Advertisement

இமை – 11
 
நாட்கள் இனிமையாய் நகர அன்று திருக்கார்த்திகைநாள்.
 
மாலையில் மீனா கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்ப, அழகாய் சுடர்விடும் அகல் விளக்குகள் வரிசையாய் வீட்டில் அணிவகுத்து நிற்க தீப ஒளியால் நிறைந்திருந்த வீட்டை திகைப்புடன் பார்த்துக் கொண்டே நுழைந்தார்.
 
ரோஜா நிறப் புடவையில் மங்களகரமாய் தீபங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த பவித்ராவைக் கண்டு அவரது புருவங்கள் ஆச்சர்யத்தில் நெளிந்தன.
எல்லா வருடமும் சாவித்திரி தான் வீட்டில் விளக்கேற்றி வைப்பார். மீனா மில்லில் இருந்து அப்படியே கோவிலுக்குப் போய்விட்டுத் தான் வீடு திரும்புவார். இன்றும் அப்படியே கோவிலுக்குப் போய்விட்டு வந்தவர் விளக்கின் வெளிச்சம் வீடெங்கும் மங்களகரமாய் நிறைந்திருக்க தேவதையாய் கையில் விளக்கோடு நின்ற பவித்ராவைக் கண்டதும் மனம் நிறைந்தது.
 
“வாங்க அத்தை… காபி எடுக்கட்டுமா…” அன்பான குரலில் கேட்டவள் விளக்கை வைத்துவிட்டு ஓடினாள்.
 
மித்ரன் ஹாலில் அமர்ந்து வாசலில் மின்னும் விளக்குகளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனது ஏதேதோ எண்ணங்களால் அலைப்புற்றுக் கொண்டிருந்தது. பவித்ராவைப் பற்றித் தெரிந்து கொண்ட விஷயங்கள் அவனை மூச்சு முட்ட வைத்தது.
 
“எத்தனை வேதனைகளை இந்தப் பெண் கடந்து வந்திருக்கிறாள்… சிறு வயதில் அன்பான தந்தையை இழந்து மாமனின் வீட்டில் அடைக்கலம் கொண்டு சிறிது காலத்திலேயே தாயையும் இழந்தவள் என்ன தேவைக்காக இந்த பொம்மைக் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டாள்…” யோசிக்கையில் மனம் பரிதவித்தது.
 
அன்னை வந்ததையும் அருகில் அமர்ந்ததையும் கூட அறியாமல் அவனது எண்ணவோட்டங்கள் எங்கோ இருந்தன.
 
“மித்ரா… என்னப்பா யோசிச்சிட்டு இருக்கே…” கேட்டுக் கொண்டே கோவில் பிரசாதத்தை அவனது நெற்றியில் வைத்து விட்டார். காபியுடன் வந்த பவித்ராவிடம் விபூதியை நீட்டியவர், “கோவில் பிரசாதம் மா… வச்சுக்க…” என்றதும் சந்தோசத்துடன் வாங்கிக் கொண்டாள்.
 
“அத்தை… நம்ம வீடு இன்னைக்கு ரொம்ப அழகா இருக்குல்ல…” எதார்த்தமாய் சிறு குழந்தை போல ஆசையுடன் கேட்டவளை திகைப்புடன் நோக்கியவர், “ம்ம்… ரொம்ப அழகாருக்கு…” என்றார்.
அவரது மனதுக்குள்ளும் சொல்லமுடியாத ஒரு அவஸ்தை நெளிந்து கொண்டிருந்தது. மகனை நோக்க அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவர் வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.
 
பவித்ரா, இழந்திருந்த உயிர்ப்பை எல்லாம் இப்போது மீண்டும் பெற்றது போல உணர்ந்திருந்தாள். முந்தினநாள் அவளைப் பற்றி, அவளுக்குப் பிடித்ததைப் பற்றி மித்ரன் கேட்கவும், சிறகு முளைத்த பட்டாம்பூச்சியாய் மிதந்தாள்.
 
தன்னைப் பற்றி அறிந்து கொள்ளவும், விசாரிக்கவும் இனி தன் கணவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை அவளுள் ஆழமாய் பதிந்தது. 
 
