Advertisement

இலக்கணம் – 3
“விக்ரம்…. என்னடா இது…. இப்பல்லாம் நீ ரொம்ப கோபப்படறே……. எதுக்கு அந்தப் பையனைப் போட்டு அப்படி அடிச்சே……” கேட்டுக் கொண்டே விளையாட்டு மைதானத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்த நண்பனின் அருகில் அமர்ந்தான் வினோத்.
கோதுமை நிறத்தில் ஆறடி உயரத்தில் லட்சணமாய் இருந்த விக்ரமின் கண்களில் ஒரு வேட்டைப் புலியின் தீட்சண்யம் இருந்தது. அழகான முடியை ஒதுக்காமல் அலட்சியமாய் விட்டிருந்தான். சிரிப்பை மறந்து போன முகத்தில் ஒரு சூரத்தனம் இருந்தது. திடகாத்திரமான அவனது உடல் ரெகுலராய் ஜிம்முக்கு செல்பவன் என்பதை உணர்த்தியது. இருவரும் MCA இறுதியாண்டு மாணவர்கள்.
நண்பனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் விக்ரம். அவனது தோளில் ஆதரவாய் கை வைத்த வினோத், “என்னடா…. என்ன யோசிச்சிட்டு இருக்கே….. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…… என்ன பிரச்சனை……” என்றான் அமைதியாக.
அவனை தீர்க்கமாய் பார்த்த விக்ரமின் கண்ணில் ஒரு வலி தெரிந்தது.
“பிரச்சனை எனக்கு இல்லடா……. பெண்களை வெறும் சதைப் பிண்டங்களா மட்டும் பார்க்குற இந்த சமூகத்துக்கு தான்…..” என்றவனின் கண்ணில் ஒரு வெறுப்பு தெரிந்தது.
“என்னடா விக்ரம்….. நான் என்ன கேட்டேன்….. நீ என்ன சொல்லறே…..” 
“ம்ம்… அந்தப் பையன் என்ன பண்ணினான் தெரியுமா……” என்றவனின் கோதுமை நிற முகத்தில் ரத்தம் தாறுமாறாய்ப் பாய்ந்து சிவப்பாக்கியது.
“என்னடா பண்ணினான்….. நான் அங்கே இல்லையே….. நீ சொன்னாதானே தெரியும்…..” என்றான் வினோத்.
“காண்டீன்ல கேர்ள்ஸ் இருந்தாங்கள்ள….. ஒரு பொண்ணு டாப்ஸ் கழுத்து இறங்கி இருந்துச்சு…… செல்பி எடுக்குற மாதிரி காட்டிகிட்டு அந்தப் பொண்ணோட முன் பாகத்தை ஜூம் பண்ணி போட்டோ எடுக்கப் போனான்….. இது எதுவும் தெரியாம அந்தப் பொண்ணுங்க பேசி சிரிச்சிட்டு இருக்காங்க…… எல்லார் முன்னாடியும் அந்தப் பொண்ணுகிட்டே சொல்லவும் முடியல…. அதான் எழுந்து அவனோட மொபைலைப் பிடுங்கினேன்….. அவன் மிரண்டுட்டான்….. ஓங்கி ஒரு அறை விட்டுட்டு மெமரி கார்டை எடுத்துட்டேன்……” கழுத்து நரம்பு புடைத்து நிற்கக் கூறியவனின் முகத்தில் கோபத்தின் ஜுவாலைகள்.
அதைக் கேட்டதும் வினோதின் முகத்திலும் மாற்றங்கள்.
“இடியட்…. அவன் அப்படியா பண்ணினான்…… வீட்ல படிக்கறதுக்கு காலேஜ்  வேண்டாததெல்லாம் படிச்சிட்டுப் போறாங்க….. ஊரான் வீட்டுப் பொண்ணை கண்ட மாதிரி பாக்குறதாலே தான் அவன் வீட்டுப் பொண்ணை வேற ஒருத்தன் பாக்குறான்…… இவனுங்களுக்கு எல்லாம் எப்ப தான் புத்தி வரப் போகுதோ……” சீறினான்.
