Advertisement

இலக்கணம் – 5
மேடையில் இருந்து கீழே வந்த விக்ரமிடம் மாணவர்கள் சூழ்ந்து கொண்டு பாராட்டு தெரிவிக்க, நம்ப முடியாமல் அதே திகைப்புடன் அமர்ந்திருந்தாள் இலக்கியா. அவளை இழுத்துக் கொண்டு விக்ரமிடம் சென்ற வீணா, “நாட்டு நடப்பை அருமையா கவிதைல சொல்லிருக்கீங்க அண்ணா….. வாழ்த்துகள்…..” என்றாள். சிறு புன்னகையுடன் தலையசைத்தவன் அவளுக்கு அருகில் நம்ப முடியாத பார்வையுடன் நின்று கொண்டிருந்த இலக்கியாவை நோக்கி மென்மையாய் சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
“இதென்னடி வம்பாருக்கு….. அவரைப் பாராட்டுனது நானு….. நம்ப முடியாம முழிச்சு முழிச்சு வேடிக்கை பார்த்துட்டு இருந்தது நீ…. உன்கிட்டே சிரிச்சுட்டுப் போறார்….. ஹூம்…. இருந்தாலும் சிரிக்கும்போது அந்தண்ணா முகம் ரொம்ப அழகாருக்கு இல்ல இளா……” என்றாள் வீணா.
“ஏய்…. வீணாப் போனவளே…. அவன் என்னைப் பார்த்து சிரிச்சுட்டா அவன் ரவுடி இல்லைன்னு ஆயிருமா….. இந்த கவிதையை எங்கே சுட்டுட்டு வந்து இங்கே பரிசு வாங்கினானோ….. இவன் எழுதின மாதிரியா இருக்கு….. அண்ணா கிண்ணான்னு கொஞ்சிட்டு இருந்தே…. அப்புறம் எனக்கு கன்னா பின்னான்னு கோபம் வரும் சொல்லிட்டேன்…..” என்றவள் மூஞ்சைத் தூக்கி வைத்துக் கொண்டு அங்கிருந்து நகர, தலையில் அடித்துக் கொண்டு அவளைத் தொடர்ந்தாள் வீணா.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே பின்னில் வந்த வினோத், அது விக்ரமைப் பற்றியது என்றதும் கவனித்தான்.
“ஹலோ…. ஒரு நிமிஷம்….” பின்னிலிருந்து வந்த குரலில் திரும்பினர் பெண்கள் இருவரும்.
வீணாவின் விழிகள் முன்னில் நின்றவனை அளந்தது.
“அச்சோ…. இவன் அன்னைக்கு சண்டைல சட்டை கிழியாம நண்பனைக் காப்பாத்தின நாட்டாமை ஆச்சே…… ஒருவேளை அவன் பிரண்டைப் பத்தி இவ பேசினது காதில் விழுந்து சண்டைக்கு வரானோ….. அந்த விக்ரம் கிட்டே சொல்லிக் கொடுத்துட்டா என்ன ஆகுமோ…..” என ஒரு பயம் வந்து மனதில் ஒட்டிக் கொள்ள அவனிடம் நிமிர்ந்தாள்.
“சொ… சொல்லுங்க….. எங்களையா கூப்பிட்டிங்க……”
“ம்ம்…. கொஞ்சம் இந்தப் பக்கம் வரீங்களா….. நீங்க விக்ரம் பத்தி தப்பா பேசிட்டு இருந்தது காதுல விழுந்துச்சு…. அதான் அவன் மேல உங்களுக்கு என்ன கோபம்னு தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்….” என்றான் வினோத்.
“இவன் நிஜமாலுமே கட்டப் பஞ்சாயத்துக்கு தான் வந்திருக்கான் போலருக்கு…..” என்று வீணா நினைத்துக் கொண்டிருக்க, இலக்கியா அவனிடம், “ஓஹோ…. உங்க பிரண்டைப் பத்தி பேசினதுக்கு சண்டை போடலாம்னு வந்திங்களா…..” என்றாள் எரிச்சலுடன்.
