Advertisement

இலக்கணம் – 9
நிலவுத் தோழிக்கு நிச்சயதார்த்தம்….
நெஞ்சம் நிறைய வாழ்த்திடவே
நான் விண்மீன்கள் வாங்கி வந்தேன்….
உன் குறும்பாலும் குணத்தாலும்
எங்கள் மனம் நிறைத்தது போல்
நின் நெஞ்சம் நிறைந்தவர் மனதிலும்
புன்னகை தீபத்தை ஏற்றிவைப்பாய்…..
மணமகளாய்…. மனம் படிக்கும்
தோழியாய்….. தாயாய்….. தாரமாய்….
தமக்கையாய் எல்லாமுமாய்….
அரவணைக்க அவதாரம் எடுத்து
அன்பால் புது சாம்ராஜ்யம் அமைக்க
ஆவலோடு வாழ்த்துகிறேன் தோழி…..
ஆனந்தமாய் சுமங்கலியாய் அன்புப் பதியின்
ஆருயிரில் கலந்து நீடூழி நீ வாழ்க தோழி….
விக்ரம் எழுதி முடிக்கவும் அவனுக்குப் பின்னில் நின்று அதை வாசித்துக் கொண்டிருந்த வினோத்தின் மனம் நெகிழ்ந்தது.
“எப்படிடா….. உன்னால இப்படி இருக்க முடியுது…… உன் மனசுக்குப் பிடிச்ச பொண்ணு வேறோருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறா….. அந்த வேதனை கொஞ்சம் கூட இல்லாம அவளுக்கு வாழ்த்து எழுதிட்டு இருக்கே…..” என்றான் வினோத்.
“டேய் வினோ….. அவளை எனக்குதான் பிடிச்சது…… அவளுக்கு வேறொருத்தரை தான் பிடிச்சிருக்குன்னு வரும்போது நான் வேதனைப் பட்டு என்ன ஆகப் போகுது…… அவளுக்குப் பிடிச்சவரோட அவளாவது நல்லாருக்கட்டும்…… காதல்னா சுயநலமா தான் யோசிக்கணுமா என்ன….. நமக்குப் பிடிச்சவங்களோட சந்தோஷத்துக்காக நம்ம சந்தோஷத்தை விட்டுக் கொடுக்கறதும் காதல் தான்…… என்னோட வருத்தமோ, வேதனையோ அவளுக்கு சாபமா போயிடக் கூடாது…. அதான்…. அந்த நினைவுகளை அப்படியே ஒதுக்கி வச்சுட்டேன்….. அவ நல்லாருக்கட்டும்….” என்ற விக்ரமைப் பெருமையோடு பார்த்தான் வினோத்.
“விக்ரம்….. எத்தனை பக்குவமா யோசிக்கற டா…. உன்னை என் நண்பன்னு சொல்லவே ரொம்பப் பெருமையா இருக்கு….. உன்னை இழந்த அவ தான் பாவம்…..” என்றான் வினோ.
ஒரு நிமிடம் மௌனமாய் இருந்தவன், “வினோ…. வாழ்க்கை ஒவ்வொருத்தருக்கும் பல அனுபவத்தைக் கொடுக்குது….. அதுவே பக்குவப் படுத்தவும் செய்யும்….. எனக்கு வாழ்க்கை இழப்புகளை மட்டுமே கொடுத்திருக்கு….. என்னைப் போல போராட்டம் மட்டுமே வாழ்க்கையா இருக்குற ஒருத்தனோட கஷ்டப்படறதை விட சந்தோஷத்தை மட்டுமே வாழ்க்கையில் பார்த்திருக்குற இலக்கியாவுக்கு இனி அமையப் போற வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கட்டும்…… நான் மனசார  எழுதுனது தான் இது…..” என்றான் விக்ரம்.
“ம்ம்….. சரிடா…. தூங்கலாம் வா….. நாளைக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சு வந்ததும் ஊருக்குக் கிளம்பனும்ல……” என்றான் வினோத்.
