Advertisement

இலக்கணம் – 19
கோபத்திலும் வெறுப்பிலும், விக்ரம் சொன்ன வார்த்தைகளின் தாக்கத்திலும் நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது இலக்கியாவின் மனது. சத்யாவைப் பற்றி அவன் சொன்ன விஷயங்கள் மனதை காயப் படுத்தியிருக்க, அதை நம்புவதையும் மீறி தன் நண்பன் விக்ரம் சொல்லி விட்டானே… என்ற எண்ணம் அந்தக் காயத்தின் வேதனையை அதிகமாக்கிக் கொண்டிருந்தது.
காலையில் சந்தோஷமாய்க் கிளம்பிச் சென்ற மகள் கோபமும் அழுகையுமாய் வீட்டுக்குத் திரும்பி வந்து பேசாமல் அறைக்குள் நுழைந்து கொள்ளவும் ஒன்றும் புரியாமல் திகைத்தார் லலிதா.
அவளுக்குப் பின்னில் ஆட்டோவுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்த வீணாவிடம், “இவ போகும்போது ஸ்கூட்டியில் தானே போனா… இப்ப என்ன ஆட்டோல வரீங்க… என்னாச்சு… ஏன் அழுத போல இருக்கா…” என்று கேட்க தயங்கியவள், “அ… அவளுக்கு அப்பா நினைவு வந்திடுச்சு போலருக்கு மா…” சமாளித்தாள்.
“ம்ம்… அவ அப்பான்னா அவளுக்கு உசுரு… கல்யாணமாகி புருஷனோட சந்தோஷமா இருக்கறதை விட்டுட்டு இப்பவும் அவரை நினைச்சு கலங்கிட்டு இருக்கா… சரி கொஞ்ச நேரம் கழிச்சு அவ சரியாகிடுவா… நீ வருத்தப்படாதே…” வீணா சொன்ன காரணம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்ததாலும் இலக்கியா அவ்வப்போது தந்தையின் நினைவில் கலங்குவதை அறிந்ததாலும் அவர் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. வீணாவுக்கும்கூட அவர் நம்பியதில் திகைப்பாகவே இருந்தது.
“சரிங்கம்மா… அவ ஸ்கூட்டியை மால்ல நிறுத்திட்டு வந்திருக்கா… நான் போயி எடுத்திட்டு வந்திடறேன்…” என்று கிளம்பப் போகவும், “அட நீ எதுக்குமா கஷ்டப் படறே… நம்ம டிரைவர்கிட்டே சொன்னா எடுத்திட்டு வருவார்… நீ சாப்பிடலை தானே… வந்து ஒருவாய் சாப்பிடு…” என்றார்.
“இல்லை மா… நாங்க ஜூஸ் குடிச்சோம்… பசிக்கலை… நான் வீட்டுக்குக் கிளம்பறேன்… நீங்க இலக்கியாவைப் பார்த்துக்கங்க… பாட்டி எங்கே காணோம்…” என்றாள் உள்ளே பார்த்துக் கொண்டே.
“அத்தை எப்பவும் அவங்க ரூமுக்குள்ளேயே இருக்காங்க மா… வெளியவே வரதில்லை…” சோர்வுடன் கூறிய லலிதாவுக்கு சட்டென்று வயது அதிகரித்து முதுமையைத் தொட்டு விட்டது போலத் தோன்றியது. எத்தனை மங்களகரமாய் அழகாய் புன்னகையுடன் வலம் வருவார். அதெல்லாம் தொலைந்திருந்தது.
“சரிம்மா….. நான் கிளம்பறேன்…. நாளைக்கு வர்றேன்……. இப்ப அவ ரெஸ்ட் எடுக்கட்டும்…..” என்ற வீணா விடைபெற்றாள். அறைக்குள் கட்டிலில் குத்துகாலிட்டு அமர்ந்திருந்த இலக்கியாவின் மனது கோபத்திலும் வருத்தத்திலுமாய் கலங்கிக் கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் விக்ரமின் குரல் காதுக்குள் ஒலித்து அவள் வேதனையை அதிகமாக்கின. மனதுக்குள் அவன் சொன்ன  வார்த்தைகளே சூறாவளியாய் சுழலத் தொடங்கின.
