Advertisement

இலக்கணம் – 27
“அங்கிள், கொஞ்சம் உள்ளே வாங்க…” என்றதும் கனகு உள்ளே வர, “இந்த அப்ளிகேஷன்ல உள்ள வரிசைப்படி ஒவ்வொருத்தரா வர சொல்லுங்க…” என்றாள்.
“சரிம்மா…” என்றவர் ஹாலில் காத்திருந்தவர்களிடம் சென்று, ஒவ்வொருத்தராய் உள்ளே அனுப்பினார். கனகை அங்கேயே இருக்கும்படி சொல்ல அவரும் தொழில் சம்மந்தமான சில கேள்விகளை வந்தவர்களிடம் கேட்டார்.
குவாரி, கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் அவர்களின் அனுபவத்தைக் கேட்டாள். வந்திருந்த பத்து பேரில் இருவரின் பதில்கள் திருப்தியாய் இருக்க அவர்கள் பெயரைக் குறித்து வைத்துக் கொண்டாள்.
கனகிடம் அவர்களைப் பற்றி சொல்லி அவர் கருத்தைக் கேட்க அவரும் அதில் ஒருத்தனை சிபாரிசு செய்தார். அவனுக்கு தொழில் முறை அனுபவமும் இருந்தது. அவனது தந்தையை அவருக்கும் நல்ல பரிச்சயம் இருந்தது. நல்ல குடும்பம் என்பதால் அவனையே பரிந்துரை செய்தார். 
“சரி அங்கிள்… இவரை நாளைக்கு வந்து ஜாயின் பண்ண சொல்லிடுங்க… நம்ம மணல் குவாரி, கருங்கல் குவாரி, லாரி ஆபீஸ், குடோன் எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போயி அறிமுகப் படுத்தி வச்சிடுங்க… டெய்லி எல்லா இடத்துலயும் என்னென்ன வேலை நடக்குதுன்னு இவருக்கு ரிபோர்ட் வந்திடணும்… டெய்லி இவர் எனக்கு ரிபோர்ட் பண்ணுற போல இருக்கணும்… புது ஆர்டருக்கு வெளியூர் போக வேண்டி இருந்தால் போயி பேசி முடிச்சிட்டு வரணும்… அப்புறம் இன்னும் இங்கே என்னல்லாம் வொர்க் இருக்குன்னு நீங்க சொல்லிக் கொடுத்திடுங்க… ஒரு மாசம் அவரோட பர்பார்மன்ஸ் பார்த்துட்டு அவர் எதிர்பார்க்குற சம்பளம் கொடுத்திடலாம்… மத்தவங்க கிட்ட தேவைப்பட்டா அழைச்சிக்கிறோம்னு சொல்லி அனுப்பிடுங்க…” என்றாள்.
“சரிம்மா சொல்லிடறேன்…” என்றவர் வெளியே சென்று மற்றவர்களிடம் விஷயத்தை சொல்லிவிட்டு அந்தப் பையனை மட்டும் அழைத்து விவரங்களை சொல்லி நாளை வரச்சொல்லி அனுப்பினார்.
அப்போதும் ஒருவன் மட்டும் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டவர், “தம்பி இண்டர்வியூ முடிஞ்சிருச்சு… நீங்க கிளம்பலாம்…” என்றார்.
“என்னை இன்னும் இண்டர்வியூக்கு அழைக்கவே இல்லையே…” என்றான் அவன்.
“ஓ, சரி தம்பி… ஒருத்தரை செலக்ட் பண்ணி நாளைக்கு வரவும் சொல்லியாச்சு… உங்க அப்ளிகேஷன் இருக்கட்டும்… வேணும்னா கூப்பிடறோம்… இப்ப நீங்க கிளம்புங்க…” என்றார் அவர்.
“உங்க மேடமை வர சொல்லுங்க… என்னை ஏன் இண்டர்வியூ பண்ண கூப்பிடலைன்னு எனக்குத் தெரியணும்…” என்றான் அவன் அப்படியே அமர்ந்து கொண்டு.