“அச்சச்சோ….. நான் சண்டைல்லாம் போட வரல மா….. உங்களுக்கு அவன் மேல என்ன கோபம்னு தான் கேட்டேன்….. ஏன்னா அவன் ரொம்ப நல்லவன்….. எதனால அவன் மேல இந்த வெறுப்புன்னு தெரிஞ்சுக்க தான் கேட்டேன்…..” என்று தன்மையாய் கூறினான் வினோத். அவனது பொறுமையும், நிதானமாய் கேட்ட விதமும் அவளையும் அமைதியாய் பேச வைத்தது.
“எங்களுக்கு அவர் மேல வெறுப்பெல்லாம் இல்லை… எப்பப் பார்த்தாலும் காலேஜுக்குள்ளே சண்டை, அடிதடின்னு இருக்காரேன்னு வந்த கோபம் தான்…… படிக்கறதுக்கு வந்த இடத்துல எதுக்கு இப்படி ரவுடித்தனம் பண்ணிட்டு மத்தவங்களை தொந்தரவு பண்ணனும்…. யாரும் பிரின்சிபல் கிட்டே கம்ப்ளெயின்ட் கொடுக்காம இருக்கற தைரியம் தானே…. உங்க பிரண்டுன்னு சொல்லுறீங்க….. அவருக்கு புரியற போல சொல்லி கண்டிக்கக் கூடாதா…..” என்றாள் இலக்கியா. அவள் சொன்னதைக் கேட்டு திகைப்புடன் யோசித்தான் வினோத்.
“நீங்க நினைக்குற மாதிரி விக்ரம் ரவுடி எல்லாம் இல்லைமா….. அவன் யாரையாவது அடிச்சிருந்தாலும் அதுல ஏதாவது காரணம் இருக்கும்….. அவன் பெண்களை ரொம்ப மதிக்கிறவன்….. பெண்களுக்கு உபத்திரவம் கொடுக்கிற மாதிரி எதாவது சம்பவத்தைப் பார்த்தா அவன் பொறுமையா இருக்க மாட்டான்…. அவனையும் மீறி கை நீட்டிடுவான்…..” என்றான் வினோத்.
“ஓ…. உங்க பிரண்டு நல்லவராவே இருக்கட்டும்….. அவர் சொன்ன கவிதையும் ரொம்ப நல்லா இருந்துச்சு தான்…. ஆனா அவர் சரியில்லையே…. தப்பு பண்ணவங்களை அடிக்க இவருக்கு என்ன ரைட்ஸ் இருக்கு….. அவங்க மேல கம்ப்ளெயின்ட் பண்ணி நடவடிக்கை எடுக்கலாமே….. அதை விட்டுட்டு இவரே எதுக்கு அவங்களுக்கு தண்டனை கொடுக்கணும்…….” என்றாள் இலக்கியா.
ஒரு நிமிடம் அவர்கள் பேசியதை யோசித்தவன், “எல்லாத் தப்புக்கும் நடவடிக்கை எடுக்கலாம்….. ஆனா தப்பே நடக்காம இருக்கணும்னு தான் அவன் துடிக்கிறான்…..” என்றவனின் கண்ணில் ஒரு வலி தோன்றி மறைந்ததை இலக்கியா கண்டு கொண்டாள்.
“ஓ…. உங்க பிரண்டு செய்யுறதை நியாயப் படுத்தறதுக்கு ஒரு கதை வேற வச்சிருக்கிங்களா…… எங்களுக்கு அதெல்லாம் தெரிய வேண்டாம்….. அவர் நல்லவரோ…. கெட்டவரோ…. காலேஜுக்குள்ளே அடிதடி பண்ணாம பார்த்துக்கங்க……. அதான் ஒரு நண்பனா நீங்க செய்யுற நன்மை……” என்றவள், “வீணா, வாயைத் திறந்து பார்த்திட்டு நிக்காம வாடி……” என்று அவளையும் இழுத்துக் கொண்டு நடந்தாள். யோசனையுடன் அவர்கள் செல்வதையே பார்த்து நின்றான் வினோத்.
