் பண்ணி பாவத்தைக் கழுவி இருக்கலாம்…” என்று கண்ணீருடன் கூறினார் மீனா.
“நினைச்சேனே… ஏதாவது பரிகாரம் பண்ணலாம்னு நினைச்சு இவங்களைத் தேடிப் போனேனே… காய்ச்சல்ல படுத்தவன் நாலஞ்சு நாள் எழுந்திருக்க முடியாமப் போயிருச்சு… காய்ச்சல் சரியாகி இவங்களைத் தேடி அந்த ஊருக்குப் போனேன்… அவங்க ஊரை விட்டே போயிட்டதா சொன்னாங்க… எங்கே போனாங்கன்னும் யாருக்கும் தெரியலை… மனசு வெறுத்துப் போயிருச்சு… நான் செய்த பாவம் என் பிள்ளையைத் தண்டிக்குமோன்னு பயந்தேன்… உனக்கு சொன்னா நீயும் பயப்படுவேன்னு எதையும் சொல்லலை…”
“ஒவ்வொரு நிமிஷமும் நரகத்துல இருக்கற போல உணர்ந்தேன்… தூங்க முடியல, சாப்பிட முடியல… என்னைக் கொன்னுட்டியேன்னு அந்த உருவம் கண்ணுக்குள்ளயே நின்னு கேள்வி கேக்குற போல இருந்துச்சு… இந்தப் பாவத்தைக் கழிக்க கடவுள் மட்டுமே கதின்னு நினைச்சு தான் யாருக்கும் சொல்லாமக் கிளம்பிட்டேன்…” என்றார் கலக்கத்துடன்.
“சொல்லி இருக்கலாமேங்க… எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காணாம அதுல இருந்து தப்பிச்சு ஓட நினைக்கறது சரியா… நீங்க போன பின்னால இந்த ஊர்ப்பேச்சுக்கு பயந்து வீட்டுலயே முடங்கின எனக்கு அண்ணன்தான் எல்லா விதத்திலும் உதவியா இருந்தார்… அப்பா ஏன்மா இப்படிப் பண்ணிட்டார்னு என்னைக் கண்ணீரோடு கேள்வி கேட்ட பிள்ளைக்கு என்ன பதிலை சொல்லுவேன்…” சொன்னவர் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினார்.
அவரை சமாதானப் படுத்தியவர், “எனக்கு அப்போ இருந்த குழப்பமான மனநிலையும், குற்றவுணர்ச்சியும் தெளிவா சிந்திக்க விடலைம்மா… சரி, பவித்ரா எப்படி நம்ம மித்ரனுக்கு மனைவியா… ரோஹிணிக்கு என்னாச்சு…” கணவன் கேட்கவும், தலை குனிந்த மீனலோசனி நடந்ததை சொல்லி முடித்தார்.
அமைதியாய் கேட்டிருந்தவர் கண்கலங்கி அமர்ந்திருந்தவரை ஆறுதல் படுத்தி, “கவலைப்படாதே லோசனி… நான் செய்த பாவத்தோடு நீயும் ஒரு பாவத்தை செய்து அதைப் புண்ணியமா மாத்தியிருக்கே… இப்போதான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாருக்கு மா…” என்று ஆசுவாசப்பட்டவரைப் புரியாமல் பார்த்தார் மீனா.
“என்னங்க சொல்லறீங்க…”
“அப்பா, அம்மாவை இழந்து மாமன்வீட்டுல அடிமை வாழ்க்கை வாழ்ந்திட்டு இருந்த அந்தப் பொண்ணுக்கு நீதான் விடுதலை கொடுத்திருக்கே… அநாதரவான அந்தப் பொண்ணு வாழ்க்கை என்னாகுமோன்னு பயந்திட்டு இருந்தேன்… அவளே என் மகனுக்கு வாழ்க்கைத் துணையா வந்திருக்கா… இதெல்லாம் நீ செய்த தப்பால தானே நடந்துச்சு… இனியாவது என் மருமகளோட வாழ்க்கைல எல்லாம் சந்தோஷமா இருக்கட்டும்… அவளுக்கு அப்பாவா, அம்மாவா இருந்து நாம பார்த்துப்போம்…” கண்கள் கலங்க நெகிழ்ச்சியோடு கூறியவரை சந்தோஷத்துடன் பார்த்தார் மீனா. அவர் மனதிலும் ஒரு தெளிவு வந்திருந்தது.
