Advertisement

இமை – 16
விடியும் நேரத்தில் உறங்கிப் போன மித்ரன், யாரோ கதவைத் தட்டும் சத்தத்தில் மெல்லக் கண்விழித்தான். இமை மீது கல்லை வைத்தது போல் கனத்து எரிய மெல்ல எழுந்தான்.
கண்ணைத் தேய்த்துக் கொண்டே கதவருகில் சென்றவன்,
“இந்நேரம் பவித்ரா எழுந்து கதவைத் திறந்து வெறுமனே சாத்திவிட்டுத் தானே போயிருப்பாள்… இன்னும் அவள் எழுந்திருக்க வில்லையா…” யோசித்துக் கொண்டே பவித்ரா படுத்திருந்த பக்கம் திரும்பிப் பார்க்க, அவள் இன்னும் எழுந்திருக்காமல் தலையோடு இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்குவது புரிந்தது.
கதவைத் திறக்க வெளியே மீனா நின்று கொண்டிருந்தார். இரவு முழுதும் தன்னிடம் பொய் சொல்லி பவித்ராவைக் கல்யாணம் செய்ய வைத்தது பற்றி யோசித்ததில் அவரைக் காணவும் கடுமையாய் மாறிய முகத்தை காட்டிக் கொள்ளாமல் இருக்க பிரயத்னப்பட்டான்.
“என்னம்மா…”
“மித்ரா, பவித்ரா இன்னும் எழுந்திருக்கலையா… சாவித்திரி இன்னைக்கு லீவு சொல்லிட்டுப் போயிருக்கா… ரோஹிணி வேற இன்னும் காபி வரலைன்னு கத்திட்டு இருக்கா… அதான் பவித்ராவை எழுப்ப வந்தேன்…”
அவர் கூறவும் மனதின் கோபம் முகத்தில் செம்மையாய் பரவ முறைப்புடன் வேறுபக்கம் திரும்பிக் கொண்டான்.
“ஏன்… பவித்ரா வர்றதுக்கு முன்னாடி சாவித்திரிக்கா இல்லேன்னா நீங்க காபி போட்டதே இல்லையா… அவ ஏதோ அசந்து தூங்கறா… ரோஹிணிக்கு வேணும்னா அவளையே காபி போட்டுக்க சொல்லுங்க… யார் போட்டாலும் எனக்கும் சேர்த்து போடுங்க… தலை ரொம்ப வலிக்குது…” என்ற மகனின் புதிய அவதாரத்தைப் புரியாமல் பார்த்தார் மீனலோசனி.
“மித்ரா… உனக்கு என்னாச்சு… ஏன் இப்படிப் பேசறே… பவித்ரா எங்கே…” மீண்டும் கேட்கவும் எரிச்சலுற்றான்.
“தினமும் காலைல நேரமா எழுந்து அவதானே எல்லா வேலையும் செய்யறா… இன்னைக்கு சலிப்பா தூங்கறா போலருக்கு… விடுங்க…” சிடுசிடுக்கவும், அவரது முகத்தில் குழப்பமும் யோசனையும் நிறைய சிறுத்துப் போன முகத்துடன் கீழே சென்றவர் காபி கலக்கத் தொடங்கினார்.
“இவ என்ன இன்னைக்கு அதிசயமா இப்படித் தூங்கிட்டு இருக்கா… சரி தூங்கட்டும்…” என அவளைப் பார்த்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்தவன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வர அப்போதும் அவள் தூங்கிக் கொண்டு தான் இருந்தாள். அவன் கீழே ஹாலுக்கு செல்ல சோபாவில் உர்ரென்று அமர்ந்திருந்த ரோஹிணியின் முகமே அவள் கோபமாய் இருப்பதை உணர்த்தியது.
சோமசுந்தரம் முன்தினம் மாலையே ஒரு முக்கிய வேலையாய் சென்னை கிளம்ப, உடன் வருமாறு மகளை அழைக்க, இன்னும் இரண்டு நாள் கழித்து வருவதாய் கூறி மறுத்துவிட்டாள் ரோஹிணி.
மீனா மகனைக் கண்டதும் காபி எடுத்து வந்தார். அவரது முகமும் கருமேகமாய் கருத்துக் கிடந்தது. மழையில் நனைந்த மரங்களில் இன்னும் மழைத்துளிகள் மிச்சமிருக்க, சூரியனின் ஒளியில் முத்துக்களாய் மின்னிக் கொண்டு துளித்துளியாய் சொட்டிக் கொண்டிருந்தது.
