Advertisement

இலக்கணம் – 30
மனதுக்கு பிடித்தவர்களிடமே கோபம், ஆற்றாமை நம்மை மீறி கண்ணீராக வெளிப்படுகிறது… பிறகு கண்ணீர் கரைந்து சிரிக்கவும் வைக்கிறது. இலக்கியாவும் அந்த மனநிலையில் தான் இருந்தாள்.
தன்னுடைய வேதனை தாயையும், பாட்டியையும், துக்கத்தை மறைத்துக் கொண்டு குழந்தையுடன் வளைய வரும் வினோதினியையும் பாதித்து விடக் கூடாது என்பதற்காய் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவளுக்குள்ளேயே உருகிக் கொண்டு, விக்ரமின் அன்பை ஏற்கவும் முடியாமல், அவனது உண்மையான நேசத்தை புறக்கணிக்கவும் முடியாமல் மனதை இறுக்கிப் பிடித்து வைத்திருந்தவளின் மனக்கயிறு அழுத்தம் தாளாமல் அறுந்து போய் அவனிடமே அவளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.
கேவிக் கேவி அழுது கொண்டிருந்தவளை கால் வலியுடன் தாங்கிக் கொண்டு நின்றிருந்தவன் சிறிது நேரம் அழ விட்டான். அவளது மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.
இப்போது அவளுக்கு தேவை மனதிலுள்ள துக்கத்தை கொட்ட ஒரு வடிகால் எனப் புரிந்து கொண்டவன், அழுது கொண்டிருந்தவளை மெல்ல விலக்க முயற்சிக்க அவனது கைகளைத் தட்டிவிட்டவள் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.
“இளா… போதும் அழுதது… இதுக்கு மேல அழுதா என் டீஷர்ட் புல்லா நனைஞ்சிடும்… விட்டா தமிழ்நாட்டு தண்ணிப் பஞ்சத்தையே தீர்த்து வச்சிடுவ போலருக்கு…” என்று அவள் முகத்தை நிமிர்த்தி அவன் வேடிக்கையாய் கூற, நிமிர்ந்தவள் அவனது காதல் வழிந்த கண்களைப் பார்க்க முடியாமல் பார்வையை மாற்றிக் கொண்டு அவசரமாய் விலகினாள்.
அவளை மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டவன், “இளா… இனி நீ அழக்கூடாது… உன்னோட அன்புக்குத் தகுதி இல்லாததால தான் உனக்கு அது நிலைக்காம போயிருச்சுன்னு நினைச்சுக்க… போதும் அழுதது…” அவள் கண்ணைத் துடைத்து விட்டவன், “இளா… இனி என்னையும் கொஞ்சம் யோசிக்கக் கூடாதா… கால் ரொம்ப வலிக்குது…” என்றான் பரிதாபமாக.
அப்போது தான் அவனது கால் வலி நினைவு வந்தவள், “அச்சச்சோ… சாரி விக்ரம்… ரொம்ப வலிக்குதா… சீக்கிரம் கிளம்புங்க… டாக்டர்கிட்டே போகலாம்…” என்று பதறி விலகப் போக, “அப்ப வலிச்சது… இப்ப வலி தெரியாத மாதிரி இருக்குது…” என்றான் அவளது நெற்றியில் செல்லமாய் முட்டிக் கொண்டு.
சட்டென்று அவள் முகத்தில் ஒரு நாணத்தின் ரேகை பரவியது.
 
“நீ என் பக்கத்துல இருந்தா வலி கூட விலகிப் போயிடும்  இளா…”
ஆசையோடு வந்த விக்ரமின் வார்த்தைகள் அவள் முக சிவப்பை அதிகமாக்க மெதுவாய் விலகப் போனவளின் காதுகளில் அவனது காதலை சுமந்திருந்த வார்த்தைகள் ஆசையோடு உரசின.
கண்டு கொண்டேன்
கண்ணம்மாவை…..
காலமெல்லாம்
கவி சொல்லிக் காதலிப்பேன்…..
பாரதியாய் நானில்லை……
ஆயினும் என் காதலுக்கு
உயிர் கொடுத்திடு கண்ணம்மா…..
நாளும் ஒரு கவி பாடி
நம் காதலைக் காதலிக்கிறேன்…..
