Advertisement

இலக்கணம் – 23
                   
“என்னடி சொல்லற, உன் அத்தான் விக்ரம் பத்தி விசாரிச்சாரா… அதுக்கு என்ன அவசியம்…” அலைபேசியில் இலக்கியா சொன்ன விஷயங்களைக் கேட்டு ஆச்சர்யக் கேள்வி கேட்டாள் வீணா.
“ஆமாண்டி, நான் எப்பவோ ஒரு நாள் சொல்லி இருந்தேன் விக்ரம்க்கு ஏதாவது நல்ல வேலை வேணும்னு… அதை இப்போ கேக்குறார்… ஆனா அவர் குடும்பத்தைப் பத்தி எல்லாம் எதுக்கு கேட்டார்னு புரியலை…” என்றவளின் குரலில் வருத்தம் இருந்தது.
“ம்ம்… இளா, நான் சொல்லறேன்னு தப்பா நினைக்காதடி… உன் அத்தான் நடந்துகிட்டதைப் பத்தி யோசிச்சுப் பார்த்தா எனக்கு கொஞ்சம் டவுட்டா இருக்கே…” இழுத்தாள்.
“எ…என்னடி சொல்லறே… டவுட்டா… அ…அப்படின்னா அத்தான் தப்பானவரா… விக்ரம் சொன்னது உண்மையாருக்கும்னு நீ நம்பறியா…” அழுது விடுபவள் போலக் கேட்டாள் இலக்கியா.
“இளா… அப்படில்லாம் யோசிக்க எனக்கே பயமா தான் இருக்கு… ஆனா இது உன் வாழ்க்கைடி… ஒரு சந்தேகம்னு வந்த பின்னால என்ன வேணும்னாலும் நடக்கட்டும்னு கண்ணை மூடிட்டு இருக்க முடியாது… நம்ம மனசுல உள்ள நெருடலைப் போக்கணும்…” இதமாய் பேசினாள் வீணா.
“ம்ம்… நீ சொல்லுறதும் சரிதான்டி… என்னால ஏனோ நார்மலா இருக்க முடியலை… அத்தான் மேல எனக்கு இப்பவும் நம்பிக்கை இருக்கு… ஆனாலும் அந்தக் குழந்தை முகம், என் மனசுல தீயைப் பத்த வச்சிருச்சு… என் அத்தான் பத்தி விக்ரம் சொன்னது பொய்னு நிரூபிச்சா தான் எனக்கும் நிம்மதி…” என்றாள் இலக்கியா.
“ம்ம்… கரக்ட் தாண்டி, ஆனா…” என்று வீணா இழுக்கவும், “என்னடி ஆனா…” என்றாள் இலக்கியா.
“அது…வந்து… ஒ…ஒருவேளை… உன் அத்தான், தப்பானவர்னு தெரிஞ்சிருச்சுன்னா…” தயக்கத்துடன் கேட்டவளின் குரல் முழுமையாய் வெளியே வரவில்லை.
அதைக் கேட்டதும் ஒரு நிமிடம் இலக்கியாவின் இதயம் நின்று துடித்தது. “அப்படி மட்டும் ஏதாவது நடந்து என் அன்பு பொய்த்துப் போயிட்டா அதுக்குப் பிறகு அந்த அன்புக்கே அர்த்தம் இல்லை…” அவளது குரல் உறுதியாய் ஒலித்தது.
“இளா…. உன்னோட விலை மதிப்பில்லாத அன்பை பணயமா வச்சு உன் வாழ்க்கையை சூறையாட நீ விடக் கூடாது… ஒருவேளை தப்பா இருந்தா நீ எதிர்த்து உறுதியா நிக்கணும்… நிப்பியா…”
“வீணா… உன் கேள்வியே சொல்லுது… நீ இந்த விஷயத்தை நம்பிட்டேன்னு… எனக்கு இப்பவும் அத்தான் மேல நம்பிக்கை இருக்கு… இருந்தாலும் சொல்லறேன்… என் அன்புக்கு அர்த்தம் இல்லாமப் போயிட்டா நிக்கறதென்ன… திருப்பி அடிக்கவும் தயங்க மாட்டேன்…” பிசிறில்லாமல் தெளிவாய் வந்த இலக்கியாவின் குரலில் திகைத்தாள் வீணா.