“அடடா… இதென்ன தம்பி வம்பாப் போச்சு…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து வெளியே வந்தாள் இலக்கியா. அவளுக்கும் அவர்கள் பேசுவது கேக்கத்தான் செய்தது.
“அங்கிள் நீங்க போயி வேலையை பாருங்க… இவர்கிட்டே நான் பேசிக்கறேன்…” என்றதும் அவர் அவரது அறைக்கு செல்ல அவனிடம் திரும்பினாள்..
“விக்ரம்… என்ன இது, எதுக்கு இப்படிப் பண்ணறிங்க…” என்றாள்  எங்கோ பார்த்துக் கொண்டு. நன்றாக மெலிந்திருந்தாள். முன்னிலும் எளிமையாக ஆனால் தெளிவாக இருப்பது போலத் தோன்றினாள். பேச்சில் ஒரு நிதானம் தெரிந்தது.
“எப்படிப் பண்ணினேன்… எனக்கு இப்போதைக்கு ஒரு வேலை வேணும்… அதுக்குதான் அப்ளை பண்ணினேன்… அது ஒரு தப்பா… உன்கிட்ட வேலை செய்யற தகுதி கூட எனக்கு இல்லையா…” என்றான் அவனும்.
ஒரு நிமிடம் யோசித்தவள், “உங்ககிட்ட பேசணும்… வந்திடறேன்…” என்று அவள் அறைக்கு சென்றாள்.
“அங்கிள்… நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்திடறேன்…” என்று சொல்லிவிட்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்தாள்.
“வாங்க…” என்றவள் வேகமாய் முன்னே நடக்க, கைப்பிடியைப் பிடித்து எழுந்தவன் காலைத் தாங்கித் தாங்கி நடந்து வந்தான். திரும்பிப் பார்க்காமல் நடந்தவள் வாசலில் நின்ற காருக்கு சென்றதும் தான் அவன் மெல்ல நடந்து வருவதைக் கண்டாள். மனம் வேதனையில் விம்மியது.
அவள் காரின் பின்பக்க கதவைத் திறந்து விட அதை அடைத்துவிட்டு முன்னில் வந்து நின்றான். அவனை அவள் நேரடியாய் பார்க்காவிட்டாலும் அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவளுக்கு ஒரு மாதிரி குறுகுறுப்பாய் உணர்ந்தாள். எதுவும் பேசாமல் முன்பக்கக் கதவைத் திறந்துவிட சிரமத்துடன் உள்ளே காலை எடுத்து வைத்து அமர்ந்து கொண்டான்.
காரை எடுத்தவள் சாலையில் கண்ணைப் பதித்தாள். அவனிடம் இனியும் பேசாமல் நாட்களை நீட்டி செல்வதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. தன்னால் தான் அவன் இப்படி கைத்தடியுடன் நடக்கிறான் என்பது அவளுக்கு வேதனையைக் கொடுத்தது.
என்ன பேசுவது… எப்படிப் பேசுவது… என்று எதுவும் தோன்றா விட்டாலும் நிச்சயம் பேசிவிடுவது என்ற முடிவில் இருந்தாள். ஒதுக்குப்புறமாய் இருந்த ஒரு ரெஸ்டாரண்டின் முன்பு காரை பார்க்கிங்கில் நிறுத்தினாள்.
“விக்ரம், இறங்குங்க…” என்றவள் இறங்கி முன்னில் வந்து நின்றாள்.
கார்க்கதவைத் திறந்தவன் இறங்குவதற்காய் காலை எடுத்து கீழே வைக்கையில் வேதனையில் அவன் முகம் சுளிந்தது. புல்லட்டின் காயம் சரியாகி விட்டாலும் உடைந்த எலும்பு கூடி வருவதற்கு மூன்று மாதத்திற்கு மேல் ஆகுமென்று டாக்டர்கள் கூறியிருந்தனர்.
