Advertisement

இலக்கணம் – 7
மதிய உணவு முடிந்து மரத்தடியில் ஏதோ சூன்யத்தில் கண்ணைப் பதித்து யோசனையில் அமர்ந்திருந்த விக்ரம், அருகில் தயக்கத்துடன் ஒலித்த குரலில் திரும்பினான். இலக்கியாவும், வீணாவும் தயங்கிக் கொண்டே அவனுக்கு முன்னில் வந்து நின்றனர்.
                                
இலக்கியாவின் விலாவில் இடித்த வீணா, “ஏய்…. சொல்லுடி…..” என்று தோழியின் காதைக் கடித்தாள்.
“உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்ல வந்தேன்……” என்றாள் இலக்கியா. அவளை வியப்புடன் பார்த்தவன், “என்கிட்டே என்ன சொல்லணும்…..” என்றான்.
“கொஞ்சம் சாரி…. ஒரு தேங்க்ஸ் சொல்ல வந்தேன்……” என்றவள் அவனை நோக்கி சிநேகமாய் புன்னகைத்தாள். கறுத்த மேகத்தில் பளீரென்று மின்னிய மின்னலைப் போல பளபளத்தது அவளது அழகான முத்துப் பற்கள். திகைத்தவன் அவர்களைப் புரியாமல் நோக்கினான்.
“எதுக்கு சாரி…… எதுக்கு தேங்க்ஸ்….” புருவத்தை மேலேற்றிக் கொண்டே கேட்டான் அவன்.
“இவ ஒருத்தி…… குண்டக்க மண்டக்க பேசிகிட்டு….. என்ன சொல்ல வந்தமோ அதை நேரடியா பேசித் தொலையேன்டி……” என்றாள் வீணா.
“நான் பேசிக்கறேன்…. நீ கொஞ்சம் அடங்கு….” தோழியை அடக்கியவள், “நீங்க சாப்பிட்டிங்களா விக்ரம்…..” என்றாள்.
“அய்யய்யோ….. இவ என்ன சாரி கேக்க வந்துட்டு வில்லங்கம் பண்ணிட்டு இருக்கா…. ஒரு சீனியரைப் போயி பேர் சொல்லிக் கூப்பிடறா….. அந்தண்ணாக்கு கோபம் வந்திருச்சுன்னா என்ன பண்ணறது…..” என்று பதட்டத்துடன் அவர்களைப் பார்த்திருந்தாள் வீணா. அவள் இயல்பாய் அவனிடம் பேசியது அவனுக்கு பிடித்திருந்தது. அவனது இதழ்களில் சிறு புன்னகை ஒட்டிக் கொள்ள, தலையசைத்தான்.
“சாப்பிட்டேன்….. என்ன விஷயமா பேசணும்….. எதுக்கு இந்த சாரி, தேங்க்ஸ் எல்லாம்…. அதை சொல்லலையே….” என்று விஷயத்துக்கு தாவினான்.
“அது வந்து….. உங்களைப் பத்தி சரியா தெரிஞ்சுக்காம சில சம்பவத்தில் உங்க செயல்களை வச்சு நானே ஒரு அவுட்லைன் கொடுத்து ரவுடின்னு என் மனசுல முத்திரை குத்தி வச்சுட்டேன்……. அது தப்புன்னு இப்போ புரிஞ்சிடுச்சு அதுக்கு தான் சில சாரிகள்….” என்று சிரித்தாள் இலக்கியா.
அவள் பேசியதைக் கேட்டு ஆச்சர்யத்துடன் புருவத்தை மேலே தூக்கியவன், அவளது பழைய முகபாவத்தை நினைவில் கொண்டு வந்து அவள் மனதைப் புரிந்து கொண்டான். அவளது குறும்புத்தனமான வெளிப்படையான பேச்சு அவனுக்கு சிரிப்பை வரவழைக்க, “ஓ….. அது சரி….. அப்ப இந்த தேங்க்ஸ் எதுக்கு….” என்றான் சின்ன சிரிப்புடன்.
