Advertisement

இலக்கணம் – 25
இலக்கியாவை துப்பாக்கி முனையில் நடத்திக் கொண்டு வெளியே சென்ற சத்யா வெளிப்பக்கமாய் கதவைத் தாளிட்டான். அவர்கள் உள்ளிருந்து கூக்குரல் இட வெற்றிக் களிப்புடன் திரும்பியவனின் கையை இலக்கியா தட்டி விடவும் துப்பாக்கி கீழே விழ அவள் எடுத்துக் கொண்டாள்.
ஒரு நிமிடம் திகைத்துப் போனாலும் அவனை நோக்கி அவள் துப்பாக்கி நீட்டியதைக் கண்ட சத்யா சிரித்தான். அவன் முன்னால் துப்பாக்கியை நீட்டிய கைகள் பயங்கரமாய் நடுங்கியது. அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூட அவளால் முடியவில்லை.
“என்ன டார்லிங்… என்னை ஷூட் பண்ணப் போறியா… உன்னோட அத்தானை உன்னால் கொல்ல முடியுமா… என்மேல நீ வச்சிருக்குற அன்பு இவ்ளோ தானா… என் அன்பு பொய்யா இருக்கலாம்… ஆனா உன் அன்பு பொய்யாகிடுமா… உன்னால முடியாது செல்லம்… உன் கை நடுங்குது பார்த்தியா… என்னை நீ நேசிச்சது உண்மைன்னா உன்னால கொல்ல முடியாது…” திமிராய் சிரித்துக் கொண்டே முன்னே சென்றவன் சட்டென்று காரின் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தான்.
அதை எதிர்பார்க்காமல் அவள் விழிக்க அவன் வேகமாய் காரைக் கிளப்பினான்.
என்ன செய்வதென்று தெரியாமல் ஓடிச்சென்று தாளிட்ட கதவைத் திறந்து விட்டவள், அவன் காரை எடுத்துக் கொண்டு போனதை சொல்லவும், அவளது கையில் இருந்து துப்பாக்கியை வாங்கிக் கொண்ட முருகன், “வினோத்… நீ விக்ரமை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போ… நான் சத்யாவைப் பார்த்துக்கறேன்… கான்ஸ்டபிள்… நீங்க வினோத் கூடப் போங்க…” என்றவன் வேகமாய் மற்ற கான்ஸ்டபிளுடன் ஜீப்பில் ஏறிப் பறந்தான்.
உள்ளே இருந்த சத்யாவின் நண்பன், “அடடா… அவனுக்கு உதவப் போய் நான் மாட்டிக்கிட்டேன்… இப்ப அவன் தப்பிச்சுட்டானே…” என்று நொந்து கொண்டான்.
போலீசிடம் இருந்து தப்பி விட்ட சந்தோஷத்தில் வேகமாய் காரை விரட்டினான் சத்யா. புறநகர்ப் பிரிவில் இருந்து திரும்பி ஹைவேயில் ஜாயின்ட் ஆகும் சாலையின் வளைவில் திரும்பியவன் பின்னில் போலீஸ் ஜீப் வருவதைக் கண்டதும் இன்னும் வேகமாக்கினான்.
“ச்ச்சே… இப்படி முட்டாள்தனமாய் உளறிக் கொட்டிட்டேனே… அந்த விக்ரமோட பிளான்ல வகையா மாட்டிகிட்டேனே… இங்கிருந்து எப்படியாவது தப்பிச்சுட்டா கையிலிருக்கும் பணத்தில் சில காலம் ஓட்டிவிடலாம்… இவங்க கையில் மாட்டினால் தொலைந்தோம்…” நினைத்துக் கொண்டே காரை வேகமாக்கினான்.
அந்த நிலையிலும் அவன் சுயநலமாகவே யோசித்துக் கொண்டிருந்தான். அவனது மாமா ஆசையாய் வாங்கித் தந்த ஆடி காரில் அவரது மகளுக்கும் அவரது குடும்பத்துக்கும் துரோகம் செய்துவிட்டு இன்னும் எதையெல்லாமோ தேடிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறான். இலக்கியாவைப் பற்றியோ அவளது அன்புக்கு செய்த துரோகத்தைப் பற்றியோ எந்த வருத்தமும் தோன்றவில்லை. அவளது சொத்தை அபகரிக்க முடியாத வருத்தம் மட்டுமே இருந்தது.
