Advertisement

இலக்கணம் – 29
இலக்கியா வினோதினியை வீட்டுக்கு அழைத்து வந்ததில் பெரிதாய் உடன்பாடு இல்லாவிட்டாலும் யாருமில்லாத அவளை, பழையதெல்லாம் மறந்து போயிருந்த சூழலில் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட லலிதாவின் மனமும் இடம் கொடுக்கவில்லை. என்னதான் அண்ணன் தங்கை என்று சொன்னாலும் விக்ரமின் வீட்டுக்கு அவளை அழைத்துச் செல்வது ஊராரின் வாய்க்கு அவலாக மாறவும் கூடும். மகளைப் போலவே அவளும் துரோகத்தின் பிடியில் சிக்கியவள். எனவே அவளை அன்போடு தான் வரவேற்கவும் செய்தார்.
பாட்டியோ இலக்கியா எது செய்தாலும் ஒன்றுமே சொல்வதில்லை. அவளது செய்கைகள் தன்னால் வந்த காயத்துக்கு மருந்தானால் போதுமென்ற மனநிலையில் இருந்தார். வீட்டுக்குள் நுழைந்த வினோதினி வீட்டைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.
“வாம்மா…” புன்னகையுடன் வரவேற்ற லலிதாவை யாராயிருக்கும் என்ற யோசனையுடனே உள்ளே நுழைந்தாள்.
“வாங்க தம்பி… இப்ப கால்வலி பரவாயில்லையா… நல்லா நடக்க முடியுதா…” விக்ரமிடம் அக்கறையுடன் விசாரித்து அவன் பதிலைக் கேட்டுவிட்டு, “உக்காருங்க… நான் காபி எடுத்திட்டு வரேன்…” என்று கூறி அடுக்களைக்குள் மறைந்தார்.
வீட்டுக்குள் பார்வையை சுழற்றிக் கொண்டே தவிப்புடன் அமர்ந்திருந்தாள் வினோதினி. மனம் முழுதும் சூன்யமாய் இருக்க எதுவுமே புரியாமல் குழப்பத்துடன் யோசிக்க முயன்றாள்.
அவளைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்த விக்ரமிடம், “அண்ணா… ப்ளீஸ்… இதுக்கு மேலயும் என்னால அமைதியா இருக்க முடியலை… நீங்கல்லாம் எனக்கு என்ன உறவு முறைன்னு கூட எனக்கு நினைவு வர மாட்டேங்குது… என்னைப் பத்தி இன்னொருத்தர் கிட்டே விசாரிக்குற நிலைமை ரொம்ப வேதனையா இருக்கு… எதுவா இருந்தாலும் எல்லா விஷயத்தையும் சொல்லிடுங்க…” என்றாள் கலக்கத்துடன்.
விக்ரம் இலக்கியாவைப் பார்க்க, “சொல்லறோம் வினோதினி… நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு…. முதல்ல காபி குடிக்கலாம்…” என்றவள் அடுக்களைக்கு சென்று லலிதா கப்பில் ஊற்றிக் கொண்டிருந்த காபியை டிரேயில் வைத்துக் கொண்டு வந்தாள். அவர்கள் காபியை குடித்துக் கொண்டிருக்க பாட்டி குழந்தையுடன் அங்கு வந்தார்.
அதைக் கண்டதும் சட்டென்று இலக்கியா, விக்ரமின் பார்வைகள் வினோதினியின் மீது படிந்தன. குழந்தையையும் பாட்டியையும் அவள் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, “வாம்மா… இப்ப உடம்பெல்லாம் சரியாகிடுச்சா…” என்றார் பாட்டி.
