Advertisement

இலக்கணம் – 18
                       
விக்ரம் திகைப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றிருக்க அவன் கையில் இருந்த குழந்தை பொக்கை வாயுடன் இலக்கியாவைப் பார்த்து சிரித்தது. கள்ளம் கபடமற்ற அந்த சிரிப்பில் மனதைத் தொலைத்தவள் ஆசையோடு குழந்தையை நோக்கி கை நீட்டினாள்.
“அட… என்னைப் பார்த்ததும் குழந்தை எவ்ளோ அழகா கியூட்டா சிரிக்குது… வாடா செல்லம், ஆண்ட்டி கிட்டே வா…” என்றவளை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.
இலக்கியாவுக்கு பொதுவாகவே குழந்தைகள் என்றால் மிகப் பிரியம். அதுவும் இந்தக் குழந்தை அப்பனின் அழகை அப்படியே கொண்டிருந்தது. நல்ல சந்தன நிறத்தில் கொழுக் மொழுக்கென்று அழகாய் இருந்த குழந்தை அவள் கை நீட்டியதும் பிகு பண்ணி சிணுங்காமல் சிரித்துக் கொண்டே தாவியது. அதன் குண்டுக் கன்னத்தில் முத்தமிட்டவள் குழந்தையை அணைத்துக் கொண்டாள்.
ஒரு நிமிடத்தில் அங்கே எதிர்பாராமல் நடந்த நிகழ்சிகளை உள்வாங்கிக் கொண்டு அமைதியாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனை முறைத்தாள் இலக்கியா.
“ஹலோ என்ன லுக்கு… உங்க மேல செம கடுப்புல இருந்தேன்… எங்காவது பார்த்தாக் கூட நல்லாத் திட்டி விடணும்னு காத்திட்டு இருந்தேன்… ஆனா இந்தக் குழந்தையோட உங்களைப் பார்த்ததும் எல்லாம் மறந்து போயிருச்சு… ஆமா இது யார் குழந்தை, பார்த்தாலே சும்மா நெஞ்சை அள்ளுது… இவ்ளோ கியூட்டா இருக்கு, முகம் கூட நல்லா பரிச்சயம் ஆன போலத் தோணுது…” என்றாள் மீண்டும் குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே.
“ம்ம்… பரிச்சயமாத் தானே தோணும்… அது உன் அத்தானோட குழந்தையாச்சே…” என மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும், “அது வந்து… இலக்கியா… நீ எங்கே இந்தப் பக்கம்… யாரோட வந்தே…” என்றவன் சுற்றுமுற்றும் பார்வையை ஓட்டினான். “சத்யா எங்காவது கண்ணில் படுகிறானா… குழந்தையைப் பார்த்து விடுவானோ…” என்ற பதைப்புடன்.
“ஏன்… நாங்கல்லாம் மாலுக்கு வரக் கூடாதா… எங்களுக்கெல்லாம் ஏதும் பர்ச்சேஸ் பண்ணற வேலை இருக்காதா என்ன… நீங்க எங்கே இந்தப் பக்கம்… யாரோட வந்திங்க…” என்றாள் அவள் வேண்டுமென்றே. வெகு நாட்களுக்குப் பிறகு அவனுடன் அப்படி வம்பு பேச அவளுக்கு சந்தோஷமாயிருந்தது.
அவள் நார்மலாக அவனை வம்பிழுத்துப் பேசவும் அவனுக்கும் சற்று ஆறுதலாக இருந்தது. தந்தை சோகம் விலகி அவளை உற்சாகமாகக் காணவும் இந்த சந்தர்பத்தை விட்டு விட மனம் வரவில்லை. சத்யாவைப் பற்றிய உண்மைகளை சொல்லிவிட மனது துடித்தது. 
“என்ன விக்ரம்… எதைக் கேட்டாலும் பதில் சொல்லாம எதையோ யோசிச்சுட்டே முழிக்கறிங்க… இவகிட்டே என்ன காரணத்தை சொல்லித் தப்பிக்கலாம்னு யோசிக்கறிங்களா… அதெல்லாம் முடியாது… நான் உங்க மேல ரொம்ப கோபமா இருக்கேன்… இல்லடா செல்லம்… சரி… இது யார் குழந்தைன்னு கேட்டேன்… பதிலே இல்லையே…” என்றாள் மீண்டும்.