இன்னொரு பாரதியாய்……
அந்த வார்த்தைகள் கனத்த மனதை லேசாக்க, கண் மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள் மெல்ல விலகினாள். அவன் கைபிடித்து சோபாவில் அமர வைத்தவள் அருகில் அமர்ந்தாள்.
ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவள், “விக்ரம்… உங்க அன்பு எனக்குப் புரியாமலில்லை… பழைய நினைவுகள்ள நான் கரையவுமில்லை… இந்த அன்புக்கு நான் தகுதியானவளான்னு தெரியாம தான் திணறுறேன்… வெறும் வார்த்தைல மட்டுமே காதலை தெரிஞ்சிருந்த நான் உண்மையான உங்க காதலின் வலிமையை உணர்ந்து தவிக்கிறேன்… பால்ல கலந்த தண்ணீர் மாதிரி என் உணர்வுல கலந்திட்ட நினைவுகளைப் பிரிச்செடுக்க முடியலை… சின்ன வயசுல இருந்து எனக்குள்ள கலந்திட்ட அந்த நினைவுகளும் ஆசைகளும் என்னை சாபக் கேடாய் இப்பவும் துரத்திட்டிருக்கு… அது எப்பவும் உங்க காதலை சீண்டிப் பார்த்துடக் கூடாதுன்னு தான் நான் விலகிப் போறேன்…” கண்ணீரோடு வந்த அவளது வார்த்தைகளின் வலி அவனை சுட்டது.
“இளா… நீ எப்பவும் நீயாகவே இரு… உன் மனசு எப்ப என்னை ஏத்துக்குமோ அது வரைக்கும் நான் காத்திருக்கேன்… யாருமே இல்லாத எனக்கு எல்லா உறவுகளும் உன் மூலமா கிடைச்சா ரொம்ப சந்தோசப் படுவேன்… உனக்கு எப்ப என்னை ஏத்துக்க தோணுமோ… ஏத்துக்க… ஒருவேளை வாழ்நாள் முழுதும் ஏத்துக்க முடியாமலே போனாலும் பரவாயில்லை… என்னோட நீ இருந்தா போதும்… உன்னோட நட்பு போதும்… உன் அருகாமை போதும்… அதுக்கு கல்யாணம்ங்கிற அங்கீகாரம் மட்டும் தந்தா போதும்… உனக்கு ஒரு காவலனா என் காதலை நான் சந்தோஷமா கடந்திடுவேன்… என்னை ஏத்துக்குவியா இளா…” அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டவனை அதற்கு மேல் சோதிக்க அவள் விரும்பவில்லை.
“சரி விக்ரம்… உங்க எல்லாரோட விருப்பத்தையும் நான் மதிக்கறேன்… நான் அந்த துரோகியை நினைக்கலை… அவனைப் பத்தி யோசிக்கறதை கூட வெறுக்கறேன்… என் காதல் தோத்துப் போனாலும் உங்க காதலாவது ஜெயிக்க நானும் முயற்சிக்கிறேன்… அதுக்கு சில காலம் ஆகலாம்… நீங்க காத்திருப்பிங்களா…” என்றவளை அன்போடு பார்த்தவன்,
“என் காதல் சீக்கிரமே உன்னை என்னோடு சேர்க்கும்னு நம்பறேன்… உனக்காக எத்தனை காலம் வேணும்னாலும் உன்னோடு காத்திருக்கிறேன்…” உயிர்ப்போடு கூறியவனை பிரமிப்போடு பார்த்தாள் அவள்.
ஆறு மாதத்திற்குப் பிறகு….
இலக்கியா மிசஸ் விக்ரமாய் மாறி சில மாதங்கள் ஆகி இருந்ததில் வீடு பழைய சந்தோஷத்திற்கு மெதுவாய் திரும்பிக் கொண்டிருந்தது. ஒரே வீட்டில் ஒரே அறையில் இருந்தாலும் கட்டிய மனைவியை அவளுக்குத் தெரியாமல் ரசிப்பதல்லாமல் எந்த உரிமையையும் விக்ரம் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த கண்ணியம் அவளுக்கும் தெரிந்திருக்க அவன் மீதிருந்த மதிப்பு அதிகமாகி இருந்தது.
