Advertisement

இமை – 25
ன்னங்க, எழுந்திருங்க… இன்னைக்கு சீக்கிரமா மில்லுக்குப் போகணும்னு சொன்னிங்களே… டைம் ஆச்சு பாருங்க…” பவித்ரா உறங்கிக் கொண்டிருந்த கணவனை எழுப்பிக் கொண்டிருந்தாள்.
அவள் குரல் கேட்டு எழுந்தவன், “குட் மார்னிங் பவி…” எனவும், பதிலுக்கு குட்மார்னிங் சொல்லி ஒரு புன்னகையை உதிர்த்தவள் “சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க… நான் காபி எடுத்திட்டு வரேன்…” அவன் குளியலறைக்கு செல்லவும், கலைந்திருந்த படுக்கை விரிப்பை சரி செய்து விட்டு காபி எடுத்துவரச் சென்றாள்.
காபியுடன் அவள் மேலே வரவும் குளித்து முடித்து இடுப்பில் வெறும் டவலை சுற்றிக் கொண்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தான் மித்ரன். அவனைக் கண்டதும் சட்டென்று கூச்சத்தில் பார்வையை மாற்றிக் கொண்டவளின் அருகில் வந்து நின்று வேண்டுமென்றே தலையை சிலுப்பினான்.
அவள் மேல் தெறித்த நீர்த்துளிகள் சிலிர்ப்பூட்ட அவன் மீதிருந்து வந்த சோப்பின் வாசம் இதமான சுகமாய் நாசியை வருடியது. அவளது கிறக்கம் புரிந்து மீண்டும் தலையை சிலுப்ப சிலிர்ப்புடன் நிமிர்ந்தாள்.
அவளையே சிரிப்புடன் அவன் பார்த்துக் கொண்டிருக்க, நாணத்துடன் குனிந்து கொண்டவள், “என்னங்க, இது விளையாட்டு…” என்றாள் முறைப்புடன்.
“இதெல்லாம் என்ன விளையாட்டு பவி… நீ மட்டும் ஐயாவை இறங்கி ஆட விட்டேன்னு வையேன்… பத்தாம் மாசமே உனக்கு ரிசல்ட் தெரிஞ்சிடும்… ஹூம்… நீ தான் தடா போட்டு இந்தக் காளையைக் கட்டிப் போட்டுட்டியே…”
அவன் சலிப்புடன் சொல்லவும் முதலில் புரியாமல் விழித்தவள், பிறகு கூச்சத்துடன் நெளிந்தாள்.
“ச்சீ… என்ன பேச்சு இது… காபி நீங்களே எடுத்துக் குடிச்சுக்கங்க… நான் கீழே போறேன்…” நழுவியவளின் கையைப் பிடித்து இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொள்ள திமிறினாள்.
“விடுங்க… காலைல விளையாடிட்டு…”
“அப்ப நைட் விளையாடினா ஓகே வா பவி…” புருவத்தைத் தூக்கிக் கொண்டு கிண்டலாய் கேட்டவன் அவளது கழுத்தில் முகத்தை உரச, அவனது மீசை குத்தியதில் தேகமெங்கும் சிலிர்க்க தவித்து முகத்தை திருப்பிக் கொள்ள கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான்.
முத்தமிட ஏதுவாக தான்
இருக்கிறது – நீ முகம்
திருப்பும்போது எனைப் பார்த்து
முறைக்கும் உன் கன்னம்…
அவளது முகமெங்கும் பரவிய சிவப்பை ரசித்துக் கொண்டே நெற்றியில் முத்தமிட அவனது கைக்குள் குழையத் தொடங்கியவளை மெல்ல விடுவிக்கவும், “அந்த அணைப்பு இன்னும் தொடரக் கூடாதா…” மயக்கம் நிறைந்த கண்களோடு ஏறிட்டாள்.
