Advertisement

இமை – 17
ட்டிலில் படுத்திருந்த பவித்ரா மருந்தின் உதவியால் மதியத்திலிருந்து நல்ல உறக்கத்தில் இருக்க, அருகில் ஏதேதோ யோசனையுடன் வருத்தமாய் அமர்ந்திருந்தான் மித்ரன். நல்ல காய்ச்சலுடன் அரை மயக்கத்தில் இருந்தவளைப் பரிசோதித்த டாக்டர் ஊசிபோட்டு காய்ச்சல் குறையாவிட்டால் உடனே மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறி சென்றிருந்தார்.
மித்ரன் அவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்க சூடு சற்று குறைந்தது போல் தோன்றியது.  அதைப் பார்த்துக் கொண்டே மீனா தயக்கத்துடன் அறைக்குள் நுழைந்தார்.
“மித்ரா… நீ மதியமும் சாப்பிடலை… இட்லி ஊத்திட்டு வரேன், சாப்பிடறியா…” அவனது முகத்தை ஏறிட முடியாமல் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னவரிடம், “எனக்கு பசிக்கலை… வேண்டாம்…” என்றான் மித்ரன். அவனது கண்களும் அவர் முகத்தைப் பார்க்கவில்லை.
“மாத்திரை போடணுமே…” தயக்கத்துடன் ஏறிட்டார்.
“ஒருநாள் போடலைன்னா ஒண்ணும் ஆயிடப் போறதில்லை… ஒரு அறியாப் பொண்ணுக்கு நான் செய்த துரோகம் தான் என் கால்ல வந்து விடிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்… மாத்திரை போடாம என் காலே போறதா இருந்தாலும் போகட்டும்…” உள்ளத்தில் உள்ள வேதனையைக் கோபமாய் வார்த்தையில் கொட்டினான்.
“மித்ரா… அம்மா செய்தது தப்புதான்… அப்ப இருந்த அவசரத்துல ஏதோ புத்திகெட்டுப் போயி இவ அத்தை சொல்லுறதைக் கேட்டு, இவகிட்ட இதைப் பத்திப் பேசாம முடிவு பண்ணிட்டேன்… ஒரு வாரத்துக்குள்ளே உனக்கு பொருத்தமான ஜாதகமும் கிடைக்கணும், அந்தப் பொண்ணு இதுக்கு சம்மதிக்கற பொண்ணாவும் இருக்கணும்னா தேடிப் பிடிக்க நேரமும் இல்லை… நான் அவளோட சம்மதத்தோட தான் இந்தக் கல்யாண ஏற்பாட்டைப் பண்ணேன்னு உன்கிட்டே சொன்னது தப்புதான்… நாம நெருங்காம இருந்தா அவளும் நெருங்கி வர மாட்டான்னு நான் நினைச்சதுக்கு மாறா பவித்ரா இப்படி நம்மகிட்டே அன்பா இருப்பான்னு நானும் சுத்தமா எதிர்பார்க்கலை…” குற்றவுணர்வோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
“எப்படிம்மா இப்படி சொல்லறீங்க… எந்தப் பொண்ணுக்கும் கல்யாணம்கறது எத்தனை பெரிய கனவு… எவ்ளோ ஆசைகளை சுமந்திட்டு புதுசா ஒரு குடும்பத்துக்கு வராங்க… அதும் இவளை நேசிக்க இவளுக்குன்னு பெத்தவங்க கூட இல்லாத போது நம்ம அன்பை எத்தனை எதிர்பார்த்திருப்பா…”
“மித்ரா… நீ சொல்லுறதெல்லாம் எனக்குப் புரியுது… ஆனா நம்ம ரோஹியை, நினைச்சுப் பார்க்கணும்ல… சின்ன வயசுல இருந்து அவ மனசுல வளர்த்துகிட்ட ஆசையை அவ்ளோ சீக்கிரம் மறந்திருவாளா…”
“அதுக்காக… நம்ம மனசுல ஆயிரம் ஆசை இருக்குன்னு மத்தவங்க மனசுல உள்ள ஆசையை அழிக்கற அதிகாரத்தை யார் நமக்குக் கொடுத்தது… பணம் கொடுத்தா எல்லாமே சரியாகிடுமா… இப்ப இவளோட வாழ்க்கை என்னாகறது…”
“நீ இப்ப வந்த இவளோட வாழ்க்கையைப் பத்தி மட்டுமே யோசிக்கறியே… நம்ம ரோஹியைப் பத்தி யோசிச்சியா… அவ மனசுல எத்தனை ஆசை இருக்கும்… சின்ன வயசுல இருந்து மார்லயும், தோள்ளயும் போட்டுக்கிட்டு மருமகனேன்னு பாசத்தைக் கொட்டி வளர்த்த உன் மாமா ஆசை என்னாகறது… உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சு, உங்களோட வாரிசைக் கொஞ்சனும்னு நினைச்ச என்னோட ஆசை என்னாகறது… எங்களைப் பத்தியும் கொஞ்சம் யோசிக்கணும் மித்ரா…” சற்று கோவமாய் ஒலித்தது மீனாவின் குரல்.
