Advertisement

இமை – 19
ட்டென்று அவன் விலகவும் திகைத்தவள், தான் கூறியது அவனை வருத்தியிருக்குமோ என்ற தவிப்புடன் மெல்ல ஏறிட்டாள். அவனது விழிகள் சிவந்து எங்கோ வெறித்துக் கொண்டிருக்க காணவே பாவமாய் தோன்றியது.
அவனை சற்று நெருங்கி தோளை உரசிக் கொண்டு அமர்ந்தவள், அவளாகவே அவனது கையை கோர்த்துக் கொண்டாள். அலைபாயும் கூந்தலில் வீசிய ஷாம்பூவின் மணம் அவனது முகத்தில் மயிலிறகாய் வருட சுகமாய் கண்ணை மூடித் திறந்தவனின் இதழ்கள் மெல்ல புன்னகையில் விரிய, அவளது கையை இறுக்கிக் கொண்டவன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அந்த நிமிடத்தை கண்ணை மூடி இருவரும் அனுபவிக்க மனதோ சுகமாய் மிதந்து கொண்டிருந்தது.
“பவி, இந்த நிமிஷம் இதேபோல எப்பவும் தொடராதான்னு மனசுல ஆசையா இருக்கு…” அவளது காதை காதலோடு உரசிச் சென்றன அவனது வார்த்தைகள்.
“ஹூம்… இன்னும் சில மாசம் தான்… அதுக்குப் பிறகு நான் எந்த கட்டுப்பாடும் சொல்ல மாட்டேன்… இதே போல எப்பவும் இறுக்கி அணைச்சுக்கிட்டு சோறு தண்ணி இல்லாம உக்கார்ந்திருக்கலாம்… சரியா…” குறும்போடு கண்ணைச் சிமிட்டி அவள் கேட்கவும் அவன் முகம் புன்னகையைக் காட்டியது. இருவரும் சகஜமாய் பேசிப் பழகத் தொடங்கியிருந்தனர். சின்னச் சின்ன தொடுகையும், குறும்புப் பேச்சும் மேலும் நெருங்கி வரச் செய்திருந்தது.
குறும்பு மின்னும் அவளது கண்களில் மெல்ல முத்தமிட்டவன், “பவி… நான் ஒண்ணு கேட்டா நீ தப்பா நினைக்க மாட்டியே…” என்றான் மென்மையான குரலில்.
திகைப்புடன் நிமிர்ந்தவள், “என்னங்க… உங்களை எப்படி நான் தப்பா நினைப்பேன்… கேளுங்க…” என்றாள் அவள்.
“என்னை நீ நம்பறியா…”
அவனது கேள்வியில் நெற்றி சுருங்கியவள், “என்னங்க, இது கேள்வி… உங்களை நம்பாம…” என்றாள்.
“சொல்லு பவி… என்னை, என் அன்பை நீ நம்பறியா…”
“ஹஹா… போங்க… உங்களுக்கு என்னமோ ஆயிருச்சு…” என்றவள், “எத்தனையோ பேர் எனக்கென்னனு பார்த்து நிற்கும்போது, அந்த சின்ன வயசுல ஒரு ரவுடியை அடிச்சு அவன்கிட்டே இருந்து ஒரு வயசுப் பெண்ணை காப்பாத்துனிங்களே… அப்பவே உங்கமேல எனக்கு ரொம்ப நம்பிக்கை வந்திருச்சு…” அவள் கூறவும் மனம் கரைந்து போனது அவனுக்கு.
“ம்ம்… அப்படின்னா நீ எனக்கு ஒரு வாக்கு குடுப்பியா…”
“என்னங்க… என்கிட்டே போயி வாக்குன்னு கேக்கறிங்க… நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க…” என்றாள்.
“எந்த சூழ்நிலைலயும் என்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்னு வாக்குக் குடு…” அவன் வார்த்தையில் முதலில் திகைத்தவள் பின்பு நகைத்தாள்.
“போங்க… நான் உங்களை விட்டு எங்கே போகப் போறேன்… நீங்களா என்னை விரட்டினா தான் உண்டு…” அவள் சொல்லவும் மனதில் நிறைந்த வேதனையை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் கை நீட்டினான் அவள் அன்புக் கணவன் மித்ரன்.