தனது சிறுவயதில் தந்தையுடன் மகிழ்ந்திருந்தது, இளவரசி போலிருந்த வாழ்க்கையில் ராஜாவைப் பறிகொண்ட விதி, ராணியையும் பழிவாங்கியது. யாருமில்லா அனாதையாய் ஒரு வேலைக்காரி போல மாமாவின் வீட்டில் இருந்தது எல்லாம் கூறினாள்.
இதுவரை மேடை கிடைக்காத பேச்சாளருக்கு மேடை கிடைத்தது போல எல்லாவற்றையும் ஒப்புவித்தாள். அவனை சிறுவயதிலேயே கண்டது, அவன் செயலில் பிரமித்து நின்றது… என்று அவள் ஒவ்வொன்றும் கூறக் கூற அவன் முகம், வேதனையையும், வியப்பையும் காட்டி முடிவில் சிறு கோபத்தையும் காட்டியது.
 
அவளைப் பேசவிட்டு கேட்டிருந்தவன் மனதில் ஒரு கேள்வி மட்டும் மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே இருந்தது. இப்படிப் பட்ட பெண் எப்படி இந்த வாடகைக் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டாள் என்பதுதான் அது.
 
அதைப்பற்றி கேட்டுவிடலாமா என யோசித்துக் கொண்டிருக்க மீனா கோவிலில் இருந்து திரும்பியதற்கு அடையாளமாய் அவரது கார் கேட்டுக்குள் நுழையவும் பேச்சை நிறுத்திக் கொண்டான். மகன் தோட்டத்தில் இருப்பதைக் கண்டு திகைப்புடன் அங்கே வந்த மீனாவின் கண்ணில் பவித்ராவின் மலர்ந்த முகம் யோசனையைக் கொடுக்க மகனின் முகமோ குழப்பத்தைக் காட்டியது.
“என்ன மித்ரா… இங்கே வந்து உக்கார்ந்திருக்கே… காத்து உடம்புக்கு சேராமப் போயிடப் போகுது…”
 
“ம்ம்… வீட்டுக்குள்ளயே இருக்கறது கொடுமையா இருக்கும்மா… அதான் தோட்டத்துல கொஞ்சநேரம் இருக்கலாம்னு வந்தேன்…”
 
“சரிப்பா… குளிர்காத்து வீசுது… போதும், வீட்டுக்குப் போலாம்…” என்றவர் சக்கர நாற்காலியைப் பிடிக்க, “நான் தள்ளறேன் அத்தை…” என்ற பவித்ரா பிடித்துக்கொண்டாள்.
 
அவள் மனது மித்ரனின் அருகாமையில், அவனிடம் தன்னைப் பற்றி பகிர்ந்து கொண்டதில் இலவம் பஞ்சாய் மிதந்து கொண்டிருக்க, அவன் மனமோ மழையில் நனைந்த பஞ்சாகக் கனத்துக் கிடந்தது.
 
அன்று முழுவதும் அவன் மனதில் பவித்ரா கூறிய விஷயங்களே அலட்டிக் கொண்டிருந்தன. “அவள் சம்மதித்து தான் இந்தக் கல்யாணம் நடந்தது என்று அன்னை கூறியது உண்மைதானா…” என்று ஒருநிமிடம் தோன்றினாலும் அடுத்த நொடியே, “ச்சே… அம்மா என்னிடம் பொய் சொல்ல மாட்டார்கள்… இவள் ஏதாவது தேவைக்காய் இந்தக் காரியத்துக்கு சம்மதித்திருக்க வேண்டும்…” என மாற்றி யோசித்தான்.
 
