Advertisement

இமை – 10
 
நாட்கள் நகரத் தொடங்கின.
 
மீனாவுடன் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ரோஹிணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
 
“அத்தானைப் பார்த்துக்க தானே அந்த நர்ஸைக் கூட்டிட்டு வந்தோம்… அப்புறம் இவ எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கா… மனசுல பெரிய அன்னை தெரேசான்னு நினைப்பு… பெருசா சேவை செய்ய வந்துட்டா…”
“ரோஹி… விடும்மா… நாம எல்லாரும் தூங்கிட்டு இருக்கோம்னு ஏதோ அவசரத்துக்கு ஹெல்ப் பண்ணி இருக்கா… இனி மித்ரன் கூடவே இருக்கணும்னு நர்ஸ்க்கு கண்டிப்பா சொல்லிடுவோம்…” அவளை சமாதானப்படுத்த கூறிக் கொண்டிருந்தார் மீனா.
 
“எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை அத்தை… அத்தானைப் பார்த்ததும் அவ கண்ணுல வழியுற உருக்கம் என்ன… இவருக்கு வலிச்சா அவளுக்குத் துடிக்குற துடிப்பு என்ன… இதெல்லாம் பார்த்திட்டு அமைதியாப் போக என்னால முடியாது…”
 
“ரோஹிம்மா… இப்ப எதுக்குடா டென்சன் ஆகறே… அத்தை நான் பார்த்துக்க மாட்டேனா… நீ கவலைப்படாம நாளைக்கு கிளம்பு…” சொன்னவருக்கு மனதில் அவளைக் கிளப்பினால் போதும் என்றிருந்தது. பவித்ரா மித்ரனுக்காய் பாய்ந்து சென்று ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருக்க ரோஹிணியின் காதிலும் கண்ணிலும் புகையாய் வந்தது.
மித்ரனுக்கு உணவு கொண்டு கொடுப்பது, கையோடு மாத்திரை கொடுப்பது தோளில் கைகோர்த்துத் தாங்கிக் கொண்டு ஹாலுக்கு அழைத்து வருவது என்று  பவித்ரா மித்ரனைச் சுற்றியே வந்து கொண்டிருந்தாள்.
 
மித்ரனும் அவளோடு ஒருவார்த்தை நன்றாகப் பேசிவிட்டால் அவ்வளவுதான். முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு விடுவாள் ரோஹிணி. அதற்கு பயந்து கொண்டே மித்ரன், பவித்ரா எது செய்ய வந்தாலும் தவிர்த்துக் கொண்டிருந்தான்.
 
வலியிருந்தால் நடக்கவேண்டாம் என்று டாக்டர் சொல்லி இருந்ததாலும், நடக்க முயற்சித்தால் இடுப்பிலிருந்து மண்டைக்கு பாயும் தாங்க முடியாத வலியாலும் அவனும் படுத்தே கிடந்தான். எப்போதாவது ஹாலில் சிறிது நேரம் சக்கர நாற்காலியில் அமர்ந்து காலைத் தூக்கி டீபாயின் மீது வைத்துக் கொண்டு டீவி பார்த்துக் கொண்டிருப்பான். இப்போது இரண்டு நாட்களாய் தான் நடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.
சுந்தரியின் அண்ணி குடும்பத்தில் ஒரு கல்யாணம் இருக்கவே ஊருக்குக் கிளம்புவதாக சுந்தரி கூறினார். அப்போதுதான் ரோஹிணி, அத்தையிடம் இந்தப் பஞ்சாயத்தைக் கொண்டு வந்தாள். ஊருக்கு போக விருப்பமில்லை என்றாலும் அவளுக்கு வகுப்பு தொடங்கியதோடு குடும்ப விஷேசத்துக்கு நிச்சயம் போக வேண்டும் என்ற அன்னையின் வற்புறுத்தலில் மனதின்றிக் கிளம்பினாள்.
 
“அத்தை… நான் ஊருக்குப் போயிட்டு சீக்கிரமே திரும்பி வந்திடுவேன்… அத்தானைப் பார்த்துக்கங்க…” என்றவள் மித்ரனிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
 
அவள் கிளம்பத் தொடங்கவுமே பவித்ராவின் மனது துள்ளிக் குதித்தது. நர்ஸிடம் வந்த ரோஹிணி, “இங்க பாருங்க சிஸ்டர்… எப்பவும் அத்தான் பக்கத்துலயே இருந்து அவருக்கு என்ன தேவையோ செய்து கொடுங்க… அதை விட்டுட்டு நீங்க ரெஸ்ட் எடுக்கப் போயி இங்க உள்ளவங்களுக்கு உங்க வேலையை விட்டுக் கொடுத்துடாதிங்க… நான் சொன்னது புரிஞ்சுதா…”
 
அதட்டலாய் ஒலித்த அவளது குரலுக்கு வேகமாய் தலையாட்டினாள் அந்த நர்ஸ்.
 
