Advertisement

இலக்கணம் – 20
குழந்தை சங்கவி நல்ல உறக்கத்தில் இருக்க கவலையும் சோர்வுமாய் நடந்த விஷயங்களை நண்பன் வினோத்திடம் கூறிக் கொண்டிருந்தான் விக்ரம். அவன் மனது இலக்கியாவின் வார்த்தைகளின் தாக்கத்தில் பொசுங்கிப் போயிருந்தது.
“இப்படி எல்லாம் நடந்திடுமோன்னு நினைச்சு தான் நான் அவகிட்டே சத்யா பத்தி சொல்லத் தயங்கினேன் வினோ… நடுவுல அந்த வீணா வேற லூசு மாதிரி நான் என்னமோ என்னோட காதலுக்காக இப்படில்லாம் சொல்லுற போற சொல்லிக் குழப்பி விட்டுட்டா…”
“இலக்கியா என்னை ரொம்பக் கேவலமா பேசிட்டாடா… எனக்கு அது கூட பிரச்சனை இல்லை…  கூட இருக்கிறது விஷம் நிறைஞ்ச பாம்புன்னு புரிஞ்சுக்காம அதை தலையில் வச்சுக் கொண்டாடிட்டு இருக்காளே… அவனால அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்திடுமோன்னு தான் எனக்கு பயமா இருக்கு… அவளுக்கு எப்படியாவது புரிய வைக்கணுமே…” வேதனையுடன் வந்தது அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும்.
அவன் சொல்வதை யோசனையுடன் கேட்டுக் கொண்டிருந்த வினோத், “நீ ஒண்ணும் கவலைப் படாதே டா… எல்லாம் சரி பண்ணிடலாம்… இத்தனை நாள் பழக்கத்தில் உன்னைப் பத்தி அவங்க புரிஞ்சு கிட்டது அவ்வளவு தான்… அவங்களுக்கு தெளிவு படுத்திட்டா சரியாகிடும்…” என்றான்.
“அதுக்கு அவங்க நாம சொல்லுறதைக் காது குடுத்துக் கேட்கணுமேடா… இலக்கியா இப்ப என் மேல செம கோவத்துல இருக்கா… என் முகத்துலயே முழிக்காதேன்னு கூட சொல்லிட்டா… இனி எப்படி அவளுக்குப் புரிய வைக்க முடியும்…” தவிப்புடன் கேட்ட நண்பனின் தோளில் ஆதரவாய் கை வைத்த வினோத்,
“நல்லதே நடக்கும்னு நம்புவோம்… இலக்கியா இப்ப கோபத்துல யோசிக்க மறுக்கலாம்… கோபம் தணியும்போது நிச்சயமா யோசிப்பா… இதையே நினைச்சு கவலைப் படாதே… அப்புறம், ஒரு விஷயம் கேட்கணும்னு நினைச்சேன்… உன் செட்ல எல்லாருக்கும் போஸ்டிங் ஆர்டர் வரத் தொடங்கிருச்சாமே… உனக்கு எப்ப வரும்னு முருகன் கிட்டே விசாரிச்சியா…”
“ம்ம்… கேட்டேன் டா… இன்னும் ஒண்ணு ரெண்டு மாசத்துல வந்திரும்னு சொல்லி இருக்கான்…” என்றான் விக்ரம்.
“ஓ… சரி, நான் வெளியே கிளம்பறேன்… நீ சமையல் செய்ய வேண்டாம்… நான் வரும்போது வாங்கிட்டு வந்திடறேன்…” என்றவன் டிஷர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டான்.
“இந்த நேரத்துல எங்கே டா கிளம்பறே…” என்றான் விக்ரம்.
“ஒருத்தரைப் பார்க்க வேண்டியிருக்கு… போயிட்டு வந்து சொல்லறேண்டா… நீ எதையும் யோசிக்காம கொஞ்சம் ரிலாக்ஸா இரு….” என்றவன் கிளம்பினான்.
தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள் வீணா. மனம் நடந்த சம்பவத்தை அசை போட்டுக் கொண்டிருக்க அவளுக்கு விக்ரம் மீது கோபமாய் வந்தது.
