Advertisement

இமை – 18
ண்களின் மீது எதோ பலமான பொருள் அழுத்திக் கொண்டிருப்பது போல் கனமாய் வலிக்க, இமைகளுக்குள் உருண்டோடிய கிருஷ்ணமணிகள் பவித்ராவுக்கு உணர்வு திரும்பிக் கொண்டிருந்தது என்பதை உணர்த்தியது.
மங்கலாய் ஏதேதோ நினைவுகள் மாறிமாறி தலைக்குள் பளிச்சிட வலியோடு நெற்றியை சுருக்கிக் கொண்டாள்.
“என்னைப் பாவம் பண்ண வச்சுட்டீங்களே… போலிக் கல்யாணம்… நான் துரோகம் பண்ணிட்டேன்…” என்று ஏதேதோ வார்த்தைகள் மாறிமாறி மித்ரனின் குரலில் கோபத்துடன் ஒலிக்க, அதிர்ச்சியில் மண்டைக்குள் இடி இடித்தது. தன் மீது அனலை அள்ளிக் கொட்டியது போலத் துடித்துப் போனாள்.
“அது என் மித்துவின் குரலாயிற்றே… அவன் ஏன் இப்படி எல்லாம் சொல்ல வேண்டும்… என்ன நடக்கிறது இங்கே…” உணர்ச்சி வேகத்தில் கிருஷ்ணமணிகள் கண்களுக்குள் அங்குமிங்கும் வேகமாய் உருள இமைகளை மெல்லப் பிரித்தவள், முன்னில் அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் மித்ரன்.
“பவி…” அவனது குரல் மென்மையாய் அவள் காதுக்குள் நுழைய, குழப்பமாய் ஏறிட்டாள்.
“எனக்கு என்னாயிற்று… நான் ஏன் படுத்திருக்கிறேன்… அப்படியானால் அதெல்லாம் கனவா… இதோ, என் மித்து கண் முன்னில் புன்னகையே உருவாக அன்போடு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்… அப்படியானால், அது நிச்சயம் கனவாகத்தான் இருக்கவேண்டும்…” என்று நினைத்தவளுக்கு பெரிய பாரம் விலகியது போலத் தோன்றியது.
“அப்பா… என்னவொரு பயங்கரமான கனவு…” அவள் யோசித்துக் கொண்டிருக்க, அவளது கையை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்ட மித்ரன் ஆறுதலாய் தட்டிக் கொடுத்தான்.
“பவி… இப்போ எப்படி இருக்கு மா… பீலிங் பெட்டரா…”
மயிலிறகாய் வருடிச் சென்ற அவனது வார்த்தைகள் மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்க மெல்ல புன்னகைக்க முயன்றாள்.
“எனக்கு என்னாச்சுங்க… ரொம்ப நேரம் தூங்கிட்டேனா…” கண்ணைச் சுழற்றியவள், வெளியே சூழ்ந்திருந்த இருட்டைக் கண்டதும், “அச்சோ, டயம் என்னாச்சு… உங்களுக்கு மாத்திரை கொடுக்கணுமே…” பதறியவள் அவசரமாய் எழுந்து அமர முயற்சி செய்ய கை கால்கள் தொய்ந்து சரிய சோர்வை உணர்ந்தாள்.
அதற்குள் அவளைப் பிடித்துக் கொண்ட மித்ரன், “என்ன பவி இது… உனக்கு ஹெவி பீவர் மா… பீவர்ல மயங்கின உனக்கு டாக்டர் ஊசி போட்டுப் போனதும் தூங்க ஆரம்பிச்சே… நல்லவேளை… இப்ப சூடு குறைஞ்சிருக்கு… இல்லேன்னா ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணனுமேன்னு பயந்துட்டே இருந்தேன்…” அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே கூறினான் அவன்.
அவனது வார்த்தைகள் அவளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்க, “இப்ப எப்படி இருக்கு பவி… சாப்பிட எடுத்திட்டு வரட்டுமா…” அவளது நெற்றியில் அவனது விரல்கள் இதமாய் வருடிக் கொண்டிருக்க அந்த ஸ்பரிசத்தில் அன்னையை உணர்ந்தவளின் கண்கள் கலங்கின. எத்தனை தைரியமான மனிதர்களும் உடம்புக்கு ஏதாவது வரும்போது கலங்கி விடத்தான் செய்கிறார்கள்.
அவள் கண்ணீரைக் கண்டவன், “அச்சோ, ஏன்மா அழறே… தலை வலிக்குதா…” என்று மீண்டும் அவள் நெற்றியில் மிருதுவாய் வருடிக் கொடுக்க அவன் கை மீது தனது மெல்லிய கையை வைத்து அமர்த்தியவள், “அம்மா நினைவு வந்திடுச்சுங்க…” எனவும் நெகிழ்ந்தான் அவன்.