“ஹாஹா… என்னமோ கேக்கறிங்க… சரி, வாக்கு தரேன்… இந்த உடம்பை விட்டு உயிர் போகும் வரைக்கும் உங்க நிழலா உங்க கூடவே இருப்பேன்… உங்களைவிட்டு எங்கயும் போக மாட்டேன்… போதுமா…” சிரிப்புடன் சொல்லிக் கொண்டே அவன் கையில் கையை வைக்க, அவள் கையை இறுக்கமாய் பிடித்து நெஞ்சோடு வைத்துக் கொண்டவன் ஒரு நிமிடம் கண்ணை மூடி இருந்தான். பின்பு கையில் மென்மையாய் முத்தமிட்டு, “தேங்க்ஸ் பவி… எனக்கு இது போதும்…” என்று கூறி எழுந்து செல்ல, திகைப்புடன் புரியாமல் அமர்ந்திருந்தாள் பவித்ரா.
அவன் சொன்னதை சிரிப்புடன் யோசித்துக் கொண்டே அறையை ஒதுக்கிக் கொண்டிருந்தவள் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் கீழே வந்தாள். காரிலிருந்து சுந்தரியும், சோமுவும் மீனாவுடன் இறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவள் வேகமாய் சென்றாள்.
“அம்மா, நல்லாருக்கீங்களா… எவ்ளோ நாளாச்சு… என்னை மறந்தே போயிட்டீங்க தானே…” உரிமையுடன் கோவித்துக் கொண்டவளைக் கண்டு மென்மையாய் ஒரு சிரிப்பை உதிர்த்த சுந்தரி, “உனக்கு காய்ச்சல்னு சொன்னாங்க, சரியாகிடுச்சா… ரொம்ப மெலிஞ்சுட்டே போலருக்கே…” விசாரித்தவரின் கையிலிருந்த பையை வாங்கிக்கொண்டு, “வாங்கப்பா…” எனவும், “உம்…” என்றார் சோமு.
அவரது முகம் முன்னைவிடக் கடுகடுப்பைக் காட்டியது.
“ச்ச்சே… அவரை அப்பான்னு சொன்னா பிடிக்காதுன்னு தெரிஞ்சும் அதே சொல்லி கடுப்பாக்கி விட்டுட்டேனே…” என தனக்குத் தானே கடிந்து கொண்டே சுந்தரியிடம் பதில் சொல்லிக் கொண்டு உள்ளே சென்றாள். சுந்தரி அவளிடம் பேசினாலும் அவர் முகம் எப்போதும் போல இல்லாததாய்ப் பவித்ராவுக்குத் தோன்றியது.
சோமுவின் பார்வை தன்னை முறைப்பது போலவே தோன்ற அவள் பார்க்கும்போது சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டார். மீனாவின் முகமும் சரியில்லாமல் இருக்க சரி, அவர்களுக்குள் எதோ பிரச்சனை போல என்று நினைத்துக் கொண்டவள் சாவித்திரிக்கு உதவுவதற்காய் அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள்.
எப்போதும் கலகலவென்று பேசும் சுந்தரியிடம் எதோ மிஸ் ஆகிறதே என நினைத்துக் கொண்டே சமைத்து முடித்த உணவுகளைப் பாத்திரத்தில் எடுத்து உணவு மேசையில் கொண்டு வைத்தாள்.
“இவங்க வந்தது மித்துவுக்குக் தெரியலையா… ஏன் கீழே வரலை…” என நினைத்துக் கொண்டே அவனைத் தேடிப் போக அவன் மொட்டை மாடியில் காதுக்குள் இயர் போனை மாட்டிக் கொண்டு ஊஞ்சலில் அமர்ந்திருந்தான்.
“என்னங்க… சுந்தரிம்மாவும், அப்பாவும் வந்துட்டாங்க… நீங்க இங்கே பாட்டைக் கேட்டுட்டு உக்கார்ந்திருக்கீங்க… அவங்களோட சாப்பிட உக்காருங்க…” எதார்த்தமாய் அழைத்தவளிடம் எப்படிக் கூறுவான், அவர்கள் முகத்தைப் பார்க்க முடியாமல் தான் இங்கே வந்திருக்கிறேன் என்று.  