“லோசனி, பவித்ரா ரொம்ப வருத்தப்படுவா… ஒருவேளை கோபப்பட்டாலும் அதை ஏத்துக்கத் தயாரா இருக்கணும்…”
“இல்லங்க… பவித்ரா எல்லாப் பொண்ணுங்களை மாதிரி இல்லை… தெரிஞ்சு தப்பு செய்த என்னையே மன்னிச்சவளுக்கு, தெரியாம நீங்க செய்த தப்பை மன்னிக்க முடியாதா என்ன… அவளோட மன்னிப்பே பெரிய தண்டனைதான்…”
“ம்ம்… உலகத்துலேயே பெரிய தண்டனை, மன்னிப்புதான்…” சொன்னவர் உள்ளே வந்த மகனைக் கண்டு, “பவித்ரா எங்கேப்பா…” எனவும் வெளியே கைகாட்டினான்.
சிவந்து வீங்கிய கண்களுடன் மேசையில் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளை திகைப்புடன் நோக்கினர்.
அவளருகில் சென்றவர், “பவித்ரா… நான் செய்தது தப்புதான்… எனக்கு எதாச்சும் தண்டனை கொடுக்கனும்னாலும் கொடு… இல்ல, இந்த வீட்டுல என்னை சேர்த்துக்க விருப்பமில்லை போயிடுன்னு சொன்னா கூட ஓகே… ஆனா என்னை மன்னிக்க மட்டும் செஞ்சிரும்மா… இனியும் அந்தப் பாவ சிலுவையை சுமக்க இந்தக் கிழவனால முடியலை…” என்று அவள் கையைப் பிடித்தவரைக் கண் கலங்கப் பார்த்தாள்.
“வேண்டாம் மாமா… நடந்த எதையும் மாத்த முடியாது… எனக்கு அப்பா இல்லாம வளரணும்னு விதி… ஆனா உங்க பிள்ளை நீங்க இருந்தும் இத்தனை வருஷமா உங்களைப் பிரிஞ்சு தான் வாழ்ந்திருக்கார்… நீங்களே உங்களுக்கு தண்டனை கொடுத்துகிட்டிங்க… அவரோட அப்பா தான் இனி எனக்கும் அப்பா… அத்தையும் தனியா ரொம்ப கஷ்டப் பட்டுட்டாங்க… இனியாவது அவங்க நிம்மதியா இருக்கட்டும்… மனசுல உள்ள குழப்பத்தை எல்லாம் துடைச்சுப் போட்டுட்டு நிம்மதியா சாப்பிட வாங்க…” என்றவளை உலகின் எட்டாவது அதிசயமாய் பார்ப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லைதானே.
ராசிநாதன் அவளது பேச்சில் திகைத்து நிற்க, தன் மகனுக்காய் தான் தப்பாய் தேர்ந்தெடுத்த, சரியான மருமகளை மனம் நிறைந்த பெருமையோடு பார்த்திருந்தார் மீனலோசனி. நடந்தது புரிந்தும் புரியாமலும் இருந்தாலும் சந்தோஷமாய் உணர்ந்தார் சாவித்திரி.
அவளையே காதல் வழியும் கண்ணோடு பார்த்து நின்றான் மித்ரன். அவனது உணர்வுகளுக்காய் தன் வேதனையை மறைத்துக் கொண்டு வந்திருக்கிறாளே.
மன்னிப்பதும்
மறப்பதுமான உன்
மனித குணத்தில்
மனம் மயங்குது…
மயிலிறகின் வருடலாய்…
 
அவளுக்கு எப்படி சமாதானம் சொல்வது என்று தயக்கத்துடன் தான் மித்ரன் அறைக்கு சென்றான். அவள் அருகில் அமர்ந்தவன், காலுக்குள் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தவளின் தலையில் இதமாய் கோதிவிட எழுந்தவள் அவனது மார்பில் சாய்ந்து மௌனமாய் கண்ணீர் விட்டாள். சில நிமிடம் முதுகில் தடவிக் கொடுத்தவன், மெல்ல காதில் கிசுகிசுத்தான்.
“பவி உன் வருத்தம் புரியுது… அப்பா செய்த தப்புக்கு தண்டனையா நீ என்ன சொன்னாலும் அவர் ஒத்துக்குவார்… அவரும் இத்தனை காலம் யாருமே இல்லாம ரொம்பவே கஷ்டப் பட்டிருப்பார்… இந்த வயசான காலத்துலயும் செய்த தப்பை நினைச்சு ரொம்ப வருத்தப்படறார்… உனக்கு அவர் மேல கோபம் இருக்கு, பார்க்கவே பிடிக்கலைன்னாலும் சொல்லிடு… முன்னாடி காரணமே இல்லாம வீட்டை விட்டுப் போனவருக்கு இப்ப இந்த தண்டனை கூட சந்தோஷமாதான் இருக்கும்… நீ என்ன செய்தாலும் உன்னோட நான் இருக்கேன்… இனியும் நீ அழக்கூடாது… உன் கண்ணுல கண்ணீரைக் காட்டி என்னைத் தண்டிச்சிடாதே… அதுதான் எனக்கு ரொம்ப வலிக்குதுடி…” என்றான் மென்மையாக.
