Advertisement

இமை – 21
சாவித்திரிக்கு நடந்த விஷயங்கள் எல்லாம் அரசல் புரசலாய் புரிந்திருக்க மனதுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தார். “ஒரு அப்பாவிப் பொண்ணு வாழ்க்கையில் விளையாட இந்த மீனாம்மாவுக்கும், அவுங்க அண்ணனுக்கும் எப்படித்தான் மனசு வந்துச்சோ… இவங்க ரொம்ப நல்லவங்க, அக்கா மகன் வாழ்க்கைக்காக தன் வாழ்க்கையையே தியாகம் பண்ணவங்கன்னு பவித்ரா பொண்ணு கிட்டே எவ்ளோ பெருமையா சொன்னோம்… எல்லாம் ஒரே நிமிஷத்துல மாறிருச்சே…” தன்னுள் வருந்திக் கொண்டிருந்தார்.
இரவு டிபன் தயாராக்கிக் கொண்டிருந்தவரிடம் வந்த சுந்தரி, “சாவித்திரி… இங்கே நடந்ததெல்லாம் வெளிய யார்கிட்டேயும் சொல்லிட்டு இருக்க வேண்டாம்… நம்ம குடும்பத்தை பத்தி தப்பாப் பேசுவாங்க… சரியா…” என்றார். சுந்தரியும் பவித்ராவைப் போல சாவித்திரியுடன் நன்றாகப் பேசுவார் என்பதால் அவரும் வருத்தமாய்க் கூறினார்.
 
“இல்லம்மா… நான் யார்கிட்ட சொல்லப் போறேன்… ஆனாலும் மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு… பாவம், அந்தப் பொண்ணு… அதுக்குன்னு ஆதரவாப் பேச பெத்தவங்களும் இல்லை, சொந்தக்காரங்களும் இல்லை… புகுந்த வீடு தான் எல்லாமேன்னு இருந்துச்சு… இப்ப நடந்தது தெரிஞ்சு எப்படி வேதனைப்படுதோ…” புலம்பியவர், “ஹூம்… ஏதோ நடந்து போச்சு, இனியாவது பேசி சரி பண்ணிட்டு மித்ரன் தம்பியோட சந்தோஷமா இருந்தாப் போதும்…” என்றார் பெருமூச்சுடன்.
 
“ம்ம்… என் ஆசையும் அதுதான் சாவித்திரி… எல்லாம் சரி பண்ணிக்கலாம் வருத்தப் படாதே…” என்ற சுந்தரி,
“டிபன் ரெடியாகிருச்சுன்னா மேசைல கொண்டு போயி வச்சிடு… நான் பவித்ராவை அழைச்சுப் பார்க்கறேன்…” என்றுவிட்டு நகர்ந்தார். அனைவரையும் சாப்பிட அழைக்க எல்லாரும் அவரவர் யோசனையுடனே வந்து அமர்ந்தனர்.
 
“பவி… டிபன் ரெடி, சாப்பிட வா…” சுந்தரியின் குரலைக் கேட்டும் அமைதியாய் இருந்தவள், மீண்டும் அவர் அழைக்கவும், “எனக்கு வேண்டாம்மா…” என்று அறைக்குள் இருந்தே குரல் கொடுத்தாள்.
 
“பவி… என்ன பிரச்சனையா இருந்தாலும் வயித்தைப் பட்டினி போடக் கூடாது… வா, வந்து சாப்பிடு…” என்றார்.
 
சோமுவுக்கு எரிச்சலாய் இருந்தது. எல்லாரும் சாப்பிடுவதற்காய் மேசைக்கு வந்தும், பரிமாற வராமல் சுந்தரி அவளை அழைத்துக் கொண்டிருப்பது அவருக்கு சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து அநாதை போல வளர்ந்த பெண் இந்த வீட்டுக்கு மருமகளா… மனது பொருமிக் கொண்டிருந்தது.
மித்ரன் மனது பவித்ராவை எப்படி சமாதானம் செய்வது என்ற யோசனையில் இருக்க அத்தையிடம் எழுந்து வந்தவன், “என்ன அத்தை… பவி சாப்பிட வரலையா… சரி… எனக்கும் வேண்டாம்… நீங்க சாப்பிடுங்க…” எனவும், “உனக்கு மாத்திரை போடணுமேப்பா…” என்றார் சுந்தரி.
 
