Advertisement

இலக்கணம் – 24
“என்னை விடுங்கடா பாவிங்களா…….” கத்தினான் விக்ரம்.
“விடணுமா, கொஞ்சம் இரு… விட்டுர்றோம்…” சொல்லிக் கொண்டே அவன் இரண்டு கைகளையும் பின்னில் கொண்டு சென்று மடக்கிப் பிடித்த சத்யா வாயில் ஒரு பிளாஸ்டரை ஒட்டவும் திமிறினான். விக்ரமை சத்யாவும் அவன் நண்பனுமாய் நாற்காலியில் சேர்த்துக் கட்டி வைத்தனர். அவன்  முன்னில் வந்து நின்றான் சத்யா.
“ஏண்டா விக்ரம்… உனக்கு என்ன பெரிய ஹீரோன்னு நினைப்பா… எதுக்கு இந்த விஷயத்துல தேவையில்லாம மூக்கை நுழைச்சே… யாரோ ஒருத்திக்கு விபத்து நடந்தா எல்லாரையும் போல வேடிக்கை பார்த்துட்டு சும்மா போகாம உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை… நீ என்ன யாருமில்லாத பொண்ணுகளையும் குழந்தைகளையும் காப்பாத்த வந்த கடவுளா… ஹஹா… ரொம்பத்தான் துள்ளற…” கேட்டுக் கொண்டே அவன் முடியை இறுகப் பற்றினான்.
வலியில் அவன் திமிறவும், “இருந்தாலும் உனக்கு ரொம்ப தான் தைரியம்… என்கிட்டயே வந்து துள்ளற… அதை நான் பாராட்டறேன்…. உனக்கும் எனக்கும் எந்த விரோதமும் இல்லை… உன்னை நான் கொல்லணும்னு இதுவரை நினைக்கவும் இல்லை… ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமாருக்கு… ஹஹஹா…” என்று சிரித்தவனை எரித்துவிடுவது போல முறைத்தான் விக்ரம்.
“என்னடா முறைக்கற… இது என் வாழ்க்கை… இதுல எப்படி காயை நகர்த்தணும்… வேண்டாத காயை எப்படி அழிக்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்… அதுக்குத் தடையா நீ வராம இருந்திருக்கலாம்… பட் உன் பேட் லக்… வந்துட்டியே… இனி என்ன பண்ணுறது… நானே ஒரு வில்லன்… நீ எனக்கு வில்லனா வரப் பார்க்கறியா… நடக்காது மச்சி…” என்றவன், நண்பனிடம் கண்ணைக் காட்ட அவன் ஏதோ ஒரு பாட்டிலை எடுத்து வந்தான்.
“என்ன இருந்தாலும் சம்மந்தமே இல்லாம உன்னைக் கொன்னு என்னோட பாவக் கணக்கை ஏத்திக்க எனக்கு விருப்பம் இல்லை… அதுனால நீயே செத்துப் போயிடு…… சரியா… டேய் அதைக் கொடு…” என்றவன் அந்த பாட்டிலைக் கையில் வாங்கிக் கொள்ள விக்ரமின் கண்கள் தெறித்து விடுவது போல முறைப்பைக் காட்டியது. அது ஒரு மதுக் குப்பி. அதில் ஏதோ சில மாத்திரைகளைக் கலந்தான் சத்யா. விக்ரமின் வாயில் இருந்த பிளாஸ்டரை நண்பன் விடுவிக்க பெரிது பெரிதாய் மூச்செடுத்துக் கொண்டான் அவன்.
“டேய்… என்னை என்னடா பண்ணப் போறீங்க… விடுங்கடா…” கத்தத் தொடங்கியவனின் தலையை அசையாமல் அவன் பிடித்து வைத்துக் கொள்ள சத்யா அவன் கன்னத்தை அமர்த்தி உதடுகளைத் திறக்க வைக்க முயற்சித்தான். முடிந்தவரை வாயைத் திறக்காமல் இருக்க விக்ரம் முயற்சிக்க அவன் முகத்தில் ஓங்கி அறைந்தவன், “ஒழுங்கா வாயைத் திற… இல்லன்னா இந்த விஷயம் எல்லாம் யாருகிட்ட சொல்லணும்னு இப்ப துடிச்சிட்டு இருக்கியோ… அவ உயிரோட இருக்க மாட்டா…” உறுமியவன் மீண்டும் கன்னத்தைப் பிடித்து உதட்டை அழுத்த தலையை அங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டிருந்தான் விக்ரம்.