“அதுவந்து…” என்று தயங்கியவன், “இலக்கியா… எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்… இப்போ நீ ப்ரீயா…” என்றவனை வியப்புடன் நோக்கினாள் இலக்கியா.
“என்ன விக்ரம்… எனக்கு கல்யாணம் ஆனதும் நான் மாறிடுவேன்னு நினைச்சிங்களா… புதுசா பேசறதுக்கு கூட பர்மிஷன் எல்லாம் கேக்கறிங்க… நான் எப்பவும் உங்க பழைய தோழி தான்… என்ன பேசணும்… வாங்க அந்த காபி ஷாப்புக்கு போயிடலாம்… எனக்கும் உங்ககிட்டே சிலதெல்லாம் கேக்க வேண்டியிருக்கு…” என்றவள் காபி ஷாப்பை நோக்கி குழந்தையுடன் நடக்க பின்னில், “எப்படி சத்யாவைப் பற்றிய விஷயத்தைத் தொடங்கலாம்…” என யோசித்துக் கொண்டே நடந்தான் விக்ரம்.
இரண்டு காபி ஆர்டர் செய்துவிட்டு இருவரும் எதிரெதிர் நாற்காலியில் அமர்ந்தனர். குழந்தை இலக்கியாவின் மடியில்  இருந்து விக்ரமை நோக்கி சிரித்துக் கொண்டு கை நீட்டியது.
“அட… குழந்தை உங்ககிட்டே வரணும்னு சொல்லுறாளே… உங்களை ரொம்பப் பிடிக்குமோ… சரி, இவ பேரென்ன… இவ அம்மா எங்கே… யார் குழந்தைன்னு இன்னும் நீங்க சொல்லவே இல்லையே… என்ன விக்ரம்… எங்களுக்கு தெரியாம யாரையாவது கல்யாணம் பண்ணி குழந்தையும் பெத்துகிட்டிங்களா… என்ன…” என்று அவனை நோக்கிக் கண்ணடித்தவளை சிறு வலியுடன் பார்த்தான் விக்ரம்.
“எத்தனை எதார்த்தமாய்க் கேட்கிறாள்… அவள் தெரியாமல் விளையாட்டுக்கு சொன்னாலும் இது அவள் அத்தானின் குழந்தை தான் என்ற உண்மையை சொல்லிவிட்டால்… எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறாள்…” யோசிக்கத் தொடங்கினான் விக்ரம்.
அவனுக்கு முன்னில் விரலால் சொடுக்குப் போட்ட இலக்கியா, “மறுபடியும் யோசனையா… அப்படி எந்தக் கோட்டையைதான் பிடிக்கப் போறீங்க விக்ரம் சார்… எனக்கும் கொஞ்சம் சொல்லலாமே…” என்றவள், “
பாருடா செல்லம்… இவர் ரொம்ப தான் உன்னைப் பத்தி சொல்லாம பில்டப் பண்ணுறார்…” என்று குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
“நான் சொன்ன பிறகு நீ இப்படி எல்லாம் இந்தக் குழந்தையைக் கொஞ்சுவாயா…” என யோசித்துக் கொண்டே விக்ரம் மெதுவாய் பேச்சை தொடங்கினான்.
“எப்படி இருக்கே இலக்கியா… கல்யாண வாழ்க்கை எப்படிப் போகுது… எங்கே உன் அத்தான்… நீ மட்டும் தனியா ஷாப்பிங் வந்திருக்கே…” என்றான் காபியைக் குடித்துக் கொண்டே.
“அந்த வீணாப் போனவளும் வரேன்னு சொன்னா…. இப்பதான் வந்திட்டு இருக்கா…. அப்பா தவறின பின்னாடி எங்கயுமே போறதில்லை….. மனசு ஒரு மாதிரி இருந்துச்சு…… அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு வெளியே போலாம்னு சொல்லி வர சொன்னேன்…. இப்போ வந்திருவா….. அவர் வேலை விஷயமா வெளியூர் போயிருக்கார்…..” என்ற இறுதி வார்த்தையில் அவள் முகத்தில் சிறு நாணப்  புன்னகை.
