Advertisement

“என்ன… யாரும் எதுவும் பேசாம இருக்கீங்க… இளா எங்கேம்மா…” லலிதாவை அவன் அம்மா என்றே அழைத்தான்.
“உங்க ரூமுல இருப்பா மாப்பிள்ளை… அவகிட்டயே கேளுங்க…” என்றவர் அமைதியாகி விட, “என்னடா இது… யாருமே வாயைத் திறக்க மாட்டேங்கிறாங்க…” யோசித்துக் கொண்டே அவர்களின் அறையை நோக்கி நகர்ந்தான். தாளிட்டிருந்த கதவை மென்மையாய்த் தட்ட, கதவைத் திறந்த இலக்கியாவை திகைப்புடன் நோக்கினான் விக்ரம்.
இளநீல மென்பட்டில் அங்கங்கே மயில்ப் பச்சை வண்ணம் சிதறி இருக்க தளர்வாய் பின்னிய கூந்தல் இடுப்பைத் தாண்டி நீண்டிருக்க மிதமாய் செய்திருந்த ஒப்பனையும் அளவாய் அணிந்திருந்த நகையும் தலையில் வைத்திருந்த மல்லிகைப் பூவும் அவள் அழகை அதிகமாக்கிக் காட்ட கண்ணெடுக்காமல் பார்த்து நின்றான் விக்ரம்.
அவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவளின் உடலில் இருந்த ரத்தம் முழுதும் ஒன்றாக முகத்தில் பாய்வது போலத் தோன்ற நாணத்துடன் குனிந்து கொண்டாள்.
இலக்கியா கறுப்பென்றாலும் அழகிதான்… ஆனால் இப்படியெல்லாம் அழகாய் அலங்கரித்துக் கொண்டு அவன் கண்டதில்லை. அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள் குரலைக் கனைத்துக் கொண்டு, “போயி குளிச்சிட்டு வாங்க விக்ரம்…” என்றாள்.
மந்திரித்து விட்டவனைப் போல தலையை உலுக்கிக் கொண்டவன் காக்கி உடையைக் களைந்து வேகமாய் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான். அவனது மனதும் உடலும் ரசாயன மாற்றங்களின் பிடியில் சிக்கி ஏதேதோ தேவைகளுக்காய்த் தவிக்க ஷவரின் அடியில் சிறிது நேரம் நின்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன் குளித்து முடித்து வெளியே வரவும், அவனுக்காய் உடையை எடுத்து வைத்துக் காத்திருந்தாள் இலக்கியா.
ஏதேதோ கேள்விகள் மனதில் முளைத்து உதடுகளுக்குள் வந்து நின்றாலும் எதுவும் பேசாமல் அமைதியாய் அந்த புதிய உடையை எடுத்து அணிந்து கொண்டான். நீல நிற ஷர்ட்டும் வெள்ளை நிற பாண்ட்டும் அவனுக்கு மிக அழகாய் இருந்தது. கண்ணாடியின் முன்பு நின்று தலை சீவிக் கொண்டிருந்தவனின் கண்கள் பின்னில் நின்ற இலக்கியாவின் மீது படர, அவனை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த அவள் விழிகள் சட்டென்று பாதையை மாற்றிக் கொண்டன. அவன் இதழ்கள் புன்னகைத்துக் கொள்ள கண்களில் காதல் வழிந்தது.
“இளா… இன்னைக்கு என்ன விசேஷம்… எல்லாரும் ஏதோ பங்ஷனுக்கு வந்தவங்க போல ரெடியாருக்காங்க… ஆனா எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க… நீயாவது என்ன விசேஷம்னு சொல்லேன்…” என்றான் அந்த ஆறடி வளர்ந்த அப்பாவி இளைஞன்.
புன்னகையுடன் அவன் முன்னில் வந்து நின்றவள், “கையை நீட்டுங்க…” என்றாள் அதிகாரத்துடன். அவன் தோளைக் குலுக்கிக் கொண்டு கை நீட்ட தன் கையில் வைத்திருந்த அழகான தங்க தண்டையை அவன் கையில் அணிவித்தாள்.
அதை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தவன், “இப்ப இது எதுக்கு இளா…. புது டிரஸ் வேற எடுத்திருக்கே…” என்றான் புரியாமல். அவனது கையைப் பற்றி குலுக்கியவள், “இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் விக்ரம்…” என்றாள் புன்னகையுடன்.
திகைப்புடன் நின்றவனின் அருகில் வந்தவள் அவன் கன்னத்தில் மென்மையாய் முத்தமிட்டு, “ஹாலுக்கு வாங்க…” என்று சொல்லிவிட்டு வேகமாய் சென்றுவிட்டாள்.
