Advertisement

இலக்கணம் – 21
                   
இலக்கியா அவளை எதிர்பாராத பார்வை பார்க்க புன்னகைத்த வீணா, “என்னடி முழிக்கறே… என்னை இந்த நேரத்தில் எதிர்பார்க்கலையா… வீட்டுல போர் அடிச்சது, சரி கொஞ்ச நேரம் உன்னோட இருந்துட்டுப் போகலாம்னு வந்தேன்…” என்றவள், ஹாலில் இருந்த பாட்டியைக் கண்டதும் அவரிடம் சென்றாள்.
“ஹாய் பாட்டி எப்படி இருக்கீங்க… உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு…” என்றவளிடம், “ம்ம்… எனக்கென்ன… என் பையனை முன்னாடியே முழுங்கிட்டு குத்துக் கல்லு மாதிரி நல்லாத்தான் இருக்கேன்… அவனோட இந்த வீட்டோட கலகலப்பையும் எடுத்திட்டுப் போயிட்டான்…” என்று பெருமூச்சுடன் சொன்னவர், “நீ என்னடிம்மா… இன்னைக்கு நேரமே இந்தப் பக்கம் வந்திருக்கே… ஏதாவது விசேஷமா…” என்றார்.
“அதெல்லாம் இல்லை பாட்டி… வீட்டுல போர் அடிச்சது… சரி, உங்களை எல்லாம் பார்த்திட்டுப் போலாம்னு வந்தேன்…”
“ம்ம்… வாயைத் திறந்தா மூடாம பேசுற உன் பிரண்டப் பார்த்தியா… இப்பல்லாம் அவ என்னோட சண்டை போடறதும் இல்லை… ஒழுங்கா பேசுறதும் இல்லை… சீக்கிரமே என்னையும் அந்த பகவான் எடுத்துகிட்டாப் பரவால்லை…” என்றவர் கண்கலங்க,
அங்கே வந்த இலக்கியா, “இப்ப எதுக்கு கிழவி இந்தப் பேச்சு… எப்பப் பார்த்தாலும் அழுதுட்டு ரூம்லேயே கிடக்குற உன்னோட நான் எப்படி சண்டை போடுவேன்… நீயும் பழைய போல என்னை சீண்டிகிட்டு இருந்தா திருப்பி பதில் சொல்லலாம்… நீ என்னைக் கண்டுக்கறதே இல்லையே…” என்றாள் பேத்தி.
“போடி கருவாச்சி… இந்தக் கருப்பட்டிப் பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்லை… நீ மட்டும் என்ன, எப்பப் பார்த்தாலும் உன் அப்பாவையே நினைச்சுட்டு ரூம்ல தான கிடக்கறே… என்னைப் பத்தி யோசிச்சியா… பெருசா சொல்ல வந்துட்டா…” சிலுத்துக் கொண்டவரைக் கண்டு வீணாவுக்கு சிரிப்பு வந்தது.
“ஹஹா… எப்படா அடிச்சுக்கலாம்னு ரெண்டு பேரும் காத்துட்டு இருந்திங்களா… ஏய் இளா, அம்மா எங்கடி…” என்றாள் வீணா பார்வையால் லலிதாவைத் துழாவிக் கொண்டே.
“அம்மா கோவிலுக்குப் போயிருக்காங்கடி… சரி… உனக்கு சாப்பிட ஏதாவது எடுக்கட்டுமா…” என்றாள் இலக்கியா.
“இல்லடி சாப்பிட்டு தான் வந்தேன்… உன்னோட போட்டோ ஆல்பம் வந்திருந்தா காட்டேன்…” என்று கேட்க, “வா… காட்டறேன்…” என்று அவளை அழைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றாள் இலக்கியா. உள்ளே சென்றதும் கதவை சாத்தியவள், “என்னடி, என்ன விஷயம்… நீ சும்மா வரமாட்டியே…” என்றாள் நேரிடையாக.
“ச்சேச்சே… அதெல்லாம் ஒண்ணும் இல்லடி… நான் சும்மா தான் வந்தேன்… நேத்து நடந்த விஷயத்துல நீ ரொம்ப பீல் பண்ணிட்டு இருப்பியோனு கொஞ்சம் பயமா இருந்துச்சு… அதான் உன்னை பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன்…” என்றாள் வீணா சாதாரணமாக.