அவள் பேசியதைக் கேட்டு விக்ரம் கோபம் கொள்வான் என எதிர்பார்த்திருந்த வீணாவின் எதிர்பார்ப்பு வீணாய்ப் போக அவர்களை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
“தேங்க்ஸ் எதுக்குன்னா, எங்க தப்பை மன்னிச்சு பிரண்ட்ஸா ஏத்துக்கப் போறீங்கல்ல…… அதுக்குதான்….. சரிதானே வீணா….” என்று தோழியையும் சேர்த்துக் கொள்ள அவள் முழித்துக் கொண்டிருந்தாள். அவனது இதழ்களில் சிரிப்பு பெரிதாக, “நாம பிரண்டாகப் போறோம்னு எப்படி முடிவுக்கு வந்திங்க…..” என்றான் அவன்.
“விக்ரம்னு பேர் வச்சிருக்கவங்க ஈசியா பிரண்டா -கிருவாங்கன்னு நட்பிலக்கணத்தில் சொல்லிருக்காங்களே…. அதை வச்சு தான் முடிவு பண்ணினேன்……” என்றாள் அவளும் சிரிப்புடன்.
அவன் வியப்புடன் நோக்கி நிற்க, “பிரண்ட்ஸ்….” என்று கையை நீட்டினாள் இலக்கியா. அவனும் சிரிப்புடன் அவள் கையில் மெதுவாய் தட்டி நட்பை ஏற்றுக் கொண்டான்.
“அப்போ நானு…..” என்றாள் வீணா பாவமாக.
“இவ ஒரு வீணாப் போனவ…. நீயும் தாண்டி….” என்று அவளையும் சேர்த்துக் கொண்டாள் இலக்கியா. அதற்குப் பிறகு பொதுவாய் அவர்களைப் பற்றிய சில விவரங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். அதற்குள் வினோத்தும் அங்கே வர, அவனையும் நட்பு வளையத்துக்குள் இணைத்துக் கொண்டனர். எதார்த்தமான இயல்பான இலக்கியாவின் பேச்சு அவனை சாதாரணமாய்ப் பேச வைத்தது.
நாட்கள் அழகாய் நகர்ந்து செல்ல, அவர்களுக்குள் இருந்த நட்பின் பிணைப்பு அழகாய் மெருகேறியது. விக்ரத்தை பழைய விஷயங்களைப் பற்றி யோசித்து தனிமையில் வெம்ப விடாமல் வம்படியாய் தங்களுடன் சேர்த்துக் கொள்வாள் இலக்கியா. முதலில் தயங்கி ஒதுங்கி செல்ல முயன்றவன், விடாப் பிடியான அவளது நேசத்தில் கட்டுப்பட்டு நட்போடு பழகத் தொடங்கினான்.
ஒருநாள் வினோத்துடன் பேசிக் கொண்டிருக்கும்போது அடுத்த நாள் விக்ரமின் பிறந்த நாள் என்று தெரிந்து கொண்டவள் அவனை கட்டாயப் படுத்தி கோவிலுக்கு அழைத்துச் சென்றாள். வீட்டில் இருந்து அவனுக்காய் மதிய உணவு கொண்டு வந்து கொடுத்தாள். அவளுடைய அக்கறையும், அன்பும் இழந்த சொந்தங்களை நினைவு படுத்தியது.
கவிதையில் தொடங்கி கதையில் வளர்ந்து சமூக அவலங்கள் வரை மனம் திறந்து பேசினர். கருத்து சொல்லத் தெரியாமல் விழித்த வீணாவை கலாய்ப்பதையும் விடவில்லை. தன்னுடைய நிறத்தை பற்றி ஒவ்வொருத்தரும் கிண்டல் செய்வதை அவனிடம் கூறும் போதெல்லாம் “நிறம் குணம் அல்ல…. குணத்தில் அவர்களை விட உயர்ந்தவள் நீ……” என்று பாராட்டுவான். ஆத்மார்த்தமான அன்புடன் பழகியவனை இலக்கியாவுக்கும் பிடித்தது.
