Advertisement

இமை – 26
“ஓம் நமச்சிவாய”
இடுப்பில் காவி வேஷ்டியும், நீண்ட தாடியும், காவித் தலைக்கட்டுமாய் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து அமர்ந்திருந்த அந்த முதியவரின் முன்னில் பக்தியோடு அமர்ந்திருந்தனர் சில பக்தர்கள். கனிவு ததும்பும் விழிகளும், அவரது முகத்தின் தேஜசும் பார்ப்பவர்களைக் கையெடுத்து கும்பிட வைத்தது.
ஆன்மீகத்தோடு வாழ்வியல் உண்மைகளைக் கலந்து கனிவோடு அவர் சொன்ன கதைகள் கேட்பவரைப் பரவசம் கொள்ளச் செய்தன.
கோவிலுக்கு சற்றுத் தள்ளி ஓரமாய் ஒரு மரத்தின் அடியிலிருந்த சிமென்ட் தரையில் அவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னில் அவரது உதவியாளர்கள் சிலர் நின்று கொண்டிருக்க, முன்னில் தரையில் அமர்ந்திருந்த பக்தர்கள் அவரது வார்த்தைகளில் ஒன்றி இருந்தனர்.
சாந்தி வேகமாய் சாமி கும்பிட்டு விட்டு அங்கே செல்ல, அவரைத் தயக்கமாய் தொடர்ந்தார் மீனலோசனி. அந்தப் பெரியவர் அப்போதுதான் ஒரு ஆன்மீகக் கதையை சொல்லத் தொடங்க, கூட்டத்தோடு அமர்ந்த சாந்தி மீனாவையும் அமரும்படி கண்சாடை காட்ட தயக்கத்துடன் அவர் அருகில் அமர்ந்தார். பெரியவர் சொன்னதை கவனிக்கத் தொடங்க முதலில் அசட்டையாய் கேட்டவர் பிறகு அதில் ஆழ்ந்து கவனிக்கத் தொடங்கினார்.
நாம் நம் திறமையால், அறிவால் வாழ்க்கையில் வெற்றி அடைந்ததாய் நினைக்கிறோம்… ஆனால் இந்த எண்ணம் தவறு… தெய்வம் துணை நின்றால்தான் மட்டுமே நம் முயற்சிகளுக்கு முழு பலனும் கிடைக்கும். இதை உணர்த்த ஒரு கதை சொல்கிறேன்… பாரதப்போர் நடந்து கொண்டிருந்த போது அர்ஜூனனுக்கு பகவான் கிருஷ்ணர் தேரோட்டியாக செயல்பட்டார்… ஒருநாள் யுத்தம் முடிந்து பாசறைக்குத் திரும்பினார் அர்ஜுனன்… அவனுக்கு தன் வில் வித்தையால்தான் தாம் வெற்றி அடைகிறோம் என்ற கர்வம் உண்டாயிற்று…
அதனால் வழக்கமாக முதலில் தேரிலிருந்து இறங்கும் அவன், அன்று கிருஷ்ணரை முதலில் இறங்கும்படி கூறினான். அர்ஜூனனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பகவான், அவனது அகந்தையை நீக்க முடிவு செய்தார். “வழக்கமாக நீதானே முதலில் இறங்குவாய்? இன்று மட்டும் ஏன் என்னை இறங்க சொல்லுகிறாய்? என்று கேட்டார். இதற்கு அர்ஜூனன், “இன்று வழக்கத்தை மாற்றலாமே…” என எகத்தாளமாய் பதிலளித்தான்.
அதற்கு கிருஷ்ணர், “இல்லை! நீதான் முதலில் இறங்க வேண்டும். நான் இறங்கினால் உனக்குத்தான் ஆபத்து…” என்றார். 
“என்ன? எனக்கு ஆபத்தா? என்ன ஆபத்து? என் கையில் தான் வில் இருக்கிறதே! என்றான் கர்வத்துடன்.
“அதெல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம்… முதலில் நீ கீழே இறங்கு!” என பகவான் கட்டளையிடும் தொனியில் கூறவும் மறுப்பு தெரிவிக்க பயந்து அர்ஜுனன் கீழே இறங்கினான். பகவான் பின்னர் இறங்கினார். அவர் இறங்கியதும் அந்தத் தேர் தீப்பிடித்து எரிந்தது.