“ம்ம்… நான் நம்பாத ஒரு விஷயத்துக்காக எதுக்கு கவலைப் படணும்… அதெல்லாம் நான் எப்பவோ துடைச்சுப் போட்டுட்டேன்… பட், நான் ரொம்ப நம்பின விக்ரம் இப்படி சொன்னது தான் எனக்கு வருத்தமா இருந்துச்சு… சரி, அதை விடு… அதைப் பத்தி பேச எனக்கு விருப்பம் இல்லை…” என்றவள், “இரு… நான் உனக்கு ஆல்பம் எடுத்து தர்றேன்…” என்று எழுந்து அலமாரியைத் திறந்து ஆல்பத்தை எடுத்து நீட்டினாள்.
“ம்ம்… இளா… எங்கடி உன் அத்தானைக் காணோம்… குவாரிக்குப் போயிட்டாரா…” என்றவளிடம் அவன் வெளியூர் சென்றிருப்பதாகக் கூறியவள் இன்று வந்துவிடுவான் என்று கூறி அமைதியானாள். அவள் சாதாரணமாய்ப் பேச முயற்சித்தாலும் அவள் மனதுக்குள் விக்ரம் சொன்ன வார்த்தைகள் ஒரு நெருடலாய் இருந்தது.
அவளை அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டே ஆல்பத்தைப் பார்த்து ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்த வீணா, அதில் ஒரு போட்டோவில் ஓரமாய் நின்று கொண்டிருந்த வினோத்தைக் கண்டதும், “ஹூம்… இவங்க எல்லாம் பிரண்ட்ஸ்னு நினைச்சுப் பழகினோமே… அதை நினைச்சாலே வெறுப்பா இருக்கு… எவ்ளோ தைரியம் இருந்தா நம்ம கிட்டே உன் அத்தானைப் பத்தி இப்படி சொல்லுவாங்க… அதுவும் அந்தக் குழந்தையை அவரே வளர்த்துறாராம்… எனக்கென்னவோ அந்தக் குழந்தை நீ சொன்ன மாதிரி விக்ரம் குழந்தையா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு…” என்றாள் வீணா.
“ச்சேச்சே… அப்படில்லாம் இல்லைடி… அது நான் கோபத்துல சொன்னது… விக்ரம் அவ்ளோ மோசமானவரா இருப்பார்னு எனக்குத் தோணலை… ஆனா அவர் என் அத்தானைப் பத்தி இப்படி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் என்னன்னு தான் எனக்குப் புரியலை…” என்றாள் இலக்கியா.
“ம்ம்… இப்பல்லாம் ஒருத்தர் நம்மகிட்டே நடந்துக்கறதை வச்சு அவங்க மனசைப் புரிஞ்சுக்கிறது ரொம்பக் கஷ்டமா தான் இருக்கு… நம்மகிட்டே நல்லவன் மாதிரி வெளிவேஷம் போட்டுட்டு மனசு பூராவும் விஷமா வச்சிருக்காங்க இளா… இதுல இன்னொரு கூத்து நடந்துச்சு தெரியுமா…” என்றவள் ஆல்பத்தைப் பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்க அவளை இலக்கியா நோக்கிக் கொண்டிருப்பது புரிந்தது.
“என்ன கூத்துடி… என்ன நடந்துச்சு…” என்றாள் இலக்கியா.
“இந்த வினோத் இருக்கார்ல… நேத்து நைட் எனக்கு கால் பண்ணினார்… நான் கோபத்துல எடுக்கவே இல்லையே… ஆனா மறுபடியும் கூப்பிட்டுத் தொந்தரவு பண்ணிட்டே இருந்தார்… எனக்கு கோபம் வந்திருச்சு… போனை எடுத்து நல்லாத் திட்டி விட்டுட்டேன்… திட்டை வாங்கிட்டும் அவர் சொல்லுறார்… வீணா, நீ என்னைத் திட்டினாலும் பரவாயில்லை… தயவுசெய்து ஒரு நிமிஷம் நான் சொல்லுறதை கேளுன்னு மறுபடியும் கால் பண்ணிக் கெஞ்சினாரு… சரி, என்ன தான் சொல்லறார்னு கேட்டிருவோம்னு நினைச்சு சொல்லித் தொலைங்கன்னு சொன்னேன்…”
“ஓ… வினோத் அப்படி என்ன சொன்னார்…” என்றாள் இலக்கியா.
