Advertisement

இலக்கணம் – 22
வீணா சொன்ன விஷயங்களை மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே யோசனையுடன் அமர்ந்திருந்தான் விக்ரம். வினோத்தும் அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்க அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வீணா.
“என்னண்ணா… எதுவும் சொல்லாம யோசிச்சிட்டு இருக்கீங்க… நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாத்தையுமே ஒரு மாதிரி இலக்கியாவோட மூளைக்குள்ளே திணிச்சி அவளைக் குழப்பி விட்டிருக்கேன்… பாவம் இலக்கியா, அவ முகத்தைப் பார்க்கவே முடியலை… நம்பவும் முடியாம அப்படியே இந்த விஷயத்தை விடவும் முடியாம ரொம்பக் குழம்பிப் போயிருக்கா… அவ அத்தான் மேல உயிரையே வச்சிருக்கா… ஆனா அந்த அன்புக்கெல்லாம் கடுகளவு கூட அந்தாளு தகுதி இல்லாதவனா இருக்கான்… இந்த விஷயத்துக்கு சீக்கிரமே ஒரு முடிவு கட்டணும்…”
பொருமியவளைக் கண்ட வினோத், “வீணா சொல்லுறது சரிதான் டா… இப்ப அவன் இலக்கியா கிட்ட பவர் எழுதி வாங்க முயற்சி பண்ணத் தொடங்கிட்டான்… ஒருவேளை இலக்கியா அதுக்கு சம்மதிச்சுட்டா அது அவளுக்கே ஆபத்தா முடிஞ்சாலும் முடியலாம்… அவன் எதுக்கும் துணிஞ்சவன்… இலக்கியாவுக்கோ குடும்பத்துக்கோ ஏதும் பிரச்சனை பண்ணத் தொடங்கறதுக்குள்ளே நாம ஏதாவது பண்ணி இலக்கியாவை காப்பாத்தி ஆகணும்…” என்றான் வினோத்.
நண்பன் சொன்னதைக் கேட்டுத் தலையாட்டிய விக்ரம், “பண்ணுவோம்டா… அதிரடியா ஏதாவது பண்ணி அவன் வாயாலேயே அவனைப் பத்தி சொல்ல வைக்கிறேன்…” முகம் இறுக, கண்கள் சிவக்க சொன்னவனைக் கண்டு வினோத்தும் வீணாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“விக்ரம்… நீ என்னடா சொல்லறே… அவன்கிட்டே நேரடியா மோதறது ஆபத்தாச்சே டா… வினோதினியும் குழந்தையும் நம்ம பாதுகாப்புல இருக்குறது தெரிஞ்சா அவன் சும்மாருக்க மாட்டானே…” என்றான் வினோத் யோசனையுடன்.
“ம்ம்… சும்மாருக்க மாட்டான் தான்… ஆனா ஏதாவது பண்ணுவான்… அதுல அவனை பிடிச்சுடலாமே…” என்றவன் மனதுக்குள் ஒரு திட்டம் உதயமாகி இருந்தது. அதை அவர்களிடம் சொல்ல அவர்களும் அரை மனதாய் சம்மதித்தனர்.
“டேய் விக்ரம், நீ சொல்லுறது ஓகே தான்… ஆனா, இது ரிஸ்க்கான விஷயம்… எச்சரிக்கையா செய்யணும்…” என்றான் வினோத்.
“இலக்கியாவோட வாழ்க்கை இத்தனை ஆபத்துல இருக்கும்போது கொஞ்சம் ரிஸ்க் எடுத்தாலும் தப்பில்லை டா… அவளுக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிட்டு நல்லாருப்பான்னு நினைச்சுதான் என் காதலைக் கூட சொல்லாம மறைச்சுட்டேன்… அவ உயிருக்கு உயிரா நேசிக்குற ஒருத்தன் மத்த உயிரை எடுக்கக் கூடத் தயங்காத ஒரு கொலைகாரப் பாவின்னு தெரிஞ்சு எப்படி அமைதியா இருக்க முடியும்… இலக்கியா நம்பனும்னா சாலிட் ஆ நம்மகிட்டே ஆதாரம் வேணும்… அதுக்கு இதைத் தவிர வேற வழி இல்லை…” என்றவனைப் பெருமையோடு பார்த்தான் வினோத்.