“ம்ம்… சரியாகிடுச்சு பாட்டி…” என்றவள் அவரையே உற்று நோக்கி மனதுக்குள் எங்கோ மறைந்து போன அந்த முகத்தை பரிச்சயம் இருக்கிறதா எனத் தேடிக் கொண்டிருந்தாள். அவருக்கு சத்யாவின் சாயல் இருந்தது. அடுத்து குழந்தையின் மீது பார்வை படர, அவளைக் கண்டதும் வாயில் முளைத்த புதுப் பல்லைக் காட்டிக் கொண்டு அழகாய் சிரித்த குழந்தை கைநீட்டித் தாவியது.
அந்த சிரிப்பில் மனதுக்குள் இருந்த குழப்பங்கள் மறந்து போக இதழ்கள் தானாய் புன்னகைத்தாள் வினோதினி. தாவிய குழந்தையின் முகம் பரிச்சயமாய் தோன்ற எழுந்து ஆசையோடு வாங்கிக் கொண்டாள்.
“செல்லம்… என்னைப் பார்த்ததும் தாவுறியே… நீயாவது நான் யார்னு சொல்லு பார்ப்போம்…” என்றாள் கொஞ்சிக் கொண்டே.
அவள் முகத்தில் ஆசையோடு முகத்தை தேய்த்துக் கொஞ்சிய சங்கவி கன்னத்தில் முத்தமிட்டு, “ம்மா…” என்றது. அதைக் கேட்டதும் வினோதினி திகைத்து, “நான் உன் அம்மாவா செல்லம்… இந்த அம்மாவுக்கு எல்லாமே மறந்து போயிருச்சு… ஆனா உனக்கு என்னை நினைவிருக்கே…” என்று கட்டிக் கொண்டு முத்தமிட்டாள்.
நிமிடத்தில் நடந்துவிட்ட நிகழ்வுகளில் அனைவரும் ஸ்தம்பித்து அமைதியாய் நோக்கிக் கொண்டிருந்தனர். இலக்கியாவின் மனதில் ஒரு தீர்மானம் வந்திருந்தது. துக்கமானதாய் இருந்தாலும் தன்னைப்பற்றி அறியாமல் இருப்பது மிகவும் வேதனையான விஷயம். அதனால் வினோதினியிடம் சிலதை மறைத்து அவளைப்பற்றி சொல்லிவிடலாம் என முடிவு செய்தாள்.
“வினோதினி… இவளை உனக்கு நினைவிருக்கிறதா…” என்றாள் குழந்தையைக் காட்டி. 
“சரியாக நினைவில்லை… ஆனாலும் பரிச்சயமான முகமாய்த் தெரிகிறாள்… இவள் என் குழந்தை தானே… இவளது தந்தை எங்கே… அவர் ஏன் வரவில்லை…” ஆவலோடு கேட்டாள்.
“ம்ம்… இவள் உன் குழந்தை சங்கவி…” என்றவள் சற்று நிறுத்திவிட்டு, “உனக்கு ஏற்பட்ட பெரிய விபத்தில் உன் கணவர் இறந்துவிட்டார்… அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உங்கள் இருவரையும் இவர் தான் காப்பாற்றினார்… உனக்கு தலையில் அடிபட்டதால் நினைவில்லாமல் இருந்தாய்… அவருக்கு உறவென்று யாருமில்லாததால் தங்கையாய் உன்னைப் பார்த்துக் கொண்டார்… நீ இன்று முதல் என் தங்கையாய் இந்த வீட்டிலேயே இருக்கலாம்…” என்று மடமடவென்று கூறிவிட்டு விக்ரமின் மீது அழுத்தமான ஒரு பார்வையை எறிந்துவிட்டு அங்கு நிற்காமல் அவளது அறைக்கு சென்றுவிட்டாள்.
அவளது வார்த்தைகளை வினோதினி கிரகித்துக் கொண்டு அடுத்த கேள்வியை கேட்பதற்கு இலக்கியா அங்கு இருக்கவில்லை. அவளது மனநிலையைப் புரிந்து கொண்ட மற்றவர்கள் அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த வினோதினியை வேதனையுடன் நோக்கினர்.