“விக்ரம்ம்ம்…”
உன் அத்தான் சத்யா தான் வினோதினியின் இந்த நிலைக்குக் காரணம் என்ற விக்ரமின் வார்த்தை கேட்டு அதிர்ச்சியில் உயர்ந்த இலக்கியாவின் குரலில் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்த வினோதினி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் அதையே தொடர்ந்தாள். வீணா அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருக்க விக்ரம் அவர்களுக்குத் தெளிவு படுத்த முயன்றான்.
“இலக்கியா….. உன் கோபம் எனக்குப் புரியுது… ப்ளீஸ்… ஒரு நிமிஷம் நான் சொல்லுறதைப் பொறுமையா கேளு… சத்யா உன்னை சொத்துக்காக கல்யாணம் பண்ணிக்க நினைச்சது மட்டுமில்லை… அதைத் தெரிஞ்சுகிட்டு நியாயம் கேட்ட வினோதினியையும், இந்தப் பிஞ்சுக் குழந்தையையும் தன்னோட குழந்தைன்னு கூடப் பார்க்காம லாரி ஏத்திக் கொல்லப் பார்த்தான்… கடவுள் புண்ணியத்துல நான் அந்தப் பக்கம் வரவும் இவங்களைக் காப்பாத்த முடிஞ்சது… இதெல்லாம் எப்படியாவது உனக்குத் தெரியப்படுத்தி உங்க கல்யாணத்தை நிறுத்தறதுக்கு நான் ரொம்பவும் முயற்சி பண்ணினேன்… பட் முடியலை… ஒரு நிமிஷம் இந்தப் போட்டோவைப் பாருங்க…” என்று அலைபேசியைக் காட்டியவனை பார்க்காமலே முறைத்த வீணா,
“போதும் நிறுத்துங்க… ஆல்ரெடி அப்பாவை இழந்த துக்கத்தில் இருந்தே இன்னும் அவ தெளியலை… அதுக்குள்ளே ஏதேதோ கற்பனைக் கதைகளை எல்லாம் சொல்லி அவளைக் குழப்பப் பார்க்கறிங்களா… அன்னைக்கு என்னவோ நான் விரும்பின பொண்ணு அவ விரும்பினவனோடு சந்தோஷமா இருக்கட்டும்னு வசனம் பேசிட்டு இப்ப எந்த மூஞ்சியை வச்சிட்டு இப்படி சொல்லி அவ வாழ்க்கையைக் கெடுக்கப் பார்க்கறிங்க…” ஆவேசத்துடன் கேட்ட வீணாவை விக்ரம் அதிர்ந்து நோக்க, இலக்கியா குழப்பமும், கோபமுமாய் ஏறிட்டாள்.
“வீணா… நீ என்ன சொல்லறே… விக்ரம் என்னை விரும்பினாரா…”
“ஆமாம் இளா… இவர் உன்னை விரும்பினார்… அதை உன்கிட்ட சொல்லறதுக்கு முன்னாடியே உன் கல்யாணம் முடிவாகிட்டதால ரொம்ப நல்லவர் மாதிரி, எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்லி வாழ்த்திட்டு, என்கிட்டயும் இதைப் பத்தி உன்கிட்டே சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டார்…” என்றாள் முறைப்புடன்.
“அய்யய்யோ… இந்த லூசுப் பெண் இப்போது இதைப் பற்றி சொல்கிறாளே… இனி நான் சொல்வதை இலக்கியா நம்புவாளா…” என அவன் யோசிக்கும் போதே இலக்கியாவின் வார்த்தைகள் நெருப்பாய் வந்து விழுந்தன.