“கண்ணைப் பாரு… காந்தக் கண்ணி… அப்படியே என்னை உள்ளுக்குள்ளே இழுக்குறடி… ஹூம்… இன்னும் எத்தனை நாள்தான் இப்படியே பக்கத்துல பாயசத்தை வச்சுட்டு மோந்து பார்த்துட்டு குடிக்காம இருக்கறதோ…” அவன் புலம்பலாய் சொல்லவும் புன்னகைத்து, அவன் கன்னத்தில் செல்லமாய் குத்திவிட்டு ஓடிவிட்டாள்.
மனம் திறந்து பேசிவிட்டால் மாறிடாத வருத்தம் உண்டா… மனதில் உள்ளதை எல்லாம் இருவரும் கொட்டித் தீர்த்ததும் மனது லேசாகிப் போனது. கீழேயிருந்த அறையில் இருந்து மாடியில் அவர்களின் அறைக்கு இடம் பெயர்ந்தாலும் ரோஹிணியின் கல்யாணம் முடிந்த பிறகு தான் தங்களுக்குள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ற பவித்ராவின் உடன்படிக்கைக்கு மித்ரன் சம்மதித்தே இருந்தான். ஆனாலும் சில சில்மிஷங்களுக்காய் உடலும், கையும் முயலும்போது அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. சந்தோஷமான அந்த உணர்வுகளை ரசித்துக் கொண்டே ஆசைகளை மனதில் தேக்கி காத்திருக்கத் தொடங்கினர்.
பவித்ரா அடுக்களையில் இருக்க, அவளைத் தேடி வந்த மீனலோசனி மிகவும் தளர்ந்திருந்தார்.
“பவித்ரா…”
“சொல்லுங்க அத்தை…”
“நான் பக்கத்துக்கு ஊர் அம்மன் கோவிலுக்குப் போயிட்டு வந்து சாப்பிடறேன்… எனக்காகக் காத்திருக்க வேண்டாம்… மித்ரன் கிட்டே சொல்லிடுமா… சாவித்திரி இன்னைக்கு ஊருல இருந்து வந்திடுவேன்னு சொல்லிருக்கா…”
“சரிங்க அத்தை…” அவள் தலையசைக்கவும் கிளம்பினார். மீனா ஊரிலிருந்து திரும்பி வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. மனதில் உள்ள வருத்தம் அவரை மிகவும் வாட்ட பவித்ராவிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார்.
“நடந்தது முடிந்த விஷயம்… இனியும் அதுக்காக உங்களை வருத்திக்க வேண்டாம் அத்தை… நீங்க பொய்யா இந்தக் கல்யாணத்தை நடத்தினாலும் மறைமுகமா எனக்கு நல்லது தான் பண்ணி இருக்கீங்க… இல்லேன்னா நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருப்பேனா…” என்று தன்னைத் தானே குத்திக் காட்டி அவளுக்கும் சேர்த்து சமாதானம் சொல்லுவாள் பவித்ரா.
என்னதான் பவித்ரா அவரிடம் கோபத்தைக் காட்டாமல் இருந்தாலும் மீனாவின் மனம் வருந்தவே செய்தது. மகன் தொழிலைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் அவரும் ஓய்வெடுக்க நினைத்தார். மனதில் உள்ள வருத்தமும் குற்றவுணர்வும் மாறுவதற்காய் தினமும் கோவிலுக்கு செல்லத் தொடங்கி இருந்தார்.
“பவி…” அழைத்துக் கொண்டே சட்டையின் கையை மடித்துவிட்டுக் கொண்டு கீழே இறங்கிவந்தான் மித்ரன். 
பூஜையறையின் முன் நின்று கடவுளை வணங்க, “இவர் வேற, தினமும் என்னமோ யுத்தத்துக்குப் போற மாதிரி காலைல குங்குமம் வச்சு அனுப்பி விடணும்னு கட்டளை போட்டுட்டு…” மனதுக்குள் செல்லமாய் சிணுங்கினாலும் சந்தோஷமாய் அவன் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டவளை கண்ணில் நிறைத்துக் கொண்டான் மித்ரன்.