“டேய்…. நான் உன்னோட வரணுமா டா….. உன் குடும்பத்துக்கு என்னால எதுக்கு சிரமம்…. நான் என் ஊருக்கே போயிடறேனே…..” என்றான் விக்ரம்.
“எதுக்கு… அங்கே போயி வீட்டுல தனியா உக்கார்ந்து பழசை எல்லாம் யோசிச்சு கலங்கிட்டு இருக்கவா….. அதெல்லாம் வேண்டாம்…. நீ என்னோட ஊருக்கு வர்றே….. கொஞ்ச நாள் அங்கே இருப்போம்…. நமக்கு வேலை சரியானதும் இங்கே வந்திடலாம்……” என்றான் வினோத்.
“ம்ம்…. சரிடா…. அப்புறம் உன் விருப்பம்…… பொக்கே ஆர்டர் பண்ணிருக்கேன்… போகும்போது வாங்கிட்டுப் போயிடலாம்…” என்றவன் அந்த வாழ்த்தை மடக்கி ஒரு கவரில் போட்டுவிட்டு உறங்க சென்றான்.
இலக்கியாவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காய் அழகாய் அலங்கரிக்கப் பட்டிருந்தது அந்த சின்ன மண்டமம். முன்னில் கம்பீரமாய் நின்ற வாழை மரமும், தோரணங்களும் கல்யாணக் களையைக் கொடுக்க முகம் நிறையப் புன்னகையும் பொன்னகையுமாய் வலம் வந்த உறவுப் பெண்களின் கூட்டம் அதை மெருகேற்றியது. அந்தப் பெரிய வீடு முழுதும் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் சுற்றத்தாரால் நிறைந்திருக்க பரபரப்பாய் வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார் இளமாறன்.
மணப்பெண்ணின் தாய்க்கே உரிய அழகுடன் வந்தவர்களை உபசரித்துக் கொண்டிருந்தார் லலிதா. வெகு நாட்களுக்குப் பிறகு கண்ட சொந்தங்களை குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார் பர்வதம். உறவுகளைக் கண்ட சந்தோசம் அவர் முகத்தில். குழந்தைகள் கலகலவென்று அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்க இலக்கியாவைத் தயாராக்கிக் கொண்டிருந்தனர், சில தோழியரும் பியூட்டிசியன் பெண் ஒருத்தியும்.
இளநீல நிற காஞ்சிபுர பட்டில் வேலைப்பாடுகள் மிகுந்த ஆண்டிக் நகைகளை அணிந்து அழகாய் மிளிர்ந்தாள் இலக்கியா. அவளது நிறத்திற்கு தகுந்தாற் போல் தேர்வு செய்யப்பட்டிருந்த புடவையும், நகைகளும் பாந்தமாய் பொருந்தி இருக்க, பியூடிசியனின் கைவண்ணத்தில் மணப்பெண் கோலத்தில் ஜொலித்தாள்.
அவளுக்கு அருகில் நின்று கிண்டலடித்துக் கொண்டே இருந்தாள் வீணா.                                   
“ஏய் இளா…….. என் அண்ணன் இன்னைக்கு அப்படியே ஹீரோ மாதிரி அழகா இருக்கார்டி….. நீ ரொம்பக் கொடுத்து வச்சவ….. நீ மட்டும் அவரைப் பார்த்தே… இன்னைக்கு நிச்சயம் வேண்டாம்… டைரக்டா கல்யாணமே வச்சிருங்கப்பான்னு சொல்லப் போறே… பாரேன்….” எனவும் அங்கிருந்த பெண்கள் எல்லாம் சிரிக்க, இலக்கியா நாணத்தில் தலை குனிந்தாள்.
“அட….. இதென்ன உலகத்தோட எட்டாவது அதிசயமா உனக்கு வெக்கம் கூட வருதே……” எனவும், “ஏய்….. சும்மாருடி…” என்று தோழியை அடக்கினாள் இலக்கியா.