“இந்த வினோத், விக்ரம்க்கு பிரண்டா இல்லை, வக்கீலான்னே தெரியலைடி… அவர் சொல்லுறார்… விக்ரம் சொன்னதெல்லாம் உண்மை… உண்மையத் தவிர வேறொன்றுமில்லை…  குழந்தை அப்படியே உன் அத்தானை மாறி இருக்கு… ஒரு போட்டோ அனுப்பறேன்… நீயே பாத்துட்டு சொல்லுன்னு ஒரு போட்டோவை அனுப்புறார்… நானும் சரி… சொல்லியாச்சுன்னா போனை வச்சிட்டுப் போயி வேலையைப் பாருங்கன்னு சொல்லி வச்சிட்டேன்…” சற்று நிறுத்தியவள்,
“இப்பல்லாம் போட்டோஷாப்ல என்னெல்லாமோ பண்ணுறாங்க… ஒரு போட்டோவை மாத்த முடியாதா… எப்படில்லாம் புதுசு புதுசா பிரச்னையைக் கிளப்புறாங்க பாரேன்… மனுஷங்க மனசு ரொம்ப தான் வினோதமா போயிருச்சு…” சலித்துக் கொண்டே ஆல்பத்தைப் பார்த்துக் கொண்டிருக்க இலக்கியா மௌனமாய் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
“நீ அந்த போட்டோவைப் பார்த்தியா…” இலக்கியாவின் கேள்வியில் நிமிர்ந்தவள், “எதுக்கு பார்க்கணும்னு நினைச்சு நான் பார்க்கலை… அச்சோ மறந்தே போயிட்டேன்… அம்மா உன்னோட பேசணும்னு சொன்னாங்க… இரு போன் போட்டுத் தரேன்…” என்றவள் போனை எடுக்க, “அப்புறம் பேசிக்கிறேண்டி…” என்றாள் இலக்கியா.
“ம்ம்… சரி… அப்புறம் பேசலாம்…” என்றவள் “ம்ம்… அந்த போட்டோ இதோ இருக்கு பாரு… ரெண்டு பேரும் ஒரே போலவா இருக்காங்க… நீயே பாத்து சொல்லு…” என்று சத்யா, வினோதினி, குழந்தை மூவரும் உள்ள புகைப்படத்தைக் காட்டினாள்.
அப்படியே சத்யாவை உரித்து வைத்துக் கொண்டு குட்டி ஜெராக்ஸ் போல அழகாய் சிரித்துக் கொண்டிருந்த குழந்தையும் அவனுக்கருகில் சந்தோஷத்தில் பூரித்த முகத்துடனும் சிறு நாணத்துடனும் நின்று கொண்டிருந்த வினோதினியும் கண்ணில் பட சுரீரென்று ஒரு வலி நெஞ்சுக்குள் பாய்ந்ததை உணர்ந்தாள்.
“இ… இது எப்படி… இத்தனை ஒரிஜினலாய் கூட போட்டோஷாப் பண்ண முடியுமா…” தடுமாற்றத்துடன் கேட்டவளைக் கண்டு சிரித்த வீணா, “அடப் போடி… இதை விடவும் ஒரிஜினாலிட்டியோட நிறைய பேர் திருட்டுத் தனம் பண்ணுறாங்க… ஆனா என் மனசுக்கு ஒரு ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாவே இருக்குடி…” மௌனமாய் அந்த போட்டோவையே குழப்பத்துடன் வெறித்துக் கொண்டிருந்த இலக்கியாவிடம் கூறினாள் வீணா.
“எ.. என்ன உறுத்தல்…” அவள் மனதுக்குள்ளும் சொல்ல முடியாத ஒரு வலி பரவிக் கொண்டிருந்தது.
“அந்த மனநிலை சரியில்லாத பொண்ணும் குழந்தையும் உண்மையிலேயே யாரா இருக்கும்… எதுக்கு விக்ரம் உன் அத்தான் மேல பழி சொல்லணும்… கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லியிருந்தா கூட உன்னைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டி சொல்லி இருப்பார்னு நினைக்கலாம்… இது எதுக்கு இப்போ அவர் இப்படி சொல்லணும்…” தனக்குள் பேசிக் கொள்வது போல சொன்ன வீணாவின் வார்த்தைகள் குழப்பத்துடன் இருந்த இலக்கியாவின் காதுக்குள் விழுந்து மண்டையைக் குடையத் தொடங்கியது.