விக்ரம் எழுந்து அவளுக்கருகில் செல்லவும் குழந்தை “மாம்மா….” என்று அவனிடம் தாவினாள். இப்போது தான் பேச்சு வரத் தொடங்கியிருந்தது. சற்று நேரம் அமைதியாய் இருந்த விக்ரம் நடந்தவைகளை தன்மையாய் அவளுக்கு விளக்கினான். அதைக் கேட்ட வினோதினியின் நெஞ்சம் துக்கத்தில் விம்மியது.
“வினோதினி… நடந்த எதையும் இனி மாற்ற முடியாது… நீ எல்லாமே தெரிஞ்சுக்கணும்னு தான் சொன்னோம்… நீ எதுக்கும் வருத்தப்படாதே… உனக்கு அண்ணனா நான் இருக்கேன்… இவங்க எல்லாருமே அன்பானவங்க… உன் குடும்பமா நினைச்சு நீ இங்கே நிம்மதியா இருக்கலாம்…” என்றான் விக்ரம்.
“ஆமாம்மா… இன்னைல இருந்து எனக்கு ரெண்டு பொண்ணுங்கன்னு நினைச்சுக்கறேன்… நீ வருத்தப் படாதே… சட்டுன்னு கேட்ட அதிர்ச்சியை உன் மனசு கிரகிச்சுக்கறது கொஞ்சம் கஷ்டம் தான்… இந்தக் குழந்தையை நினைச்சு உன்னைத் தேத்திக்க தான் வேணும்… அந்த ரூமை உனக்கு ரெடி பண்ணிருக்கேன்…  நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க… மத்ததை அப்புறம் பேசிக்கலாம்…” என்றார் லலிதா.
அவள் அதிர்ச்சியுடன் அப்படியே சோபாவில் அமர்ந்திருக்க கவலையுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவள் மனதுக்குள் என்னல்லாமோ கேள்விகள் எழுந்து கொண்டிருக்க கணவனின் முகத்தை எங்காவது கண்டு பிடிக்க முடியுமா என மூளையை அலசித் தேடிக் கொண்டிருந்தாள்.
துரோகத்தின் வேர் தேடிப்போனால்
துக்கத்தின் விழுதுகள் தானே மிஞ்சும்……
துயில் தொலைத்த கண்ணுக்குள்
துளாவுகின்றாள் வாழ்க்கையை…
துடுப்பாய் கை நீட்டுகிறது… சில
தூய நெஞ்சங்கள்….
துடிப்பாய் கரை சேருவாளா…
நாட்கள் அதன் பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தது.
ஆண்கள் இல்லாத அந்த வீட்டில் நான்கு பெண்களும் தங்களின் சோகத்தை மனதுக்குள் ஒதுக்கிக் கொண்டு, மற்றவருக்குத் தெரியாமல் கலங்கிக் கொண்டு சங்கவியின் குறும்புகளையும் சேட்டைகளையும் ரசித்துக் கொண்டு நாட்களை முன்னோக்கித் தள்ளிக் கொண்டிருந்தனர். இலக்கியா முன்னைவிட நன்றாகவே தெளிந்திருந்தாள்.
விக்ரமின் பேச்சிலும் அவனது அருகாமையிலும் துயரத்தையும் துரோகத்தையும் மறக்க முடியாவிட்டாலும் அந்த நினைவுகளை ஒதுக்கி வைக்கப் பழகி இருந்தாள். வினோதினியும் அந்த வீட்டுப் பெண்ணாகவே மாறி இருந்தாள். அடிக்கடி வீணாவும் வீட்டுக்கு வந்து அவர்களை வம்பாய் பேச வைத்து வீட்டைக் கலகலப்பாக்குவாள்.