“ம்ம்….. நீயும் இன்னைக்கு அம்மன் சிலை போல அழகா இருக்கே….. என் செல்லத் தோழிக்கு கண்ணு பட்டுடப் போகுது….” என்றவள் சின்னதாய் அவள் கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து விட்டாள். அப்போது உள்ளே வந்த லலிதா, “என்னம்மா….. இலக்கியா ரெடி தானே….. நிச்சயப் பத்திரிகை வாசிக்கப் போறாங்க….. அவளை மேடைக்கு அழைச்சிட்டு வாங்க….” என்றவர் ஒரு நிமிடம் மகளுக்கு முன்னில் நின்று அவள் அலங்காரத்தை சரி பார்த்து திருப்தியாய் புன்னகைத்தார்.
“என் செல்லம்….. அழகா இருக்கேடி…..” என்று கன்னத்தை வழித்துவிட்டு, “பார்த்து கூட்டிட்டு வாங்கம்மா….. ஏய்…. வீணா…. அவளோடவே இரு…..” என்று அவளுக்கு உத்தரவும் போட்டுவிட்டு வெளியே சென்றார்.
தோழிகளுடன் மேடைக்கு வந்து பெரியவர்களை நமஸ்கரித்து அமர்ந்தாள். அவளுக்கு முன்னமே வந்து அமர்ந்திருந்த அத்தானை அடிக் கண்ணால் ஆசையுடன் நோக்கினாள்.
“அட… அத்தான் பட்டு வேஷ்டி சட்டைல எவ்ளோ அழகா இருக்கார்….. அவருக்குப் பக்கத்துல நான் உக்கார்ந்தா கறுப்பு, வெள்ளையாத் தெரியுமோ….” என நினைத்தவள், “ஹூம்…. நானும் கறுப்பா இருந்தாலும் லட்சணமா அழகா தானே இருக்கேன்….. அப்புறம் என்ன…..” யோசித்துக் கொண்டே அவனைப் பார்த்துக் கொண்டிருக்க அவன் அவள் பக்கமாய் திரும்பி, என்ன என்பது போல புருவத்தை தூக்கினான். அதில் புன்னகைத்தவள் நாணத்துடன் குனிந்து கொண்டாள்.
அவள் கண்களில் எதிர்காலக் கனவுகளும், நிகழ்கால சந்தோஷமும் நிறைந்து வழிய அழகான ஜோடியாய் நின்று கொண்டிருந்தவர்களை விக்ரம் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
கல்லூரி நண்பர்களுடன் விக்ரமும், வினோத்தும் வந்திருப்பதைக் கண்ட வீணா அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். விழா தொடங்க, அடுத்த சுப முகூர்த்ததிலேயே கல்யாண முகூர்த்தம் குறித்த நிச்சயதார்த்த பத்திரிகை வாசித்து முடித்தனர். மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டதும் அனைவரும் கை தட்டி வாழ்த்தினர்.
அங்கு வந்த பர்வதம் பாட்டி பேத்தியின் கழுத்தில் ஒரு அழகான மாங்காய் மாலையை போட்டுவிட்டு, “என் பேத்திக்கு இந்த பாட்டியோட நிச்சயதார்த்தப் பரிசு….” என்று அவளைக் கட்டிக் கொண்டு நெற்றியில் முத்தமிட, “அப்போ எனக்கு இல்லியா பாட்டி…..” என்றான் சத்யா.
“உனக்கு தான் இந்த வைர சிலையையே பரிசா கொடுக்கிறோமே….. வேற பரிசு எதுக்கு…..” என்று அவர் கூறவும் இலக்கியா நாணத்துடன் குனிந்து கொள்ள அனைவரும் சிரித்தனர்.