ஜன்னல் வழியாய் அதைப் பார்த்துக் கொண்டே காபியைக் குடித்து முடித்தவன், வெகுநாட்களாய் சமையல்கட்டையே  மறந்திருந்த மீனா அடுக்களையில் டிபன் செய்யத் திணறிக் கொண்டிருப்பதைப் பார்த்தவன்,
“ரோஹிணி… அம்மா தனியா அடுக்களைல கஷ்டப் படறாங்க… நீ இங்கே ஹாயா சும்மா உக்கார்ந்திருக்கே… போயி ஹெல்ப் பண்ணலாம்ல…” என்றான்.
அவனை முறைப்புடன் பார்த்தவள், “என்னது நான் சமையல் செய்யறதா… ஏன், அந்த மகாராணி என்ன பண்ணிட்டு இருக்கா… அவளுக்கு இன்னும் விடியலையா…” கீழிருந்து அவள் கத்தியது பவித்ராவின் காதிலே நிச்சயம் விழுந்திருக்குமென்று மித்ரனுக்கு தோன்றியது. அப்படி ஒரு ஆங்காரம் அவள் குரலில்.
“இப்ப எதுக்கு இப்படி கத்தறே… பொண்ணுங்க சமையல் செய்யறது என்ன அவ்ளோ பெரிய குத்தமா… ஏன் பவித்ரா எல்லா வேலையும் தனியா செய்யலையா… வேலை செய்தா கைவளையல் கழண்டிடுமா என்ன…” அவனும் விடாமல் கேட்கவும், மீனாவுக்கு தவிப்பாக இருந்தது.
வேகமாய் வெளியே வந்தவர், “மித்ரா, யாரும் எதுவும் பண்ண வேண்டாம்… நானே செய்துக்கறேன்… நீங்க சண்டை போடாம இருங்க…” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல இருவரும் முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
மீனா, ரோஹிணி இருவரின் மனதிலும் மித்ரனின் வார்த்தைகளில் ஒலித்த புதிய தொனி யோசனையைக் கொடுத்தது. நம்மைக் கேலி செய்து பவித்ராவைப் பாராட்டும் அளவுக்கு மாற்றம் வந்துவிட்டதா என்ற கோபமும், தவிப்பும் வந்தது.
பிரிட்ஜில் மாவிருப்பதைக் கண்ட மீனா, வேகமாய் தேங்காய் சிரவி மிக்ஸியில் அரைக்கத் தொடங்கினார்.
ரோஹிணியின் குரல் கேட்டோ, தன்னே உணர்ந்து  எழுந்தாளோ… சோர்வுடன் கண்ணை விழித்த பவித்ரா சுவர் கடிகாரத்தில் கண்ணைப் பதிக்கவும் அதிர்ந்தாள். நேரம் மித்ரனுக்கு காலை டிபன் முடிந்து மாத்திரை கொடுக்கும் நேரத்தை நெருங்கியிருக்க அவசரமாய் எழுந்து சேலையை சரி செய்து பாத்ரூமுக்குள் நுழைந்தவள் தலை சுற்றுவது போல இருக்கவும் ஒரு நிமிடம் நிதானித்தாள்.
உடம்பின் சூடு கண்ணிலும் நாவிலும் உணரவும் நெற்றியில் கைவைத்துப் பார்க்க உடம்பு அனலாய் சுட்டது. சரி ஒரு மாத்திரையைப் போட்டால் சரியாகிவிடும் என நினைத்துக் கொண்டு அவசரமாய் ஒரு குளியல் போட்டு வேகமாய் கீழே சென்றாள்.
அவளைக் கண்டதும் ரோஹிணி வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொள்ள பேப்பரில் ஆழ்ந்திருந்த மித்ரன் அவள் வருவதை உணர்ந்தாலும் குற்றவுணர்வில் தலை குனிந்து இருக்க,
“சாரிங்க, தூங்கிட்டேன்… இப்ப டிபன் ரெடி பண்ணிடறேன்…” என்றவள் வேகமாய் அடுக்களைக்குள் நுழைந்தாள்.