“அண்ணா, உங்க தூய்மையான அன்பைப் புரிஞ்சுக்காம தப்பா பேசினதுக்கு என்னை மன்னிச்சிடுங்க… இலக்கியாவும் அவனைப் புரிஞ்சுக்குவா… ஆனா அவ இந்த உண்மையை நம்பும்போது எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு நினைச்சா தான் எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு… அவளை முதல்ல இந்தப் பாவிகிட்டே இருந்து காப்பாத்தணும்ணா…” என்றாள் தீர்மானமாக.
“ம்ம்… உறவுன்னு சொல்லிக்க யாருமில்லாத எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை… இலக்கியாவோட வாழ்க்கையை நிச்சயம் காப்பாத்துவேன்… வினோதினியை அன்பைக் காட்டி மோசம் செய்து இந்த நிலைமைக்கு ஆளாக்கினவனை விடக் கூடாது… அம்மாவைப் பிரிஞ்சு வளர வேண்டிய சூழ்நிலைக்கு இந்தக் குழந்தையைத் தள்ளினவனுக்கு நியாயமான தண்டனை கிடைச்சே ஆகணும்… மூணு பெண்களோட வாழ்க்கையில் விளையாடினவன் நமக்குத் தெரியாம இன்னும் என்னெல்லாம் பண்ணி இருக்கானோ… இவனை விட்டு வைக்குறது நம்ம சமூகத்துக்கே ஆபத்து…” கொதிப்புடன் கூறினான் விக்ரம்.
“அவன் தோளில் ஆதரவாய் கை வைத்த வினோத், சரி டா… உன்னோட பிளானை எப்போ நடைமுறைப் படுத்தப் போறே…” என்றான்.
“நாளைக்கே…” என்றவனின் முகத்தில் உறுதி தெரிந்தது.
குவாரியில் ஒரு கஸ்டமருடன் பிசினஸ் விஷயமாய் பேசிக் கொண்டிருந்த சத்யா அறை வாசலில் நிழலாடவும் நிமிர்ந்தான். அவனுடைய நண்பன் தான் உள்ளே வந்து கொண்டிருந்தான். மாமா இளமாறனின் மறைவுக்குப் பிறகு அவனிடம் சிறிது நாளைக்கு ஆபீசுக்கு வர வேண்டாம் என்று சொல்லி வைத்திருந்தான். இப்போது அவன் வரவும் சட்டென்று ஒரு குழப்பம் சூழ்ந்து கொண்டது.
கண்ணாலேயே அவனிடம் வா என்று சொல்லி நாற்காலியைக் காட்டிவிட்டு கஸ்டமருடன் பேசி முடித்து அவரை சீக்கிரம் அனுப்பி வைத்தான் சத்யா.
நண்பனிடம் வந்தவன் சுற்று முற்றும் பார்த்துவிட்டு, “என்னடா… இங்க எதுக்கு வந்தே… நாந்தான் உன்னை கொஞ்ச நாள் இந்தப் பக்கமே வர வேண்டாம்னு சொல்லி இருக்கேன்ல…” என்றான் அவசரத்துடன்.
“டேய் மச்சான், ஒரு முக்கியமான விஷயம் டா… அதான்… போன்ல சொல்ல வேண்டாம்னு நேர்லயே வந்தேன்…” என்றவனை யோசனையுடன் பார்த்த சத்யா, “இங்கே ஏதும் பேச வேண்டாம்… வா, மாடிக்கு போயிடலாம்…” என்றான்.
முன்னில் இருந்த வேலையாள் ஒருவனிடம் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு அந்த சொறி நாயுடன் மாடியேறியவன் கதவைத் தாளிட்டு சோபாவில் அமர்ந்தான்.
“என்னடா, என்ன முக்கியமான விஷயம்…” அவனுக்குள்ளும் சிறு பதட்டம் வந்திருந்தது.
“வினோதினியும் குழந்தையும் இப்போ எங்கே இருக்காங்கன்னு தெரியுமா…” கேட்டவனை கேலியோடு பார்த்தவன், “தெரியுமே… வினோதினி மனநிலை பாதிக்கப் பட்டு ஏதோ மெண்டல் ஹாஸ்பிடல்ல இருக்கா… சங்கவியை ஏதோ அநாதை ஆஸ்ரமத்தில் சேர்த்திருக்காங்களாம்… அவங்களை இடிச்சு தள்ளிட்டு போன லாரி பத்தி எந்த விவரமும் தெரியாததால அந்தக் கேசைப் பரண்ல போட்டுட்டு வேற வேலை பார்த்திட்டு இருக்காங்க போலீஸ் டிபார்ட்மென்ட்… இதுக்கு மேல உனக்கு என்ன விவரம் வேணும்டா…” என்றவன், ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.