நடந்தது நினைவா, கனவா என்பது புரியாமல் ஆச்சர்யத்துடன் நின்று கொண்டிருந்தவனின் மனதில் இனிய சாரல் அடிக்கத் தொடங்கியது.
அதற்குப் பிறகு எல்லாமே சந்தோஷத்துடன் நடக்க, பல வருஷங்களுக்குப் பிறகு அவனது பிறந்த நாள், கேக் வெட்டி உறவுகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிமிடத்திற்கொரு முறை அவனது விழிகள் காதலோடு இலக்கியாவைத் தழுவிக் கொண்டிருக்க அவளது விழிகளும் அவ்வப்போது அதை உரசிச் சென்றன. அதை உணர்ந்த மற்றவர்களுக்கும் மனது நிறைந்தது. பாட்டி, லலிதா, வினோத், வீணா, வினோதினி அனைவரும் விதவிதமாய் அன்போடு பரிசுகளைக் கொடுக்க சந்தோஷத்தில் கண்கள் நிறைந்து போயிற்று விக்ரமுக்கு.
வீணா, இலக்கியாவின் காதில் “கள்ளி… அண்ணாக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திட்டே போலருக்கு… அவர் முகத்துல தவுசண்ட் வாட்ஸ் பல்பு பிரகாசமா எரியுது…” என்று கிண்டலடிக்க அவள் முகத்தில் நாணமாய் பூத்த புன்னகை அதை உறுதி செய்தது.
விக்ரமின் மனம் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது. அவன் எதிர்பார்த்தது இதுதானே… அன்பான ஒரு குடும்பம் இன்று அவனுக்கும் சொந்தம்… அதற்கு காரணமானவள், கலைந்து போன வாழ்வின் இலக்கணத்தை மாற்றி எழுதியவள் அமைதியாய் அதை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளை எப்போது தனிமையில் சந்திப்போம் எனக் காத்துக் கொண்டிருந்தவன் எல்லாரும் இரவு உணவு முடிந்து கிளம்பக் காத்திருந்தான்.
வீணாவை வினோத் வீட்டில் விடுவதாக சொல்லி அழைத்துச் சென்றான். வினோதினி குழந்தையை உறங்க வைக்கப் போவதாக சொல்லி அவள் அறைக்கு சென்றுவிட பெரியவர்களும் நாசூக்காய் அவர்களுக்கு தனிமை கொடுத்து சீக்கிரம் அவரவர் அறைக்கு சென்று விட்டனர்.
வெகு நேரமாய் அவளுக்காய் அவன் அறையில் காத்திருக்க அவளைக் காணவே இல்லை. அவனது கண்களில் வழிந்த காதலை உணர்ந்தவள் அதை நேரிடத் தயங்கியே அடுக்களையில் ஏதேதோ செய்து நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள். அவள் மனதுக்குள் இப்போது ஒருவித பயமான தயக்கம் நெருடிக் கொண்டே இருந்தது. நேரம் கடந்து கொண்டிருக்க பொறுமை இழந்தவன், அவளைத் தேடி ஹாலுக்கு வர அவள் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஓ… நான் தூங்கின பிறகு ரூம்க்கு வரலாம்னு காத்திருக்கியா…” புன்னகைத்துக் கொண்டவன், அவளுக்குப் பின்னில் வந்து நின்று காதுக்கருகில் குனிந்து, “என் செல்லப் பொண்டாட்டிக்கு இன்னும் தூக்கம் வரலையா…” என்றான் கிசுகிசுப்பாக. திடுக்கிட்டுத் திரும்பியவள், படபடப்புடன் எழுந்து நின்றாள்.
“என்ன விக்ரம் இது… நான் பயந்துட்டேன்…”
“ஓ… சரி வா… நாம தூங்கலாம்…” எனவும், “நீங்க போங்க… நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்…” என்றாள் அவள். சட்டென்று அருகில் வந்து அவளை அப்படியே தூக்கியவன்,
“ரூமுக்கு வராம நேரத்தைக் கடத்திட்டு இருக்கியா…” என கேட்டுக் கொண்டே அறையை நோக்கி நடந்தான்.
“என்ன விக்ரம் இது… யாராவது பார்க்கப் போறாங்க… இறக்கி விடுங்க…” சிணுங்கியவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை.
“என் பொண்டாட்டியை நான் தூக்கறேன்… அப்படி யாராவது பார்க்கறது தான் உன் பிரச்சனைன்னா எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க…” சொல்லிக் கொண்டே அறைக் கதவைத் திறந்து அவளை கட்டிலில் விட்டவன் கதவைத் தாளிட்டு வர அவளது இதயம் வேகமாய்த் துடிக்கத் தொடங்கியது.