அங்கே தோசை ஊற்றிக் கொண்டிருந்த மீனாவைக் கண்டதும் வருத்தத்துடன், “சாரி அத்தை, கொஞ்சம் தலைவலில அசந்து தூங்கிட்டேன்… நீங்க போங்க… நான் பார்த்துக்கறேன்…” எனவும்,
“தலைவலின்னு சொல்லறே… எதுக்கு குளிச்சே பவித்ரா… சரி, மாத்திரை தரேன், போட்டுக்க… சரியாகிடும்…” என்றவர் பொறுப்பை அவளிடம் விட்டு வெளியே செல்ல வேகமாய் செயல்படத் தொடங்கினாள்.
மீனலோசனி தேங்காய்சட்னி மட்டுமே அரைத்து வைத்திருக்க, வெங்காயச் சட்னி இருந்தால் மித்ரன் இன்னும் ரெண்டு தோசை அதிகம் சாப்பிடுவானே என நினைத்தவள் அதையும் வேகமாய் சரியாக்கி வணக்கி அரைத்து வைத்தாள்.
“அத்தை… எனக்குப் பசிக்குது…” ரோஹிணி சொல்வது கேட்கவும், தோசை, சட்னிகளை உணவு மேசையில் கொண்டு வைத்துவிட்டு தட்டுகளை நிரப்பினாள்.
“என்னங்க… நீங்களும் சாப்பிடுங்க… மாத்திரை போட டைம் ஆச்சு…” எப்போதும்போல மித்ரனை அழைக்க, அவளது முகத்தைக் காணத் தயங்கியவன் அமைதியாய் எழுந்து சென்றான்.
ஹாட்பாக்ஸில் இருந்த தோசையை மித்ரனின் தட்டில் வைத்துவிட்டு ரோஹிணியிடம் வர, “பவித்ரா… எனக்கு மெல்லிசா சூடா ஊத்திக் குடு…” எந்த கூச்சமும் இல்லாமல் சொல்லிவிட்டு அலைபேசியை ஒரு கையில் நோண்டிக் கொண்டே அமர்ந்த ரோஹிணியை எரிச்சலுடன் பார்த்தான் மித்ரன்.
பவித்ரா ஒவ்வொரு தோசையாய் ஊற்றி எடுத்துவந்து அவளுக்குக் கொடுக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மெல்ல பவித்ராவை ஏறிட்டவனின் மனம் வாடியது.
“இவள் ஏன் இத்தனை சோர்வாய் இருக்கிறாள், உடம்பு சரியில்லையோ… அப்படியும் எதற்கு எழுந்து வந்து இப்படி ஆக்கிக் கொட்ட வேண்டும்…” கோபம் கொண்டான்.
“அத்தை… நீங்களும் வாங்க…” மீனாவை அழைக்க அவரும் அமர்ந்தார்.
அனைவரும் சாப்பிட்டு முடிக்க மித்ரனுக்கு மாத்திரை எடுத்துக் கொடுத்தவளிடம், “நீ சாப்டியா பவித்ரா…” என்றான் அவன். அவன் கேட்டது பிடிக்காமல் உதட்டைச் சுளித்தாள் ரோஹிணி.
“பவித்ரா, என் மேசையில் தலைவலி மாத்திரை இருக்கு… சாப்பிட்டு எடுத்துப் போட்டுக்க…” என்ற அத்தையை ரோஹிணி புருவத்தைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் மொபைலில் பார்வையைப் பதித்தாள்.
“சரி அத்தை…” புன்னகையுடன் சொன்னவள், மழை பெய்ததில் வாசல் முழுதும் மரத்தின் பழுத்த இலைகள் விழுந்து சகதியாய் கிடக்க அதை சுத்தம் செய்ய விரைந்தாள்.
“இவள் சாப்பிடாமலே செல்கிறாளே…” என நினைத்துக் கொண்டே மித்ரன் மெல்ல வாசலுக்கு நடக்க ரோஹிணியின் கண்களில் அனல் பறந்தது.
பிடித்தம் என்பது
பொருளில் விலையில்
அல்ல… மனதின்
விருப்பத்தில் உள்ளது…
ரோஹிணியின் மனதில் மித்ரன், மீனா இருவரிடமும் தெரிந்த சிறு மாற்றமும் பவித்ராவிடம் அவர்கள் காட்டும் அக்கறையும் பிடிக்காமல் புகைந்து கொண்டிருந்தது. அன்று தான் சொன்னபோது பவித்ரா கோபத்துடன் விரலை நீட்டி மிரட்டியதில் அதிர்ந்து நின்றவள் மீனாவிடம் ஓடிச் சென்று கோபத்துடன் துள்ளிக் கொண்டிருந்தாள்.