“என்னடி… ஏதோ யோசிக்குற போலருக்கு… இந்த போட்டோவைப் பார்த்து நீ ஏதும் குழப்பிக்க வேண்டாம்… உன் அத்தானைப் பத்தி உனக்குத் தெரியாதா… ஆனா ஒரு விஷயம் மட்டும் யோசிக்கணும்…”
“ஒருவேளை, உன் அத்தானுக்கு இந்தப் பொண்ணைப் பத்தி தெரிஞ்சிருக்கலாமோ… அதை எப்படித் தெரிஞ்சுக்கறது… நேரடியா நீ அவர்கிட்டே கேட்டுடலாம்… ஆனா என்னோட அருமைப் பொண்டாட்டி என்னை சந்தேகப்பட்டு இப்படி கேட்டுட்டாளேன்னு அவர் வருத்தப் படுவாரே… அதனால கேக்க வேண்டாம்… வேற ஏதாவது பண்ணனும்… பாவம், அந்தக் குழந்தையும் பொண்ணும்…” பரிதாபப் படுவது போலக் கூறவும் அந்தக் குழந்தையின் முகம் கண்ணில் வந்து போனது இலக்கியாவுக்கு.
அவளது அத்தானைக் குத்தம் சொல்லாமல் நல்லவிதமாகக் கூறியே குழப்பி விட்டு யோசிக்க வைத்தாள் வீணா.
“விக்ரம் சொன்னது தப்பாவே இருந்தாலும் இந்தப் பொண்ணு யாருன்னு கண்டு பிடிச்சா நமக்கும் நிம்மதியாருக்கும்… அவளுக்கு உதவின போல ஆச்சு… உன் அத்தானைப் பழி சொன்ன அந்த முட்டாளுங்க மூக்கை உடைக்கணும்…” வீராவேசத்துடன் சொல்லிக் கொண்டே அடிக்கண்ணால் தோழியைப் பார்க்க அவளது முகம் யோசனையைக் காட்டியது. வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்கவும் திகைத்த வீணா,
“ஏய்… உன் அத்தான் வந்துட்டார் போலருக்கு… கார் சவுண்டு கேக்குது… நீ ரொம்ப நல்லவளாட்டம் நாம பேசினதை எல்லாம் அவர்கிட்டே சொல்லிடாதே… பாவம், அவர் மனசு வருத்தப்படும்… சரி நான் ஹாலுக்குப் போறேன்…” என்றவள் ஆல்பத்துடன் நகர்ந்தாள்.
வருத்தமும் குழப்பமும் மனதை தளர்த்த அவளுக்குப் பின்னால் சோர்வுடன் வந்த இலக்கியா வாசலுக்கு செல்ல அவளைக் கண்ட சத்யா, “என்ன டார்லிங்… ஏன் சோர்வா இருக்கே… உன் அத்தான் சொன்னபடி வந்துட்டேன் பார்த்தியா…” கேட்கவும், அவனிடமிருந்து பேகை வாங்கிக் கொண்டவள், “டிபன் எடுத்து வைக்கட்டுமா அத்தான்…” என்று கேட்க, “காபி மட்டும் குடுடா… குளிச்சிட்டு டிபன் சாப்பிடறேன்…” என்றான் அவன். நகர்ந்தவளின் தெளிவில்லாத முகம் அவனுக்குள் ஒரு யோசனை விதையை விதைத்தது.
அறையை நோக்கி நடந்தவன் ஹாலில் அமர்ந்து ஆல்பத்தில் மூழ்கி இருந்த வீணாவைக் கண்டதும், “ஹலோ வீணா… எப்படி இருக்கே… எங்கே இந்தப் பக்கமே காணோம்… நீ அப்பப்போ வந்து இலக்கியாவுக்கு கம்பெனி கொடுக்கலாம்ல…” கேட்டுக் கொண்டே எதிரில் அமர்ந்தவனை முகத்தில் சிரிப்புடனும் மனதில் யோசனையுடனும் பார்த்தாள் வீணா.
“இத்தனை அன்பா பேசும் இவருக்குள்ள இன்னொரு மறுபக்கம் இருக்கும்னு நம்பவே முடியலையே… இப்பல்லாம் ஆளைப் பார்த்து எடை போடவே முடியறதில்லை…” பெருமூச்சுடன் புன்னகைத்தாள்.
