Advertisement

இலக்கணம் – 28
இலக்கியாவின் அதிர்ந்த குரலையும், கோபமான முகத்தையும் கண்ட விக்ரம் தொடர்ந்தான்.
“இளா… நான் ஒண்ணும் பெரிய தியாகியோ, ஆசையை துறந்த புத்தனோ இல்லை… என்னோட காதலும் வாழணும்னு சுயநலமா யோசிக்குற சாதாரண மனுஷன் தான்… ஒரு நிமிஷம்… நான் சொல்லுறதை நிதானமா கேட்டுக்கோ… அப்புறம் உன் பதிலை சொல்லு…” என்றவன் அழுகையை அடக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தவளை நோக்கி அமைதியாய் தொடர்ந்தான். அவன் முன்னில் உடைந்து விடக் கூடாது என்பதற்காகத் தானே அவனைப் பார்ப்பதைக் கூடத் தவிர்த்து வந்தாள்.
நமது மனது மிகவும் விந்தையானது… அதற்கு நம்பிக்கையான, உரிமையுள்ள இடத்தில் தான் வேகமாய் கோபமும் கொள்கிறது… கவலையில் துவண்டு போகையில் அதே இடத்தில் தான் உருகி கரைந்தும் போகிறது… இப்போது அவள் கண்ணின் கண்ணீரும் அதையே உணர்த்தியது.
அவள் கண்ணீர் கண்டு அவன் மனம் கனத்துப் போனது.
“இளா… ஒரு துரோகிக்காக உன் வாழ்க்கை நாசமாகணுமா… உன்னோட இந்த நிலைமைக்குத் தானும் ஒரு காரணம்னு நினைச்சு பாட்டிம்மா உள்ளுக்குள்ளேயே உருகிகிட்டு இருக்காங்க… வாழ்க்கையைத் தொடங்கறதுக்கு முன்னாடியே உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு அம்மா மனசுக்குள்ளே துடிச்சிட்டு இருக்காங்க… இதெல்லாம் எதுக்காக… உன் காதலுக்குத் தகுதியே இல்லாத ஒருத்தனுக்காக, உனக்குள்ளேயே உன்னை ஒதுக்கிட்டு இவங்களை எல்லாம் வேதனைப் படுத்தணுமா… அது பாவம் இல்லையா… தங்களுடைய முக்கியமான உறவை இழந்து துடிக்கற அவங்களுக்கு உன்னோட வாழ்க்கையும் ஒண்ணுமில்லாமப் போயிடுமோங்கிற தவிப்பு இருக்காதா… அதுக்காகவாவது நீ மாறணும்… பழைய போல இருக்கணும்…” நிறுத்திவிட்டு  பதிலுக்காய் அவளை நோக்க அவள் வாயைத் திறந்தாள். 
“நா…நானும் பழைய போல இருக்கணும்னு தான் நினைக்கறேன் விக்ரம்… ப…பட், என்னால முடியலை… ஆனாலும் மாற முயற்சிக்கிறேன்… எனக்காக நீங்க ரொம்ப சிரமப் பட்டுட்டீங்க… உங்களோட இந்த நிலைக்கு நான்தான் காரணம்னு நினைக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு… நான் ஏன் இத்தனை நாள் உங்களை வந்து பார்க்கலைன்னு உங்களுக்கு கோபம் வரலையா…” என்றாள் அவள்.
“உன்மேல கோபமா… எப்படி வரும் இளா… சின்ன வயசுல இருந்து ஒருத்தன் மேல வச்சிருந்த நம்பிக்கையையே ஆயுதமா மாத்தி அவன் உன் முதுகுல குத்தியிருக்கான்… நீ எப்படித் தவிச்சுப் போயிருப்பியோன்னு தான் எனக்கு வருத்தமா இருந்துச்சு… நீ உடைஞ்சு போயிடக் கூடாதேன்னு தான் ரொம்ப பயந்தேன்… உன்னைப் பார்த்து ஆறுதலா பேசக் கூட முடியாத சூழ்நிலை மேல கோபமா வந்துச்சு… நீ வரலைனாலும் அம்மா வந்து என்னைப் பார்த்தாங்க… உனக்காக ரொம்ப அழுதாங்க… நானும் நீ இல்லாத போது சங்கவியைப் பார்க்க ரெண்டுமுறை உன் வீட்டுக்கு வந்திருக்கேன்… அம்மாவோட பாட்டியோட வேதனையை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது… அவங்களுக்காகவாவது உன்னோட பேசணும்னு நினைச்சேன்…” என்றான் அவன்.