“ஓ, நான் வந்திடறேன்… நீ போ பவி…” அவளை அனுப்பிவிட்டு சற்று கோபத்துடன் எழுந்தான்.
“இந்த மாமாவுக்கு ஏன்தான் இப்படிலாம் தோணுச்சோ… வயசுல மூத்தவரா தங்கைக்கும், மகளுக்கும் புத்தி சொல்லாம அவருக்கு தோணின குறுக்கு வழியால இப்போ எத்தனை பேருக்கு சிரமம்… என்னையும் சேர்த்து என் பவிக்கு துரோகம் பண்ண வச்சுட்டாரே… அவர்ட்ட கோபமா பேசாமா நிதானமா காரியத்தை சொல்லணும்…” மனதில் நினைத்துக் கொண்டே கீழே வந்தவன் அமர்ந்திருந்தவர்களிடம் நலம் விசாரித்தான்.
ஏனோ அனைவருமே இயல்பைத் தொலைத்துவிட்டு ஒரு முகமூடியுடனே பேசுவது போல பவித்ராவுக்குத் தோன்றியது. உணவு மேசையில் மௌனமே தொடர அமைதியாய் சாப்பிட்டு முடித்தாலும் அனைவரின் மனதிலும் எதோ யோசனை ஓடிக் கொண்டிருப்பது போல அவளுக்குத் தோன்றியது. சுந்தரிதான் ஒன்றிரண்டு வார்த்தை பேசினார்.
“என்னவாயிருக்கும்… ஏன் இவர்கள் இப்படி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு பேசாமல் இருக்கிறார்கள்…” என யோசித்தவளுக்கு எதுவும் புரியவில்லை. உணவு முடிந்து மித்ரன் வாசலுக்கு செல்ல, அண்ணனும், தங்கையும் மீனாவின் அறைக்கு செல்ல சுந்தரி மட்டும் பவித்ரா சாப்பிடும் வரை அமர்ந்திருந்தார்.
“என்ன பவித்ரா ரொம்ப மெலிஞ்சுட்டே போலருக்கு… உன் அத்தை ரொம்ப வேலை வாங்குறாளா…” சுந்தரி கேட்கவும், வேகமாய் மறுத்துத் தலையாட்டியவள், “ச்சேச்சே… அப்படி எல்லாம் இல்லைம்மா… என் வீட்டு வேலையை நான் விருப்பதோட செய்யறேன்…” என்றாள்.
“ஓ… உன் மாமியாரை விட்டுக் கொடுக்காம பேசறியே…” 
“போங்கம்மா… இதுல விட்டுக் கொடுக்க என்ன இருக்கு… அவரோட அம்மா எனக்கும் அம்மா தானே…” புன்னகைத்து விட்டு சாப்பிடத் தொடங்கினாள்.
“ஆமாமாம்… சரி, உன் புருஷன் எப்படி நடந்துக்கறான்… உன்னை வேலைக்காரி மாதிரி நடத்துறானா… பொண்டாட்டியா மதிக்கறானா…” எனவும் அவளுக்கு சுருக்கென்று கோபம் வந்துவிட்டது.
“என்ன இன்னைக்கு சுந்தரிம்மா இப்படி எல்லாம் கேட்கிறார்கள்… அதும் என் மித்துவைக் குறை கூறுவது போல…” சுருங்கிய முகமே அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்தியது. பதில் சொல்லாமல் அமைதியாய் உண்பவளை சுந்தரியும் பிறகு எதுவும் கேட்கவில்லை.
வீசியெறியும் கல்லை விட
உனைப் பற்றி குறை சொல்லும்
சொல்லே அதிகம் காயப்படுத்துகிறது…
அழிவது கோலமென்றாலும்
பொழிவது மழையல்லவா…
விழுவது நானாய் இருந்தாலும்
வாழ்வது நீயாய் இருக்க வேண்டுமென்று
நினைக்கும் நெஞ்சம் விட்டு தந்திடுமா
நீ என் மீது காட்டும் பாசத்தை…
சுந்தரியின் மனது பவித்ராவை எண்ணி கலங்கிக் கொண்டிருந்தது.