“ச்சே… விக்ரம்க்கு ஏன்தான் புத்தி இப்படிப் போகுதோ… எதுக்கு இலக்கியா கிட்டே இப்படில்லாம் சொன்னார்… பாவம் இலக்கியா… அப்பா இறந்த துக்கத்தில் இருந்து இப்பதான் கொஞ்ச கொஞ்சமா மீண்டு வர்றா… எத்தனை நாளாச்சு… அவ சந்தோஷமா சிரிச்சுப் பேசி… அது பொறுக்கலையா இவருக்கு… அத்தான் மேல உசுரையே வச்சிருக்குற அவ கிட்டப் போயி இப்படில்லாம் சொல்லி குழப்பப் பார்க்கிறாரே… அவ வாழ்க்கையைக் கெடுக்க எப்படித்தான் அவருக்கு மனசு வந்துச்சோ… உலகத்துலயே இவரைப் போல ஒரு உத்தம நண்பன் இல்லைன்னு எத்தனை மரியாதை வச்சிருந்தா… இப்படி சுயநலமா உத்தம வில்லன் மாதிரி நடந்துகிட்டாரே…” கடுப்புடன் யோசித்துக் கொண்டிருந்தவளை அலைபேசி கலைத்தது. அதை எடுத்து நம்பரைப் பார்க்க அது வினோத்தின் எண்ணைக் காட்டியது.
“ச்சே… இப்ப இவர் எதுக்கு போன் பண்ணுறார்… எப்பப் பார்த்தாலும் பிரண்டுக்கு வக்காலத்து வாங்கிட்டு வர்றதே இவர் பொழப்பாப் போச்சு…” திட்டிக் கொண்டு அலைபேசியை எடுக்காமல் இருக்க, மீண்டும் ஒலித்தது.
கடுப்புடன் எடுத்தவள், “இப்ப என்ன வேணும் உங்களுக்கு… எதுக்கு எனக்கு கால் பண்ணித் தொந்தரவு பண்ணறீங்க…” எரிச்சலுடன் கேட்டாள்.
“வீணா… நான் உங்க வீட்டுத் தெருமுனைல தான் நிக்கறேன்… எனக்கு உன்கிட்டே கொஞ்சம் பேசணும்… வீட்டுல எதையாவது சொல்லிட்டு வெளியே வா…” என்றான் அதிகாரத்துடன்.
“அதெல்லாம் வரமுடியாது… எனக்கு உங்ககிட்டே பேச ஒண்ணும் இல்லை… பெருசா நீங்க என்ன பேசிடப் போறீங்க… உங்க பிரண்டுக்கு வக்கீல் வேலை செய்ய வந்திருப்பீங்க… இனி உங்க பேச்சைக் கேட்க நான் தயாரா இல்லை…” என்றாள் கடுப்புடன்.
“வீணா… நீ இப்ப வர்றியா… இல்லை, நான் உன் வீட்டுக்கு வரவா… பிரண்டோட நன்மையைப் பத்தி யோசிக்கறது தப்பில்லை… ஆனா கண்மூடித்தனமா யோசிக்கக் கூடாது… உனக்கு என்ன… இலக்கியா வாழ்க்கைல எந்தப் பிரச்னையும் வரக் கூடாதுன்னு நினைக்கறே… அதானே… நாங்களும் அதைத் தான் நினைக்கறோம்… எதையும் அரைகுறையா கேட்டுட்டு கோபப்படாதே… இது இலக்கியாவோட வாழ்க்கைப் பிரச்சனை மட்டுமில்லை… அவளோட உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்குப் பெரிய பிரச்சனை… கொஞ்சம் நான் சொல்லறதைப் புரிஞ்சுக்கோ…” தன்மையாய் பேசியவனின் வார்த்தைகள் அவளுக்குள் குழப்பத்தைக் கொடுக்க, “ஒருவேளை இவர்கள் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமோ…” என்றும் உள்ளிருந்து ஒரு மனது கேட்டது.
“சரி… என்னதான் சொல்லப் போறாங்கன்னு கேட்டுடலாம்…” என நினைத்தவள், “நான் வரேன்…” என்று சொல்லிவிட்டுக் கீழே வந்தாள்.
“அம்மா… நான் தெருமுனைல இருக்குற பேன்சிக்குப் போயிட்டு வந்திடறேன்…” என்று ஹாலில் இருந்த அன்னையிடம் கூறவும், “இந்த நேரத்துல என்னடி உனக்கு பேன்சில வேலை… நாளைக்குப் பார்த்துக்கலாம்…” என்றார் அவர்.