“ஓ… எனக்குத் தெரியாமல் இத்தனை வேலை நடந்திருக்கா…”
“ம்ம்…” என்றவன், “இளா, என் காதலை நீ ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உன் விருப்பம்… பொய்யான ஒரு காதலுக்காக உண்மையான என் காதலை நீ தண்டிக்க மாட்டேன்னு நான் நம்பறேன்… அது நடக்கும்போது நடக்கட்டும்…” என்றவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்தவளுக்கு அந்தப் பார்வை புதிதாய் இருந்தது.
அப்படியே மனதை ஊடுருவும் பார்வை.
சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டவள் எதுவும் பேசாமலிருக்க அவனே தொடர்ந்தான்.
“எனக்கு இப்ப ஒரு வேலை வேணும்… போலீஸ்ல ஆறுமாசம் முடியாம ஜாயின்ட் பண்ண முடியாது… அது வரைக்கும் உனக்காக வேலை செய்யறேனே… ஐ மீன்… உன் வேலைல உதவியா இருக்கேன்னு சொல்ல வந்தேன்… எனக்கு ஒரு வேலை போட்டுத் தருவிங்களா மேடம்…” என்றான் குறுகுறுவென்ற பார்வையுடன்.
“இப்போ உங்களுக்கு வேலைக்கு போகணும்னு என்ன அவசியம்… வீட்ல ரெஸ்ட் எடுக்கலாமே… கால் இன்னும் கொஞ்சம் சரியாகட்டும்… அப்புறம் பார்த்துக்கலாமே…” என்றாள் அவள்.
“வீட்டுல இருந்து ரெஸ்ட் எடுத்து எப்படி உடம்பு வந்திருச்சு பார்த்தியா… இனியும் ரெஸ்ட் எடுத்தா போலீஸ்ல ஜாயின்ட் பண்ண முடியாது…” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.
முன்னைவிட சற்று குண்டாகி இருந்தான். வீட்டில் முழுநேரமும் ஓய்வில் இருந்ததால் நன்றாக கலர் வைத்திருந்தான். மொத்தத்தில் முன்னை விட அழகாய் இருந்தான்.
அவனை ஆராய்ச்சியுடன் தழுவிய அவளது பார்வையைக் கண்டு சிரித்துக் கொண்டவன், “அதும் இல்லாம வீட்டுக்குள்ளேயே இருந்தா எனக்கும் மூச்சு முட்டுற போல இருக்கு… வேற எங்கயும் இந்த நிலைமைல வேலையும் கிடைக்காது… அதான் உன்கிட்டே கேட்டேன்… கொஞ்சம் தயவு பண்ணுங்க மேடம்…” என்றான் கை கூப்பிக் கொண்டு. அவன் செய்கையைக் கண்டு உதட்டில் முளைத்த சிறு புன்னகையை உள்ளுக்குள்ளேயே மறைத்துக் கொண்டவள்,
“ஓகே விக்ரம்… வேலை தர்றேன்… ஆனா சம்பளம் கேட்கக் கூடாது…” என்றாள். “அதென்ன, அப்படி ஒரு வேலை…” என்றான் அவன்.
“உங்களுக்கு அனுபவம் இல்லையே… அதனால வேலை பழகற வரைக்கும் நோ சம்பளம்… இஷ்டமிருந்தா வாங்க… இல்லேன்னா ரெஸ்ட் எடுங்க…” என்றாள் அவள்.
“உன்னோடு இருக்கும் வேளையே எனக்கு சுப வேளை… அதற்கு சம்பளம் எதற்கு…” நினைத்துக் கொண்டவன், “ஓகே…” என்றான்.
“சரி… நாளைக்கு குவாரி ஆபீசுக்கு வந்திடுங்க…” என்றாள்.
“தேங்க்ஸ் மேடம்… ஒரு சின்ன விண்ணப்பம்…” என்றான் கெஞ்சலுடன். 
“என்ன விண்ணப்பம்…” என்றாள் கேள்வியுடன்.
“சம்பளம் இல்லைனா பரவாயில்லை… எனக்கு பிக் அப், டிராப்புக்கு மட்டும் ஏதாவது ஹெல்ப் பண்ணா பரவாயில்லை…” என்றான் பாவமாய் காலை பார்த்து.