துவைத்த துணிகளை மடக்கி வைத்துக் கொண்டிருந்த லலிதா வாசலில் கேட்ட இலக்கியாவின் குரலைக் கேட்டு வெளியே வந்தார்.
“அம்மாஆஆஆஆஆ……… எங்கிருக்கீங்க……” நடு வீட்டில் நின்று கொண்டு அலறியவளை பின்னிலிருந்து மெதுவாய் முதுகில் தட்டியவர், “எதுக்குடி… நடுவீட்டுல நின்னு இப்படி கத்திகிட்டு இருக்கே……. உன் அம்மாவுக்கு என்ன கொண்டு வந்தியாம்……” என்றார்.
“அம்மா….. நான் ஒண்ணு சொன்னா ஓகே சொல்லுவிங்களா…..”
“அது நீ சொல்லுற விஷயத்தைப் பொருத்தது……” என்றார் அவர். “அம்மா…..” சிணுங்கியவள், “நாம ஒரு கிளியை வளர்த்தலாமா….. ப்ளீஸ் அம்மா…..” என்றாள் இலக்கியா. வளர்ந்த குமரியின் உருவத்தில் சிறு குழந்தையைக் கண்ட லலிதா சிரித்தார்.
“ஏன்…. என்ன இப்ப திடீர்னு….. எல்லாருக்கும் வீட்ல மரம் வளர்க்க சொல்லி மரக்கன்று கொடுக்கிற போல உங்க காலேஜ்ல கிளி வளர்க்க சொல்லி கிளிக்குஞ்சைக் கொடுத்தாங்களா……” எகத்தாளமாய் கேட்டுக் கொண்டே சோபாவில் அமர்ந்த அன்னையின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“அம்மா…… ப்ளீஸ் அம்மா…. நான் வரும்போது வழியில ஒரு கிளிக்குஞ்சு மரத்திலிருந்து கீழே விழுந்து அடிபட்டுக் கிடந்துச்சு…… பெரிய பறவை ஏதோ கொத்தி இருக்கும் போலருக்கு…… நான் அதை எடுத்து தண்ணி கொடுத்து பத்திரமா கொண்டு வந்துட்டேன்….. நம்ம வீட்லயே அதை வளர்த்தலாம்மா….. ப்ளீஸ்….. ஓகே சொல்லுங்க…..” என்றாள் கெஞ்சலுடன்.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த பர்வதம், “ஏண்டி…. கருவாச்சி…… நீ காக்கா வளர்த்தினா அதுல ஒரு அர்த்தம் இருக்கு….. சம்மந்தமே இல்லாம கிளிய வளர்த்தலாம்னு சொல்லறே…..” என்றவரை முறைத்தவள்,
“உனக்கு எதுக்கு கிழவி என்மேல இத்தனை பொறாமை……” என்றாள்.
“ஆஹா… இது என்னடி வம்பாருக்கு…. எனக்கு உன்மேல பொறாமையா……”
“பின்ன…… நீ சினிமா ல வர்ற பேய் மாதிரி வெள்ள வெளேர்னு இருக்கே….. நான் அம்மன் சிலை மாதிரி கறுப்பா லட்சணமா இருக்கேன்னு உனக்குப் பொறாமைதானே…..” என்றாள் அவள் எரிச்சலுடன்.
“அய்யே, மூஞ்சப் பாரு….. இவளைப் பார்த்து எனக்கு பொறாமையாம்…. நீ அந்தக் கிளி பக்கத்துல போகாம எட்டியே இரு…..” என்றார் தணிந்து.
“ஓ…… என்னைக் கொத்திடும்னு நினைக்கறியா பாட்டி…..” அவர் அக்கறையாய் சொல்லுவதாய் நினைத்து இலக்கியாவும் அன்போடு கேட்டாள்.
“அதில்ல… உன்னைப் பார்த்து காக்கான்னு நினைச்சு கிளிக்குஞ்சு பயந்துக்கப் போகுது…….” என்றார் நக்கலுடன்.
