Advertisement

இலக்கணம் – 6
ரொமான்ஸ் நாட்டின் பேரழகன் அவன்……
புன்னகை மாநிலத்தின் பேரரசன் அவன்….
கற்பனை தேசத்தின் காவலன் அவன்…..
உலகின் எட்டாம் அதிசயமாய் – எனை
நொடிக்கு நொடி வியக்க வைக்கும்  
அதிசயங்களின் நாயகன் அவன்……
கட்டிலில் படுத்துக் கொண்டு மனம் நிறையக் கனவுகளுடன் கண்களில் வழிந்த காதலுடன் சத்யாவின் புகைப்படத்துக்குக் கீழே மனதில் தோன்றியதை எழுதி முடித்த இலக்கியா, அவனை ரசித்துக் கொண்டே மென்மையாய் அதில் இதழைப் பதித்தாள்.
“என் செல்ல அத்தான்…… எவ்ளோ அழகா இருக்கீங்க…. இந்தக் கலரும் சிரிப்பும் அழகான மீசையும்… அச்சோ….. அப்படியே என்னைக் கட்டி இழுக்குதே….. உங்க அழகுக்கு நீங்க நினைச்சிருந்தா எத்தனையோ பொண்ணுங்க வரிசைல நிப்பாங்க….. இருந்தும் என்னை உங்களுக்கு எப்படிப் பிடிச்சது அத்தான்….. நான் ரொம்பக் கொடுத்து வச்சவ…. ஒரு வார்த்தையால கூட என்னை நீங்க வெறுப்பேத்தினதோ…. வேதனைப் படுத்தியதோ கிடையாது….. எனக்கு எது பிடிக்கும்… பிடிக்காதுன்னு என்னை விட உங்களுக்கு தான் நல்லாத் தெரியும்….. என்னை எல்லா விதத்திலும் புரிஞ்சுகிட்ட நீங்களே என் வாழ்க்கைத் துணையா வரப் போறீங்க…. இதுக்கு அந்தக் கடவுளுக்கு நான் எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது……” என்று கூறிக் கொண்டு அவனது முகத்தையே சிறிது நேரம் ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அத்தான்….. எனக்கு ஒரு பெரிய ஆசை இருக்கு….. ராஜா மாதிரி இருக்குற உங்களோட ஜோடியா கை கோர்த்துகிட்டு ராணி மாதிரி இந்த உலகத்தையே சுத்தி வரணும்….. அப்படி மட்டும் நடந்திட்டா, இந்த உலகத்துலயே ரொம்ப சந்தோஷமானவ நானாதான் இருப்பேன்……  சிரிப்பைப் பாரு….. என்னை இங்கே தனியா புலம்ப விட்டுட்டு எப்பப் பார்த்தாலும் உங்களுக்கு வெளியூர்ல என்ன தான் வேலையோ….. போயி ரெண்டு நாளாச்சே….. உங்களைக் காணாம ஒருத்தி இங்கே புலம்பிட்டு இருப்பா… ஒரு போன் போடலாம்னு நினைப்பு இருக்கா……” என்று புகைப்படத்தை நோக்கி சிணுங்கவும் அவளது அலைபேசி அலறியது.
அதில் ஒளிர்ந்த சத்யாவின் பெயரைக் கண்டதும் அவள் முகத்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் ஒன்றாய் மலர்ந்தது.
“ஹலோ அத்தான்….. உங்களுக்கு ஆயுசு நூறு….. இப்பதான் உங்களைப் பத்தி நினைச்சிட்டு இருந்தேன்…… உடனே கூப்பிடறிங்க….. இன்னைக்கு மட்டும் நீங்க எனக்கு போன் பண்ணாம இருந்திங்க…. நாளைக்கு உங்களோட டூ விட்டுடணும்னு நினைச்சுட்டு இருந்தேன்…. நல்ல வேளை….. நான் தப்பிச்சேன்….” என்று விடாமல் பேசியதும் எதிர்புறத்தில் இருந்து சிரித்தான் சத்யா.
