Advertisement

இமை – 14
 
பவித்ராவுக்கு ரோஹிணி சொன்ன வார்த்தைகள் இப்போதும் முள்ளாய் இதயத்தைத் தைத்துக் கொண்டிருக்க சாப்பாடே இறங்கவில்லை. தண்ணியைக் குடித்துவிட்டு சாப்பாடு வேண்டாம்… என்று எழுந்தவளை சாவித்திரி கவலையுடன் பார்த்தார்.
 
“பவிம்மா, ஒருநேரம் தான் சாப்பிடறதே… கொஞ்சமாவது சாப்பிடுங்க… போன ஜென்மத்துல அந்தப் பொண்ணு ராட்சசியா இருந்திருப்பான்னு நினைக்கறேன்… அதான் என்ன வேணும்னாலும் பேசுது…” என்றார் ஆதங்கத்துடன்.
“சாவித்திரிக்கா… அப்படில்லாம் சொல்லக் கூடாது… அத்தை கேட்டா வருத்தப் படுவாங்க… இப்படிப் பேசறது தான் அவங்க சுபாவம்… நாமதான் அதுக்கு இடம் வச்சுக்காம விலகிப் போயிடணும்…” என்று பெரிய மனுஷியாய் கூறியவளை வியப்புடன் பார்த்தார்.
 
“நிஜமாலுமே அந்தப் பொண்ணு மேல உனக்கு கோபம் வரலியா கண்ணு…” வாஞ்சையுடன் கேட்டார் சாவித்திரி.
 
“இல்லக்கா… அப்படிப் பேசறது அவளோட பழக்கம்… நானும் அவங்களும் பிறக்கும்போதே எதிரியா, இல்ல இப்பத்தான் எதிரியா… அவளோட ஆதங்கம் கோபமா வருது…. என்னோட ஆதங்கம் அழுகையா வெளிப்படுது… இதானே வித்தியாசம்… சரி நீங்க சாப்பிடுங்க…” என்றவள் அடுக்களையை ஒதுக்கத் தொடங்கினாள்.
 
மாலை நேர சிற்றுண்டிக்கு மித்ரனுக்குப் பிடித்த மசால் வடைக்கு பருப்பை ஊறவைத்துவிட்டு அதற்கு வேண்டிய பொருட்களை அரிந்து வைக்கத் தொடங்கினாள்.
என்னதான் சாவித்திரியிடம் கோபமில்லை என்று சொன்னாலும் வருத்தம் மனதை வலிக்கத்தான் செய்தது. அவளையே வியப்புடன் பார்த்துக் கொண்டு உண்டு முடித்தார் சாவித்திரி.
 
அடுத்து காய்ந்திருந்த துணிகளை எடுத்து மடக்கி வைத்தவள் மீனாவின் துணிகளை அவரது அறையில் கொண்டு வைத்துவிட்டு அவர்களின் துணியுடன் மாடிக்கு சென்றாள். மித்ரன் சாய்வாய் கட்டிலில் அமர்ந்து லாப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க, “தூங்கலையாங்க…” என்றாள்.
 
“தூக்கம் வரல பவித்ரா…” என்றவன் ரோஹிணி பேசியதற்கு சமாதானமாய் ஏதும் கூறுவான் என அவள் எதிர்பார்க்க, அவனோ மீண்டும் லாப்டாப்பில் தலையைப் புதைத்துக் கொள்ளவும் ஏமாற்றமாய் உணர்ந்தாள்.
 
மனதுக்குள் தான் அவனது தாலி சுமந்தும் தாரமில்லாமல் தள்ளி நிற்கும் வலி உறுத்த வெளியே சென்றுவிட்டாள்.
மாலையில் அவர்கள் ஹாலுக்கு வரவும் காபியுடன் வடையை சூடாய்க் கொடுக்க, “வாவ்… பவித்ரா… வடை சூப்பரா இருக்கு… டெய்லி இப்படி எதாச்சும் செய்து குடு…” என்று ஆசையுடன் சாப்பிட்ட ரோஹிணியைக் கண்டு மீனாவுக்கும் மித்ரனுக்கும், ஏன் பவித்ராவுக்கும் கூட அதிசயமாய் இருந்தது.
 