“ஒரு வருடத்தில் பிரிந்து செல்லப் போகிறவள் எதற்காக இப்படி என்மீது அன்பையும், அக்கறையையும் பொழிகிறாள்…”, “ஏன் அவளது அன்பில் உன் மனம் தடுமாறுகிறதா… என்ன? என்ற மனதின் கேள்விக்கு திடுக்கிட்டவன், “இல்லை… அப்படி எதுவும் இல்லை… அவளைப் பற்றிய விவரங்களை அறிந்தபோது சற்றுப் பரிதாபமாய் தோன்றியது உண்மைதான்… அதற்காக என் அன்னையின் விருப்பத்துக்கு மாறாக ஒரு நாளும் நான் நடந்து கொள்ள மாட்டேன்… இவள் மட்டும் அல்ல… இனியும் இந்த உலகத்தில் எத்தனை பெண்களைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் என் அன்னையின் மனம் புண்படும் எந்த செயலையும் செய்ய மாட்டேன்…”
தனக்குத் தானே உறுதிபடுத்திக் கொண்ட பின்புதான் அவனுக்கு நிம்மதியாய் இருந்தது.
 
“பவித்ரா எதற்காக இந்த காரியத்துக்கு ஒத்துக் கொண்டு இருந்தாலும், அவளுடன் சற்று எட்டி நின்றே பழகுவதுதான் நல்லது…” என்று தீர்மானித்துக் கொண்டான்.
 
வீட்டின் இருளைப் போக்கி வெளிச்சத்தைக் கொண்டு வந்தவளுக்கு அவன் மனதின் குழப்பம் என்னும் இருட்டை போக்க முடியாமல் போனது அவளுக்குத் தெரியவில்லை.
 
விளக்கோடு போட்டி போடும் வெளிச்சம் படர்ந்த விழிகளுடன் குதூகலமாய் சுற்றிக் கொண்டிருந்தாள் பவித்ரா. சிறுவயதில் வீட்டைச் சுற்றி நிறைய விளக்குகள் வைக்குமாறு அன்னையிடம் கூறுவாள். அன்னையும் அவளைத் துணைக்கு வைத்துக் கொண்டு வீட்டை விளக்காலேயே அலங்கரிப்பாள். மாமாவின் வீட்டில் அத்தை கடுகடுப்பாள்.
“பேருக்கு இரண்டு விளக்கு வைத்தால் போதும்… எதற்கு வீண் எண்ணை செலவு… உன் அப்பனா எண்ணை மில் வைத்திருக்கிறான்…” என்று குதிக்கவும் செய்வாள். அதற்கு பயந்தே அதிகம் விளக்கை ஏற்ற மாட்டாள் பவித்ரா. இன்று வீட்டை நிறைத்த விளக்குகளோடு அவள் மனமும் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது.
 
மனதுக்குள் அவளையே யோசித்துக் கொண்டிருந்ததால் மித்ரனின் கண்கள் அடிக்கடி பவித்ராவைப் பார்த்துக் கொண்டு, அவள் செய்கைகளை கவனித்துக் கொண்டே எடை போட்டுக் கொண்டிருந்தன. இதைக் கண்டு கொண்ட மீனாவின் மனதில் அலையடிக்கத் தொடங்கியது.
 
மகனின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணமோ என்ற குழப்பரேகை அவருக்குள் புயலாய் மையம் கொண்டது.
 
“என் ரோஹிணிக்கு நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ… கடவுளே, தீ என்று தெரிந்தே எந்த நம்பிக்கையில் இந்த விளையாட்டுக்கு நான் சம்மதித்தேன்… மித்ரன் பவித்ராவிடம் ஏதும் பேசி இருப்பானா… என்னை சந்தேகிப்பானா… அப்படியானால் அவன் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்… இந்தக் காரியத்திற்கு சம்மதிக்கவே மாட்டேன் என்றவனை எப்படி எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருந்தது…” அவரது மனது பலவாறாய் யோசித்துத் தத்தளித்தது.
 
அடுத்த நாள் முதல் மித்ரனின் தேவைகளை அதிகமும் நர்ஸை வைத்தே பார்த்துக் கொண்டார் மீனா. அவனும் பவித்ராவை எதற்கும் தேடவில்லை… என்பதை உணர்ந்து அவருக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது.
 