“ம்ம்… சரி விக்ரம்… டெய்லி நானே உங்களை பிக் அப் பண்ணி டிராப் பண்ணிடறேன்… இப்போ ஏதும் சாப்பிடலாமா…” என்றாள் அவள்.
“ஓ…. சாப்பிடலாமே…..” என்றதும் பேரரை அழைத்து இருவருக்கும்  வேண்டியதை கூறினாள் அவள்.
சாப்பிட்டு முடித்துக் கிளம்பியதும், “உங்களை வீட்டில் விட்டுடவா… விக்ரம்…”
“இல்லை… வினோதினியைப் பார்த்து ரொம்ப நாளாயிருச்சு… உனக்கு இப்போ டைம் இருந்தா என்னை அங்கே டிராப் பண்ணிடறியா…” என்றான் விக்ரம்.
“ம்ம்… நானும் அவளைப் பார்க்கணும்னு நினைச்சிருந்தேன்… போகலாம்…” என்றவள் காரை வினோதினியின் காப்பகத்துக்கு விரட்டினாள்.
டாக்டரின் முன்னில் அமர்ந்திருந்த விக்ரமும், இலக்கியாவும் ஒருவரை ஒருவர் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டனர்.
“நீங்க என்ன சொல்லறிங்க டாக்டர்… வினோதினி இன்னைக்கு நார்மலா பேசினாளா…” என்றான் விக்ரம் சந்தோஷத்துடன்.
“ஆமாம் மிஸ்டர் விக்ரம்… இன்னைக்கு காலைல நர்ஸ் கிட்டே கேட்டிருக்காங்க… நான் ஏன் இங்கே இருக்கேன்… எனக்கு என்ன ஆச்சுன்னு… அவங்களுக்கு பழசெல்லாம் நினைவில்லை… ஆனா இப்போதைய சூழ்நிலையை அவங்களால புரிஞ்சுக்க முடியுது…”
“ஓ… இனி பழைய நினைவுகள் வர்றதுக்கு சான்ஸ் இல்லையா டாக்டர்… குழந்தையையும் மறந்திட்டாங்களா…” இலக்கியா கவலையுடன் கேட்டாள்..
“அப்படி இல்லைம்மா… இத்தனை நாள் பழைய நினைவுகள் இல்லைனாலும் குழந்தையை அவங்களுக்கு அடையாளம் தெரிஞ்சது… இப்பவும் தெரியலாம்… ஆனா அது அவங்க குழந்தைன்னு நாம சொன்னா தான் புரியும்… இப்ப அவங்களையே யாருன்னு தெரியாம இருக்காங்க… இதுவும் ஒரு வகைல நல்லது தான்… எதெல்லாம் அவங்களுக்குத் தேவையோ அதை மட்டும் சொல்லிப் புரிய வச்சாப் போதும்… இனி அவங்களுக்கு எங்க ட்ரீட்மெண்டை விட அன்பும் அனுசரணையும் தான் சிறந்த மருந்து… அதனால வினோதினியை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டுப் போறதுன்னாலும் பண்ணிக்கலாம்… உங்களுக்கு இன்னைக்கு போன் பண்ணி சொல்லணும்னு நினைச்சிருந்தேன்… நீங்களே வந்ததும் நல்லதாப் போயிருச்சு…” என்றார் அவர்.
“ம்ம்…” குழப்பத்துடன் இலக்கியா அவர் சொன்னதை யோசித்துக் கொண்டிருக்க, “சரி டாக்டர்… நீங்க வினோதினியை டிஸ்சார்ஜ் பண்ணறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க… நாங்க கூட்டிட்டுப் போயிடறோம்…” என்றான் விக்ரம்.
“ஓகே சார்… நீங்க போயி வினோதினியைப் பாருங்க… நான் டிஸ்சார்ஜ்க்கு ரெடி பண்ண சொல்லிடறேன்…” என்றவர் இண்டர்காமில் யாரையோ அழைத்து விவரங்களைக் கூற இலக்கியாவும் விக்ரமும் வெளியே வந்தனர்.
“விக்ரம, ஒரு நிமிஷம்…” என்ற இலக்கியா வராண்டாவில் நிற்கவும் விக்ரமும் நின்றான். 