“சரிடி… இப்ப நாம பேசினதை எல்லாம் அவங்களுக்கு சொல்லிடு… விக்ரம் கிட்டே அத்தானை போயி பார்க்க சொல்லு… அவர் சொன்ன விஷயத்தை நிரூபிக்க, முயற்சி பண்ண சொல்லு… எனக்கு அவர்கிட்டே பேச சங்கடமா இருக்கு… இந்த விஷயத்தில் நான் என்ன பண்ணனும்னு விக்ரம் கிட்ட கேட்டு சொல்லு… சரி, நான் வச்சிடறேன்…” என்றவள் அலைபேசியை வைத்து விட்டாலும் மனதுக்குள் அலையடித்துக் கொண்டு தான் இருந்தது.
“இவர்கள் எல்லாம் இத்தனை தீர்மானமாக சொல்லுவதென்றால் நிஜமாலுமே அத்தான் தப்பானவரா… வீணாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாளே… அப்படி நிரூபிப்பதால் அவர்களுக்கு என்ன பயன்… நான் கோபப்படுவேன் என்று தெரிந்தும் இதை நிரூபிக்க எதற்கு இத்தனை பாடுபட வேண்டும்…” நினைக்கும்போதே அவளுக்கு தொண்டை உலர்ந்தது. 
“அத்தான்… உங்களால் எனக்கு துரோகம் செய்ய முடியுமா… சிறு வயது முதல் ஒவ்வொரு விஷயத்துக்கும் உங்கள் பின்னாலேயே தானே சுற்றிக் கொண்டிருக்கிறேன்… என் அன்பு உங்களிடம் தோற்குமா… என்னிடம் நீங்கள் அன்பாய் நடிக்கிறீர்களா…” யோசித்தவளுக்கு அழுகையாய் வந்தது.
“என்னை உங்களுக்குப் பிடிக்காதா அத்தான்… என் மீது அன்பு இல்லையா… இந்தக் கருவாச்சியை விருப்பமில்லாமல் கல்யாணம் பண்ணினதால் தான் என்னை இதுவரை தொடக் கூட இல்லையா… அதுவும் ஒரு விதத்தில் நல்லது தானோ…” நினைத்தவளுக்கு கல்யாணமான நாள் முதல் அவன் நடந்து கொண்ட நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.
எப்போதும் வீட்டுக்கு தாமதமாகவே வருவான். சாப்பிட்டு படுத்து விடுவான்… காலையில் பார்க்கும் நேரத்திலும் அலுவல் சம்மந்தமாய், பண இடபாடுகள் சம்மந்தமாய் தான் பேசுவான்…  தொழில் சம்மந்தமாய் அவ்வப்போது வெளியூர் போய்விடுவான்… அவன் அக்கறையாய் பேசுவது தந்தையை நினைத்து கலங்காதே என்பது மட்டும் தான். அப்போதும் மாமாவைப் பற்றி புகழ்ந்து பேசி அவளை கலங்க வைக்கவே முயல்வான்.
அவளிடம் ஆசையாய் பேசுவதோ, மனைவியிடம் கணவனுக்கு தோன்றும் விருப்பமோ கொஞ்சலோ எதுவுமே இல்லை…
எப்போதாவது டார்லிங், செல்லம் என்று வார்த்தையில் சேர்த்துக் கொள்வான். யோசித்தவளுக்கு குமுறி அழ வேண்டும் போலத் தோன்றியது. தன் மீதே வெறுப்பாய் தோன்றியது.
மலர்ந்தும் மணக்காத
கனகாம்பர மலராய்
மணந்தும் மணக்காமல்
போகுமோ என் காதல்…
காகித மலரல்ல நான்…
உயிர் கொண்ட பெண்ணல்லவா…
தலையணை நனைந்தும் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் நிற்கவில்லை. மனதுக்குள் சத்யா மீதான சந்தேக வட்டம் பெரிதாகிக் கொண்டே போவதை உணர்ந்தாள்.
“அப்பா… ஏன்ப்பா, எங்களை விட்டுட்டுப் போனிங்க… ஒருவேளை நீங்க இருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்காதோ… இல்லையே, உங்களுக்கும் அத்தானை மருமகன் ஆக்கிக்கணும்னு தானே ஆசை… இதெல்லாம் நான் யார்கிட்டயும் சொல்லி அழக் கூட முடியாதே… அம்மாவுக்கும் பாட்டிக்கும் இப்படி ஒரு விஷயத்தை சொன்னாலே துடிச்சுப் போயிருவாங்களே… நான் என்ன பண்ணுவேன்… நீங்கதான் இந்த விஷயத்தில் எனக்கு துணை நின்னு என் மனசைத் தெளிவாக்கணும்…” என்றவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
சுவரில் உள்ள கடிகாரத்தில் கண்ணைப் பதிக்க மணி பதினொன்று என்றது. இன்னும் சத்யா வீட்டுக்கு வந்திருக்கவில்லை. அவள் அழைத்தும் போனை எடுக்கவும் இல்லை. மனது குழப்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்க தலை விண்ணென்று வலிக்கத் தொடங்கியது. நிராசைகள் சுமந்த நெஞ்சம் கலங்கித் தவித்தது.