“புத்தி வராதுடா….. நாம தான் வரவைக்கணும்…… சின்னப் பையன்….. எல்லார் முன்னாடியும் விஷயத்தை சொல்லி அவன் படிப்பு பாதிக்கக் கூடாதேன்னு ஒரு அடியோட நிறுத்திட்டேன்….. காலேஜ் முடிஞ்சு வெளியே வரட்டும்….. இன்னைக்கு இருக்கு அவனுக்கு…..” என்றவனின் குரலில் அத்தனை கடினம்.
“ம்ம்…. சரிடா…… எதைப் பண்ணினாலும் உன் படிப்புக்கு பாதிப்பு வராமல் பார்த்துக்கோ….. இன்னும் சில மாசம் தான்….. கொஞ்சம் பொறுமையா இரு…. இல்லன்னா பேரு கெட்டுப் போயிடும்……” என்றவனின் குரலின் நண்பனின் மீதான புரிதலும் அக்கறையும் சேர்ந்தே இருந்தது. விக்ரமின் பார்வை மீண்டும் ஒரு இடத்திலேயே நிலைத்திருக்க வினோதின் பார்வை விக்ரமைப் பற்றிய நினைவில் கலங்கியது.
விக்ரம்….. அவனது கல்லூரியின் கனவு நாயகன்…… அழகும் குறும்புத் தனமும் நிறைந்தவன்….. அவனது கல்லூரிப் பருவத்தின் தொடக்கத்தில் தந்தை மாரடைப்பில் இறந்திருக்க, தாய் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு கிடைத்த பென்ஷனில் சிக்கனமாய் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டார். அவனது ஒரே செல்லத் தங்கை வினயா.
வீட்டுக்கு ஒரே பிள்ளையாயிருந்த விக்ரம் தம்பி, தங்கைக்காய் ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அவனது பத்தாவது வயதில் அன்னையின் வயிற்றில் பூத்த அழகு மலர்….. பெற்றது மட்டும் தான் அன்னை…… தங்கையை கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டு அவளுக்கு எல்லாமாய் இருந்தது அண்ணனே….. தங்கையின் ஒன்பதாம் வயதில் தந்தை இறந்துவிட பத்தொன்பது வயதான விக்ரம் அவளை தந்தை போல பொறுப்புடன் பார்த்துக் கொண்டான்.
என்ன கவனித்தும் பயன் இல்லாமல் அந்த இளம் குருத்து மொட்டாகும் முன்னே ஒரு கயவனின் கையில் சிக்கி சின்னாபின்ன மாக்கப்பட்டது. வினயாவின் பனிரெண்டாம் வயதில் அவர்களது உறவுக்காரன் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான வினயா, எதிர்காலக் கனவுகளை நிறுத்தி, நிகழ்கால நினைவுகளை இழந்து, எதிரகாலம் சூன்யமாக வெறும் சடலமாகக் கிடந்தாள்.
மருத்துவமனையில் தங்கையின் நிலை கண்டு கதறிய விக்ரம், தாயின் பாறையாய் இறுகிய முகம் கண்டு உறைந்தான். வேதனையில் கழிந்த நிமிடங்கள்…. போலீஸ் விசாரணை நடத்திக் கொண்டிருக்க அன்று முழுவதும் மகளை விட்டு நீங்காமல் இருந்த அவன் அன்னை வீட்டுக்கு சென்று வருவதாகக் கூறி கிளம்பினார்.
திரும்பி வந்தவரின் முகத்தில் ஒரு தெளிவு வந்திருக்க, அடுத்த நாள் காலையில் அவனது அன்னைக்கும் தங்கைக்கும் விடியவே இல்லை…… அன்றைய நாளிதழில் அந்த குற்றவாளியை யாரோ துடிதுடிக்க வெட்டிக் கொன்ற சேதி வந்திருந்தது. அவனைக் கொன்று விட்ட திருப்தியில் தான் தன் மூச்சையும் மகளது மூச்சையும் நிறுத்திக் கொண்டார் அந்த அன்னை.