வாழ்க்கை என்னும் போர்க்களத்தில்
இரத்தத்திற்கு இரத்தமே தீர்வென்றால்
பூக்கள் மலரும் தருணங்கள்
பூமியில் நடக்காமலே போய்விடும்…
 
சட்டென்று நிமிர்ந்தவள் அவன் முகத்தையே பார்க்க அதில் வலியும் வேதனையும் நிறைந்திருந்தது. தந்தையின் செயலுக்காய் அவரை தண்டிப்பதா… கலங்கிக் கரையும் தாரத்தை சமாதானம் செய்வதா… யாருக்கு வலித்தாலும் அது அவனுக்குமான வலியாகிற்றே. கண்ணைத் துடைத்துக் கொண்டவள், அவனைத் தீர்க்கமாய் பார்த்தாள்.
“என்னோட ஒரு அப்பாவை இழந்துட்டேன்… இன்னொரு அப்பாவையும் இழக்க விரும்பலை… இதெல்லாம் நடக்க விதி இருக்கும்போது யாரைத் தண்டித்து என்ன பண்ணறது… உங்க அப்பாவை தண்டிச்சா உங்களுக்கு எத்தனை வலிக்கும்னு எனக்குத் தெரியும்… ஏன்னா அது என்னோட வலியும் தானே… அதும் இல்லாம திருந்துன மனசை தண்டிக்க நினைக்கறது இறந்த உயிரை வஞ்சிக்கற மாதிரிதான்…” சொன்னவளை நெகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டான்.
நான் அழும்போது அணைத்து
விழும்போது துடிக்கும்
என் இமைப்பீலி நீயடி…
 
அவள் காதில் கிசுகிசுக்கவும் அந்த  அணைப்பில் தன்னைத் தேற்றிக் கொண்டு கண்ணைத் துடைத்துக் கொண்டாள். மற்றவர்களை நேசிக்க மட்டுமே தெரிந்த அவளை நெகிழ்ச்சியோடு அணைத்துக் கொண்ட மித்ரன் அழுகையில் வீங்கியிருந்த இமையின் மீது அன்போடு இதழ்களைப் பதிக்க அவள் சிலிர்ப்பை உணர்ந்தான்.  
அதற்குப் பிறகு அன்று முழுதும் மித்ரன் அவளுடனே இருந்தான். தந்தையிடம் விட்டுப் போன கதைகளைப் பேசினாலும் மனைவிக்கு தனிமை கொடுக்காமல் அருகிலேயே இருத்திக் கொண்டான். அவளும் விலகி செல்லாமல் பேசுவதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.
ராசிநாதன் நல்லவொரு மனிதர் என்பது சாவித்திரி மூலம் மனதில் பதிந்திருந்தததால் அவரை குற்றமுள்ளவராய் காண முடியவில்லை. அப்படியே அன்றையநாள் கழிந்தது.
அதிகாலையில் நல்ல உறக்கத்தில் இருந்தவளை யாரோ அழைப்பது போலத் தோன்றவும் திடுக்கிட்டு எழுந்தவள் முன்னே புன்னகையுடன் நின்றிருந்தான் மித்ரன். “இது என்ன எனக்கு முன்னே எழுந்து நிற்கிறான்… ஒருவேளை கனவா…” என யோசித்துக் கொண்டே கண்ணைத் தேய்த்துக் கொள்ள அவனது புன்னகை பெரிதானது.
“என் பவிக்குட்டிக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்…” சொல்லிக்கொண்டே சிவப்பு ரோஜா ஒன்றை நீட்டியவனை திகைப்புடன் பார்த்தாள். இன்று அவளது பிறந்தநாள் என்பதே இப்போதுதான் நினைவு வந்தது. பிறந்ததே சுமையாகத் தோன்றினால் பிறந்தநாள் எங்கே நினைவிருக்கும். திருதிருவென்று விழித்துப் பார்த்தவளின் நெற்றியில் மெல்ல தலையால் முட்டியவன், அவள் கையில் ரோஜாவைக் கொடுத்துவிட்டு மற்றொரு கவரை அலமாரியில் இருந்து எடுத்தான்.