ஒரு கொட்டேஷனைப் பரிசோதித்துக் கொண்டிருந்த சத்யா, முன்னில் நிழலாட நிமிர்ந்தான். உள்ளே வந்த விக்ரமைக் கண்டதும் கடினமான முகத்தை மென்மையாய் வைத்துக் கொண்டவன் புன்னகையுடன் பேசினான்.
“வாங்க விக்ரம்… எப்படி இருக்கீங்க, இப்பவும் ஜாப் தேடிட்டு தானே இருக்கீங்க… இலக்கியா என்கிட்ட சொல்லி இருந்தா… நான் கொஞ்சம் பிசியா இருந்ததுல மறந்தே போயிட்டேன்…” சிரிப்புடன் எழுந்து கை நீட்டினான்.
“நல்லாருக்கேன் சார்… நீங்க எப்படி இருக்கீங்க… கல்யாணத்துக்கு பிறகு இலக்கியா கவனிப்புல சினிமா நடிகன் போல ஆயிட்டீங்க…” என்றவன் மனதுக்குள், “சினிமா வில்லன் போல ஆகிட்டே டா… உன்னை அடக்காம விட மாட்டேன்…” என்று கவுன்டர் கொடுத்துக் கொண்டான்.
“ஹாஹா… அப்படியா…” என்றவன், “உங்க படிப்புக்கு குவாரி வேலை எல்லாம் சரிப்பட்டு வராது… அதான் என் பிரண்டு ஒருத்தன் கிட்ட சொன்னேன்… அவன் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நடத்தறான்… அங்கே ஜெனரல் மேனேஜர் போஸ்ட் வேகன்ட் இருக்குன்னு சொல்லிட்டு இருந்தான்… அப்ப தான் உங்க நினைவு வந்துச்சு… நான் இப்ப அவன் குடோனுக்கு தான் ஒரு வேலையா கிளம்பிட்டு இருந்தேன்… உங்களுக்கு இப்ப எதுவும் வேலை இல்லைன்னா வாங்களேன்… நம்ம அப்படியே போயிட்டே பேசலாம்…” என்றான் சத்யா.
“ம்ம்… ஓகே சார்… எனக்கு என்ன வேலை… வெட்டியா தான் இருக்கேன்… போலாமே…” என்றான் அவன். சத்யாவைக் கண்டது முதல் அவன் முகத் திரையைக் கிழிக்க பரபரத்த கைகளை கஷ்டப்படுத்தி கட்டுப்படுத்திக் கொண்டான்.
“ம்ம்ம்… கிளி தானா வந்து வலையில் சிக்குதே…” என நினைத்துக் கொண்டே கார் சாவியை எடுத்துக் கொண்டு சத்யா கிளம்ப அவனை பைக்கில் தொடர்ந்தான் விக்ரம்.
புறநகர்ப்பகுதி ஒன்றில் சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாய் இருந்தது கட்டிடப் பணிக்கான இரும்புக் கம்பிகளும் கட்டுமானப் பொருட்களும் நிறைந்த கிடந்த அந்த குடோன். காரை நிறுத்தி சத்யா முன்னில் இறங்கி நடக்கவும் ஏரியாவை எக்ஸ்ரே கண்களில் அலசிக் கொண்டே பைக்கை நிறுத்தி பின் தொடர்ந்தான் விக்ரம்.
உள்ளே ஒரு பணியாளிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த ஒருத்தன் சத்யாவைக் கண்டதும் மலர்ந்தான்.
“ஹேய் நண்பா… வா… வா…” நண்பனை வரவேற்ற நெடியவனை மனதுக்குள் படம் பிடித்துக் கொண்டே சத்யாவுடன் அவனை நோக்கி நகர்ந்தான் விக்ரம்.