“பாட்ட்ட்டிடிஈஈஈ…….” பல்லைக் கடித்தாள் இலக்கியா.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க லலிதா தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார்.
“அம்மா…. இங்க பாரும்மா, உன் மாமியார் என்னை என்னல்லாம் சொல்லுதுன்னு…… பேசாம நீ ஒரு கேஸ் கொடுத்து உன் மாமியாரை  டைவர்ஸ் பண்ணிடேன்…. சில கரப்பான் பூச்சிங்க எத்தனை ஹிட் அடிச்சாலும் தொல்லை பண்ணிட்டே இருக்குங்க….” என்றவளை,
“யாரைப் பார்த்துடி கரப்பான் பூச்சின்னு சொல்லுற…..” என்றார் பர்வதம்.
“ஹூக்கும்….. அதான் யாரை சொல்லுறேன்னு தெரியுதுல்ல…. அப்புறம் என்ன கேள்வி……” என்றவள், “அம்மா…. நீங்க கிளி வளர்த்தலாமா வேண்டாமான்னு எதுவும் சொல்லவே இல்லையே…..” என்றாள் அன்னையின் முகத்தைப் பார்த்துக் கொண்டு.
“நான் என்ன சொல்லுறது….. அதான் நீங்க ரெண்டு பேரும் நிறுத்தாம வம்பு பேசிட்டு இருக்கிங்களே…… அதுமில்லாம உங்க அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா….. அப்புறம் எதுக்கு இந்த வேண்டாத வேலை…..” என்று கேட்கவும் அவள் முகம் வாடிப் போனது.
அப்போது வாசலில் கார் நிற்கும் ஓசை கேட்க எழுந்தவள், “போங்கம்மா…. நான் அப்பாகிட்டயே கேட்டுக்கறேன்….” என்று வாசலுக்கு சென்றாள்.
சத்யா காரை போர்ட்டிகோவில் நிறுத்திவிட்டு யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, புன்னகை முகத்துடன் இறங்கி வந்து கொண்டிருந்தார் இளமாறன்.
“அப்பா……. இன்னைக்கு என்ன அதிசயமா நேரத்துலயே வந்துட்டிங்க…..” விசாரித்தவள் வெளியே எட்டிப் பார்த்து, “இது என்ன உலக அதிசயமா இருக்கு…. இன்னைக்கு காக்கா மல்லாக்கப் பறந்தாலும் ஆச்சர்யப் படறதுக்கில்லை….. அத்தானும் நேரமா வீட்டுக்கு வந்துட்டாரே……” என்று கிண்டலடிக்கவும் செய்தாள்.
“ஹஹா வாலு….. இன்னைக்கு பத்திர ஆபீஸ்ல ஒரு வேலை இருந்துச்சு…. அங்கே முடிஞ்சதும் வீட்டுக்கே கிளம்பி வந்துட்டோம்…… நீ இப்பதான் காலேஜ்ல இருந்து வந்தியா……” என்று கேட்டுக் கொண்டே மகளுடன் வீட்டுக்குள் வந்தவர், “லலி….. காப்பி குடுமா….” என்றார் மனைவியிடம்.
“இதோ…. எடுத்திட்டு வர்றேங்க…..” என்றவர் அடுக்களைக்குள் நுழைய, அவருடன் இலக்கியாவும் சென்றாள். அன்னைக்கு எதிரில் சோபாவில் அமர்ந்தார் இளமாறன்.
“என்னப்பா…. போன காரியம் நல்லபடியா முடிஞ்சுதா…..” என்றார் பர்வதம்.
“ம்ம்… முடிஞ்சது மா….. பெரியப்பா கூப்பிட்டிருந்தார்….. அவர் பேத்திக்குக் கல்யாணம் முடிவாயிருக்கு, எல்லாரும் குடும்பத்தோட வரணும்னு….. உங்ககிட்டே பேசறேன்னு சொன்னார்……” என்றார் பர்வதத்திடம்.