அவளுடன் குவாரிக்கு சென்று வருவது முதல் திரும்பி வருவது வரை எப்போதும் அவனுடனே இருந்ததால் தேவையில்லாத நினைவுகள் அவள் மனதை குழப்புவது மெல்லக் குறைந்து நின்றே போயிருந்தது. அவர்களுக்குள் இருந்த நட்பு மேலும் இறுகியிருக்க எப்போதும் எல்லாவற்றுக்கும் அவனையே அவள் மனம் தேடத் தொடங்கி இருந்தது. அவளுக்குள் அவன் மீது மலர்ந்திருந்த நட்பு காதலாய் மணக்கத் தொடங்கி இருந்ததை அவள் அறிந்திருந்தாலும் அவனிடம் அதை வெளிப்படுத்திக் கொள்ள தயங்கினாள்.
விக்ரமின் கால் சரியானதும் சப் இன்ஸ்பெக்டர் வேலையில் ஜாயின் செய்து விட்டான். இப்போது ஒரு மாதம் ஆகியிருந்தது. வினோதினியை வீட்டில் இருக்க விடாமல் தனக்கு உதவியாய் குவாரிக்கு அழைத்து செல்லத் தொடங்கினாள் இலக்கியா. குழந்தையை லலிதாவும், பாட்டியும் பார்த்துக் கொண்டனர்.
இன்று விக்ரமின் பிறந்த நாள். பல வருடங்களாய் மறந்து போயிருந்த பிறந்த நாளை எல்லா வருடமும் போல இந்த வருடமும் நினைவில்லாமல் விக்ரம் கிளம்பிவிட அவனுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பதற்கு வீட்டினர் தயாராகிக் கொண்டிருந்தனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான பரபரப்பில் இருந்தது இலக்கியாவின் வீடு.
“ஏய் கருப்பட்டி… இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கே.. .என் பேரன் வரும்போது அழுது வடிஞ்சுகிட்டு நிக்காம சீக்கிரம் புறப்படு…” அதிகாரமாய் சொல்லிக் கொண்டே அங்கு வந்தார் பர்வதம்.
“ஹூக்கும்… எடுத்து வச்சிட்டுப் போறேன் கிழவி…” என்றவள் விக்ரமுக்காக ஆசையாய் செய்து வைத்திருந்த கேக்கைக் ஹாலில் இருந்த மேசையில் வைத்தாள்.
“இந்த வீணாப் போனவளும், வினோத்தும் இன்னும் காணமே பாட்டி… அம்மாவும், வினோதினியும் இன்னுமா கடைக்கு போயிட்டு வரலை…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீணா உள்ளே வர தோழியைக் கண்டவளின் முகம் மலர்ந்தது.
“வாம்மா… புதுப் பொண்ணு… இப்பவாவது எங்களைப் பார்க்க வர உனக்கு டைம் கிடைச்சுதே… கல்யாணம் முடிவான பின்னால உன் வுட்பியோட கடலை போடவே நேரம் சரியாருக்கும் போலருக்கு… எப்ப கூப்பிடும்போதும் உன் நம்பர் பிசியாருக்கு…” தோழியை கேலி செய்து கொண்டே வரவேற்றாள் இலக்கியா. முகத்தில் மலர்ந்த நாணப் புன்னகையுடன் அவளிடம் வந்தாள் வீணா.
“பாருங்க பாட்டி… உங்க பேத்தி என்னை கிண்டல் பண்ணிட்டே இருக்கா…” சிணுங்கினாள் பர்வதத்திடம்.
“அவ கிடக்குறா… கல்யாணம், புருஷன்னா எல்லாரும் இப்படிதான் ஆசையா இருப்பாங்க… சந்நியாசியா இருக்க எல்லாருக்கும் முடியுமா…” அமர்த்தலாய் கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார். அவர் சொன்னது இலக்கியாவுக்குப் புரியாமல் இல்லை. மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டவள் தோழியை ஏறிட்டாள்.
“அப்புறம் உன் கல்யாண வேலை எல்லாம் எப்படி நடக்குது… மாப்பிள்ளை எப்ப இந்தியா வராராம்…” என்றாள் வீணாவிடம். வீணாவுக்கு அமெரிக்க மாப்பிள்ளையுடன் கல்யாணம் நிச்சயமாகி இருக்க கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது.
