Advertisement

இமை – 24
வெகுநாட்களுக்குப் பிறகு மண் தொட்ட மழையால் மண்ணோடு மனதும் குளிர்ந்திருந்தது ரோஹிணிக்கு. ஒரு நொடியில் உலகம் மிகவும் அழகாய் மாறிவிட்டது போல சந்தோஷமாய் உணர்ந்தாள். மழை ஓய்ந்து மிகவும் மெல்லிய தூறல் மட்டுமே இருந்தது. அது உற்சாகமாய் அவள் மனதுக்குள்ளும் தெறித்துக் கொண்டிருந்தது.
அந்த உற்சாகத்துக்குக் காரணம் ராகவ். மித்ரனின் நண்பன் ராகவ் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறான். அதுவும் அவளுக்காகவே வரப் போகிறான் என்ற விஷயம் ஆனந்தத்தைக் கொடுத்தது.
முகம் முழுதும் உற்சாகப் புன்னகை வழிய ஜன்னல் அருகில் அமர்ந்து லாப்டாப்பில் ஆழ்ந்திருந்தாள். விரல்கள் கீபோர்டில் தட்டிக் கொண்டிருக்க, எதிர்ப்புறம் இருந்து வரும் பதிலில் சந்தோஷம் கொண்டு அவள் இதழ்கள் அடிக்கடி விரிந்தன.
அந்தப் புன்னகைக்குக் காரணமானவன் அவளோடு சாட் பண்ணிக் கொண்டிருந்த அதே ராகவ்.
“ஹே பேபி… இப்போ உன் பேஸ்கூட பிங்கிஷா மாறி இருக்குமே…” அவன் எதோ கேட்டுவிட்டு அவளது ரியாக்சனை யோசித்து சிரித்தான்.
“போங்க ராகி… நீங்க ரொம்ப மோசம்… நான் அவ்ளோ ஒண்ணும் லிப்ஸ்டிக் போடறதில்லை… சும்மா லைட்டா போடுவேன்… அதுக்காக பெயின்ட் அடிச்சியா, என்ன பெயின்ட்னு கிண்டல் பண்ணறீங்க… என் லிப்ஸ் இயற்கையாவே ரெட்டா இருக்குன்னு பிரண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க… போங்க, நான் கோவமா கிளம்பறேன்…” சிணுங்கினாள்.
“ஹேஹேய்… போயிடாதே பேபி… நான் சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன்… நான் நேர்ல வந்து பார்த்து தெரிஞ்சுக்கறேன்… உன் லிப்ஸ் இயற்கையாவே சிவப்பா இருக்குமா… இல்லை, உன் போட்டோ அப்ளிகேஷன் லிப்ஸ்டிக் அதிகமா போட்டு விட்டிருக்கான்னு… நேர்ல பார்த்து, உன் லிப்சை டெஸ்ட் பண்ணிக்கறேன்…” குதூகலமாய் சொல்ல அவளுக்கு நிஜமாலுமே வெட்கம் வந்துவிட்டது.
“ச்சீ… போங்க ராகி… எனக்கு வெக்கமா வருது…”
“ஓ காட்… இந்த அதிசயத்தை எனக்கு பார்க்க முடியாமப் போயிருச்சே… இப்போ நான் மட்டும் உன் பக்கத்தில் இருந்திருந்தா என்ன பண்ணிருப்பேன் தெரியுமா…”
அவன் வார்த்தையை யோசித்தவள் மனம் சிறகில்லாமல் பறக்கத் தொடங்கியது தேகமெங்கும் ஒரு உணர்வலை பாய்ந்து கிறங்க வைக்க, “என்ன பண்ணிருப்பீங்க… ராகி…” அதை டைப் பண்ணும்போதே அவளது மனம் அவனது அருகாமைக்கு ஏங்கியது.
“ம்ஹூம்…. சொல்ல மாட்டேன்… அதெல்லாம் பிராக்டிகலா செய்து காட்ட வேண்டியது பேபி… ஹஹா…” அவன் சிரிக்கவும் அவள் உதடுகளும் விரிந்தன.