“பவித்ரா, என்னவொரு அருமையான பெண்… எத்தனை அப்பாவியாய் கணவன் மீதும் அவன் வீட்டார் மீதும் அன்பு வைத்திருக்கிறாள்… இதற்கெல்லாம் அவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்பது தெரிந்தால் இவளது மனம் எப்படிக் கலங்கிப் போகும்… அவள் கணவனைக் குறைச்சலாய் ஒரு கேள்வி கேட்டதே பிடிக்காமல் இருக்கிறாளே… இவளை பொம்மையாக்கி அவர்கள் விளையாடிய நாடகத்தைப் பற்றித் தெரிந்தால் என்ன செய்வாள்…” அவரது மனம் ஒரு தாயாய் பரிதவித்தது.
உண்டு முடிந்ததும் பவித்ரா சாவித்திரியிடம் சாப்பிட்டு அடுக்களையை ஒதுக்குமாறு கூறிவிட்டு, “மாடில துணி காயப் போட்டிருக்கேன்… எடுத்துட்டு வந்திடறேன் மா…” சுந்தரியிடம் சொல்லிவிட்டு நழுவினாள். செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவருக்கு நடந்த நாடகத்தை நினைத்து கோபமாய் வந்தது.
ரோஹிணி சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு வந்து நிற்கவும், அவளது முகமே சரியில்லாமல் இருக்க, என்னவென்று கேட்ட சுந்தரியிடம், காலேஜுக்குப் போக வேண்டி வந்துவிட்டதாய் கூறினாள் மகள்.
அடுத்தநாள் இரவு, காலையில் ஊருக்குக் கிளம்புவதற்காய் துணியை எடுத்து வைப்பதற்காய் ரோஹிணியின் அறையில் இருந்த பாகை எடுக்க வந்தவர், சாத்திய அறைக்குள் மகள் அழுகைக் குரலில் தந்தையிடம் எதோ ரகசியம் பேச, அவர் ஏதோ கோபமாய் திட்டுவது போல் குரல் கேட்க, அதில் பவித்ரா, மித்ரன் பெயர் வரவும் கவனித்தார்.
ரோஹிணி ஊரில் நடந்ததை தந்தையிடம் சொல்லி அழுது கொண்டிருக்க அவர் கோபத்தில், “அந்த அனாதைக் கழுதை பவித்ராவுக்கு மித்ரன் அவ்ளோ சப்போர்ட் பண்ணுகிறானா… அதுக்குள்ளே புருஷனை மயக்கி கைக்குள்ள போட்டுகிட்டாளா… மகன் சொல்லுறதைக் கேட்டுட்டு உன் அத்தை சும்மாவா இருந்தா… அவங்களை என்ன செய்கிறேன் பார்…” என்று குதித்துக் கொண்டிருக்க,
“என்னப்பா செய்விங்க… பவித்ராவைத் தொரத்திட்டு அத்தானுக்கு என்னை மறுபடியும் கல்யாணம் பண்ணி வைப்பீங்களா… அதுக்கு நீங்களே எனக்கு விஷம் கொடுத்து கொன்னுடுங்கப்பா…” என்று மகள் கூறவும் அதிர்ந்தவர்,
“ரோஹி… என்னடா சொல்லறே…” என்றார்.
“ஆமாப்பா… எப்ப அத்தான் மனசுல பவித்ரா தான் இருக்கான்னு அவர் வாயாலயே சொல்லிட்டாரோ, இனி எனக்கு அவர் தேவையில்லை… அவருக்கு இரண்டாம் தாரமா போனாலும் மனசுல எப்பவும் முதல் தாரமா நான் மட்டும் தான் இருப்பேன்னு நினைச்சேன்… அதுக்கு இனி சந்தர்ப்பமே இல்லைன்னு புரிஞ்சு போயிடுச்சு… அத்தானுக்கும், பவித்ராவுக்கும் நடந்தது பொம்மைக் கல்யாணம்னு நாம நினைச்சாலும், அதை உண்மையாக்க தான் அத்தானுக்கு விருப்பம்… என்னைப் பிடிக்காதவர் எனக்கும் வேண்டாம்… அவர் இல்லேன்னா இந்த உலகத்துல எனக்கு வேற மாப்பிள்ளையா இல்லை…”
சொல்லிவிட்டு கண்ணிலிருந்து கரகரவென்று நீர் வழிய நின்ற மகளை திகைப்புடன் நோக்கி நிற்க, வெளியே நின்று அவர்கள் பேசுவதில் இருந்து விஷயத்தைப் புரிந்து கொண்ட சுந்தரியின் மனம் உலையாய் கொதித்தது.
