Advertisement

இலக்கணம் – 4
நாட்கள் அழகாய் நகர்ந்து கொண்டிருந்தது. சத்யாவுக்கு பிசினஸில் இருந்த ஆர்வத்தைக் கண்டு அவனிடமே சில பொறுப்புகளை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டார் இளமாறன். இலக்கியாவுக்கு சத்யாவின் மீதுள்ள ஈடுபாடு பெற்றோர்களுக்கும் புரிந்ததால் படிப்பு முடிந்ததுமே கல்யாண விஷயத்தை முடிவு செய்துவிடக் காத்திருந்தனர்.
அன்று ஒரு வேளை விஷயமாய் சத்யா வெளியூர் சென்றிருக்க இளமாறனும் நேரத்திலேயே குவாரிக்குக் கிளம்பி இருந்தார். இருவரும் இரு காரையும் எடுத்து சென்று விட்டதால் இலக்கியா பேருந்தில் செல்ல வேண்டியதாயிற்று.
“அம்மா… நான் கிளம்பறேன்…..” கல்லூரிக்குத் தயாராகி நின்ற மகளிடம் வந்தார் லலிதா.
“ம்ம்…. பார்த்து பத்திரமா போடி….. வீணாவும் கூட வரால்ல….” என்றார்.
“ம்ம்…. அவ அடுத்த ஸ்டாப்புல இதே பஸ்ல ஏறிக்குவா மா…..” என்றவள், “நான் போயிட்டு வரேன் வெள்ளச்சி…” பாட்டியிடமும் கூறிக் கொண்டாள்.
“ம்ம்…… வேடிக்கை பார்த்துட்டே வேற பஸ்சுல ஏறாம சரியான பஸ்ஸா பார்த்து ஏறு புள்ள…… பத்திரமாப் போயிட்டு வா….”
“ஹூக்கும்…. உன் லொள்ளுக்கு அளவே இல்ல கிழவி….. நான் என்ன படிக்கத் தெரியாதவளா… இல்ல கண்ணு தெரியாமக் கெடக்கேனா…… வேற பஸ்சுல ஏறுவாங்கலாம்….” அவள் சிலிர்த்துக் கொள்ளவும்,
“சரி விடுடி…. உன் பாட்டிக்கு தான் உன்னை வம்பிழுக்காம இருக்க முடியாதுன்னு தெரியும்ல….. நீ கிளம்பு….” என்று சமாதானத்துக்கு வந்தார் லலிதா.
“ம்ம்….. சரிம்மா…. நான் கிளம்பறேன்…. உன்னை வந்து வச்சுக்கறேன் வெள்ளச்சி…..” என்றவள்  கிளம்பவும்,
“அடி போடி கருப்பாயி….. இந்த வயசான காலத்துல என்னை வச்சுக்கிறாளாம்……” என்றவர் வெற்றிலையைக் குதப்பத் தொடங்க,
“ஆ… உன்னை…..” என்று கண்ணை உருட்டிக் கொண்டு அவரை நெருங்கியவள், அவரது வெள்ளைக் கன்னத்தில் முத்தமிட்டு, “பை கிழவி….. உன் வெள்ளை மூஞ்சில கறுப்பாக்கிட்டேனே…… வவ்வவ்வவா……” என்று பழித்துக் கொண்டு சென்றாள்.
“ஹஹஹா…..” என்று பர்வதம் சிரிக்கவும், “ஹையோ….. ஹையோ…. எனக்கு வந்ததும் சரியில்ல…. வாச்சதும் சரியில்ல…. ரெண்டும் என்னமா பேசுதுங்க….” தலையிலடித்துக் கொண்டே உள்ளே சென்றார் லலிதா.
பேருந்து நிலையத்தில் பத்து நிமிட காத்திருப்புக்குப் பின்னர் நிறை மாத கர்ப்பிணியாய் வந்து சேர்ந்தது அவளுக்கான பேருந்து. காலை நேரமாதலால் நிற்பதற்குக் கூட இடமில்லாமல் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த மாணவர்கள். எப்படியோ உள்ளே ஏறியவள், கண்டக்டரின் “உள்ள போ……” என்ற அதட்டலில் சற்று உள்ளே தள்ளி நின்றாள்.
“ச்ச்சே…. என்னவொரு கூட்டம்….. எப்படித்தான் தினமும் இப்படி பயணிக்கிறார்களோ….. காலை நேரத்தில் பேருந்தின் எண்ணிக்கையைக் கூட்டினால் தான் என்ன….. பாவம் வயதானவர்களும், குழந்தைகளும் நிற்கக் கூட இடமில்லாமல் தவிக்கிறார்களே…..” என யோசித்துக் கொண்டிருந்தவள் பின்னிலிருந்து யாரோ உரசுவது போலத் தோன்றவும் சட்டென்று திரும்பினாள்.