அவரது குரலின் சத்தத்தில் அசையத் தொடங்கிய பவித்ராவைக் கண்டதும் எதோ சொல்ல வந்த மித்ரன் அப்படியே நிறுத்திக் கொண்டு, “இவ காதுல விழுகுற போல எதையும் பேச வேண்டாம்… நாமெல்லாம் சேர்ந்து அவளை ஏமாத்தி இருக்கோம்னு தெரிஞ்சா அவளால தாங்கிக்கவே முடியாது…” சொன்னவனை ஒரு பார்வை பார்த்த மீனாவின் கண்ணில் தெரிந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதில் வெறுப்பும், கவலையும், பயமும் கலந்து பிரதிபலித்தது.
ரோஹிணியும் சாப்பிடாமல் அவளது அறைக்குள் இருக்க அவளைப் பற்றி யோசித்துக் கொண்டே அடுக்களைக்கு சென்றார் மீனலோசனி.
அவசரமாய் அவர் செய்த மதிய உணவை யாருமே சாப்பிடாமல் அவரவர் நினைவுகளின் தாக்கத்தில் ஆழ்ந்திருக்க, இரவு உணவுக்கும் யாரும் வரவில்லை. மீனாவின் மனது குழப்பத்திலும் கவலையிலும் தவித்தது.
மதியம் ரோஹிணியை உணவுண்ண அழைக்கவும், சற்றுநேரம் தனியே விடும்படி சாத்திய அறைக்குள்ளிருந்து குரல் கொடுத்தாள். இப்போது திறந்திருந்த அவளது அறைக்கு செல்ல அவள் அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.
“சரி, அத்தை வராங்க… நான் அப்புறம் பேசறேன் ராகவ்…” சொல்லிவிட்டு அவசரமாய் அழைப்பைத் துண்டித்தாள். அவளது முகமே அழுதிருப்பதை உணர்த்த கவலையுடன் அருகில் அமர்ந்தார் மீனா.
“ரோஹிம்மா…”
அவரது குரலைக் கேட்டதும் நிமிர்ந்தவள், உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு அமைதியாய் கட்டிலின் ஓரத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
“அத்தை மேல கோபமா… சாரிடா செல்லம்… இப்படில்லாம் ஆகும்னு நான் எதிர்பார்க்கலை…”
அவள் அமைதியாய் இருந்தாலும் கண்கள் கண்ணீரை நிரப்பிக் கொண்டன.
“ஏன் அத்தை… எனக்கு இப்படில்லாம் நடக்கணும்… எதுக்கு சின்ன வயசுல இருந்து அத்தான் தான் என் புருஷன்னு சொல்லி சொல்லி மனசுல ஆசையை வளர்த்தீங்க… என் ஜாதகத்துல ஏன் இப்படி ஒரு தோஷம் இருக்கணும், அதுக்குப் பரிகாரம் பண்ண நமக்கு ஏன் இப்படிக் குறுக்கு வழி எல்லாம் தோணனும்…” கண்ணீரோடு கேட்டவளை வேதனையோடு பார்த்தார் மீனலோசனி.