அவளது கலகலப்பும், அக்கறையும், தைரியமும் விக்ரமின் ரணமான மனதை மயிலிறகாய் வருடிச் செல்லத் தொடங்கியது. அவளது அருகாமையில் தனது வேதனைகளை தொலைக்கப் பழகி இருந்தான். நண்பனின் மனநிலை இலக்கியாவின் நட்பால் வெகுவாய் மாறி இருப்பதை அறிந்து வினோத்துக்கும் சந்தோஷமாய் இருந்தது. யாரிடமும் அதிகம் பழகாமல் ஒதுங்கி இருந்தவன் இலக்கியாவிடம் இயல்பாய் பழகியது அவனுக்கும் ஆறுதலாய் இருந்தது. நண்பனின் மனதில் அவள் மீதிருந்த நட்பூ காதல் பூவாய் மலர்ந்து மணக்கத் தொடங்கியதை உணர்ந்து கொண்டான்.
எதிர்காலத்தைப் பற்றிய நினைவுகள் ஏதுமின்றி இருந்தவனின் மனதில் இலக்கியாவின் வரவு பசுமையாய் நம்பிக்கையை விதைத்துச் செல்வதை அவளைப் பற்றி விக்ரமிடம் பேசும்போது புரிந்து கொண்டான். அவர்களது இறுதி செமஸ்டர் நெருங்கிக் கொண்டிருந்ததால் படிப்பில் கவனத்தை செலுத்தத் தொடங்கினர். புத்தகத்தைப் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்த விக்ரமின் தோளில் கை வைத்த வினோத், என்னடா படிக்கும்போதும் சிரிச்சிட்டு இருக்கே….. அதுல அப்படி என்ன ஜோக் இருக்கு…. என்றான் சிரித்துக் கொண்டே.
“அ… அது வந்து…. ஒண்ணுமில்லடா…… நம்ம இலக்கியா எவ்ளோ குறும்பா, கலகலப்பா இருக்கால்ல…. நேத்து அவ பாட்டிகூட பேசி சண்டை போட்டுட்டு இருந்ததை சொல்லிட்டு இருந்தா…. பாட்டிங்க இப்படில்லாம் கூட சண்டை போடுவாங்களா……” என்றான் சிரித்துக் கொண்டே.
“ம்ம்… அவ பாட்டியும் இவளைப் போலவே குறும்புப் பாட்டியா இருக்கும்…. அப்படி என்ன பேசி சண்டை போட்டாங்களாம்…..” என்றான் வினோத்.
அவள் சொன்னது நினைவில் வந்ததும் சிரித்தவன், “நேத்து இலக்கியா வீட்டுக்குப் போகும்போது வெண்ணிலா, சாக்கலேட் ரெண்டு பிளேவர்லயும், ஐஸ்க்ரீம் வாங்கிட்டுப் போனாளாம்….. அம்மா வேண்டாம்னு சொல்லிட்டங்களாம்…. அவ பாட்டிக்கு எது வேணும்னு கேட்டதுக்கு, ரெண்டையும் பார்த்துட்டு உன்னை மாதிரி கருப்பா இருக்குற சாக்கலேட் ஐஸ்க்ரீமை நீயே வச்சுட்டு, என்னை மாதிரி வெள்ளையா இருக்கற வெண்ணிலா ஐஸ்க்ரீமை எனக்குக் குடுன்னு சொன்னாங்களாம்….. அதைக் கேட்டதும் இலக்கியாவுக்கு சிரிப்பு வந்திருச்சாம்….. இருந்தாலும் அவ பாட்டிகிட்டே விட்டுக் குடுக்காம, இப்படி சொல்லிட்டேல்ல…. உனக்கு ஐஸ்க்ரீமே கிடையாதுன்னு எடுத்துட்டு போயி தனியா சாப்பிட்டாளாம்…… ஹஹா…. இந்த மாதிரி வீட்டுல ஒருத்தங்க இருந்தா எப்படி கலகலப்பா இருக்கும்ல…….” என்றான் ஏக்கத்துடன்.
