Advertisement

இலக்கணம் – 26
இரு மாதங்களுக்குப் பிறகு…
“அம்மா…. நான் கிளம்பறேன்…” கைப்பையை எடுத்துக் கொண்டே அடுக்களையை நோக்கிக் குரல் கொடுத்தாள் இலக்கியா.
இப்போது அவள் தான் தந்தையின் தொழில் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறாள். தந்தை இருக்கும்போது அவருக்கு விசுவாசமாய் இருந்த கணக்கர் கனகை சத்யா வேலையை விட்டு நிறுத்தி இருந்தான். அவரை மீண்டும் சேர்த்துக் கொண்டவள் ஒவ்வொரு விஷயமாய் புரிந்து கொண்டு தொழிலை கவனிக்கத் தொடங்கினாள்.
ஒரு மாதம் வரை அறைக்குள்ளேயே துவண்டு கிடந்தவளை சற்று தேற்றி வெளியே கொண்டு வர லலிதாவும் பாட்டியும் அவர்களுடன் வீணாவும் நன்றாகவே பாடு பட்டிருந்தனர். தொழிலை கவனிக்க ஆளில்லாததால் அவர்களது ஆர்டர் மற்றவருக்கு செல்லத் தொடங்க இளமாறனிடம் கொண்ட மரியாதையில் கனகு தான் இலக்கியாவிடம் நிலைமையை சொல்லிப்  புரிய வைத்தார். 
முதலில் விருப்பமில்லாமல் வேறு வழியில்லாததால் குவாரி அலுவலகத்திற்கு சென்றவள், கட்டுப்பாடில்லாமல் பாய்ந்து செல்லும் நினைவுகளின் தாக்கத்தில் சோர்ந்து போகும் மனதை அமைதிப்படுத்த எப்போதும் தனது மூளைக்கு வேலை கொடுப்பதே நல்ல வழியென்று புரிந்து கொண்டாள். கனகிடம் தனக்குத் தெரியாத விஷயங்களைக் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டாள்.
நஷ்டத்தை நோக்கி சரிந்து கொண்டிருந்த அவர்களின் பிஸினஸ் லாபம் இல்லாவிட்டாலும் கவனிக்க ஆள் வந்து விட்டதால் நஷ்டம் இல்லாமல் போகத் தொடங்கியது. மகளின் குரலைக் கேட்டு திரும்பிய லலிதா, அவளையே உற்று நோக்கினார்.
                                       
“ப்ச்… என்னம்மா அப்படிப் பாக்கறே… நீ எவ்ளோ உத்துப் பார்த்தாலும் என்னோட கறுப்பு கரைஞ்சிடவா போகுது… எப்பவும்  கருவாச்சியா தான் இருப்பேன்…” என்றாள் எரிச்சலுடன்.
“என்னடி ஆச்சு உனக்கு… நான் சாதாரணமா பார்த்ததுக்கு கூட ஒரு காரணம் கண்டு பிடிக்கறே… நீ எப்படி இருந்தாலும் என் பொண்ணுடி… எனக்கு நீ எப்பவுமே அழகுதான்… நிறத்தை பெருசா நினைக்குற குணத்தை முதல்ல மாத்து… வெள்ளை, உடம்போட தோலில் இருந்தா போதாது மனசுல இருக்கணும்… அதான் அழகு… அப்படிப் பார்த்தா என் பொண்ணு பேரழகிதான்… இரு…” என்றவர் உள்ளே சென்று சின்னதாய் ஒரு ஸ்டிக்கர் பொட்டை கொண்டு வந்து அவள் நெற்றியில் தொட்டு விட்டார்.