“ஹாய் நண்பா… உன் ஆபீஸ்க்கு ஒரு நல்ல மானேஜர் வேணும், தெரிஞ்சவுங்க யாராவது இருந்தா சொல்லுன்னு சொல்லி இருந்தியே… இவர் பேரு விக்ரம்… எனக்கு ரொம்பத் தெரிஞ்சவர்… அனுபவம் இருக்கான்னு எல்லாம் கேக்கக் கூடாது… இப்பதான் படிச்சு முடிச்சிருக்கார்… நீ எதிர்பார்த்த மாதிரி இருப்பார்… அப்புறம் எனக்கும் ஒரு பில்டிங் கட்டுற விஷயமா உன்னைப் பார்த்துப் பேச வேண்டி இருந்துச்சு… அதான் அவரைக் கையோட கூட்டிட்டு இங்கயே வந்துட்டேன்… என்ன கேக்கணுமோ கேட்டுக்கோ… பிடிச்சிருந்தா நாளைக்கே வேலையில் ஜாயின் பண்ண சொல்லிடலாம்…” என்றவன் மிக சன்னமாய் நண்பனை நோக்கிக் கண்ணடிக்க அதை அவனும் புரிந்து கொண்டான்.
“அட… நீ ஒருத்தரை ரெகமன்ட் பண்ணினா சோடை போகுமா என்ன… அதெல்லாம் சரியா தான் சொல்லுவே… நான் என்ன புதுசா கேட்கப் போறேன்… வாங்க, உக்காருங்க…” என்றவன் பணியாளிடம் கூல்ட்ரிங்க்ஸ் கொண்டு வருமாறு பணித்தான்.
“அப்புறம் புது மாப்பிள்ளை… கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படிப் போகுது… பிசினஸ் எல்லாம் பரவால்லியா…” கேட்டுக் கொண்டே மூவரும் நாற்காலியில் அமர்ந்தனர்.
“ம்ம்… எல்லாம் நல்லாப் போகுது டா… உனக்கு எப்படிப் போகுது…”
“ஆத்து மணல் கிடைக்காததால கட்டிட வேலை எல்லாம் கொஞ்சம் டல்லா தான் போகுது டா… கொஞ்ச நாள்ல சரியாகிடும்னு நினைக்கறேன்…” என்றவன் பணியாள் கொண்டு வந்து நீட்டிய குளிர்பானத்தை எடுத்து அவர்களுக்கு நீட்டினான். பொதுவான விஷயங்களை சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விக்ரமிடம் திரும்பினான் நண்பன்.
“அப்புறம் விக்ரம்… நீங்க என்ன படிச்சிருக்கீங்க… எங்கே படிச்சீங்க… உங்க பாமிலி எல்லாம் எங்கிருக்காங்க…” என்று எதார்த்தமாய் விசாரித்தான்.
தன் படிப்பைப் பற்றி சொன்னவன் தாய் தந்தையை இழந்த தனக்கு ஒரு தங்கையும், அவள் குழந்தையும் மட்டுமே உறவு என்று கூறவும் அவனிடம் திரும்பிய சத்யா,
“ஹா… விக்ரம், உங்களுக்கு உறவுன்னு யாரும் இல்லைன்னு கேள்விப்பட்டேனே… அப்புறம் எப்படி தங்கை…” என்றான் எதுவும் புரியாதவன் போல.
“கூடப் பிறந்தா தான் தங்கையா சார்… யாருமில்லாத எனக்கு கடவுளாப் பார்த்து ஒரு உறவைக் கொடுத்திருக்கார்… ஒரு அயோக்கியன் அவ வாழ்க்கையைக் கெடுத்து கையில் ஒரு குழந்தையைக் கொடுத்திட்டு தேவை முடிஞ்சதும் கொலை செய்ய முயற்சி பண்ணி இப்ப அவ மனநிலையும் பிரள வச்சிட்டுப் போயிட்டான்… தன்னை மறந்து குழந்தை போல இருக்குற அவளை நான் என் தங்கையா தத்தெடுத்துகிட்டு ட்ரீட்மென்ட் கொடுத்திட்டு இருக்கேன்…” அவன் அயோக்கியன் என சொல்லவும் மனதுக்குள் சுருக்கென்று குத்த நிமிர்ந்த சத்யா,
“ஓ… அவன் யாரு என்னன்னு ஏதாவது விவரம் தெரிஞ்சதா…” என்றான்.
“இல்லை சார்… ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுத்து அவளைக் கொல்லவும் முயற்சி பண்ணறவன் எல்லாம் ஒரு ஆம்பளையா… அந்த கேடுகெட்டவன் மட்டும் என் கையில் கிடைச்சா சும்மா விட மாட்டேன்…” என்றான் குரல் நடுங்க.