அப்போது யாரோ பார்க்க வந்திருப்பதாக டிரைவர் வந்து கூறவும் வாசலுக்கு வந்த மீனா, அங்கே நின்று கொண்டிருந்த மனிதரைக் கண்டு, “சார் நீங்களா… வாங்க… உள்ளே வாங்க…” என்று அழைத்து வந்தார்.
 
“மித்ரா… சார் யாருன்னு தெரியுதா… டவுன்ல பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வச்சிருக்கார்…” எனவும், அவன் வணக்கம் சொல்ல அவனுக்கு அருகில் நின்று புன்னகைத்த ரோஹிணியைக் கண்டவர்,
 
“இதான் உங்க மருமகளா… சாரிம்மா… மகனுக்குக் கல்யாணம்னு இன்விடேஷன் கொடுத்திங்க…. அந்த டைம்ல நான் வெளிநாடு போயிட்டேன், அதனால  விசேஷத்துக்கு வர முடியாமப் போயிருச்சு…” எனவும்,
 
என்ன சொல்வதென்று தெரியாமல் மீனா விழிக்க, கடைக்கண்ணால் பவித்ராவைக் கண்ட ரோஹிணிக்கு கொண்டாட்டமானது. காபியுடன் வந்த பவித்ராவின் முகம் அனலை அள்ளிக் கொட்டியது போல் கன்றிப் போயிருந்தது. மித்ரனின் பார்வையும் அவள் முகத்தில் தான் இருந்தது.
 
அவர் கூறவும் நிமிர்ந்து மித்ரனைப் பார்த்தவளின் கண்ணில் அடிபட்ட மானின் வலி நிறைந்திருந்தது. அறியாதது போல் பார்வையை மாற்றிக் கொண்டாலும் அந்தப் பார்வை அவன் இதயத்தைக் குத்திக் கூறு போட்டுக் கொண்டிருந்தது.
 
ஆனாலும் வண்டாய்க் குடையும் அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் அவனுக்கு கிடைக்கவே இல்லை.
 
“இவள் இந்தக் கல்யாணத்தைப் பற்றித் தெரிந்துதானே சம்மதித்தாள்… இப்போது எதற்கு இப்படி அதிர்ச்சியோடு பார்க்க வேண்டும்… ஆனாலும் அவளது அந்தப் பார்வையின் ஒளி என் இதயத்தை துளைப்பதை நான் உணர்கிறேனே… இதற்கு என்ன காரணம்…” அவனது மனது ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தது.
 
“அதெல்லாம் பரவால்லை சார்… நிக்கறீங்களே… உக்காருங்க… காபி சாப்பிடுங்க…” என்று பவித்ராவின் கையில் உள்ள கோப்பையை வாங்கி அவர் கையில் கொடுத்தவர், “மாப்பிள்ளை என்ன பண்ணறார்… எந்த ஊர்…” என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
 
அங்கேயே நின்று கொண்டிருந்த பவித்ராவின் பார்வை அப்போதும் மித்ரன் மீதே நிலைத்திருந்தது. “அவன் ஏதாவது சொல்ல மாட்டானா… தனக்கு மறுக்கப்பட்ட இந்த அங்கீகாரம் மட்டுமாவது கிடைக்காதா…” என்ற பரிதாபம் அதில் நிறைந்திருந்தது.
 
அவளது பார்வையை உணர்ந்த மித்ரனின் மனதில் “இவள்தானே யாருடைய போட்டோவுக்கோ இரவு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள்… இப்போ எதுக்கு இத்தனை வருத்தத்தை முகத்தில் காட்டுறாளோ… நிஜமான அன்பை வைத்திருந்தால் மட்டும் தானே இப்படி வருத்தம் தோன்றும்…” என நினைத்துக் கொண்டிருக்க, மீனா அழைத்தார்.
 