“ரோஹிம்மா… ஏண்டா இப்படிப் பேசறே…”
“யோசிச்சா எனக்கு என் மேலயே வெறுப்பா இருக்கு அத்தை… நான்தான் அவர் பின்னாடியே சுத்தறேனே ஒழிய என் மேல அத்தானுக்கு எப்பவுமே பிரியம் இருந்ததில்லை… ஆனா பவித்ரா இங்க வந்த கொஞ்ச நாள்லயே அவர் மனசுல இடம் பிடிச்சுட்டா… அதை அத்தான் உணர்ந்தாரோ இல்லையோ, அவரோட பார்வைல செயல்ல, நான் உணர்ந்தேன்…
“நீ என்னம்மா சொல்லறே…”
“ஆமா அத்தை… அதனால தான் பவித்ராவைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குக் கோபமா வந்துச்சு… பொறந்ததுல இருந்து அவர் பின்னாடியே சுத்திட்டு இருக்கற என்னை ஆசையா ஒரு பார்வை கூடப் பார்த்தது இல்லை… என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்டது கூட நம்ம எல்லாரோட விருப்பத்துக்கும் வேண்டிதான்…”
அவள் சொன்னதைக் கேட்டு மீனாவும் யோசிக்கத் தொடங்க, “ஹூம்… இன்னைக்கு முழுசும் ரூமுக்குள்ள இருந்து யோசிச்சதுல எனக்கு இதெல்லாம் புரிஞ்சது…” விரக்தியாய் ஒரு சிரிப்பு வெளிப்பட்டது ரோஹிணியிடம்.
“ரோஹிம்மா…” வருத்தத்துடன் அவளது தோளில் தட்டிக் கொடுத்தவர், “நீ தேவையில்லாம எதுவும் யோசிக்காத… மித்ரன்கிட்ட நான் பேசறேன்… பவித்ராவுக்கு நடந்தது என்னன்னு சொல்லிப் புரிய வைக்கிறேன்… நாம செய்த தப்புக்கு அவகிட்டே மன்னிப்புக் கேட்டாவது எல்லாத்தையும் சரி பண்ணறேன்…”
“ஹூம்… அதுக்கெல்லாம் அவசியம் வராது அத்தை… அப்படி எதுவும் முயற்சி பண்ணினா அத்தானுக்கு இன்னும் நம்ம மேல உள்ள கோபம் அதிகம் தான் ஆகும்…”
“அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா… ஏதாச்சும் பண்ணிதானே ஆகணும்…”
“வேண்டாம் அத்தை… எதுவும் பண்ண வேண்டாம்… அத்தான் மனசுக்குள்ளே பவித்ராதான் இருக்கா… லாஸ்ட்ல நாம பண்ணின காரியம் நமக்கே வினையா முடிஞ்சிருச்சு… நான்தான் லூசு மாதிரி, அவரைத் தான் கட்டிக்குவேன்… இல்லேன்னா செத்திடுவேன்னு எல்லாம் உங்களை மிரட்டி இந்தக் காரியத்தை செய்ய வச்சுட்டேன்… இதுக்கான பலனை நான் அனுபவிச்சுதானே ஆகணும்… என் மேல் அத்தானுக்கு எந்த விருப்பமும் இல்லைன்னு புரிஞ்ச பிறகு அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லுறதுல அர்த்தமே இல்லை…”
மென்மையான குரலில் நிதானமாய் பேசிய மருமகளை மீனா ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவளுடைய மனதுக்குக் கிடைத்த ஏமாற்றம் அவளைப் பக்குவப் படுத்தியிருக்க, மித்ரனின் மாற்றத்தை யோசித்த அவளுக்குள்ளும் அது மாற்றத்தைக் கொண்டு வந்தது.
