Advertisement

இலக்கணம் – 13
கோபத்துடன் எழுந்த விக்ரம் அந்தப் பையன்களின் சட்டையைப் பிடித்திருந்தான்.
“ஒழுங்கு மரியாதையா என்னோட வாங்க…..” என்றவன் திருதிருவென்று அச்சத்தோடு முழித்த இருவரையும் இழுத்துக் கொண்டு அந்தப் பெண்கள் சென்ற பகுதிக்கு சென்றான். என்ன நடந்திருக்கும் என வினோத் ஊகித்து அங்கு செல்லும் முன்பு அவர்கள் கன்னத்தில் இடியென அடி இறங்கியிருந்தது.
“எ… எதுக்கு எங்களை அடிக்கறீங்க…. யார் நீங்க…..” என்றான் ஒரு பையன் எகிறிக் கொண்டு.
“நாங்க போலீஸ் டா….. நீங்க பண்ணின எல்லாத்தையும் பார்த்திட்டு தான் இருந்தோம்….. இதோ வீடியோ கூட எடுத்து வச்சிருக்கேன்…..” என்று மொபைலை ஆட்டிய விக்ரமின் தோற்றமும் அவனது சம்மர் கிராப்பும் அவர்களை போலீஸ் என்றே நம்ப வைத்தது. நடப்பதை புரிந்து கொண்ட வினோத்தும் எதுவும் சொல்லாமல் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் போலீஸ் என்றதும் பயந்து போன பெண்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க பையன்கள் பயத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தலை குனிந்து நின்றிருந்தனர். பெண்களிடம் மெதுவான குரலில் அதே நேரம் சீற்றத்தோடு பேசினான் விக்ரம்.
“நீங்கல்லாம் ஸ்கூல் கேர்ள்ஸ் தானே…. இவனுங்களோட இந்த நேரத்துல இங்கே என்ன பண்ணறிங்க….. இதுக்கு தான் உங்க பெத்தவங்க உங்களை ஸ்கூலுக்கு அனுப்புறாங்களா….”
கண்ணை உருட்டிக் கோபத்தோடு கேட்ட புதியவனைக் கண்டு அந்தப் பெண்கள் மிரண்டு நின்றனர்.
“அ… அது வந்து அண்ணா… இவங்க எங்க பிரண்ட்ஸ்… பர்த்டேக்கு ட்ரீட் வைக்கறேன்னு சொன்னதால வந்தோம்…” என்று ஒருத்தி அழும் குரலில் சொன்னதும் அவன் முகம் சற்றுக் கனிந்தது.
“இங்கே பாருங்கம்மா…. நீங்க எதுக்காக இவனுங்களோட வந்திருந்தாலும் இவனுங்க நல்லவங்க இல்லை…. நீங்க இங்கே வாஷ் பண்ண வந்ததும் இவன் என்ன பண்ணினான் தெரியுமா….” என்றவன் நடந்ததைக் கூற அதைக் கேட்ட அந்த சின்னப் பெண்கள் பயத்துடன் நோக்கிக் கொண்டனர்.
“என்னம்மா இது…. ஸ்கூல் போற வயசுல எதுக்கு உங்களுக்கு இப்படிலாம் பிரண்ட்ஸ்….. பெத்தவங்க படிக்க அனுப்பினா அதை செய்யுங்க….. சுதந்திரம்கிற பேர்ல கண்ட ஆபத்துலயும் போயி மாட்டிக்கிறதில்லை சுதந்திரம்…. இவனுங்க உங்களை அந்த காபியை குடிக்க வச்சு மயக்கத்துல எதாவது பண்ணி அதை வச்சு பிளாக்மெயில் பண்ணி நினைச்சதை சாதிச்சுகிட்டான்னா உன் மானம் மட்டுமில்லை……. உன் குடும்ப மானமே போயிடும்….. அதோட உன் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிடும்…..” என்றவன் பொறுமையாய் விளக்கினான்.