“ம்ம்…. அம்மா, பாட்டில்லாம் நல்லாருக்காங்களா…. இப்பவும் வருத்தப் பட்டுட்டே இருக்காங்களா……”
“ஹூக்கும்…. இதெல்லாம் என்னைப் பார்க்கும்போது மட்டும் கேட்டுப் பிரயோசனமில்லை விக்ரம்…… நல்ல பிரண்டா லட்சணமா அப்பப்ப வீட்டுக்கு வந்து எங்களைக் கவனிச்சுகிட்டிருக்கணும்….. அதெப்படி…. காலேஜ் முடிஞ்சு என் கல்யாணமும் முடிஞ்சதும் எங்களை எல்லாம் கண்டுக்கறதே இல்லியே….. அவங்கள்ளாம் நல்லாருக்காங்க விக்ரம்….. அப்பப்போ அப்பாவை நினைச்சு கலங்குவாங்க….. நான் கல்யாணமாகியும் அப்பா நினைவுல வருத்தப்பட்டுட்டு இருக்கேன்னு அவங்களுக்கு வருத்தம்….. அதான்…. அவங்களுக்கு நார்மலா காட்ட வெளியே கிளம்பி வந்தேன்….” என்றவளின் முகத்தில் சோகம் எட்டிப் பார்த்தது.
“ம்ம்… காலம் தான் எல்லாத்துக்கும் மருந்து….. சரியாகிடுவாங்க மா….” என்றவனின் முகம் மீண்டும் யோசனையைக் காட்டியது.
“சரி…. நானும் வந்ததில் இருந்து பார்க்கறேன்… நீங்க ஏதோ யோசனையாவே இருக்கிங்களே… என்ன விஷயம் விக்ரம்…”
ஒரு நிமிடம் குழந்தையின் மீது கண்ணைப் பதித்தவன், “சொல்லறேன் இலக்கியா… எப்பவா இருந்தாலும் உன்கிட்டே இதெல்லாம் சொல்லித்தான் ஆகணும்…” என்றான். அப்போது இலக்கியாவின் அலைபேசிக்கு வீணா அழைக்க அவளையும் காபி ஷாப்புக்கு வருமாறு கூறிவிட்டு வைத்தாள் இலக்கியா.
“என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு… சார் வேற போலீஸ் ஆபீசர் ஆகப் போறிங்கன்னு கேள்விப்பட்டேன்… சரி, கால் பண்ணி ஒரு விஷ் பண்ணலாம்னு பார்த்தா எப்பவும் உங்க நம்பர் ஸ்விட்ச் ஆப்… சுத்தமா என்னை மறந்தே போயிட்டிங்க…” என்றாள்.
“உன்னை ஒரு நிமிடம் கூட மறக்க முடியாது பெண்ணே… உன் இப்போதைய நிலையை நீ அறியவில்லை… சிங்கத்தின் வாயில் சிக்கிய சிறு மானாய் நீ இருப்பதை அறிந்தவன் நான்… உனைக் காப்பாற்றும் முயற்சியில் தான் ஒவ்வொரு நிமிடமும் துடித்திருக்கிறேன்…” மனதுக்குள் யோசித்தவனைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டாள் இலக்கியா.
“உங்களுக்கு என்னமோ ஆகிப் போச்சு விக்ரம்… நீங்க பழைய போலவே இல்லை… எப்பப் பார்த்தாலும் யோசிச்சுகிட்டே இருக்கீங்க…” என்றவள் மடியில் இருந்த குழந்தை சிணுங்கவும், “செல்லம்… என்னடா பசிக்குதா…” எனக் கேட்டுக் கொண்டே அவளது காப்பியை ஊதி லேசாய் குழந்தையின் வாயில் வைத்தாள். அதும் புது சுவையை சப்பிக் கொண்டு மீண்டும் அமைதியானது.