“நீ சொன்னது பாதி சரி… மீதி தப்புடா…” என்றவன், “வினோதினிக்கு மனநிலை பாதிக்கப் பட்டது என்னவோ உண்மைதான்… ஆனா அவ இப்ப கவர்ன்மென்ட் காப்பகத்துல இல்லை… மெர்சி மனநிலை காப்பகம்னு ஒரு தனியார் மருத்துவமனைல ட்ரீட்மெண்டுல இருக்கா…” என்றான்.
“என்னடா சொல்லறே… அதெப்படி முடியும்… அவ தான் உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லாத அனாதையாச்சே…” என்ற சத்யாவின் முகத்தில் ஒரு குழப்பமும் பதட்டமும் தெரிந்தது.
“ஆமாண்டா… அது மட்டும் இல்லை… குழந்தையும் இப்ப அநாதை ஆஸ்ரமத்தில் இல்லை… ஒருத்தனோட பாதுகாப்புல இருக்கா…”
அவன் சொன்னதைக் கேட்டதும் சத்யாவின் கண்கள் யோசனையில் சுருங்க, “சரி, எது எப்படியோ… இப்ப அவங்க ரெண்டு பேரும் என்னைப் பத்தி யார் கிட்டயும் சொல்லப் போறதில்லை… நமக்கு பிரச்சனை இல்லை தானே…” என்றவனிடம், “டேய்… அவங்க யார் பொறுப்புல இருக்காங்கன்னு தெரிஞ்சா நீ அதிர்ச்சியாகிடுவே…” என்று பீடிகையுடன் நிறுத்தினான் அவன்.
“என்னடா சொல்லறே… யார் பொறுப்புல இருக்காங்க… சஸ்பென்ஸ் வைக்காம சீக்கிரம் சொல்லித் தொலை…” என்றான்.
“உன் நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்தப்ப இலக்கியாவோட பிரண்ட்ஸ்ன்னு சிலர் வந்திருந்தாங்களே… அதுல ஒருத்தன் பேரு கூட விக்ரம்… அவனோட பாதுகாப்புல இருக்காங்க…” என்றதும் குழப்பத்துடன் அவனை ஏறிட்டான் சத்யா.
“எ… என்னது விக்ரமா… அவனுக்கும் இவங்களுக்கும் என்ன சம்மந்தம்… அவன் எதுக்கு இப்படிப் பண்ணனும்… இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிஞ்சது…” குழப்பத்துடன் நண்பனை ஏறிட்டான்.
“நான் ஒரு ரியல் எஸ்டேட் ஆபீஸ்க்கு போயிட்டு வந்துட்டு இருந்தேன்… வண்டியை நிறுத்தி இருந்த இடத்துல இவன் குழந்தையோட நின்னுட்டு இருந்தான்… குழந்தையைப் பார்த்ததும் உன் குழந்தை மாதிரி இருக்கேன்னு கவனிச்சேன்… உன் பொண்ணு தான் உன்னை மாதிரியே இருக்குமே… அப்படியே அச்சுல வச்ச மாதிரி இப்படியாடா குழந்தை இருக்கும்… உன்னோட குழந்தை எப்படி அவன் கையிலன்னு யோசிச்சுகிட்டே அங்கே நின்னு கவனிச்சேன்… அந்த விக்ரம் யாருகிட்டயோ போன்ல பேசிட்டு இருந்தான்…”
“என்னடா பேசிட்டு இருந்தான்…” வேகமாய் கேட்டான் சத்யா.
“அவன் சொல்லிட்டு இருந்தான்… என் தங்கையோட வாழ்க்கையை நாசம் பண்ணின அந்தப் படுபாவியைப் பழி வாங்காம விட மாட்டேன்… அவன் யாருன்னு மட்டும் தெரியட்டும்… அவன் சாவு என் கைல தான்னு… நீ அந்த வினோதினி யாருமில்லாத அனாதைன்னு சொன்னே… அப்புறம் ஏன் இவன் அண்ணன்னு சொல்லுறான்… நான் நிக்கும்போது அவனும் என்னைப் பார்த்துட்டான்… அவனுக்கு என்னை அடையாளம் தெரியுமோன்னு நினைச்சேன்… பட் தெரியலை போலருக்கு… அவன் கவனிக்காம போயிட்டான்…” என்று இவன் கூறி முடிக்கவும் சத்யாவின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டுக் கொண்டன.