அடுத்து ஒவ்வொருத்தரும் வாழ்த்துக் கூற, அதுவரை மனதுக்குள் பல உணர்ச்சி அலைகள் எழுந்தாலும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் இருந்த விக்ரமின் மனதில் சொல்லாமலே தோற்றுப் போன காதலின் வலி தோன்றி மறைந்தது. இலக்கியாவின் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் உற்சாகமும் அவள் மனத்தைக் கூற மெல்ல தன்னைத் தேற்றிக் கொண்டான்.
“டேய் விக்ரம்…. வாடா….. நாமளும் வாழ்த்திட்டு கிளம்பலாம்….” நண்பனையே பார்த்துக் கொண்டிருந்த வினோத்துக்கு அவனது மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.
நண்பனுடன் சென்ற விக்ரம் பொக்கேயை இலக்கியாவிடம் கொடுக்க அவள் புன்னகையுடன் நன்றி கூறி வாங்கிக் கொண்டு சத்யாவிடம் இவர்களை அறிமுகப் படுத்தி வைத்தாள்.
“அத்தான்….. இவர் விக்ரம்…. இவர் வினோத்….. எங்க சீனியர் பிளஸ் க்ளோஸ் பிரண்ட்ஸ்…..” என்றவளின் கண்ணில் சிரிப்பு வழிந்தது. அன்னை, தந்தையையும் அழைத்து அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தாள். அவர்களைப் பற்றி அவள் முன்னமே வீட்டில் கூறியிருந்ததால் அவர்களும் சந்தோஷத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். மற்ற நண்பர்களையும் அறிமுகப் படுத்தினாள்.
உணவருந்தி அனைவரும் கிளம்பத் தொடங்க விடை பெறுவதற்காய் வந்த விக்ரமும், வினோத்தும் ஊருக்கு செல்லப் போவதாகக் கூற, கல்யாணத்துக்கு கண்டிப்பாய் வர வேண்டும் என்ற கட்டளையுடன் விடை கொடுத்தாள் இலக்கியா.
விழா நல்லபடியாக நடந்து முடிந்ததில் அனைவரின் மனமும் நிறைந்திருந்தது. எந்த கல்யாணம் மண்டபம் என்று முன்னமே முடிவு செய்திருந்ததால் முன்தொகை கொடுக்க சென்றார் இளமாறன்.
அடுத்து வந்த நாட்களில் இலக்கியா கல்யாண கனவுகளில் மூழ்கியிருக்க, நகை, துணிமணிகள், விருந்து என்று பெற்றோர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். வீட்டில் எந்த நேரமும் கல்யாணப் பேச்சாகவே இருந்தது. எந்த மாதிரி துணி உடுக்கலாம்….. நகை அணியலாம்…. என இலக்கியா யோசித்துக் கொண்டிருக்க வீணாவுடன் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.
அன்று காலையில் முதல் கல்யாணப் பத்திரிகையை குலதெய்வம் கோவிலில் வைத்து பூஜை செய்துவிட்டு வந்திருந்தனர்.
வெளியே கிளம்பிக் கொண்டிருந்த இளமாறன், “லலி…… இன்னைக்கு மதியத்துக்கு மேல நம்ம மணி ஐயர் வரேன்னு சொல்லி இருக்கார்….. அவர்கிட்டே லிஸ்ட் கொடுக்கணும்….. அப்புறம் நாளைக்கு நகைக்கடைக்கு போயி ஆர்டர் கொடுத்திட்டு வந்திடலாம்……. இளாவை காலைல தயாரா இருக்க சொல்லு….. அங்கே முடிச்சிட்டு துணிக்கடைக்கு போயிட்டு வந்திடலாம்….. இந்த வேலை எல்லாம் முதல்ல முடிச்சுட்டா அப்புறம் பத்திரிகை வைக்கற வேலையைப் பார்த்துக்கலாம்…..” என்றார்.
“ம்ம்… சரிங்க…… மாப்பிள்ளையும் கூட வந்தா அவருக்குப் பிடிச்ச போல எடுத்திடலாமே….. அவரையும் வர சொல்லுங்களேன்…..” என்றார் லலிதா.