ஒருமாதம் ஆனதும் அறைக்குள் ஸ்டிக்கின் உதவியுடன் மெல்ல நடப்பதற்கு முயற்சிக்கத் தொடங்கினான் மித்ரன். அவனைப் பிடிக்க வந்த பவித்ராவிடம், “வேண்டாம்… தனியே பழகவேண்டும்…” என்று தவிர்த்துவிட்டான். அவன் சொன்ன காரணம் சரியென்பதால் பவித்ராவும் சற்று எட்டியே நின்று கொண்டாள். அவள் தன்னை நெருங்காமல் விலகி நின்றாலும் அவனுக்காய் ஒவ்வொன்றும் அக்கறையோடு பார்த்து செய்ய முயலுகையில் மனதில் நெருங்கியே வருகிறாள் என்பதை உணர்ந்தவனுக்கு தவிப்பாக இருந்தது.
 
இரண்டு நாட்கள் கழிந்திருக்க நர்ஸ், அவனது காலில் இருந்த கட்டை அவிழ்த்து வேறு கட்டைப் போட்டுக் கொண்டிருக்க அருகில் பவித்ராவும் உதவிக்கு இருந்தாள். மீனா மில்லுக்குப் போயிருந்தார். அப்போது நர்சுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.
 
எதிர்ப்புறம் சொன்ன சேதியைக் கேட்டு அவள் முகத்தில் பதட்டம் தெரிந்தது.
 
“ச…சார்… என் அப்பா திடீர்னு கைகால் இழுத்துகிட்டு மயங்கி விழுந்து, ஹாஸ்பிடலில் சேர்ந்திருக்காங்களாம்… என்னை உடனே கிளம்பி வர சொல்லுறாங்க… நான் கிளம்பட்டுமா…” பதட்டமாய் கண்கலங்கக் கேட்டவளிடம் மறுப்பு சொல்ல முடியாமல் செலவுக்கு சிறிது பணமும் கொடுத்து, தைரியம் சொல்லி அனுப்பி வைத்தான் மித்ரன். 
அவன் ஒன்று நினைக்க விதி வேறு விதமாய் நினைத்திருந்தது. பவித்ராவை விலக நினைக்க விதியோ அவளையே அவனது காரியங்களைப் பார்த்துக் கொள்ள வைத்து நெருங்க வைத்தது.
 
மதிய உணவு கொண்டு கொடுத்து அவன் அருகிலேயே சாப்பிடும்வரை இருந்து மாத்திரை கொடுத்துவிட்டுதான் அங்கிருந்து சென்றாள் பவித்ரா. அவன் லாப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டே டைனிங் ஹாலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பவித்ராவைப் பார்த்துக் கொண்டிருந்தான். பரிமாறிய சாவித்திரியிடம் பேசிக் கொண்டே அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
 
“என்னம்மா… அந்த நர்ஸ் பொண்ணு இப்படிக் கிளம்பிப் போயிருச்சே… தம்பியை கவனிச்சுக்க கஷ்டமாச்சே…”
 
“என்ன பண்ணறது சாவித்திரிக்கா… இவரைக்கூட நான் பார்த்துக்குவேன்… ஆனா, அந்தப் பொண்ணோட அப்பாவுக்கு முடியாமப் போயிருச்சே… பாவம், கலங்கிப் போயிருச்சு… கடவுளே… அந்தப் பொண்ணோட அப்பாவுக்கு சீக்கிரம் சரியாகணுமே…” என்ற வேண்டிக் கொண்டவளைக் கண்டு சிரித்தார் சாவித்திரி.
 
“என்னக்கா சிரிக்கறீங்க…”
 
“ம்ம்… அந்தப் பொண்ணு வேண்டுதலைக் கடவுள் கேக்கறாரோ இல்லையோ, ஏதோ ஒரு பொண்ணோட அப்பா நல்லாருக்க வேண்டிக்கற உன் பிரார்த்தனையைக் கண்டிப்பா கடவுள் கேப்பாருமா…” அவர் சொன்ன வார்த்தைகள் மித்ரனின் காதிலும் விழுந்து அவன் புருவங்களை நெறித்தன.
 