“ப்ச்… விடுங்க அத்தை… பவி என் மேல் இருக்கற கோபத்துல மாத்திரை கூட எடுத்துத் தருவாளோ, என்னவோ… அவ எப்ப என் அன்பைப் புரிஞ்சுகிட்டு எனக்கு எல்லாம் பண்ணுவாளோ, அப்ப மாத்திரை போட்டுக்கறேன்…” என்று அத்தையை நோக்கி கண்ணை சிமிட்டவும், புரிந்து கொண்ட சுந்தரி, “ஆஹா… உலக மகா நடிப்புடா சாமி…” என நினைத்து சிரித்துக் கொண்டார்.
 
இது எல்லாவற்றையும் அறைக்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்த பவித்ராவுக்கு அவன் மீது இன்னும் கோபம் அதிகமானது. அழுதழுது கண்ணீர் தடம் பதித்த கன்னத்தைத் அழுந்தத் துடைத்துக் கொண்டு அவிழ்ந்த கூந்தலைக் முடிந்து கொண்டு கதவைத் திறந்தாள்.
அவள் வருகிறாளா என ஆவலுடன் பார்த்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்த மித்ரன், கதவு திறந்ததைக் கண்டதும் நமுட்டுச் சிரிப்புடன் முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு கண்ணை மூடி அமர்ந்திருந்தான். மற்ற மூவரும் சாப்பிடத் தொடங்கி இருந்தனர்.
 
அவன் முன்னில் வந்து கோபமாய் நின்றவள், “இப்போ எதுக்கு இந்த டிராமா போடறீங்க… சாப்பிட்டு மாத்திரை போட்டா போடுங்க… இல்லேன்னா போங்க… என்னமோ நான் இல்லேன்னா சாப்பாடு இறங்காத மாதிரி எதுக்கு பிலிம் காட்டணும்… நீங்க பண்ணின தப்புக்கு என் வயித்தை எல்லாம் காயப் போடமாட்டேன்…” நக்கலாய் சொன்னவள் இரண்டு சப்பாத்தியை பிளேட்டில் வைத்து குருமாவை ஊற்றி அவன் முன்னில் வந்து அமர்ந்தாள்.
 
அவனைக் கண்டு கொள்ளாதாது போல் சப்பாத்தியைக் குருமாவில் தோய்த்து வாய்க்கு கொண்டு போனவளுக்கு உதடுகள் திறக்காமல் கண்கள் திறந்து கொண்டன.
அவன் சாப்பிடாததால் வாயைத் திறக்க மறுத்து சண்டித்தனம் செய்த உதடுகளை திட்டிக் கொண்டே, கண்ணில் நிறைந்து நின்ற கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு அமைதியாய் சாப்பிடத் தொடங்கினாள்.
 
“மித்ரா… நீயும் வந்து சாப்பிடுப்பா…” மீனா அழைக்கவும், “எனக்கு வேண்டாம்…” என்றவன், டீவியில் கண்ணைப் பதித்து அமர்ந்திருக்க, அவனது பிடிவாதம் எதற்காக என்பதை பவித்ரா உணர்ந்தே இருந்தாள்.
 
என்னதான் மித்ரனுக்குத் தெரியாமல் இதெல்லாம் நடந்தது என்று கூறினாலும் அவன் செயலை அவளது மனது ஒத்துக் கொள்ளவில்லை. மற்றவர்கள் என்ன சொன்னாலும் என் மித்து எப்படி இப்படி ஒரு கல்யாணத்துக்கு சம்மதிக்கலாம்… என்ற வலியே அவளைக் குடைந்து கொண்டிருந்தது. “பணம் கொடுத்து ஒரு பொண்ணை இதற்கு ஏற்பாடு செய்தாலும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை பாழாகிவிடும் என்பது மித்ரனுக்கு தெரியாதா… இவனுக்கும் உறவுகளின் விருப்பம் தானே பெரிதாய் போய்விட்டது… அதனால்தானே இந்த ஏற்பாட்டிற்கு சம்மதித்தான்… மித்துவை எத்தனை உயரத்தில் வைத்திருந்தேன்… என் மனதில் சிம்மாசனத்தில் அமர்த்தி இருந்தேனே… அவன் எப்படி இப்படி ஒரு காரியத்துக்கு உடந்தையாய் இருக்கலாம்…”
 