அன்றும் காலையில் வழக்கம் போல இலக்கியா புறப்பட்டுக் கொண்டிருக்க அடுக்களையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த வினோதினி அவளுக்கு சாப்பிட எடுத்து வைத்தாள். அவள் சாப்பிட்டு குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு, கையசைத்துக் கிளம்பவும் வாசலுக்கு வந்த வினோதினி, “இலக்கியா… ஒரு நிமிஷம்… உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றாள் தயக்கத்துடன். 
“என்ன வினோ… ஏதாவது பிரச்சனையா… உடம்புக்கு ஏதாவது முடியலயா… குழந்தைக்கு எதுவும் வாங்கிட்டு வரணுமா… எதுவா இருந்தாலும் ஓபனா சொல்லு…” என்றாள் இலக்கியா அவள் முகத்தை ஆராய்ந்து கொண்டே.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை… நீங்க எல்லாரும் என்னை இந்த வீட்டுப் பொண்ணா நல்லா பார்த்துக்கறிங்க… எனக்கு என்ன குறை இருக்கப் போகுது… எனக்கு ஒரு ஆசை இருக்கு… அதை சொன்னா நீ எதுவும் தப்பா நினைச்சுக்க மாட்டியே…” பீடிகையுடன் கேட்டவளை குழப்பத்துடன் பார்த்தவள், “என்னன்னு சொல்லு வினோ….” என்றாள் அவள்.
“இலக்கியா… நீ நேசிச்சது ஒரு நல்லவனா இருந்து உன் வாழ்க்கையை நீ இப்படியே வாழ்ந்திட்டா பரவாயில்லை… உனக்கும் உன் குடும்பத்துக்கும் எனக்கும் துரோகம் பண்ணின ஒருத்தனுக்காக நீ ஏன் தண்டனை அனுபவிக்கணும்… அம்மாவும் பாட்டியும் உன்னை நினைச்சு ரொம்ப வருத்தப் படுறாங்க… எனக்காவது சங்கவி இருக்கா… அவளை நல்லபடியா வளர்த்துறதுல என் வாழ்க்கை ஓடிப் போயிடும்… அந்த துரோகி எல்லாத் தப்பையும் பண்ணிட்டு எந்த தண்டனையும் அனுபவிக்காம செத்துப் போயிட்டான்… எந்தத் தப்புமே பண்ணாத நீ ஏன் உனக்கு ஆயுள் தண்டனை கொடுத்துக்கறே…” கேட்டவள் இலக்கியா அவள் வார்த்தைகளை உள்வாங்குகிறாளா என கவனித்துவிட்டு தொடர்ந்தாள்.
“உன்னை விக்ரம் அண்ணாவோட பார்த்ததுமே அவர் மனைவின்னு தான் தோணுச்சு… நம்ம எல்லாருக்கும் இருக்குற ஒரே துணை அண்ணா தான்… அவரோட வாழ்க்கைக்கும் ஒரு துணை வேண்டாமா… ஒரு  உண்மையான காதலுக்கு தண்டனை கொடுக்கலாமா… சீக்கிரமே நீ ஒரு முடிவுக்கு வரணும்… விக்ரம் அண்ணாவோட சேரணும்… இது தான் எங்க எல்லாரோட ஆசையும்… நிறைவேத்துவியா…” அவள் கையைப் பிடித்துக் கொண்டு ஆவலுடன் கேட்டாள்.
அவள் சொன்ன வார்த்தைகள் மனதுக்குள் மீண்டும் ஒலிக்க எதுவும் பேசாமல் அமைதியாய் காரில் ஏறிக் கிளம்பினாள் இலக்கியா. வினோதினி மகளுடன் பேசுவதை சற்று ஒதுங்கி நின்று கேட்டுக் கொண்டிருந்த லலிதாவின் உள்ளம் பெற்ற மகளின் வாழ்க்கையை எண்ணி விம்மியது. கவலையுடன் அமர்ந்தவரின் தோளில் ஆதரவாய் கை வைத்தாள் வினோதினி.
வாசலில் கார் ஹாரன் கேட்கவும் வெளியே வந்தான் வினோத்.

Advertisement