ஏதோ சாதனை செய்வது போல்
சலித்துக் கொள்ளாதடி… நீ
தொட்டு வைக்கும் குங்குமத்தில்
ஒட்டிக் கிடக்கிறது என் மனசு…
 
அவள் கையால் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்துக் கொண்டால் நாள் முழுதும் மனதில் உற்சாகமாய் இருப்பதாய் உணர்ந்தான். உணவு மேசைக்கு வந்தவனுக்கு சூடான ஆப்பமும் தேங்காய் பாலும் காத்திருக்கவும் முகம் மலர்ந்தது. தனி விருப்பமில்லாமல் இருந்தவனுக்குப் பிடித்ததாய் பார்த்து பவி சமைக்கத் தொடங்கியிருந்தாள்.
“வாவ்… சூப்பர் பவி… எனக்குப் பிடிக்கும்னு செய்தியா…”
“இல்ல… அத்தைக்குப் பிடிக்கும்னு செய்தேன்…” எனவும், வியப்புடன் மனைவியை ஏறிட்டான். “அம்மாவுக்குப் பிடிக்கும்னா…” அதிசயமாய் கேட்டான்.
“ம்ம்… அத்தை ஒழுங்காவே சாப்பிட மாட்டேங்கிறாங்க… நடந்த விஷயத்தையே நினைச்சு அலட்டிக்குறாங்க போலருக்கு… நான் போகட்டும், பரவால்லன்னு சொல்லியும் சமாதானம் ஆகாம கோவில், கோவிலாப் போயிட்டு இருக்காங்க… அதான், அவங்களுக்குப் பிடிச்சதா செய்து வச்சாலாவது நல்லா சாப்பிடட்டும்னு செய்தேன்…” சொன்னவளைப் பெருமையுடன் பார்த்தான்.
கணவன் தன்னையே விழுங்குவது போல பார்க்கவும் கூச்சத்துடன், “எதுக்கு இப்படிப் பார்க்கறிங்க… கண்ணு சுளுக்கிடப் போகுது…” சிணுங்கினாள். “அச்சோ, அன்பால என்னைக் கொல்லறடி… ராட்சஷி… உன்னால மட்டும்தான் இப்படி இருக்க முடியும்” என்றவன் அவளைக் காதலோடு பிடிக்க வர எட்டி நின்றவள்,
“போதும் போதும்… ரூல்ஸ் மறந்திடாம சாப்பிட்டுக் கிளம்புங்க… டைம் ஆச்சு…” என்றாள் சிரிப்புடன்.
“இவ ஒருத்தி… மனுசனோட அவஸ்தை தெரியாம ரூல்ஸ் பேசிட்டு…” என்றவனை சிரிப்புடன் முறைக்க, “ஹூம்… சிரிசிரி… இந்த சிரிப்புக்கெல்லாம் சேர்த்து வச்சு வட்டியோட வசூல் பண்ணிக்கறேன்…” என்றவன், சாப்பிடத் தொடங்க புன்னகையுடன் பரிமாறத் தொடங்கினாள்.
“ஏங்க, உங்க பிரண்டு ராகவ் நாளைக்குதானே சென்னை வர்றதா சொன்னிங்க… அவரை அழைக்க ஏர்போர்ட்டுக்குப் போகலையா…”
“இல்ல பவி, என்னை வர வேண்டாம்னு சொல்லிட்டான்… நாளை மறுநாள் அவனே இங்கே வரேன்னு சொன்னான்…”
“ம்ம்… சரிங்க… அப்புறம் ரோஹிணி கிட்டே பேச சொன்னேனே… பேசினிங்களா…”
“நான் கூப்பிட்டேன் பவி… அவ எடுக்கலை… சரி உன்னை மாதிரி எல்லாரும் புரிஞ்சுகிட்டு உடனே கோபத்தை விட்டிருவாங்களா என்ன… உன்னோட பேசினான்னு சொன்னியே… அதுவே எனக்கு சந்தோசம் தான்…”
“அப்புறம், நான் சொன்ன அந்த விஷயம்…” தயங்கினாள்.