“ச்சே… உங்களைப் பத்தி எவ்ளோ உயர்வா நினைச்சிருந்தேன்… அதையெல்லாம் சுட்டுப் பொசுக்கிட்டு இத்தனை சுயநலமா யோசிச்சு இப்ப என் வாழ்க்கையையும் நாசமாக்கப் பார்க்கறிங்களா… என் அத்தானைப் பத்தி நீங்க இல்ல, அந்தக் கடவுள் இல்ல… என் அத்தானே வந்து தப்பா சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்… நீங்களே எதோ ஒரு பொண்ணோட வாழ்க்கையை நாசமாக்கி குழந்தையும் கொடுத்திட்டு அந்தப் பொண்ணுக்கு இப்ப புத்தி பேதலிச்சதும் பழியைத் தூக்கி என் அத்தான் மேல போடப் பார்க்கறிங்களா… அதை நான் நம்புவேன்னு உங்களுக்கு எப்படித் தோணுச்சு விக்ரம்… உங்களை எவ்ளோ நல்லவர்னு நம்பினேன்… உங்களைப் போல ஒருத்தரோட நட்பா இருக்குறதைப் பெருமையா நினைச்சனே… அது எல்லாத்தையும் பொய்யாக்கிட்டிங்களே…” உணர்ச்சி வேகத்தில் அவள் கண்ணில் இருந்து நிற்காமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.
தான் எதை நினைத்து பயந்து சொல்லாமல் இருந்தோமோ, அது போலவே கண் முன்னில் நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதைக் கண்டு விக்ரம் அதிர்ச்சியுடன் நிற்க, இலக்கியா தொடர்ந்தாள்.
“என்ன சொன்னிங்க… கல்யாணத்துக்கு முன்னாடி என் அத்தானைப் பத்தி சொல்லி கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ணினீங்களா… நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க… நீங்க வந்து சொன்னா நான் என் அத்தானை சந்தேகப்பட்டு கல்யாணத்தை நிறுத்திட்டு உங்களை ஏத்துக்குவேன்னு நினைச்சிங்களா… ஹூம்… உங்களை எனக்கு இந்த ரெண்டு வருஷமாத்தான் தெரியும்… என் அத்தானை எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே தெரியும்… அவரை சந்தேகப் பட்டா, என்னையே நான் சந்தேகப் படுற மாதிரி…” தீப்பிழம்பாய் வார்த்தைகளை விட்டவள்,
“இந்த மாதிரி கேவலமான எண்ணங்கள் உள்ள உங்க நட்பை பெருமையா நினைச்சுக் கொண்டாடினதை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு… இனிமே எதையாவது சொல்லிட்டு என் கண் முன்னால வந்திடாதிங்க… நான் உங்களைப் பார்க்குறது இதுவே கடைசித் தடவையா இருக்கட்டும்…” உறுமியவள், “வாடி…” என்று தோழியிடம் சொல்லிவிட்டு நடந்தாள்.
“இலக்கியா… அவசரப்படாதே… ஒரு நிமிஷம் நான் சொல்லுறதைக் கேளு…” பின்னிலேயே ஓடி வந்தவனை நின்று எரித்துவிடுவது போல முறைத்தவள், கதவைத் திறந்து வெளியேறினாள். அவளுக்குப் பின்னிலேயே சென்ற வீணா, “ச்ச்சே… என்ன மனுஷங்களோ…”  விக்ரமைத் திட்டிக் கொண்டே நடந்தாள்.
மனதின் பொருமல் முகத்தில் அனலாய்த் தெறிக்க கீழே வந்தவள் அங்கு வந்த ஒரு காலி ஆட்டோவில் ஏறிக் கொண்டு அமைதியாய் இருக்க, அவளது மனநிலை புரிந்து கொண்ட வீணா தான் இலக்கியாவின் வீட்டுக்கு செல்ல வேண்டிய வழி கூறினாள். ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கடுகடுவென்று முகத்தை வைத்திருந்த இலக்கியாவிடம் சமாதானமாய்ப் பேசக் கூட வீணாவுக்கு பயமாய் இருக்க அவளும் அமைதியாகவே இருந்தாள்.
“ச்ச்சே… இந்த விக்ரம் அண்ணாவைப் பத்தி எத்தனை உயர்வா நினைச்சிருந்தோம்… லாஸ்ட்ல அவரும் எல்லாரையும் போல சாதாரணமான ஒருத்தர் தான்னு நிரூபிச்சுட்டாரே… அவருக்குப் பிடிச்ச பொண்ணு வேறொருத்தர் கூட சந்தோஷமா வாழக் கூடாதுன்னு நினைக்குற அளவுக்கு இவரும் கேவலமான புத்தியா தானே இருந்திருக்கார்… என்னெல்லாம் கதை வேற சொல்லுறார்… பாவம் இலக்கியா, இன்னைக்கு தான் அப்பாவோட இழப்பை மறந்து கொஞ்சம் சந்தோஷமா இருந்தா… அதுக்குள்ளே அதைக் கெடுத்து விட்டுட்டாரே…” நினைத்துக் கொண்டே மெதுவாய் தோழியிடம் பேச்சுக் கொடுக்க முயன்றாள்.