கிருஷ்ணர் அர்ஜூனனை நோக்கி, “நான் முதலில் இறங்கியிருந்தால் தேருடன் நீயும் சாம்பலாகியிருப்பாய்…” என்றார். அர்ஜூனன் மிகவும் பயந்து போய், எதனால் இப்படி நேரிட்டது என்று கேட்டான்.
அதற்கு கிருஷ்ணர், “அர்ஜூனா! உனக்கு எதிராகப் போரிட்டவர்கள் மந்திர சக்தி கொண்டு அம்புகளை எய்தனர். அவை செயல்படாமல் நான் தடுத்துவந்தேன்… நான் தேரிலிருந்து இறங்கியதும் அம்புகளின் மந்திர சக்தி வேலை செய்யத் தொடங்கிவிட்டது. அதனால்தான் தீப்பற்றிக் கொண்டது.
உன்னை இதுவரை காப்பாற்றியது உன் வீரமல்ல… என் சக்திதான்… இதை முதலில் புரிந்துகொள்!” என்றார். அர்ஜுனனின் கர்வம் காணாமல் போனது.
“அதனால் எந்தவொரு செயலை நாம் செய்வதாய் இருந்தாலும் அதில் தெய்வத்தின் துணை வேண்டும்… அதனால் நல்ல வழியில் நமது கடமைகளைச்  செய்ய வேண்டும்…” என்று உரையை முடித்தார் அந்தப் பெரியவர்.
அவர் சொன்னதைக் கேட்டு மீனாவின் மனதில் ஒருவித அமைதி ஏற்பட்டது. கடவுளுக்குப் பிடிக்காத ஒரு செயலை செய்யத் துணிந்த தன் செயலை நினைத்து வருந்தினார். அடுத்து ஒவ்வொரு பக்தர்களும் அவர்களின் மனக் குறைகளைக் கூறிக் கொண்டிருக்க, மீனா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரது பார்வை சற்றுத்தள்ளி ஓரமாய் நின்று கொண்டிருந்த ஒரு வயதானவரின் மீது வீழ, தாடிக்குள் புதைந்திருந்த அந்த முகம் பரிச்சயமானதாய் தோன்றியது. கண்கள் சுருங்கி, மிகவும் தளர்ந்திருந்த அவரது கவனம் முழுதும் அந்த சாமிஜியின் மீதே இருக்க அவரை உற்றுப் பார்த்த மீனாவின் உள்ளம் தடதடத்து கண்கள் ஆச்சர்யத்தைக் காட்டியது.
“அ… அது… அவர் மித்து அப்பா மாதிரி இருக்காரே…” என்றவர் யோசனையுடன் அவரையே கவனித்துக் கொண்டிருக்க, அவர் மீனாவை கவனிக்கவில்லை. ஒவ்வொருவராய் சுவாமிஜியிடம் ஆசி வாங்க செல்ல, நடுவில் வேகமாய் எழுந்து செல்லும் மீனாவைப் புரியாமல் பார்த்தார் சாந்தி.
குருஜியிடம் செல்வதற்காய் வந்தவரின் முன்னில் சென்று நின்ற மீனாவைக் கண்டதும் அவரது முகம் திகைத்து பின் அதிர்ச்சிக்குப் போனது. அவரது சுருங்கிய தளர்ந்த கண்கள் மேலும் சுருங்கி மீனாவையே பார்த்தது.
உதடுகள் மெல்ல “மீனலோசனி…” என்று முணுமுணுத்தன.
“ம்ம்… நானேதான்… அப்ப என்னை நீங்க மறக்கலை…” என்றவரின் குரலில் ஆதங்கம் வெளிப்பட்டது.
“லோசனி…” அவரது குரல் நடுங்கியது. “ஏன் இப்படிப் பண்ணினீங்க, எங்களை விட்டுட்டுப் போக எப்படி உங்களுக்கு மனசு வந்துச்சு… நாங்க என்ன பாவம் பண்ணினோம்…” மீனாவின் குரல் கலங்கியிருந்தது.
பதில் சொல்ல முடியாமல் கண்கலங்க ஒரு நிமிடம் நின்றிருந்த ராசிநாதன், “பாவம் செய்தது நீங்க இல்லை லோசனி… நான்… இந்தப் பாவிதான் ஒரு பெரிய பாவத்தைப் பண்ணிட்டேன்… அந்த குற்றவுணர்ச்சியில் இருந்து தப்பிக்க வலி தெரியாம தான் ஒவ்வொரு கோவிலா மன அமைதி தேடி ஏறி இறங்கிட்டு இருக்கேன்…” சொன்னவரின் கண்களும் கலங்கி இருந்தன.