“எத்தனை தடவை தான் சொல்லுறது… நீ எப்பவும் நீயாவே இருன்னு… இந்த சுய பட்சாதாபமும், வருத்தமும் உன் மனசுல இருந்து மாறணும்… உனக்கும் நல்லவொரு வாழ்க்கை அமையணும்னு எனக்கு ஆசை இருக்காதா… ஹூம்… எவ்ளோ சொன்னாலும் காதுலயே போட்டுக்க மாட்டேங்கறே…”
“அம்மா… காலைலயே தொடங்காதீங்க… நான் இப்ப ஆபீஸ் போகவா வேண்டாமா…” எரிச்சலுடன் கேட்டவளை முறைத்தவர், “எப்போ என்னோட கவலை உனக்குப் புரியப் போகுதோ…” சொல்லிக் கொண்டே கண்களைத் துடைத்துக் கொண்ட லலிதா, “சரி… உக்காரு… சாப்பிட எடுத்து வைக்கிறேன்…” என்றவர் பிளேட்டில் இட்லியை வைத்து சட்னி, சாம்பாரை ஊற்றினார். மெலிந்து இந்த சில நாட்களில் பத்து வயது கூடியவரைப் போல காட்சியளித்த அன்னையின் கவலை அவளுக்கும் புரியாமலில்லை.
அவளது உணர்வுகளை அடக்கும் வழியறியாது தடுமாறிக் கொண்டிருந்தாள் அவள். தந்தையைக் கொன்றவனை மனது வெறுத்து ஒதுக்கினாலும் அவன் மீது அவள் கொண்ட காதல் மீண்டும் மீண்டும் மனதுக்குள் கிளர்ந்தெழத்தான் செய்தது. எதையும் பேசாமல் அமைதியாய் அமர்ந்தவள், “அம்மா… பாப்பா எங்கே… சாப்பிட்டாளா…” என்றவள் கண்களால் குழந்தையை துளாவினாள்.
“ம்ம்… பாப்பா சாப்பிட்டா… பாட்டிகிட்ட இருக்கா… என்னதான் அந்தப் பாவியோட வாரிசா இருந்தாலும், எதுவுமே தெரியாம அந்தக் குழந்தை நம்மளைப் பார்த்து கள்ளங்கபடம் இல்லாம சிரிக்கும்போது மனசுல இருக்குற கவலை எல்லாம் அப்படியே வடிஞ்சு போயிடற போல தான் இருக்கு…” என்றார் லலிதா.
“ம்ம் உண்மைதான்மா…” என்றவள் சாப்பிட்டுக் கொண்டே குழந்தையை தான் வீட்டுக்கு கொண்டு வந்த அன்று அன்னையும் பாட்டியும் போட்ட கூச்சலை நினைத்துக் கொண்டு இட்லியை விழுங்கத் தொடங்கினாள். சத்யா இறந்து பதினைந்து நாட்கள் ஆகியிருந்தது. சத்யாவின் துரோகமும் தந்தைக்கு செய்த கொடுமையும் அவன் மீது தான் கொண்ட காதலை அவன் பொய்யாக்கி சென்றதும் அவள் மனதில் மாறி மாறித் தாக்க அறைக்குள்ளேயே சோர்ந்து கிடந்தவள் வினோதின் அலைபேசி அழைப்பு வரவும் எடுத்தாள்.
“ஹ…ஹலோ… சொல்லுங்க வினோத்…” மெதுவாய் தயக்கத்துடன் ஒலித்தது அவளது குரல்.
“என்ன சொல்லுறது… அதான் எல்லாரும் அவங்கவங்க வேலைதான் முக்கியம்னு சுயநலமா இருக்கிங்களே… இங்கே நான் ஒருத்தன் எல்லாத்தையும் பார்த்துக்க முடியாமல் திணறிகிட்டு இருக்கேன்… இந்த முட்டாள் விக்ரம்க்கு இதெல்லாம் தேவையா… பெருசா தியாகி மாதிரி தனியா போயி மாட்டிகிட்டு என் உசுரை வாங்குறான்… நீங்கல்லாம் உங்களோட கவலையை மட்டுமே நினைச்சு உருகுங்க… இங்க நான் என்ன கஷ்டப்பட்டா யாருக்கென்ன…” படபடவென்று புலம்பினான் வினோத்.