“ஹஹா, உங்கள இப்பவே பார்க்கணும் போல இருக்கு…”
“எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லையா பேபி… இன்னும் அஞ்சு நாள்ல உன்னைப் பார்க்க பறந்து வரப் போறேன்… ஆனா அஞ்சு வருஷம் காத்திருக்குற போலத் தோணுது…”
“ம்ம்…” என்றவள் மனம் அவன் அன்பில் உருகியது.
“தேங்க்ஸ் ராகி…”
“எதுக்கு பேபி…”
“கண்ணாடியா சிதறிப் போக இருந்த என்னை, என் மனசை சிதறவிடாம காப்பாத்தினது உங்க நட்பும், காதலும் தான்… நீங்க மட்டும் எனக்குக் கிடைக்காமல் இருந்திருந்தா என்னோட சேர்த்து அத்தான் வாழ்க்கையையும் நான் நாசம் பண்ணியிருப்பேன், உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது…”
“பேபி… அப்படிப் பார்த்தா நீதான் எனக்கு வாழணும்கிற ஆசையையே கொடுத்தே… இல்லேன்னா எப்பவோ நான் மண்ணோட மண்ணாகிப் போயிருப்பேன்… மனம் தளர்ந்து நின்ன என்னை உன்னோட உற்சாகமும், சந்தோஷமான பேச்சும் தான் மீட்டுக் கொடுத்தது… உனக்கு நான்தானே முதல்ல நன்றி சொல்லணும்…” அவனது வார்த்தைகளும் நெகிழ்ச்சியாய் வெளிப்பட்டது.
இருவரின் மனமும் பழைய நினைவுகளின் சுகத்தில் சுகமாய் இளைப்பாறத் தொடங்கியது.
“ரோஹி…” இதமாய் மனம் வருடும் அழைப்பு.
“ம்ம்…” அவனது அடுத்த வார்த்தைக்கான எதிர்பார்ப்புடன்.
“ஐ லவ் யூ…” உயிரைக் குழைத்து வந்த வார்த்தைகள்.
“மீ டூ ராகவ்…” சொன்னவள், அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்கவும், “சரி நான் அப்புறம் பேசறேன்… பை…” என்றாள். “ம்ம்… மிஸ் யூ பேபி…” என்றவன், ஒரு உம்மா ஸ்டிக்கரைப் போட்டு தொடர்பைத் துண்டித்தான்.
சிரிப்புடன் எழுந்து கதவைத் திறந்தவள் வெளியே அன்னை நிற்கவும், “என்னம்மா…” என்றாள்.
மித்ரனின் விஷயத்தால் மகள் மிகவும் கோபத்துடன் இருப்பாள்… மனமுடைந்த அவளை எப்படி ஆறுதல் படுத்துவது என்ற யோசனையுடன் தான் ஊரிலிருந்து சுந்தரி, மீனாவை அழைத்துக்கொண்டு கிளம்பி வந்தார். ஆனால் அவர் எண்ணத்திற்கு மாறாக ரோஹிணி மிகவும் கூலாய் இருந்தாள். எப்போதும் இருப்பதைவிட உற்சாகமும் துள்ளலும் கூடியே இருந்தன.
“ம்ம்… மகள் அதையே நினைத்து வேதனைப்படாமல் இருந்தால் சரி…” என்று அவரும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். மீனா, சோமுவுடன் மட்டும் அதிகம் பேசாமல் ரோஹிணி, அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலை மட்டும் சொல்லிவிட்டுச் சென்றிடுவாள்.
“அவளது விருப்பம் நிறைவேறாமல் போனாலும் இந்த மட்டிலும் ஒடிந்து போகாமல் இருக்கிறாளே… அவளுக்கு பொருத்தமாய் ஒரு வரனை சீக்கிரமே கண்டு பிடித்துவிட வேண்டும்…” என்பதே இப்போதைய அவரது யோசனையாய் இருந்தது. புன்னகையுடன் நின்ற மகளைக் கண்டு ஒரு நெடிய மூச்சை வெளியேற்றியவர்,
“ரோஹி… பவித்ரா உன்னை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டா… அவளுக்கும் இந்த விஷயம் ரொம்பப் பெரிய ஷாக் தான்…  உன்னோட பேசணும்னு சொன்னா… லைன்ல இருக்கா… கொஞ்சம் பேசு மா…”
சொன்ன அன்னையை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர் நீட்டிய அலைபேசியை வாங்கிக் கொண்டவள் “நீங்க போங்கம்மா…” என்றாள் அமைதியாக.