“மித்ரா… என்னப்பா யோசிக்கறே… சார் எவ்ளோ நேரமா உனக்கு இப்ப உடம்புக்கு எப்படி இருக்குன்னு கேக்குறார்…” எனவும் மெல்ல புன்னகைத்தவன், “இப்போ பரவால்ல சார்… மெதுவா நடக்க முடியுது…” எனவும், “சரிங்க, தம்பி…. கண்டிப்பா நீங்களும் கல்யாணத்துக்கு வரணும்… மறக்காம ஒய்பையும் அழைச்சிட்டு வாங்க…” என்றவர் விடை பெறவும்,
 
ரோஹிணி சந்தோஷத்துடன் மீனாவை அழைத்துக் கொண்டு அறைக்கு செல்ல மித்ரனும் மாடிக்கு சென்றுவிட்டான். குழம்பி நின்ற பவித்ரா, ஒருவேளை அவர் சொன்னதை இவர்கள் கவனிக்கவில்லையோ என்று தன்னைத்தானே சமாதானித்துக் கொண்டு அமைதியாய் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
 
அன்று இரவு வெகுநேரம் வரை உறங்க வராமல் தோட்டத்தில் இருந்த மடக்குக் கட்டிலில் அவள் அமர்ந்திருப்பதை மாடியின் ஜன்னல் வழியாய் கண்ட மித்ரனின் மனம் வருந்தினாலும் தான் அவளுக்கு ஆறுதல் சொல்லக் கூட நெருங்காமல் இருப்பதே இருவருக்கும் நல்லது என நினைத்துக் கொண்டான்.
 
அடுத்தநாள், சோமசுந்தரம் டாக்டரை அழைத்துக் கொண்டு வர பரிசோதித்தவர், “இனி பிரச்சனையில்லை… மெல்ல கொஞ்சதூரம் நடக்கத் தொடங்கலாம்…” என்று வேறு மாத்திரைகளை எழுதிக் கொடுத்தவர், சில நாட்கள் கழித்து வந்து பார்ப்பதாகக் கூறி கிளம்பிவிட்டார். சோமசுந்தரம் வரவும் ரோஹிணியின் ஆட்டம் இன்னும் அதிகமானது. பவித்ராவுக்கு அடுக்களையிலேயே நேரம் சரியாய் இருந்தது.
சோமசுந்தரம் மீனாவுடன் மில்லுக்கு செல்ல ரோஹிணி அத்தானுடன் இருப்பதாய் கூறி போக மறுத்துவிட்டாள்.
 
மித்ரன் அவனது அறையில் ஏதோ பழைய பைலைப் பார்த்துக் கொண்டிருக்க ரோஹிணி அவனது லாப்டாப்பில் மும்முரமாய் படம் பார்த்துக் கொண்டிருந்தாள். வேகமாய் சுழன்ற மின்விசிறியில் காகிதங்கள் படபடக்க, “ரோஹி… பேன் ஸ்பீடைக் கொஞ்சம் கம்மி பண்ணு…” என்றான்.
 
அவள் சினிமாவிலேயே கண்ணைப் பதித்துக் கொண்டு, “போங்க அத்தான்… சூப்பர் சீன் போயிட்டிருக்கு… அதான் இனி உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை… நடக்கலாம்னு டாக்டர் சொல்லிட்டாரே… எழுந்து போயி நீங்களே கம்மி பண்ணுங்க… நடந்து பழகணும்ல…” என்றாள் பார்வையை விலக்காமலே.
 