நடந்ததை முழுமையாய் கேட்ட மீனா, “என்ன இருந்தாலும் பவித்ராவை நீ அப்படி சொன்னது தப்பு ரோஹிம்மா… அவளை கேவலமா பேசியிருக்கக் கூடாது… பாவம், அவளுக்கு இது எதுவுமே தெரியாம எதார்த்தமா அன்பைக் காட்டறா… நம்ம மனசுல உள்ளது அவளுக்குத் தெரியாதே…” என்றவரைக் கண்ணில் எரிக்கும் சக்தி இருந்தால் எரித்தே விட்டிருப்பாள் ரோஹிணி.
“அத்தை, என்ன பேசறீங்க… உங்களுக்கு என்னாச்சு… எல்லாரையும் அன்பைக் காட்டி மயக்கி வச்சிருக்காளா அந்த மயக்கு மோகினி… நீங்க சொல்லுறதைப் பார்த்தா, அவளுக்கு என் மகனோட கல்யாணம் நடந்தது நடந்திருச்சு… போனாப் போகுது, அவங்க குடும்பம் நடத்தட்டும்னு சொல்லிடுவிங்க போலருக்கு…” என்று வானுக்கும், பூமிக்குமாய் துள்ளியவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவர் அமைதியாய் நிற்க,
“அத்தை… உங்க அமைதி எனக்குப் பிடிக்கலை… சின்ன வயசில் இருந்து இவன்தான் உன் புருஷன்னு அத்தானைக் காட்டிக் காட்டி வளர்த்திட்டு, இப்போ ஜாதகம், தோஷம்னு கதை சொல்லிட்டு வேற ஒருத்தியை எங்க வாழ்க்கைல கொண்டு வந்து விட்டிருக்கீங்க… இதெல்லாம் எங்கே போயி முடியுமோன்னு எனக்கு பயமாருக்கு… எல்லாம் அப்பாவை சொல்லணும்… இதெல்லாம் வேண்டாம்னு நான் எத்தனையோ சொல்லியும் கேக்காமல் என்னை சமாதானம் பண்ணி அத்தானுக்கு அவளைக் கல்யாணம் பண்ணி வச்சிங்க… இதோட பலனை இப்போ நான்தான் அனுபவிக்கணும் போலருக்கு… லாஸ்ட்ல அத்தான் மட்டும் எனக்கு இல்லேன்னு தெரிஞ்சது, அடுத்த நிமிஷம் என்ன பண்ணுவேன்னே தெரியாது…” கோபத்துடன் கூறியவளைக் கண்டு பதறிப் போனார் மீனா.
“ரோஹி…. என்னடா இது… இப்படில்லாம் பேசிட்டு… இந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் வந்திடக்கூடாதுன்னு தான் பவித்ரா கிட்ட அமைதியாப் பழகிட்டு போயிடலாம்னு சொல்லறேன்… நாமளா பிரச்சனை பண்ண வேண்டாம்… ஒருவருஷம் முடிஞ்சு அவளை அவ அத்தையே கூட்டிப் போயிடுவாங்க… நீ தேவையில்லாம யோசிச்சு கவலைப் படாதே… அமைதியா இயல்பா இரு… உன் சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம்… சரியா…” என்று அவளை சமாதானப் படுத்தவும் தான் அமைதியானாள்.
அன்று நடந்ததை யோசித்துக் கொண்டே சிட்டவுட்டில் அமர்ந்திருந்தாள் ரோஹிணி. மித்திரன் எங்கே என்று கண்ணால் துளாவ, ஒரு ஓரமாய் வெகுநாட்களாய் எடுக்காமல் இருந்த அவனது புல்லட்டைத் தடவிக் கொண்டு அதில் சாய்ந்து நின்றிருந்தவன் யாரோடோ அலைபேசியில் பேசிக் கொண்டே வீட்டுக்குள் நுழையவும் அவளும் பின்னேயே சென்று ஹாலில் அமர்ந்தாள்.