அவனது உதடுகள் சிறிது திறக்கவும் பாட்டிலில் உள்ள திரவத்தை அவன் வாயில் ஊற்றத் தொடங்கினான் சத்யா.
வாயில் பட்டதுமே ஒரு கசப்பான எரிச்சலை உணர்ந்த விக்ரம் அதை துப்பிக் கொண்டே முன்னில் நின்று கொண்டிருந்தவனின் வயிற்றில் ஓங்கி ஒரு உதை வைத்தான்.
அதை எதிர்பார்க்காத சத்யா தடுமாறி அடுக்கி வைத்திருந்த  மர சாமான்களின் மீது விழவும் அவன் நண்பன் விக்ரமை ஓங்கி அறைந்தான். நாற்காலியில் இருந்த கட்டு சற்று தளர்ந்தது போல உணர்ந்த விக்ரம் உடலை அசைத்து திமிறி எப்படியோ கட்டை அவிழ்த்து விட்டான். எழுந்தவன் அவன் நண்பனையும் அடிவயிற்றில் உதைக்க தடுமாறிக் கொண்டே திருப்பி உதைத்தான்.
கோபம் கொண்ட சத்யா ஆக்ரோஷத்தோடு அருகில் கிடந்த பெரிய இரும்புத் ராடை எடுத்து விக்ரமின் காலில் வீச அது சரியாய் அவனது எலும்பில் அடித்துக் கீழே விழுந்தது. மண்டியிட்டு விழுந்த விக்ரம், வலி தாங்க முடியாமல் அலற மெதுவாய் எழுந்து அவனிடம் வந்த சத்யா,
“நீ இன்னும் வளரணும் தம்பி… உனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லைல்ல… என்னையா எட்டி உதைக்கற…” என்று கேட்டுக் கொண்டே அவனது அடிபட்ட காலில் காலை வைத்து நசுக்கினான்.
“ஆஆ…” விக்ரமின் அலறல் சுவரில் பட்டு எதிரொலித்தது.
அவன் எழுந்து கொள்ள முயல முடியாமல் அப்படியே விழுந்தான். கால் எலும்பு உடைந்தது போலிருந்தது. இருந்தும் வலியோடு எழுந்து அந்த இரும்பு ராடை எடுத்துக் கொண்டு சத்யாவை அடிக்க வர அவன் விலகிக் கொண்டு விக்ரமின் பின்னில் வந்து காலில் உதைத்தான்.
அப்போது வெளியே ஏதோ வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்க அந்த நண்பன், “சத்யா… நம்ம பசங்க வந்துட்டாங்க போலருக்கு… இவனை இனி அவங்க பார்த்துக்குவாங்க… பார்சல் பண்ணிடலாம்…” என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் வாசலுக்கு சென்றவன் கதவைத் திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தவர்களைக் கண்டு அதிர்ந்தான்.
இலக்கியாவும் வினோத்தும் அவர்களின் நண்பன் சப் இன்ஸ்பெக்டர் முருகனும் வந்து கொண்டிருந்தனர். முருகனின் கையில் ரிவால்வர் ஒன்று கம்பீரமாய் இடம் பெற்றிருக்க அவர்களுக்குப் பின்னில் நாலைந்து கான்ஸ்டபிள்களும் நுழைய சட்டென்று வெளியே ஓட முயன்றவனை போலீசார் பிடித்துக் கொண்டனர். எதிர்பாராமல் அவர்களைக் கண்டதும் அதிர்ந்த சத்யா, சட்டென்று சுதாரித்துக் கொண்டான்.