“என்னாச்சு வினோத்… எதுக்கு இப்படில்லாம் சொல்லறீங்க…”
“பின்ன எப்படி சொல்லணும் இலக்கியா… நான் ஒருத்தன் எத்தனை விஷயத்தை தான் பார்த்துக்க முடியும்… யாருமே என்னைப் பத்தி யோசிக்க மாட்டேங்கறிங்க…” வருத்தமாய் ஒலித்தது குரல்.
“என்ன உங்களைப் பத்தி யோசிக்கலை… எதுவா இருந்தாலும் ஓபனா சொல்லுங்க வினோத்…” இலக்கியாவுக்கு புரியவில்லை.
“ஒருத்தன் பெரிய தியாகி மாதிரி கால்ல புல்லட் பாஞ்சு எலும்பு உடைஞ்சு ஆப்பரேஷன் முடிஞ்சு இத்தனை நாளா ஹாஸ்பிடல்ல கிடக்கறானே… அவன் என்ன ஆனான்… இருக்கானா செத்தானான்னு கூட உனக்கு யோசிக்கத் தோணலை இல்ல… இவன் கூட எப்பவும் துணைக்கு ஒரு ஆளு வேணும்… என்னால இவன் கூட இருக்க முடியுமா… குழந்தையைப் பார்க்க முடியுமா… வேலைக்குப் போக முடியுமா… நடுவுல அப்பப்ப வினோதினியையும் போயி பார்த்துட்டு வரணும்… நானும் மனுஷன் தானே…” பொங்கினான். அப்போது தான் அவளுக்கு விஷயமே புரிந்தது.
“ச… சாரி வினோத்… இதெல்லாம் யோசிக்கற மனநிலைல நான் இல்லை… அதான்… எ…என்னை மன்னிச்சிருங்க… இதுக்கு நான் உடனே ஏற்பாடு பண்ணறேன்… நான் இப்பவே ஹாஸ்பிடலுக்கு வரேன்…” என்றாள் இலக்கியா.
“ம்ம்… சரி…” என்றவன் சந்தோஷமாய் அலைபேசியை வைத்தான். அவனும் எத்தனை நாள் தான் இந்த விக்ரமின் புலம்பலைத் தாங்குவான்… இலக்கியா எப்படி இருக்கிறாளோ… இப்போதும் அழுது கொண்டிருப்பாளா… சத்யாவின் துரோகத்தை அவளால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்… துடித்துப் போயிருப்பாளே… அந்தக் கவலையில் தான் என்னைப் பார்க்கக் கூட வரவில்லை போலிருக்கிறது… அவள் அம்மாவும், பாட்டியும் துடித்துப் போயிருப்பார்களே… என்று எப்போதும் காலில் கட்டுடன் படுத்துக் கொண்டு புலம்புவனுக்கு என்னதான் பதில் சொல்ல முடியும். 
வினோத்துக்கு இலக்கியாவின் மனநிலை புரியாமல் இல்லை. குழந்தையை வீட்டில் உள்ள வேலைக்காரப் பெண்மணி நன்றாகவே பார்த்துக் கொள்கிறார். அலுவலகத்திற்கும் பதினைந்து நாள் லீவு சொல்லி விட்டான். வீணாவும் வேறு சில நண்பர்களும் அவ்வப்போது வந்து விக்ரமுக்குத் துணையாக இருக்கத்தான் செய்கிறார்கள். வினோதினியையும் விக்ரமின் வேண்டுதலுக்காய் அவன் சில முறை போய் பார்த்து விட்டுத்தான் வந்தான்.