ஒருத்தன் எருமை மாடு போல அவள்மீது உரசிக் கொண்டே தெரியாதது போல நிற்க எரிச்சலுடன் சற்று விலகி நின்று கொண்டாள். அடுத்த ஸ்டாப்பில் வீணா ஏறுவதைக் கண்டதும் தான் அவளுக்கு சற்று நிம்மதியானது. ஆள் கூட்டத்தில் நீந்தி ஒருவழியாய் தோழியை வந்தடைந்தாள் வீணா.
“அச்சோ…. இன்னைக்கு எப்பவும் விட கூட்டம் அதிகமா இருக்கே…..” என்றவள், “பஸ்ல வர்றவங்க பாடு எவ்ளோ கஷ்டம் பார்த்தியா…..” என்று கேட்டுக் கொண்டே கல்லூரி  விஷயங்களை இலக்கியாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
அவர்களுக்குப் பின்னில் ஒரு மாணவர் கூட்டம் திக்கிக் கொண்டு நின்றது. மூன்று இருக்கையில் அமர்ந்திருந்த ஐந்து மாணவர்கள் சிலர் எதோ பாடிக் கொண்டு கலகலத்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
“டேய்….. அடுத்தது “ப” ல தொடங்குற ஒரு பாட்டு பாடுடா…..” என்றான் ஒருவன். உடனே அடுத்திருந்தவன் பாடத் தொடங்கினான்.
“பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்….
அது கறுப்பு நிலா…..
அது உலவும் எந்தன் மனம்…..
ஒரு வானம் பூங்காவனம்…..”
அவன் பாடியதும் சட்டென்று திரும்பிப் பார்த்தாள் இலக்கியா. அவளிடம் ஹி.. ஹி…. என்று வழிந்துவிட்டு மீண்டும் பாடலைத் தொடர்ந்தவன் கறுப்பு நிலா… என்று முடித்தான்.
“டேய்….. நீ “க..” ல தொடங்கற பாட்டுப் பாடு….” என்றான் நண்பனிடம்.
“கறுப்பு நிலா… நீதான் கலங்குவதேன்…..
துளித்துளியா கண்ணீர் விழுவது ஏன்….
சின்ன மானே… மாங்குயிலே….. உன் மனசுல என்ன குறை…..
பெத்த ஆத்தா போலிருப்பேன்…. பூமியில் வாழும் வர…..”
என்று பாடிக் கொண்டே இவளை அடிக்கண்ணால் பார்க்க அவளுக்குப் பத்திக் கொண்டு வந்தது. அவளது முக மாற்றத்தைக் கண்ட வீணா, அவளது கையைப் பிடித்து அழுத்தினாள்.
“ஏய் வேண்டாமடி….. ஏதும் சொல்லாதே….. அமைதியா இரு……”
“என்ன திமிர் பார்த்தியா….. என்னைத்தான் கிண்டல் பண்ணிப் பாடிட்டு இருக்கானுங்க…. இவங்களை சும்மா விடக் கூடாது…..” என்று திரும்பியவளை தன்னை நோக்கித் திருப்பியவள், “ப்ளீஸ் இளா…. இதெல்லாம் தினமும் நடக்கறது தான்…. நாம எதோ சொல்லப் போனா, நாளைக்கு தனியா வரும்போது வம்பு பண்ணுவாங்க…. ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருடி….” என்றாள் வீணா.
“நீ ஒரு வீணாப் போனவடி…. உன்னைப் பத்தி தெரிஞ்சு தான் உங்க வீட்ல இந்தப் பேரை வச்சிருக்காங்க…..” என்றவள் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமைதியாய் இருந்தாள்.
அடுத்து ஒரு நிறுத்தத்தில் பிரேக்கிட்டதும் பின்னில் நின்று கொண்டிருந்தவன் அவள் முதுகில் நன்றாய் சரிய அவளுக்கு உடம்பெல்லாம் தீப்பிடித்தது போல எரிந்தது. அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பள்ளி மாணவியின் மீது மற்றொருவன் வெகு நேரமாய் உரசிக் கொண்டே நிற்க அந்தப் பெண் அவஸ்தையோடு தள்ளித் தள்ளி நெளிந்து கொண்டு நின்றாள். அதைக் கண்டதும் இலக்கியாவின் கோபம் அதிகமானது.