அவனைக் கடுப்புடன் நோக்கியவள், விக்ரம்… “நானும் வந்ததில் இருந்து எத்தனையோ கேள்வி கேட்டுட்டேன்… எக்ஸாம் டைம்ல படிச்சதெல்லாம் மறந்து போன ஸ்டூடன்ட் மாதிரி திருதிருன்னு முழிச்சுகிட்டு யோசிச்சுகிட்டே இருக்கீங்க… எங்கே உங்க உயிர் நண்பன்… அவரையும் காணோம்…” என்றாள்.
அவன் ஒரு கம்பெனியில் மானேஜரா ஜாயின் பண்ணி ரெண்டு நாள் தான் ஆச்சு… அதான் நான் மட்டும் தனியா வந்தேன்… நானும் சப் இன்ஸ்பெக்டர் டெஸ்ட்ல செலக்ட் ஆயிட்டேன் இலக்கியா… போஸ்டிங்கு தான் வெயிட்டிங்… ஆர்டர் எப்ப வரும்னு தெரியலை…” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே முகமெல்லாம் பல்லாக அவர்களை நோக்கி கையசைத்துக் கொண்டு அங்கு வந்தாள் வீணா.
“ஹாய் இளா… ஹாய் அண்ணா… எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்… ஏய்…. இதென்னடி… கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்ல உனக்கு இவ்ளோ பெரிய பேபியா… சொல்லவே இல்லை… உன் அத்தான் ரொம்பத்தான் ஸ்பீடு போல…” சொல்லிக் கொண்டே குழந்தையின் கன்னத்தில் செல்லமாய் கிள்ளினாள் வீணா.
அவள் தோளில் ஒரு அடி வைத்த இலக்கியா அவளை முறைத்துக் கொண்டே, “அடி வீணாப் போனவளே… இந்தக் குழந்தை யாருன்னு தெரிஞ்சுக்க தான் நானும் வந்ததில் இருந்து உன் அண்ணாகிட்டே கேட்டுட்டு இருக்கேன்… அவர் தான் வச்சிருந்தார்… இதுவரைக்கும் யார் குழந்தைன்னு சொல்லவே இல்லை… நீயே கேட்டுக்கோ…” என்றவள் குழந்தை உறங்கத் தொடங்குவதைக் கண்டு தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தாள்.
“அண்ணா, இவ என்ன சொல்லுறா… இது யார் குழந்தை…” என்றாள் அவளும் குழப்பத்துடன் குழந்தையைப் பார்த்துக் கொண்டே.
“ம்ம்… சொல்லறேன்…” என்றவன், “இதை நான் முன்னமே உன் கிட்டே சொல்லி இருக்கணும் இலக்கியா… சந்தர்ப்ப சூழ்நிலை சொல்ல முடியாமப் போயிருச்சு… இதை நான் சொன்னபிறகு நீங்க எப்படி எடுத்துக்குவிங்களோ.. எனக்குத் தெரியாது… இருந்தாலும் நான் சொல்லப் போறது எல்லாமே உண்மை… என்னை நீங்க நம்புவீங்களா…” என்றவனின் குரலில் இருந்த சீரியஸ்னஸ் அவர்களுக்கும் புரிய இருவரும் குழப்பத்துடன் தங்களுக்குள் பார்த்துக் கொண்டனர்.
“நீங்க என்ன சொல்லறிங்க விக்ரம்… ஏதோ சீரியஸா பேசிட்டு இருக்கீங்க… உங்களை நம்பாமலா இவ்ளோ உரிமையா பேசிப் பழகிட்டு இருக்கேன்… எதுவா இருந்தாலும் சொல்லுங்க… பிரச்சனை ஒண்ணும் இல்லையே…” என்றவளின் மனதுக்குள் சிறு பதட்டம் வந்திருந்தது.
“சொல்லறேன் இலக்கியா… நீங்க என் மேல நம்பிக்கை வச்சுப் பழகினது உண்மையா இருக்கலாம்… உன்னோட நம்பிக்கைக்கு உரியவரைப் பத்தி நான் சொல்லப் போறதைக் கேட்டாலும் நம்பணும்… ஏன்னா நான் சொல்லப் போறது எல்லாமே உண்மை…” அவன் கூறவும் குழப்பத்துடன் இலக்கியா யோசிக்க, “என்னண்ணா… என்னன்னு சொல்லுங்க…” என்றாள் வீணா.