“ஹஹா…. வேலை சரியா இருந்துச்சு டா….. சாப்டியா… தூங்கலையா….. என் டார்லிங் என்னோட டூ கூட விடுமா என்ன…….. அதென்ன நீ தப்பிச்சேன்னு சொல்லறே….” என்றான் அவன் சிரிப்புடன்.
“ஹூக்கும்….. போங்க அத்தான்….. தெரியாத போலவே கேப்பிங்க….. உங்களைப் பார்க்காம, பேசாம இருந்தா நான்தானே கஷ்டப் படுவேன்…….. நீங்க எப்போ வருவிங்கன்னு காத்துட்டு இருப்பேன்…… தூக்கமும் வருவேனான்னு அடம் பிடிக்குது…. இந்த வெளியூர் வேலைக்கெல்லாம் வேற யாரையாவது அனுப்ப வேண்டியது தானே…… நீங்களே போகனுமா….. நமக்கு என்ன வேலைக்கு ஆளா இல்லாம இருக்கு….. நான் இங்கே தவிச்சுப் போறதைப் பத்தி உங்களுக்கு ஏதாவது கவலை இருக்கா….” சிணுங்கினாள் இலக்கியா.
“என் செல்லம்ல….. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ டா….. என்னதான் வேலைக்கு ஆளுங்க இருந்தாலும் சில முக்கியமான வேலை எல்லாம் நாம போயி பார்த்துக்கறதைப் போல வருமா….. அப்புறம் டார்லிங்….. வீட்டுல உன் படிப்பு முடிஞ்சதும் நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசப் போறாங்கன்னு கேள்விப் பட்டேன்…. பிறகு எப்போ வெளியூர் கிளம்பினாலும் நீயும் என்னோட வந்திடு….. பிரச்சனை முடிஞ்சது….” என்றான் அவன் சமாதானமாக.
அதைக் கேட்டதும் அவள் மனதில் சட்டென்று குளிர்காற்று வீச குரல் குழைந்து போனது. அவள் அமைதியாய் இருப்பதைக் கண்டு அவனே பேசினான்.
“என்ன… என் இளா குட்டிக்கு பேச்சையே காணம்… வெக்கமா…” சிரித்தான்.
“ஹஹா…. போங்க அத்தான்…… சரி லேட் ஆச்சு… தூங்குங்க…. சீக்கிரமா வந்திடுங்க….. உம்மா…..” என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு அவன் புகைப்படத்திற்கு நாணத்துடன் முத்தமிட்டாள்.
“நம்ம கல்யாண நாளுக்காக தானே நானும் காத்திட்டு இருக்கேன் அத்தான்…… நீங்க எனக்கே எனக்குங்கிற உரிமையோட உங்க தோளில் சாஞ்சுக்கத் தானே காத்திருக்கேன்….” என்றவளின் கண்ணில் வருங்காலக் கனவு மின்னியது.
கட்டிலில் இருந்து இறங்கியவள் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டு, “அத்தான்….. என் அத்தான்…. அவர் என்னைத்தான்…… எப்படிச் சொல்வேனடி…….” என்று பாடிக் கொண்டே அவன் புகைப்படத்தை முத்தமிடவும், வெளியே இருந்து பர்வதம் கலகலவென்று சிரிக்கும் ஓசை கேட்டது. நாக்கைக் கடித்துக் கொண்டவள் நாணத்துடன் கட்டிலில் அமைதியாய் அமர்ந்து கொள்ள உள்ளே வந்தார் அவளது செல்லப் பாட்டி.
“என்ன…. கருப்பட்டிக்கு இன்னைக்கு ஆட்டம் ஜாஸ்தியாருக்கு……” என்றவர் மீண்டும் சிரிக்கத் தொடங்கினார்.
“அச்சோ….. பாட்டி…. எதுக்கு இப்படி பேய் மாதிரி சிரிக்கறிங்க…..” என்று ஓடிச்சென்று அவர் வாயைப் பொத்தியவள், அன்னை ஹாலில் இருக்கிறாரா…… என்று எட்டிப் பார்த்தாள்.