பவித்ரா வாசலைக் கூட்டிக் கொண்டே முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தவள் அடிக்கடி நிமிர்ந்து நின்று ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். தலை பயங்கரமாய் சுற்றி கீழே விழுந்து விடுவது போலத் தோன்றினாலும் வாசல் அலங்கோலமாய் கிடப்பது தாங்காமல் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அதை முடித்து மதிய சமையல் தொடங்க வேண்டுமே என்ற அவசரத்துடன் வீட்டுக்குள் நுழைய அவளுக்குள் இருந்த காய்ச்சலின் சக்தி ஒன்றாய் தலைக்கேற தாங்க முடியாமல் தலை சுற்றி விழப் போனவள் சோபாவைப் பிடித்துக் கொண்டு மயங்கத் தொடங்க மித்ரன் பதட்டத்துடன் அவளருகில் வந்தான்.
“பவி… என்னாச்சு… எழுந்திரு, உடம்பு சரியில்லையா…” கேட்டுக் கொண்டே அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு கன்னத்தில் தட்டவும், ரோஹிணியின் உள்ளம் திகுதிகு என்று எரியத் தொடங்கியது. அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்ட மித்ரன், “அம்மா… இங்கே வாங்க…” என்று கத்தினான்.
ரைஸ் மில்லுக்கு கிளம்பிக் கொண்டிருந்த மீனா அவன் குரலைக் கேட்டு ஓடிவந்தவர், “அச்சச்சோ… என்னாச்சு இந்தப் பொண்ணுக்கு…” என்று பதறிக் கொண்டே வேகமாய் தண்ணீர் பாட்டிலை எடுக்கப் போக, அதற்குள் பவித்ராவுக்கு குமட்டிக் கொண்டு வந்ததில் அவள் அப்படியே வாந்தி எடுத்தாள்.
“ச்சீ…” என்று ரோஹிணி எட்டி நிற்கவும், மித்ரனின் கையிலும், உடையிலும் தெறித்திருந்ததைக் கண்டு முகம் சுளித்தாள். அதைக் கண்டு கொள்ளாமல் அவளை அங்கிருந்து சற்று நகர்த்தி அமரவைத்தான். அவள் மீண்டும் மயங்கி தலை சரியவும், டவலால் துடைத்துவிட்டான். அதற்குள் மீனா தண்ணீர் பாட்டிலுடன் அங்கே வந்து, அவள் முகத்தில் தண்ணியைத் தெளிக்க முகத்தை சுளித்தாலும் அப்படியே கிடந்தாள்.
“அம்மா… உடனே டாக்டரைக் கூப்பிடுங்க…” என்றவன் மெல்ல அவளைத் தூக்கி சோபாவில் படுக்கவைத்தான்.
அவன் பதட்டத்தையும், செயல்களையும் பிடிக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ரோஹிணி, மீனா அலைபேசியில் டாக்டருக்கு சொல்லிவிட்டு வரவும், அவரிடம் கோபத்துடன் சென்றாள்.
“அத்தை… இங்கே என்னதான் நடக்குது… அவளுக்கு என்னடான்னா தலைசுத்தல், வாந்தின்னு வருது… உங்க பிள்ளை என்னடான்னா என்னமோ பொண்டாட்டி வாந்தி எடுக்கிற போல கைல தாங்குறாரு… நீங்க உங்களுக்கு பேரப் புள்ளை வரப் போற கணக்கா டாக்டருக்கு கூப்பிட ஓடறீங்க… இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லியா…” எகத்தாளமாய் கேட்டவளைக் கண்டு மீனாவே விக்கித்துப் போக, மித்ரனின் முகத்தில் கோபத்தின் ரேகைகள் வேகமாய்ப் படர்ந்து கண்களும் சிவப்பாகின.
“ரோஹிணி… என்ன பேசறோம்னு யோசிச்சு தான் பேசறியா…” இதுவரை இல்லாத கோபத்தின் கர்ஜனை அவன் குரலில். அதைக் கண்டு அலட்டிக் கொள்ளாமல் எள்ளலோடு பதில் சொன்னாள் ரோஹிணி.
“ஏன் அத்தான்… நான் பேசினது உங்களுக்குப் புரியலையா… தமிழ்ல தானே பேசினேன்…”
“ரோஹி… என்னம்மா இது… பேசாம இரு…” மருமகளை அடக்க முயன்றார் மீனா.
“நீங்க பேசாம இருங்க அத்தை… நானும் எவ்ளோ தான் பொறுத்துப் போகறது…” அவளும் சீறினாள்.
“ரோஹிணி… நீ ரொம்ப ஓவராப் பேசறே…” மித்ரன்.