அவள் மனம் மீண்டும் மீண்டும் இதையே நினைத்துப் பொருமிக் கொண்டிருந்தது.
 
“இப்போது அவனுக்கு என்னைப் பிடித்து விட்டது என்பதால் அவன் செய்தது எல்லாம் சரியாகிவிடுமா… எத்தனை நம்பினேன்… எத்தனை நேசித்தேன்… என்னிடம் இப்படி ஒரு பொய்யான முகத்தைக் காட்ட எப்படி மனம் வந்தது…” யோசிக்கும்போதே கரகரவென்று கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.
 
எப்படியோ சாப்பிட்டு கை கழுவி வந்தவள் அறைக்கு செல்லப் போக, மித்ரன் வருத்தத்துடன் நொண்டிக் கொண்டே மாடிப்படி ஏறவும் அவளுக்கு வலித்தது.
“ச்ச்சே… என்னவொரு விசித்திரமான மனது… அவன் சாப்பிடாவிட்டால் எனக்கென்ன என்று வாய் கேட்கிறது… சாப்பிடாமல் சென்றால் மனது வலிக்கிறதே… கள்ளன்… நான் இவனை வெற்றிலை, பாக்கு வைத்து சாப்பிட அழைக்க வேண்டுமோ… எல்லாம் முன்னமே யோசித்து தான் என்னிடம் வாக்குறுதியும் வாங்கி இருக்கிறான்…” யோசித்தவளின் மனது சட்டென்று கனிந்தது.
 
“இந்த விஷயம் தெரிந்தால் நான் கோபப்படுவேன்… வீட்டை விட்டு செல்லக்கூட முயற்சி செய்வேன்… என்றுதானே இதை செய்திருக்கிறான்… யாருமில்லாத அனாதையாய், ஒரு துளி அன்புக்காய் ஏங்கி நிற்கும் நான் எங்கே செல்வேன்… இத்தனை பெரிய உலகத்தில் எனக்காய் யோசிக்க, என்னை நேசிக்க யார் இருக்கிறார்கள்… கோவித்துவிட்டுப் போகக் கூட போக்கிடம் இல்லாதவளாயிற்றே நான்…” சுய கழிவிரக்கத்தில் மீண்டும் மீண்டும் கண்ணீர் பெருகி கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்தது.
கல்யாண மேடையில் முதன் முதலில் அவனைக் கண்டதும், மனதில் நின்ற நாயகனின் கையால் கிடைத்த தாலியை யாருக்கும் கிட்டாத பெரும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாய் எண்ணி உவகை கொண்டது, முதலிரவன்று “அம்மா அந்த ஒருவருஷம் பத்தி சொன்னாங்களா…” என்று அவன் கேட்டதற்கு தான் நாணிக் கொண்டே பதில் சொன்னதை யோசிக்கும்போது அவளுக்குக் கூசியது.  
 
“எல்லாமே பொய்யா… எனக்குத் தெரியாமலே இவர்களின் நாடகத்தில் என்னையும் இயக்கிக் கொண்டிருந்தார்களா… எத்தனை முட்டாளாய் இருந்திருக்கிறேன்… என் சுயத்தை, மரியாதையை இவர்களின் வசதிக்காக காலில் நசுக்கி விட்டார்களே…” சட்டென்று உலகமே வெறுத்துப் போனது.
 