“எந்த விஷயம், உன் அத்தை பொண்ணுங்க கல்யாணம் தானே…” சற்று கோபத்துடன் கேட்டான்.
“ம்ம்… என்ன இருந்தாலும் யாரும் இல்லாத எனக்கு ஆதரவு கொடுத்தது மாமா தானே… அவருக்காக நினைச்சாவது நாம இதைப் பண்ணக் கூடாதா…” உதடுகள் சொன்னாலும்  மனது அவளைக் கேள்வி கேட்டது.
“எந்த உரிமையில் அவனிடம் இப்படிக் கேட்கிறாய்… அதுவும் அவர்கள் பண்ணி வைத்த வேலைக்கு பணம் கொடுத்து உன் இஷ்டப்படி உதவ இது என்ன உன் சம்பாத்தியமா… உன் கணவனை எப்படி நிர்பந்திக்கலாம்…”
“என் கணவனிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேப்பேன்… அவரிடம் கேட்க எனக்கு உரிமை இல்லையா…” மனதுக்குள் நடந்த போராட்டம் முகத்தில் குழப்பமாய் படிய, அவளையே பார்த்துக் கொண்டிருந்த மித்ரன் அழைத்தான்.
“பவி… என்ன யோசிக்கறே… சரி, நீ இவ்ளோதூரம் சொல்லுறதாலே ஓகே சொல்லறேன்… அதும் ரெண்டு பேருக்கும் நம்ம கல்யாண செலவுல ஒரே மேடைல கல்யாணம்… மத்த செலவு, சீர்வரிசை எல்லாம் அவங்களே பார்க்கட்டும்… தன்னோட பொண்ணுங்க நல்லார்க்கணும்னு நினைக்குற மனசு நீ எப்படிப் போனாலும் பரவால்லன்னு தானே நினைச்சது…” சொல்லிக் கொண்டே சாப்பிட்டு முடித்து எழுந்தான்.
“ம்ம்… சரிங்க… அந்த வரைக்கும் மாமாவுக்கு கஷ்டம் குறையுமே… இதுக்கு நீங்க சம்மதிச்சதே ரொம்பப் பெரிய விஷயம்…” சொன்னவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, “தேங்க்ஸ்…” சொல்லி ஓடிவிட்டாள்.
முதன் முறையாய் அவளாக சந்தோசத்துடன் கொடுத்த முத்தத்தில் சிலிர்த்து நின்றவன் சிரித்துக் கொண்டான்.
“பவி…” சொல்லும்போதே மனம் காதலில் நெகிழ்ந்தது.
“என்ன மாதிரிப் பெண் இவள்… இவளுக்கு துரோகம் செய்தவங்களுக்கும் நன்மையை மட்டுமே நினைக்க இவளால் எப்படி முடிகிறது… இவளைப் போல ஒருத்தி என் வாழ்க்கைல வரக் காரணமா இருந்ததுக்காகவே  அவ அத்தைக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கேன்… அதுக்காகவே அவங்க பொண்ணுக்கு என் செலவுல கல்யாணம் நடத்தி வைக்கிறேன்…” யோசித்துக் கொண்டே வாசலுக்கு வர அவனது காரைத் துடைத்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.
“நீ எதுக்கு பவி இதெல்லாம் செய்யறே…” கேட்டவனைப் புன்னகையுடன் பார்த்தவள், “உங்களுக்கு எல்லாமே நானே பார்த்து செய்தா தான் எனக்கு திருப்தி…” என்றாள் சிரிப்புடன். “ஹூம்… இதெல்லாம் பார்த்து செய்… பக்கத்தில் வந்தா மட்டும் ரூல்ஸ் பேசு…” மெல்லிய குரலில் எங்கோ பார்த்துக் கொண்டே அவன் சொல்ல அவளது கன்னம் செம்மை பூசிக் கொண்டது.