சரேலென்று கதவைத் திறந்தவரின் முகத்தில் வழிந்த  கோபமும், வெறுப்பும் கண்களில் தெரிந்த அனலும் அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டார் என்பதை உணர்த்த இருவரும் அதிர்ந்து நின்றனர்.
மகளை எரித்துவிடுவது போல ஒரு பார்வை பார்த்தவர், அடுத்த நிமிடம் அவள் கன்னத்தில் அறைந்திருந்தார்.
“சுந்தரி…” கணவனின் குரல் உயர அவரை அதே பார்வை பார்த்தவர், “உங்களை என்னால அடிக்க முடியாது…” அழுத்தமாய் கூறவும் அவர்கள் விக்கித்துப் போயினர்.
“பொண்ணுக்கு இத்தனை செல்லம் கொடுக்காதிங்க… அவளுக்கு பிடிவாதம் அதிகம் ஆயிடும்னு எத்தனையோ முறை தலையில அடிச்சுகிட்டேன்… என் பொண்ணு ராஜகுமாரின்னு தலைல வச்சுக்கிட்டு சுத்தினிங்க… அந்த ஆணவதுக்கான பலன் தான் இது…”
“சுந்தரி… என்ன நடந்துச்சுன்னு தெரியாம…” என்று சோமு தொடங்கவும் கை காட்டியவர், “போதும்… நீங்க பேசறதை எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன்… ஒரு பொண்ணா இருந்தும் இன்னொரு பொண்ணுக்கு துரோகம் நினைக்க எனக்குப் பிறந்த பொண்ணுக்கு எப்படி மனசு வந்துச்சு…”
அன்னை சற்று நிதானமாய் கேட்கவும், இதுவரை தன்னை அடித்தே இராத அன்னையின் அடியில் கலங்கிப் போய் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நின்ற ரோஹிணி தேம்பத் தொடங்கினாள்.
“என்ன நடந்துச்சுன்னு முழுசா சொல்லு…” அவரது அதட்டலில் நடந்ததை முதலில் இருந்து முழுமையாய் சொல்லி முடித்தவள்,
“சாரிம்மா… சின்ன வயசுல இருந்து அத்தான் மேல நான் வளர்த்துகிட்ட பிரியம்தான் அப்பாவையும், அத்தையையும் இப்படி செய்ய வச்சிருச்சு… அத்தானும் எவ்வளவோ வேண்டாம்னு மறுத்தார்… எல்லாம் என்னாலதான்…” சொல்லிக் கொண்டே அழுதவளை தந்தை கவலையுடன் நோக்க ரோஹிணியின் தாயாய் சுந்தரியின் மனமும் கலங்கியது.
“ஒரு பொண்ணைப் பெத்துட்டு இன்னொரு பொண்ணு வாழ்க்கைல விளையாட உங்களுக்கு எப்படிங்க மனசு வந்துச்சு… நாம பண்ணின பாவம் நம்ம பொண்ணு தலைல தான் விடியும்னு உங்களுக்கு ஏன் தோணலை…” கேட்கவும் சோமு பதில் சொல்ல முடியாமல் நின்றார்.
வீட்டில் நடந்ததை சுந்தரி நினைத்துக் கொண்டிருக்க, சோமு தங்கை மீனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“மன்னிச்சிருங்கண்ணே… இப்படில்லாம் ஆகும்னு நானும் நினைக்கலை… நாம ஒண்ணு நினைச்சு செய்யப் போயி அது வேறொன்னா முடிஞ்சிருச்சு… நம்ம பிள்ளைங்க நல்லாருக்கனும்னு நினைச்சு நாம செய்த காரியம்… இப்படி ஆகும்னு நினைக்கலை… ரோஹிணி இத்தனை தெளிவா யோசிச்சு முடிவெடுத்திருக்கா… அவளோட நிதானம் கூட பெரியவங்களான நம்மகிட்ட இல்லாமப் போயிருச்சே…” மீனா வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, வாசலில் இருந்த மித்ரனை அழைத்துக் கொண்டு சுந்தரியும் அங்கே வந்தார்.