இரவு முழுதும் தங்கையை நினைத்து அழுது களைத்த விக்ரம், காலையில் உறவுகளின் உயிரற்ற உடல்களைத்தான் கண்டான். கண்ணீர் வற்றிப் போகுமட்டும் கதறி புலம்பியவனை அவனது உற்ற நண்பனான வினோதின் நட்பு மட்டுமே மீட்டு வந்தது. படிப்பையே மறந்து கல்லூரிக்கு செல்லாமல் இருந்தவனை வேறு ஊரில் தான் படித்து வந்த கல்லூரிக்கே மாற்றி அவனுடன் ஹாஸ்டலில் தங்க வைத்துப் பார்த்துக் கொண்டான்.
ஒரு வருடமாகியும் தாய், தங்கையின் நினைவில் கலந்குபவனை  தேற்றும் வழியறியாமல் கண்ணீரை மறைத்துக் கொள்வான் வினோத்.
புதிய கல்லூரியில் விக்ரமின் பார்வையும், செயலும், பழக்கங்களும் மாறி இருந்தன. பெண்களிடம் அவமரியாதையாய்ப் பழகுபவர்களை தண்டிக்கத் தொடங்கி இருந்தான். இதுவரை யாரும் அவன் மீது புகார் கொடுக்காமல் இருந்ததால் பிரச்சனை இல்லாமல் சென்று கொண்டிருந்தது.
போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த சத்யாவை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இலக்கியா. அவன் முகத்தில் கோபம் தெரிந்தாலும் வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கொள்ளாமல் அத்தனை நிதானமாய் பொறுமையாய் பேசிக் கொண்டிருந்தான்.
“இங்க பாரு கனகு…… நம்ம வண்டியோட பேப்பர்ஸ் எல்லாமே பக்காவா இருக்கு….. அப்புறம் எதுக்கு செக்போஸ்ட்ல நம்ம லோடு வண்டியைப் பிடிச்சு வைக்கணும்…… நீ பேப்பரை எல்லாம் காட்டி வண்டியை விட சொல்ல வேண்டியது தானே…….”
“இல்லிங்கையா….. அது வந்து…. பர்மிட் பேப்பரை லாரி ஆபீஸ்லயே மறந்து வச்சுட்டு……” என்று அந்த டிரைவர் கனகு தயங்கவும், கோபம் தலைக்கேறினாலும் பொறுமையாய் பேசிக் கொண்டிருந்தான்.
“சரி…. நீ அங்கேயே இரு…. ஆபிஸ்ல இருந்து யாரையாவது பேப்பரோட வர சொல்லறேன்…..” என்றவன், போனை கட் பண்ணிவிட்டு வேறு யாருக்கோ அழைத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தான். பேசிக் கொண்டே முன் வாசலுக்கு சென்றவனைப் பார்த்துக் கொண்டு மடியில் வைத்திருந்த சின்ன பாத்திரத்தில் இருந்த திராட்சைகளைக் காலி செய்து கொண்டிருந்தாள் இலக்கியா.
“ஏய்….. கருவாச்சி…… இருக்குற கறுப்பு பத்தாதுன்னுதான்  கறுப்பு திராட்சை வேற திங்கறியாக்கும்…… நீ பாக்குற பார்வைல என் பேரன் உருகி காணாமப் போயிருவான் போலருக்கு….. முதல்ல அவனுக்கு சுத்திப் போடணும்…..” என்று சொல்லிக் கொண்டே அங்கு வந்த பாட்டியை முறைத்தாள் அவள்.