“ம்ம்…. பார்த்திட்டு இருக்கோம்ன்னு சொல்லி இருந்தார்….. நம்ம சத்யனுக்கு அவர் பேத்தியை பேசலாமான்னு கேட்டார்…… எனக்குக் கோபம் வந்திருச்சு….. அவனுக்குதான் இலக்கியா இருக்காளே…. நீங்க வெளியே பார்த்துக்குங்கன்னு மூஞ்சில அடிச்ச போல சொல்லிட்டேன்…. அதுல கோபம்னு நினைக்கறேன்….. அதுக்குப் பிறகு கூப்பிடவே இல்லை…..” என்றார். இளமாறனின் தந்தையின் அண்ணன் தான் இந்தப் பெரியப்பா.
“ம்ம்….. யாருக்கு யாருன்னு எழுதி வச்சிருக்கோ அதானே நடக்கும்….. இப்போ பார்த்த வரனும் நல்ல இடம்னு சொன்னார்…. அவர் பேசுவார்மா…. வருத்தப் படாதீங்க….” தாயை சமாதானப்படுத்தினார் இளமாறன்.
“ம்ம்… எனக்கு ஒரே ஒரு ஆசைதான் தம்பி….. என் பேத்தியை என் பேரனுக்கே கட்டி வச்சு ரெண்டு பேரையும் நான் சாகுற வரைக்கும் என் பக்கத்துலயே வச்சுக்கனும்….. உம்மவளும் அவ அத்தான் மேல உசுரா இருக்கா…..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இலக்கியா காபியை எடுத்து வர, லலிதாவும் உடன் வந்தார்.
“அப்பா…. காபி…….” என்று சொல்லிக் கொண்டே காபியை நீட்டிய மகளை அன்போடு பார்த்தார் இளமாறன்.
“நீ எதுக்குடாம்மா கஷ்டப்படறே….. இப்ப தானே காலேஜ்ல இருந்து வந்திருப்பே……..” என்றார் பரிவுடன்.
“ஹூக்கும்…. காபி போட்டது நானு…. குடுக்கற அவளுக்கு கஷ்டமா…..” என்றார் லலிதா.
“ஹிஹி….” என்று வழிந்த இலக்கியா, “அப்பாவுக்கு நீங்க போடற காபி தானே பிடிக்கும்…. அதான்…. உங்களையே போட சொன்னேன்……” என்றவள்,
“இந்த அத்தான் இன்னும் போனை வைக்கலையா…..” கேட்டுக் கொண்டே வாசலை எட்டிப் பார்க்க அவன் வந்து கொண்டிருந்தான்.
“இந்தாங்க அத்தான் காபி….” அவள் நீட்டிய காபியை புன்னகையுடன் வாங்கிக் கொண்டு சோபாவில் அமர்ந்தான் சத்யா.
“இளா….. வெளிய ஒரு கிளிக்குஞ்சு கத்திட்டு கிடக்கு….. நீதான் அதை கூடை போட்டு மூடி வச்சுட்டு வந்தியா……” என்றான்.
“அச்சச்சோ…. ஆமாம் அத்தான்… நான் வர்ற வழியில பறக்க முடியாம அடிபட்டுக் கீழே கிடந்துச்சு…. இங்கயே வளர்த்தலாம்னு எடுத்திட்டு வந்தேன்….. அப்பா…. ப்ளீஸ் பா….. ஓகே சொல்லுங்கப்பா…..” என்றாள் கெஞ்சலாக.
“என்னது….. வீட்டுல வளர்த்துறதா……” வேண்டாமென்று மறுக்கப் போனவர், அவளது வாடிய முகத்தைக் கண்டதும்,
“சரி தோட்டத்துல வச்சுக்கோ… இங்கே வீட்டுக்குள்ளே கொண்டு வரக் கூடாது…” என்று சம்மதித்தார்.
“தேங்க் யூ ப்பா…..” என்று வெளியே ஓடியவள், “அத்தான்….. இங்க கொஞ்சம் வாங்களேன்…..” என்று குரல் கொடுத்தாள்.