“மிஸ்டர்…. கொஞ்சம் தள்ளி நில்லுங்க…. இப்படி மேல வந்து விழுந்தா லேடீஸ் எல்லாம் எப்படி நிக்கறது…..” சீறினாள். வீணாவின் முகம் கலக்கத்தைக் காட்ட, இலக்கியாவின் முகத்தில் கோபக்கனல் வீசத் தொடங்கியது.
“ஹலோ….. என்னம்மா…. காலைல சவுண்ட கிளப்பறே……. பஸ்சுல வந்தா அப்படி இப்படி மேல உரசத்தான் செய்யும்….. அதுக்கு என்ன பண்ணுறது…. அப்படி மேல கை படக் கூடாதுன்னா தனியா வண்டில வாங்க…… இந்தக் கூட்டத்துல நிக்கறதே பெருசா இருக்கு…. இதுல மேல படுது…. கீழ படுதுன்னுட்டு…..” என்று அவன் கொச்சையாய்ப் பேச அவளது முகம் கடினமானது.
இலக்கியா பேசுவது பேருந்தின் பின்பகுதியில் நின்று கொண்டிருந்த விக்ரமின் காதில் விழவும் அவன் எட்டிப் பார்த்தான். அந்த தடியன்களைக் கண்டதும் விஷயத்தைப் புரிந்து கொண்டு இவர்களை நோக்கி வந்தான்.
அதற்குள் அடுத்த பேருந்து நிறுத்தம் வந்திருக்க, அந்த தடியன் பள்ளி மாணவியின் மீது முழுவதுமாய் சரிந்து எழுந்தான். அவனது கைகள் அவளது படக்கூடாத பாகங்களில் அழுத்தமாய் பதிய அப்பெண்ணின் கண்ணில் சட்டென்று நீர் துளிர்த்தது. அதைக் கண்டதும் இலக்கியாவின் மனதில் தீ பற்றிக்கொள்ள அந்த தடியனை ஓங்கி ஒரு அறை விட்டாள்.
“ஏய்…. என்ன திமிர் இருந்தா என் மேல கை வைப்பே…..” என்று அவளது கையை அந்த தடியன் பிடித்து வைக்க உதறியவள், “நீ அந்தப் பொண்ணு மேல கை வச்சதால தாண்டா நான் உன் மேல கை வைக்க வேண்டியதாப் போயிருச்சு…… ஒழுங்கு மரியாதையா கீழ இறங்கு…… உன்னை மாமியார் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக வண்டி அனுப்பி இருக்காங்க….” என்று அவள் கூறவும், நான்கைந்து பேர் அவளுக்கு சாதகமாய் பேசிக் கொண்டு வர, அவனைக் கீழே இறக்கி விட்டனர்.
அங்கே ஒரு போலீஸ் ஜீப் நின்று கொண்டிருக்க அந்த தடியனைப் பிடித்து வண்டியில் ஏற்றினர். நடப்பதை அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் வீணா. அந்த பள்ளி மாணவி இலக்கியாவிடம், “ரொம்ப தேங்க்ஸ் கா…..” என்றாள் கலங்கிய முகத்துடன்.
“என்னம்மா இது….. அந்த தடியன் எத்தனை நேரமா உன்னை உரசிட்டே நிக்குறான்….. நீ அமைதியா இருக்கே…… இப்படி போனாப் போகுது… பிரச்சனை ஆகிடும்னு நினைச்சு நாம விலகிப் போறதால தான் ஒவ்வொருத்தனும் பயமில்லாம நடந்துக்கறான்…… சரி…. இனியாவது  இந்த மாதிரி ஆளுங்க கிட்டே கவனமா இரு…..” என்றவள் அவர்களின் நிறுத்தம் வந்ததும் இறங்கினர்.
பின் பக்கத்தில் இருந்து இறங்கிய விக்ரம் அவளது செய்கையில் திகைத்து அவர்களுக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான்.
“ஏய்…… இளா…. எங்கிருந்துடி உனக்கு இவ்ளோ தைரியம் வந்துச்சு….. அவனுங்களைப் பார்த்தாலே ரவுடிங்க மாதிரி இருக்கு….. நாளைக்கு தனியா போகும்போது வம்பு பண்ணினா….. சரி எப்படி அந்த நேரத்துக்கு சரியா போலீஸ் வந்துச்சு……” என்றாள் வீணா அதிசயத்துடன்.