“குழந்தையைக் கொடு இலக்கியா…” என்றவன் உறங்கிய குழந்தையை வாங்கிக் கொண்டான்.
“ஒருத்தரைப் பார்க்கப் போகணும்… என்னோட இப்ப உங்களுக்கு வர முடியுமா…” என்றவனைப் புரியாமலே பார்த்தனர் இருவரும்.
“எங்கே போகணும் விக்ரம்… யாரைப் பார்க்க…” கேள்வியை உதடுகள் உதிர்த்தாலும் இலக்கியாவின் இதயத் துடிப்பு அதிகரிப்பதை உணர்ந்தாள்.
“இந்தக் குழந்தை யாருங்கிற கேள்வியை எத்தனையோ தடவை கேட்டியே… அதுக்கான பதிலை அங்கே போயி சொல்லறேன்… ஒரு ரெண்டு மணி நேரம் தான்… பத்திரமா கொண்டு வந்து விட்டுடறேன்…” என்றவனிடம் குழப்பமாய் இருந்தாலும் சம்மதத்தோடு தலையசைத்தாள் இலக்கியா. வீணாவுக்கும் எதுவும் புரியாவிட்டாலும் விஷயம் ஏதோ முக்கியமானது என்று புரிந்தது.
விக்ரம் முன்னில் நடக்க அவனைப் பின்தொடர்ந்தனர் தோழிகள் இருவரும். நண்பன் ஒருவனின் காரில் தான் வந்திருந்தான் விக்ரம். அதில் பெண்கள் இருவரும் அமைதியுடன் யோசித்துக் கொண்டே பின்னில் ஏறிக் கொள்ள விக்ரம் காரை உயிர்ப்பித்தான். குழந்தை மீண்டும் இலக்கியாவின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தது.
ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ஒதுக்குப் புறமாய் இருந்த பெரிய கட்டிடத்தின் கேட்டின் முன்பு கார் நிற்க செக்யூரிட்டி வந்து விசாரித்து கேட்டைத் திறந்து விட்டார். முன்னில் இருந்த பெயர்ப் பலகையைப் பார்த்து பெண்கள் இருவரும் புருவத்தை சுளித்தனர்.
“அன்னை தெரேசா மனநல காப்பகம்” என்ற பெயர்ப் பலகையுடன் இருந்த முகப்புக்குள் கார் நுழைய இரு புறமும் பச்சைப் பசேலென்று இருந்த மரங்களும் செடி கொடிகளும் அமைதியான சூழலும் அவர்களின் யோசனையை அதிகமாக்கியது. காரை கட்டிடத்தின் முன்பு பார்க்கிங்கில் நிறுத்தியவன் அவர்களை இறங்க சொல்ல, குழந்தையுடன் இறங்கிக் கொண்டனர்.
ரிசப்ஷனில் ஏதோ கேட்டுவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு முதல் தளத்துக்கான படிகளில் ஏறிய விக்ரமைப் பின் தொடர்ந்தனர் இருவரும். வார்டில் இருந்த நர்ஸ் ஒருவரிடம் அவன் எதையோ சொல்லவும் அவர் ஒரு அறைக்கு அழைத்து சென்றார்.
“இப்ப கொஞ்சம் நார்மலா தான் இருக்காங்க… போயிப் பாருங்க…” என்று அந்தப் பெண் நகரவும் விக்ரமின் பின்னால் தயக்கத்துடனே நுழைந்தனர் பெண்கள் இருவரும். உள்ளே பச்சை நிற உடையில் ஒரு அழகான பெண் கண்களில் நிறைத்து வைத்த சோகத்துடனும் சோர்வுடனும் ஏதோ ஒரு தேடலுடன் பார்வை எங்கோ நிலைத்திருக்க அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
அவளுக்கு அருகில் சென்ற விக்ரம், “வினோதினி… இங்கே பாரும்மா, யாரு வந்திருக்காங்கன்னு…” அவன் குரல் கேட்கவும் மெல்லத் திரும்பினாள்.
இலக்கியாவின் கையில் இருந்த குழந்தையைக் கண்டவள், “அய்யா… என் அம்முக்குட்டி…” என்று பாய்ந்து அவளிடம் வரவும் மிரண்டு போனவள் குழந்தையைக் கொடுக்காமல் இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டாள்.