“மாப்பிள்ளைக்கு நாளைக்கு எதோ வேலை இருக்குன்னு சொன்னார்….. அவர் பிரண்ட்சோட போயி அவருக்குப் பிடிச்ச போல எடுத்துக்கட்டும்….. நாம போயிட்டு வந்திடலாம் மா……” என்றார் அவர்.
“ஓ, அப்ப சரிங்க…. போயிட்டு வந்திடலாம்……” சம்மதித்தார் லலிதா.
“ம்ம்…. நம்ம உறவுக்காரங்க யாருக்கெல்லாம் டிரஸ் எடுக்கணும்னு அம்மாவும் நீயும் லிஸ்ட் போட்டு வைங்க….. யாருக்கும் எந்தக் குறையும் இல்லாம திருப்தியா கல்யாணத்தை நல்லபடியா முடிக்கணும்…..” என்றவரைக் கண்டு சிரித்தார் லலிதா.
“எல்லாம் நல்லபடியா நடக்குங்க…. நீங்க பதட்டப் படாம இருங்க….”
“நமக்கு இருக்குறது ஒரே பொண்ணு…. அவ கல்யாணத்தை நம்ம சொந்த பந்தமே அசந்து போகுற அளவுக்கு நல்லபடியா நடத்தணும்…. அதான் என் ஆசை…..” என்றவரின் அருகில் வந்தவர், “அதெல்லாம் நம்ம கருப்பராய சாமி நல்லபடியா முடிச்சுக் கொடுப்பாருங்க… நீங்க பயப்படாம இருங்க…” என்றார் லலிதா.
“ம்ம்… சரிம்மா… நாளைக்கு இந்த வேலையை முடிச்சிட்டு வந்துதான் எல்லாருக்கும் பத்திரிகை கொடுக்கத் தொடங்கணும்… இன்னும் ஒரு மாசம் தானே இருக்கு…” பரபரத்தார் இளமாறன்.
“சரிங்க…. எல்லாம் பண்ணிடலாம்….. நீங்க டென்ஷன் ஆகாம இருங்க….” என்றார் லலிதா.
“சரி லலி,….. நான் போயிட்டு வந்து மத்ததெல்லாம் பேசிக்கலாம்…. வர்றேன்…..” என்றவர் கிளம்பினார். அடுத்து வந்த நாட்களில் அவர் சொன்னது போல துணி, நகை எல்லாம் வாங்கி முடித்து பத்திரிகை வைக்கத் தொடங்கி விட்டார்.
“பத்திரிகை ரொம்ப அழகா வந்திருக்கு இளாம்மா…..” மகள் ஆவலோடு பத்திரிகையைப் பார்ப்பதைக் கண்டவர் கேட்கவும் அவள் சிரித்தாள். “என் அப்பா செலக்சன் எப்பவுமே நல்லாதான் இருக்கும்…. என்றாள் புன்னகையுடன்.
“ஹூம்…. என் பையனை நான் அப்படி நல்ல விதமா வளர்த்திருக்கேன்……” என்றார் பர்வதம் பெருமையுடன்
“உயர்திரு வெள்ளச்சி அவர்களே…. நீங்க உங்க வாழ்க்கைல செய்த மிகப் பெரிய நல்ல காரியமே என் அப்பாவைப் பெத்தெடுத்தது தான் தெரியுமா…. அடுத்த சாதனை என் அம்மாவை அவருக்குக் கல்யாணம் பண்ணி வச்சது…..” என்று அவரை வாரினாள் இலக்கியா.
“என்னடா… பாட்டியை இப்படில்லாம் பேசக் கூடாது… என்று தந்தை அடக்கவும், “கருவாச்சிக் கழுதை பேசிட்டுப் போகட்டும்… இவ கல்யாணம் முடிஞ்சதும் என் பேரன் கிட்டே சொல்லி அந்த கருவாயைத் தைக்க சொல்லறேன் பாரு…” என்று முறைத்தார் பர்வதம்.