“என்ன வீணா… ரொம்ப யோசனையா இருக்க போலருக்கு… சரி… சீக்கிரமே கல்யாண சாப்பாடு போடுமா…” சொல்லிக் கொண்டே எழுந்து அறையை நோக்கி நடந்தவனின் முதுகை வெறுப்புடன் வெறித்தாள் வீணா.
“ரொம்ப நல்லவன் மாதிரி வேஷமா போடறே… உன் வேஷம் கலையுற நாள் தூரத்தில் இல்லை…” மனதுக்குள் கருவிக் கொண்டே அமர்ந்திருந்தவளின் அருகில் வந்த இலக்கியா, “ஏய், வீணா… காபி எடுத்துக்கடி…” என்று காபி கப்பை நீட்ட வாங்கிக் கொண்டாள்.
அறைக்கு சென்று கணவனுக்கு காபி கொடுத்துவிட்டு அமைதியாய் திரும்பிய மனைவியின் முகம் சத்யாவுக்கு சற்று வித்தியாசமாய்த் தோன்றியது.
“என்ன ஆச்சு… வரும்போதே மூஞ்சியத் தூக்கி வச்சிட்டு இருக்கா… நல்ல காலத்துலேயே இவ மூஞ்சி பார்க்க சகிக்காது… இப்ப இன்னும் கேவலமா வச்சிட்டிருக்கா… ஒருவேளை, நான் வெளியூர் போனதுக்கு வருத்தமா இருக்காளோ… ம்ம்… அப்படித்தான் இருக்கும்… சரி, ரெண்டு டார்லிங், நாலு செல்லம் சொல்லி அவளை சமாதானப் படுத்துவோம்… பவர் எழுதி வாங்குறதைப் பத்திப் பேசலாம்னு நினைச்சு வந்தா பியூஸ் பிடுங்கின பல்பு மாதிரி உர்ருன்னு மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டிருக்கு… என்ன பண்ணித் தொலையறது… கருவாச்சியை சமாதானம் பண்ணிட்டு பேச்சைத் தொடங்குவோம்…” என நினைத்துக் கொண்டே காபியைக் குடித்து முடித்தவன், “இளா…” எனக் குரல் கொடுத்தான். அவனுக்கு இட்லியை ஊற்றி அடுப்பில் வைத்தவள் வேகமாய் வந்தாள்.
“என்ன அத்தான்…” கேட்டுக் கொண்டே வந்தவளின் கையைப் பிடித்து அருகில் இழுத்தவன், “என் டார்லிங் ஏன் இன்னைக்கு சோகமா இருக்கு… அதான் உன் செல்ல அத்தான் சொன்ன மாதிரியே வந்துட்டேனே…” கேட்டுக் கொண்டே அவளை அருகில் அமர்த்தியவன்,
“டேய் செல்லம்… புது அக்ரிமெண்ட் ஒண்ணு சைன் பண்ணனும்… நாளைக்கு நீயும் ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு வரணும்… உன்னை சிரமப் படுத்துறேனா… சீக்கிரமே நீ ஆசைப்பட்ட மாதிரி என் பேர்ல பவர் எழுத ஏற்பாடு பண்ணிடறேன்… அப்புறம் உன்னை எதுக்கும் தொந்தரவு பண்ண மாட்டேன்… சரியா…” என்றவனைக் கண்டு சிரித்தவள், “அதெல்லாம் பார்த்துக்கலாம் அத்தான்… முதல்ல சாப்பிட வாங்க… வீணா இருக்கா… ஹாலுக்கு போறேன்…” என்றவளுக்கு ஏனோ இயல்பாய் இருக்க முடியவில்லை.
மனதில் விஷமும்
முகத்தில் சிரிப்புமாய்
சில வேடதாரிகள்…
வாழ்க்கை என்னும் மேடையில்
நித்தம் நடிப்பதை மட்டுமே
தொழிலாகக் கொண்டவர்கள்…
அரிதாரம் பூசாத அவதாரங்கள்…
சில சமயத்தில் வேஷம் கலைந்து
பொய்மையில் செல்லரித்துப் போன
உண்மை முகம் வெளிப்படுகையில்
மரண வலியில் மரவித்துப் போகிறது…
வேஷமில்லா உண்மை நெஞ்சங்கள்…

Advertisement