“உங்களோட சுதந்திரம் உங்களோட எல்லைக்குள் இருக்க வரைக்கும் தான் உங்களுக்கு பாதுகாப்பு….. அதை முதல்ல புரிஞ்சுக்கங்க….. இனி இந்த மாதிரி பண்ணாதிங்க….. பெத்தவங்க வச்சிருக்குற நம்பிக்கையை காப்பாத்துங்க….. கிளம்புங்க…..” என்றதும் அந்தப் பெண்கள் அழத் தொடங்கி விட்டனர்.
“சாரிண்ணா….. நாங்க இதெல்லாம் நினைச்சுப் பார்க்கவே இல்லை…. பாய் பிரண்ட்ஸ் வச்சுக்கறதும், நினைச்ச போல நடந்துக்கறதும் தான் வாழ்க்கைல சந்தோஷம்னு நினைச்சு பெத்தவங்களுக்கு தெரியாம இப்படி பண்ணிட்டோம்…… நாங்க மட்டும் இவங்க வலைல மாட்டி இருந்தா எங்க வாழ்க்கையே போயிருக்கும்… ரொம்ப நன்றிண்ணா…..” என்று கை கூப்பினாள் ஒருத்தி.
“மற்றவளும், எங்களை மன்னிச்சிடுங்கண்ணா…. இனி இப்படிலாம் பண்ண மாட்டோம்…..” என்று கூறிவிட்டு அந்தப் பையன்களை முறைத்துக் கொண்டே கிளம்பினர். அவன் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டு தலை குனிந்து நின்றிருந்தனர் அந்தப் பையன்கள் இரண்டு பேரும்.
“நிக்குறானுங்க பாரு… படிக்குற வயசுல மேயுற புத்தி… இப்பவே எல்லாத்தையும் அனுபவிச்சு முடிச்சிடணும்னு வெறி…” என்றவன் அவர்கள் கன்னத்தில் ஓங்கி ஒன்று கொடுக்க, “ச…சாரி சார்… தெரியாம பண்ணிட்டோம்… எங்களை விட்டுடுங்க சார்…” ஒருத்தன் சொல்ல மீண்டும் அவன் கன்னத்தில் பளாரென விட்டான் விக்ரம்.
“என்னடா தெரியாம… இதே போல தெரியாம உன் தங்கச்சி கிட்டே நடந்துக்குவியா… இல்லை உன் அம்மா கிட்டே நடந்துக்குவியா… அவங்கல்லாம் உன் சொந்தம்னு தெரியுது தானே… நட்புன்னா என்னன்னு புரியாம உங்க வலைல சிக்குற சின்னப் பொண்ணுங்களை எதுக்குடா பலி கொடுக்கறிங்க…” என்று ஆத்திரப்பட்டவனின் தோளில் ஆதரவாய் கை வைத்தான் வினோத்.
“தெரியாமப் பண்ணிட்டாங்களாம்… தெரியாம, பாருடா… என்ன சொல்லுறான்னு…” என்றவனின் கண்கள் கலங்கத் தொடங்கி இருக்க அவன் தோளில் தட்டிக் கொடுத்தான் வினோத்.
அந்தப் பையன்கள் இவன் எதற்கு இப்படி எமோஷன் ஆகிறான் என்று புரியாமல் விழிக்க, “இனி இப்படிப் பண்ணினா ஸ்டேஷனுக்குக் கொண்டு போயி இருக்கற எல்லா கேசையும் உங்க மேல போட்டுடுவோம்… ஒழுங்கு மரியாதையா இருக்கற வழியைப் பாருங்க… படிக்கற பசங்களாச்சேன்னு சும்மா விடறோம்…” என்று அவர்களை அனுப்பி வைத்தான் வினோத்.
“டேய் விக்ரம்… சரி விடு டா… பீல் பண்ணாதே… இந்த சமூகம் இப்போ இப்படி தானே இருக்கு… நாம என்ன பண்ண முடியும்… கொஞ்சம் பொறுமையா இரு டா… முகத்தை கழுவிட்டு வா…” என்றான் நண்பனிடம்.