“ஏய் வெள்ளச்சி….. எவ்ளோ சொன்னாலும் நீ அடங்கவே மாட்டியா…… உன் பேரன் என்ன பனிக்கட்டியா….. நான் பார்த்ததும் அப்படியே உருகி கரைஞ்சு போறதுக்கு….. ரொம்பதான் பண்ணாத……” என்று சொல்லிக் கொண்டே கைக்கும் வாய்க்கும் திராட்சைப் பரிமாற்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.
“நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் என் பேரன் பனிக்கட்டி தாண்டி….. அவனைப் பார்த்தாலே சும்மா குளுகுளுன்னு இருக்கப் போயி தானே நீ இப்படி கூச்சமில்லாம அவனையே முழுங்குற மாதிரி பார்த்திட்டு இருக்கே….. பெருசா பேச வந்துட்டா கருந்திராட்ச……” என்று நக்கலடிக்க, திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே அவரது அருகில் வந்து வாயைப் பொத்தினாள் இலக்கியா.
“ஏய்…. கிழவி…. கொஞ்சமாச்சும் வயசுக்கு தகுந்த மாதிரி பேசறியா….. அப்பா வேற ரூம்ல இருக்கார்…… நீ பேசுனது காதுல விழுந்தா என்ன நினைப்பார்……” என்று சரண்டர் ஆனாள்.
“அப்படி வா வழிக்கு….. அப்ப நான் சொன்னதை ஒத்துக்கறியா….. உன் பார்வையோட தினுசென்ன…. அர்த்தம் என்னன்னு எனக்கு புரியாமையா இருக்கும்…… நாங்களும் உன் வயசத்தாண்டி தான வந்திருக்கோம்…..” என்று பெருமை பட்டுக் கொண்டார் பர்வதம்.
“ஹூம்….. எல்லாம் சரிதான்…. இப்படி ஊரே கேக்குற மாதிரி மைக்கில்லாம கத்தறியே….. அதை மட்டும் பண்ணாம இரு…. உனக்கு புண்ணியமாப் போகும்…..” என்றவள், “வெள்ளச்சி….. நான் ஒண்ணு கேட்டா உண்மைய சொல்லுவியா……” என்றாள் தயக்கத்துடன்.
“என்ன புள்ள…. பீடிகை எல்லாம் பலமாருக்கு…… கேளு…..” என்றார் அவர்.
“அதுவந்து….” இழுத்தவள், “என்னை கிண்டல் பண்ணிட்டே இருக்கியே… தாத்தாவும் என்னைப் போல கருப்பாச்சே….. இப்படி வெளுவெளுன்னு இருக்குற நீ எப்படி அவரைக் கட்டிக்க சம்மதிச்சே….. பொண்ணு பார்க்க வந்தப்போ ஏன் வேண்டாம்னு சொல்லலை……” என்றாள் இலக்கியா.
உடனே அந்த நாள் நினைவில் முகம் அந்த வயதிலும் சிவக்க அவர் இதழில் சிறு புன்னகை மலர்ந்தது.
“அதுவா…… அவர் கருப்பா இருந்தாலும் அய்யனார் சிலை கணக்கா வாட்ட சாட்டமா இருந்தாராக்கும்…… அதும் இல்லாம அந்தக் காலத்துல வீட்டுப் பெரியவங்க என்ன முடிவு பண்ணுறாங்களோ அதான் முடிவு….. எங்க கிட்டே எதையும் கேட்க மாட்டாங்க…… அவுக பொண்ணு பார்த்துட்டு போனதும் எனக்கு கொஞ்சம் யோசனையா தான் இருந்துச்சு…..”
“வெண்கல சிலை மாதிரி இருக்குற நமக்கு கறுப்பு அய்யனார் கணக்கா ஒரு புருஷனான்னு….. அப்புறம் கல்யாணமாகி அவங்களோட வாழத் தொடங்கினதும் அவுக நிறம் பெருசாத் தெரியலை….. அந்த அன்பும் குணமும் தான் பெருசாத் தெரிஞ்சது…… குடும்பம் நடத்த நிறம் எதுக்கு….. அவரு மனசு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு….. அதுல நிறம் காணாமப் போயிருச்சு….” என்றவரின் விழிகள் கணவனின் நினைவில் கசிந்திருந்தன.
