Advertisement

“உள்ள வா இலக்கியா… விக்ரம்க்கு கொஞ்சம் உடம்பு முடியலை… அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகணும்…” என்றான்.
“ஓ… விக்ரம்க்கு என்னாச்சு… நேத்து ஈவினிங் கூட நல்லாதானே இருந்தார்… காய்ச்சலா…” கேட்டுக் கொண்டே இறங்கியவளிடம் சிறு பதட்டம் வந்திருந்தது.
“இல்லை… கால் வலிக்குதுன்னு சொல்லுறான்… நேத்து கருங்கல் குவாரில பாலன்ஸ் கிடைக்காம விழப் போயிட்டானாம்… உள்ளே வச்ச பிளேட் ஏதாவது விலகிடுச்சான்னு தெரியலை… நைட்ல தூங்காம அனத்திகிட்டே இருந்தான்… காலைல தான் ஒரு பெயின் கில்லர் கொடுத்து தூங்க வச்சேன்… ஒரு செக் அப் போயிடலாம்னு நினைச்சா எனக்கு இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்கு… நான் கண்டிப்பா போகணும்… அதான் பசங்க யாரையாவது வர சொல்லலாம்னு பார்த்தேன்…” என்றான்.
“ஓ…. இப்ப விக்ரம் எங்கே… தூங்கிட்டு இருக்காரா…” என்றாள் அவனது அறையை எட்டிப் பார்த்துக் கொண்டு.
“ம்ம்… கொஞ்ச நேரம் தூங்கட்டும்னு விட்டுட்டேன்… இலக்கியா, பசங்களை அழைச்சு வர சொல்லுறேன்… அது வரைக்கும் நீ இங்கே இருக்க முடியுமா…” என்றவன் கையில் இருந்த கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டான்.
“ஓ… உங்களுக்கு மீட்டிங் இருக்குன்னு சொன்னிங்கல்ல… நீங்க வேணும்னா கிளம்புங்க… நான் விக்ரம் எழுந்ததும் ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போறேன்…” என்றாள் அவள்.
“ரொம்ப தேங்க்ஸ் இலக்கியா… இன்னும் கொஞ்ச நேரத்துல விக்ரம் எழுந்திருச்சுடுவான்… ஹாட் பாக்ஸ்ல இட்லி இருக்கு… சாப்பிட சொல்லிடு… பிளாஸ்க்ல காபி வச்சிருக்கேன்… உனக்கும் வேணும்னா எடுத்துக்க… அப்ப நான் கிளம்பட்டுமா…” என்றான் அவன் நிம்மதியுடன்.
“சரி வினோத்… நான் பார்த்துக்கறேன்… நீங்க கிளம்புங்க…” என்றவள் அவன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பவும் விக்ரம் உறங்குவதை எட்டிப் பார்த்துவிட்டு ஹாலில் சோபாவில் அமர்ந்தாள். டீபாயில் இருந்த நாளிதழில் பார்வையைப் பதித்தவள் அதில் மூழ்கிப் போக சிறிது நேரம் கழித்து அறைக்குள் இருந்து விக்ரமின் குரல் மெதுவாய் ஒலித்தது.
விக்ரம் எழுந்து விட்டானோ… யோசித்துக் கொண்டே எழுந்தவள் தயக்கத்துடன் அவனது அறைக் கதவைத் திறந்தாள்.
“வினோ, கொஞ்சம் வாயேண்டா…” சொல்லிக் கொண்டே அறை வாசலைப் பார்த்த விக்ரம் இலக்கியாவைக் கண்டதும் கைகளால் கண்ணைத் தேய்த்து நிஜமா என்பது போல அதிசயமாய்ப் பார்த்தான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. கால் பயங்கரமாய் வலித்தது.
“இலக்கியா… நீ எப்ப வந்தே… வினோவை வர சொல்லேன்…” மெதுவாய் கேட்டுக் கொண்டே எழுந்து அமர முயன்றான். காலை அசைக்க முடியாமல் பயங்கரமாய் வலிக்கவும் வேதனையில் முகத்தை சுளித்தான்.