சற்று நிதானித்த விக்ரம், “இவன் தெரியாம செய்தேன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் பண்ணிட்டு போயிடறான்… எதுவுமே தெரியாம எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சு அந்தக் குடும்பமே ஒண்ணுமில்லாமப் போறதை நினைச்சுப் பார்த்திருப்பாங்களா…”
“ம்ம்… அதெல்லாம் நினைச்சுப் பார்த்தா இவனுங்க ஏன் இப்படி இருக்காங்க… சரி, வா…” என்று நண்பனை சமாதானப் படுத்தினான் வினோத்.
“ம்ம்… இந்த பூமியும் சூரியனும் எப்படி ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளே இயங்குதோ அது போல தான் மனுஷங்களும் ஒரு கட்டுப்பாட்டோட வாழணும்… அப்படி இல்லைன்னா இந்த சமூகம் இப்படித்தான் சீரழிஞ்சு போகும்…” என்றான் அழுத்தமான குரலில் விக்ரம்.
அவன் சொன்னதை திகைப்புடன் கேட்ட வினோத், “ஹூம்… நீ சொல்லுறதும் சரிதாண்டா… நீ ஏண்டா நிஜமாலுமே போலீஸ்ல சேரக் கூடாது… உன் மனசுல உள்ள காயத்துக்கு வடிகாலாவும் இருக்கும்… சட்டப்படி இந்த விஷயங்களை அதிகாரத்தோட அணுகவும் முடியும்… நீ டிரை பண்ணேன் டா…” என்றான்.
இதுவரை தனக்குத் தோன்றாத விஷயம்… நண்பன் சொன்னது போல முயற்சித்தால் தான் என்னவென்று யோசிக்கத் தொடங்கினான் விக்ரம்.
தன்மனம் கவர்ந்தவனின் வருகைக்காய் தன்னைப் பார்த்து பார்த்து அலங்கரித்துக் கொண்டிருந்த வினோதினியின் அழகிய முகம் கோபத்தில் சுருங்கியது.
“என்னடா சொல்லுறே… நீ சொல்லுறது நிஜமா…”
“ஆமாக்கா… இங்கே ஒரு வேலையா ரியல் எஸ்டேட் ஆபீசுக்கு வந்தேன்… அப்போ சத்யா சார் கார் வெளியே நின்னுட்டு இருந்துச்சு… அவர் தானான்னு பார்க்க வெளியே நின்னு கவனிச்சேன்… அப்பத்தான் தெரிஞ்சது… அவர் கல்யாணப் பத்திரிகை வைக்க வந்திருக்கார்னு…”
“ஓ… அது வேற யாருக்காவது வேண்டி அழைக்க வந்திருப்பாரோ… என்னவோ…” என்றாள் அவள் ஒரு நப்பாசையில். அவளது அழகிய பளிங்கு முகத்தில் அங்கங்கே பொடிப் பொடியாய் வியர்வைத் துளிகள் மின்னியது.
“அடப் போக்கா… எல்லாம் உறுதி பண்ணிட்டு தான் சொல்லறேங்கறேன்… நீ இன்னும் நம்பாம கேள்வி கேக்கறே… அவர் பத்திரிகையை கொடுக்கும்போது எனக்கு கல்யாணம்… நிச்சயமா வந்திருங்க, எல்லாரயும் கூப்பிடலை… ரொம்ப முக்கியமான ஆளுங்களை மட்டும் தான் கூப்பிடறேன்னு சொன்னாரே…” என்றான் எதிரில் அலைபேசியவன்.
அதைக் கேட்டதும் தொண்டைக் குழி உலர்ந்து விட நனைத்துக் கொண்டவள், “அவர் அப்படில்லாம் பண்ண மாட்டார்டா… எனக்கு நம்பிக்கை இருக்கு… இது வேற ஏதாவதா இருக்கும்…” என்றாள் மீண்டும் நம்பிக்கை இல்லாமல்.