“ஏங்க… இப்போ கால் வலி இருக்கா…”
“ம்ம்… இல்ல பவி… குறைஞ்சிருக்கு…”
“நல்லவேளை, வலிச்சதும் உடனே டாக்டரை வர சொல்லிப் பார்த்தது நல்லதாப் போயிருச்சு… இல்லேன்னா காலில் ஜவ்வு விலகி பிரச்சனை ஆகிருக்கும்… சரிங்க நீங்க பத்திரமாப் போயிட்டு வாங்க…”
“ம்ம்… நான் வர்றதுக்கு சாயந்திரம் ஆகிடும்… அம்மா வந்தா சொல்லிடு பவி…” சொன்னவன் காரில் அமர்ந்து வண்டியை உசுப்ப, குழந்தையாய் புன்னகையுடன் கையசைத்து டாட்டா சொல்லிக் கொண்டிருந்தாள் அவள். நிறைந்த மனதுடன் காரைக் கிளப்பினான் அவன்.
பஞ்சாக மனமும் மிதக்குதடி
பளிங்கான உந்தன் மனசைக் கண்டு…
எட்டியே நீதான் நின்றாலும்
எனக்குள் உணருகின்றேன்
எனதான உன் இதயத்தின் துடிப்பை…
ழக்கமாய் வரும் உள்ளூர் கோவில் அல்லாமல் பக்கத்துக்கு ஊர் அம்மன் கோவிலுக்கு வந்திருந்தார் மீனலோசனி. பூஜை முடித்துவிட்டு பிரகாரத்தை சுற்றிவிட்டு வந்து அமர்ந்தார். அடுத்தடுத்து குடும்பத்தில் நடந்த விஷயங்களால் வெகுவாய் வேதனைப் பட்டிருந்த மனம் இப்போது ஒருவழியாய் எல்லாம் கலங்கித் தெளியவும் சற்று சமாதானம் அடைந்திருந்தது.
ஆனாலும் மித்ரன், ரோஹிணி வாழ்க்கையில் குழப்பம் வரத் தானே காரணமானோமே என்ற வருத்தம் மறையாமல் மனதுக்குள் சுருண்டு போனவர் கோவிலுக்கு வந்து நிம்மதி தேடினார். இப்போது பவித்ரா மித்ரனோடும், தன்னோடும் சகஜமாய் பேசினாலும் அவர் மனதுக்குள் ஒரு உறுத்தல் இருந்தது.
சோமுவுக்கு தங்கையின் மீதும், மித்ரன் மீதும் உள்ள கோபம் முழுதாய் மாறியிருக்கவில்லை. ரோஹிணி பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாய் இருக்கவே சற்று அமைதியானவர், அவளுக்கு படிப்பு முடிந்ததுமே நல்ல வரனாய் பார்த்து திருமணத்தை முடித்துவிட வேண்டும்… என்று நினைத்துக் கொண்டார்.  ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தவர், அருகில் யாரோ வருவது தெரிந்ததும் நிமிர்ந்தார்.
“மீனாக்கா, நல்லாருக்கீங்களா…” அவரது உறவுக்காரப் பெண் ஒருத்தி நலம் விசாரித்து அருகில் அமர்ந்தார்.
“நல்லாருக்கேன் சாந்தி… நீ எப்ப ஊருல இருந்து வந்தே…”
“என் பொண்ணு இப்ப மாசமாருக்கா… நாலு மாசம் ஆச்சு… அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்…”
“ஓ… அபிராமியா… நல்லாருக்காளா…”
“ம்ம்… அவளுக்கென்ன, நல்ல புருஷன்… கல்யாணம் ஆகி உடனே மாசமாகிட்டா… புகுந்த வீட்டுல தாங்குறாங்க…” சொன்னவர் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது.
“ஓ… ரொம்ப சந்தோசம் சாந்தி…” சொன்னவருக்கு மித்ரன் கல்யாணத்திற்குப் பிறகுதானே அவரது மகள் கல்யாணம் நடந்தது என்ற நினைவு வந்தது.