அவன் எழுந்து அவளிடம் செல்லவும், “விளையாட்டுப் பிள்ளை….. இப்பவும் எல்லாத்துக்கும் அத்தான் வேணும் அவளுக்கு….. இவ வயசுல எனக்கு நீங்க ரெண்டு பேரும் பிறந்துட்டிங்க…… அவங்க கல்யாணம் பத்தி நான் கேட்டதுக்கு நீ எதுவும் சொல்லலையேப்பா…..” என்றார் மகனிடம்.
“ம்ம்…. எங்களுக்கும் விருப்பம் தான்மா….. சத்யா தான் என் தொழில் வாரிசுன்னு ஆகிப் போச்சு….. நம்ம பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு உரிமையோட எல்லாத்தையும் பார்த்துகிட்டும்…..  அதுமில்லாம பொண்ணைக் கட்டிக் கொடுத்தும் நம்மளோடவே வச்சுக்கற வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்….. அவதான் இந்த வீட்டோட கலகலப்பு…… அவ படிப்பு முடியட்டும்மா….. இதைப் பத்தி பேசி முடிவு பண்ணிடலாம்…..” என்றார் மனைவியை பார்த்துக் கொண்டே.
முன்னமே அவர்கள் தம்மில் இதைப் பற்றிப் பேசி இருந்ததால் லலிதாவின் விருப்பத்தையும் அறிந்தே கூறினார். இளமாறன் சொன்னதைக் கேட்டதும் பெண்கள் இருவரின் முகமும் மலர்ந்தது.
“அத்தான்…… நாளைக்கு நீங்க இதுக்கு ஒரு கூண்டு வாங்கிட்டு வந்து தர்றீங்களா…” இருவரும் தோட்டத்தில் கிளியுடன் நின்று கொண்டிருந்தனர்.
“ம்ம்… சரிடா வாங்கிட்டு வரேன்….. இப்போதைக்கு இந்த கூடையை வச்சு மூடிடுவோம்….. பாதுகாப்பா இருக்கும்….” என்றவன் அவள் கையில் இருந்த கிளிக்குஞ்சை அதுக்குள் வைத்து மூடி வைத்தான்.
அவனது முகம் வருத்தத்துடன் இருக்க அதை கவனித்தவள், “ஏன் அத்தான்…. ஒரு மாதிரி வருத்தமா இருக்கிங்க….. ஏதாவது பிரச்சனையா…… தலை வலிக்குதா……” என்றாள்.
“ப்ச்…. அதெல்லாம் இல்லை இளா…… இந்தக் கிளியைப் போல தானே என் நிலைமையும்….. நிராதரவா கிடந்ததை நீ எடுத்திட்டு வந்து பாதுகாப்பு கொடுத்த போல, என்னைப் பெத்தவங்க விட்டுட்டுப் போனப்போ நீங்க தாங்கிக் கிட்டதாலே தானே இப்படி இருக்கேன்…. இல்லேன்னா என் வாழ்க்கை என்னாகிருக்குமோ……” என்றான் வருத்தத்துடன்.
“என்ன அத்தான்… இது…. எதுக்கு நீங்க இப்ப தேவை இல்லாம யோசிச்சு வருத்தப்படறீங்க…. நீங்க எப்பவும் இந்த வீட்டுப் பிள்ளை தான்….. இப்படில்லாம் பேசினா நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது…..”
“ஓஹோ…. என் டார்லிங் என்னை என்ன பண்ணுமாம்…..” என்றான் அவன் அவளைக் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டே. அந்தப் பார்வையில் முகம் சிவந்தவள்,
“உங்க டார்லிங் இப்படி முத்தம் வச்சிட்டு ஓடிடுமாம்….” என்று எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு ஓடிவிட்டாள்.
இனியவனே….. என் இதயம் நுழைந்து
இதயத் துடிப்பில் இணைந்தவனே….
இதயத்தின் தாளத்தில் லயமாய் நீ…
இமைக்குள்ளே கலையாத கனவாய் நீ….
இதழ் வராத வார்த்தையின் பொருளாய் நீ…
இதமாய் இம்சிக்கிறாய் என்னை நீ…..
இணையாய் இணைந்திருப்போம் நாளும்….

Advertisement