Advertisement

இலக்கணம் – 14
காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த சத்யாவின் முகம் யோசனையில் இறுகி இருந்தது. மனதுக்குள் இருந்த டென்ஷன் வண்டி ஓட்டுவதில் தெரிய வேகமாய் சாலையில் கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.
“ச்சே… இவளுக்கு எப்படி கல்யாண விஷயம் தெரிந்தது… யார் சொல்லி இருப்பார்கள்…. இந்தக் குதி குதிக்கிறாள்… ஏதேதோ சொல்லி சமாளித்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது… யாருக்குத் தெரியக் கூடாதென்று நினைத்தேனோ அவளுக்கே தெரிந்து விட்டதே… இனி இவள் சும்மா இருப்பாளா… நானாகக் கல்யாணத்தை நிறுத்தா விட்டால் மண்டபத்திற்கு வந்து கூச்சல் போடுவேன் என்று மிரட்டுகிறாள்…”
“குழந்தையைக் காட்டி பயமுறுத்துகிறாள்… ஆஸ்திக்கு அந்தக் கருவாச்சியைக் கட்டிக் கொண்டு ஜாலியாய் இந்த அழகு வினோவுடன் சில வருடமாவது குடும்பம் நடத்தலாம் என்று நினைத்திருந்தால் இப்படி புரியாமல் சண்டைக்கு நிற்கிறாளே….” அவளது செழுமையான தேகம் நினைவில் வர,
“முன்னை விட குழந்தை பிறந்த பின் மேலும் அழகாகி விட்டாள்… சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் குழந்தை, வாழ்க்கை என்று புலம்புகிறாள்… இடியட்… சில வருடம் கூட என்னுடன் வாழும் பாக்கியம் அவளுக்கு இல்லை போலிருக்கிறது…” நினைத்துக் கொண்டான்.
யோசித்துக் கொண்டே வளைவில் திருப்பியவன் எதிரில் வந்த லாரியில் மோதியிருப்பான். வினாடியில் சுதாரித்து வண்டியைத் திருப்பவும் மோதாமல் தப்பித்தான்.
“யோவ்… வீட்ல சொல்லிட்டு வந்திட்டியா… பளபளன்னு கார்ல வந்தாலும் லாரில மோதினா எமலோகம் தான் போகணும்… ஒழுங்கா ரோட்டைப் பார்த்து வண்டிய ஓட்டு…” கத்திக் கொண்டே லாரி டிரைவர் செல்ல சட்டென்று அவனுக்குள் ஒரு ஐடியா தோன்றியது. காரை ஓரமாய் நிறுத்தி யோசித்தவன் முகத்தில் மெல்லப் புன்னகை எட்டிப் பார்த்தது.
முன்னில் இருந்த பாட்டிலை எடுத்து தண்ணீரைக் கடகடவென்று குடித்தவன், ஒரு குதர்க்கப் புன்னகையோடு அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
எதிரில் அலைபேசியவன், “சொல்லுங்கண்ணே… நான் பழனி பேசறேன்…” எனவும், “டேய் பழனி… ஒரு போட்டோ, அட்ரஸ், அனுப்பறேன்… எந்த நேரத்துல எங்கே போவா… என்ன பண்ணுவா எல்லா விவரமும் அனுப்பறேன்… யாருக்கும் எந்த சந்தேகமும் வந்திடாம கமுக்கமா கதையை முடிச்சிரு…” என்றான்.
“சரிண்ணே… நம்ம வேலை எப்படி இருக்கும்னு உனக்குத் தெரியாதா அண்ணே…” என்றவன், “அண்ணே அட்வான்ஸ்…” என்று இழுக்க, “ம்ம்… உன் அக்கவுண்டுக்கு பணம் வந்திரும்… எப்பவும் தர்றதை விட அதிகமாவே தரேன்… சமயம் பார்த்து கச்சிதமா முடிக்கணும்… முடிச்சிட்டு என்னோட பர்சனல் நம்பருக்கு கூப்பிடு…” என்றான்.
“சரிண்ணே… கவலையே படாதிங்க… முடிச்சிட்டு கூப்பிடறேன்…” என்றவன் அலைபேசியை அணைத்து விட்டான்.