“ஹூக்கும்…… தாத்தாவைப் பத்தி பேசினா மட்டும் இப்படி வக்கனையாப் பேசறியே….. என்னை மட்டும் எதுக்கு கறுப்பின்னு கேலி பண்ணுறே……” என்று சிணுங்கினாள் பேத்தி.
“அது சும்மா கண்ணு….. என்னவோ… உன்னோட நிறத்தைப் பார்க்கும் போதெல்லாம் உன் தாத்தா நினைவு தான் வருது…….” என்றவர், சுற்றிலும் பார்த்துவிட்டு, தணிந்த குரலில் கூறினார்.
“நான் உன் தாத்தாவையே கருவாயான்னு தான் கொஞ்சுவேன்….. அவுகளும் அதைக் கேட்டுட்டு சிரிச்சுட்டு போயிருவாக…….” என்றார்.
“ஓ…. நீ அவ்ளோ பெரிய வாயாடியா பாட்டி….. என் தாத்தாவையும் விட்டு வைக்கலையா…… இரு நான் எல்லார் கிட்டவும் போயி சொல்லறேன்…..” என்று எழுந்தவளின் கையைப் பிடித்து வைத்தவர், “இதை சொன்னா, நீ என் பேரனைப் பார்த்து ஜொள்ளு விட்டுட்டு இருந்ததை நானும் என் மகன் கிட்டே சொல்லுவேன்…..” என்று பிளாக்மெயில் செய்யத் தொடங்கினார் பர்வதம்.
“சொல்லிக்கோ…. அப்பா, அம்மாவுக்கு மட்டும் தெரியாமலா இருக்கப் போகுது….. கண்டுக்காம இருக்காங்க… அவ்ளோதான்….. என் அத்தான் மேல எனக்கு எவ்ளோ பிரியம்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்…… இந்த பிளாக்மெயில் எல்லாம் என்கிட்டே செல்லாது….” என்று பாட்டியின் மூக்கைப் பிடித்து ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள் பேத்தி. அவளது பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தார் பாட்டி.
“மகளோட படிப்பு முடியட்டும்னு தானே எம்மகனும் காத்துட்டு இருக்கான்…..  உன் மனசுல இருக்குற ஆசை என்னன்னு ஊருக்கே தெரியும்போது அவனுக்கு மட்டும் தெரியாமலா இருக்கும்……” என்று நினைத்துக் கொண்டே வெற்றிலையை மடக்கி வாய்க்குள் திணித்துக் கொண்டார் பர்வதம்.
அப்போது அடுக்களைக்கு வந்த சத்யா, “அத்தை…. எனக்கு கொஞ்சம் காபி போட்டுக் கொடுங்களே…. தலை வலிக்குது….” என்றான்.
“நீங்க போயி ரெஸ்ட் எடுங்க……. தம்பி….. காபி போட்டுத் தரேன்…..” என்று கூறிய லலிதா, சப்பாத்திக்கு பிசைந்து கொண்டிருந்த மாவை அப்படியே வைத்துவிட்டு காபி போடத் தொடங்கினார்.
“ஏய்…. இலக்கியா….. என்னடி பண்ணறே…. இங்கே வா….” என்று குரல் கொடுக்கவும், “வந்துட்டேன்மா…..” என்று முன்னில் வந்து நின்ற மகளைக் கண்டு திகைத்தார்.
“என்னடி இது…. பேய்க்கு டூப்பு போட யாராவது கூப்பிட்டாங்களா……. மூஞ்சில்லாம்……. எதையோ பூசி வச்சிருக்கே…..” என்றவரை முறைத்தாள்.