அவளது நிதானமும், அமைதியும் அவருக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது என்றே சொல்லவேண்டும்… அமைதியான பவித்ரா படபடக்கும் பட்டாசாய் பொரிய, எப்போதும் படபடத்து பதிலுக்கு பதில் கூறும் மகளின் இந்த அமைதி அவருக்குப் புரியாவிட்டாலும் அவளிடம் ஏதோ ஒரு பக்குவம், நல்ல மாற்றத்தைத் தந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. 
அன்னை நகரவும், கதவை வெறுமனே சாத்திவிட்டு கட்டிலில் அமர்ந்தவள் காதில் வைத்து ஹலோவினாள்.
“ஹலோ…” சற்றும் பிசிறில்லாத நிதானமான குரல்.
“ரோஹி… நா…நான் பவித்ரா பேசறேன்…”
“தெரியும்… அத்தை வீட்டு போன் நம்பர் இன்னும் எனக்கு மறக்கலை…” என்றாள் நிதானமாக. உண்மையில் பவித்ராவுக்கு அவளிடம் ஏதேதோ பேசவேண்டும்… சமாதானம் செய்ய வேண்டும் என்று இருந்தாலும் என்ன பேசுவதென்று தெரியாமல் திணறினாள். ஆனால் நிதானமாய் வேறு முடிவுக்கு வந்துவிட்ட ரோஹிணியிடம் அந்தப் பதட்டம் இல்லவே இல்லை.
“நல்லார்க்கியா ரோஹி…” தயங்கிக் கொண்டே கேட்டாள்.
“ரொம்ப நல்லார்க்கேன்… என்கிட்டே உனக்கு என்ன பேசணும்…” நேரடியாய் விஷயத்துக்கு வந்தாள்.
“அதுவந்து, நடந்த விஷயம் எல்லாம் உனக்கு ரொம்ப மனவருத்தத்தைக் கொடுத்திருக்கும்…”
“ஆமா, ஏன் உனக்கு வருத்தமா இல்லையா…” பட்டென்று கேட்கவும் என்ன பதில் சொல்வதென்று விழித்தாள்.
“இங்க பாரு பவித்ரா… இந்த துக்கம் விசாரிக்கற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்… நீ அந்தளவுக்கு பெரிய தியாகி ஆகவும் வேண்டாம்… சின்ன வயசுல இருந்து எல்லாரும் உசுப்பேத்தி, அத்தான் தான் என் வாழ்க்கைன்னு நானும் ஒரு தப்பான கற்பனைல வளர்ந்துட்டேன்… அதுக்காக நாங்க செய்த விஷயம் மட்டும் தப்பில்லை… என் கற்பனையே தப்புன்னு இப்போ புரிஞ்சுகிட்டேன்… அத்தான் மனசுல நான் இல்லை… அவர் மனசுல நீதான் இருக்கேன்னு எனக்குத் தெரிஞ்சதும் எனக்கு கோபம் வந்துச்சு… ஆத்திரம் வந்துச்சு… ஆனா இவர் இல்லேன்னா எனக்கு வாழ்க்கையே இல்லேங்கிற எண்ணம் எல்லாம் வரலை… இவன் எப்படி என்னை வேண்டாம்னு மறுக்கலாம்னு வெறுப்பு தான் வந்துச்சு… அப்புறம் யோசிச்சப்ப தான் புரிஞ்சது… எனக்கு அத்தான் மேல உள்ளது காதலே இல்லை… கண்மூடித்தனமான கற்பனைன்னு…” நீளமாய் சொல்லிவிட்டு நிறுத்தினாள்.