“என்னாச்சு விக்ரம்… இப்பவும் கால் வலிக்குதா… நீங்க எதுக்கு நேத்து கருங்கல் குவாரிக்குப் போனிங்க… வீட்ல ரெஸ்ட் எடுக்காம வேலைக்கு வருவேன்னு பிடிவாதம் வேற… இப்ப நீங்கதானே அவஸ்தைப் படறீங்க… எந்திரிங்க… டாக்டரைப் பார்த்திட்டு வந்திடலாம்…” சொல்லிக் கொண்டே அவனுக்கு அருகில் வந்தவள், அவனது தோளைப் பிடித்து எழுப்ப மெதுவாய் எழுந்து அமர்ந்தான்.
“இளா… நீ ஏன் கஷ்ட்டபடறே… வினோ எங்கே…” என்றவனிடம், “அவருக்கு எதோ முக்கியமான மீட்டிங் இருக்காம்… லேட் ஆச்சுன்னார்… நான் தான் கிளம்ப சொன்னேன்…” என்றாள் அவள்.
“உனக்கு எதுக்கு வீண் சிரமம் இளா… அப்படி என்ன அவனுக்கு பெரிய மீட்டிங்… சரி… நான் பார்த்துக்கறேன்… நீ குவாரிக்கு கிளம்பு மா… இன்னைக்கு ஒரு புது ஆர்டர் விஷயமா பேசணும்னு சொல்லி இருந்தியே…” என்றான்.
“ஓ… நீங்க பெரிய தியாகி… உங்களுக்கு முடியாமக் கிடக்கும்போது அப்படியே விட்டுட்டுப் போற அளவுக்கு நான் கல்லு மனசுக்காரி… அப்படித்தானே…” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.
“எனக்கு முடியலைனா என்னை விட்டுட்டுப் போக மாட்டியா இளா…” என்றான் அவன் ஏக்கத்துடன். அவன் வார்த்தையில் இருந்த அர்த்தம் புரியவும் சட்டென்று முகம் மாறியவள்,
“எழுந்து வந்து ரெடி ஆகுங்க விக்ரம்… டாக்டரைப் பார்த்திட்டு வந்திடலாம்…” என்றாள் அதிகாரத்துடன்.
“ஹூம்… கரக்டா பேச்சை மாத்திடுவாளே…” என மனசுக்குள் நினைத்துக் கொண்டே கட்டிலில் இருந்து இறங்குவதற்காய் காலை நிலத்தில் வைக்கப் போக சுள்ளென்று காலுக்குள் இருந்து புறப்பட்ட வலியில், “ஆஆ…..” என்று துடித்தவன் அப்படியே அமர்ந்தான். “அய்யய்யோ என்னாச்சு விக்ரம்… ரொம்ப வலிக்குதா…” பதட்டத்துடன் கேட்டவள் அவன் கையைப் பிடித்து தாங்கிக் கொண்டாள்.
“ம்ம்….. வலிக்குது இளா… ப்ச்… விடு… நீ சிரமப்படாதே…” என்றவனை முறைத்தவள், “என்னைப் பிடிச்சுகிட்டு மெல்ல எழுந்து வாங்க…” என்று அவன் கையைப் பற்றி எழுப்ப அவளது தோளில் பற்றிக் கொண்டான் அவன்.
டீஷர்ட்டும் முக்கால் பேண்ட்டும் அணிந்திருந்தவன் அத்தனை நெருக்கமாய் தோளை உரசிக் கொண்டு வரவும் அவளுக்கு ஒருமாதிரி கூச்சமாய் இருந்தது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் அவளது தோள்பட்டையை அவன் அழுத்திப் பிடித்ததில் அவளும் வலியை உணர்ந்தாள்.