அதற்குள் சாந்தி எழுந்து அவர்களை நோக்கி வருவதைக் கண்ட மீனா, “சரி… அதைப் பிறகு பேசிக்கலாம்… எப்படி இருக்கீங்க…” என்றார்.
“ம்ம்… இருக்கேன்… செய்த தப்புக்கு பிராயச்சித்தம் செய்ய முடியாம இன்னும் இந்த உயிரை உடம்புல ஒட்ட வச்சிட்டு இருக்கேன்…” என்றவர் மிகவும் சோர்ந்திருந்தார்.
அங்கே வந்த சாந்தி அந்த தாடிக்கார மனிதனை உற்று நோக்கிக் கொண்டே, “யாருக்கா இவரு… என்ன பேசிட்டு இருக்கீங்க… சாமிஜி கிளம்பிடப் போறாரு… சீக்கிரம் அவர்கிட்டே ஆசி வாங்கிக்கலாம் வாங்க…” என்றார்.
“ம்ம்… சரி…” என்ற மீனா, கணவனிடம் கண்ணாலேயே வருமாறு அழைக்கவும் அவரும் அவர்களுடன் வந்தார்.
சாந்தி முதலில் அவரை நமஸ்கரித்து பிரசாதம் வாங்கிக் கொள்ள அடுத்து ராசிநாதனைக் கண்ட குருஜியின் முகம் மலர்ந்தது.
“என்னப்பா… நான் சொன்னது போலவே இங்கு வந்துட்டாயே… எந்த ஒரு தவறும் மனசால உணர்ந்துட்டா அந்த ஆண்டவனால மன்னிக்கப்படும்… இனி உன் மனதில் உள்ள குறை நிச்சயம் மாறிவிடும்… சந்தோஷமாய் இருப்பாய்…” என்று வாழ்த்தினார்.
“சாமி… இது…” என்று மீனலோசனியைக் காட்டவும், “புரிந்தது… உனது குறை நீக்கும் சூத்திரம் தாரமாகிய அவளிடமே உள்ளது… எல்லாம் தெளிவாகப் பேசினால்  தெரிந்து கொள்வாய்… வாழ்க வளமுடன்…” என்று இருவரையும் ஆசிர்வதிக்க சாந்தி திகைத்து நின்றார்.
“ஊரைவிட்டு, குடும்பத்தை விட்டு ஓடிப்போன ராசி மாமாவா இவரு… இத்தனை நாள் எங்கே போயிருந்தாரு… இந்த சாமிஜி கூடத்தான் சுத்திட்டு இருந்தாரோ…” அவர் பங்குக்கு அவரும் யோசித்துக் கொண்டிருந்தார்.
மில்லில் இருந்து வீட்டுக்கு அவசரமாய் கிளம்பிக் கொண்டிருந்தான் மித்ரன். அன்னை அழைத்து உடனே வீட்டுக்கு வர சொல்லவும், காரணம் என்னவென்று கேட்க, நேரில் வருமாறு கூற யோசனையுடன் காரை எடுத்தவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
அவனை திகைப்புடன் எதிர்கொண்ட பவித்ரா, “என்னங்க…. இவ்ளோ சீக்கிரம் வந்துட்டிங்க… இன்னும் சமையலே முடியலையே…” என்றாள் புன்னகையுடன். சாவித்திரி ஊரிலிருந்து வந்திருக்க, ஊர்க்கதை பேசிக் கொண்டே இருவருமாய் சமைத்துக் கொண்டிருந்தனர்.
“அம்மா உடனே கிளம்பி வீட்டுக்கு வர சொன்னாங்க… அதான் லோடு ஏத்தற வேலையைக் கூட மருதுகிட்டே பார்த்துக்க சொல்லிட்டு வந்தேன்… அம்மா இன்னும் கோவிலுக்குப் போயிட்டு வரலியா…”
“இல்லியே… எதுக்கு வர சொல்லிருப்பாங்க…” அவளும் சேர்ந்து யோசிக்கத் தொடங்கினாள். சிறிது நேரத்திலேயே வாசலில் கார் நிற்கும் ஓசை கேட்டு வேகமாய் வெளியே செல்ல, காரிலிருந்து அன்னையுடன் இறங்கியவரை யோசனையுடன் பார்த்து மெல்ல முகம் மாறினான் மித்ரன். சட்டென்று கணவனின் முகம் கடுகடுவென்று மாறியதன் காரணம் புரியாமல் விழித்தாள் பவித்ரா.