“என் சட்டையைப் பிடிச்சு நிக்கவச்சு கேள்வியா கேக்கறே… என்ன… இன்னும் கொஞ்ச நாள் உன்னை அனுபவிச்சிட்டு தூக்கி எறியலாம்னு நினைச்சேன்… இப்ப அது முடியாமப் போயிச்சு… பரவால்ல… நான் வேற அழகான பொண்ணைப் பார்த்துக்கறேன்… என்னைக் கேள்வி கேக்கறவங்க யாரா இருந்தாலும் எனக்குப் பிடிக்காது… அது எனக்குப் பிடிச்சவங்களா இருந்தாலும், சோ நீ செத்துப் போயிடு வினோ…” என்று ஒரு வக்கிர சிரிப்பை உதிர்த்து விட்டுக் காரை எடுத்தான்.
சென்னைக்கு அருகே தாமரைப் பாக்கத்தில் இருந்த நண்பன் முருகனைக் கண்டு திரும்பி வந்து கொண்டிருந்தான் விக்ரம். முருகன் காவல்துறையில் எஸ்ஐ ஆகப் பணிபுரிந்து வந்தான். கல்லூரியில் இளநிலைப் படிப்பு முடிந்ததும் காவல்துறைக்கு விண்ணப்பித்தவன் டிரைனிங் முடிந்து வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகிறது. காவல் துறையில் சேர வேண்டும் என்று தோன்றியதுமே அதற்கான முயற்சிகளில் இறங்கி விட்டான் விக்ரம். அவனிடம் சில விவரங்களைக் கேட்டு திரும்பிக் கொண்டிருந்தான்.
அந்த மதிய வேளையில் சாலையில் வாகனங்கள் குறைவாய் இருக்க ஏதேதோ மாறி மாறி யோசித்துக் கொண்டிருந்தவனின் நினைவுகள் இலக்கியாவைப் பற்றி சுற்றி வரத் தொடங்கின.
“இலக்கியா… எத்தனை அருமையான பெண்… தைரியமும் துடுக்குத் தனமும் நிறைந்திருந்தாலும் அவள் அத்தான் என்றதும் அப்படியே உருகிப் போகிறாளே… எத்தனை அன்பு வைத்திருப்பாள்… ஹூம்… எனக்கு அடுத்த ஜென்மத்திலாவது அந்த அன்பைப் பெரும் வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ…” ஒரு பெருமூச்சை விட்டவனின் இதழ்களில் சிறு புன்னகை.
“ச்ச்சே… நான் எதற்கு இப்படி எல்லாம் யோசிக்கிறேன்… அவள் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லபடியாய் நடக்கட்டும்… அவள் அப்பா இருந்திருந்தால் மகளின் கல்யாணத்தை ஊரையே அழைத்து மிகவும் ஆர்ப்பாட்டமாய் செய்திருப்பார்… அந்த ஏக்கம் அவளுக்கு நிச்சயம் இருக்கும்… மனசுக்குப் பிடித்தவனின் அருகாமை தான் அவளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டும்… நாளை கல்யாணத்திற்கு என்ன பரிசு வாங்கி செல்வது…” யோசித்துக் கொண்டே ஒரு வளைவில் திரும்பியவன் அலறல் சத்தத்துடன் கண்ணுக்கு முன் நடந்த நிகழ்வில் அதிர்ந்து போனான். 
சாலையில் குழந்தையுடன் நடந்து கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தியை லாரி ஒன்று இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் வளைவில் திரும்பி வேகமாய் சென்றுவிட கீழே விழுந்த அந்தப் பெண் இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.
தலையில் இருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டிருக்க குப்புற விழுந்திருந்தவளின் கைக்குள் இருந்த குழந்தை வீறிட்டுக் கொண்டிருந்தது குழந்தையின் கை கால்களிலும் லேசாய் அடி பட்டு ரத்தம் வர, கண் முன்னே சட்டென்று நிகழ்ந்த விபத்தில் அதிர்ந்து போய் நின்ற விக்ரம், அந்தப் பெண் உயிர்ப் போராட்டத்தில் அலறுவதைக் கண்டு வண்டியை நிறுத்திவிட்டு அருகில் ஓடினான். அந்தப் பெண் நினைவை இழக்கத் தொடங்க குழந்தை வலியோடு அழுது கொண்டிருந்தது.