அவளுக்கு மனநிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் பழைய நினைவுகள் திரும்புவது கடினம் என்று டாக்டர் சொல்லிவிட்டனர். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளத் தொடங்கி இருந்தாள். யாராவது எதுவும் கேட்டால் பதில் சொல்லவும், சொல்லும் வேலையை செய்யவும் தொடங்கி இருந்தாள். சில நேரம் மட்டும் அவளது பார்வைகள் எங்கோ வெறித்திருக்க அமைதியாகி விடுவாள். அவளது மனதில் குழந்தையின் நினைவுகள் கூட ஒரு கனவு போலதான் படிந்திருந்தது.
ஒருநாள் அப்படி ஏதோ ஒரு கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது தான் வினோத் டாக்டரிடம் விசாரித்துவிட்டு காண வந்தான். அவளைப் பார்த்து சிரித்தவனை உற்று நோக்கியவள், சந்தோஷத்துடன் ஓடிவந்து கட்டிக் கொண்டாள்.
“ஏய்… கண்ணா… எங்கடா இவ்ளோ நாள் ஒளிஞ்சிருந்தே… என் கண் முன்னாடி வராம விளையாட்டா காட்டறே… இனி உன்னை எங்கயும் போக விட மாட்டேன்…” என்று அவன் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டவளைக் கண்டு அவன் மனம் கனிந்தது.
“அழகான இளவயது பெண்… சத்யா எனும் துரோகியால் பாதிக்கப் பட்டு வாழ்க்கையைத் தொலைத்த மற்றொரு பெண்… இன்னும் முழுமையாய் வாழ்க்கையைத் தொடங்கவில்லை… அதற்குள் அவள் விதியை எப்படியெல்லாம் இந்தக் கடவுள் மாற்றி எழுதிவிட்டார்… தன் சுயத்தை இழந்து யாரென்றே தெரியாமல் ஏதோ ஒரு உலகில் வாழ்ந்து கொண்டிருகிறாள்… இந்த நிலைமை யாருக்கும் வரக் கூடாது என நினைத்தவன் அன்போடு பேசிக் கொண்டிருந்தான். சிறு குழந்தை போல அவள் ஏதேதோ சொல்ல அதற்குத் தகுந்த போல அவனும் பேசிக் கொண்டிருந்தான். நண்பனுக்காய் அவளைக் காண சென்றவன் அவள் சந்தோஷத்திற்காய் அடிக்கடி சென்று வந்தான்.
ஹாஸ்பிடலில் விக்ரம் உறங்கிக் கொண்டிருக்க அவனுக்கருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்த வினோத் வாசலில் நிழலாடவும் நிமிர்ந்தான்.
இலக்கியா தான் உள்ளே வந்தாள். அவளைக் கண்டதும் திகைத்துப் போனான். பாதியாய் மெலிந்து கண்களில் நிறைந்த சோகத்துடன் அவளைக் காணவே வருத்தமாய் இருந்தது.
வினோத் விக்ரமை எழுப்பப் போக, “வேண்டாம் வினோத்… அவர் தூங்கட்டும்… அவரை பார்த்துப் பேசுற சக்தி எனக்கு இல்லை…. இப்ப எப்படி இருக்கார்… இன்னும் எவ்ளோ நாளாகும் டிஸ்சார்ஜ் ஆக…” அவனது காலை கண்களால் அளந்து கொண்டே கேட்டவளின் குரல் உறங்கிக் கொண்டிருந்த விக்ரமின் காதுக்குள் சென்று அவனைத் தட்டி உணர்த்தியது. ஆனாலும் அவள் சொன்ன வார்த்தைகள் கண் திறக்காமல் அப்படியே படுத்திருக்க வைத்தன.
“இன்னும் ஒரு வாரம் இருக்கணும்னு சொல்லி இருக்காங்க… வீட்டுக்குப் போனாலும் ரெஸ்ட் தான்… நீ ஏன் இப்படி இருக்கே இலக்கியா… உன்னைப் பார்க்கவே ரொம்ப கஷ்டமாருக்கு…” என்றான் உண்மையான வருத்தத்துடன்.