“இ…இளா… நீ ஒண்ணும் பீல் பண்ணாதடி…” மேலே சொல்ல முயன்றவளை எதுவும் பேச விடாமல் கையைக் காட்டி நிறுத்த சொன்னவள் அமைதியாகிவிட, அதற்குப் பிறகு வீணாவும் மௌனமாகி விட்டாள். வீட்டை நெருங்கும்போது தான் ஸ்கூட்டி மாலில் நிற்பது நினைவு வர, அதைப் பற்றிக் கேட்ட தோழிக்கு கைப்பையில் இருந்து சாவியை எடுத்து நீட்டிவிட்டு மீண்டும் மௌனத்தைத் தொடர்ந்தாள் இலக்கியா. நடந்ததை யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு தலை பயங்கரமாய் வலித்தது.
அழுகையும் வெறுப்பும் கோபமும் கலந்த கலவையாய் அமர்ந்திருந்தாள்.
“ச்சே… விக்ரமை எத்தனை நம்பினேன்… கடைசியில் என் நம்பிக்கையிலேயே கல்லெறிந்து விட்டானே… என் அத்தானைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்… அவருக்கு வேறு பெண்ணோடு கல்யாணமாம்… குழந்தையாம்… அத்தானுக்கு என்னை எத்தனை பிடிக்குமென்று எனக்கு தானே தெரியும்… இப்படியெல்லாம் என்னிடம் சொல்ல அவனுக்கு எத்தனை தைரியம்… எல்லாம் நான் கொடுத்த இடம் தான் காரணம்… இவனைக் கண்டதுமே எனக்குப் பிடிக்காமல் தானே இருந்தது… அப்படியே இருந்திருக்கலாம்… அதை விட்டு இவனோடு நட்பு வைத்துக் கொண்டதே பெரும் தவறு தான்… கொஞ்ச நாள் பழகுவதற்குள் இவனுக்கு என்னோடு காதல் வேறாம்… காதலித்த பெண்ணுக்கு கல்யாணமாகி விட்டால் அவள் வாழ்க்கையையே கெடுக்க நினைப்பது தான் உண்மையான காதலுக்கு அழகா… இவன் வெளியே ஒன்றும் மனதில் ஒன்றுமாய் இரட்டை வேடம் போடுகிறான்… இனி அவனோடு எந்தப் பேச்சும் இல்லை…” பொருமிக் கொண்டவள் தொண்டை உலர்ந்திருக்க, தண்ணீரை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டாள்.
“அத்தான்… உங்களை எனக்கு இப்பவே பார்க்கணும் போலருக்கே… எத்தனை அருமையான மனுஷன் நீங்க… உங்களைப் போயி ஒருத்தன் தப்பா சொல்லிட்டானே… இத்தனை வருஷமா உங்க கூடவே இருக்கேன்… உங்களோட ஒவ்வொரு அசைவையும் கவனிச்சு ரசிச்சிருக்கேன்… என்கிட்டே உங்களைப் பத்தி அவன் தப்பா சொல்லிட்டானே…” மீண்டும் நினைவுகள் அங்கேயே சுற்றிவர தவித்தாள். சத்யாவுடன் பேசினால் மனதுக்கு சமாதானம் தோன்றுமென நினைத்தவள் அவனுக்கு அழைத்தாள். அலைபேசி ஒலித்து ஓய்வதற்கு முன் எடுத்தவன் ஹலோவினான்.
“ஹலோ… சொல்லு டார்லிங்…” அவனது கை வளைவில் இருந்த புதுக் காதலியைக் கொஞ்சிக் கொண்டிருந்தவன் குரலை சரியாக்கிக் கொண்டே கூறினான்.