“சரி… உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்திட்டு வரேன்…” என்று அவன் நகரப் போகவும், கையைப் பற்றிக் கொண்டவள், “ப்ளீஸ் மித்து… நீங்க கொஞ்சநேரம் என் பக்கத்துலயே இருக்கீங்களா…” குழந்தையாய் கேட்டவளை நெஞ்சோடு அணைத்துக் கொள்ளத் தோன்றியது அவனுக்கு. மௌனமாய் அருகில் அமர்ந்தான்.
தயக்கத்துடன் நீண்ட அவள் கைகள் அவனது கையை பற்றிக் கொண்டு முகத்தோடு சேர்த்துக் கொண்டன. அவள் செய்வதை வியப்புடன் பார்த்திருந்தவன், “என்ன பவி… என்ன பண்ணுது…” என்றான்.
“சின்ன வயசுல எனக்கு காய்ச்சல் வரும்போது அப்பாவோட கையை எடுத்து இப்படிதான் வச்சுப்பேன்… அம்மா என் பக்கத்துலயே இருந்து பார்த்துப்பாங்க… நீங்க பண்ணினது அம்மா போலவே தோணுச்சு…” சோர்வுடன் சிரமப்பட்டு சொல்லி முடிக்க அவளையே பார்த்திருந்தான்.
“இந்தக் குழந்தை மனம் உடையவளுக்கா அத்தனை பெரிய கொடுமையை செய்ய இருந்தேன்… என்னில் தன் பெற்றோர்களைத் தேடும் இவளுக்கு உண்மை மட்டும் தெரிந்தால் எப்படி எடுத்துக் கொள்வாள்… என்னை துரோகி என்று வெறுத்து ஒதுக்கி விடுவாளோ… இல்லை, இனிமேலும் இவளிடம் உண்மையை மறைத்து வைப்பது தவறு… உடம்பு சரியாகி எழுந்ததும் நடந்த உண்மையை சொல்லி மன்னிப்புக் கேட்டு, மனதார இப்போது அவளை நேசிப்பதை சொல்லி விட வேண்டும்… இல்லாவிட்டால் இந்தக் குற்றமே புற்றாக என் நெஞ்சை அரித்துவிடும்…” அவன் நினைவுகள் பலவாறாக ஓடிக் கொண்டிருந்தன.
அவள் மனதுக்குள் உறக்கம் கலைந்து எழும்போது இருந்த சந்தேகங்களும், சஞ்சலங்களும் அவனது அருகாமையில் காணாமல் போயிருந்தன. எழுந்து கொள்ள முயன்றவளை படுக்குமாறு கூறிவிட்டு காலைத் தாங்கிக் கொண்டே மெல்ல நடந்து சென்று இட்லியைத் தட்டில் வைத்து அறைக்கு கொண்டு வந்தவனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.
மெல்லப் புன்னகைத்தவள், “நீங்க எதுக்குங்க காலுக்கு முடியாம இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க… நான் கீழே வந்திருப்பேனே…” என்று கூறியவளை மெல்ல சாய்வாய் அமர்த்தியவன், “சாப்பிட்டு மாத்திரை போட்டு நல்லாத் தூங்கி எழுந்திரு… காலைல உன் காய்ச்சல் காணாமப் போயிருக்கும் பாரு…” சொல்லிக் கொண்டே தட்டை நீட்ட, அவள் கட்டிலில் இருந்து இறங்க முயன்றாள்.
“கை கழுவ நான் தண்ணி எடுத்துத் தரேன்… இறங்க வேண்டாம்…” என்றவனை நோக்கி நாணத்துடன் புன்னகைத்தவள், “எனக்கு பாத்ரூம் போகணும்…” சொல்லிக் கொண்டே சேலையை சரி செய்து கொண்டு சென்றவளைக் கண்டு அசடு வழிய நின்றிருந்தான்.
அவளுக்கு தான் ஏதாவது செய்யும்போதும் குழந்தையாய் மலரும் அவள் முகத்தைக் காண அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் வந்ததும் சாப்பிட வைத்து மாத்திரை கொடுத்தவனை அன்போடு நோக்கியவள், “தேங்க்ஸ்ங்க…” எனும்போது குரல் கலங்கி இருந்தது.
அவளது கலங்கிய குரல் அவன் மனதை முள்ளாய் குத்த, எதையும் காட்டிக் கொள்ளாமல், “சரி தூங்கு பவி… நான் சாப்பிட்டு வந்திடறேன்…” எனவும், “சாப்பிட்டு மாத்திரை போட மறந்துடாதீங்க…” அந்நிலையிலும் தன்மீது மாறாத அக்கறை கொண்டிருந்தவளின் அன்பு நெகிழ வைத்தது.
அடுத்தநாள் காலையில் விடிந்ததும் ஊருக்குக் கிளம்பிய ரோஹிணி, மீனாவிடம் விடைபெற வந்தாள்.
“நான் கிளம்பறேன், அத்தான்கிட்ட சொல்லிருங்கத்தை…”