இலக்கியாவின் பேரில் இளமாறன் செய்து வைத்திருந்த பல வைப்புத் தொகைகளையும் குளோஸ் செய்து இவனது கணக்கில் வரவு வைத்திருந்தான். அதனால் பணத்துக்கு இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை… இங்கிருந்து தப்பி விட்டால் வெளிநாடு சென்றுவிடலாம்… அங்கே ஜாலியாய் வாழ்க்கையைத் தொடர வேண்டியதுதான்… யோசித்துக் கொண்டே பின்னில் திரும்பிப் பார்க்க போலீஸ் ஜீப்பைக் காணவில்லை… சிறிது நேரமாகவே ஜீப் பின்தொடரவில்லை.
சத்யா குறுக்கும் நெடுக்குமாய் இருந்த சின்ன சின்ன சந்துகளில் நுழைந்து வேறு வளைவில் திரும்பியதில் அவர்களுக்கு வழி தவறி விட்டிருந்தது. தப்பி விட்ட சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டவன், இப்ப எல்லா ஸ்டேஷனுக்கும் நம்ம கார் எண்ணைப் பற்றிய தகவல்கள் பறந்திருக்கும்… யாராவது வண்டியை மடக்குவதற்குள் வேறு வண்டிக்கு மாறியாக வேண்டுமே…” நினைத்துக் கொண்டான்.
அவன் தப்புவது அந்தக் காரை வாங்கிக் கொடுத்த இளமாறனுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ, சட்டென்று வளைவில் வேகமாய் திரும்பியவனின் கார் நிறைமாத கர்ப்பிணியாய் பெட்ரோலியத்தை சுமந்து வந்த டாங்கர் லாரியில் மோதி சக்கரத்துக்குள் நசுங்கியது.
அடுத்த நாள் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த குற்றவாளி சத்யா போலீஸிடம் இருந்து காரில் தப்பிச் செல்லும்போது டாங்கர் லாரியில் மோதி அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக தினசரியில் வந்த செய்தியைக் கண்டு உறவுகள் இலக்கியாவின் வீட்டில் கூடி இருந்தனர். அவனது உடலை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டாம் என்று இலக்கியா கூறிவிட்டதால் அரசாங்கமே இறுதிக் காரியத்தை முடித்துவிட்டது.
இலக்கியாவின் வீட்டில் சத்யாவின் துரோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பாட்டியும் லலிதாவும் கதறி அழுது கொண்டிருந்தனர்.
“படுபாவி… சொந்த மகனைப் போல பாசத்தோட வளர்த்ததுக்கு தண்டனையா என் மகனையே கொன்னுட்டியேடா… என் பேத்தி வாழ்க்கையை இப்படி சீரழிச்சு அவ எதிர்காலத்தை பாழாகிட்டுப் போயிட்டியே…” இலக்கியாவின் பாட்டி புலம்பி அழுவதைக் கண்டு சுற்றிலும் நின்றிருந்த குடும்பத்தாருக்கும் சத்யாவின் மீது கோபமும் இலக்கியாவின் மீது வருத்தமுமாய் இருந்தது.
ஆளாளுக்கு அவர்களுக்கு ஆதரவு சொல்லுவது போல சத்யாவின் முன்னால் மனைவி, குழந்தை பற்றி எல்லாம் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஒவ்வொன்றையும் துருவி விசாரித்து வேதனையை அதிகமாக்கிக் கொண்டிருந்தனர்.
லலிதாவும் ஒரு புறம் தனது தாலியைப் பறித்தவனே மகளுக்கு தாலி தந்து அதையும் அவனே பறித்துக் கொண்டானே… என்று கதறி அழுது புலம்பிக் கொண்டிருந்தார்.
அறையை விட்டு வெளியே வராமல் அழுது கரைந்து கொண்டிருந்த இலக்கியாவின் நிலையைக் காண சகிக்கவில்லை. வீணா எத்தனை ஆறுதல் சொல்லியும் அவள் அழுகையை நிறுத்தவே இல்லை.