“போக்கா… நான் சொல்லுறதை சொல்லிட்டேன்… இனி நம்பறதும் நம்பாததும் உன் இஷ்டம்… உன் வாழ்க்கை கேள்விக் குறியா மாறிடக் கூடாதேன்னு நல்ல எண்ணத்துல தான் சொல்லிட்டு இருக்கேன்… இனி உனக்கு தோணுற போல செய்…. சரி வச்சிடறேன்…” என்றவன் அலைபேசியை வைத்துவிட,  சிறிது நேரம் அப்படியே வைத்துக் கொண்டு மூளை மரத்துப் போய் நின்றிருந்தாள் வினோதினி.
மெல்ல யோசிக்கத் தொடங்கியவள் மனதில் பதட்டம் ஏறத் தொடங்கியது. அவளுக்குத் தெரிந்த ஒரு பையன் தான் அழைத்து இந்த விஷயத்தைக் கூறியிருந்தான். தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை சிணுங்கவும், சிதறிக் கொண்டிருந்த நினைவுகளுக்கு சீல் வைத்து பூட்டிவிட்டு மகளை எடுத்து சமாதானப்படுத்தத் தொடங்கினாள்.
“சங்கவி குட்டிக்கு பசிக்குதா… அழாதே டா குட்டி… அம்மா பால் எடுத்திட்டு வரேன்… குடிச்சிட்டு சமத்தா விளையாடுவிங்களாம்…” என்றவள் மகளை எடுத்துக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தாள். பாலைக் கலந்து பாட்டிலில் ஊற்றி மகளுக்குக் கொடுக்கத் தொடங்கியவளின் நினைவுகள் மீண்டும் சத்யாவை சுற்றி வரத் தொடங்கின.
சிறுவயதிலேயே தாயை இழந்து, வளர்ந்த பின்பு தந்தையும் இழந்த வினோதினி ஒரு செங்கல் சூளையில் கணக்கெழுதும் வேலைக்குப் போய்க் கொண்டிருக்கும்போது தான் அடிக்கடி வியாபார விஷயமாய் வரும் சத்யாவை சந்தித்தாள்.
எளிமையாய் இருந்தாலும் இயற்கையிலேயே பேரழகியான அவளுடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைக்காதா எனக் காத்திருந்தது பல ஆண்களின் கண்கள்.
சத்யாவின் அழகும், வசீகரமான பேச்சும் தோற்றமும் அவளுக்கும் அவனிடம் ஒரு பிடிப்பைக் கொடுக்க சரளமாய் பேசத் தொடங்கியவள் விருப்பத்துடன் பழகத் தொடங்கி இருந்தாள். அவளது கண்ணைப் பறிக்கும் அழகும், இளமையும் சத்யாவைக் கவர, அவளிடம் சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொண்டு நெருங்கிப் பழகத் தொடங்கினான். அவளுக்கும் அது பிடிக்கவே செய்தது.
யாருமில்லாத அநாதையாய் அன்புக்கு ஏங்கி, ஓநாய்களின் வேட்டையாடலுக்கு பயந்து ஒதுங்கி இருந்தவளின் மனதில் இதமான மழைச்சாரலாய் தோன்றினான் சத்யா. அவனது அன்பான பேச்சும், அக்கறையும் அவனுடனே இருக்க வேண்டுமென மனது ஏங்கத் தொடங்கியது.
ஒரு மழை நாளின் குளிர்மையில் அவர்களுக்குள் மூண்ட காதல் தீயின் வெப்பத்தில் அவனிடம் தன்னை இழந்தவளை தன் கட்டுக்குள் கொண்டு வந்து சில பல வாக்குறுதிகள் கொடுத்து ரகசியமாய் குடும்பம் நடத்தத் தொடங்கினான்.