“இவ்ளோநாள் ரோஹிணியைக் கல்யாணம் பண்ண இதெல்லாம் பண்ணிட்டு இப்ப அவ மேல லவ் இல்லையாம், என் மேல லவ்வாம்… அப்படின்னா அவ வாழ்க்கை,… அவளுக்கு எத்தனை ஏமாற்றமாய் இருக்கும்… காதலுக்காக அவள் செய்தது கூட சரின்னு ஒத்துக்கலாம்… இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ண அவ அப்பாவும், அத்தையும் குறுக்குவழியில் யோசிச்சதைக் கூட ஒத்துக்கலாம்… ஆனா மித்து எப்படி… சின்ன வயசில் எதோ ஒரு பொண்ணுக்காய் ஹீரோவா மாறினவன் அவனோட வாழ்க்கைல இப்படி பண்ண எப்படி மனசு வந்துச்சு…” மாறி மாறி யோசித்து தவித்தாள்.
 
“பவி மனசைத் தளர விடாதே… மித்ரன் அன்று உன்மேல் விருப்பம் இல்லாமல் எல்லாம் செய்திருந்தாலும் இப்போது அவனது நேசத்தை உன்னால் சந்தேகிக்க முடியுமா…” மனதுக்குள் இருந்து மனசாட்சி குரல் கொடுக்க டைரியிலிருந்த புகைப்படத்தை வெறித்தாள். அவனது கள்ளமில்லாத முகத்தைக் கண்டதும் அதுவரை உள்ள மனசுமை முழுதும் கரைந்து மனம் லேசாவதை உணர்ந்தாள்.
 
“ஏண்டா… ஏன் இப்படிப் பண்ணே… நீ செய்ததை சரின்னு ஒத்துக்கவும் முடியல… உன் அன்பைக் கண்டுக்காம இருக்கவும் முடியல… என்னைப் பைத்தியம் பிடிக்க வைக்கறியே…  என் வலிக்கு காரணமான நீயே என் வலி நிவாரணியா இருக்கியே… நான் என்ன பண்ணுவேன்…” வாய்விட்டுக் கதறி அழுதாள்.
தண்டித்த அன்னையையே
கட்டிக்கொண்டு கதறும்
பிள்ளையாய் ஆனதடா…
உன் மீது பித்து கொண்ட மனம்…
நீ கொடுத்திடும் வலிக்கு மருந்திடாதே…
உன்னை மட்டுமே நினைக்க வைக்கும்
வலியும் வரம் தான் எனக்கு…
எதிரி எனக்கு எதிரிலென்றால்
எதிர்த்து நின்று போரிடுவேன்…
எனக்குள் இருந்து என்னையே
எனக்கெதிராய் இயக்கும் – உன்னை
எப்படி நானும் வென்றிடுவேன்…
 
அரற்றிக் கொண்டே படுத்திருந்தவளின் கண்கள் சட்டென்று கடிகாரத்தில் நிலைக்க அவன் இன்னும் உணவருந்தவில்லையே… என்று தவிப்பாய் இருந்தது.
 
“ச்ச்சே… இந்த அத்தைக்கும், அம்மாவுக்கும் சற்றும் பொறுப்பில்லை… உணவு வேண்டாம் என்றால் அப்படியே விட்டுவிடுவதா…” அவர்களைக் கடிந்து கொண்டாள்.
முகத்தைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்து பார்க்க அடுக்களையைத் தவிர அனைத்து லைட்டுகளும் அணைக்கப் பட்டிருக்க, மித்ரனின் அறையில் தெரிந்த வெளிச்சம் அவன் உறங்கவில்லை என்று உணர்த்தியது. அடுக்களையை ஒதுக்கிக் கொண்டிருந்த சாவித்திரியிடம் சென்று மெல்ல அழைத்தாள்.
 
“அக்கா…” அவள் குரலில் திரும்பியவர், அழுது வீங்கிய அவள் முகம் கண்டு கலங்கினார்.
 