“இளா… இப்படியே அழுதுட்டே இருந்தா எப்படிடி… அந்த துரோகிக்காக உன்னோட கண்ணீரை வீணாக்காதே… அது உன் உண்மையான அன்பை களங்கப் படுத்துற மாதிரி…”
“நான் அழுகிறது அவனுக்காக இல்லை… எனக்காக… என்னை எத்தனை கேவலமா துச்சமா நினைச்சிருந்தா இப்படி எல்லாம் பண்ணி இருப்பான்… என் அப்பாவைக் கொன்னவன்னு தெரிஞ்சும், எனக்கு துரோகம் பண்ணினவன்னு தெரிஞ்சும் என் கையில் துப்பாக்கி கிடைச்சப்ப அவனை கொல்லக் கூட என்னால முடியலையே… அந்த அளவுக்கு அவன்கிட்டே என்னை எது மயக்குச்சு… உண்மைக்கும், பொய்மைக்கும் வித்தியாசம் தெரியாத மட சாம்பிராணியா இருந்திருக்கேனே… வெறும் வெளி வேஷத்துலயும், பசப்பு வார்த்தைலயும் மயங்கிக் கிடந்திருக்கேனே…..”
“அப்பா… உங்க மரணத்துக்கு நானும் ஒரு வகையில் காரணம் ஆகிட்டேனே… எனக்கு இவனைப் பிடிச்சிருந்ததால தானே நீங்க அவனோட கல்யாணம் பேசினீங்க… இப்ப எல்லாமே நாசமாப் போயிருச்சேப்பா… உங்களைக் கொன்ன கையால என் கழுத்தில தாலி வாங்கி இருக்கேனே… அய்யோ… பாவிப்பா நான்…” என்றவள் தலையில் அடித்துக் கொண்டு கலங்கினாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த வீணாவின் கண்களும் கலங்கின. அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று அவளுக்கும் தெரியவில்லை. அப்படியே ஒரு வாரம் கழிந்தது.
அன்றும் வழக்கம் போல வீணா இலக்கியாவைக் காண வந்தாள். தினமும் காலை முதல் மாலை வரை அவளுடன் இருக்க வேண்டும் என்பது விக்ரமின் அன்புக் கட்டளை. இலக்கியாவின் மனநிலை புரிந்ததால் வீணாவும் அதைத் தட்டாமல் செய்து கொண்டிருந்தாள். உறவினர்கள் எல்லாம் சென்று விட்டதால் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. பாட்டி அவரது அறையில் சோர்ந்து படுத்திருக்க லலிதா தான் அடுக்களையில் காபி போட்டுக் கொண்டிருந்தார்.
லலிதாவிடம் சென்ற வீணா, “அம்மா… ஏதாவது சாப்பிட்டிங்களா… என்ன பண்ணனும்னு சொல்லுங்க… நான் செய்து தர்றேன்… இலக்கியா என்ன பண்ணுறா… இப்பவும் அழுதுட்டு இருக்காளா…” கேட்டுக் கொண்டே அவர் கையில் இருந்த சர்க்கரைப் பாத்திரத்தை வாங்கிக் கொண்டாள்.
“என் பொண்ணோட நிலைமையைப் பார்த்தியா வீணா… படிப்பு முடிஞ்ச கையோட அவசரமா கல்யாணத்தை முடிச்சு அதைவிட அவசரமா அவ வாழ்க்கையும் முடிஞ்சு போச்சு… அவளோட ஆசை, கனவு, எதிர்காலம் எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்குறா… அவளால அழுவதைத் தவிர வேற என்ன பண்ண முடியும்… அவ வாங்கிட்டு வந்த விதி அப்படி… பாவிப்பய… இப்படி எங்க எல்லாத்தையும் ஏமாத்திட்டு அவன் என்ன சாதிச்சுட்டான்… அவனும் போயி சேர்ந்துட்டான்… இதுக்கு தானா இந்த ஆட்டம் போட்டான்… யாரை நம்புறது… நம்பக் கூடாதுன்னு கூடத் தெரியலையே… எல்லாத்தையும் யோசிக்கும் போது எதையாவது கலந்து குடிச்சிட்டு செத்துப் போயிடலாமான்னு தோணுது மா…” கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டார்.