பவித்ராவை முறைப்புடன் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அவள் கிளம்ப, “அவள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்…” என்று வழக்கப் போல மனதுக்குள் யோசிக்கத் தொடங்கினாள் பவித்ரா.
 
“ஒருவேளை அவரைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் பட்டிருப்பாளோ… ஆனா அவர் ஜாதகத்துல கண்டம் இருக்குன்னு பொருத்தமான என் ஜாதகத்தைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்களோ…” யோசித்தவளுக்கு ரோஹிணியை நினைக்க சற்றுப் பாவமாய் இருந்தது.
“மித்துவைப் போல அன்பான, அழகான, கம்பீரமான முறைப்பையன் இருந்தால் எந்தப் பெண்களுக்கு தான் அந்த ஆசை வராது… வருவதும் இயல்பு தானே… அது நடக்காத கோபத்தில் தான் என் மீது எரிச்சலைக் காட்டுகிறாளோ… அப்படிதான் இருக்க வேண்டும்…” என நினைத்துக் கொண்டே செல்பவர்களை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.
 
“எந்த பாக்கியத்தையும் அனுபவித்திராத எனக்கு இப்படி ஒரு கணவனைக் கொடுத்து கடவுள் என் வாழ்க்கையை சரி செய்யப் பார்க்கிறாரோ…” தன் நிலையை யோசித்துக் கொண்டே வாசலுக்கு சென்று திரும்பிப் பார்த்த சுந்தரியிடம் மலர்ந்த முகமாய் கை அசைத்து நின்றாள்.
 
அவர்களை அனுப்பிவிட்டு மித்ரனிடம் வந்த மீனா, “ஜூஸ் வேண்டுமா…” கேட்க அவன் மறுப்பாய் தலையாட்டினான். அவனுக்கு அருகில் அமர்ந்தவர், “மித்ரா… நீ படிச்சு முடிச்சு வந்ததும் தொழிலை எல்லாம் உன் பொறுப்பில் விட்டுட்டு நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சேன்… இப்ப இப்படி ஆயிருச்சு… அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சியா…” என்றார் மென்மையான குரலில்.
“அம்மா… நீங்க என்ன நினைக்கறீங்களோ… சொல்லுங்க… அதையே செய்துடறேன்…” என்றான் மகன்.
 
“உன் உடம்பு சரியானதும், நம்ம தொழில் பொறுப்பை நீ ஏத்துக்கறது தான் நல்லதுன்னு அம்மாவுக்குத் தோணுதுப்பா…” என்றார் மீனா.
 
“ம்ம்… உங்க விருப்பம் போல பண்ணிடலாம் மா…” என்ற கணவனைப் பெருமையுடன் நோக்கினாள் பவித்ரா.
 
“தன் வயிற்றில் பத்து மாதம் சுமக்கா விட்டாலும் அவனை எப்போதும் நேசமென்னும் நெஞ்சில் சுமக்கும் தாய்… தாயின் எண்ணம் எப்போதும் சரியாயிருக்கும் என்று அசைக்க முடியா நம்பிக்கை கொண்ட தனயன்… இப்படிப் பட்ட அன்பு நெஞ்சங்கள் என் உறவுகளாய்… நான் மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்…”
 
மனதுக்குள் பெருமையுடன் நினைத்துக் கொண்டவளின் முகத்தில் பரவிய புன்முறுவல் சூரியக் கதிர்களாய் ஜொலி ஜொலித்தது. அப்போது சாதாரணமாய் அவளை ஏறிட்ட மித்ரனின் கண்களில் ஆச்சர்யம் பிறந்தது. இவள் முகத்தில் எதற்கு இந்தப் பெருமிதம் என யோசித்தான்.
 
“மித்ரா… உனக்கு இப்படி ஆனதில் இருந்து மனசே சரியில்லை… நான் பக்கத்துல அம்மன் கோவிலுக்குப் போயிட்டு சீக்கிரம் வந்திடட்டுமா…”
 
“அம்மா… என்னைப் பார்த்துக்க தான் நர்ஸ் இருக்காங்க… பவித்ரா இருக்கா… நீங்க கோவிலுக்குப் போயிட்டு மெதுவா சாமி கும்பிட்டு வாங்கம்மா… மில்லுக்கும் நான் வந்ததுல இருந்து நீங்க போகவே இல்லை போலருக்கு…” என்றான் மித்ரன்.
 