“இல்லம்மா… காலைல டைம் இருக்காது… இப்போ சும்மாதானே இருக்கேன்… போயிட்டு வந்திடறேன்…” எனவும் “சரி… சீக்கிரம் போயிட்டு வந்திடு…” என்று அனுமதி கொடுத்தார்.
அலைபேசியை எடுத்துக் கொண்டு கீழே சென்றவள் தெரு முனையை நோக்கி நடந்தாள். அங்கு காரில் காத்திருந்த வினோத், “வீணா… வண்டில உக்காரு… பக்கத்துல இருக்குற காப்பி ஷாப் போகலாம்… உன்கிட்டே சொல்ல வேண்டியதை சொல்லிட்டு நான் கிளம்பிடறேன்…” என்றான்.
“அங்கே எதுக்குப் போகணும்…  இங்கயே பேச வேண்டியது தானே…” என்றாள் வீணா.
“ஹூம்… இதுல எல்லாம் விவரமா இரு… வேண்டிய நேரத்துல முட்டாள் மாதிரி நடந்துக்கோ…” என்று கூறவும்,
“யாரைப் பார்த்து முட்டாள்னு சொல்லறீங்க… நான் என்ன பண்ணினேன்…” என்று எகிறியவளிடம், “வீணா… காப்பி ஷாப் போயிடலாம்… இங்கே இந்த நேரத்துல நாம பேசுறதைப் பார்த்து யாராவது உன்னை தப்பா நினைச்சுடப் போறாங்க…” எனவும் அந்த நேரத்திலும் தன்னைப் பற்றி யோசித்த அவனிடம் சிறு வியப்பே தோன்றியது.
காபி ஷாப்பின் முன்பு வண்டியை நிறுத்தியவன், “காபி சாப்பிடறியா…” என்றான்.
“எனக்கு எதுவும் வேண்டாம்… சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லிட்டா கேட்டுட்டு கிளம்பிடலாம்…” என்றாள் விருப்பம் இல்லாதவள் போல.
“ம்ம்… சொல்லறேன்…” என்றவன் அவனுக்கு மட்டும் ஒரு காபி வாங்கி வந்தான். காரில் அமர்ந்து குடித்து முடிக்கும் வரை அமைதியாய் இருக்க, அவனை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வீணா.
“நீங்க காப்பி குடிக்கறதைப் பார்க்க தான் என்னை அழைச்சிட்டு வந்திங்களா… சீக்கிரம் விஷயத்தை சொல்லுங்க…” அவசரப் படுத்தினாள்.
“எல்லாத்துலயும் எதுக்கு இந்த அவசரம்… இப்படிதான் இலக்கியா விஷயத்துலயும் முந்திரிக் கொட்டை மாதிரி விக்ரம் லவ் பண்ண விஷயத்தை சொல்லி வச்சிருக்கே… அதனால அவன் சொல்ல வந்த விஷயமே திசை மாறி வேற மாதிரிப் போயிருச்சு…” கடிந்து கொண்டவனை முறைத்தாள் வீணா.
“சும்மா… உங்க பிரண்டுக்கே வக்காலத்து வாங்காதிங்க… அவர் உண்மைலயே இலக்கியாவை காதலிச்சிருந்தா இப்படி தான் பண்ணுவாரா… எவ்ளோ பெரிய குத்தத்தை அவ அத்தான் மேல சுமத்தி இருக்கார்… அதை அவ தாங்குவாளா…” கோபத்துடன் கேட்டவளை அமைதியாய்ப் பார்த்தான் வினோத்.
“குத்தம் சொன்னதுக்கே தாங்கலைன்னா அவன் உண்மைலயே அப்படித்தான்னு தெரிய வரும்போது எப்படித் தாங்குவா… வீணா, நீயும் இலக்கியாவும் கோபத்துல அறிவுக் கண்ணை மூடிட்டு இந்த விஷயத்தைப் பார்க்கறிங்க… கொஞ்சம் கண்ணைத் திறந்து யோசிங்க… விக்ரம், கல்யாணத்துக்கு முன்னாடி சத்யாவைப் பத்தி தப்பா சொல்லி இருந்தா கூட நீங்க யோசிக்கறதுல ஒரு லாஜிக் இருக்கு… இப்ப அவனைப் பத்தி சொல்லி அவங்களைப் பிரிக்கறதால என்ன பிரயோஜனம்… சத்யாவைப் பத்தி விக்ரம் சொன்ன விஷயங்கள் எல்லாமே உண்மை… நான் சொல்லி முடிக்கற வரை நடுவுல பேசாம நடந்த விஷயத்தைப் புரிஞ்சுக்கோ… இலக்கியா வாழ்க்கை உனக்கு எவ்வளவு முக்கியமோ… எங்களுக்கும் அப்படித்தான்…” என்றவன்,
விக்ரம் முருகனைக் காண சென்றது முதல், அவன் திரும்பி வரும்போது நடந்த லாரி விபத்து, சத்யா, வினோதினி, குழந்தை அவர்களைப் பற்றி சொன்ன அந்தப் பையன் இப்போது அவர்களின் நிலை வரை சொல்லிக் கொண்டே வர அவளது மனது ஒரு கலவர பூமியாய் உருவெடுக்கத் தொடங்கியது.