“என்னம்மா இது… நீங்களே இப்படி கலங்கினா எப்படிம்மா…” கேட்டுக் கொண்டே காபியைக் கலந்தவள் அவருக்கு நீட்ட,
“அத்தை ஒண்ணுமே சாப்பிடலைமா… அவங்களுக்கு தான் கலந்தேன்… இலக்கியாவுக்கும் அத்தைக்கும் குடு…” என்றார்.
“நீங்க முதல்ல குடிங்கம்மா… உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்… பாட்டிக்கு கொடுத்திட்டு வந்திடறேன்…” என்று ஒரு கப்பை அவர் கையில் திணித்துவிட்டு மறு கையில் இன்னொரு கப்புடன் பாட்டியின் அறை நோக்கி நகர்ந்தாள்.
“பாட்டி… எழுந்திருங்க… இந்த காப்பியைக் குடிங்க… இப்படி வயசான காலத்துல அழுதுட்டே இருந்தா உடம்பு தாங்குமா பாட்டி… உங்களுக்கும் ஏதாவது வந்துட்டா அம்மாவையும், இளாவையும் பார்த்துக்க யார் இருக்கா… நீங்க தெம்பா இருந்தா தானே அவங்களுக்கும் ஆதரவு…” சொல்லிக் கொண்டே எழுந்து அமர்ந்தவரின் கையில் காபியைக் கொடுத்தாள்.
“ம்ம்… இனி நான் இருந்து என்னத்தை சாதிக்கப் போறேன்… என் பேத்தி வாழ்க்கை சீரழிஞ்சு போக நானே காரணம் ஆகிட்டேன்… நான்தான் அவளுக்கு கல்யாணம் உடனே வைக்கனும்னு அவசரப் படுத்தினேன்… என் மக இந்தப் பாவியை என் மகன் கையில் பிடிச்சுக் கொடுத்திட்டு நீதான் அண்ணா உன் பிள்ளையா வளர்க்கணும்னு சொல்லிட்டு கண்ணை மூடிட்டா… அப்ப இருந்து இப்ப வரைக்கும் என் மகனாவட்டும்… மருமவளாவட்டும்… சொந்தப் பிள்ளைக்கு செய்யுற போலதானே எல்லாம் பார்த்து செய்தாங்க… என் மருமகளைப் பார்த்து நானே பெருமைப் பட்டிருக்கேன்… இந்த மாதிரி ஒரு பொண்ணு இருப்பாளான்னு…”
“ஹூம்… பார்த்துப் பார்த்து அவ வளர்த்தின வளர்ப்பு எப்படி தப்பாச்சு… வித்து குணம் எப்படியோ அப்படிதானே இருக்கும்… இவன் அப்பன் ஒரு விஷம்… அதானே மகன்லயும் மரமா முளைக்கும்னு நினைக்காமப் போயிட்டேன்… என் பொண்ணு மாதிரி இவனும் நல்ல குணமா இருக்கான்னு அவன் பேச்சுலயும் செயல்லயும் மயங்கிப் போயிட்டேன்… என் மகனைக் கொல்ல இவனுக்கு எப்படி மனசு வந்துச்சு… அப்பா அம்மான்னு சொன்னதை விட என் பேத்தி அத்தான்கிற வார்த்தையைத் தான் அதிகமா சொல்லியிருப்பா… அவளை ஏமாத்த இவனுக்கு எப்படி மனசு வந்துச்சு… அவன் செத்துத் தொலைஞ்சதுக்கு கூட மனசு விட்டு அழுகை வரலை… ஒரு துரோகியை வளர்த்தி விட்டிருக்கோமேன்னு தான் வருத்தமா இருக்கு…” என்றவர் வருத்ததோடு சொல்ல அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் வீணா.
“பாட்டி… உங்க பேத்தியோட வாழ்க்கையை இப்படியே விட்டுடக் கூடாது… அவளோட எதிர்காலம் இன்னும் முடிஞ்சு போகலை… நீங்க இப்படியெல்லாம் யோசிக்காம எப்படி சரி பண்ணலாம்னு மட்டும் யோசிங்க… முடிஞ்சு போன பிடிக்காத விஷயங்களை யோசிக்கறதை விட்டுட்டு வர வேண்டிய நல்ல விஷயங்களை யோசிக்கலாமே…” என்றாள்.
“நீ என்னடி சொல்லறே… எனக்கு ஒண்ணும் விளங்கலை…” என்றார் அவர்.