கடுப்புடன் அவன் எழவும் மடியில் இருந்த பைல் சரிந்து பேப்பர் முழுதும் கீழே விழுந்து மூலைக்கொன்றாய் காற்றில் பறந்தது.
அதைப் பிடிப்பதற்காய் எழுந்து தடுமாறியவன் விழப்போக, சரியான நேரத்தில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த பவித்ரா அவனைத் தாங்கிப் பிடிக்க, பிடிப்புக்காய் அவனும் அவளை அணைத்துப் பிடித்துக் கொள்ள இருவருக்கு பின்னில் இருந்தும் காதல் கீதம் இசைக்கத் தொடங்கியது.  
 
அதைக் கண்டதும் ரோஹிணியின் இதயம் பேப்பரை விட வேகமாய்ப் படபடத்தது. கண்ணிலும் காதிலுமாய் பொறாமைப் புகை பயங்கரமாய் வெளியேறியது.
 
“என்னங்க… எதாச்சும் வேணும்னா என்கிட்டே சொல்லி இருக்கலாமே…” பவித்ரா சொல்லவும் ரோஹியின் முகத்தில் கோபத்தின் மின்னல் வெட்டியது.
 
“ஏய் பவித்ரா…. எதுக்கு எப்பவும் இப்படி வந்து அத்தானை டிஸ்டர்ப் பண்ணறே… நான்தான் இங்கே இருக்கேனே… நான் பார்த்துக்க மாட்டேனா… எப்படா, கீழ விழுவாரு… தாங்கிக்கலாம்னு அலைய வேண்டியது…”
அவள் சொல்லவும், “ரோஹிணி…” சீறலாய் வந்தது பவித்ராவின் வார்த்தைகள். நிமிடத்தில் கலங்கியிருந்த  கண்கள் அனல் கக்க, ஒரு விரலை அவள் முன்னில் நீட்டி எச்சரிப்பது போலக் காட்டியவள், அடுத்த நிமிடம் அறையை விட்டு சென்று விட்டாள்.
 
அவள் செய்கையை எதிர்பார்க்காத ரோஹிணி அதிர்ச்சியில் சிலையாய் நிற்க மித்ரனின் மனமோ, “ஆஹா… நடப்பதெல்லாம் கனவா… பவித்ராவா இப்படி செய்தது…” என்று பிரமித்து சந்தோஷிக்க, “எனக்கும் ரோஹி போல அதிர்ச்சி தானே வரவேண்டும்… நான் ஏன் சந்தோஷிக்கிறேன்…” என்று தன் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாமல் வியந்து நின்றான்.
 
ரோஹிணி மித்ரனை முறைப்பாய் ஒரு பார்வை பார்த்து விட்டு கோபத்துடன் அவளது அறைக்கு சென்று விட்டாள். அவளது கோபத்தைக் கண்டு மித்ரனுக்கு சிரிப்பு தான் வந்தது. பவித்ரா தனது மனைவி என்ற உரிமையை விட்டுக் கொடுக்காமல் கோபப்பட்டது பிடித்திருந்தது.
“ஆனால் அவள் டைரியில் இருந்த போட்டோ யாருடையதாய் இருக்கும்… யாரோ ஒருவனை மனதில் வைத்துக் கொண்டு என் மீது இத்தனை அன்பை இவளால் காட்ட முடியுமா…” என யோசித்தவன், உடனே அவளது டைரியைப் பார்க்க முடிவு செய்து அறைக்கதவை உள்ளிருந்து தாளிட்டான்.
 
அவளது உடைகள் வைப்பதற்காய் தனியே இருந்த அலமாரியைத் திறந்தவன் சேலைகளுக்கு நடுவில் சொருகி வைக்கப் பட்டிருந்த டைரியை வெளியே எடுத்தான். அது கை நழுவிக் கீழே விழ அதற்குள் இருந்த போட்டோ அலமாரியின் அடிபாகத்தில் சென்று விழுந்துவிட்டது.
 