“அவர் இன்னும் ரெண்டு நாள்ல இங்கே வந்திருவாராம்டி…” சொல்லும்போதே அவள் முகத்தில் பூத்த நாணத்தின் ரோஜாக்களை ரசித்துக் கொண்டாள். அப்போது லலிதாவும் வினோதினியும் குழந்தை சங்கவியுடன் கையில் பெரிய கவருமாய் வந்தனர்.
இலக்கியாவைக் கண்டதும் குழந்தை அவளிடம் தாவ அவளை வாங்கியவள், “என் செல்லம், மாமாக்கு கிப்ட் வாங்கப் போயிருந்தீங்களா… என்ன வாங்கிட்டு வந்திங்க…” கேட்டுக் கொண்டே கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
“என்னடி… நீ இன்னும் இப்படியே நின்னுட்டு இருக்கே… மாப்பிள்ளை வர்றதுக்குள்ளே போயி குளிச்சு புறப்பட்டு வா…” மகளை முக சுளிப்புடன் அதட்டிய லலிதா, “என்னடி புதுப் பொண்ணே… எப்படி இருக்கே…” வீணாவிடம் கேட்டுக் கொண்டே சோபாவில் அமர, “வினோத் அண்ணா இன்னும் வரலியா வீணா…” என்றாள் வினோதினி.
அவள் வினோதையும் விக்ரமைப் போலவே சகோதரனாய் கண்டாள்.
“என்னம்மா எல்லாம் வாங்கிட்டியா…” என்ற பர்வதத்திடம், “ம்ம்… உங்க பேரனுக்கு நீங்க லிஸ்ட் போட்டதெல்லாம் வாங்கிட்டேன் அத்தை…” என்றவர், “மாப்பிள்ளைக்கு கூப்பிட்டியா இளா… எப்போ வருவேன்னு சொன்னாரா…” என்றாள் மகளிடம்.
“அவர் கொஞ்ச நேரத்துல வந்திடறேன்னு சொல்லிருக்கார் மா…” என்றவளின் காதில் அருகில் நின்ற வீணா கிசுகிசுத்தாள்.
“ஏய் இளா… அண்ணாக்கு நீ என்னடி கிப்ட் வாங்கினே…” ஆவலுடன் கேட்டவளிடம், “ப்ச்… நான் ஒண்ணும் வாங்கலைடி…” என்றாள் அவள் அமைதியாக.
“ம்ம்… நீ திருந்த மாட்ட…” என்றவள் முகத்தை நொடித்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் வினோத்தும் வந்துவிட அனைவரும் கலகலப்புடன் ஹாலில் பேசிக் கொண்டிருந்தனர். இலக்கியா உடை மாற்றுவதற்காய் சென்றிருந்தாள். வெகு நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் சந்தோசம் நிறைந்திருந்தது.
சிறிது நேரத்தில் வாசலில் புல்லட்டின் ஓசையைத் தொடர்ந்து விக்ரமின் பூட்ஸ் சத்தம் ஒலித்தது. அனைவரின் விழிகளும் அவனைத் திரும்பிப் பார்க்க காக்கி யூனிபார்மில் நெஞ்சில் நேம் பாட்ஜ் மின்ன ஒரு கையால் தொப்பியை தலையில் இருந்து எடுத்துக் கொண்டே ஸ்டைலாய் சிகையை சரி செய்து கம்பீரமாய் நடந்து வந்தான். அனைவரும் அங்கே இருப்பதைக் கண்டவனின் கண்கள் வியப்பை காட்டியது. அதற்குள் வினோ அனைவரிடமும் கண் சாடை காட்ட அனைவரும் அமைதியாய் இருந்தனர்.
“டேய் வினோ… நீ என்னடா இந்த நேரத்துல இங்கிருக்கே… வீணா நீயுமா… இன்னைக்கு அப்படி என்ன விசேஷம்… என்னை சீக்கிரம் கிளம்பி வான்னு இளா சொன்ன மாதிரி உங்களையும் வர சொல்லிட்டாளா…” என்றவன், “மாமா…” ஆசையுடன் கை நீட்டிய சங்கவியை எடுத்துக் கொண்டான்.
“இன்னைக்கு என்ன, வீடே விசேஷக் கோலத்துல இருக்கு…” யோசித்துக் கொண்டே பார்வையை சுழற்ற அங்கே இலக்கியா இல்லை.

Advertisement