“அதை விடுங்க வினோத்… உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுத்திட்டேன்… இங்கே இவர் கூட இருக்க யாராவது நர்ஸ் வேணும்னா ஏற்பாடு பண்ணிக்கலாமா… உங்களுக்கு ஆபீஸ் போகணுமே…” என்றாள் அக்கறையுடன்.
“ம்ம்… பசங்க ஒவ்வொருத்தரும் மாத்தி மாத்தி விக்ரமோட துணைக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க… நைட் நான் பார்த்துக்குவேன்…” என்றான் வினோத்.
“ம்ம்… குழந்தை எங்கிருக்கா வினோத்… நான் அவளை என் வீட்டுக்கு எடுத்திட்டு போறேன்… உங்களுக்கு சிரமம் இல்லாம இருக்கும்… தப்போ சரியோ… அவ எங்க வீட்டுக் குழந்தை… எங்களோட இருக்கட்டும்… வினோதினியும் இனி என் பொறுப்பு…  அவளைக் குணப்படுத்த வேண்டியது என் கடமை… சொத்துக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு தானே அவங்களைக் கொல்ல நினைச்சான்… அவங்களோட இந்த நிலைக்கு நானும் காரணம்…” என்றவளின் குரலில் ஒரு விரக்தி எட்டிப் பார்த்தது.
“குழந்தை வீட்டுல சர்வன்ட் பொறுப்புல இருக்கா… நீ சொன்னதெல்லாம் சரிதான் இலக்கியா… சத்யாவால பாதிக்கப் பட்டது வினோதினி, குழந்தை மட்டுமல்ல… நீயும் விக்ரமும் கூடத்தான்… அவனுக்கு நீ பொறுப்பெடுத்துக்க மாட்டியா… அவன்கிட்ட ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்கறே…” ஆதங்கத்துடன் கேட்ட வினோத்தை ஒரு பார்வை பார்த்தவள் விக்ரமின் மீது கண்ணைப் பதித்தாள். அவனது கண்கள் இமைக்குள் உருண்டு கொண்டிருக்க கண்ணோரத்தில் கண்ணீர் கசிந்திருந்தது.
எதுவும் சொல்லாமல் தலையசைத்து வெளியேறியவள் குழந்தையை விக்ரம் வீட்டுக்கு சென்று எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்கு சென்றாள். அதற்கு பாட்டியும் அவள் அம்மாவும் அவளை கோபத்தோடு திட்டவும் செய்தனர். அந்த துரோகியின் வாரிசை நாம் வளர்த்துவதா…. இதுவும் பெருசாகி நமக்கு துரோகம் செய்யவா… வேண்டாம் என்று கத்திப் பார்த்தனர்.
                          
ஆனால் அதற்கெல்லாம் அசராமல் நின்றவள், “அம்மா… இந்தக் குழந்தை நம்மளோட இருக்கறது தான் சரின்னு நான் முடிவு பண்ணிட்டேன்… பெரியவங்க பண்ணின தப்புக்கு எதுவுமே தெரியாத இந்தக் குழந்தையை எதுக்கு தண்டிக்கணும்… உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நான் அவங்க வீட்டுல போயி தங்கிகிட்டு குழந்தையைப் பார்த்துக்கறேன்…” என்று ஒரு போடு போட்டதும் அமைதியாகி விட்டனர்.
முதலில் குழந்தையை எடுக்கக் கூட செய்யாமல் தவிர்த்தவர்கள் தங்களை நோக்கி சிரிக்கும் குழந்தையின் பொக்கை வாய் சிரிப்பில் மெல்ல மெல்ல மாறிப் போயிருந்தனர். நல்ல மனதுள்ளவர்களின் வீம்பும் பிடிவாதமும் குழந்தையிடம் எப்படி நிலைக்கும்… அவர்களுக்கும் அந்தக் குழந்தையைக் கொஞ்சுவதே ஆறுதலாய் இருந்தது. தங்கள் மகளைப் போலவே வினோதினியும் பாவம் சத்யாவால் வஞ்சிக்கப் பட்டவள் தானே… என்ற இரக்கமும் சேர்ந்து கொள்ள குழந்தையை மனசார நேசிக்கத் தொடங்கி இருந்தனர்.