“என் இதய தேவதைக்கு சின்ன அன்பளிப்பு…” படபடப்பும், திகைப்புமாய் அவனையே கண்கள் பனிக்க பார்த்து நின்றவளை, “ம்ம், வாங்கிக்க பவி…” எனவும், மீண்டும் புதிதாய் பிறந்ததுபோல் உணர்ந்தாள். அவன் தந்த கவரை வாங்கிக் கொள்ள, “திறந்து பார்…” என்றான். நடப்பவை அனைத்தும் கனவு போலத் தோன்ற, கவரைப் பிரித்தாள். அழகான பட்டுசேலையுடன் பெரிய ஜிமிக்கி ஒன்றும் பளபளத்தது. கண்கள் ஆச்சர்யத்தில் விரிய அவனை ஏறிட்டவளை நோக்கி புருவத்தை அழகாய் தூக்கியவன், “உனக்கு பெரிய ஜிமிக்கி போடணும்னு ஆசை தானே… பிடிச்சிருக்கா…” என்றான்.
அவளது டைரியில் பார்த்திருக்கவேண்டும் எனத் தோன்றியது. அந்த நேரம் அவளது உணர்வை அவளாலேயே புரிந்து கொள்ள முடியாமல் கண்கள் பனிக்க அவன் தோளில் சாய்ந்து கொண்டவளை அணைத்துக் கொண்டான்.
“பவி… பிடிச்சிருக்கான்னு சொல்லலை…” மீண்டும் கேட்டவனை இறுக்கிக் கொண்டவள், “ரொம்பப் பிடிச்சிருக்கு… உங்களை…” என்றவளின் குரல் உணர்ச்சிவசப்பட்டதில் உடைந்திருந்தது.
எத்தனை பரிசுகள்
கிடைத்தாலும் ஈடில்லை… 
எனக்காய் பார்த்து செய்யும்
உன் மனசுக்கு இணையாய்…
வெகு நாட்களுக்குப் பிறகு அன்று காலையில் வீடே உற்சாகமாய் இருந்தது. மருமகளின் பிறந்தநாள் என்பதை  அறிந்து மீனலோசனி அவரது பதக்கம் வைத்த செயினை அவள் கழுத்தில் போட்டு திகைக்க வைக்க, ராசிநாதனோ “இன்னைல இருந்து நீ இந்த வீட்டு மருமக இல்லம்மா, எங்க மகள்… உனக்குப் பிடிச்சதா வாங்கிக்க…” என்று கூறி கையில் பணமாகக் கொடுத்து அசர வைத்தார். அவர்களின் அன்பில் திக்குமுக்காடி கண் கலங்க நின்றவளை சந்தோஷத்துடன் பார்த்து நின்றான் மித்ரன்.
மதிய உணவுக்கு ராகவ் உடன் ரோஹினியின் குடும்பமும் வருவதாய் இருந்ததால் விருந்தும் அமர்க்களமாய் தயாராகிக் கொண்டிருந்தது. ராசிநாதன் திரும்ப வந்த விஷயம் அறிந்து அவர்களும் குடும்பத்தோடு கிளம்பி இருந்தனர்.
பவித்ராவின் மனது சந்தோஷத்தில் நிறைந்திருக்க, புதுப் பட்டு சேலையும் ஜிமிக்கியும், கழுத்தில் செயினுமாய் தேவதையாய் ஜொலித்தவளை கோவிலுக்குப் அழைத்துப் போய் வந்தான். அவளது அருகாமையில் ஜொள்ளு விட்டுக் கொண்டே “இன்னைக்காவது பாயசம் கிடைக்குமா…” என்று பின்னிலேயே சுற்றிக் கொண்டிருந்தான் மித்ரன்.
வெகு நாட்களுக்குப் பிறகு வீட்டில் சந்தோஷத்தின் தென்றல் வீசத் தொடங்க அனைவரின் முகமும் புன்னகை பூசிக் கொண்டிருந்தது. மதியம் பனிரெண்டு மணி அளவில் கார் வந்து நிற்க, சோமுவும், சுந்தரியும் சிரிப்புடன் இறங்க, அவர்களுக்குப் பின்னில் ஜோடியாய் இறங்கிய ராகவ், ரோஹிணியைக் கண்டு கண்கள் விரிய திகைப்புடன் பார்த்து நின்றனர் அனைவரும்.
காதல் ஒரு கண்கட்டுவித்தை
எப்போது மாட்டிக் கொள்வோம்
என்று புரியாத மாய வித்தை…
சிலநேரம் பொய்மானாய்
கலைந்திடும் பிம்பம்…
சிலநேரம் அதுவே உயிர்
கொடுக்கும் மெய்மானாய்…
இமைப்பீலி வரும்…
 
 
 

Advertisement