கர்ப்பமானவள் திருமணத்திற்கு வற்புறுத்தத் தொடங்க அவனுக்கு தலைவலி தொடங்கியது. யாருக்கும் தெரியாமல் பேருக்கு ஒரு தாலியைக் கட்டி வேறு ஊரில் குடி வைத்திருந்ததால் ஊருக்கும் இவை தெரியாமலே இருந்தது.
தனை வளர்த்திய மாமன் மகள் இன்னும் கல்யாணம் முடியாமல் இருக்கையில் தன் கல்யாணம் பற்றிப் பேசுவது தவறென்று கூறியவன் அவள் கல்யாணம் முடிந்ததும் சமயம் பார்த்து தங்களை பற்றி சொல்லுவதாய் வாக்குக் கொடுத்திருந்தான். குழந்தைக்கு ஆறுமாதம் ஆகியும் இப்போதும் அதையே தான் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
இன்று சத்யா வருவதாய் கூறியிருந்ததால் அவனுக்காக காத்திருக்கும் போது தான் தனக்குத் தெரிந்த ஒரு பையனின் மூலம் காதை வந்தடைந்த செய்தியில் அரண்டு போயிருந்தாள் வினோதினி. எதிர்காலம் பெரிய கேள்விக் குறியாய் பயமுறுத்த சங்கவியைப் பார்த்துக் கொண்டே யோசித்தாள்.
“எத்தனை ஆசையாய் அவன் பெயரின் முதல் எழுத்தும் என் பெயரின் முதல் எழுத்தும் உன் பெயரில் வருவதற்காய் பார்த்துப் பார்த்து சங்கவி என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன்… கணவன் மனைவி, குழந்தை என அழகாய் ஒரு வாழ்க்கை வாழ எத்தனை கனவு கண்டிருப்பேன்… அதெல்லாம் பொய்த்துப் போய் விடுமா… நீயும் என்னைப் போல யாருமில்லாமல் நிராதரவாய் வளர வேண்டி வருமா…” கலங்கிய கண்களுடன் மகளைப் பார்த்தவள் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
“கூடாது… என்னோடு உன் வாழ்க்கையும் சீரழிந்து போக நான் விட மாட்டேன்… என்னை மனைவியாய் எல்லாரிடமும் அறிவிப்பதாய்க் கூறிவிட்டு இப்போது அவனது கல்யாணத்திற்கு எப்படி அழைப்பான்… இதில் உள்ள உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்… வரட்டும், இன்று இதைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும்…” என மனதுக்குள் உருவேற்றிக் கொண்டாள்.
குழந்தை பால் குடித்துவிட்டு மீண்டும் தூங்கத் தொடங்கி இருந்தது.
கல்யாணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்ததால் மெதுவாய் அந்த மனநிலைக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்ளத் தயாராகியிருந்தனர் இலக்கியாவின் வீட்டினர். தந்தையைப் பற்றி யோசித்துக் கொண்டு ஜன்னலில் சாய்ந்து நின்றிருந்த இலக்கியா பின்னில் அசைவு கண்டு திரும்பினாள். உள்ளே வந்த சத்யா அவளிடம் ஒரு செக் புக்கை நீட்டினான்.
“இளா… இதுல சைன் போடுடா… ஒரு பேமண்ட் அனுப்பணும்… அவன் நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டு நீட்டவும், “இரும்மா, இன்னும் இருக்கு…” என்றவன் அடுத்ததைக் காட்ட அதிலும் கையெழுத்திட்டுக் கொண்டே, “இதெல்லாம் நீங்களே பார்த்துக்கக் கூடாதா அத்தான்… என்கிட்டே எதுக்கு சைன் வாங்கறிங்க…” என்றாள் அந்த பேதைப் பெண்.
“என் டார்லிங்கு ஒரு சைன் போடக் கூட அலுப்பா இருக்கா என்ன… என்ன பண்ணுறது செல்லம், மாமா எல்லா விஷயத்துக்கும் நாமினியா உன்னைத் தானே போட்டிருக்கார்… நீதான் அவரோட சொத்துக்கு வாரிசு…” மனதுக்குள் பகையோடு உதடுகளில் சிரிப்பை புகைய விட்டான் அந்தக் கயவன்.