அவளையே பார்த்த மீனா, “உன் அத்தான் மேல உள்ள கோபம் புரியுது… நீயே சொல்லிட்டுப் போடா…” எனவும், “எனக்கு யார் மேலயும் கோபம் இல்லை… என் மேல, என் ஜாதகத்து மேல, என் விதியை நினைச்சு தான் கோபம் வருது… அதுக்காக நான் இப்படியே இருந்திட மாட்டேன்… என்னைப் பிடிக்காதவரை எனக்கும் பிடிக்காது… நான் கிளம்பறேன்…” அமைதியாய் சொன்னவளை வியப்புடன் பார்த்தார். ரோஹிணியிடம் புதியதாய்க் காணும் இந்த அசாத்திய பொறுமை அவருக்கு சிறிது அச்சமூட்டியது.
“அண்ணன் கிட்ட சொன்னியா ரோஹி…” தயக்கத்துடன் கேட்டவரை அமைதியாய் பார்த்தவள், “பயப்படாதீங்க அத்தை… எனக்குப் பிடிச்சது தான் அப்பாவுக்கும் பிடிக்கும், எனக்கு ஒண்ணு வேண்டாம்னா அப்பாவும் வேண்டாம்னு தான் சொல்லுவார்… அதுக்கு நான் பொறுப்பு…” என்றவளின் கையைப் பிடித்துக் கொண்டு கலங்கிய மீனா, “இப்படில்லாம் நடக்கும்னு நானும் எதிர்பார்க்கலை மா… நீ தனியா கிளம்பணுமா… அப்பாவும், அம்மாவும் நாளன்னிக்கு வர்றேன்னு சொல்லி இருக்காங்களே…”
“அவங்க பாட்டுக்கு வந்துட்டுப் போகட்டும் அத்தை… இப்ப இந்த சூழ்நிலைல இங்க இருக்க எனக்குப் பிடிக்கலை… நான் கிளம்பறேன்…” பிடிவாதமாய் கூறியவளை, “சரிம்மா… காபியாவது குடிச்சிட்டு கிளம்பு…” என்றவர் காபி கலந்து கொடுத்து, டிரைவரிடம் பத்திரமாய் கொண்டு விடும்படி கூறி அனுப்பி வைத்தார்.
காலையில் எழுந்து கீழே வந்த மித்ரனிடம், ரோஹிணி கூறியதைக் கூறி, அவள் கிளம்பி விட்டதை சொல்லி வருத்தப்பட, “அவ யோசிச்சு சரியான முடிவுதான் எடுத்திருக்காம்மா… இதுதான் எல்லாருக்கும் நல்லது… மாமாகிட்ட பேசுவோம்…” என்றான். 
“ம்ம்…” என்று முனங்கியவரிடம், “அம்மா… எப்பவும் ரோஹிணியைப் பத்தி தான் யோசிக்கறீங்க… பவிக்கு எப்படி இருக்குன்னு கேக்கவே மாட்டேங்கறீங்க…”
ஒருநிமிடம் அமைதியாய் இருந்தவர், “உன்னோட தப்பை சரி பண்ணிக்க உனக்கு ஒரு வழி கிடைச்சிருச்சு மித்ரா… நான் ரோஹிணிக்கு பண்ணின துரோகத்தை எப்படி சரி பண்ணிக்கறதுன்னு தெரியாம முழிக்கிறேன்… சின்ன வயசுல இருந்து அவ மனசுல ஆசையை வளர்த்திட்டு இப்போ அது நடக்காது… மனசுல இருந்து அழிச்சிடுன்னு சொல்லுறது எத்தனை பெரிய பாவம்… என் அண்ணன் கிட்டே எந்த முகத்தை வச்சிட்டு இதைப் பத்திப் பேசுவேன்…” சொல்லிவிட்டு நெடிய பெருமூச்சொன்றை வெளியேற்றிய அன்னையின்  மனநிலையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
“சரி, சொல்லு… உன் பொண்டாட்டிக்கு காய்ச்சல் எப்படி இருக்கு…” அவரது “பொண்டாட்டி” என்ற வார்த்தை சந்தோஷத்தைக் கொடுத்தாலும், “உன்” என்ற அழுத்தம் சற்று வலிக்கவே செய்தது.
“இப்போ பரவால்லை மா… எழுந்து பாத்ரூம் போனா… அவளுக்கு காபி எடுத்திட்டுப் போகலாம்னு வந்தேன்…” என்ற மகனிடம், “ம்ம்… இன்னைக்கும் ரெஸ்ட் எடுக்க சொல்லு… மறுபடியும் வேலை செய்யறேன்னு வந்திடப் போறா… கொஞ்ச நேரத்துல சாவித்திரி வந்திடுவா…” என்றவர் அவர்கள் இருவருக்கும் காபி கலந்து கொடுத்தார்.
“நான் குளிச்சிட்டு வந்து அவளைப் பார்க்கறேன்…” என்றவர் அறைக்குள் நுழைந்து கொள்ள, காலைத் தாங்கிக் கொண்டே மெல்ல காபி டிரேயுடன் படியேறி அவர்களின் அறைக்கு சென்றான் மித்ரன். அவன் மனதிலும் இது தெரிந்தால் மாமா என்ன சொல்வாரோ என்ற யோசனை ஓடிக் கொண்டு தான் இருந்தது.
அவன் வருவதற்குள் உடை மாற்றி சோர்வாய் இருந்தாலும் பளிச்சென்று நின்றவளை வியப்புடன் நோக்கிக் கொண்டே காபியை கப்பில் ஊற்றி நீட்டியவன், “உடம்புக்கு முடியாம இருக்கும்போது எதுக்குக் குளிச்சே…” என்று கடிந்து கொள்ளும் குரலில் கேட்டான்.