சோபாவில் விரிப்புகளை சரி பண்ணிக் கொண்டு அங்கே நின்றிருந்த பவித்ராவின் காதில் அவன் சொன்ன வார்த்தைகள் தேனாய் ஒழுக மகிழ்ச்சியாய் உணர்ந்தாள். மித்ரனோ எதார்த்தமாய் அன்னையிடம் சொல்லிக் கொண்டிருந்தான். 
“ம்ம்… நீ சீக்கிரமே எழுந்து நடக்கணும்னு அம்மன்கிட்ட  வேண்டிகிட்டு இருக்கேன்… உனக்கு சரியானதும் கோவிலுக்குப் பெருசா ஏதாச்சும் பண்ணனும்… சரி நான் போயிட்டு வந்திடறேன்…” என்றவர், “பவித்ரா… நான் வந்திடறேன்…” என்றுவிட்டு கிளம்பிச் சென்றார்.
 
அவர் சென்றதும் மித்ரனின் அருகில் புன்னகையுடன் வந்து நின்றாள் பவித்ரா. அவள் முகத்தில் சந்திரனின் குளுமையாய் காதல் வழிந்து கொண்டிருந்தது.
 
அவளைத் திகைப்புடன் நோக்கிய மித்ரன், “என்ன பவித்ரா… உனக்கு ஏதாச்சும் சொல்லணுமா…” கேட்டவனை புன்னகையுடன் நோக்கினாள். அவள் சிரிக்கும்போது பளிச்சென்று மின்னல் வெட்டியதுபோல் உடன் சிரித்த கண்களின் ஒளி தன்னைத் தாக்குவதை உணர்ந்து பார்வையை மாற்றிக் கொண்டான்.
“ரொம்ப தேங்க்ஸ்ங்க…” மலர்ச்சியுடன் கூறினாள்.
 
புரியாமல் பார்த்தவன், “எதுக்கு…” என்றான்.
“இல்ல… நான் இருக்கேன், உங்களைப் பார்த்துக்கன்னு அத்தைகிட்டே சொன்னிங்களே… அதுக்குதான்…” என்று மீண்டும் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். அவள் சொன்னதையே குழப்பமாய் யோசித்தவன் மனதில் அந்த வார்த்தையின் அர்த்தம் மெதுவாய்ப் புரிபட புதிதாய் ஒரு அவஸ்தையை உணர்ந்தான்.
 
“நான் ஏன் அப்படி கூறினேன்… அவள் இங்கு இருந்தால் என் தேவைகளைப் பார்த்துக் கொள்வாள்… என்று என் மனதில் எப்படிப் பதிந்து போனது… எப்போதும் என்னைப் பார்வையால் தொடர்ந்து அவஸ்தைப்படுத்தும் அவள் விழிகளில் தொனிக்கும் ஆயிரம் பாவனைகளுக்கு பதில் என்னவாயிருக்கும்…” திகைப்புடன் யோசித்துக் கொண்டிருந்தான் மித்ரன்.
 
பெண்ணே!!!
நீ மௌனமாய் இருப்பதாய்
நினைத்துக் கொண்டே
சத்தமாய் என்னுடன்
பேசிக் கொண்டிருக்கிறாயோ…
 
தனது யோசனை போன போக்கு அவனுக்கே விசித்திரமாய் இருந்தது.
 
சிறுவயது முதலே அவனைத் தன் முந்தானைக்குள் வைத்துப் பார்த்துக்கொள்வார் மீனா. அவனுக்கு எந்த ஆபத்து வந்தாலும் சித்தியாகிய தன் பேரிலேயே பழி வரும் என்று நினைத்தார். அப்படி ஏதும் பழிச்சொல் வந்துவிட்டால், மகனின் மனதில் தன்னைப் பற்றிய விரிசல் வந்துவிடுமோ என்று பார்த்து வளர்த்து வந்தார்.
 
ஹாஸ்டலுடன் கூடிய பெரிய பள்ளியில் அவனைப் படிக்க வைத்தார். தனக்காய் தன் வாழ்க்கையையே தியாகம் செய்த அன்னையின் வாக்கை விட இந்த உலகத்தில் பெரியதாய் எதுவுமில்லை அவனுக்கு. ரோஹிணியை அன்னைக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலேயே அவனுக்கும் பிடிக்கும்… அவரது விருப்பு வெறுப்புகளையே தன்னுடையதுமாய் மாற்றிக் கொண்டவன்.
அப்படிப்பட்டவன் மனது இப்போது குழப்பத்தில் சிக்கித் தவித்தது. சாய்வாய் அமர்ந்து மடியில் லாப்டாப்பைத் திறந்து வைத்து பார்வையை ஸ்க்ரீனிலும் மனதை எங்குமோ பதித்து யோசனையில் ஆழ்ந்திருந்தவன் அருகில் ஒலித்த பவித்ராவின் குரலில் திரும்பினான்.
 