ஹாலில் யாரையும் காணாமல் நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், இந்த  வயசானவங்கல்லாம் செவுட்டு மெஷினை வச்சிட்டு திரியுறாங்களே…… உன் காதுலயும் ஏதாவது இடி விழுந்து கேக்காமப் போகக் கூடாதா……” என்று படபடத்தாள்.
அவளை முறைத்த பர்வதம், “அடிப்பாவி….. கருந்தேள் கணக்கா வார்த்தையைக் கொட்டுறா பாரு….. கருவாச்சி…… உன் நொள்ளைக் கண்ண வைக்காம முதல்ல அந்த வாயைக் கழுவு…….” என்றவர்,
“எதோ புள்ளை சந்தோஷமா பாட்டெல்லாம் பாடிட்டு இருக்கேன்னு கேட்டா, ரொம்பத்தான் சிலிர்த்துக்கறே…. நான் என் பேரனுக்கு வெளியவே பொண்ணு பார்த்துக்கறேன்….. இந்த வாயாடி அவனுக்கு செட்டாகாது சாமி…..” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார் அவர்.
“அய்யய்யோ….. என்ன பாட்டி இது…. என் வெல்லக் கட்டி இல்ல….. என் செல்லக் குட்டி இல்ல…. நான் சும்மா எப்பவும் போல விளையாட்டுக்கு ரெண்டு வார்த்தை சொன்னா நீ சீரியஸா எடுத்துக்குவியா…..” என்று வெள்ளைக் கொடியைத் தூக்கினாள் இலக்கியா. அதைக் கண்டதும் அவர் இதழில் ஒரு முறுவல் வந்து ஒட்டிக் கொண்டது.
“ம்ம்…… அப்படி வா வழிக்கு….. என் பேரனைக் கட்டிக்கணும்னா உன் கருந்தேள் கொடுக்கு நாக்கை கொஞ்சம் சுருட்டி வச்சுக்க…..” என்றவர், “உன் அத்தான் மேல அம்புட்டு பிரியமாடா…..” என்றார் சிரிப்புடன். அதைக் கேட்டதும் அவள் முகத்தில் செம்மேகமாய் தோன்றி மறைந்தது நாணத்தின் கீற்றல்கள். தன் முந்தானையைப் பிடித்து விரல்களால் சுருட்டிக் கொண்டே நாணத்துடன் குழைந்து பேசியவளை ரசித்துக் கொண்டிருந்தார் அவர்.
“போங்க பாட்டி….. தெரியாத மாதிரியே கேப்பிங்க….. அத்தான்னா எனக்கு உசுருன்னு உங்களுக்கு தெரியாதா…..” என்றவளின் கன்னத்தை செல்லமாய்க் கிள்ளியவர்,
“எல்லாம் உன் மனசுப்படியே நடக்கும் புள்ள….. நம்ம கருப்பராய சாமிக்கு ஸ்பெஷலா வேண்டுதல் வச்சிருக்கேன்ல….. நல்லபடியா நடத்தித் தருவாரு…… நீ உன் அத்தானோட கலர் கலரா கனவு கண்டுகிட்டு, மரத்தை சுத்தி டூயட்டு பாடிட்டு ஜாலியா இரு…. சரி நேரமாச்சு…. சீக்கிரம் படுத்துத் தூங்கு…..” என்றுவிட்டு அவர் வெளியேற, அசந்து நின்றாள் இலக்கியா.
“கிழவிக்கு இந்த வயசுலயும் குசும்பு குறையவே இல்லையே….. குமரியா இருந்தப்ப எப்படி இருந்திருக்கும்….. அய்யோ சாமி…. பாவம் என் தாத்தா…..” மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் விடுமுறை நாளாதலால் கிளிக்குஞ்சை கொஞ்சிக் கொண்டு, அம்மா, பாட்டியை வம்பிழுத்துக் கொண்டிருந்தவள், தந்தையின் கார் வந்து நிற்கும் ஓசை கேட்கவும் வெளியே வந்தாள். மகளைக் கண்டதும் அவரது முகம் மலர்ந்தது.