“இல்லங்க… ஹாட் வாட்டர்ல மேலுக்கு ஊத்திட்டு டிரஸ் மாத்தினேன்… என் அம்மா சொல்லுவாங்க… காய்ச்சல் வந்தா ரெண்டு நேரமும் டிரஸ் மாத்தணும்… இல்லேன்னா அந்த கிருமிகள் எல்லாம் நம்ம உடைல இருந்து மறுபடியும் காய்ச்சல் வரவைக்கும்னு…” சொல்லிவிட்டு பளிச்சென்று சிரிக்க அவன் மனதில் மின்னல் வெட்டியது. அவளது அருகாமையே குற்றவுணர்வில் துடித்த தன் மனதுக்கு ஆறுதலாய் உணர்ந்தான்.
வரங்கள் எனக்குத் தேவையில்லை…
வரத்துக்காய் நான் தவமிருப்பதுமில்லை…
என் கணக்கில் சாபங்கள் சேராமல்
இருக்கவே பிரயத்தனப்படுகிறேன்…
இரண்டு நாட்கள் அவளை முழுமையாய் ஓய்வெடுக்க வைத்து அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டவனின் அருகாமையில் அவள் மனதும் உடம்பும் நன்றாகவே தேறி இருந்தன.
சாவித்திரி பிஸியாய் சமையல் செய்து கொண்டிருக்க, ஹாலுக்கு வந்தவள் கீழிருந்த அறைகளை ஒதுக்கிவிட்டு அவரிடம் வந்தாள். அவளை நோக்கி புன்னகைத்த சாவித்திரி, “மூணு நாள் காய்ச்சல்ல எப்படி இளைச்சுப் போயிட்டீங்க… ஜூஸ் எடுக்கட்டுமா பவிம்மா…” என்றார் அன்புடன்.
“ம்ம்.. சரி சாவித்திரிக்கா… சும்மா இருந்து போர் அடிக்குது… இன்னைக்கு நான் சமைக்கட்டுமா…”
“அச்சோ வேண்டாம் தாயி… ஒரு வாரத்துக்கு உன்னை வேலை செய்ய விடக் கூடாதுன்னு தம்பி கண்டிப்பா சொல்லிருக்கு… இன்னைக்கு அவுங்க மாமாவும், அத்தையும் ஊருல இருந்து வராங்களாம்… அதான் கொஞ்சம் சமையல் அதிகம்…”
“ம்ம்.. என்றவள், இந்த மித்துவுக்கு என்னவாயிற்று… காய்ச்சல் வந்ததிலிருந்து என்னைக் குழந்தை போல பார்த்துக் கொள்கிறார்… அவருடைய கட்டிலை என்னை உபயோகிக்க சொல்லிவிட்டு என் படுக்கையை கீழே விரித்து அவர் படுக்கிறார்… இத்தனை நாள் இந்தப் பிரியத்தை எல்லாம் என் கள்ளக் கண்ணன் எங்கே ஒளித்து வைத்திருந்தானோ…” கணவனை நினைத்துக் கொள்ளவும் முகம் செந்தாமரையாய் மலர்ந்தது.
மித்துவுக்கும் சேர்த்து ஜூஸை வாங்கிக் கொண்டு உற்சாகத்துடன் மாடிக்கு சென்றவளைப் புன்னகையுடன் பார்த்து நின்றார் சாவித்திரி.
கட்டிலில் அமர்ந்து வெறுமனே கண் மூடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தவனிடம், “என்னங்க… ஜூஸ் குடிங்க…” என்று பவித்ரா கூறவும் கண்ணைத் திறந்தான்.
மனம் நிறைந்த காதலில் முகம் மலர்ந்து நின்றவளை ஆசையோடு பார்த்தவன், “பவி… இப்படி உக்காரு…” அவள் கையைப் பிடித்து அருகில் அமர்த்தினான்.
நுனிவிரல் தீண்டுகையில்
உணருகின்றேன் நூதனவசியமொன்றை…
ஊசியும் இல்லை… நூலும் இல்லை…
சரம் கோர்க்கிறாய் உன்
மந்திரப் புன்னகையில்
மனசெல்லாம் மல்லிகையை…
ஒரு ஜூஸ் கிளாஸைக் கையில் எடுத்துக் கொண்டவன், “நீயும் குடி…” என்றான். அவள் குடிப்பதைப் பார்த்துக் கொண்டே ஒரே மூச்சில் குடித்துவிட்டு நீட்டியவன், “பவி… இந்த சேலை உனக்கு ரொம்ப அழகாருக்கு…” சொல்லிக் கொண்டே அவள் கையைத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டு விரல்களை மென்மையாய் உருவி விடத் தொடங்க, அவள் கூச்சத்தில் தேகத்துக்குள் ஓடிய அவஸ்தையான இன்பத்தில் நெளிந்தாள். அவளது சிவந்த முகத்தை ரசித்துக் கொண்டே நெற்றியில் புரண்ட முடிக் கற்றைகளை மெல்ல ஒரு விரலில் விலக்கி விட்டான்.
உன் பிறைநிலா நெற்றியில்
தடம்பிறழும் இதயத்திற்கு
வேகத் தடையொன்று வேண்டுமடி…
குதிக்கிறது கட்டுப்பாடின்றி…
 