கைத்தடியுடன் இறங்கத் தடுமாறியவனைக் கண்டு அவன் பக்கம் வந்து கார்க்கதவைப் பிடித்துக் கொண்டாள்.
அவளை சிறு புன்னகையுடன் நோக்கிக் கொண்டே இறங்கியவன் மெதுவாய் நடந்து வந்தான். அவனுக்கு தகுந்தது போல அவளும் மெதுவே நடந்தாள். நீண்ட வழியின் இரு பக்கத்திலும் பசுமையான பூச்செடிகளும் மரங்களும் இதமாய் இருந்தது.
மதிய நேரம் ஆனாலும் வெயிலின் சூடு தெரியாமல் இதமான காற்றோடு ரம்மியமாய் இருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் அவளுடன் தனிமையில் நடப்பது மனதுக்கு ஒரு புதுவித தெம்பைக் கொடுத்தது விக்ரமுக்கு.
அமைதியாகவே நடந்தவளை நோக்கியவன், “எப்படி இருக்கே இலக்கியா…” என்றான்.
வெகு நாட்களுக்குப் பிறகு அவனது அக்கறையான அதே குரல் காதுக்குள் புகுந்து பழைய நட்பின் நாட்களையும், கலகலப்பையும் இழந்து போன சந்தோஷங்களையும் எல்லாம் மீண்டும் ஒரு முறை நினைவடுக்கில் தடவிச் சென்றது போலிருந்தது.
அவனது உடல்நிலையைப் பற்றி அவள் இதுவரை எதுவுமே கேட்கவில்லை. இப்போதும் அவள் எப்படி இருக்கிறாள் என அக்கறையோடு கேட்கிறான். இவனது உண்மையான அன்பை ஏன் நான் மதிக்க மறுக்கிறேன். மனதுக்குள் அவளையே திட்டிக் கொண்டாள்.
“ம்ம்… இருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க…” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.
“நான் நல்லாயில்லை இலக்கியா…” என்றான் அவன் சட்டென்று. அவளுக்கு ஏனோ அந்த வார்த்தைகள் வெகுவாய் வலித்தது. அவள் அமைதியாய் இருக்க, தடியைத் தாங்கிக் கொண்டே நடந்தவன் தொடர்ந்தான்.
“உன்னோட வாழ்க்கை இப்படி ஆக நானும் ஒரு காரணமோங்கிற கவலை என்னைக் கொல்லுது… உன்னை பழைய மாதிரி கலகலன்னு பேசுற என் தோழியா, இனி பார்க்கவே முடியாதான்னு மனம் ஏங்குது…” வலியோடு வந்தன அவனது வார்த்தைகள்.
அமைதியாய் ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தாள். மேசையை சுற்றி நான்கு நாற்காலிகள் போடப்பட்டு தனித்தனி காபினாய் பிரிக்கப் பட்டிருந்தன. ஒதுக்கமாய் இருந்த ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்தவள், “சாப்பிட்டுப் பேசுவோம்…” என்று சொல்லிவிட்டு வாஷ் பேஷினை நோக்கி நகர்ந்தாள்.
“ம்ம்…” என்றவன், வாஷ் பேஷினை நெருங்க கீழே போட்டிருந்த தரை விரிப்பைக் கவனிக்காமல் தடுக்கி விழப் போனான். வேகமாய் அவனது கையைப் பிடித்துக் கொண்ட இலக்கியா, “பார்த்து வாங்க விக்ரம்…..” என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். வெகு நாட்களுக்குப் பிறகு அவளது விக்ரம் என்ற அழைப்பு காயம் பட்ட நெஞ்சுக்கு ஆறுதலாய் இருந்தது. நாற்காலியில் எதிரெதிரே அமர்ந்தனர்.
“என்ன சாப்பிடறிங்க…” என்றாள் அவனிடம்.