“அத்தான்… யார் ஓவரா பேசறா… நீங்க தான் எல்லாமே ஓவராப் பண்ணறீங்க…” அவளைக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசறதும், கண்ணெடுக்காம பாக்கறதும் எல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிங்களா… அப்பா, அம்மா இல்லாத அனாதைக் கழுதை, அவ இப்ப உங்களுக்கு உசத்தியாப் போயிட்டாளா…” அவளது குரல் உயரவும் பவித்ராவுக்கு மெல்ல உணர்வு திரும்பத் தொடங்கியது.
நடந்தது ஒரு வருஷ ஒப்பந்தக் கல்யாணம்னு மறந்திட்டு அவளோட குடும்பம் நடத்தி குழந்தையே பெத்துக்குவீங்க போலருக்கு… வார்த்தையில் அனல் தெறிக்கக் கேட்டவளை அப்படியே ஓங்கி அறைய வேண்டும் போல மித்ரனுக்கு ஆத்திரமாய் வந்தது.
“ச்சீ… போதும் நிறுத்து… உங்க பேச்சைக் கேட்டு அநியாயமா ஒரு அப்பாவிப் பொண்ணு வாழ்க்கைல விளையாடிட்டோமேன்னு நானே வருத்தப்பட்டுட்டு இருக்கேன்…  அம்மா, நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை… என்னை இப்படி ஒரு பாவத்தைப் பண்ண வச்சுட்டீங்களே…” வருத்தத்துடன் கேட்டவனின் குரல் கலங்கி இருக்கவும், மீனாவின் முகத்தில் இருள் சூழ்ந்தது.
“மித்ரா… அதுவந்து…” திணறியவரிடம், “வேண்டாம் மா… எனக்கு எந்தக் காரணமும் தேவையில்லை… நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்னு உங்ககிட்ட எத்தனையோ தடவை சொன்னேன்… நீங்க பிடிவாதம் பிடிச்சப்போ, லாஸ்ட்ல இந்தக் காரியத்துக்கு சம்மதிக்கற பொண்ணா, அவளுக்கு இது சம்மந்தமா எல்லாம் தெரிஞ்சு இருக்கணும்னு நான் சொன்னேன்… அதெல்லாம் உங்க வசதிக்கு மறந்திட்டு அவகிட்டே சொல்லாமலே இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வச்சிருக்கீங்க… நடந்தது போலிக் கல்யாணம்னு தெரிஞ்சுக்காம, நிஜமான நேசத்தோடு அவ பாக்குற பார்வை என்னைக் குத்தி கேள்வி கேக்குது… தெரிஞ்சோ, தெரியாமலோ நானும் இவளுக்கு துரோகம் பண்ணிட்டேன்… அதனால…”
சொல்லிக் கொண்டிருந்தவன் உள்ளே நுழைந்த டாக்டரைக் கண்டதும் சட்டென்று பேச்சை நிறுத்த, அடுத்து அவன் என்ன சொல்லியிருப்பான் என்று ஊகிக்க முடியாமல் மூன்று உள்ளங்கள் துடித்துக் கொண்டிருந்தன.
மீனா, ரோஹிணி இருவரும் அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருக்க, “வாங்க டாக்டர்…” என்றவனிடம், என்னாச்சு…” கேட்டுக் கொண்டே சோபாவில் படுத்திருந்த பவித்ராவை நெருங்கினார்.
“டாக்டர்… காய்ச்சல் இருக்கு போலருக்கு… வாந்தி எடுத்ததும் மயக்கமாகிட்டா…” என்றதும் அவளைப் பரிசோதிக்கத் தொடங்கினார் டாக்டர்.
 
எனையே எனக்கெதிராய் மாற்றிய
நீ என் இதய தேசத்தின் எதிரியடி…
விழிகள் இரண்டு வலிகள் ஒன்று…
இதயம் இரண்டு துடிப்பு ஒன்று…
உயிர்கள் இரண்டு காதல் ஒன்றென்று
கண்டேனடி இன்று – உன்னாலே…
உன் தோளில் சாய தோல்விகள் வேண்டும்
உன் மடியில் துயில கதைகள் வேண்டும்
நமக்கே நமக்கான பூமியில்
நாம் மட்டுமே வாழ்ந்திட வேண்டும்…
இமைப்பீலி தொடரும்…
 

Advertisement