“ஹஹா…. ம்ம்….. இலக்கியா இருக்குற இடத்துக்கு கலகலப்புக்கு பஞ்சம் ஏது… அவ பாட்டியும் அவளைப் போலவே தான் போலருக்கு….” என்றவன் சிரித்துக் கொண்டிருந்த நண்பனையே ஒரு நிமிடம் உற்று நோக்கினான்.
“விக்ரம்…… நான் ஒண்ணு கேட்டா மறைக்காம உண்மைய சொல்லணும்…. சொல்லுவியா…..” என்றான்.
“என்னடா…. உனக்குத் தெரியாத ரகசியமாய் என் வாழ்க்கைல என்ன இருக்கு…. இப்படில்லாம் கேக்கறே….. கேளு….” என்றான் விக்ரம்.
“ம்ம்… நீ இலக்கியாவை விரும்பறியா…….” என்றான் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு. அவனது நேரடியான கேள்வியில் சட்டென்று யோசனையாய் மாறியது விக்ரமின் முகம்.
“எ…. எனக்குத் தெரியலைடா….. ஆனா அவ என் பக்கத்துல இருந்தா என் மனசு எந்தக் கவலையும் இல்லாம அமைதியா இருக்கு….. நமக்கும் வாழ்க்கை ஏதோ வச்சிருக்கு போலருக்குன்னு ஒரு நம்பிக்கை வருது….. அவளோட பேச்சைக் கேட்டுட்டே இருக்கணும் போலத் தோணுது….. அவளோட சுபாவம் ரொம்பப் பிடிச்சிருக்கு….. அவ என் வாழ்க்கைல வந்த பிறகு என் மனசுல நிச்சயமா ஒரு வெளிச்சம் வந்திருக்கு…. இப்படில்லாம் தோணுறதுக்குப் பேர் தான் காதலான்னு எனக்குத் தெரியலைடா…” என்ற நண்பனை ஆதரவாய் தோளில் கை வைத்தான் வினோத்.
“ஹஹா…. இதுக்குப் பேர்தாண்டா காதல்…… உன் வாழ்க்கை இப்படியே பாலைவனமா முடிஞ்சு போயிருமோன்னு வருத்தப்பட்டேன்…. உன் மனசையும் சோலைவனமா மாத்திட்டா இலக்கியா…… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா…. நீ அவகிட்டே உன் விருப்பத்தை சொல்லு… உங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி சிந்தனைகள்….. ரெண்டு பேரும் வாழ்க்கைல சேர்ந்தா ரொம்ப நல்லாருப்பிங்க……” என்றான் மனதார.
அதைக் கேட்டதும் விக்ரமின் முகம் மலர்ந்து உடனே யோசனையாய் மாறியது. அதைக் கண்ட வினோத், “என்னடா….. என்ன யோசிக்கறே……” என்றான்.
“ஒருவேளை, இலக்கியா என் வாழ்க்கைல நடந்த கசப்பான வேதனைகளை எல்லாம் நினைச்சு பரிதாபப்பட்டுதான் என்கிட்டே அன்பாப் பழகுறாளோ….. யாருமில்லாம அனாதையா நிக்குற என்னோட வாழ்க்கைல வரதுக்கு அவளுக்குப் பிடிக்குமாடா……” என்றான் வருத்ததுடன்.
அவன் தோளில் தட்டிய வினோத், “டேய்… நீயா எதையாவது நினைச்சு கற்பனை பண்ணிக்காதே…… உன் மனசுல உள்ளதை இலக்கியா கிட்டே சொல்லு….. அவளுக்கும் உன் மேல் ஒரு விருப்பம் இருக்குன்னு தான் நினைக்கறேன்….. அவளுக்கு இதுல விருப்பம் இல்லைன்னா நட்பை மட்டுமே தொடர்ந்துட்டு இந்த எண்ணத்தை வளர விட வேண்டாம்ல…… நீ அவகிட்டே பேசு…..” என்றான் யோசித்துக் கொண்டே.