“இ… இளா… சரியான நேரத்துல வந்தே… இவன் ஏதேதோ கட்டுக் கதை எல்லாம் சொல்லி என்னைக் கொலைகாரனாக்கப் பார்க்கிறான்… ஒத்துக்கலைன்னா என்னைக் கொன்னுடுவேன்னு சொல்லி மிரட்டுறான்…. பார்த்தியா இரும்புத் தடியால என்னை அடிச்சு உபத்திரவம் பண்ணுறான்…” என்று சொல்லிக் கொண்டே வேகமாய் இலக்கியாவின் பக்கத்தில் சென்று நின்று கொண்டான்.
அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாய் நிற்பதைக் கண்டு திகைத்து அவள் முகத்தை நோக்க அது பாறாங்கல்லைப் போல உணர்ச்சிகளற்று இறுகிக் கிடந்தது.
“இ… இவள் ஏன் இப்படி இருக்கிறாள்… ஒருவேளை இவர்களுக்கு விஷயம் தெரிந்து தான் இங்கே வந்திருக்கிறார்களா…” யோசித்துக் கொண்டே இலக்கியாவின் முன்னே வந்தவன்,
“இளாம்மா… செல்லம்…. யார், என்ன சொன்னாலும் நீ உன் அத்தானை நம்புவ தான… இவன் ஏதாவது சொல்லி உன்னை நம்ப வைக்க முயற்சி செய்தானா… எதுவா இருந்தாலும் பொய்மா… நீ எதையும் நம்பலை தானே…” என்றவன் அவள் கையைப் பிடிக்க சட்டென்று உதறியவள் அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்.
அவன் அதிர்ச்சியுடன் நிற்க உறுத்துப் பார்த்தவள்,  “நம்பலைதான்… இவன் எத்தனையோ முறை உன்னைப் பத்தி என்கிட்ட சொல்லியும் நான் நம்பலை… என் நன்மையை மட்டுமே நினைக்குற என் நண்பர்கள் ஏன் இப்படில்லாம் சொல்லணும்னு யோசிக்காம அப்பவும் உன்னை மட்டும் தான் நம்பினேன்… எனக்குப் புரிய வைக்க முடியாம லாஸ்ட்ல உயிரைப் பணயம் வச்சு அவன் நிரூபிக்க முயற்சி பண்ணினபோதும் கூட நான் நம்பலை… என் அத்தான் என்கிட்ட அன்பை மட்டுமே காட்டின அத்தான் நிச்சயமா எனக்கு துரோகம் செய்ய மாட்டார்னு நினைச்சேன்…” சொல்லிக் கொண்டே போனவளின் கண்ணில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.
“இளா… என்னடா செல்லம், ஏதேதோ சொல்லற… உன் அத்தானைப் பத்தியா தப்பா சொல்லற… என் முகத்தைப் பார்த்து சொல்லுடா… நான் எப்படிடா உனக்கு துரோகம் பண்ணுவேன்… உன் அத்தானை நீ நம்ப மாட்டியா…” பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டே கேட்டான் சத்யா.
“ச்ச்சீ… போதும் நிறுத்து… இனியும் நடிக்காதே… உன் வேஷம் கலைஞ்சு ரொம்ப நேரமாயிருச்சு… என் அன்பு பொய்த்துப் போகாதுன்னு அத்தனை நம்பினேன்… இந்த உலகத்துல யாருக்கும் கிடைக்காத அன்பையும், காதலையும் எனக்கு என் அத்தான் கொடுப்பார்னு ரொம்ப எதிர்பார்த்தேன்… எல்லாமே பணத்துக்காக போட்ட வேஷம்னு புரிஞ்சதும் என்னை நானே வெறுத்தேன்… இத்தனை நாள் ஒரு போலியை தான் என் வாழ்க்கை லட்சியமா நினைச்சிருந்தேனான்னு நினைச்சு குறுகிப் போனேன்… யார் சொல்லியும் நம்பாம இருக்க என்னால முடியும்… ஆனா நீயே உன் வாயால சொன்னதை எப்படி நம்பாம இருப்பேன்… என் அப்பா உன்னை சொந்த பிள்ளையா நினைச்சு தானே வளர்த்தினார்… அவரைக் கொல்ல உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு… எல்லாருக்கும் நல்லதை மட்டுமே நினைக்குற அந்த மனசுக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு…” சத்யாவின் சட்டையைப் பற்றி உலுக்கிக் கொண்டே குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள் இலக்கியா.