“ஓ… அந்தப் பொண்ணோட அவ குழந்தையையும் தத்தெடுத்த நீ தான் ஆம்பளையோ… உனக்கு வேணும்னா ஒரு கோவில் கட்டிக் கொண்டாடிடலாம்… ஆமா, அவனைக் கையில் கிடைச்சா நீ என்ன பண்ணிடுவே…” கிண்டலாய் ஒலித்த அவனது குரலைக் கேட்டு நிமிர்ந்த விக்ரம்,
“எனக்கு கோவில்லாம் வேண்டாம்… ஆனா அவன் மட்டும் என் கையில் கிடைச்சா, அவனை வெட்டிக் கூறு போடவும் தயங்க மாட்டேன்…” என்றான்.
“அய்யய்யோ… பயமாருக்கே… டேய், இவன் என்னை வெட்டிக் கூறு போட்டிருவானாம்… ஹஹஹா…” என்று அரக்கத்தனமாய் சிரித்த அவனுடன் அவன் நண்பனும் சேர்ந்து கொண்டான்.
“என்னடா முழிக்கற… நீ சொன்ன அந்த அயோக்கியன் நான்தான்… முட்டாள்தனமா மனசுக்குள்ளயே நீ ஆசைப்பட்ட உன் முன்னாள் காதலி இலக்கியாவோட புருஷன்… என்னோட அழகுக்கும் நிறத்துக்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாத அந்தக் கருவாச்சியை எதுக்குக் கல்யாணம் பண்ணிகிட்டேன்னு தெரியுமா… எல்லாம் அவ சொத்துக்காக தான்… இந்த உலகத்துல எல்லா விஷயத்தையும் தீர்மானிக்குற கடவுள் பணம் தான்… அந்தப் பணம் தான் என் அம்மா அப்பாவோட உயிரைக் குடிச்சது… அந்தப் பணம் தான் என்னை என் மாமாகிட்டே அடிமை வாழ்க்கை வாழ வச்சுது… அந்தப் பணத்துக்காக தான் அவரையே நான் கொல்ல வேண்டி வந்தது… அந்தப் பணத்துக்காக தான் யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி குழந்தை மனைவியோட வாழ்ந்திட்டு இருந்த நான் அவங்களை கொலை பண்ணவும் தீர்மானிச்சேன்… இந்த உலகம் முழுதும் பணத்தால் தான் இயங்குது… நானும்…” அவன் சொல்வதை அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்த விக்ரம்,
“அடப் பாவி, என்னடா சொல்லற… உன் மாமாவை நீதான் கொன்னியா… உன் மேல உயிரையே வச்சிருக்கிற அந்தக் குடும்பத்துக்கும் இலக்கியாவுக்கும், நீ காட்டுற நன்றிக் கடன் இதுதானா… பணத்துக்காக உறவுகளை தண்டிக்க உன்னால எப்படி முடிஞ்சது… உன்னைப் பத்தின உண்மை தெரிஞ்சா இலக்கியா என்ன பண்ணுவான்னு யோசிச்சியா… அவளோட, வினோதினி, குழந்தையோட எதிர்காலமும் என்னாகும்…”
“அவங்களைப் பத்தி எல்லாம் நான் எதுக்கு யோசிக்கணும்… அதும் இல்லாம இலக்கியா என் மேல பைத்தியக்காரத்தனமா அன்பு வச்சிருக்கா… நானே இப்படில்லாம் பண்ணினேன்னு சொன்னாலும் அதை அவ நம்ப மாட்டா… அப்படி நம்பிட்டா அவளை மேலோகம் அனுப்பவும் தயங்க மாட்டேன்…” கொஞ்சம் கூடக் கூசாமல் சொன்னவனை அதிர்ந்து நோக்கினான் விக்ரம்.
“அடப் பாவி… அதுக்கு உன்னை உயிரோட வச்சிருந்தா தானே டா…” சொல்லிக் கொண்டே அவன் மீது பாய்ந்தவனை இரண்டு பேருமாய் அமுக்கிப் பிடித்துக் கொண்டனர்.
பாம்பென்று தெரியாமல்
பால் வார்த்த சொந்தமொன்று….
பலியாக பந்தத்தை
பகடையாக்கும் மனமொன்று…
பாம்பின் நஞ்சு தான் தீண்டிடுமோ…
பாசத்தின் வேர் வரை பாய்ந்திடுமோ…
பணத்தின் பாசாங்குத் தீயின்று
பாவையின் வாழ்வைத்தான் தாக்கிடுமோ…
பதறுகிறான் பாசத்தின் நாயகன்…
பணத்தின் மாய ஜொலிஜொலிப்பில்
பாசம்தான் தோற்றிடுமா…
பதைக்கிறது நெஞ்சம்…
பாவையின் நிலை கண்டு…

Advertisement