“ம்ம்….. சரி டா….. இப்போ இதைப் பத்தி பேச வேண்டாம் செமஸ்டர் முடியும்போது அவகிட்டே பேசறேன்…..” என்றவனின் முகத்தில் ஒரு மென்னகை மலர்ந்தது.
“ம்ம் சரிடா…… உனக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்….. இப்ப படிப்போம்….” என்றுவிட்டு தானும் படிப்பதற்காய் அமர்ந்தான் வினோத். விக்ரமின் மனதில் பளீரென்ற சிரிப்புடன் அழகாய் சிரித்தாள் இலக்கியா.
“ஹலோ மிஸ்டர் விக்ரம்…. எதுக்கு இந்த லுக்கு….. ஒழுங்கா படிச்சு செமஸ்டரை முடிங்க…. இதைப் பத்தியெல்லாம் அப்புறம் பேசலாம்….” என்று அவள் கண்ணை உருட்டி, விரலை ஆட்டி மிரட்டுவது போலத் தோன்ற சிரித்துக் கொண்டே புத்தகத்தில் கண்ணைப் பதித்தான் அவன்.
செமஸ்டர் நடந்து கொண்டிருந்ததால் இலக்கியா பிஸியாய் படித்துக் கொண்டிருந்தாள். படிப்பு முடிந்ததும் சத்யாவுடன் அவளுக்கு கல்யாணம் என்பது போன்ற பேச்சுக்கள் அவ்வப்போது அவள் காதை அடைந்து குஷியாக்கிக் கொண்டிருந்தன. மனதுக்குள் அவ்வப்போது உணர்ந்த சந்தோஷச் சாரலை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு மனதை படிப்பில் செலுத்தினாள். இறுதித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.
ஹாலில் பேப்பரில் கண்ணைப் பதித்திருந்த இளமாறனின் முன்னில் வந்து அமர்ந்த பர்வதம், “என்னப்பா…… குவாரிக்குக் கிளம்பலையா……” என்றார்.
“ம்ம்… கிளம்பணும் மா….. சத்யா தான் குவாரில இருக்கான்ல….. அவன் வந்தபிறகு போகலாம்னு இருக்கேன்….” என்றார் அவர்.
“ம்ம்…. இன்னும் என்ன, மருமகனா வரப் போறவனை பேரச் சொல்லி கூப்பிட்டு இருக்கே…… அழகா மாப்பிள்ளைன்னு சொல்ல வேண்டியது தானே….” என்றார் சிரிப்புடன்.
“ஹஹா… சின்ன வயசுல இருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளையாச்சே…. அதான் சட்டுன்னு மாத்திக்க முடியலைம்மா…. முயற்சி பண்ணறேன்….” என்றார் அவர்.
“ம்ம்…. என் பேத்திக்கு தான் பரீச்சை முடியப் போவுதுல்ல…… இன்னும் எதுக்கு காத்திட்டு இருக்கணும்…. சட்டுபுட்டுன்னு நம்ம குடும்ப ஜோசியரை வர சொல்லி நிச்சயத்துக்கு நாள் குறிச்சிடலாம்ல…..” என்றார்.
“ம்ம்… பண்ணிடலாம்மா…. அதுக்கு முன்னாடி அவங்க ரெண்டு பேருக்கும் இதுல விருப்பம் தானான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லிக்கலாம்னு பார்க்கறேன்….” என்றார் அவர்.
“ம்ம்… நம்ம பொண்ணுக்கு விருப்பம் தாங்க….. அவதான் அத்தான் மேல உசுரையே வச்சிருக்கால்ல…… நீங்க மாப்பிள்ளை கிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு ஜோசியரை வர சொல்லிடுங்க…. சீக்கிரமே நிச்சயத்துக்கு நாள் குறிச்சிடலாம்…..” என்றார் காபியுடன் வந்த லலிதா.