“என்ன இளா…” கேட்டவனை நோக்கியவள், “விக்ரம்… வினோதினிக்கு எல்லாமே மறந்து போனது கூட ஒருவிதத்தில் நல்லது தான்… அந்த துரோகியால பாதிக்கப்பட்ட அவளோட வாழ்க்கைக்கு ஏதாவது பண்ணனும்… என்னைக் கல்யாணம் பண்ணறதுக்கு வேண்டி தானே அவன் அவளைக் கொல்லப் பார்த்து இப்படியெல்லாம் ஆயிருச்சு… அதனால அவளும் என் பொறுப்புதானே… அவ எங்க வீட்டுக்கு வரட்டும்… குழந்தையை நினைவிருக்கான்னு பார்த்துட்டு என்ன சொல்லணும்னு யோசிச்சு சொல்லிக்கலாம்…” என்றாள் இலக்கியா.
“ம்ம்… அந்த துரோகியால பாதிக்கப்பட்ட எல்லாரும் உன் பொறுப்புன்னு சொல்லறியே… நானும் அவனால பாதிக்கப் பட்டவன்தானே… என்னைப் பத்தி மட்டும் யோசிக்க மாட்டியா……” கேட்டுக் கொண்டே அவன் காலைத் தாங்கிக் கொண்டு வினோதினியின் அறையை நோக்கி நடக்க அவன் சொன்ன வார்த்தைகள் அவள் மனதில் ஓங்கி அறைந்தது போலிருந்தது.
யோசித்துக் கொண்டே அவளும் அவனைத் தொடர்ந்தாள்.
எங்கோ ஜன்னலுக்கு வெளியே தொலைந்து போன நினைவுகளைத் தேடி பார்வையைப் பதித்திருந்த வினோதினி காலடி ஓசையில் திரும்பினாள். தலைவாரி பளிச்சென்று தெளிவாய் இருந்தாள். உள்ளே வந்தவர்களை நெற்றி சுருக்கி நினைவடுக்கில் தேடிக் கொண்டிருந்தவளை சிறு புன்னகையுடன் நெருங்கினான் விக்ரம்.
கைத்தடியுடன் காலைத் தாங்கி தாங்கி வருவதை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அருகில் வந்தான் விக்ரம்.  அங்கிருந்த டியூட்டி நர்ஸ் அவளுடைய மெடிகல் ரெகார்டில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க இவர்களைக் கண்டதும் பரிச்சயமாய் சிரித்தாள்.
“வாங்க சார்…” என்றவள், “வினோதினி… இவங்களை யாருன்னு உனக்குத் தெரியுதா பாரு…” என்றாள் புன்னகையுடன்.
“எப்படிம்மா இருக்கே…” அன்போடு கேட்டவனின் அருகில் அவளையே பார்த்துக் கொண்டு நின்ற கறுத்த மெலிந்த பெண்ணைக் கண்டு குழப்பத்துடன் யோசித்தாள் வினோதினி.
“நீ… நீங்க தான் என் அண்ணனா…” நெற்றியை சுருக்கிக் கொண்டு குழப்பத்துடனே கேட்டாள்.  நர்ஸ் அவளிடம் அழைத்துப் போக அண்ணன் வருவார் என்று கூறியதை வைத்தே வினோதினி அப்படி கேட்டாள்.
ஆனால் அதைக் கேட்டதும் அங்கிருந்தவர்களின் முகம் பிரகாசமாக அவள் சொன்னது சரியென்று நினைத்தாள்.
“அட… அப்ப இவங்களையும் யாருன்னு சொல்லு பார்ப்போம்…” என்றாள் அந்த நர்ஸ். இலக்கியாவின் முகம் அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று குழப்பமும் அச்சமும் சேர்ந்து பிரதிபலிக்க அவளை நன்றாக உற்றுப் பார்த்த வினோதினி, “இவங்க என் அண்ணியா…” என்றாள் கேள்வியுடன்.
அதைக் கேட்டதும் விக்ரமின் முகம் மேலும் பிரகாசமாக, இலக்கியாவின் முகத்தில் சிறு கோபம் தோன்றி மறைந்தது. ஒரு துரோகியின் மனைவியாய் வாழ்ந்து குழந்தையும் பெற்றெடுத்து அந்த துரோகியாலேயே பழைய நினைவுகளை இழந்துவிட்ட அவளது நிலை தன்னைவிட சற்று மெச்சப்பட்டதாகவே அவளுக்குத் தோன்றியது. மறதியும் சில நேரம் மருந்து தானே.