“அடி வீணாப் போனவளே….. எல்லாத்துக்கும் இப்படி அதிசயப் பட்டுகிட்டே இரு….. நான் பஸ்ல ஏறினதில் இருந்தே இவனுங்களை கவனிச்சுகிட்டு தான் இருந்தேன்….. கூட்டத்தைக் காரணமா வச்சு ஓவரா உரசிட்டு இருந்தாங்க… அதான் இந்த பஸ் நம்பரைப் போட்டு போலீஸ்க்கு ஒரு மெசேஜைத் தட்டி விட்டேன்….. அவங்களும் சரியா வந்துட்டாங்க….” என்றவள் கம்பீரமாய் புன்னகைத்தாள். அவளிடம் இருந்த துணிச்சல் அவளுக்கு தனி அழகைக் கொடுத்தது.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே பின்னில் வந்த விக்ரமின் உதட்டில் மெச்சுதலாய் ஒரு புன்னகை விரிந்தது. கல்லூரிக்குள் நுழைந்தவனை எதிர்கொண்டான் நண்பன் வினோத்.
“என்னடா மச்சி….. இன்னைக்கு காலைலேயே உன் முகத்துல ஆயிரம் வாட்ஸ் லைட் எரியுது….. மொபைலுக்கு போட வேண்டிய சார்ஜரை உன் மூஞ்சிக்குக் கொடுத்துட்டியா…..” என்றான் மலர்ந்த முகத்துடன்.
அவனது நக்கலைக் கேட்டதும் விக்ரமின் முகத்தில் இருந்த புன்னகை மேலும் அதிகமானது.
“ஹஹா….. உனக்கு ரொம்ப தான் லொள்ளு…..” என்றவன், “இன்னைக்கு பஸ்ல ஒரு சம்பவம் நடந்துச்சு….. சுத்தி இருக்குறவங்களுக்கு என்ன நடந்தா எனக்கென்னன்னு கண்டும் காணாம வேடிக்கை பார்க்குற மனுஷங்களுக்கு மத்தியில ஒரு பொண்ணு துணிச்சலா தெரிஞ்சா…… ஒரு பொறுக்கிப் பயலுக்கு எதிரா அவ பொங்கி எழுந்ததைப் பார்த்தேன்….. நம்ம காலேஜ்லயே அப்படி ஒரு துணிச்சலான பொண்ணு இருக்குறதைப் பார்த்ததும் மனசுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கு…..” என்றவன், பஸ்ஸில் நடந்த சம்பவத்தைக் கூறினான்.
“ம்ம்…. இந்த மாதிரி எல்லாப் பொண்ணுங்களும் துணிச்சலா நடந்துகிட்டா இந்தப் பொறுக்கிப் பசங்க இப்படி செய்யவே யோசிப்பாங்க…… யாருடா….. அந்தப் பொண்ணு…..” என்றான் வினோத்.
அதைக் கேட்டதும் விக்ரமின் முகத்தில் ஒரு மென்மை படர அவனது கண்ணில் சிறு புன்னகை தெரிந்தது. அதை வியப்புடன் கவனித்துக் கொண்டே நண்பன் கண்ணால் காட்டிய திசையில் திரும்பினான் வினோத். அங்கே தோழிகளுடன் நின்று கலகலத்துக் கொண்டிருந்தாள் இலக்கியா. அவளைக் கண்டதும் அவனது புருவம் ஆச்சர்யத்துடன் மேலேறியது. நண்பனின் முகத்தை யோசனையுடன் பார்த்துக் கொண்டே அவனுடன் அவர்களைக் கடந்து வகுப்புக்கு நடந்தான்.
நாட்கள் அழகாய் சிறகடிக்க அவர்களது கல்லூரியில் நடந்து முடிந்த கதை, கவிதைப் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா அன்று நடைபெறுவதாக இருந்தது. அதற்காய் அனைவரும் கலையரங்கில் கூடியிருக்க வெற்றி பெற்றவர்களின் பெயரைக் கூறி மேடைக்கு அழைத்ததும் மாணவ மாணவிகளின் உற்சாகத்திலும் கரகோசத்திலும் கலையரங்கமே அதிர்ந்தது.
வெற்றி பெற்ற கவிதை, கட்டுரைகளை எழுதியவர்களே வாசித்துக் காட்டி பரிசைப் பெற்றுக் கொண்டு, மாணவர்களின் உற்சாக கரகோஷத்தையும் பெற்றுக் கொண்டு கீழிறங்கினர். ஜூனியர் மாணவர்களின் பெயரைத் தொடர்ந்து சீனியர் மாணவர்களின் பெயரை அழைத்தனர்.