இவர்கள் எப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொண்டார்கள் என யோசித்துக் கொண்டே விக்ரமை எரித்து விடுவது போல முறைத்தான் சத்யா. சத்யாவை நெருங்கிய முருகன் அவன் முன்னில் ரிவால்வரை நீட்டிக் கொண்டே, “என்னடா முழிக்கற… எங்களுக்கு எப்படி எல்லா விஷயமும் தெரிஞ்சதுன்னு குழப்பமா இருக்கா… விக்ரம் உன் பிளான்ல வந்து மாட்டிகிட்டான்னு நினைச்சியா… இல்லை… அவனோட பிளான்படி தான் நீ நடந்துகிட்ட…” என்றதும் எதுவும் புரியாமல் விழித்தான் சத்யா.
“விக்ரம் உன்னோட கிளம்பி வந்ததில் இருந்து நீங்க பேசுற எல்லாமே நாங்க மைக்ரோ ரிசீவர் மூலமா கேட்டுட்டு தான் இருந்தோம்… அது மட்டுமில்லாம நீ பேசின எல்லாத்தையும் வாக்கு மூலமா பதிவு பண்ணியாச்சு… இங்கே உள்ள வரும்போதே விக்ரம் அவன் போன்ல இருந்து இலக்கியாவுக்கு கால் பண்ணிட்டு தான் வந்தான்… நீங்க பேசின எல்லாத்தையும் அவங்களும் கேட்டுட்டாங்க… அதோட அதெல்லாம் அவங்களே ரெகார்டும் பண்ணிட்டாங்க… உனக்கு இனி சரண்டர் ஆகுறதைத் தவிர வேறு வழியே இல்லை…” முருகன் சொன்னதைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றான் சத்யா.
அவனது பார்வை அடிக்கடி இலக்கியாவைத் தழுவ அவளது முகத்தில் தெரிந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ள அவனால் முடியவில்லை…. அவளது மனதுக்குள் வெடித்துக் கொண்டிருந்த எரிமலையும் பூகம்பமும் வெளியே தெரியாமல் அடக்கி வைக்க முயன்றதில் முகம் பாறையாய் இறுகிக் கிடந்தது.
இலக்கியாவின் முகத்தை ஏறிட முடியாமல் மெல்ல நொண்டிக் கொண்டே வந்த விக்ரம் நடக்க முடியாமல் விழப் போக வினோத் வேகமாய் சென்று தாங்கிக் கொண்டான்.
“டேய்… என்னடா ஆச்சு… கால்ல அடி பட்டுடுச்சா…” என்றவன் நண்பனைத் தாங்கிக் கொண்டே சத்யாவின் அருகில் வந்தான்.
“இத்தனை நாள் ஒரு குடும்பமே பாம்புன்னு தெரியாம உனக்குப் பால் வார்த்திருக்கு… உண்ட வீட்டுக்கு இப்படி ஒரு துரோகம் பண்ண உனக்கெல்லாம் எப்படி தான் மனசு வந்துச்சோ… நீயெல்லாம் மனுஷ இனத்துலயே சேர்த்தி இல்லை… ச்ச்சே…” என்றவன், முகத்தில் வெறுப்பை உமிழ்ந்துவிட்டுப் நகர்ந்தான்.
“இலக்கியா… இதெல்லாமே நாடகம்… இவங்க சொல்லுறதை நம்பாதே…” அவளைப் பிடித்து உலுக்கினான் சத்யா. மெதுவாய் திரும்பியவளின் கண்களில் மட்டும் எரிக்கும் சக்தி இருந்தால் அவன் அப்போதே உயிரோடு எரிந்திருப்பான்.
“இவர்களுக்கு எல்லாமே தெரிந்து விட்ட நிலையில் இனி என்ன செய்வது… சரண்டர் ஆகித்தான் ஆக வேண்டுமா… வேறு வழியே கிடையாதா…” என நினைத்தவனுக்கு வயிறு எரிந்தது.