“என்னக்கா, நீங்க மட்டும் தனியாவா வந்தீங்க… மருமக வரலியா… மித்ரன் கால் சரியாகிடுச்சா… மருமகளுக்கு ஏதாச்சும் விசேஷமா…” என்று கேள்விகளை அடுக்கினார்.
“மித்ரனுக்கு பரவால்லை… அவளுக்கு விஷேசம் இன்னும் இல்லை…” சொல்லும்போதே முகம் குற்றவுணர்வில் சுருங்கியது.
“சரி… நீங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க… மருமக ஏதாச்சும் கொடுமை பண்ணுறாளா…”
“அச்சச்சோ பவித்ராவா… அதெல்லாம் இல்லை சாந்தி… என் மருமக ரொம்ப நல்ல பொண்ணு…” சொல்லும்போதே குரல் இடறியது.
“அப்புறம் ஏன்க்கா ஒரு மாதிரி இருக்கீங்க… உடம்பு ஏதும் சரியில்லையா…”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா… உடம்புக்கு நல்லாத்தான் இருக்கு… மனசுதான், ஏதோ பழசெல்லாம் நினைச்சு ஒரு மாதிரி இருக்கு…”
“ஓ…” என்று யோசித்தவர், “ஒரு வயசுக்கு மேல ஏதாவது கவலை வந்து ஒட்டிக்குது… அக்கா, ஒவ்வொரு தமிழ் மாசமும் முதல் வெள்ளிக்கிழமை ஆன்மீகத்தில் கரை கண்ட சாமி ஒருத்தர் இங்கே வருவார்… அவர் பக்தியோட சொல்லுற கதைகளை கேட்டா  நம்ம கவலை எல்லாம் காணாமப் போயிடும்… நாளைக்கு தான் முதல் வெள்ளி… நீங்களும் வந்து அவரைப் பாருங்களேன்…” என்றார்.
“அவர் என்ன தீர்வு சொல்லப் போறார்… நம்ம கவலையை நாமதானே சரி பண்ணனும்…”
“இல்லக்கா… இதுக்கு முன்னாடி வந்து பார்த்தவங்க சொன்னாங்க… அவர் காசி சிவன் கோவில்ல ரொம்ப வருஷம் இருந்தவராம்… பெரிய மகான்… நம்ம மனக் கஷ்டத்தை சொன்னா, பிரச்சனைக்கு நல்ல தீர்வு கூட  சொல்லுறார்னு சொன்னாங்க…” என்றார் சாந்தி.
“ம்ம்… சரி நானும் நாளைக்கு கோவிலுக்கு வந்து பார்க்கறேன்… இப்ப வீட்டுக்கு கிளம்பறேன்… நீயும் என்னோட வர்றியா…” என்றார்.
“சீக்கிரமே மருமக உண்டாகிட்டான்னு நல்ல விஷயம் சொல்லுங்கக்கா… வீட்டுக்கு பலகாரத்தோட வந்து பார்க்கறேன்… இப்போ என்னைப் போற வழியில பஸ் ஸ்டாப்புல விட்டாப் போதும்…” அவர் சொல்லவும் தலையாட்டியவர், டிரைவரிடம் சொல்லி இறக்கிவிட்டு அவர்கள் வீட்டை நோக்கி கார் செல்ல, மனம் முழுதும் சாந்தியின் வார்த்தைகளே ஒலித்துக் கொண்டிருந்தது.
விழி மீது கோபம் கொண்டு
விலகிப் போகும் இமையேது…
விண்ணில் புதைந்து போகும் நிலவை
இழுத்துக் கொள்ளும் முகிலாய்
கலையாத கனவாய் உனைக்
கண்களுக்குள் காப்பேன்… உன்
கண்களுக்குள் தொலைந்த என்னை
கருவிழியில் மீட்டெடுப்பேன்…
இமைப்பீலி வரும்…

Advertisement