“அ… அத்தான்… சாப்டீங்களா… எப்ப வீட்டுக்கு வருவிங்க…” 
“இல்ல டார்லிங், கொஞ்சம் வேலையா இருந்தேன்… முடிச்சிட்டு தான் சாப்பிடனும்… நீ சாப்பிட்டியா… அத்தை, பாட்டி சாப்பிட்டாங்களா… அவங்களை கவனிச்சுக்கோ டா…”
“ம்ம்… அத்தான்… எனக்கு உடனே உங்களைப் பார்க்கணும் போல இருக்கு…” என்றாள் விக்ரம் சொன்ன விஷயத்தை அவனிடம் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டே.
“எனக்கு இன்னைக்கு இங்கே வேலை இருக்குடா செல்லம்… நாளைக்கு வந்திடறேன்… உன் குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு… மாமாவை நினைச்சு அழுதியா… நீயே இப்படி இருந்தா அத்தையும் பாட்டியும் தளர்ந்து போயிடுவாங்க மா… நீ இன்னும் சாப்பிடலைன்னு உன் குரலே சொல்லுதே… முதல்ல சாப்பிடு டார்லிங்…” அன்போடு விசாரித்தவனின் குரலில் அவள் மனம் நெகிழ்ந்தது.
“இத்தனை அன்பான என் அத்தானை அந்த விக்ரம் என்னவெல்லாம் சொல்லிவிட்டான்… அதை அத்தானிடம் சொன்னால் அவரும் வருத்தப்படுவாரே… வேண்டாம்… இது என்னோடு போகட்டும்…” மனதுக்குள் நினைத்துக் கொண்டவள், “நான் இன்னும் சாப்பிடலை… அத்தான்… நீங்களும் நேரத்துக்கு சாப்பிடுங்க… நாளைக்கு கண்டிப்பா வந்திடுங்க…”
“உத்தரவு மகாராணி… உங்கள் ஆணைப்படி நாளை காலையில் உங்கள் முன் தரிசனம் தந்திருப்பேன்…” அவன் சிரித்துக் கொண்டே கூறவும் மனது சற்று லேசானவள்,
“சரி அத்தான், வச்சிடறேன்…” என்று தொடர்பைத் துண்டித்தாள்.
“என்ன டியர்… அவளை ரொம்ப தான் கொஞ்சறீங்க… அவளும் உங்களுக்கு டார்லிங் தானா… மகாராணின்னு கொஞ்சல் வேற… பொண்டாட்டி கிட்ட ரொம்ப தான் உருகுறீங்க… அப்ப நான் யாரு…” முகத்தை திருப்பிக் கொண்டே குயிலாய் கூவினாள் அவள்.
புன்னகையுடன் அவள் மடியில் கிடந்து கொண்டே, “அந்தக் கருவாச்சியை இந்த மாதிரிக் கொஞ்சல் வார்த்தை பேசி தானே மயக்கி வச்சிருக்கேன்… அவ வெறும் அபீஷியல் டார்லிங்… நீ தான் எப்பவும் என் மனம் கவர்ந்த டார்லிங்…”
சொல்லிக் கொண்டே அவள் முகத்தை அருகில் இழுத்து முத்தமிட, “ஹஹா… அதானே பார்த்தேன்…” என சொல்லிக் கொண்டே அவனுடன் கொஞ்சலில் இணைந்து கொண்டாள் அந்தப் பெண். சில்லறைத்தனமான அந்த சிரிப்பில் சில்லறைகள் சிணுங்கியது.
உலைக்களமாய் கொதிக்கிறாள் ஒருத்தி…
உல்லாசமாய் களிக்கிறான் ஒருவன்…
உள்ளம் மறைத்து வெல்லமாய்
கள்ளம் சொன்ன வார்த்தையை
உண்மையென்று எண்ணி
உருகிப்போகிறாள் பெண்ணொருத்தி…
கருமைக்குள் மறைந்திருக்கும்
கயமை என்று விலகுமோ…
அழகுக்குள் ஒளிந்திருக்கும்
ஆபத்தென்று புரியுமோ…
கண்ணில் நிறைந்த கண்ணீரில்
காட்சியும் தான் மறையுமோ…
கானலும் விலகி காட்சியும் தெளிய
உண்மையின் சூட்டில் அவள்
உருகித்தான் போவாளோ…

Advertisement