“என் குழந்தையைக் குடு… என் அம்முப் பாப்பாவைக் குடு… இல்லன்னா அவ அப்பாகிட்டே சொல்லி உன்னை அடிக்க சொல்லுவேன்… குடு…” என்று மீண்டும் பறிக்க வரவும், பயத்துடன் ஒதுங்கி நின்று கொண்ட இலக்கியாவுக்கு அந்தப் பெண்ணைக் காணப் பரிதாபமாகவும் இருந்தது.
“இலக்கியா… குழந்தையைக் கொடு…” என்று விக்ரம் கூறவும், “இவங்க கிட்டே எப்படி விக்ரம்…” என்று இலக்கியா தயங்க, “இது அவங்க குழந்தை தான்… ஒண்ணும் பண்ண மாட்டாங்க குடு…” என்றதும் தயங்கிக் கொண்டே குழந்தையை நீட்ட ஆசையோடு வாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் வினோதினி. குழந்தையை முத்தமிட்டு அவள் கொஞ்சுவதைக் கண்டு அவர்களின் மனம் கலங்கியது.
தாய்மை எந்த சூழலிலும் மரிப்பதில்லை… ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. வினோதினியை கனிவோடு பார்த்துக் கொண்டிருந்த தோழிகளிடம் வந்தவன், “இவங்க பேரு வினோதினி… இது அவங்க குழந்தை சங்கவி…” என்றான்.
“இவங்களுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமில்லை… யாருமில்லாத உனக்கு எல்லாமா நானிருக்கேன்னு சொல்லி ஏமாத்தி ஒருத்தன் இவளை யாருக்கும் தெரியாமக் கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தையும் கொடுத்துட்டு இப்போ சொத்துக்காக வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டான்…” நிறுத்தினான்.
“ஓ… படுபாவி, எப்படித்தான் இப்படில்லாம் செய்ய மனசு வருதோ… பொண்ணுங்களோட மனசைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம தன்னோட சுயநலத்தை மட்டுமே பெருசா நினைக்குற இவங்களுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் பத்தாது… ஒரு பொண்ணை நம்ப வச்சு குழந்தையும் கொடுத்துட்டு வேறொருத்தியைக் கல்யாணம் பண்ணுறது பெரிய நம்பிக்கை துரோகம்… இப்படிப் பண்ணினவனை சும்மா விடக் கூடாது…” மனதில் உள்ள ஆத்திரமும் ஆதங்கமும் வார்த்தையாய் வெளியே வர கோபத்துடன் பேசியவளை அமைதியாய் நோக்கினான் விக்ரம்.
“உண்மைதான் இலக்கியா… நம்பிக்கை துரோகத்தைப் போல கொடுமையான செயல் வேற ஒண்ணும் இல்லை… இந்த செயலை செய்த அந்தப் படுபாவி உன் அத்தான் சத்யா தான்னு சொன்னா நீ நம்புவியா…” அமைதியாய் அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் காதில் இடியாய் இறங்க, “விக்ரம்…” அலறியவளின் காதில் அவனது வார்த்தைகளே மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்க மின்னல் பாய்ந்த மரமாய் அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்தாள். நடப்பவைகளையும் விக்ரம் சொன்ன விஷயங்களின் தாக்கத்தையும் உட்கொள்ள முடியாமல் கண்கள் தெறிக்கப் பார்த்தாள் வீணா.
காத்திருந்த கனவொன்று
நினைவாக மாறியதென்று
களிப்போடு நினைத்திருந்தாள்
காதலுடன் மெய் மறந்தாள்……
நடந்ததும் நடப்பதும் தன்
கனவல்ல….. நிஜமென்ற புரிதலில்
நிலைகுலைந்து நின்றுவிட்டாள்….
வாடகைக் கனவுகளில்
வாழ்க்கைக்கு பயனில்லை……
பயணம் தான் தொடர்ந்திடுமா…..
வாழ்க்கைப் படகு கவுந்திடுமா…..
கனவுகள் தெளிந்து தவிக்கின்றாள்…..

Advertisement