“வேண்டாம்மா……” என்று கண்ணை உருட்டியவள், “இது பேஸ் பேக் மா….. டீவில புதுசா காமிச்சான்….. அதான் போட்டு பார்க்கலாம்னு வாங்கினேன்……” என்று சிணுங்கினாள் மகள்.
“அய்யய்யோ….. இதெல்லாம் பார்க்கணும்னு எங்க தலை எழுத்து…. இந்தா…. இந்த காப்பியை சத்யா தம்பிக்கு கொண்டு போயி கொடு….” என்று ஒரு கோப்பையை நீட்டினார்.
சந்தோசத்துடன் வாங்கிக் கொண்டு சத்யாவின் அறைக்கு சென்றாள். உரிமையோடு கதவைத் திறந்து உள்ளே வந்தவள் கட்டிலில் கண்ணை மூடிப் படுத்திருந்த சத்யாவின் அருகில் சென்றாள். அவனது நெற்றியில் கை வைக்கவும் கண்ணைத் திறந்தவன், முன்னில் நின்ற மாமன் மகளைக் கண்டு துள்ளி எழுந்தான்.
“இ… இளா….. என்ன இது….. மூஞ்சில்லாம்….” என்று அருகில் வந்து தொட்டுப் பார்த்தான். “இது பேஸ் பேக் அத்தான்…. இதைப் போட்டாளாவது உங்களை மாதிரி கொஞ்சூண்டு கலர் வர மாட்டமான்னு தான்….” என்றவளின் குரலில் இருந்த வலியை அவனால் உணர முடிந்தது.
குனிந்து நின்றவளின் அருகில் வந்து முகத்தை நிமிர்த்தியவன், “இளா….. உனக்கு எத்தனை முறை சொல்லிட்டேன்… இப்படி எதுவும் முகத்துக்குப் போடாதேன்னு…. முதல்ல முகத்தைக் கழுகிட்டு வா….” என்று அங்கிருந்த வாஷ்பேசினுக்கு இழுத்து சென்றான். அவன் சொன்னதை மறுக்காமல் முகம் கழுகி வந்தவளிடம் டவலை நீட்ட துடைத்துக் கொண்டாள். அவளது கையைப் பற்றி சோபாவில் அமர்த்தியவன், தானும் அருகில் அமர்ந்தான்.
“இளா….. இங்க பாரு….. நீ நேச்சுரல் பியூட்டி டா…. கோவில் சிலை மாதிரி இருக்குற உனக்கு இந்த செவந்த தோல் மேல எதுக்கு இத்தன மோகம்…. இது நிரந்தரம் இல்லை…. அதைப் புரிஞ்சுக்கோ….. உன்னோட நிமிர்வு தான் உனக்கு அழகு…..” என்றான். அவன் சொல்லவும் அவனது முகத்தையே ஆசையுடன் நோக்கியவள், அவனது கன்னத்தில் முத்தமிட்டு எழுந்து வெளியே ஓடி விட்டாள்.
“கறுப்பாகப் பிறந்தது
என் குற்றமல்ல…..
அதை வெறும் நிறமாகப்
பார்க்காதது உன் குற்றமே…..
சூரியனின் கதிரில் நான்
கறுத்துப் போவதில்லை……
கொட்டும் பனியிலும்
நிறம் மங்கி வாடவில்லை…..
வருத்தப் பட்டாலும் என்
கறுப்பு நிறம் மாறப்போவதில்லை…..
நோய்ப் படுக்கையிலும் இறப்பிலும்
நான் கறுப்பு தான்…..
இடத்துக்கு இடம் மனம் மாறும்
சந்தர்ப்பத்துக்கு ஏற்ப குணம் மாறும்
பச்சோந்தி மனிதருக்குள்
யாருக்கும் தீங்கு நினைக்காத
யார் மனதையும் புண்படுத்தாத
யாருக்கும் நன்மையே வேண்டும்
நல்ல மனம் கொண்டதில்
நான் என்றுமே வெண்மை தான்……”

Advertisement