“வி…வினோத்… நீங்க சொல்லுறதெல்லாம் உண்மையா… இதெல்லாம் எப்படி நம்புறது…” குழப்பத்துடன் கேட்டவளிடம் சத்யா குழந்தை வினோதினியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவைக் காட்டினான் வினோத்.
அதைக் கண்டதும் அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொள்ள, “சத்யா இவ்வளவு மோசமான ஆளா… கொலை கூட செய்யத் தயங்காதவரா… அவர் மேல இளா ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காளே… அவங்க குடும்பத்துக்கு ஆண் வாரிசு இல்லாத குறையைத் தீர்க்க அவ அத்தானைக் கடவுள் கொடுத்ததா சொல்லிப்பா… அவர் இப்படிப்பட்டவர்னு தெரிஞ்சா அவளால எப்படித் தாங்கிக்க முடியும்… எத்தனை பெரிய அயோக்கியத்தனம்… ஒரு குடும்பத்தையே ஏமாத்த அந்த சத்யாவால எப்படி முடிஞ்சது… சொத்துக்காக இலக்கியாவை ஏதாவது பண்ணிட்டா…” அவளுடைய முகத்தில் கோபமும் குழப்பமும் மாறி மாறித் தோன்றியது.
“ம்ம்… இப்போ உனக்கு தோணுதே… இதே கவலை தான் எங்களுக்கும் தோணுச்சு… வினோதினி மனநிலை சரியில்லாம இருக்குற நேரத்துல இதை எப்படி இலக்கியா கிட்ட சொல்லி நம்ப வைக்க முடியும்… அது மட்டுமில்லை… வினோதினியைப் பத்தி சத்யாக்கு தெரிஞ்சுகிட்டா அவன் மறுபடியும் கொலை பண்ண முயற்சி செய்யலாம்… அதான் வினோதினியை இங்கே அழைச்சிட்டு வந்து ட்ரீட்மென்ட் கொடுத்திட்டு இருக்கோம்… ஆனா இலக்கியாவுக்கு தெரியாமலே இருக்கறதும் ஆபத்து… அதான், அவளைப் பார்த்ததும் சத்யா பத்தின உண்மைகளை சொல்ல முயற்சி பண்ணி இருக்கான்… இந்த உலகத்துல இலக்கியா நல்லாருக்கணும்னு அவனை விட யாரும் யோசித்திருக்க மாட்டாங்க… ராத்திரி தூக்கம் வராம தவிக்கிறது எனக்கு தான் தெரியும்… சத்யாவுக்கு இவங்களைப் பத்தி தெரியக் கூடாதுன்னு குழந்தையைக் கூட அவனே பார்த்துக்கறான்… அவனைப் போயி…” வேதனையுடன் அவன் சொல்லி முடிக்க ஒவ்வொரு விஷயத்தையும் முடிச்சிட்டுக் கொண்டே வந்த வீணாவுக்கு நம்பாமல் இருக்க முடியவில்லை.
“நீங்க சொல்லுறது புரியுது… திடீர்னு சொன்னதும் சரியா புரிஞ்சுக்காம அவசரப்பட்டு அவரைத் தப்பா பேசிட்டேன்… சாரி… இப்ப இந்த பிரச்சனையை எப்படி சரி பண்ணறது… இலக்கியாவை எப்படி சத்யா கிட்ட இருந்து காப்பாத்துறது…”  கேள்வியுடன் அவன் முகத்தைப் பார்த்தாள்.