பால் நிலா வானில் காய்ந்து கொண்டிருக்க அதை ஜன்னல் வழியே வெறித்துக் கொண்டு நின்ற இலக்கியாவின் கண்ணிலிருந்து இரண்டு கண்ணீர் முத்துகள் தெறித்து விழுந்தன. அவள் கண்ணுக்குள் சத்யாவின் முகமும் அவனை சிறிதாக்கியது போல சிரித்த குழந்தையின் முகமும் மாறி மாறி வந்து போக, நாணத்தோடு சத்யாவை ஒட்டிக் கொண்டு நின்ற வினோதினியின் முகமும் சேர்ந்து வந்து மனதை கலங்கடித்தது.
“அந்தக் குழந்தையைக் கண்டதும் எனக்கு மிகவும் பரிச்சயம் உள்ளது போலத் தோன்றியதே… எப்படி, கண்ணில் கண்ட காட்சிகள் எல்லாம் நிஜமானவையா… என் அத்தான் தப்பானவரா… போட்டோஷாப்பில் உருவத்தை மாற்றலாம்… அவனைப் போலவே அழகாய் சிரிக்கும் குழந்தையின் சிரிப்பையும் மாற்ற முடியுமா… இல்லை, என் அத்தான் அப்படிப் பட்டவரில்லை… கண்ணால் காண்பதும் பொய்… காதால் கேட்பதும் பொய்… இ…இதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள்… நான் நம்ப மாட்டேன்…” தலையை உலுக்கிக் கொண்டவளின் கண்ணில் இருந்து மீண்டும் கண்ணீர்த் துளிகள் உற்பத்தியாகின.
                                     
“என் அத்தான் எத்தனை அன்பானவர்… அவரால் எனக்கு துரோகம் செய்ய முடியுமா… அதுவும் அந்தப் பெண்ணையும் குழந்தையும் கொல்ல முயற்சிக்கும் அளவுக்கு கொடூர மனம் படைத்தவரா… அப்படியானால் விக்ரம் சொன்னதெல்லாம் பொய்யா… எதற்கு தேவையில்லாமல் அத்தானின் மீது இத்தனை பழி போட வேண்டும்…  அதனால் அவருக்கு என்ன லாபம்… விக்ரம் அப்படி பொய் சொல்லக் கூடிய ஆளும் இல்லையே… ஒருவேளை விக்ரம் சொன்னது அனைத்தும் உண்மையாக இருந்தால்…” நினைக்கும் போதே அவள் இதயம் வேகமாய் துடித்தது.
“நினைவு தெரிந்தது முதல் அத்தான் மீது உயிரையே வைத்திருந்த எனக்கு அவரால் துரோகம் செய்ய முடியுமா… அன்புக்கு இத்தனை தான் சக்தியா… இருக்காது… நிச்சயமாய் இதில் எந்த உண்மையும் இருக்காது… அப்படி என் அன்பை அவர் களங்கப் படுத்திவிட்டால் அந்த அன்பே அவரை சூறையாடிவிடும்… அது உறுதி…” என நினைத்துக் கொண்டவளின் கண்ணில் மீண்டும் கண்ணீர்.
“ச்சே… என் அத்தானைப் பற்றி எனக்குத் தெரியாதா… தேவை இல்லாமல் என்னை நானே குழப்பிக் கொள்கிறேனோ… என் குடும்பத்தின் மீது எத்தனை அன்பு வைத்திருக்கிறார்… அதெல்லாம் எப்படி பொய்யாகும்… அவரைப் பற்றி தவறாய் நினைப்பது கூடப் பாவம்… நான் எதற்கு கலங்க வேண்டும்… கலங்கினால் எல்லாம் உண்மை என்று ஆகிவிடாதா…” என இரண்டு விதமாய் மாறி மாறி யோசித்துக் கொண்டவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்கவும் நிதானித்தவள், வேகமாய் சென்று முகத்தைக் கழுகிக் கொண்டாள்.
சத்யா உள்ளே வருவதும் ஹாலில் ராமாயணம் படித்துக் கொண்டிருந்த அன்னையுடன் எதோ பேசுவதும் கேட்க மெதுவாய் வெளியே வந்தாள்.
“என்ன அத்தான்… டெய்லி இப்படி லேட்டா வந்தா எப்படி… ரெஸ்ட் இல்லாம உழைச்சு உடம்புக்கு ஏதாவது வந்திட்டா…” அக்கறையுடன் கேட்டவளை நோக்கி சிரித்தவன்,
“எனக்கு ஏதாவது வந்தா நீ பார்த்துக்க மாட்டியா டார்லிங்…” என்றான் அத்தைக்கு கேட்காத குரலில் கிசுகிசுப்புடன்.