லாரியின் எண்ணைப் பார்க்க முயல்வதற்குள் வளைவில் திரும்பி அது காணாமல் போயிருக்க பதட்டத்துடன் அந்தப் பெண்ணிடம் ஓடினான் விக்ரம். சாலையில் இருந்த சிலரும் ஓடிவர யாருமே பெண்ணின் அருகிலோ, குழந்தையின் அருகிலோ செல்லாமல் அதிர்ச்சியுடன் தயங்கி நின்றனர்.
வேகமாய் அழுது கொண்டிருந்த குழந்தையை எடுத்தவன், “அம்மா… கொஞ்சம் இந்தக் குழந்தையைப் பிடிங்க… சார்… ஆம்புலன்சுக்கு கால் பண்ணுங்க…” என்றவன் ரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவளை தாங்கிக் கொள்ள முயல தலையைப் பிடிக்கும்போது விரல் மண்டைக்குள் அமுங்கி செல்ல அதிர்ந்து போனான்.
மண்டைப் பகுதி குழிந்து கிடந்தது. அவளைப் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்குமா என்று தேட சின்ன பர்சுக்குள் ஒரு மொபைல் போனும் சிறிது பணமும் மட்டுமே வைத்திருந்தாள். சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வரவும் சிலர் உதவ வந்தனர். தாமதிக்காமல் குழந்தையையும் அந்தப் பெண்ணையும் அதில் ஏற்றியவன் காவல் நிலையத்திற்கு அழைத்து விவரம் சொல்லிவிட்டு, யாரும் உடன் செல்லத் தயாராகாததால் அவனே சென்றான். குழந்தையின் கை கால்களிலும் காயமாகி ரத்தம் வழிந்து கொண்டிருக்க அழுத குழந்தையை சமாதானிக்க முடியாமல் திணறினான். டவலை எடுத்து அந்தக் குழந்தையின் கை காலில் வழிந்த ரத்தத்தை துடைத்து விட்டான். நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அதை தட்டிக் கொடுத்தான். வெகு நேரம் அழுத குழந்தை மருத்துவமனையை நெருங்கும் போது உறங்கியிருந்தது.
அவனது உடை முழுதும் ரத்தக்கறை படிந்திருக்க, கோரமான விபத்தின் காட்சியே கண்ணுக்குள் நின்று மனதைப் பிசைந்தது. பதட்டத்துடன் இறங்கியவன் குழந்தையுடன் நிற்க ஸ்ட்ரெச்சரில் அந்தப் பெண்ணை எடுத்துக் கொண்டு அவசரமாய் எமெர்ஜென்சி பிரிவுக்குக் கொண்டு சென்றனர்.
நர்ஸ் ஒருத்தி அவனிடம் வந்து, “நீங்கதான் அந்தப் பொண்ணோட வந்திங்களா… போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணியாச்சா… அவங்க டீடைல்ஸ் கொடுங்க…” என்று கேட்க முழித்தான் விக்ரம்.
“எனக்கு இவங்க யாருன்னு தெரியாதுங்க… போலீஸ் இப்ப வந்திருவாங்க… நீங்க முதல்ல அந்தப் பொண்ணுக்கு சிகிச்சையைத் தொடங்குங்க… ரொம்ப ரத்தம் போயிட்டு இருக்கு…” என்றவனின் கையில் இருந்த குழந்தையைக் கண்டவள்,
“இது அவங்க குழந்தையா… கையில, கால்ல காயமா இருக்கு…” என்றவள், மற்றொரு நர்ஸை அழைத்து குழந்தையின் காயத்தைப் பரிசோதித்து மருந்து வைக்க சொன்னாள். அதற்குள் போலீஸும் வந்து அவனிடம் நடந்ததை விசாரித்துக் கொண்டிருக்க அவசரப் பிரிவில் சிகிச்சை தொடங்கி இருந்தது.