“ப்ச்… எனக்கு எதுவும் வேண்டாம்… நீ சாப்பிடு…” என்றான் அவன்.
“பணம் ஒண்ணும் நீங்க கொடுக்க வேண்டாம்… நான் கொடுத்துக்கறேன்… பயப்படாம என்ன வேணும்னு சொல்லுங்க…” என்றாள் அவள். திகைப்புடன் நிமிர்ந்தவனைக் கண்டு புன்னகைத்தாள். அவள் சொன்ன வார்த்தைகளை நம்ப முடியாமல் ஆச்சர்யத்துடன் பார்த்தான் அவன்.
“என்ன முழிக்கறிங்க… பணத்தை நான் கொடுக்கறேன்… வேண்டியதை சாப்பிடுங்கன்னு சொன்னேன்…” என்றாள் மீண்டும்.
“இ… இளா… நீயா இப்படிப் பேசினே… எத்தனை நாளாச்சு… இப்படி ஜாலியாப் பேசி…” அவன் ஆச்சர்யமாய் கேட்டான். அதற்குள் பேரர் வர இருவருக்கும் ஜூஸ் மட்டும் கொண்டு வருமாறு சொன்னாள்.
“ஏன்… அந்த வீணாப் போனவளும், உங்க வலது கை வினோத்தும் இப்படில்லாம் பேசறதில்லையா… நாக்கை அடமானம் வச்சுட்டாங்களா…” என்றவளை கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
“இ…இளா… நீ இப்படி பேசறது எனக்கு ரொம்ப சந்தோஷமாருக்கு… ஆனாலும் நம்பதான் முடியலை…” என்று கூறவும் அவன் கையில் கிள்ளியவள்,
அவன் “ஆ…” எனவும் “இப்ப நம்பறீங்களா…” என்றாள்.
“ம்ம்… எத்தனை நாளாச்சு… நீ என்னோட பேசி… இவ்ளோ நாள் ஹாஸ்பிடல்ல இருந்தப்ப கூட எப்படி இருக்கேன்னு விசாரிக்கலை… எனக்காக வருத்தப் படலை… உன் வீட்டுல இருந்து அம்மா அடிக்கடி வந்து பார்த்திட்டுப் போனாங்க… பாட்டி கூட போன்ல விசாரிச்சாங்க… நீ தான் எதுவுமே கேக்கலை… ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலை…” என்று அவன் குற்றப் பட்டியல் வாசிக்க அவள் முறைத்தாள்.
“ஓ… ஐயாவுக்கு தேங்க்ஸ் வேற சொல்லணுமா… நினைப்புதான்…” என்றவளின் முகம் உடனே மாறி இருந்தது.
“விக்ரம்… நான் எவ்ளோ முட்டாளா இருந்திருக்கேன்… இத்தனை வருஷமா கூட இருந்தும் ஒரு துரோகத்தை தரம் பிரிச்சுப் பார்க்கத் தெரியாம இருந்திருக்கேன்… தகுதி இல்லாத இடத்துல என் காதலை வச்சு அந்த காதலையே கொச்சைப் படுத்திட்டேன்… என் அம்மா கழுத்தில் தாலியை அறுத்தவன் கையால என் கழுத்தில் தாலி வாங்கியிருக்கேன்… இதெல்லாம் யோசிக்கும்போது நான் நானாகவே இல்லை…” நிறுத்தியவள் தொடர்ந்தாள்.
“எனக்காக ரிஸ்க் எடுத்து உங்களுக்கு இப்படில்லாம் ஆயிருச்சேன்னு ரொம்ப வேதனையா இருந்துச்சு… நீங்க என்கிட்டே அந்த துரோகியைப் பத்தி சொன்னபோதே நம்பியிருந்தா உங்களுக்கு இப்படில்லாம் ஆயிருக்காதே… உங்களை முகத்துலேயே முழிக்காதீங்கன்னு கண்டபடி திட்டிட்டு உங்க முகத்தை எப்படிப் பார்ப்பேன்… எனக்கு அந்த தகுதியே கிடையாதே… உங்ககிட்ட ஒரு வார்த்தைல நன்றின்னு சொல்லிட்டா தீர்ந்திடாது… உங்களை நான் திட்டினதுக்கு ஒரு வார்த்தையில் சாரின்னு சொன்னாலும் போதாது…” வேதனையுடன் பேசினாலும் அவளது கண்கள் கலங்கவில்லை.