“எனக்கு அத்தான் மேல உள்ள விருப்பம் கூட நீங்கள்லாம் சொல்லி வந்ததா இருக்குமோன்னு இப்போ தோணுது… ஏன்னா அவருக்காக நான் துடிச்சதை விட பவித்ரா தான் அதிகமாத் துடிச்சா… அவரைக் கண்ணு இமை போலப்  பத்திரமாப் பார்த்துக்குறா… அதைப் பார்த்தா எனக்கு எரிச்சலா வருது… அத்தானுக்கு அவதான் பொருத்தமானவ அத்தை… நாம வீம்புக்கு இல்லேன்னு சொன்னாலும் இதான் உண்மை…” என்றவள் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்ற, மீனா அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“ரோஹி… நீ உன் அத்தான் மேல எவ்ளோ அன்பை வச்சிருந்தேன்னு எனக்குத் தெரியும்… இப்படி மனசு வெறுத்துப் பேசாதேம்மா…”
“இல்ல அத்தை… பவித்ராவை எனக்குப் பிடிக்காமப் போகக் காரணம் எனக்குப் பிடிச்சவரை அவ உரிமையாக்கிட்டா… அதனால… கோபமா வந்துச்சு… அவ இந்த விஷயத்துல என்னை ஜெயிச்சுட்டா… இனி நானும் அத்தானும் சேர்ந்தாலும் அது வாழ்க்கைல மிகப் பெரிய தோல்வியா தான் இருக்கும்… அது புரிஞ்சிடுச்சு… எப்போ அவர் மனசுல வேறொருத்தி வந்துட்டாளோ, இனி எனக்கு அந்த மனசு வேண்டாம்…” தீர்மானாய் கூறினாள்.
“ரோஹி… அவசரமா எந்த முடிவுக்கும் வர வேண்டாம்…”
“இல்ல அத்தை, நான் நிதானமா யோசிச்சு இப்போதான் சரியான முடிவு எடுத்திருக்கேன்…”
“அப்பாக்கு இதெல்லாம் தெரிஞ்சா என்னாகுமோ…”
“எதுவும் ஆகாம நான் பார்த்துக்கறேன்… இனி யார் சொன்னாலும் என் மனசுல அத்தானுக்கு இடமில்லை… என்னை வேண்டாம்னு அவருக்கு எப்போ தோணுச்சோ, அப்பவே அவரும் எனக்கு வேண்டாம்…” தீர்மானமாய் கூறியவளை கலக்கத்துடன் பார்த்தார் மீனா.
“ரோஹி… மித்ரன் எதுவும் சொல்லலையே மா…”
“ஆனா சொல்ல வந்தது இதுதான் புரிஞ்சிடுச்சே அத்தை… நான் முடிவு பண்ணிட்டேன்… இனி பவித்ராவை விலகி வந்து அத்தான் என்னைக் கல்யாணம் பண்ணினாலும் என் மனசுல இந்த உறுத்தல் இருந்துட்டே இருக்கும்… விளையாடினது விதிங்கற நெருப்போடன்னு இப்போ புரிஞ்சிடுச்சு… பொய்யான கல்யாணம் மெய்யாவே இருக்கட்டும்… அப்பாகிட்ட நான் பேசிக்கறேன்… நான் காலைல நேரமாவே ஊருக்குக் கிளம்பறேன் அத்தை… பயப்படாதீங்க… கண்டிப்பா செத்துட மாட்டேன்…”
இதுவரை அவளை குறும்போடும், சிரிப்போடும், கோபத்தோடும் மட்டுமே கண்ட கண்கள் பக்குவமான அவளது பேச்சைக் கேட்டு அதிசயித்துப் போனது.
நிராகரிப்பு அது பெரும் கசப்பு-கேட்டு
வாங்க அன்பொன்றும் கடனல்ல…
உள்ளத்தில் இல்லா நேசம்
என்றும் உயிர் கொடுப்பதில்லை…
உருவமில்லா காதலுக்கும் வலிக்கிறது…
இது வலியால் வந்த விலகலல்ல…
என் விருப்பம் உனக்கு வலிக்க
வேண்டாமென்றே வழி விடுகிறேன்…
“சரி… எதுவாயிருந்தாலும் அண்ணன் கிட்டே பேசிட்டுப் பார்த்துக்கலாம்… நீ வந்து சாப்பிடு…”
“ப்ச்… எனக்குப் பசிக்கல அத்தை… நீங்க சாப்பிடுங்க…” என்றவளை வேதனையுடன் பார்த்துக் கொண்டே வெளியேறினார் மீனலோசனி.
அவர் மனதில் ரோஹிணி கூறிய வார்த்தைகள் ஒலித்துக் கொண்டே இருந்தன.