“சாரிங்க… ஏதோ யோசனையா இருக்கிங்க போலருக்கு… டிஸ்டர்ப் பண்ணிட்டேனா…” கேட்டவளின் விழிகளில் வழிந்த புன்னகையும் நேசமும் அவனுக்குள் மீண்டும் கேள்வியாய் முளைக்கத் தொடங்க, “அதுதான்…. டிஸ்டர்ப் பண்ணிட்டியே… என்னன்னு சொல்லு பவித்ரா…” என்றான்.
 
“இல்ல, டீவில கிரிக்கெட்னா விரும்பிப் பார்ப்பிங்களே… இப்ப ஐபிஎல் மேட்ச் ஓடிட்டு இருக்கு… அதான், ஹாலுக்கு வந்து உக்கார்றீங்களான்னு கேட்டேன்…”
 
“இவள் எப்படி என்னுடைய சின்ன சின்ன விருப்பங்களைக் கூடத் தெரிந்து வைத்திருக்கிறாள்… ஆனால் கடமைக்கு நான் கட்டிய தாலியை கழுத்தில் வாங்கிக் கொண்டது தவிர இவளைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லையே…” யோசித்தவன், “பவித்ரா… உன்கிட்ட கொஞ்சம் பேசணும்… உனக்கு எதுவும் வேலை இல்லேன்னா என்னைக் கொஞ்ச நேரம் தோட்டத்துக்கு அழைச்சிட்டுப் போறியா…” என்றான்.
 
அவனது வார்த்தைகளைக் கேட்டு அவள் மனது குத்தாட்டம் போட்டது. மனதின் சந்தோஷம் முகத்திலும் வழிய, வேகமாய் தலையாட்டினாள். அவளது ஒவ்வொரு செய்கையும் தன் மனதுக்குள் எங்கோ ரெகார்டர் இல்லாமலே பதிவாகிக் கொண்டிருப்பதை அவன் திகைப்புடன் உணர்ந்திருந்தான்.
 
இந்த இரண்டு நாட்களாய் தான் அவனது மனதில் பவித்ராவைக் காணும் போதெல்லாம் ஒரு சலனம் வரத் தொடங்கியது. அவன்மேல் அவள் எடுத்துக் கொள்ளும் அக்கறையோ, அன்போ எதோ ஒன்று அவளைக் கண்டு கொள்ளாமலே கடந்திட நினைத்த அவன் மனதை சலனப்பட செய்தது.
ஒரு கையில் வாக்கிங் ஸ்டிக்குடனும், மறு கையில் பவித்ராவின் தோளிலும் கையிட்டுக் கொண்டு  அறைக்கு வெளியே வந்தவனைக் கண்டதும் நர்ஸ் ஓடி வந்தாள்.
 
“சார்… எங்க போகணும்… நான் ஹெல்ப் பண்ணறேன்…”  என்று பிடித்துக் கொள்ள வந்தவளை, “நர்ஸ்… அந்த சக்கர நாற்காலி எடுத்து வாசலுக்கு கொண்டு வாங்க…” என்றான் மித்ரன். அவள் கொண்டு வரவும், சிறு வேதனையில் முகம் சுளிய மெல்ல அடியெடுத்து வாசல்படி இறங்கியவனை சக்கர நாற்காலியில் அமர வைத்து தோட்டத்துக்கு அழைத்துச் சென்றாள் பவித்ரா.
 
இளம் மாலை சூரியன் அவர்களைத் தழுவி வரவேற்க, சுகமாய் தேகம் வருடி தாலாட்டிச் சென்றது பூவாடைக் காற்று. சிலுசிலுத்த காற்றில் தங்கக் கொன்றைப் பூக்கள் அட்சதை தூவி வாழ்த்தின. அவள் மனது இலவம் பஞ்சு மேகமாய் மிதந்து கொண்டிருந்தது. மனம் நிறைந்தவனின் அருகாமையில் மதி மயங்குவதில் அதிசயமென்ன. அங்கே மலர்ந்திருந்த மலர்களைக் காட்டிலும் அவள் முகம் மென்மையைக் காட்டியது. கண்கள் மது குடித்த வண்டாய் சிறு போதையில் மிதந்து கொண்டிருந்தது.
 
என் இமைகள் உனைக் காக்கும் கூடா…
உன் இதயம் தான் நான் வாழும் வீடா…
என் விழியெங்கும் கொட்டிக்கிடக்கும்
பிரியங்களில் இருந்து என்னைப்
பிரித்தெடுக்கவே பிரயத்தனப்படுகிறேன்…
அன்னை வாசம் கண்டு அழுகை நிறுத்தும்
குழந்தையாய் – உன் அருகாமையிலே
மனம் ஆறுதலடைகிறேன்…
உனக்கான நேசங்களை வார்த்தையிலே
கோர்க்காமல் பிரியங்களால் நெய்கிறேன்…
 
இமைப்பீலி வரும்…
 

Advertisement