“தெளிவா சொல்லறேன் பாட்டி… இருங்க அம்மாவையும் அழைச்சிட்டு வரேன்…” என்றவள் லலிதாவையும்  அழைத்து வந்தாள். அவள் சொன்னதைக் கேட்டு அவர்கள் மனதில் நம்பிக்கை விதை விழுந்தாலும் இலக்கியாவை யோசிக்கையில் அது எந்த அளவு சாத்தியம் என்ற சந்தேகமும் வந்தது.
“அம்மா… நீங்க ரெண்டு பேரும் ஹாலுக்கு போங்க… நான் இலக்கியாவை அங்கே கூட்டிட்டு வரேன்… நான் நேரம் பார்த்து இந்தப் பேச்சை எடுக்கறேன்… நீங்க அதுல பிடிச்சுக்கங்க…” என்றவள் இலக்கியாவின் அறைக்கு சென்றாள்.
கட்டிலில் சுருண்டு படுத்திருந்தவள் கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்து பார்த்தாள். வீணாவைக் கண்டதும் மீண்டும் அப்படியே படுத்துக் கொள்ள அவள் அருகில் வந்து நின்றவள் முறைத்தாள்.
“ஏய்… இளா எழுந்திருடி… எப்பப் பார்த்தாலும் படுத்திட்டே இருந்தா எல்லாம் சரியாப் போயிருமா… அம்மாவும் பாட்டியும் நீ எதுவும் சாப்பிட மாட்டேங்கிறேன்னு அவங்களும் பட்டினி கிடக்குறாங்க… உன் வயசுக்கு தாங்கும்… அவங்களுக்கு தாங்குமா… ஒழுங்கா எழுந்து ஹாலுக்கு வா…” என்று அவளை எழுப்பி அமர வைத்தாள்.
“ஏண்டி என்னைத் தொந்தரவு பண்ணறே… என்னைத் தனியா விடு… எனக்கு எதுவும் வேண்டாம்… நீ அவங்களை சாப்பிட வை…” என்று அவள் அலுத்துக் கொள்ள,
“மூஞ்சிலயே குத்துவேன் பார்த்துக்க… அது சரி… பாவம்னு நினைச்சு வந்தா ரொம்ப தான் அலுத்துக்கறே… அந்த துரோகியை நினைச்சு இன்னும் எத்தனை நாள் தான் உருகிட்டு இருக்கப் போறே… உனக்காக ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு தனியா போயி குண்டடிபட்டு கால் எலும்பு உடைஞ்சு ஆஸ்பத்திரியில கிடக்காரே… அவரைப் பார்த்து ஒரு நன்றி சொல்லிட்டு வருவோம்னு தோணுச்சா…”
“ஏய்… என்னால இப்ப எங்கயும் வர முடியாது… நீ போயி பார்த்திட்டு வா…” என்றாள் அவள்.
“நீ இப்ப எழுந்து ஹாலுக்கு வரப் போறியா இல்லியா…” என்றாள் வீணா மீண்டும்.
“வீணாப் போனவளே… என் உயிரை வாங்குறதுக்குன்னே எப்படா விடியும்னு காத்திட்டு இருந்தியா… வந்து தொலையறேன்…” என்றவள் அவிழ்ந்து கிடந்த கூந்தலைத் தூக்கிக் கொண்டை போட்டுக் கொண்டு அவளுடன் ஹாலுக்கு வந்தாள்.
அப்போது இரண்டு கப்பில் காபியுடன் வந்த லலிதா, “இந்தாடி… காப்பியாவது குடி…” என்று நீட்ட, மறுக்கப் போனவள் வீணாவின் முறைப்பில் பேசாமல் வாங்கிக் கொண்டாள்.
“என்னடி… இங்கே என்ன விருந்துக்கா வந்தே… நீ போயி காபி போட வேண்டியது தானே… அம்மா போட்டுட்டு இருக்காங்க…” என்று தோழியிடம் எகிறவும் செய்தாள்.
“அடப் பாவி… நான்தான் காபி போட்டு வச்சிட்டு அம்மாக்கும் பாட்டிக்கும் கொடுத்திட்டு வந்தேன்… அம்மா அதை தான் கப்புல ஊத்தி நமக்கு எடுத்திட்டு வந்தாங்க…” என்றதும் அசடு வழிந்து கொண்டே பேசாமல் காபியைக் குடித்தாள்.