தன்னைப் போல யோசித்து மனதை ரணமாக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்றே… என அவள் யோசித்துக் கொண்டிருக்க அவள் எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்ட விக்ரம், அவளுக்கு கோபமோ என்று நினைத்துக் கொண்டான்.
“வினோம்மா… எல்லாத்தையும் விவரமா வீட்டில் போயி பேசிக்கலாம்… நீ சீக்கிரம் கிளம்பு…” அன்போடு கூறியவனைப் பார்த்தவள், 
“எனக்கு என்னாச்சு… நான் ஏன் இங்கிருக்கேன்… நம்ம வீடு எங்கிருக்கு… இங்கே எப்படி வந்தேன்… எனக்கு எதுவுமே நினைவு வர மாட்டேங்குது… நீங்கல்லாம் யாருன்னு கூட எனக்கு தெரியலை… இங்கே உள்ள நர்சுங்க கிட்டே கேட்டாலும் எதையும் யோசிக்காம அமைதியா இருன்னு சொல்லுறாங்க…”
மனதில் உள்ள குழப்பங்களை கேள்வியாய் அவள் அடுக்கிக் கொண்டிருக்க அவளுக்கு எங்கே தொடங்கி எப்படி சொல்வது எனப் புரியாமல் திகைத்தான் விக்ரம். இலக்கியாவின் முகத்திலும் குழப்பம் தெரிந்தது.
“வினோதினி… இப்ப நீ எதையும் யோசிக்காமல் அமைதியாய் இரு… வீட்டுக்குப் போயி எல்லாத்தையும் உனக்கு சொல்லறோம்…” என்றாள் இலக்கியா.
“ம்ம்… எனக்கு எதுவுமே தெரியாம யோசிச்சு யோசிச்சு தலை வலிக்குது… நீங்க என் அண்ணி தானே…” என்றாள் மீண்டும். அவள் எதுவும் சொல்லாமல் இருந்ததால் அவளை அண்ணி என்றே வினோதினி முடிவு செய்து விட்டாள்.
இப்போது இலக்கியா மேலும் குழம்பினாள். அவர்களுக்குள் உள்ள உறவு முறையை எப்படி சொல்லுவாள். சத்யா என்ற துரோகியின் கையால் ஆசையோடு தாலியை வாங்கிக் கொண்ட அறிவில்லா ஜென்மங்கள் தான் இருவரும் என்று இப்போது அவளுக்கு விளக்கவும் முடியாதே… எனவே என்ன சொல்லுவதென்று அவள் முழித்துக் கொண்டிருந்தாள்.
“வினோதினி… நீ ரொம்ப யோசிக்காதேம்மா… எல்லாம் வீட்டுக்குப் போயி பேசிக்கலாம்… நீ குழப்பிக்காதே…” என்றான் விக்ரம். அவனுக்கும் இப்போது சற்று கவலையாய் இருந்தது. கிளம்பும் முன்னே அன்னையை அழைத்து வினோதினி பற்றிய விவரத்தை தெரியப் படுத்தி இருந்தாள் இலக்கியா.
வீட்டின் முன்னில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய இலக்கியாவைத் தொடர்ந்து இறங்கிய வினோதினியின் கண்கள் சுற்றுப் புறத்தில் பரிச்சயம் தேடி நாலாபக்கமும் சுழன்றது.
நம்பினேன் உன்னை நான்
பெற்ற தாயைப்போல்…..
கொண்டாடிய தந்தை போல்…..
எனக்குள் உள்ள என்னைப் போல….
எண்ணியதெல்லாம் வெறும்
எண்ணத்தில் கரைந்ததே…..
துரோகத்தின் வாள் கொண்டு
குத்திவிட்டாய் முதுகில்……
உயிர் போகா விட்டாலும்
உயிருள்ள ஜடமாகினேன் நான்…..
விஷத்துக்கும் அமுதுக்கும்
வித்தியாசம் அறியா என்னைக் கண்டு
எள்ளி நகையாடுகிறது விதியும்….
துரோகத்தில் வீழ்வேனா….
துயரத்தில் மடிவேனா…….
தூயவனின் கரம் பிடித்து
என் தோஷம் களைவேனா……
விதியின் விளையாட்டில்
தள்ளாடுகிறேன் நான்….

Advertisement