“ம்ம்… எந்த விஷயமும் திடீர்னு சொன்னா அதிர்ச்சியா தான் இருக்கும்… அதிர்ச்சியைப் போக்கி இலக்கியாவைத் தெளிவா யோசிக்க வைக்கணும்… சத்யாவை குத்தம் சொல்லாமலே இலக்கியாவை அவனைப் பத்தி புரிஞ்சுக்க வைக்கணும்… அது உன்னால தான் முடியும்… நீ செய்வ தானே…” என்றான். அவன் சொன்னதும் யோசித்தவள் தலையாட்டினாள்.
“நான் அவகிட்டே பேசறேன்… ஆனா இலக்கியாவை சத்யாவைப் பத்தி நம்ப வைக்கணும்னா நம்ம கிட்டே சரியான ஆதாரம் வேணும்… அதை முதல்ல ரெடி பண்ணனும்… அதுக்கு ஏதாவது பண்ணனுமே…” என்றாள் அவள் யோசனையுடன்.
“ம்ம்… அதை நாங்க பார்த்துக்கறோம்… நீ நாளைக்கே இலக்கியாவைப் பார்த்துப் பேசு… அவசரப்படாம பொறுமையா என்ன எப்படிப் பேசணும்னு யோசிச்சுப் பேசு… சரி டைம் ஆச்சு… கிளம்பலாமா…” என்றான் அவன்.
“ம்ம்… சாரிண்ணா, விக்ரம் அண்ணாவையும் என்னை மன்னிக்க சொல்லுங்க… இலக்கியா பாவம்… அவ அப்பா இல்லாம அந்தக் குடும்பமே ரொம்ப வருத்ததுல இருக்காங்க… அதான், ஆதங்கத்துல ஏதோ அவசரப்பட்டு பேசிட்டேன்… ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க… எப்படியாவது இலக்கியாவை சத்யா கிட்ட இருந்து காப்பாத்தணும்… அதுக்கு எந்த உதவி வேணும்னாலும் செய்யறதுக்கு நான் தயாரா இருக்கேன்…” என்றவளைப் புன்னகையுடன் பார்த்தவன், “இவ்ளோ நேரமா அண்ணன்களை டைவர்ஸ் பண்ணிட்டியா என்ன… இப்ப மறுபடி அண்ணான்னு சொல்லறே…” எனவும் புன்னகைத்தவளை நோக்கி சிரித்துக் கொண்டே காரை எடுத்தான் வினோத். வீணாவின் மனது இப்போது தெளிந்திருக்க இலக்கியாவைப் பற்றிய நினைவில் கனத்திருந்தது.
“ச்சே….. இளாவுக்கு அவ அத்தான் மேல எத்தனை நம்பிக்கை… இப்படிப்பட்ட ஒருத்தனையா கொண்டாடிட்டு இருக்கா… துரோகத்துலையே பெரிய துரோகம் நம்பிக்கை துரோகம்… அதைப் பண்ணினவனையே வாழ்க்கைன்னு நினைச்சிட்டு இருக்காளே…” வீணாவை தெருமுனையில் இறக்கி விட்டுவிட்டு வினோத் கிளம்பிவிட அவசரமாய் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள் வீணா.
வெறும் கையுடன் வந்த மகளிடம் விசாரணையைத் துவங்கிய அன்னையிடம், அங்கே எதுவும் பிடிக்காததால் வாங்காமல் திரும்பி விட்டதாக புளுகிவிட்டு, “நாளைக்கு மாலுக்கு போயி வாங்கிக்கறேன் மா…” என்று பிட்டையும் போட்டு வைத்தாள்.
அடுத்த நாள் காலையில் எதிர்பார்க்காமலே முன்னில் வந்து நின்ற தோழியை திகைப்புடன் பார்த்த இலக்கியாவின் முகம் இரவில் உறங்காமல் கண்கள் வீங்கி கடுகடுவென்று இருந்தது. அவள் பார்வையோ, யோசனையைக் காட்டியது.
பகைவனில் கிட்டிய அடியை
பலமிருந்தால் தாங்கிக் கொள்ளலாம்…..
பாசம் காட்டி நெஞ்சம் நின்றவனின்
அடியை மனமும் தான் தாங்கிடுமோ…..
தாலியாக கழுத்தில் தாங்கியது
கொடிய விஷமுள்ள பாம்பென்பதை
அறிந்திடும் நேரம் கொதித்து
அதைக் குதறிடுவாளா……
கண்மூடித்தனமான காதலில்
விஷமே தீண்டினாலும் சாரமற்று
விதியென்று பொறுத்திடுவாளா……
இலக்கணம் மாற்றி எழுதப் படுமோ……

Advertisement