“இட்லியைத் தட்டில் வச்சுட்டு சாப்பிடாம என்னதான் யோசிச்சுட்டு இருக்கியோ… சீக்கிரம் சாப்பிடு…” என்ற அன்னையின் குரலில் நிகழ்வுக்கு வந்தவள் சாப்பிட்டு முடித்துக் கிளம்பினாள்.
“இன்னைக்கு மானேஜர் போஸ்ட்டுக்கு இண்டர்வியூ இருக்குன்னு சொன்னியே… எத்தனை மணிக்கு மா தொடங்குது…”
“பத்து மணிக்கு மா… சரி நான் வரேன்…” என்றவள் காரில் கிளம்பியதும் அவளது இந்த மாற்றமே பெரும் சமாதானமாய் தோன்றியது அந்தத் தாய்க்கு.
விக்ரமைப் பற்றியோ, கல்யாணத்தைப் பற்றியோ பேச்செடுத்தால் இலக்கியா எரிந்து விழுவதால் எப்போதாவது பேச்செடுப்பதுடன் சரி. இலக்கியா விக்ரமைக் காண ஹாஸ்பிடலுக்கு செல்லா விட்டாலும் லலிதா சென்று பார்த்துவிட்டு அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு ஒரு மூச்சு அழுதுவிட்டுதான் வந்திருந்தார்.
விக்ரமின் மனதில் அவள் மீதிருந்த விருப்பத்தைப் புரிந்து கொண்டவருக்கு சிறு நம்பிக்கை இருந்தது. என்றாவது ஒரு நாள் மகள் மனம் மாறி அவள் வாழ்க்கையிலும் சந்தோசம் பூக்க சந்தர்ப்பம் உள்ளதாய் நினைத்துக் கொண்டார்.
கம்பீரமாய் அலுவலக அறைக்குள் நுழைந்த இலக்கியாவைக் கண்டு அன்போடு புன்னகைத்தார் கனகு.
“அங்கிள்… மானேஜர் போஸ்ட்கு வந்த அப்ளிகேஷன்ஸ் எல்லாம் எடுத்திட்டு வாங்க…” அன்போடு கட்டளையிட்டாள்.
“இதோ கொண்டு வரேம்மா…” என்றவர் ஒரு பைலுடன் வந்தார்.
அதற்குள் பலதரப்பட்ட முகங்களும், பல முகவரிகளும், பல குவாலிபிகேஷனையும் தாங்கி இருந்த விண்ணப்பங்கள். ஒவ்வொன்றாய் எடுத்து பார்வையை மேய விட்டாள். ஐந்தாவதாய் இருந்த விண்ணப்பத்தில் இருந்த பெயரைப் பார்த்தவள் திகைப்புடன் அடுத்த பக்கத்தை திருப்ப அதில் அழகாய் அவளை நோக்கி சிரித்துக் கொண்டிருந்தது விக்ரமின் புகைப்படம். அத்துடன் ஒரு சிறிய காகிதமும்.
வாழ்க்கையும் என்னை நிராகரித்தது…
காதலும் என்னை நிராகரித்தது…
வேலையும் என்னை நிராகரித்து விடுமோ…
இப்படிக்கு நிராசைகளின் சொந்தக்காரன்…
அதைப் படித்ததும் சட்டென்று மனதில் ஒரு வலி தோன்ற, மீண்டும் படித்தவளுக்கு இதழில் ஒரு மென்னகை தோன்றி மறைந்தது.
எனது காதல் தான்
பொய்த்துப் போனது…
மெய்யாய் விரும்பும்
உனது காதலாவது
உயிர் கொள்ளட்டும்…
எனக்குள் உயிர்ப்பூ
பூக்கும்வரை காத்திருப்பாயா…

Advertisement