அவள் பேசுவதை அமைதியாய் காதில் வாங்கிக் கொண்டிருந்த பவித்ராவின் உள்ளத்தில் பலவித உணர்ச்சிகள் கலவையாய் தோன்றி மறைந்தன. மிகப் பெரிய தண்டனை எதிலிருந்தோ தப்பித்துவிட்ட ஆசுவாசம் தோன்றியது.
“இந்த ரோஹிணி நாம் நினைத்தது போல் விளையாட்டுத் தனமான பெண் இல்லை… மிகவும் நிதானமாய் அவளால் யோசிக்கவும்,நடந்ததை சரியான கோணத்தில் அலசவும் செய்திருக்கிறாள்…” என்பது நிம்மதியைக் கொடுத்தது.
“ரோஹிணி… உன்னை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு… வழக்கமா இந்த மாதிரி சந்தர்பத்துல எந்தப் பொண்ணா இருந்தாலும் கோபம் வந்திருக்கும்… பழி வாங்கணும்னு தோணி இருக்கும்… ஆனா நீ ரொம்ப நிதானமா, அழகா யோசிச்சிருக்கே…”
“ம்ம்… ஹலோ, எனக்கும் கோபம் வந்தது உண்மைதான்… ஆனா அதுக்காக பழி வாங்கறேன்னு கிளம்ப நான் ஒண்ணும் வில்லி இல்லை… நான் ரொம்ப பிராக்டிகல்… என் வாழ்க்கையை நாசம் பண்ணிக்க தயாராவும் இல்லை… அத்தான் எப்பவுமே என்னை உருகி உருகி நேசிச்சதும் இல்லை… அவருக்கு என் மேல இருந்த அன்பு ஒரு கமிட்மென்ட் போலதான்… நான்தான் அதை இவ்ளோநாள் தப்பா புரிஞ்சிட்டு இருக்கேன்… இப்போ தெளிஞ்சுட்டேன்…” அமைதியாய் கூறினாள்.
“ரொம்ப சந்தோஷம் மா… உன்னோட பேசினதும் தான் என் மனம் ரொம்பத் தெளிவா இருக்கு… உனக்கு ஆறுதலா பேசணும்னு நினைச்சு தான் கூப்பிட்டேன்… ஆனா உன்னோட பேசினது எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு…”
“ம்ம்… சரி பவித்ரா… நீ எனக்கு எதிரி எல்லாம் இல்லை… முதல்ல, அத்தான் மேல உரிமை எடுத்துகிட்ட உன்மேல கோபப்பட்டேன்… இப்போ அதெல்லாம் இல்லை… சோ எந்த சங்கடமும், குழப்பமும் இல்லாம அத்தானோட சந்தோஷமா குடும்பம் நடத்தற வழியைப் பாரு…” பெரிய மனுஷியாய் தனக்கு உபதேசம் செய்யவும் பவித்ராவுக்கு எல்லா குழப்பங்களும் மாறி சிரிப்பு வந்துவிட்டது.
“அப்படின்னா உனக்கு என் மேல எந்த கோபம் இல்லையா ரோஹி…” மீண்டும் கேட்க, “இவ்ளோ நேரமும் அதைத்தானே சொல்லிட்டு இருந்தேன்…” என்றாள் இவள்.
“ஓகே… அப்படின்னா நாம பிரண்ட் ஆகிடலாமா…”
“அட லூசே… இவ்ளோ நேரம் உன்னை என் பிரண்டா நினைச்சு தானே பேசிட்டு இருந்தேன்… சரி இவ்ளோ நாள் விட்டுப் போன கணக்கெல்லாம் சரி பண்ணப் பாரு… இனியும் என் அத்தான் கிட்டே தள்ளி இருக்காம பொண்டாட்டியா லட்சணமா குடும்பம் நடத்தப் பாரு…”
அவள் சொன்னதைக் கேட்டு சிரித்த பவித்ரா, “சரிங்க பெரிய மனுஷி… இவ்ளோ பேசின உங்களை உடனே நேர்ல பார்க்கணும் போலத் தோணுது… அத்தையோட நீயும் வாயேன் ரோஹி…” என்றாள்.