அதைக் கேட்டதும் அதுவரை குழம்பியிருந்த மனம் சட்டென்று குளிர்ந்து போக நாணத்தோடு குனிந்து கொண்டாள்.
“குளிச்சிட்டு வாங்க அத்தான்… டிபன் எடுத்து வைக்கிறேன்…” என்றவள் அடுக்களைக்குள் நுழைய லலிதா அவர்களைத் தனியேவிட்டு உறங்க சென்றார்.
குளித்து முடித்து சாப்பிட அமர்ந்தவனுக்கு சப்பாத்தியுடன் சூடான குருமாவை எடுத்து வைத்தவள் அவனுக்கு அருகில் நிற்க, “நீ சாப்பிட்டியா டார்லிங்… மாமா போன பிறகு நீ சரியா உன்னை கவனிச்சுக்கறதே இல்லை… பாரு இளைச்சுப் போன மாதிரி தெரியறே… வா… நீயும் சப்பாத்தி சாப்பிடு…” என்றவன் அவளைப் பிடித்து அருகில் அமர்த்தினான்.
“உன்னோட பிரண்ட்ஸ் கூடல்லாம் அப்பப்ப கால் பண்ணி பேசலாம்ல… மனசுக்கு ஆறுதலா இருக்குமே…” என்றவன், மெல்ல அவளை அடிக்கண்ணால் பார்த்துவிட்டு, “அப்புறம் உன்னோட பிரண்டு விக்ரம்னு ஒருத்தருக்கு நம்ம குவாரில வேலை கொடுக்குறதைப் பத்தி எதோ சொல்லிட்டு இருந்தியே… அவருக்கு வேலை கிடைச்சிருச்சா…” என்றான் சாப்பிடுவதில் தீவிரம் காட்டிக்கொண்டு.
அவன் ஏன் என்றும் இல்லாமல் இப்போது விக்ரம் பத்தி பேசுகிறான் என்று மனதுக்குள் ஒரு நிமிடம் யோசித்தவள், அதைக் காட்டிக் கொள்ளாமல் பேசினாள்.
“இ… இல்லை…. அவர் வெளிய ஏதோ டிரை பண்ணிட்டு இருப்பார் போலருக்கு…” என்றவள் போலீஸ் போஸ்டிங்காக அவன் காத்திருப்பதை சொல்லாமல் விட்டாள்.
“ஓ… அவரை வர சொல்லேன்… நம்ம குவாரில மேனேஜர் மாதிரி  வேலை போட்டுக் கொடுத்திடலாம்… அவரோட பாமிலி எல்லாம் எங்கிருக்காங்க… இதே ஊர்தானா… இல்ல வெளியூரா…” என்றான்.
அவனது கேள்வியின் காரணம் புரியாவிட்டாலும் எதோ காரணத்துடன் தான் விக்ரம் பற்றிப் பேசுகிறான் எனப் புரிந்து கொண்ட இலக்கியாவுக்கு மனது கசந்தது.
“அவர் பாமிலி பத்தி எனக்கு சரியாத் தெரியாது அத்தான்… இங்கே ஹாஸ்டல்ல தான் தங்கிப் படிச்சார்…” என்றவள்,
“இன்னொரு சப்பாத்தி வைக்கட்டுமா…” எனப் பேச்சை மாற்றினாள்.
ஏனோ அவள் அடி மனதில் மெதுவாய் ஒரு சந்தேகத் தீ அவனது பேச்சின் காரணமாய் பற்றிக் கொள்ளத் தொடங்கியது. அவனுக்கு முன்னில் முகம் மாறாமல் காக்க மிகவும் முயற்சித்தவள் மனதில் சந்தேக விதை மெதுவாய் முளைக்கத் தொடங்கியது.
உனக்கும் எனக்கும் நடுவில்
வார்த்தைகளில் வழிந்த காதல்
வழி முட்டிப் போனதால் இன்று
வலி தந்து போனதோ……
அழகாக வளர்ந்த காதல்
அதிகாரம் தந்த காதல்
அவதூறாய் இடம் மாறி
அலைக்கழித்துப் போகுமோ…..
உனக்கும் எனக்குமான
அன்பை பிரியங்களால்
கொய்தேன் நான்….. முட்களை
மட்டும் கையில் தந்து
முடமாகச் செய்வாயோ…..
வலியோ வரமோ காதல்……

Advertisement