எத்தனை விதமான கற்பனைகள்….. எல்லா கவிதைகளையும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள் இலக்கியா. அவளுக்கு கதை, கவிதைகளை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும், தானும் எழுதி மற்றவர்களை சோதிக்க இன்னும் முன்வரவில்லை. அடுத்து ஸ்டேஜில் அழைத்த பெயரைக் கேட்டதும் அவளது முகம் தானாகவே சுளிந்தது.
“அடுத்து கவிதையில் முதல் பரிசு….. விக்ரம்….. இந்த கவிதை சிறந்த கவிதையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு நமது கல்லூரி சிறப்பிதழில் இடம் பிடிக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்….. விக்ரம்….. மேடைக்கு வாங்க……” என்று நிகழ்ச்சி தொகுப்பாளினி அழைக்கவும், மாணவர்களிடையே எழுந்த கரகோஷம் அடங்க வெகுநேரமானது.
தயக்கத்துடன் மேடையேறிய விக்ரமைக் கண்டு இலக்கியாவின் முகம் வெறுப்புடன் சுருங்கியது.
“ஏய் வீணா….. என்னடி… இவனுக்குப் போயி கவிதையில் முதல் பரிசுன்னு சொல்லுறாங்க…… இவனே ஒரு ரவுடி…. இவனுக்கு கவிதை எழுதத் தெரியுமாங்கறதே டவுட்டா இருக்கு……… ஒருவேளை கவிதை தேர்ந்தேடுக்கிறவங்களை மிரட்டி பரிசு கொடுக்க வச்சுட்டானோ…..” என்று கிசுகிசுத்தாள் இலக்கியா.
“ஏய்…. அப்படில்லாம் சொல்லாதே….. ஒருத்தரைப் பத்தி முழுசா தெரியாம அவங்களை மதிப்பிடறது தப்பு….. ஒருவேளை இவர் நல்லா எழுதக் கூட செய்யலாமே……” என்று விக்ரமுக்கு சப்போர்ட்டினாள் வீணா.
“ஹூக்கும்….. நீ ஒருத்தி…..” என்றவள் அமைதியாய் மேடையை கவனிக்கத் தொடங்கினாள்.
முதலில் தயக்கத்துடன் மைக்கின் முன்பு வந்து நின்றவன் ஒரு நிமிடம் தன்னை நிதானித்துக் கொண்டு கம்பீரமான குரலில் அந்தக் கவிதையை வாசிக்கத் தொடங்கினான்.
தொடக்கத்தில் ஏனோ தானோவென்று கவனித்துக் கொண்டிருந்த இலக்கியாவின் முகத்தில் பல பாவ மாற்றங்கள். அவன் அந்தக் கவிதையின் இறுதி வரிகளைப் படிக்கையில் குரல் உடைந்து கரகரத்ததை அனைவரும் உணர முடிந்தது.
அந்தக் கவிதை வரிகளில் அனைவரின் மனதிலும் வலியோடு ஒரு கனம் வந்து அமர்ந்து கொள்ள சில நிமிட மௌனத்திற்குப் பிறகு எழுந்த கரகோஷம் அடங்குவதற்கு வெகு நேரமானது.
தன்னையறியாமல் நெகிழ்வுடன் கைதட்டிக் கொண்டிருந்த தோழியை பெருமையுடன் திரும்பிப் பார்த்தாள் வீணா.
“என்னுடையை வார்த்தை பொய்யாகவில்லை பார்த்தாயா……” என்பது போல.
விக்ரம் பரிசை வாங்கிக் கொண்டு கீழே இறங்கிய பின்னும் அவனது வலி நிறைந்த கவிதையின் குரல் அவள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அவனையே ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் இலக்கியா.
குழந்தை தின்னும் பூச்சாண்டி…..
அரும்பு விடத் தொடங்கு முன்னே
வேரோடு பிடுங்கி எறிந்த அரக்கனே……
கொடிய மிருகத்தினும் துன்பமிந்த
பாலியல் கொடுமை தரும் பேய்களே….
யாரை நம்பி வெளியுலகம் அனுப்புவது…..
பசியோடு காம வேட்டைக்கு திரியும்
மிருகங்களிலும் சேராத ஜந்துக்களை
யாரென்று அடையாளம் காட்டுவது…… 
குழந்தையும் தெய்வமும் ஒன்றென்று
புரியாமல் காம வெறி தீர்க்க
அலைந்திடும் மனித மிருகமே……
உன் உருவப்படம் ஒன்றைத் தந்துவிடு….
இவன்தான் குழந்தைகளை
உயிரோடு தின்னும் பூச்சாண்டி
என்று எங்கள் பிள்ளைகளை
எச்சரித்து விடுகிறோம்…..

Advertisement