“ம்ம்… கண்டிப்பா… ஆனா என் வாழ்க்கைல இணையப் போறவரோட ஜோடியா வருவேன் பவித்ரா… சரி, இங்கே இடி இடிக்குது…  நான் வச்சிடட்டுமா…”
“ஹேய்… என்ன சொன்னே… ஜோடியா வருவியா… பார்ரா… அதுக்குள்ளே மாப்பிள்ள பார்த்தாச்சா… யாரும்மா அது…” ஆவலாய் கேட்டவளிடம், “அது சஸ்பென்ஸ்… நான் நேர்ல வரும்போது சொல்லறேன்… பை…” என்றவள் சிரிப்புடன் வைத்துவிட்டாள்.
ரோஹிணி அழைப்பைத் துண்டித்தும் கையிலேயே ரிசீவரை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் பவித்ரா. அவள் மனம் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.
“இந்த ரோஹி என்ன சொல்லுறா… ஜோடியா வர்றாளா… அப்படின்னா மாப்பிள்ளை பார்த்தாச்சா… அத்தை எதுவுமே சொல்லலையே… அப்படின்னா லவ்வா… இவ்ளோ சீக்கிரமாவா… என்னவா இருக்கும்… சஸ்பென்ஸ் தாங்கலையே…” என யோசித்துக் கொண்டே அடுக்களைக்கு சென்றவள் மதிய சமையலை செய்யத் தொடங்கினாள். காலையிலேயே மில்லுக்கு சென்ற மித்ரன் மதிய உணவுக்கு வீட்டுக்கே வந்துவிடுவதாய் கூறியிருந்தான்.
இந்த நான்கு நாட்களில் அவர்களுக்குக் கிடைத்த தனிமை பல காயங்களுக்கு மருந்தாகவும், மாற்றாகவும் அமைந்தது. மித்ரனின் மீது மனதில் இருந்த காதல் இயல்பாய் வெளிப்பட தயக்கங்கள் மெல்ல விலகத் தொடங்கி இருந்தன.
தினமும் சுந்தரியும் மீனாவும் தொலைபேசியில் அழைத்து அவளிடம் பேசினர். மீனாவின் மீதுள்ள வருத்தமும் குறையத் தொடங்கி இருந்தது. ரோஹிணி மட்டுமே மனதில் நெருடலாய் இருக்க, இன்று நிச்சயம் பேசிவிடுவது என்ற தீர்மானத்தில் அழைத்து விட்டிருந்தாள். அவளுடைய பேச்சும், தீர்மானமும் இருந்த கொஞ்சநஞ்ச குழப்பத்தையும் போக்கிவிட்டிருந்தது.
மில்லுக்குப் போகத் தொடங்கிய மித்ரன், வெளிநாட்டில் உள்ள நண்பன் ராகவோடு வேறு ஏதோ புதிய தொழில் தொடங்க யோசிப்பதாகவும், அதைப் பற்றிப் பேச அவன் சில நாட்களில் இங்கே வீட்டுக்கு வரப் போவதாகவும் கூறி இருந்தான்.
எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டே சமையலை முடித்துக் கொண்டிருந்தவள், வாசலில் பேச்சு சத்தம் கேட்கவும் வெளியே வந்தாள். அங்கே நின்று கொண்டிருந்த பெண்மணியைக் கண்டதும் அவள் முகத்தில் கோபம் சுடர்விட்டு எரியத் தொடங்கியது.
“பவி… நல்லார்க்கியாடி…”
“ஏன் அத்தை… நல்லா இருந்தா நாசம் பண்ணிட்டுப் போகலாம்னு வந்திங்களா…” வார்த்தை கனலெறிந்தாள்.
“பவி… அப்படி சொல்லாதடி… இங்கே நடந்ததெல்லாம் நானும் கேள்விப்பட்டேன்… காலைல மாப்பிள்ளைய டவுன்ல வச்சுப்பார்த்தேன்… ரொம்ப கோபமா பேசினார்…”
“ஓ… அதான் இங்கே எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சே… இன்னும் ஒருவருஷம் ஆக எதுக்கு காத்திருக்கே… கிளம்புன்னு சொல்ல வந்திங்களா அத்தை…”
“ப்ளீஸ், என்னைக் கொல்லாதம்மா… பணத்துக்கு ஆசைப்பட்டு செய்யக் கூடாத தப்பைப் பண்ணிட்டேன்… அதுக்கு பலனாதான் இப்பக் கிடந்து சீரழியுறேன்… என்னை மன்னிச்சிடு பவி…” கண்ணீருடன் கைகூப்பினார். என்ன இருந்தாலும் யாருமில்லாத அனாதையாய் ஆதரவற்று நின்றபோது அடைக்கலம் கொடுத்த அவரை அப்படிப் பார்க்க அவளால் முடியவில்லை.