“பவிம்மா… என்னம்மா இது… இப்படியா அழுதுட்டே இருப்பே… ஏதோ முட்டாள்தனமா ஒரு தப்புப் பண்ணிட்டாங்க… அதுலயும், தம்பி தெரியாம மாட்டிகிச்சு… அதுக்கு தண்டனை கொடுக்கறேன்னு உங்களோட வாழ்க்கையை தண்டிச்சுக்காதம்மா… என்னை உன் அம்மாவா நினைச்சுக்க… நடந்ததை மறந்திட்டு கிடைச்ச அழகான வாழ்க்கையை ஏத்துகிட்டு சந்தோஷமா அனுபவிம்மா…” என்றார் ஆதங்கத்துடன்.
அவர் சொன்னதை அமைதியாய் கேட்டவள், “அறிவுக்குப் புரியுது… மனசுக்குப் புரியலையே… சரி விடுங்கக்கா… அவர் எதும் சாப்பிடாமலே போயிட்டார்… மாத்திரையும் போடலை… ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் ஆவது கலந்துட்டு போயி குடுங்க…” என்றவளைக் கனிவோடு நோக்கியவர்,
 
“மனசுல இத்தனை அன்பை வச்சுக்கிட்டு எதுக்கு ஒதுங்கி இருக்கணும்… நீயே கொண்டு போயி கொடுத்துட்டு தம்பிகிட்டே மனசுவிட்டுப் பேசிடேன் மா…” என்றார் அவர்.
 
“ப்ச்… இல்லக்கா… நீங்க கொண்டு போயி கொடுங்க…” என்றவள் அங்கிருந்து நகர, அவர்கள் பேசியதை தண்ணீர் எடுப்பதற்காய் வந்த மீனா கேட்டுக் கொண்டிருந்தார். அவர் மனது சற்று சமாதானமானது.
 
சாவித்திரி ஹார்லிக்ஸ் கலக்கிக் கொண்டு போய் மித்ரனிடம் கொடுக்க, “பவி கொடுக்க சொன்னாளாக்கா…” சிரிப்புடன் கேட்டவனை அவர் திகைப்புடன் நோக்க, மறுக்காமல் வாங்கிக் குடித்தான்.
அடுத்தநாள் காலையில் சாவித்திரி மகளின் குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டும் என்று நேரமே சென்றிருந்தார். மீனா கால்வலி என்று படுத்திருந்ததால், சுந்தரி அடுக்களையில் தனியே டிபன் செய்து கொண்டிருக்க, பவித்ராவால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை. அவளும் அவருடன் சேர்ந்து கொண்டாள்.
 
எப்போதும் போலப் பேசாமல் ஓரிரு வார்த்தைகள் அவர் கேட்பதற்கு பதிலாய் உதிர்த்தாலும் மனம் இறுகிக் கிடந்தது. சோமு வெளியே சென்றிருக்க, மித்ரன் காலையில் காபிக்காய் கீழே இறங்கி வந்தான்.
 
“பவி… காபி…” அவளிடம் கேட்க, கண்டு கொள்ளாமல் அவள் பாட்டில் சட்னிக்கு அரைத்துக் கொண்டிருந்தாள். அவளது பாராமுகம் அவனுக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் அவளை வேண்டுமென்றே சீண்டுவது மிகவும் பிடித்திருந்தது. சுந்தரி காபி கொடுக்கவும் வாங்கியவன் அங்கேயே திண்டின் மீது சாய்ந்து நின்று கள்ளப் பார்வையுடன் குடிக்கத் தொடங்கினான்.
கள்ளனாகவே இருக்கின்றேன்
உன்னைக் கண்டு கொண்டே
காணாததாய் நடிப்பதில்…
 
அவனது பார்வை தன் மீதே இருப்பதை உணர்ந்து பவித்ராவுக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது.
 
“அம்மா எங்கே அத்தை… சாவித்திரிக்காவும் காணோம்…”
 
“உன் அம்மா கால்வலின்னு படுத்திருக்கா… சாவித்திரி பேரப் பிள்ளைக்கு தடுப்பூசி போடணும்னு போயிருக்கா…”
 
“ஓ… அம்மா இன்னைக்கு மில்லுக்குப் போகலியா…”
 
“இல்லப்பா, சென்னைல நம்ம வீட்டுக்குப் பக்கத்துல புதுசா ஒரு ஆயுர்வேதசாலை வந்திருக்கு… அங்கே குடுக்கற எண்ணை நல்லா கேக்குதுன்னு சொன்னாங்க அதான், இன்னைக்கு நாங்க போகும்போது அம்மாவையும் எங்களோட கூட்டிப் போகலாம்னு நினைக்கறேன்…”
 
“ஓ, நல்லதுதான் அத்தை… அம்மா இல்லேன்னா வேலை எல்லாம் அப்படியே நிக்குமே…” என்றான் யோசனையுடன்.
 