பதட்டம் குறையாமல் வெளியே நின்றவனின் காதில் வண்டி மோதிய சத்தமும், அந்தப் பெண்ணின் அலறலும் கேட்டுக் கொண்டே இருக்க, கண்ணுக்குள் நிலைத்திருந்த காட்சியை மாற்ற முடியாமல் தவித்தான்.
“ச்சே… என்னவொரு வாழ்க்கை… ஒரு நொடிக்குள் அந்தப் பெண்ணின் வாழ்க்கையே மாறி விட்டதே… எங்கே சென்று கொண்டிருந்தாளோ… எங்கிருந்து வந்தாளோ… நல்ல வேளை, குழந்தைக்கு பெரிதாய் எதுவும் ஆகவில்லை… யாரென்று அறியாமல் எப்படி இந்தப் பெண்ணின் வீட்டுக்கு தெரிவிப்பது…” யோசித்தவனுக்கு அவளது அலைபேசியும் பர்சும் தன்னிடம் இருப்பது நினைவுக்கு வரவே இல்லை.
போலீஸ் டாக்டரிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தனர். என்ன செய்வதென்ற குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில் போலீஸ்காரர் அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்களைக் கேட்க அவன் பார்த்ததை சொன்னான்.
அந்தப் பெண் சுயநினைவில்லாமல் கிடக்க, அவள் யாரென்ற விவரம் அறிய முடியாமல் காத்திருந்தனர்.
வெகு நேரத்துக்குப் பிறகு பரிசோதனை அறையில் இருந்து வெளியே வந்த டாக்டர், முன்னில் நின்று கொண்டிருந்தவர்களிடம்,  “கொஞ்சம் கிரிடிகல் ஸ்டேஜ் தான்… மண்டைல ஆழமா  அடிபட்டிருக்கு… நிறைய பிளட் லாஸ் ஆகிருக்கு… எதுவும் சொல்ல முடியாது… அவங்க சொந்தக்காரங்க யாருன்னு தெரிஞ்சா இன்பார்ம் பண்ணிடுங்க…” என்றார்.
அதைக் கேட்டதும் அவனது மனம் திக்கென்று ஆனது. உறங்கிக் கொண்டிருந்த குழந்தை உணர்ந்து அழவும் நர்ஸ் குழந்தையைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். அதன் உடையை அவிழ்த்திருந்தனர். வெற்றுடலுடன் இருந்த குழந்தை அழுது கொண்டிருக்க என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்.
“இந்தப் பொண்ணைப் பத்தின விவரம் தெரிஞ்சா தான் சம்மந்தப் பட்டவங்களுக்கு தெரிவிக்க முடியும்… குழந்தை வேற அழுதுட்டே இருக்கு… நாங்க ஸ்பாட்டுக்குப் போயி பக்கத்துல உள்ளவங்களை விசாரிச்சிட்டு வந்திடறோம்… அதுவரை நீங்க இந்த குழந்தையைப் பார்த்துக்கங்க…” என்றார் அந்த போலீஸ்காரர் அதிகாரத்துடன்.
“அய்யய்யோ… இப்போதே நேரம் இருட்டத் தொடங்கி விட்டது. விடிந்தால் இலக்கியாவின் கல்யாணம்… போகாமல் இருந்தால் மிகவும் வருத்தப்படுவாளே… இப்போது என்ன செய்வது…” யோசனையுடன் அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்க்க, அது அவனைப் பார்த்து பொக்கை வாயுடன் அழகாய் சிரித்தது.
குழந்தையின் புன்னகையைக் கண்டதும் அவன் மனம் நெகிழ்ந்தது. “கடவுளே… தான் எந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கிறோம் என்று கூட உணர்ந்து கொள்ள முடியாத இந்தப் பிஞ்சுக் குழந்தையை அனாதை ஆக்கிவிடாதே… எப்படியாவது இதன் தாயை உயிர்ப்பித்து விடு…” என மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டான்.