“என்னாச்சு அத்தை… சரி உள்ளே வாங்க…” என்றவள் அவரை உள்ளே அழைத்துச் சென்றாள். சோபாவில் அமர்ந்தவரிடம், “மாமா கீதா, ராதா நல்லாருக்காங்களா…”
“ம்ம்… இருக்காங்க… உங்க மாமா தான் சுகமில்லாம கவலையா இருக்கார்… இப்போதெல்லாம் அடிக்கடி உடம்புக்கு வருது… பொண்ணுகளுக்கு ஒரு நல்லதைப் பார்க்க முடியாமப் போயிருவமோன்னு அவருக்கு பயம் வந்திருச்சு…” என்றார் கவலையுடன். “மாமாக்கு என்னாச்சு அத்தை…” அவள் கண்ணிலும் கவலை ஒட்டிக் கொண்டது.
“கீதா, ராதாக்கு கல்யாணத்துக்கு ஜாதகம் பார்த்தோம்… ரெண்டு பேருக்கும் செவ்வாதோஷ ஜாதகமாம்… அதே போல ஜாதகம் உள்ள மாப்பிள்ளை கிடைக்கணும்… இதுவரை ஒண்ணும் சரியாகலை… ஒண்ணு, ரெண்டு ஜாதகம் ஒத்துப் போனாலும் ரொம்ப சீர்செனத்தி எதிர்பார்க்கறாங்க…. என்ன பண்ணறதுன்னு புரியலை… அப்புறம் உன்கிட்டே ஒரு விஷயம் வேண்டிக் கேட்டுக்கணும்னு தான் வந்தேன்… மாப்பிள்ளை என் பேர்ல ரொம்ப கோபமா இருக்கார்… இந்த விஷயத்தை உன் மாமா காதுக்குக் கொண்டு போனா அவருக்கு இன்னும் உடம்புக்கு அதிகமாயிடுமோன்னு பயமாருக்கு… அதனால…” தயக்கத்துடன் நிறுத்தியவரை வேதனையுடன் பார்த்த பவித்ரா,
“எப்படி அத்தை… உங்களை சார்ந்த எல்லாரும் நல்லாருக்கனும்னு நினைக்கறிங்க… நானும் உங்க பொண்ணு போலத்தானே… இப்ப இவரா இருக்கவும் என் வாழ்க்கை தப்பிச்சுது… வேற யாருமா இருந்தா என் நிலைமை என்னவாயிருக்கும்… நான் உங்களுக்கு என்ன துரோகம் பண்ணேன்… ஏன் இப்படிப் பண்ணினீங்க…” கண்ணில் துரோகத்தின் வலியோடு கேட்டவளுக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றார் கோமதி.
அன்னை செய்த தோஷம் பெண்கள் தலையில் விழுந்ததே என்று பவித்ராவால் சந்தோஷப் பட முடியாமல் அதற்கும் அந்த அப்பாவிப் பெண்ணின் மனம் வருந்தவே செய்தது.
வினையொன்று விதைக்க
பனையொன்று முளைப்பதில்லை…
துளிர் விடும் கோபங்களை
வேர்வரை வளரவிடாமல்
வெட்டி எறிவதே உறவுக்கு உகந்தது…
தவறுக்கு தண்டனையை தான்
பரிசளிக்க வேண்டும் என்பதில்லை…
மன்னிப்பையும் மனதார வழங்கலாம்…
களையைபோல் கவலைகளையும்
களைந்தெறிய கற்றுக் கொண்டால்
வாழ்வும் செழிப்பாகும்…
இமைப்பீலி வரும்…

Advertisement