எழுந்து அமர்ந்திருந்தவளின் அருகில் வந்தவன், “இளா… உன் மடியில் படுத்துக்கட்டுமா… ப்ளீஸ்…” என்றவன் மடியில் படுத்துக் கொண்டான். அவன் வேறு எதோ செய்யப் போகிறான் என நினைத்தவளின் எதிர்பார்ப்பு புஸ்வானமாகிப் போக முழித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை நோக்கிப் புன்னகைத்தவன், அவள் கையை எடுத்து அவன் நெஞ்சில் வைத்துக் கொண்டான்.
“இளா… இன்னைக்கு நான் எவ்ளோ ஹாப்பியா இருக்கேன் தெரியுமா… ரொம்ப வருஷத்துக்குப் பிறகு நான் இழந்த எல்லாமே திரும்ப கிடைச்சுட்ட போலத் தோணுது… இதெல்லாம் உன்னால கிடைச்சது… இந்த சந்தோஷம் நீ தந்தது… ரொம்ப தேங்க்ஸ்மா…” நெகிழ்ச்சியுடன் கூறியவனின் கண்கள் பனித்திருக்க அவள் கையில் மென்மையாய் முத்தமிட்டான்.
அத்தனை கம்பீரமான ஆண்மகன் தன் மடியில் குழந்தையாய் கிடந்து கண் கலங்குவதைக் கண்டு அவள் மனமும் கனிந்தது.
“இல்லை விக்ரம்… இந்த சந்தோசம் நீங்க தந்தது… உங்களுக்கு இந்தக் குடும்பமே கடமைப்பட்டிருக்கு… துரோகமும் இழப்புமா கதிகலங்கி எப்படியெல்லாமோ போயிருக்க வேண்டிய குடும்பத்தை உங்களோட அன்பும் அருகாமையும் தான் சந்தோஷமா மாத்தி இருக்கு… இலக்கணப் பிழையா இருந்த என் வாழ்க்கையை சரி பண்ணி இந்த குடும்பத்துக்கே வாழ்க்கை கொடுத்திட்டீங்க… யூ ஆர் கிரேட்… தேங்க் யூ விக்ரம்…” அவனது சிகையை தாயாய் வருடிக் கொடுத்தவளை ஆசையோடு நோக்கியவன்,
“நமக்குள்ள இனியும் இந்த தேங்க்ஸ் எல்லாம் வேணுமா பொண்டாட்டி… இந்த இலக்கியா மாறாம இலக்கணம் எப்படி மாறுமாம்…” என்றான் ஒற்றைக் கண்ணை சிமிட்டிக் கொண்டு குறும்புடன். அந்த கண் சிமிட்டல் அவள் இதயத்துக்குள் மறைந்து கிடந்த உணர்வுகளைத் தட்டி எழுப்ப ரசனையுடன் சிரித்துக் கொண்டாள்.
“அதெல்லாம் எப்பவோ மாறியாச்சு புருஷரே… ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கறீங்களாக்கும்…” அவன் காதைப் பிடித்து திருக, “அடிப்பாவி… ஒரு போலீஸ்காரன் மேலயே கை வைக்கறியா நீ… உன்னை…” என்றவன் அவள் முகத்தை அருகே இழுத்து சிரித்த அந்த இதழை சிறைபிடித்தான்.
“இளா… ஐ லவ் யூ… ஐ லவ் யூ சோ மச் டியர்…” அவளை அணைத்துக் கொண்டு கூறியவனின் காதல் வார்த்தைகள் காதில் கரைய அதில் அவளும் கரையத் தொடங்கினாள். இனியும் இந்தக் காதலைத் தொலைத்து விடக் கூடாது என்பது போல் இறுக்கமாய் அணைத்துக் கொண்டவள்,
“ஐ டூ லவ் யூ விக்ரம்… என்னை எனக்கே திருப்பித் தந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் டா…” பிழை மாறிய இலக்கணம் உண்மைக் காதலில் கரையத் தொடங்கியது.  இலக்கியமாய் அவர்கள் காதல் வாழட்டும் என வாழ்த்தி விடை பெறுவோம்…
துரோகமென்னும் விஷத்தினால்
துடிதுடித்த மனதொன்று
துளிர்க்கத் தொடங்கியது மீண்டும்
தூயவனின் தூய்மை அன்பால்……
கலங்கிய காலமெல்லாம்
காலத்தில் கரைந்து போக
காதலென்னும் ஜோதியிலே
கலந்திட்டாள் கண்மணியே…….
இலக்கணப் பிழையாக
இல்வாழ்வில் வந்து விட்ட
இன்னலொன்று இல்லாமல் போனதின்று…..
இலக்கணமும் மாறியது…… மனம்
இன்னிசை தான் பாடியது…….
……..சுபம்…….

Advertisement