“விளையாட்டுத் தனமாய் பிடிவாதமாய் இருப்பவள் இன்று இப்படியெல்லாம் யோசித்திருக்கிறாளே… கடவுளே, இங்கே நடந்தது, அண்ணனுக்குத் தெரிந்தால் என்னாகப் போகிறதோ… அவர் எப்படிக் குதிப்பாரோ… ஆனாலும் ரோஹிணி சொன்ன விஷயங்கள் சரியாகத்தானே இருக்கிறது… வாழ்க்கையில் அடிபடும்போது மனது பக்குவமாய் யோசிப்பது இயல்புதான்… அவள் மனம் எப்படி வேதனையில் துடித்திருந்தால் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பாள்…” யோசித்தவர் நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினார். 
அவர் மனது தவித்துக் கொண்டிருந்தது. “தேவையில்லாமல் பிள்ளைகளின் வாழ்க்கையில் விளையாடி விட்டோமோ… அது இப்படி விபரீதமாய் முடிந்து விட்டதே…” என்று புலம்பிக் கொண்டிருந்தது. மித்ரனின் மாற்றத்தை அவரும் உணர்ந்து தான் இருந்தார்.
பவித்ராவை அவருக்கும் பிடிக்கவே செய்தது. “மித்ரனுக்கு ரோஹிணியை மட்டும் பேசாமலிருந்தால் பவித்ரா போல ஒரு நல்ல பெண்ணை வேறு எங்கு தேடினாலும் கிடைக்கப் போவதில்லை… வசதியில் குறைவிருந்தாலும் குணத்தில் நிறைந்திருந்தாள்…” என்பதை அவராலும் மறுக்க முடியாது.
அவளது அன்பான செயல்கள் ஒவ்வொன்றும் தான் செய்த துரோகத்தை சொல்லி உறுத்தியதால் தான் நெருங்க முடியாமல் தவித்தார். மித்ரனுக்காய் அவள் துடித்ததும், குழந்தை போல அவனுக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்து செய்ததும் கண்டு கொள்ளாமல் நடிக்க யாரால் தான் முடியும்… மித்ரனின் பேச்சிலிருந்தே அவனது மனநிலை புரிந்துவிட்டது.
இப்போது ரோஹிணி இப்படி சொல்லி விட்டாலும் இங்கே நடந்ததை அறிந்தால் அண்ணன் என்ன சொல்லப் போகிறாரோ… என்று சற்று பயமாகவே இருந்தது.
அவர் யோசனையில் உணவு மேசையின் நாற்காலியில் அமர்ந்திருக்க அங்கே வந்தான் மித்ரன்.
“அம்மா… பவி எழுந்திருச்சா அவளுக்கு சாப்பிட கொடுக்கணும்… இட்லி ஊத்தி வச்சிருங்க…” என்றவனை யோசனையுடன் பார்த்தார்.
அவரது பார்வையைத் தாங்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்டவன், “அம்மா… இதுவரை உங்க விருப்பம் மட்டுமே என் விருப்பமா நினைச்சு எல்லாத்தையும் செய்துட்டு வந்தேன்… இப்ப என் மனசுல உள்ள விருப்பத்தை உங்க விருப்பமா நினைக்கக் கூடாதா…” என்றான் வேண்டுதலான குரலில்.
அவர் அமைதியாய் இருக்க, “அம்மா… இத்தனை நாள் என்னைப் பெத்த அம்மாவுக்கும் மேல எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துகிட்டீங்க…  அப்பா ஏதோ தெரியாம செய்த தப்புக்கு மனசு வருத்தப்பட்டு தான் ஊரை விட்டே போயிட்டார்… என் மனசும் இப்ப அப்படிதான் இருக்கு…”
அதிர்ச்சியாய் மகனை அன்னை நோக்க, “பவித்ராவோட உண்மையான அன்பை உணரும் போதேல்லாம் தப்பு செய்துட்டோமேன்னு உறுத்தல் அதிகமாயிட்டே இருக்கு… அதைத் திருத்திக்க ஒரே வழி தான் இருக்கு… பொய்யா நடந்த இந்தக் கல்யாணம் உண்மையாகணும்… ப்ளீஸ் மா…” மனதில் உள்ள வருத்தத்தைத் தாங்கி வந்த அவனது வார்த்தைகள் அவரை யோசிக்க வைத்தது.