“அப்படி இல்லை சாவித்திரிக்கா… அப்பாவோட அருமை என்னன்னு அப்பாவை இழந்த எனக்கு நல்லாவே தெரியும்… அந்தக் கொடுமை எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாதுன்னு தான் வேண்டிக்கறேன்…” என்றவளின் வார்த்தைகளில் வருத்தம் தெரிந்தது. அதைக் கேட்டதும் மித்ரனின் மனமும் சற்று நெகிழ்ந்தது.
உண்டு முடித்து எழுந்தவள் ஹால் சோபாவில் அமர, மித்ரன் ஸ்டிக்கின் உதவியுடன் நொண்டிக் கொண்டே அங்கு வந்தான்.
 
“என்னங்க… ஏதாச்சும் வேணுமா…” உள்ளன்போடு கேட்டவளின் முகத்தை யோசனையுடன் ஆழ்ந்து நோக்க, கூச்சத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள் அவள்.
 
“என்…னங்க… அப்படி பார்க்கறிங்க…” காதல் தோய்ந்து வந்த அவளது வார்த்தைகள் மனதை ஏதோ செய்ய, சட்டென்று பார்வையைத் தழைத்துக் கொண்டவன், “மேல என் ரூம்ல பழைய பென்டிரைவ் ஒண்ணு இருக்கு… அதை எடுக்கணும்…” என்று சொல்லிக் கொண்டே ஒரு கையில் ஸ்டிக்குடன் மறுகையில் படிச்சுவரைப் பிடித்துக் கொண்டான். 
 
“நீங்க சிரமப் படாதீங்க… கால் வலிக்கப் போகுது… எங்கே இருக்குன்னு சொல்லுங்க… நான் எடுத்திட்டு வரேன்…” என்றாள் அவள்.
“இல்ல… நானே எடுத்துக்கறேன்…” என்றவன் இரண்டு படி  ஏறவும், சுள்ளென்று ஒரு வலி இடுப்பில் முளைத்தது. முகத்தை சுளித்து நிதானித்தவனைக் கண்டவள்,
 
“அச்சோ… என்னங்க… வலிக்குதா… எதுக்குங்க பிடிவாதம்… நான் எடுத்திட்டு வரேனே…” என்று மீண்டும் சொல்ல அவன் அவளை தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் படியேறினான்.
 
அந்தப் பார்வையில் தொனித்தது வெறுப்பா… கோபமா… நிராசையா… புரிந்து கொள்ள முடியாமல் ஸ்தம்பித்து நின்றாள் பவித்ரா. ஒருவழியாய் அவளது உதவி இல்லாமலே வேதனையை சகித்துக் கொண்டு படியேறி முடித்தவன், வெற்றிக் களிப்பில் ஒரு புன்னகையை உதட்டில் நெளியவிட்டு அவனது அறைக்குள் நுழைய முற்றிலும் மாறி இருந்த அறையைக் கண்டு திகைத்தான்.
 
பவித்ரா அவனது அறையை மிகவும் அழகாக்கி வைத்திருந்தாள். கட்டில் இருந்த இடம் முதல் மேசை, அலமாரி எல்லாமே இடம் மாறியிருந்தது. காற்றில் அசைந்தாடிய அவனுக்குப் பிடித்த வண்ணம் கொண்ட அழகான கர்ட்டன், “என்னைப் பிடித்திருக்கிறதா…” என்று கேள்வி கேட்டது. இந்தப் புதிய சூழல் சட்டென்று மனதில் ஒட்டிக் கொள்ள வியப்பில் விரிந்த கண்களோடு அப்படியே நின்றிருந்தான்.
 
சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சியாய்
என் மனம் உன் இமையோரம் ஒட்டுதடா…
நித்திரை மறந்த என் விழிகளின்
உறக்கத்தை உன் விழிகளில் தேடுகிறேன்…
துடிக்க மட்டுமல்ல வலிக்கவும் செய்கிறது
துயில் கொள்ளா இதயம் உன் துயர் கண்டு…
இருளான உலகிலும் வெளிச்சமாய்
நித்தமும் தொடரும் உன் நினைவு…
 
இமைப்பீலி தொடரும்….
 

Advertisement