“இளாம்மா….. அப்பாக்கு கொஞ்சம் தண்ணி எடுத்திட்டு வாடா……” என்றார் இளமாறன் அன்புடன்.
“இதோப்பா…..” என்று ஓடியவள் தண்ணீர் எடுத்து வந்து நீட்ட வாங்கி மடமடவென்று குடித்தவர், “அம்மா எங்கேடா….” எனக் கேட்கவும் மாடியில் காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டு கீழே வந்தார் லலிதா.
”வாங்க….. காபி தரட்டுமா…..” என்றார் கணவனிடம்.
“வேண்டாம்மா…. இப்படி வந்து உக்காரு….. உங்ககிட்டே ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்லணும்…..” என்றவர், “அம்மா….” என்று அறையை நோக்கிக் குரல் கொடுக்க பர்வதமும் வந்தார்.
“என்னங்க என்ன சந்தோஷமான விஷயம்….” என்றார் லலிதா ஆவலுடன்.
“நம்ம குவாரி யூனியன்க்கு பிரசிடன்ட் எலக்சன் நடந்துச்சுல்ல….. அதுல எல்லாரும் சேர்ந்து என்னைப் போட்டியில்லாம தேர்ந்தெடுத்திருக்காங்க….” என்றார் புன்னகையுடன்.
”ஓ…. ரொம்ப சந்தோஷம் பா…… கை கொடுங்க பிரசிடன்ட் சார்…..” என்று தந்தையின் கையைப் பற்றி குலுக்கினாள் இலக்கியா.
“ஏய்….. என்னடி இது… கொஞ்சம் கூட மரியாதை இல்லாம அப்பா கையைப் பிடிச்சு குலுக்கிட்டு இருக்கே……” என்று மகளைக் கடிந்த லலிதா, “ரொம்ப சந்தோஷங்க….. நீங்க நம்ம யூனியன்க்கு வேண்டி எத்தனையோ உதவி பண்ணிருக்கிங்க….. அதான் எல்லாரும் ஒரு மனசா உங்களைத் தேர்ந்தெடுத்திருப்பாங்க…..” என்றார்.
“ம்ம்…. அது மட்டும் இல்லை லலி….. இதுவரை நம்பர் டூ இடத்துல இருந்த நம்ம கம்பெனி சத்யாவோட முயற்சியால நம்பர் ஒன் இடத்துக்கு வந்திருச்சு…… அதுவும் ஒரு காரணம்….” என்று சந்தோஷத்துடன் கூறினார். அதைக் கேட்டதும் அனைவரின் முகத்திலும் மத்தாப்பு மலர்ந்தது.
“இதுக்குப் பரிசா சத்யாக்கு என்ன கொடுக்கப் போறேன் தெரியுமா…..” என்று நிறுத்தியவர், “சத்யாக்கு ஆடி கார் மேல ஒரு விருப்பம் இருக்கும் போலருக்கு… எப்பவும் அதைப் பத்தி விசாரிச்சுகிட்டு இருப்பான்…. அதான் அவனுக்குப் பிடிச்ச வெள்ளை நிற ஆடி காரை கையோட புக் பண்ணிட்டு வந்துட்டேன்…..” என்றார் சந்தோஷத்துடன்.
“ஓ…. ரொம்ப சந்தோஷங்க…..” என்றார் லலிதா.
தந்தை சொன்னதைக் கேட்டதும் மனதுக்குள் படபடவென்று மலர்ந்த சந்தோஷப் பூக்களை முகத்தில் காட்டிக் கொள்ளாமல்,
“அச்சோ…. அப்பா….. அவருக்கு கறுப்புன்னா தான் ரொம்பப் பிடிக்கும்…. இது தெரியாம வெள்ளை தான் பிடிக்கும்னு சொல்லுறிங்களே……” என மனதுக்குள் கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள் இலக்கியா.
“என் பேரன் எவ்ளோ பெரிய கெட்டிக்காரன் பார்த்தியா…..” என்றார் பர்வதம் பெருமையுடன் இலக்கியாவைப் பார்த்து.