“ம்ம்… போங்க அத்தான்… இதெல்லாம் எனக்கு என்ன தெரியும்… கல்யாணம் முடிஞ்சதும் முதல் வேலையா இதெல்லாம் என் புருஷன் பேருக்கு மாத்தணும்…” என்றவளின் உதடுகளில் ஒரு ரகசியப் புன்னகை. அதைக் கேட்டதும் கடும் வெப்பத்தில் காஷ்மீர் போய் வந்தது போல மனது குத்தாட்டம் போட்டது அவனுக்கு.
“சரி டார்லிங்… நீ மாமாவைப் பத்தியே நினைச்சு உடம்பை வருத்திக்காம அத்தையையும் பாட்டியையும் கவனி… இப்படி நீ ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா அவங்க கவலைப் படுவாங்க… என்றவன், “நான் ஒரு முக்கிய வேலையா வெளியூர் கிளம்பறேன்…. நாளைக்கு வந்திருவேன்……” என்று கூறி விடைபெற்றான்.
எப்போதும் அவன் கிளம்புவதாய் சொன்னால் முகம் வாடி நிற்பவள், இன்று தந்தையின் பேச்சை அவன் எடுத்திட்டதால் அதிலேயே உழன்று கொண்டிருந்தாள்.
“தந்தை இருந்தால் என் கல்யாணத்துக்கு வீடு இப்படியா இருக்கும்… எப்படி கலகலப்புடன் இருந்திருக்கும்… எத்தனை சந்தோஷமாய் எல்லாத்தையும் செய்து கொண்டிருப்பார்…” கலங்கத் தொடங்கிய கண்களை கட்டுப்படுத்த முயன்றும் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியது.
அப்போது அங்கே வந்த அவளது பாட்டி, “ஏய் கருவாச்சி… நீ இப்படியே எப்பவும் அழுதுட்டு இருந்தா இந்தப் பிரதேசத்துல தண்ணிப் பஞ்சமே தீர்ந்திடும் போலருக்கு… கல்யாணப் பொண்ணா லட்சணமா சிரிச்ச முகத்தோட இரு… இப்படியே அழுமூஞ்சியா இருந்தே என் பேரனுக்கு நான் வேற பொண்ணைக் கட்டி வச்சிருவேன்… சொல்லிட்டேன்…” என்று அவளை மிரட்ட, சாதாரண மனநிலையில் இருந்தால் அவருக்கு ஏட்டிக்கு போட்டியாய் பேசுபவள் இன்று மௌனமாகவே இருந்தாள்.
“என்னடி கருப்பட்டி… நாக்கை அடமானம் வச்சுட்டியா என்ன, ஒண்ணும் பதில் பேசாம நிக்கறே…” என்று மீண்டும் வம்பிழுக்க, “ஏன் பாட்டி… உனக்கு வேலை இருந்தா பாரு…”
அமைதியாய் சொல்லிவிட்டு தோட்டத்துக்கு நடந்தவளை கவலையுடன் நோக்கியது அந்த ஒளி குறையத் தொடங்கிய கண்கள்.
கனவுகள் சுமக்க வேண்டிய கன்னியவள்…..
கவலைகளை சுமந்திருக்கிறாள்……..
நிகழ்வுகளில் விடுபட முடியாமல் 
நிதர்சனத்தின் தாக்கம் தாளாமல்
காதல் கண் கட்டு வித்தையில்
கட்டுண்டு கண்ணிழந்து கிடக்கிறாள்…….
விழித்துக் கொள்வாளா….. உண்மையின்
சூட்டில் நெஞ்சம் தகித்துக் கொல்வாளா…..
விடியலின் விடைக்காய் காத்திருக்கிறாள்…..

Advertisement