“இத்தனை நாள் நான் காத்திருந்தது… கஷ்டப்பட்டது எல்லாம் நான் சிறைக்கு செல்வதற்கு வேண்டியா… இல்லை… எனக்கு இன்னும் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது… இவர்களிடம் தோற்று கொடுக்க என்னால் முடியாது… என்ன செய்வது…” என யோசித்தவன், விக்ரமின் காலைக் குனிந்து நோக்கிக் கொண்டிருந்த முருகன் கண்ணில் படவும், அவனது கண்ணில் ஒரு வெறியாட்டம் நிறைந்து கொண்டது.
ஒரே எட்டில் பாய்ந்து அவனது ரிவால்வரை பறித்துக் கொண்டான். அனைவரும் அதிர்ச்சியுடன் திரும்புவதற்குள் இலக்கியாவின் தலையில் ரிவால்வரை வைத்தவன், “எல்லாரும் ஒழுங்கு மரியாதையா இந்தப் பக்கமா ஒதுங்கி நில்லுங்க… இல்லன்னா இந்தக் கருவாச்சியோட தலை சின்னா பின்னமா சிதறிப் போகும்…” என்றதும் அவர்களுக்குள் பதட்டம் தொற்றிக் கொண்டது.
“டேய்… கொலைகாரப் பாவி அவளை விட்டுடுடா… உன்னை வளர்த்த குடும்பத்துக்கு நீ பண்ணின துரோகம் பத்தாதா… மேல மேல பாவம் பண்ணிட்டுப் போகாதே…  உனக்கு நல்லதில்ல…” என்ற விக்ரம் அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கவும்,
“உனக்கு எத்தனை தடவை தான் சொல்லுறது… நீ அவ்ளோ பெரிய ஹீரோவா… எல்லாரையும் மாதிரி வாயைப் பிளந்துட்டு வேடிக்கை பார்த்துட்டு நிக்காம உனக்கு மட்டும் என்னடா துடிக்குது…” கேட்டுக் கொண்டே அவன் காலிலேயே சுட்டு விட்டான்.
“ஆ…” என்று அலறிய விக்ரம் காலில் ரத்தம் ஒழுக கீழே சுருண்டு விழவும் இலக்கியா பதறிப் போனாள்.
“ஏய் சத்யா… ஒழுங்கு மரியாதையா ரிவால்வரைக் கொடுத்திடு… இதெல்லாம் ரொம்பப் பெரிய தப்பு… ஒழுங்கா சரண்டர் ஆகிரு…” முருகன் சொல்லிக் கொண்டிருக்க எகத்தாளமாய் சிரித்தான் சத்யா.
“ஹஹா… ஒரு கொலை கூட, இன்னொண்ணை சேர்த்துப் பண்ணினாலும் அதே தண்டனைதான்னு எனக்கும் தெரியும் போலீஸ்கார்… அதனால எதுவும் பேசாம ஒதுங்கி நின்னிங்கன்னா நான் என் வழியைப் பார்த்துட்டு போக சௌகர்யமா இருக்கும்…” என்றவன், “ம்ம்… எல்லாரும் இந்தப் பக்கம் வந்து நில்லுங்க…” என்று அதிகாரம் செய்து கொண்டே அவர்கள் ஓரமாய் ஒதுங்கி நிற்கவும், “ஏய்… முன்னாடி நடடி…” என்று இலக்கியாவை துப்பாக்கி முனையில் வெளியே தள்ளினான்.
உண்மையை பொய்மை என்னும்
முகமூடி கொண்டு அணிந்தவனே……
உன் உள்ளங்கைக்குள் என்
உலகத்தை அடக்கிடவே
ஆசை கொண்டிருந்தேன்…..
நன்மைகள் நிறைந்த சோலையாய்
நான் நினைத்த உன் உள்ளம்
கொடுமைகளும் கொடிய மிருகங்களும்
நிறைந்த உயிர் கொல்லி வனமாய்
அறிந்த போது என்னுலகிலும்
நானின்றி தவிக்கிறேனே…….

Advertisement