எதுவும் தெரியாமல் தன்னை நோக்கி சிரிக்கும் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், “உனக்கு நான் இருக்கேன் செல்லம்… இந்த மாமா இருக்கேன்… உன்னை அப்படியே விட்டுட்டுப் போக மாட்டேன்…” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே குழந்தையைப் பார்க்க அது அவன் முகத்தை பிஞ்சுக் கைகளால் தடவி மீண்டும் சிரித்தது. அந்த தொடுதலில் அவன் தேகம் சிலிர்த்ததை உணர்ந்தான்.
முன்னில் இருந்த கடையில் அதற்கு ஒரு உடுப்பை வாங்கி மாட்டியவன், கேண்டீனில் பால் வாங்கிக் குடிக்கக் கொடுத்தான். சமத்தாய் அவன் கைகளில் இருந்த குழந்தையோடு அவனுக்கு எதோ ஒரு பிடிப்பு தோன்றியது.
வயிறு நிறைந்த சந்தோஷத்தில் சற்று நேரத்தில் உறங்கத் தொடங்கியது. அதன் கள்ளம் கபடமில்லாத அழகு முகத்தை நோக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான் விக்ரம். அப்போது அவனது அலைபேசி அழைக்கவும் எடுக்க, வினோத் தான் அழைத்திருந்தான்.
“என்னடா, எங்கிருக்கே… இன்னும் ஏன் வீட்டுக்கு வரலை… காலைல இலக்கியா கல்யாணத்துக்குப் போகணும்… கிப்ட் எதுவும் வாங்கவே இல்லை… கூப்பிட்டா போனை எடுக்கவும் இல்லை…” மடமடவென்று கேள்விகளாய் கேட்ட நண்பனிடம் அமைதியாய் நடந்த விஷயங்களை சொன்னான் விக்ரம்.
“டேய்… என்னடா இது… மத்தவங்களுக்கு உதவி பண்ணுறது நல்லது தான்… அதுக்காக அவளோட குழந்தையை கையில வச்சுட்டு உக்கார்ந்துட்டு இருக்கே… போலீஸ்கிட்டே குழந்தையை ஒப்படைச்சிட்டு கிளம்பி வாடா…” என்றான் வினோத்.
“இல்லடா வினோ… யாருமில்லாம இந்தக் குழந்தையை அப்படியே விட்டுட்டு வர்றதுக்கு மனசு வரலை… அந்தப் பொண்ணு யாருன்னு தெரிஞ்சுட்டா அவ குடும்பத்து ஆளுங்க கிட்டே குழந்தையை ஒப்படைச்சிட்டு நைட் ஆனாலும் கிளம்பி எப்படியாவது கல்யாணத்துக்கு வந்திடறேன்… நீ இலக்கியாவுக்கு நல்லதா ஒரு கிப்ட் வாங்கி வச்சிடு…” சொல்லிக் கொண்டிருந்தவன் நர்ஸ் ஒருத்தி வேகமாய் வந்து அழைக்கவும் பிறகு பேசுவதாய்க் கூறி அணைத்துவிட்டு சென்றான்.
“அவசரமா இந்த மருந்து வேணும்… வாங்கிட்டு வாங்க…” என்று ஒரு சீட்டை நீட்ட, குழந்தையுடன் மருந்துக் கடைக்கு சென்று வாங்கி வந்து கொடுக்கவும் வாங்கிக் கொண்டு எமர்ஜன்சி அறைக்குள் சென்று மறைந்தாள் அந்த நர்ஸ். குழந்தையை பார்த்துக் கொண்டு கவலையுடன் அமர்ந்திருந்தான் விக்ரம்.
எப்படியெல்லாமோ அழைக்கிறாய்
என்னை நீ……
எல்லாமே மிகச் சிறந்த கவிதையாய்
எனை கிறங்கடிக்கிறது…..
மொழியறியா, உலகறியா
உனக்கு என் பாஷை மட்டும்
எப்படித் தெரிந்துவிடும் கண்ணே…..
இருந்தும் உன் பொக்கை வாய்
சிரிப்பின் புன்னகையில்
பல நூறு பாஷைகளின்
பொருளைக் காண்கிறேன் நான்…..
வாழ்க்கையின் மாய தத்துவமாய் நீ……

Advertisement