திகைத்தவன், “சரி, டைரியில் என்ன எழுதி இருக்கிறாள் என்று முதலில் பார்ப்போம்….” என நினைத்தவன், அதைப் பிரித்தான். அங்கங்கே அழகான கையெழுத்தில் குட்டி குட்டி கவிதைகள்… கண்ணா… என்ற தொடக்கத்துடன்.
 
கண்ணா….
மௌனமாய் இருப்பதாய்
நினைத்துக் கொண்டே
என் மனதில் எப்போதும்
சத்தமாய் பேசிக் கொண்டிருக்கிறாய்…
அலைகடல் ஓய்ந்தாலும்
என் அகத்தில் உன் வரவின் சத்தம்
மட்டும் மறைவதேயில்லை…
 
ஒவ்வொன்றாய் படித்துக் கொண்டே வந்தவன், “இத்தனை அழகாய் யாரைப்பற்றி எழுதி இருக்கிறாள்… இந்த மாயக் கண்ணன் ஒருவேளை நான்தானோ…” யோசித்தவனுக்கு அதற்குமேல் பொறுமையின்றி மெல்லக் கீழே அமர்ந்து அலமாரிக்கு அடியில் விழுந்த போட்டோவை ஒரு ஸ்கேலை வைத்து மெல்ல நகர்த்தவும் அது வெளியே வந்தது.
 
தன் சிறுவயது புகைப்படத்தைக் கண்டவனின் மனம் சந்தோஷத்தில் துள்ள, அவனது கண்கள் அனிச்சை செயலாய் மலர்ந்தது. அவளது அன்புக்கு சொந்தக்காரன் தான்தான் என்பதை உணர்ந்ததும் மனதுக்குள் பரவிய நிம்மதியை அதிசயமாய் உணர்ந்தான். கட்டிலுக்கு வந்தவன் சாய்வாய் அமர்ந்து எல்லாக் கவிதைகளையும் படிக்கத் தொடங்கினான்.
 
இருளில் தொலைந்து போகும்
நிழலல்ல நீ… என்
நித்திரையிலும்
தொடர்ந்துவரும்
நினைவன்றோ நீ…
 
அவனது இதழ்கள் அந்த வாக்கியத்தைப் படிக்க மனதிலோ தென்றல் வீசியது. தான் விழப் போனபோது சரியான நேரத்தில் தாங்கிக் கொண்டவளை இறுக்கி அணைத்தபோது அவளது மென்மையான தேகம் தன்மீது உரசியதை நினைக்கும்போது மனம் சிலிர்த்து ஒருவித புது உற்சாகம் உடலெங்கும் பரவுவதை உணர்ந்தான்.
 
அவளை ரோஹிணி கேவலமாய், அலைவதாக சொல்லி திட்டியபோது, “ஹப்பா…. என்னவொரு கோபம் அவள் கண்களில்… நான் அவன் தாலியை சுமப்பவள் என்ற உரிமை அதில் தொனித்ததே…” அதை யோசித்ததும் அவன் மனம் வாடியது.
 
“அது ஒரு போலித்தாலி என்பதை உணர்ந்திருந்தால் இந்தக் கோபம் சாத்தியமா… பவி… என்னை இப்படி பலதும் யோசித்து தவிக்க விடுகிறாயே… உன்னைப் போல ஒரு அருமையான பெண் மனைவியாய் வரவேண்டும் என்றுதானே எந்த ஆணும் நினைத்திருப்பான்… ஆனால் என் மனைவியாக போலியாக அல்லவா உன்னைக் கூட்டி வந்திருக்கிறேன்…” யோசித்து தவித்தான்.
 