அவள் கைகளில் கோலம் வரைந்து கொண்டிருந்தவனைக் கூச்சத்துடன் நோக்கியவள், “நான் கீழே போகட்டுமா…” என்றாள் தொண்டையை அடைத்துக் கொண்டு நின்ற உணர்வலைகளை அடக்க முடியாமல்.
 
“பவி… உண்மையா உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா…” என்றான் கைகளை அவன் கைக்குள் இறுக்கிக் கொண்டு.
 
அவனை ஒரு நாணப் புன்னகையுடன், “இது என்ன அபத்தமான கேள்வி…” என்பதுபோல நோக்கியவள், “என்னை விட இந்த உலகத்தில் உள்ள எல்லாத்தையும் விட உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு… உங்களை எப்ப முதன்முதலா கோவில்ல பார்த்தேனோ அப்பவே என் மனசில் ஆழமா பதிஞ்சிட்டிங்க…” சொல்லிவிட்டு நாணத்துடன் குனிந்து கொண்டாள்.
 
“பவி…” காதலுடன் ஒலித்தது அவனது குரல்.
 
“ம்ம்… சொல்லுங்க…”
“நீ உண்மைய தான் சொல்லறியா…” அவனது குரல் பலவித உணர்வுகளின் கலவையாய் வெளிப்பட்டது. அவன் முகத்தை பூவின் மென்மையோடு ஏறிட்டவள் ஒருநிமிடம் அவனையே பார்த்திருந்தாள்.
ரசித்திட இப்பூவலகில்
ஆயிரம் உண்டென்பேன்…
ஆனால் நான் வசித்திட
வசதியான இடம் உன்
இதயம் தானென்பேன்…
 
சொன்னவளை அப்படியே இழுந்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் மித்ரன். அவளது மனம் படபடத்தது.
 
“என்னங்க… ஏன் இன்னைக்கு இப்படில்லாம்… ஒருவருஷக் கணக்கை மறந்திடாதிங்க…” அவள் இயல்பாய் நினைவு படுத்தவும் தீயைத் தொட்டது போல் சட்டென்று விலகினான் மித்ரன்.
இமைப்பீலி வரும்…

Advertisement