“நான் ஹால்ல இருக்கேன்… முடிஞ்சதும் கூப்பிடுங்க…” என்றவள் பாத்ரூமுக்குள் அவனை விட்டுவிட்டு அவசரமாய் வெளியே வந்து ஆழமாய் மூச்சு விட்டாள். தன்னை ஏக்கத்தோடு தொடரும் அவனது பார்வையை அவள் புரிந்து கொள்ளாமல் இல்லை. ஒரு துரோகிக்காக வாழ்க்கையைத் துறக்க அவள் கோழையுமில்லை. அவளது பயமெல்லாம் அவள் மீது மட்டும் தான். அவள் கொண்ட காதலின் மீது தான். விக்ரமின் காதலை ஏற்றுக் கொண்டாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை மீறி மனதுக்குள் பரவும் பழைய காதல் நினைவுகள் விக்ரமின் காதலுக்கு அவள் செய்யும் துரோகமாய் மாறிடக் கூடாதே என்றுதான் போராடிக் கொண்டிருக்கிறாள்.
“இளா…” அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டவள் காலில் வலியுடன் முகத்தை சுளித்து நடந்து வந்தவனைக் கண்டு, “ஏன்… விக்ரம்… என்னைக் கூப்பிடலை…” கடிந்து கொண்டாள்.
“உன்னை எதுக்கு சிரமப் படுத்தணும்னு தான்… நீ கிளம்பு இளா… எனக்கு இப்போ கொஞ்சம் வலி பரவாயில்லை… இன்னைக்கு ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்னு நினைக்கறேன்… ஈவினிங் வலி இருந்தா வினோத்தைக் கூட்டிட்டுப் போயி டாக்டரைப் பார்த்துக்கறேன்… நீ கிளம்பு…” என்றான் அவன்.
“ஏன்… நான் இங்கிருந்தா உங்களுக்கு என்ன பிரச்சனை… நானொண்ணும் உங்களைக் கடிச்சு தின்னுட மாட்டேன்… பயப்படாதீங்க…” என்றாள் அவள் கோபத்துடன். இயலாமையின் வெளிப்பாடு பல நேரங்களில் கோபமாய் தானே வெளிப்படுகிறது.
அவள் தேடிய அன்பு கிடைக்காமல் பொய்த்துப் போனதில் தன்னை நேசிக்கும் அவனது அன்பை சீண்டிப் பார்த்து அதிகாரம் செய்வதில் சிறு சந்தோஷத்தை உணர்ந்தாள். கோபத்துடன் நின்று கொண்டிருந்தவளை ஒரு நிமிடம் விழி நீக்காமல் பார்த்தவன், மெல்ல நெருங்கி வந்து நின்றான்.
பெரிது பெரிதாய் மூச்செடுத்துக் கொண்டு கோபத்தில் முறைத்துக் கொண்டு நின்றவளுக்கு வெகு அருகில் வந்தவன், சட்டென்று அவளை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
எதிர்பார்க்காமல் திகைத்தவள் அவனது பிடியில் இருந்து திமிர முயன்று முடியாமல், மெதுவாய் அந்தக் கைகளுக்குள் அடங்கிப் போனாள். சற்று நேரத்தில் அவளது கண்ணீர் அவனது நெஞ்சை நனைத்துக் கொண்டிருக்க, விம்மிக் கொண்டிருந்தவளின் முதுகில் ஆறுதலாய் தடவிக் கொண்டிருந்தன அவனது கைகள்.
கோபம் இயலாமையின் வெளிப்பாடு…
எதிர்பார்த்தது ஏற்றுக்
கொள்ளப்படாமல் போகும்போது
ஏமாற்றம் கோபமாய் வெடிக்கிறது…
கோபம் ஒரு முகமூடி…
மனதுக்குள் உள்ள உணர்ச்சிகளை
கோபத்தின் முகமூடி அணிந்து
மற்றவரை நெருங்க விடாமல் 
கடந்து விட முடிகிறது…
சில நேரம் கோபமே அடக்கப்பட்ட
உணர்ச்சிகளுக்கு வடிகாலாகிறது….
உரிமையுள்ள இடத்தில் தான்
கோபமும் கொஞ்சி விளையாடுகிறது…

Advertisement