“பவி… வா… என்னோடு வந்துவிடு… யாருமில்லாத ஒரு உலகுக்கு நாம் சென்று விடுவோம்… அங்கே கணவன் மனைவியாய் இருவரும் அன்பை மட்டுமே சுவாசித்து, பருகி, உண்டு களித்திருப்போம்… வீசுகின்ற காற்றும் நமைக் கண்டு பொறாமை கொள்ளட்டும்… காற்றும் பிரிக்க முடியா நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கிக் கொள்வோம்… நமக்கான காதல் உலகத்தை நாமே படைப்போம்… அங்கே பொம்மைக் கல்யாணம் இல்லை… போலித் தாலியும் இல்லை… நம்மை அன்பைக் காட்டி பிளாக்மெயில் செய்து பிரிக்கவும் ஆளிருக்க மாட்டார்கள்… வா பவி… எனக்கே எனக்காய் நீ வந்துவிடு… நமக்கே நமக்கான வாழ்க்கையை வாழ்ந்திடுவோம்…”
 
“மித்து…” அவளது காதல் நிறைந்த அழைப்பில் அவன் உடல் சிலிர்த்தது. “மித்து… நீங்கள் அழைத்தால் எந்த பாதாள லோகத்துக்கு உங்களோடு வருவதற்கும் நான் சித்தமாயிருக்கிறேன்… உங்கள் காதல் சாம்ராஜ்யத்தில் நான் மட்டுமே பட்டத்து ராணியாய் வீற்றிருக்க ஆசைப்படுகிறேன்… இந்த உடலும் உள்ளமும் உங்கள் ஒருவருக்காகவே ஜென்மம் கொண்டுள்ளது…”
 
“தேவி… நீயே என் இதயராணி… எந்த இணையத்திலும் எனக்கு கிடைத்திடாத தேனீ…” சொல்லிக் கொண்டே அவளை இறுக அணைத்துக் கொண்டு முகமெங்கும் முத்தத்தின் முத்திரை வைத்து இறுதியில் இதழை சிறை பிடித்தவன் யாரோ அவர்கள் காதல் கோட்டையின் கதவை பலமாய் தட்டுவதை உணர்ந்தான்.
 
மாறிமாறி காட்சிகள் சரித்திர காலத்துக்கும் இப்போதைய காலத்துக்கும் சென்றுவர, வீரவசனம் பேசிக்கொண்டு காதல் உலகத்தில் தன் இணையான காதல் ராணி பவித்ராவுடன் உலாவிக் கொண்டிருந்த காதல் ராஜன் மித்ரன், கதவு தட்டும் ஓசையில் மெல்ல நிகழ்வுலகதிற்கு வந்தான். அப்போது தான் தட்டப்படுவது தன் அறைக்கதவு எனப் புரிய, கண்ணசந்ததில் மனதுக்குள் வந்த கனவுக் காட்சிகள் பிரமிப்புடன் மீண்டும் வலம் வர, பாதியில் நின்ற கனவைக் குறித்து ஏக்கமாய் இருந்தது. மெல்ல எழுந்தவன் டைரியை வைத்துவிட்டு கதவைத் திறக்க பவித்ரா ஜூஸுடன் நின்று கொண்டிருந்தாள்.
 
“சாரிங்க… டிஸ்டர்ப் பண்ணிட்டேனா…” அவள் கேட்க, “அதுதான் எப்போதோ பண்ணிவிட்டாயே…” என்றவனைப் புரியாமல் பார்த்து நின்றாள் அவள்.
என் விழியில் குளம் கட்டி
விளையாடுகிறாய் கண்ணீராய்…
இமை தாண்டி வீழ்ந்திடுவாயோ
என்றே தவிக்கின்றேன்…
உன் இதழ்கள் பூக்க மறந்தால்
என் இதயம் வாடிப் போகிறது…
வலிகளையும் விரும்பியே ஏற்கிறேன்
காயங்கள் கொடுப்பது நீயென்றால்…
எதையும் தாங்குகிறேன் என்பதால்
பிரிவைக் கொடுத்து பார்க்காதே…
நெஞ்சம் வெறும் கூடாகும்…
உன் நினைவழிந்த பிறகு…
 
இமைப்பீலி தொடரும்…

Advertisement