“ஹூம்…. ஆமாம்….. அத்தான் என் தாத்தாவைப் போலயாருக்கும்…. வவ்வவ்வா….” என்று பாட்டியைப் பழித்துக் காட்டினாள் பேத்தி.
“ஹூக்கும்…..” என்று அவர் முகத்தைத் திருப்பிக் கொள்ள, இளமாறன் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“இவங்க ரெண்டு பேரும் இப்படியே தாங்க…. எப்பப் பார்த்தாலும் ஒருத்தரை ஒருத்தர் சீண்டி சண்டை போட்டுக்க வேண்டியது….” என்று லலிதா குற்றப் பத்திரிகை வாசிக்க,
“அதெல்லாம் ஒரு சந்தோசம்டி மருமவளே….. இவளை சீண்டாம, இவ வாயாடுறதைக் கேட்காம இருந்தா எனக்கு தூக்கமே வராது…… இதெல்லாம் நினைச்சுப் பார்த்து தான் எனக்கு நேரம் போகுது….. இல்லியாடி…. என் கருப்பட்டி செல்லம்….” என்று பேத்தியின் கன்னத்தில் இடிக்க,
“ஆமா என் வெல்லக்கட்டி செல்லம்…….” என்று இலக்கியாவும் அவர் கன்னத்தில் இடித்ததைக் கண்டு இளமாறனும், லலிதாவும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தனர்.
அடுத்த நாள் காலையில் வகுப்புக்குள் நுழைந்தவளை கையைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வந்த தோழியை திகைப்புடன் பார்த்தாள் இலக்கியா.
“ஏய்….. வீணாப் போனவளே….. எதுக்குடி இப்படி இழுத்துட்டு போறே…. கையை விடுடி…..” அவளது அழுத்தமான பிடியில் சிணுங்கினாள் இலக்கியா.
“ஏய் லூசு…… எனக்கு இருக்குற கோபத்துல உன்னை அப்படியே பிராண்டி வச்சிருவேன் பார்த்துக்க…… ஒருத்தரைப் பத்தி எதுவும் தெரியாமலே, தப்பா பேச வேண்டியது……” என்றவளின் முகத்தில் கோபத்தின் ரேகைகள்.
“ஏய்….. என்னடி…. எதுக்கு இப்ப காலைல வந்ததும் எனக்கு அர்ச்சனை பண்ணறே…… நான் யாரை, என்ன தப்பா பேசினேன்……” என்றாள் இலக்கியா புரியாமல்.
“ஹூக்கும்… அந்த விக்ரம் அண்ணாவை என்னவெல்லாம் சொன்னே…. உன்னோட சேர்ந்து நானும் அவரைத் தப்பா நினைச்சுட்டேன்….. அவர் எவ்ளோ நல்லவர் தெரியுமா….. அவரோட வாழ்க்கைல எவ்ளோ கொடுமையெல்லாம் நடந்திருக்கு தெரியுமா….. இதெல்லாம் தெரியாம அவர் யாரையோ அடிக்கிறார்… சண்டை போடுறார்….. ரவுடின்னு எல்லாம் சொன்னது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா….” மூச்சு விடாமல் பேசினாள்.
“ஏய்….. என்னடி உளர்றே…… நைட் கனவு ஏதாவது கண்டியா…. அதுல அந்த விக்ரம் ரொம்ப நல்லவரு…. வல்லவருன்னு ஏதாவது சீன் பார்த்தியா……” கிண்டலுடன் கேட்டவளை முறைத்தாள் வீணா.
“இளா…… கொஞ்சம் அமைதியா நான் சொல்லுறதைக் கேளு….. பாவம்….. விக்ரம் அண்ணாவோட குடும்பத்தில் நடந்ததெல்லாம் கேட்டதும் எனக்கு கண்ணுல தண்ணியே வந்திருச்சு தெரியுமா…..” அவளது முகத்தில் வேதனையின் சுவடுகள். தோழி சீரியசாய் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்தவள், “ஓ…. அப்படி என்னதான் அவர் வாழ்க்கையில் நடந்துச்சாம்…. சொல்லித் தொலை…..” என்றாள்.