“மித்ரா… நாம செய்த தப்பைத் திருத்த நினைக்கறியா… இல்ல, பவித்ராவை உனக்குப் பிடிச்சு சொல்லறியா…”
அவரது கேள்வியில் சற்றுத் தடுமாறியவன் ஒரு நிமிடம் மௌனமாய் இருந்துவிட்டு, “எனக்குப் பிடிச்சிருக்கு… கணவன்கிற உரிமையோட எங்கிட்ட அவ காட்டின எதார்த்தமான அன்பு எனக்கு எப்பவும் வேணும்னு தோணுது… நடிக்க வந்தவ எதுக்கு நம்மை இவ்ளோ நேசிக்கறான்னு புரியாமத் தவிச்ச எனக்கு, அவளுக்கு இது எதுவுமே தெரியாதுன்னு தெரிஞ்சதும் மனசு கலங்கிருச்சு… அவ அன்பை இழக்க நான் விரும்பலை…”
நிதானமாய் அவனது மனதைத் தெளிவாய் உரைக்க, “அப்ப ரோஹிணி… அவ மேல உனக்கு எந்த விருப்பமும் இல்லையா…” என்றார் மீனா.
“உண்மையா சொல்லணும்னா என் மனசுல அப்படி அவமேல எந்த எண்ணமும் இல்லைம்மா… சின்ன வயசுல இருந்து ஒண்ணா பழகினதால பொதுவாவே அவ மேல அன்பு இருக்கு… உங்க எல்லாரோட விருப்பத்துக்காகவும் தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்…” தயக்கத்துடன் கூறியவனை வேதனையுடன் பார்த்தார் மீனா.
“உன் மாமாகிட்ட என்ன சொல்லட்டும்…”
“நான் சொன்ன உண்மையை சொல்லிடுங்கம்மா…”
“ரோஹிணி நிலைமை…”
“அவ சின்னப் பொண்ணுதானே… சொல்லி புரிய வச்சு படிப்பு முடிஞ்சதும் பொருத்தமான மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்போம்…” தெளிவான பதில்.
மகன் எல்லாவற்றுக்கும் தயாராகிவிட்டான் என்பது அவனது உடனடி பதில்களில் புரிய அமைதியாய் யோசிக்கத் தொடங்கினார் மீனா.
“இந்த விஷயம் பவித்ராவுக்கு…”
“இப்போ சொல்ல வேண்டாம்… அவளுக்கு உடம்புக்கு சரியாகட்டும்… அப்புறம் பொறுமையா சொல்லிக்கலாம்…” என்றவன் அவர் முகத்தையே பார்த்தான்.
“அம்மா…” தயக்கமாய் அழைத்தான்.
“ம்ம்… சொல்லுப்பா…”
“உங்களுக்கு நான் சொன்னதில் விருப்பமில்லையா…” 
“நீயும் ரோஹிணியும், பிறந்து வளரும்போது என் மனசுல சேர்ந்து வளர்ந்த விருப்பம் பா… அவ்ளோ சீக்கிரம் மாறிடாது… ஆனா உன் விருப்பத்துக்காக என் மனசை மாத்திக்க முயற்சி பண்ணறேன்…” என்ற அன்னையை சந்தோஷமாய் பார்த்தான் மகன்.
காதல் ஒரு உயிர்கொல்லி
உயிரைக் காவு வாங்கும் நரபலி…
ஓசையின்றி அழும் உள்ளத்தின்
வலி சொல்ல பாசை ஏதுமில்லை…
விழித்திருக்கும் இரவெல்லாம்
துளைத்தெடுக்கும் நினைவுகளை
மறந்திடத்தான் வழியில்லை…
நீளும் பாதையெங்கும்
நிறைந்திருக்கும் நெருஞ்சி முள்ளாய்
உன் நினைவுகள் குத்தியே குருதி
வழிகிறது கண் இமைப்பீலியில்…
என் விழியை விட்டு
பிரிய மறுக்கும் நீதான்
உனக்குள் நான் வர
வழியில்லை என்கின்றாய்…
 
இமைப்பீலி தொடரும்…
 
 

Advertisement