“ம்ம்… இருந்தாலும் என் பொண்ணுகிட்டே ஒரு வார்த்தை கேட்டுடறேன்….” என்றவர், “இளாம்மா… இங்க வாடா……” அவளது அறையை நோக்கி. அழைத்தார். அவர்கள் பேசுவதை உள்ளிருந்து கேட்டுக் கொண்டு மனதுக்குள் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தவள், தந்தையின் குரலைக் கேட்டு தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு அமைதியாய் ஹாலுக்கு சென்றாள்.
“என்னப்பா…. கூப்பிட்டிங்களா……”
“ஆமாண்டா…… உன் பரிச்சை முடிஞ்சதும் உனக்கும், அத்தானுக்கும் கல்யாணம் பேசலாம்னு அம்மாவும், பாட்டியும் ஆசைப் படுறாங்க….. உனக்கு இதுல விருப்பம் தானே டா….. இல்லேன்னா தயக்கமில்லாம அப்பாகிட்டே சொல்லிடு…..” என்றார்.
அதைக் கேட்டதும் குப்பென்று அவள் முகத்தில் ரத்தம் பாய நாணத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள்.
ஒரு நிமிடம் நிதானித்தவள், “உங்களுக்கு என்ன விருப்பமோ செய்யுங்கப்பா….. நீங்க எனக்கு எது செய்தாலும் நல்லதா தான் இருக்கும்….” என்று நல்ல மகளாய் வசனம் பேசிவிட்டு பாட்டியைப் பார்த்து கண்ணைச் சிமிட்டிவிட்டு அறைக்குள் ஓடி விட்டாள்.
“ம்ம்… அதான் உன் செல்லப் பொண்ணே சம்மதத்தை சொல்லிட்டுப் போயிட்டால்ல….. நடக்க வேண்டியதைப் பாரு….” என்றார் பர்வதம்.
“ம்ம்… சரிம்மா….. உங்க விருப்பம் போலவே பண்ணிடலாம்…. சத்யாகிட்டையும் பேசிட்டு நான் நம்ம குடும்ப ஜோசியரை வர சொல்லறேன்……” என்றார் இளமாறன். அதை அறைக்குள் இருந்து கேட்டுக் கொண்டிருந்த இலக்கியாவின் மனம் துள்ளிக் குதித்தது.
“அய்யய்யயோ….. ஆனந்தமே……
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே…..
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே…..
காதல் போடும் தூரலில்
தேகம் மூழ்கிப் போகுதே……”
ஆனந்தமாய் பாடிக் கொண்டிருந்தவள், கதவு திறக்கப்படும் ஓசை கேட்டதும் அமைதியாய் அமர்ந்தாள். அவளுக்குப் பின்னால் வந்து நின்ற பர்வதம், “என்னடி கருவாச்சி….. நான் சொன்னது என்னாச்சு…. உனக்கும் என் பேரனுக்கும் தான் கல்யாணம் முடிவாச்சி…….” என்று ராகமாய் பாட அவள் வெட்கத்தில் சிரித்தாள்.
பேத்தியின் கன்னத்தை வழித்த பர்வதம், “என் பேத்தி உண்மைலேயே கருப்பு ஐஸ்வர்யாராய் தானாக்கும்… இந்தக் கருப்பு வைரத்தைக் கட்டிக்க என் பேரன் கொடுத்து வச்சிருக்கணும்…..” என்றதும், முதன் முதலாய் பாட்டி தன்னை உயர்த்திக் கூறிய வார்த்தையில் நெகிழ்ந்து போனவள்,
“பாட்டி……” என்று அவரைக் கட்டிக்கொண்டாள்.
குறும்பு வார்த்தையிலும்
அரும்புப் பேச்சிலும்
எங்களை அடிமையாக்கியவளே…..
எங்கள் வாழ்வு சிறக்க
தெய்வம் தந்த
விலையில்லா
கருப்பு வைரம் நீ…..

Advertisement