தான் வினோதின் வாயிலாக விக்ரமைப் பற்றித் தெரிந்து கொண்டதை எல்லாம் தோழியிடம் கூறினாள் வீணா.
முதலில் ஏனோ தானோவென்று கேட்டுக் கொண்டிருந்தவளின் முகத்தில் கோபமும், வேதனையும், வெறுப்பும் மாறி மாறி வந்து இறுதியில் சோக பாவத்தில் நின்றது.
“என்னடி சொல்லறே….. அவர் குடும்பத்தில் இப்படில்லாம் கொடுமை நடந்திருக்கா……. அச்சோ…. கேக்கவே ரொம்ப வேதனையா இருக்குடி….. பாவம் அவர் தங்கையும், அம்மாவும்…… இதெல்லாம் தாங்கிட்டு இவரால எப்படி இப்படி இருக்க முடியுது…… பொண்ணாப் பொறக்கறது இவ்ளோ பெரிய பாவமா….. தப்பு பண்ணினவன் கொஞ்ச நாள் தண்டனை அனுபவிச்சிட்டு சந்தோஷமா வெளியே வந்திடறான்…… எந்தத் தப்பும் பண்ணாம மனசாலயும், உடம்பாலயும் நாம தான் கஷ்டப்பட வேண்டியிருக்கு…..” என்றவளின் கண்கள் கலங்கி மனம் கனத்திருந்தது.
“ம்ம்… அது மட்டும் இல்லைடி… அன்னைக்கு அந்தப் பையனை அடிச்சது கூட ஒரு பொண்ணை தப்பா படம் எடுக்க முயற்சி பண்ணினதால தானாம்…. நாம தப்பாவே நினைச்சுட்டோம்….” வருத்தத்தோடு கூறினாள்.
“ஓ….. கண்ணால காண்பதும் பொய்…. காதால் கேட்பதும் பொய்… தீர விசாரிப்பதே மெய்னு பெரியவங்க சொன்னது சரியாதான் போயிருச்சு…. சரி வா….. இப்பவே அவரைப் பார்த்து மன்னிப்பு கேட்டுட்டு வந்திடலாம்……” என்றாள் இலக்கியா. அது தான் அவள்… தப்பென்று தோன்றினால் தட்டிக் கேட்கவும் செய்வாள்…. தான் செய்தது தவறென்று புரிந்தால் மன்னிப்புக் கேட்கவும் தயங்க மாட்டாள்.
“ம்ம்… இப்ப மேம் வந்திருவாங்களே…. லஞ்ச் டைம்ல போயி பேசலாம்….” என்றாள் வீணா. “ம்ம்…. சரிடி….” என்றதும் இருவரும் வகுப்புக்குள் நுழைந்தனர். இலக்கியாவின் மனதில் விக்ரத்தின் மேலிருந்த வெறுப்பு மாறி, அவனது செயல்களில் இருந்த நியாயம் புரிந்தது. காதுக்குள் நுழைந்த விஷயம் இதயத்துக்குள் சென்று மனத்தைக் கனக்கச் செய்து கொண்டிருந்தது.
என் அழகான தவறு நீ…..
என்னை உணர வைத்த உணர்வு நீ…
என் நினைவுகளின் தீர்வு நீ….
என் பிரபஞ்சத்தின் வடிவு நீ…..
எங்கோ தான் இருக்கின்றாய்….
என்றும் என்னுள் வாழ்கின்றாய்….
எண்ணங்கள் இல்லா பொழுதெல்லாம்
எனக்குள் வந்து நிறைகின்றாய்…..
எனக்காக நீ இல்லை…. என்றாலும்
எனக்குள்ளும் இருக்கிறாய் நீ…..
எந்த சிறப்பு சலுகையும் வேண்டாம்…
எனக்குக் கிடைத்த சலுகையாய்
என்றும் தொடரும் உன் அன்பு…..

Advertisement