“ஹஹா….. உங்க ரெண்டு பேருக்கும் இதே வேலை தான்….. சரி… உன் பிரண்ட்சுக்கு அழைக்க பத்திரிகை வேணும்னு சொன்னியே…. இந்தா……” என்று அவள் கேட்ட பத்திரிகையைத் தனியே எடுத்துக் கொடுத்தவர்,
“மாப்பிள்ளைக்கும் பிரிச்சுக் கொடுத்திட்டா அவரும் கொடுக்கத் தொடங்கிடுவார்…… சரி… நான் குவாரிக்குப் போயி அவர்கிட்டே கொடுத்திட்டு கிளம்பறேன்….. லலி….. கொஞ்சம் தண்ணி எடுத்திட்டு வாம்மா…..” என்றார் அடுக்களையை நோக்கி.
“இதோ வரேங்க…..” என்றவர் அவசரமாய் தண்ணீர் எடுத்து திரும்பவும் அங்கிருந்த மிதியடி இடறியதில் கால் தவறி கீழே விழப் போனார். அவர் கையிலிருந்த தண்ணீர் சொம்பு கீழே உருண்டு விழுந்து சளாரென்று அவர் முகத்திற்கு தெறித்த தண்ணீர் குங்குமத்தில் பட்டு வழிந்தது.
சத்தம் கேட்டு இளமாறனும், இலக்கியாவும் பதட்டத்துடன் அடுக்களைக்கு ஓடி வந்தனர்.
முகத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டவர், “ஒண்ணும் இல்லைங்க…… சொம்பு கீழே விழுந்துடுச்சு….” என்று மறுபடியும் தண்ணியை எடுத்து நீட்டினார்.
“ம்ம்… உனக்கு ஒண்ணும் இல்லியே……” என்று மனைவியை அளந்து கொண்டே கேட்டார் இளமாறன்.
“எனக்கு ஒண்ணும் இல்லைங்க…. நீங்க தண்ணி குடிங்க….” என்றதும் அவர் குடித்துவிட்டு ஹாலுக்கு செல்ல அடுக்களையில் துணியைப் போட்டுவிட்டு ஹாலுக்கு வந்தார் லலிதா.
“என்னம்மா….. கவனமா செய்யுறதில்லையா….. கால்ல விழுந்திருந்தா என்னாகியிருக்கும்…..” என்று கேட்டுக் கொண்டே பின்னால் வந்தாள் இலக்கியா.
“ம்ம்…… கை தவறிடுச்சுமா….. என்னங்க…. நீங்க கிளம்பும்போது வீடியோ கிராபரை பார்க்கப் போகணும்…. ஞாபகப்படுத்த சொன்னிங்களே…..” என்று கணவரிடம் கூறவும், “ம்ம்…… பார்த்தியா…… மறந்தே போயிட்டேன்…. சரிம்மா…. நான் சொல்லிட்டுப் போறேன்…..” என்றவர் கிளம்பினார்.
அவர் சென்றதும் ஏதோ சொல்வதற்காய் மருமகளிடம் திரும்பிய பர்வதம், லலிதாவின் நெற்றியில் தண்ணீருடன் கலங்கி கீழே வழிந்து கொண்டிருந்த குங்குமத்தைக் கண்டு அதிர்ந்தார்.
“என்னடி இது…… உன் குங்குமம் இப்படிக் கலஞ்சு கிடக்கு…. போயி முதல்ல சரி பண்ணிட்டு வா…..” என்று விரட்டினார்.
அதைக் கேட்டதும் திகைத்த லலிதா முகத்தை முந்தானையால் அழுந்த துடைத்துக் கொண்டே கண்ணாடியிடம் சென்றார். குங்குமம் கலைந்த நெற்றி மனதை உறுத்த வேகமாய் குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டார்.
“கடவுளே…. இது என்ன அபசகுனமா இருக்கு…. ஏதும் கெட்டது நடந்திடாம நீதான் காப்பாத்தணும் சாமி….” மனதார வேண்டிக் கொண்டார்.

Advertisement