கணவனைக் கண்டதும் அந்தப் பெரியவரின் முகத்தில் ஒரு திகைப்பு தோன்றி கண்கள் கனிந்து கலங்குவதை வியப்புடன் பார்த்துக் கொண்டே, “வாங்க…” என்றாள்.
“பவி… ஆரத்தி கலந்து எடுத்திட்டு வாம்மா…” அத்தை சொல்லவும் வியப்பு மேலும் அதிகமாக மறுகேள்வி கேக்காமல் அடுக்களைக்கு சென்றாள்.
அதற்குள் வெளியே எட்டிப் பார்த்த சாவித்திரி, “யாரும்மா…” என்று கேட்க, “தெரியலைக்கா… அத்தை ஆரத்தி கலக்கி எடுத்துட்டு வர சொன்னாங்க…” எனவும், மீண்டும் வெளியே நின்று கொண்டிருந்த தாடிக்காரரை உன்னிப்பாய் நோக்க அவரது முகம் மலர்ந்தது.
“பவிம்மா… வந்திருக்கிறது யாரு தெரியுமா… உன் மாமனார்…” என்றார் சந்தோஷத்துடன்.
“என்னக்கா சொல்லறிங்க… மாமாவா…” வியந்தவள், “அப்புறம் ஏன் இவர் அவரைப் பார்த்ததும் சந்தோஷப் படாம உர்ருன்னு முகத்தை வச்சிருக்கார்…” யோசித்துக் கொண்டே ஆரத்தித் தட்டுடன் வெளியே செல்ல சாவித்திரியும் சென்றார்.
மித்ரன் வந்தவருடன் எதுவும் பேசாமல் ஓரமாய் ஒரு மூலையில் முதுகைக் காட்டி திரும்பி நின்று கொண்டிருக்க, ராசிநாதனின் கண்கள் மகனையே ஆர்வத்துடன் தழுவிக் கொண்டிருந்தது.
மீனலோசனி மகனையும், கணவரையும் மாறி மாறிப் பார்த்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாய் நின்று கொண்டிருந்தார்.
மலர்ந்த முகத்துடன் பெரியவருக்கு ஆரத்தி சுற்றிவிட்டு, “வாங்க மாமா…” என்றவளை அவர் அதிசயமாய் பார்க்க பின்னால் நின்ற சாவித்திரி கூறியிருப்பார் என்று புரிந்து கொண்டார்.
தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தவரை, “உள்ளே வாங்க…” என்ற மீனா, “மித்ரா, வாப்பா…” எனவும், அவன் வேகமாய் உள்ளே அறைக்குள் சென்றுவிட்டான்.
“வாங்க…” என்றவர் பூஜை அறையின் முன்பு அவரை நிக்க வைத்து, “மித்ரா… இங்கே வா…” என்று குரல் கொடுக்கவும், மறுபேச்சு பேசாமல் அங்கே வந்த மித்ரனின் முகத்தில் கோபத்தின் சாயல் தெரிந்தது.
“பவித்ரா… உன் மாமா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கங்க…” என்றதும், முறுக்கிக் கொண்டு நின்ற கணவனின் கையைப் பிடித்து இருவருமாய் தம்பதியரின் காலில் விழுந்து வணங்க, “தீர்க்காயுசோட ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க…” வாழ்த்தினார்.
“மித்ரா… எப்படிப்பா இருக்கே…” நடுங்கிய குரலுடன் வந்த அவரது நலம் விசாரிப்பில் அனலாய் ஒரு பார்வையை வீசியவன், “இவ்ளோ நாள் நான் எப்படி இருப்பேன்னு யோசிக்காம தானே இருந்திங்க… இப்போ மட்டும் என்ன…” என்றான் சிடுசிடுப்புடன். மகனது நியாயமான கோபம் புரிய தவிப்புடன் மனைவியைப் பார்த்தவரைக் காண பவித்ராவுக்குப் பாவமாய் இருந்தது.
“மித்ரா… என்னப்பா இது… இத்தனை வருஷம் கழிச்சுப் பார்க்கற அப்பாகிட்ட இப்படியா பேசறது…” என்றார் மீனா சற்று கண்டிப்புடன்.