“இளா… ப்ளீஸ் வருத்தப்படாதே… நீ நல்லாருக்கணும்னு தான் கஷ்டப்பட்டேன்… இப்ப உன் வாழ்க்கையை மீட்டுட்டேன்… ஆனா உன் சந்தோஷத்தைப் பறிச்சுட்டனோன்னு எனக்கு வருத்தமா இருக்கு… எங்கே… நத்தை மாதிரி வீட்டுக்குள்ளேயே சுருண்டு போயிருவியோன்னு பயந்தேன்… நல்லவேளை நீ இப்படி தெளிவா பேசறது தெம்பா இருக்கு…”
“என் மேல வச்ச அன்புக்காக உயிரைக் கொடுத்து செயல்ல இறங்கின உங்களைப் புரிஞ்சுக்காம, சுயநலத்துக்காக பிள்ளை போல வளர்த்தின சொந்த மாமாவையே கொலை பண்ணின அந்த துரோகியைத் தலயில் வச்சுக் கொண்டாடினதை நினைக்கும்போது எனக்கு நானே அருவருத்துப் போறேன் விக்ரம்… எப்படி உங்க முகத்துல முழிப்பேன் விக்ரம்…” இப்போது அவளது கண்கள் லேசாய் கசிந்திருந்ததை உணர்ந்தான் அவன்.
“என்னால உங்க முகத்தைப் பார்க்க முடியலை… தகுதி இல்லாத இடத்துல வச்ச என் காதல் செத்துப் போயிருச்சு… நீங்களும் தகுதி இல்லாத இடத்துல உங்க அன்பை வைக்காதிங்க… என்னைப் பத்தி யோசிச்சு உங்க வாழ்க்கையைப் பாழாக்காதிங்க…” என்றவள் கன்னத்தில் வழிந்த கண்ணீர் முத்துக்களை அவசரமாய்த் துடைத்துக் கொண்டாள்.
ஒருநிமிடம் அவளையே பார்த்தவன், “இளா… தகுதி இல்லாத இடத்துல வச்ச உன்னோட காதல் செத்துப் போயிருச்சுன்னு நீயே சொல்லிட்டே… ஆனா என் காதலை நான்  தகுதியான இடத்துல தான் வச்சிருக்கேன்னு நம்பறேன்… அதுக்கு நீ நினைச்சா உயிர் கொடுக்க முடியும், கொடுப்பியா…” ஆவலுடன் கேட்டான் விக்ரம். அவனது நேரடியான கேள்வியை எதிர்பார்க்காதவள் அதிர்ந்தாள்.
“விக்ரம்……” அவளது வார்த்தைகள் வேதனையுடன் ஒலித்தன.
சிறகறுந்த பட்டமாய்
சிதறிப் பறக்கிறேன் நான்……
சிந்தையில் நிறைந்த காதலை
சிதையில் தொலைக்க தவிக்கிறேன்…..
சீதையாக நினைக்கிறேன் நான்…..
ஆயினும் என் காதல்
ராமன் மீதுயில்லை…..
நீ ராவணன் என்று தெரியாமல்
சிந்தை துளைத்த சித்திரத்தை
நஞ்சென்று புரிந்திட்ட
நயவஞ்சகத்தை மனதிலிருந்து
தொலைத்திட சாம்பலாக பொசுக்கிட
தீக்குளிக்க வேண்டுமென்றே
சீதையாக நினைக்கிறேன் நான்…….

Advertisement