சோமுவும், மீனாவும் தலை குனிந்து நிற்க அவர்கள் செய்த காரியத்திற்கு திட்டி முடித்த சுந்தரி, “அடுத்து என்ன செய்வதாய் உங்களுடைய உத்தேசம்…” என்றார். மித்ரன் தன் மனதில் உள்ளதை நிமிர்வுடன் கூறினான். சோமு எங்கோ முறைத்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார்.
“அத்தை… ஒரு நாடகமா இந்தக் கல்யாணத்தை அரங்கேற்றினாலும் பவித்ரா உண்மையா வாழ்ந்திருக்கா… என் மீதும், இந்தக் குடும்பத்து மேலயும் ரொம்ப அன்பும், அக்கறையும் வச்சிருக்கா… அவ அன்பை என்னால் உதாசீனப் படுத்த முடியாது… யாருமில்லாத அவளுக்கு எல்லாமா நான் இருக்கணும்னு நினைக்கறேன்… நடந்த கல்யாணம் நடந்ததாவே இருக்கட்டும்… ரோஹிணியும் தெளிவா ஒரு முடிவுக்கு வந்துட்டா… அவ படிப்பு முடிச்சதும் அவளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைக் கண்டு பிடிக்கறது என் பொறுப்பு…”
அவன் சொல்லிவிட்டு சோமுவைப் பார்க்க அவனை முறைப்புடன் பார்த்தவர், “என் பொண்ணு வாழ்க்கையை எப்படி சரி பண்ணனும்னு எனக்குத் தெரியும்… அதுக்காக யாரும் கவலைப் பட வேண்டாம்…” என்றார்.
“ம்ம்… உங்க விருப்பம் மாமா…” என்றவன் சுந்தரியைப் பார்க்க, “மித்ரா… ரோஹிணியை விடு, நீ இப்ப எடுத்திருக்கிற முடிவு நல்ல முடிவு… ஆனா இதெல்லாம் பவித்ராவுக்கு தெரிஞ்சா அவ என்ன நினைப்பா… அதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்லு…” என்றார்.
“பவித்ராவுக்கு இதெல்லாம் தெரிஞ்சா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியலை அத்தை… ஆனாலும் அவகிட்ட எல்லாத்தையும் சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு, மனசார அவ புருஷனா வாழணும்னு ஆசைப்படறேன்… அவ எப்படி எடுத்துக்குவாளோன்னு தான் எனக்கு பயமா இருக்கு…” என்றான் மித்ரன்.
ஆனால் பவித்ராவுக்கு அவர்கள் எதையுமே தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் மடக்கிய துணியை மீனாவின் அறையில் வைப்பதற்காய் வந்தவள், இறுதியில் மித்ரன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து நின்றாள்.
அவள் பிடித்திருந்த கதவின் கைப்பிடி நழுவ, விழாமல் இறுகப் பற்றவும் கதவு திறந்து கொள்ள அனைவரும் திரும்பினர்.
கண்கள் சிவந்து உலகத்தின் பாரம் முழுதும் தன் தலையில் சுமப்பது போல வேதனையில் சிலையாய் நின்றவளைக் கண்டு மற்றவர்களும் அதிர்ந்து போயினர்.
கல்லறையிலும் உறங்குவதில்லை…
துரோகத்தால் துடிதுடித்த இதயம்….
கண்ணுக்குள் நிறைந்தவனே
கண்ணின் மணியானவனே…
கரடாக நீயே கண்ணுக்குள் மாறியதேன்…
இமையாக நின்றவளை
இதயத்தில் அடித்ததுமேன்…
வலித்தது உடம்பிலென்றால்
துடைத்துவிட்டுப் போயிருப்பேன்..
உயிர் கரையும் வலியை
எவ்வழியில் போக்கிடுவேன்….
இமைப்பீலி தொடரும்…
 

Advertisement