“இப்போதான் உனக்கு ஓரளவுக்கு நடக்க முடியுதே… நீ காரை எடுத்திட்டு மில்லுக்குப் போயி வேலை எல்லாம் பார்த்துக்கக் கூடாதா… எவ்ளோ நாள்தான் உன் அம்மாவே ஓடிட்டு இருப்பா… நீ பொறுப்பெடுத்துக்கலாமே…”
 
“சரி அத்தை… நான் பார்த்துக்கறேன்… நீங்க அம்மாவை அழைச்சிட்டுப் போங்க…” என்றவன் பவித்ராவைப் பார்க்க, அவள் எதையுமே கேட்காதவள் போல தேங்காய் துருவிக் கொண்டிருந்தாள்.
 
காலை உணவு முடிந்து அவர்கள் ஊருக்குக் கிளம்ப, மித்ரனிடம் வந்தார் சுந்தரி. “மித்ரா… உங்க ரெண்டு பேருக்கும் தனிமை கொடுக்கலாம்னு தான் அம்மாவை நாங்க அழைச்சிட்டுப் போறோம்… பவித்ராவுக்கு உன் மனசைப் புரிய வச்சு அவளை சமாதானம் பண்ண வேண்டியது உன் பொறுப்பு… இனி எல்லாம் உன் கையில் தான்… அவளை வெறுப்பேத்தாம பத்திரமாப் பார்த்துக்க…” அவர் சொல்லவும் அவன் மனம் உற்சாகத்தில் துள்ளியது.
 
மருமகளிடம் வந்த மீனா, “பவித்ரா… எனக்கு கால் ரொம்ப முடியலைம்மா… அதான் அந்த ஆயுர்வேதசாலைல காட்டலாம்னு கிளம்பறேன்… ஒரு வாரத்துல வந்திடறேன்… கோபத்தை எல்லாம் விட்டுட்டு ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசுங்க… நான் திரும்பி வரும்போது ரெண்டு பேரையும் சந்தோஷமாப் பார்க்கணும்…” என்றவர் மனதில் மிகவும் தளர்ந்திருந்தார்.
 
அவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாய் நின்றாள் பவித்ரா. சோமு பெரிதாய் ஏதும் பேசாவிட்டாலும் அமைதியாய் கிளம்பினார்.
 
“பவி… மித்ரனுக்கு இன்னும் கால் முழுசா சரியாகலை… அவனை உன் பொறுப்புல விட்டுட்டுப் போறோம்… பார்த்துக்க மா…” சுந்தரி சொல்லவும், “ஹூம், சின்னக் குழந்தையைப் பார்த்துக்கனுமாம்…” முனங்கினாள்.
வீட்டில் இருவர் மட்டுமே தனித்திருக்க மௌனம் நிறைந்திருந்தது. பவித்ரா எங்கோ வெறித்திருக்க, மித்ரன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மௌன யுத்தத்தைக் கலைப்பதற்காய் சிணுங்கிய மித்ரனின் அலைபேசியில் ராகவ் என்று ஒளிர்ந்து கொண்டிருந்தது.
 
உடன் இருந்து செய்கின்றாய்
உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றை…
உள்ளத்தில் நீதான் இருக்கிறாய்
என்று உணர்ந்து கொள்ளாமலே…
உன் வார்த்தை என்னை வதம் செய்யும்
என்று மௌன யுத்தம் தொடுக்காதே….
அது என் உயிரையே மாய்க்கும்…
அன்பால் அரவணைத்த நீயே…
அகிம்சையில் அடிக்காதடி….
என்னைத் தண்டிப்பதாய் நினைத்து
உன்னை நீயே வதைக்காதடி…
 
இமைப்பீலி வரும்….
 
 

Advertisement