“அம்மா… உங்க பொண்ணு ரொம்ப ஓவராதான் போறா… கொஞ்சம் சொல்லி வைங்க…” என்றதும் லலிதாவின் முகத்தில் ஒரு மென்னகை எட்டிப் பார்க்க, காபியைக் குடித்து கப்பை வாங்கி சென்று கழுகி வைக்கவும் செய்தாள்.
“அம்மா… இவளை எவ்வளவு பெரிய ரிஸ்கில் இருந்து விக்ரம் அண்ணா காப்பாத்தி இருக்கார்… பாவம்… நல்ல மனுஷன்… குண்டடி பட்டு கால் எலும்பு உடைஞ்சு ஹாஸ்பிடல்ல கிடக்குறார்… அவருக்கு ஆபரேஷன் முடிஞ்சு இவ்ளோ நாளாச்சு… இன்னும் நீங்க யாரும் போயி பார்க்காம இருக்கறது தப்பில்லையா… அத்தான்… பொத்தான்னு இந்தப் பாவியைக் கல்யாணம் பண்ணினதுக்கு பதிலா மனசார விரும்பின விக்ரம் அண்ணாவை இவளுக்கு கட்டி வச்சிருக்கலாம்… ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்திருப்பாங்க…” அவள் சொல்லி முடிக்கவும், கோபத்துடன் திரும்பிய இலக்கியா, “வீணா… போதும் நிறுத்து… மேல ஏதும் பேசாதே…” என்றாள்.
“ஏன்… அவ சொன்னதுல என்ன தப்பு… அந்தப் பையன் உன்னை மனசார விரும்பியிருக்கான்… உனக்காக உயிரைப் பணயம் வச்சு இந்த குடும்பத்தையே காப்பாத்தி இருக்கான்… அவனைக் கல்யாணம் பண்ணிகிட்டா என்ன தப்பு… இன்னும் அந்த துரோகியை மனசுல நினைச்சு சிலை வச்சு கொண்டாடப் போறியா…” கோபத்துடன் வந்து விழுந்த அன்னையின் வார்த்தைகளில் திகைத்தாள்.
“அ… அம்மா… அது வந்து…” என்று அவள் இழுக்கவும்,
“கண்ணு… அழகுக்காக ஒருத்தியைக் கல்யாணம் பண்ணி குழந்தையும் கொடுத்திட்டு பணத்துக்காக உன்னைக் கல்யாணம் பண்ணினேன்னு அவனே சொல்லிட்டான்… இதுக்கும் மேல அந்த துரோகியை நீ கொண்டாடனுமா தாயி… அவன் நம்ம குடும்பத்தைக் கெடுக்க வந்த கொலைகாரப் பாவி… அவனை மனசுல இருந்து தூக்கிப் போடு… உண்மையா உன்னை நேசிச்ச இந்தத் தம்பியை ஏத்துக்க கண்ணு…”
பாட்டியும் அதையே கூறவும் திகைத்தவள், “மறந்திரு… மறந்திருன்னு ஆளாளுக்கு சொன்னா என்னால எப்படி மறக்க முடியும்னு நினைக்கறிங்க… அவனோட நான் உடம்பால வாழலைனாலும் மனசால வாழ்ந்திருக்கேனே… அதை ரப்பர் வச்சு அழிக்க முடியுமா.. இல்லை டெட்டால் போட்டு கழுவ முடியுமா…” கேட்டவள் கேவிக் கேவி அழத் தொடங்கினாள். அவளது வேதனை மற்றவர்களுக்கும் புரிய வேதனையுடன் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
காகிதத்தில் எழுதி வைக்கவில்லை…
அழிப்பான் கொண்டு மாய்த்திட…
கண்களில் தொடக்கமிட்டு
கனவுகளில் சஞ்சரித்து
கற்பனைகளில் வலம் வந்து
கல்லில் செதுக்கிய சிற்பமாய்
காதலை செதுக்கி வைத்தேன்…
செல்லரித்துப் போனது என் காதலல்ல…
செல்லரிக்க விட்டவன் நீயே…
சிலைகளும் சிதையலாம்…
சிந்தனை சிதையுமோ…
சொல்லட்டும் காலமே…

Advertisement