“வேற எப்படிம்மா பேசணும்… நம்மளோட நினைப்பே இல்லாம திடீர்னு ஒருநாள் நம்மை அம்போன்னு விட்டுட்டுப் போனவர்தானே… இப்போ அக்கறையா விசாரிச்சா சரியாப் போயிடுமா…”
அவனது குரலில் ஆதங்கமும், வருத்தமும், கோபமும் ஒரு சேரக் கலந்திருந்தது. பேசும்போதே முகம் சிவந்து கண்கள் கலங்கியிருந்தன.
“அத்தை… மாமாவை உக்கார சொல்லுங்க… ரொம்ப சோர்வா தெரியறார்… நான் ஜூஸ் எடுத்திட்டு வரேன்…” என்றவள் கணவனை அர்த்தத்துடன் ஒரு பார்வை வீசி, அமைதியாய் இருக்கும்படி சொல்லிவிட்டு சென்றாள்.
வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற சாவித்திரியிடம், “அக்கா… சீக்கிரம் சமையலை முடிப்போம்…” என்றவள், “கூட ஒரு பாயசம் வச்சிடலாம் க்கா…” என்று சொல்லி மளமளவென்று ஜூஸ் கலந்து கொண்டு போய் கொடுத்துவிட்டு, “நீங்க பேசிட்டு இருங்கத்தை… சீக்கிரம் சமையல் முடிச்சிடறேன்…” என்றவள் விட்டுப் போன சமையலை வேகமாய் முடிக்கத் தொடங்கினாள்.
மூவரும் மீனாவின் அறையில் அமர்ந்திருந்தனர். மகனின் கோபமும், கலக்கமும் மனதை வருத்த, “அப்பா சொல்லுறதைக் கேளு மித்ரா…” என்றார் மீனா.
“இனி என்ன சொல்லப் போறார்… இவர் இல்லாம நாம எவ்ளோ தவிச்சுப் போனோம்… எப்படில்லாம் வேதனைப் பட்டோம்… எல்லாரும், நீங்க ஏதோ தப்புப் பண்ணினதால தான் அப்பா வீட்டை விட்டு ஓடிப் போயிட்டார்னு உங்களைக் கொடுமைக்காரி ரேஞ்சுக்கு எவ்வளவு கேவலமாப் பேசினாங்க… இதெல்லாம் யாரால…” வேதனையுடன் வந்தது அவனது வார்த்தைகள்.
அவனைக் கனிவோடு பார்த்த ராசிநாதன், “மித்ரா… நான் செய்தது தப்புதான்… அன்னைக்கு என் மனசு ஒரு நிலையில் இல்லை… நான் செய்த ஒரு பாவம் என் மகனை, நம்ம குடும்பத்தை தண்டிச்சிருமோன்னு ரொம்ப பயந்தேன்… என்ன செய்தா பித்தம் தெளியும்னு தெரியாம தவிச்சுகிட்டு இருந்தேன்…” வருத்தமாய் பேசத் தொடங்கிய தந்தையிடம் அதற்கு மேல் கோபத்தைப் பிடித்துவைக்க முடியாமல் திரும்பினான் மித்ரன்.
“தப்புக்கான பிராயச்சித்தம் செய்யவும் முடியாம வாழ்க்கையே வெறுத்துப் போயிருச்சு… உங்ககிட்டே காரணத்தை சொல்லவும் முடியாம, தூங்க முடியாம, தொண்டைக்குள் முள்ளா வருத்திகிட்டே இருந்துச்சு… செத்துடலாம்னு கூடத் தோணுச்சு… என் பாவம் உன்னைத் தாக்கிடக் கூடாதுன்னு தான் கடவுளை சரணடைஞ்சு என் பாவத்தைக் கழுவ நினைச்சேன்… உங்ககிட்டே சொன்னா என்னைப் போக விடமாட்டீங்கன்னு சொல்லாமப் போயிட்டேன்…” சொல்லி நிறுத்தியவரைக் குழப்பமாய் ஏறிட்டவன், “அப்படி என்னப்பா, சரி பண்ண முடியாத தப்பைப் பண்ணினீங்க…” என்றான் மித்ரன்.
வாழ்க்கையை
அழகாக்கவே கற்பனைகள்….
அலங்கரிக்கவே கனவுகள்….
அலங்கோலமாக்க சில நிஜங்கள்…
ஆனாலும் வாழ்க்கை வாழ்வதற்கே….
 
இமைப்பீலி தொடரும்…

Advertisement